Tuesday, April 3, 2012

ஹிட்ச்காக்கின் ’ரியர் விண்டோ’


தோள் கண்டார் தோளே கண்டார் என்பது போல ஹிட்ச்காக் (Afred hitchcock) கின் எந்த படத்தை முதலில் பார்க்கிறோமோ அதைப் பற்றியே புகழ்ந்து பேசிக்கொண்டிருக்கலாம். அவ்வளவுக்கு அவரது படங்கள் நமக்குப் பிடித்துப்போகும். ஹிட்ச்காக் படங்கள் அனைத்துமே சஸ்பென்ஸ், திரில்லர் வகையைச் சார்ந்தவைதான் என்பது ஊரறிந்த விஷயம். தத்துவம், வாழ்வியல் போன்ற கதைக்களங்களில்தான் கலைப்படங்களை உருவாக்க முடியும் என்பதல்லாமல் சஸ்பென்ஸ், திரில்லர் வகைகளிலும் அருமையான மனதை விட்டகலாத படங்களை உருவாக்கியவர். டெக்னாலஜியும், சிந்தனையும், ரசனையும் எவ்வளவோ மாறிவந்துள்ள இன்றைய பொழுதிலும் 60, 70 ஆண்டுகளுக்கு முன்பே அவர் உருவாக்கிய படங்கள் நிறைவையும், வியப்பையும் தந்துகொண்டிருக்கின்றன. 

முதலில் ‘ரியர் விண்டோ’ (Rear window) படத்தின் கதையைச் சொல்கிறேன் கேளுங்கள்.

ஒரு ப்ரொபஷனல் போட்டோகிராஃபர் ஒரு கார் பந்தயத்தை போட்டோ எடுக்கச்சென்று விபத்தில் சிக்கி, ஒரு கால் உடைந்து கட்டுப்போட்டுக்கொண்டு வீட்டில் வீல் சேரில் நாட்களைக் கடத்திக்கொண்டிருக்கிறான். தினமும் அவனுக்கு உதவி செய்ய ஒரு நர்ஸ் வந்து போகிறாள். இன்னொரு பெண்ணும் கூட அவ்வப்போது, சமயங்களில் இரவுகளிலும் கூட தங்கி அவனுக்கு பேச்சுத்துணையாக இருக்கிறாள். ஆர்வம், குறுகுறுப்பு, காதல், கோபம் மற்றும் கொள்ளை அழகுடன் இருக்கும் அவனது காதலிதான் அவள். அவர்கள் நட்பைத்தாண்டி, காதலுக்குள் வந்ததை புரிந்தும் புரியாமலும், கல்யாணம் செய்துகொள்ளலாமா என்பது குறித்த விவாதத்தில் இருக்கிறார்கள். அவள் விரும்ப, அவன் மறுக்கவென ஒரு விறுவிறுப்பான மோதல். இப்படியே இந்தக் காதலை பார்த்துக்கொண்டிருக்கலாம் போல நமக்கு ஆசை. ஆனால் கதை வேறு. இந்தப்பெண்கள் வந்துபோகும் கொஞ்ச நேரம் போக முழு நேரமும் நம் கதாநாயகனுக்கு வேலை, அவனது அறையிலிருந்து பின்புற சன்னல் வழியாகத் தெரியும் அந்த அப்பார்ட்மெண்டின் பிற வீடுகளில் சன்னல்கள் வழியாக அங்கு நடக்கும் நிகழ்வுகளை வேடிக்கைப் பார்ப்பதுதான்.
ஒரு புதுமணத் தம்பதிகள், ஒரு விதவைப்பெண், ஒரு பாலே டான்ஸர், வழக்கமாக பால்கனியில் படுத்து உறங்கும் ஒரு ஜோடி, எப்போதும் சண்டையிட்டுக்கொண்டிருக்கும் இன்னொரு தம்பதி, மூன்றாவது தளத்திலிருந்து ஒரு கூடையில் தரைக்கு பயணிக்கும் ஒரு நாய்க்குட்டி என நிறைய காரெக்டர்கள், சம்பவங்கள். அதில் ஒருநாள், சண்டையிட்டுக்கொண்டிருந்த தம்பதியில் அந்த மனைவியைக் காணவில்லை. அந்த கணவனின் செய்கைகளில் ஒரு வித்தியாசம். கேள்விப்பட்ட தகவல்களின் படி அந்தப் பெண்மணி ஊருக்குப்போயிருக்கிறாளா, மூடியிருக்கும் சன்னலுக்கு உள்ளே இருக்கிறாளா? நம் ஹீரோ, அந்த ஆள் தன் மனைவியை கொலை செய்திருப்பானோ என்று சந்தேகிக்கிறான். அவனோடு சேர்ந்து நாமும்தான். முதலில் அவன் இந்த விபரத்தைக் காதலியிடம் சொல்ல, அவள் மறுத்துக் கேலி செய்கிறாள். அவனது டிடெக்டிவ் நண்பனும் சில விசாரணைகளுக்குப் பிறகு, ‘ஒரே இடத்தில் உட்கார்ந்து உனக்கு பைத்தியம் பிடித்துவிட்டது’ என்கிறான். பின்பொரு சூழலில் ஹீரோயின் அவன் சொல்வதை ஏற்றுக்கொண்டு உண்மையை கண்டுபிடிக்க உதவுகிறாள். அந்தப்பெண்ணுக்கு உண்மையில் என்னதான் ஆயிற்று என்பது கிளைமாக்ஸ்.

எதற்காக இப்படி கதையை நீட்டி முழக்கிச்சொன்னேன் என்றால் இந்தக் கதை எப்படி எடுக்கப்பட்டிருக்கிறது என்பதைச் சொல்வதற்காகத்தான். ஹீரோ உட்கார்ந்திருக்கும் அறை கூட அது படுக்கையறையா, ஹாலா, அது சதுரமா, நீள் சதுரமா, அரை வட்டமா என்று கூட நமக்குக் காட்டப்படவில்லை. அது ஒரு அறை. அங்கு வீல் சேர், கட்டில், அலமாரிகள் இருக்கின்றன. ஒரு பெரிய சன்னல் இருக்கிறது. கிச்சன் போல இன்னொரு அறைக்குச் செல்ல ஒரு வழி இருக்கிறது. ஒரு மெயின் கதவு இருக்கிறது. அவ்வளவுதான். ஹீரோவோடு நாமும் அந்த அறையில் இருக்கிறோம். காமிரா அந்த அறையை விட்டு எங்குமே நகர்வதில்லை, அந்த கிச்சனுக்குள் கூட போவதில்லை. ஹீரோவும், அந்த அறையும், அறைக்குள் வந்து போகும் நபர்களும், அந்த சன்னலில் இருந்து தெரியும் காட்சிகளும்தான் முழு படமுமே.!

உண்மையில் இது போன்ற புதுமைகள் ஒரு படத்தில் இருக்கவேண்டிய அவசியமில்லை என் நினைப்பவன் நான். படம் நிறைவைத் தரவேண்டும், அதற்காக என்னவெல்லாம் செய்யப்படவேண்டுமோ அதெல்லாம் இருக்கவேண்டும், வம்படியாக நான் புதுமை செய்கிறேன் பேர்வழியென்று செய்யப்படும் கோமாளித் தனத்தையெல்லாம் ஏற்கமுடியாது. கின்னஸ் சாதனைக்காக ஒரே நாளில் படத்தை எடுத்தோம், கயிற்று மேல தொங்கிகிட்டே எடுத்தோம், 87 காமிரா வைத்து எடுத்தோம் என்றெல்லாம் செய்ய சினிமா ஒன்றும் சாகச நிகழ்ச்சி அல்ல. ஆனால் இவையெல்லாமே படம் உங்களுக்குத்தரவேண்டிய உணர்வில் எந்தக் குறையுமே வைக்காமல் செய்யப்படுமானால் அது ஆச்சரியமான விஷயம்தான். அந்தப் படைப்பாளியின் திறமை கண்டு நாம் வியக்கலாம். ஹிட்ச்காக் ஒரு ஆகச்சிறந்த கலைஞர். அவரும், அவரது தன்னம்பிக்கையும், அவரது சினிமாவும் வேறு வேறல்ல. அத்தனை ஆழமாக சினிமாவை தனக்குள்ளே கொண்டிருக்கிறார். அவர் செய்யலாம் இதுபோன்ற புதுமைகளை. இதுவாவது பரவாயில்லை, ரோப் (Rope) என்று ஒரு படத்தை பத்தே ஷாட்களில் படமாக்கியிருக்கிறார். அது கதைப்படி ஒரே ஷாட்டாகவும், பிலிம் ரோலுக்கு 10 நிமிடத்துக்கு மேல் படமெடுக்கும் திறனில்லாதமையால் 10 ஷாட்களாகவும் எடுக்கப்பட்டதாம். ஒரே ஷாட்டிலும் ரசிகனை கட்டிப்போடும் ஒரு முழு சினிமாவையும் உருவாக்கமுடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்.

அந்த நபர் கொலையாளியாக இருப்பானோ என்று சந்தேகித்து, அதை நிரூபிக்க ஒரு அனானிமஸ் கடிதத்தை எழுதி அவன் வீட்டுக் கதவிடுக்கு வழியாக உள்ளே போட்டுவிட்டு ஓடிவருகிறாள் ஹீரோயின். மாட்டிக்கொள்ளாமல் அதை அவள் நல்லபடியாக செய்து முடிக்கவேண்டுமே, நம்மால் எழுந்து செல்லமுடியவில்லையே என்று வீல் சேரில் அமர்ந்துகொண்டு பதட்டத்தோடு சன்னல் வழியாக பார்த்துக்கொண்டிருக்கும் ஹீரோவின் டென்ஷன் நம்மையும் தொற்றிக்கொள்கிறது. இவனுக்கு எதுக்கு வேண்டாத இந்த வேலை, பேசாமல் அவளைக் கல்யாணம் செய்துகொண்டு அழகாக வாழும் வழியைப் பார்ப்பானா.. அடுத்த வீட்டில் என்ன நடந்தா என்ன? என்று அவன் மீது கோபமும், அப்படி என்னதான் ஆச்சு அந்தப்பெண்ணுக்கு, அவள் கணவன் வெட்டிக்கொலை செய்திருப்பானோ என்ற ஆர்வமும், இந்த டிடெக்டிவ் வேற நம்பித்தொலைக்க மாட்டேங்கிறானே என்ற எரிச்சலுமாக பல்வேறு உணர்வுகளுக்குள் படம் நம்மை அலைக்கழிக்கிறது. அதுவே ஒரு படைப்பின் வெற்றி. 

.

3 comments:

Raghav said...

அருமையான பதிவு, தொடக்கமே 'அட' என்று இருக்கிறது...

நீங்கள் குறிப்பிட்டவைகளுக்கு மேல் Hitchcock-ன் படங்களில் நான் குறிப்பாக கண்டது அமெரிக்க மற்றும் முதலில் அவர் UK ன் சூழலில் எடுத்த படங்களில் வாழ்கை அன்று எப்படி இருந்தது என்பதை பட்டவர்த்தமாக காட்டுகின்றன. காவல் துறை பொதுமக்களின் பாதுகாப்பிற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தது, பொதுவாக மக்கள் மனிதனை எப்பிடி நடத்துகிறார்கள் என்பதை எல்லாம் இன்றைய நம் கலாச்சாரம் எப்படி இருக்கிறது என்பதோடு ஒப்பிட்டுபார்கையில் கொஞ்சம் சங்கடப்படவும் வெய்கிறது. இந்த படங்களில் மிக முக்கியமாக மக்களுக்கு சட்டத்தின் மேல் உள்ள நம்பிக்கை, அந்த நம்பிக்கையில் பெயரில் ஒருவன் தவறே செய்து இருந்தாலும் trial சொல்லும் வர்தைகே மதிப்பு அதற்க்கு முன்னால் நாமாகவே தீர்துமுடிதுவிடல் ஆகாது என்பது பலமுறை தெளிவாக தெரிகிறது.

குறிப்பாக Lifeboat, Rope, Dial M for Murder, Saboteur போன்ற இன்னும் பல படங்களில் இது போன்ற விஷயங்களை கானகிடைகின்றது !
அமெரிக்க தேசத்தை நம் தேசமாகவே ஏற்றுக்கொண்டுவிட்ட நம்மில் பலர் இதை உணரவில்லை என்றே கருதுகிறேன்.

ஹாலிவுட்ரசிகன் said...

எப்போதும் புதுமைகளைப் புகுத்தி ரசிகனைக் கட்டிப்போடுவதில் வல்லவர் ஹிட்ச்காக். இன்று தான் என் ஒரு விமர்சனத்தில் Rear Window படத்தில் நடக்கும் அனேக விடயங்களை 3 நிமிடங்களுககுள் அழகாக காட்டியுள்ள ஒரு வீடியோவை ஷேர் பண்ணினேன். இப்போ நீங்க விமர்சனமும் போட்டுட்டீங்க. முடிஞ்சா நீங்களும் பாருங்களேன்.

http://hollywoodrasigan.blogspot.com/2012/04/children-of-men-2006.html

KSGOA said...

படத்தை பாக்கணும்னு தோணுதுங்க.