Wednesday, July 25, 2012

ஷெரீன் -4 (இறுதிப்பகுதி)

(பகுதி -3)

பெங்களூர். ஒயிட்ஃபீல்ட். ஹோட்டல் கிராண்ட்.

ஷெரீன், இளநீல நிற பஞ்சுப்பொதி போன்ற சல்வார் கம்மீஸில், அந்த ஹோட்டலின் முதல் தளத்திலிருந்த ரெஸ்டாரெண்டில் அமர்ந்து காலையுணவை சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். காலை மணி 8.40. இன்று பகல் முழுதும் ஓய்வுதான். நாளை காலை கான்பரன்ஸ், அதைத்தொடர்ந்து நாளை மாலைதான் கொல்கத்தாவுக்கு ப்ளைட். விஜய் இன்று மாலை 5 மணிக்குத்தான் வருகிறான். அதுவரை எங்காவது வெளியே போய்வரலாமென்றால் முடியாது. கையை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல் டிவிட்டரில் பெங்களூர் வருகையை பொதுவில் சொன்னாலும் சொன்னோம்..

நேற்றிலிருந்து இதுவரை 8 போன்கால்கள்.

யாரையெல்லாம் இன்று சந்திக்கலாம் என்று ஒப்புக்கொண்டிருக்கிறோம் என்று போனைத் திறந்து பார்க்கத்துவங்கினாள். பாதிக்குப் பாதி ஜொள்ளுப்பார்ட்டிகள். அத்தனை பேரையும் 5 மணிக்கு முன்னதாக அனுப்பிவிட்டால் விஜயோடு நேரம் ஸ்பெண்ட் பண்ண வசதியாக இருக்கும் என்று அவள் எண்ணிக்கொண்டிருக்கும்போதே போன் சிணுங்கியது..

‘நீயில்லாது ஏதுமில்லை என்ற உண்மையை, உன் இன்மை இதயம் வலிக்கச் சொல்லிகொண்டிருக்கிறது’ என்றது விஜயின் எஸ்.எம்.எஸ்.

’இவன் ஒருத்தன், ஃபீலிங்க்ஸ் ஆஃப் இண்டியா..’ என்று ஒரு கணம் தோன்றினாலும் அவள் முகத்தில் ஒரு உற்சாகப்புன்னகை எழுந்தது.
*

ஜீடி கண் விழித்த போது மணி மதியம் 12ஐத் தொட்டிருந்தது. பக்கத்தில் இன்னும் குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டிருந்தான் பிரசாத். பிரசாத் கொஞ்சம் தாட்டியான உருவம், புரியறா மாதிரி சொல்லணும்னா ரெண்டு ஜீடி சைஸ்னு சொல்லலாம்.

“இந்த மூட்டையை உருட்டி பக்கத்து ரூமுல கொண்டு போய்த் தள்றதுதானே.. பைக் சைலன்ஸர் மாதிரி என்னா சத்தம்?”

“கிச்சான் மாதிரி இருந்துகிட்டு நீ உடுற குறட்டைக்கு பெங்களூரே முழிச்சுக்கும் போல இருக்கு. நீ அவனைச் சொல்றியா?” சுகுமார்.

கிஷோரும், சுகுமாரும் குளித்துக் கிளம்பியிருந்தனர். சண்முகம் பொறுப்பாக வந்திருந்த விருந்தினர்களுக்கு மதிய உணவையாவது ஏற்பாடு செய்வோம் என்று சமையலில் இறங்கியிருந்தான். விஜய் எப்போது எழுந்தானோ தெரியாது, லாப்டாப்பில் எதையோ நோண்டிக்கொண்டிருந்தான்.

பியர் மட்டுமே அருந்தும் சைவ பட்சிணியான அலிஃப் மட்டும் ஃப்ரெஷ்ஷாக ரெடியாகியிருந்தான். அலிஃபுக்கு சாப்பாட்டில் நல்ல ஆர்வம். போலவே சமைப்பதிலும். அலிஃபின் ஏற்பாட்டின் பேரிலேயே கடைக்குப் போய் ஏதேனும் வாங்கிவர கிளம்பிய சண்முகத்தை நிறுத்தி, வீட்டிலேயே சமையல் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அவனது மேற்பார்வையிலேயே சண்முகம் சமையல் செய்துகொண்டிருந்தான்.

“என்னாங்கடா டேய்? டூர்க்கு வந்த இடத்திலாவது நல்ல சாப்பாடு ஹோட்டல்ல வாங்கிக்குடுங்கடா.. இங்க வந்தும் சட்டிப் பானையை உருட்டிகிட்டு கிடக்குறானுக?” ஜீடி.

லாப்டாப்பைப் பார்த்து விஜய் சிரித்துக்கொண்டிருந்தான்.

“இன்னா மச்சி?”

“நேற்று நைட்டு லைஃப் டைம் காமெடிண்ணா. இந்த ட்ரிப்போட ஹீரோ சண்முகம்தான். நேத்து நைட்டு பால்கனியில கையை குவிச்சு குவிச்சு கிக்குல அவரோட பழைய லவ்வர் கதையை சொன்ன அழகு இருக்கே..” அடக்கமுடியாமல் சிரித்துக்கொண்டிருந்தான். நேற்றைய கூத்தின் சுவாரசியமான பகுதிகளை விடியோவாக அவனது ஐபோனில் எடுத்திருந்த கிளிப்பிங்க்ஸை லாப்டாப்பில் ஏற்றிப் போட்டுப்பார்த்துக் கொண்டிருந்தான்.

”ஆமா, மச்சி..” சத்தமான சிரிப்போடு கிஷோர் விடியோவைப் பார்க்க அவனருகே போக ஜீடியும் தவழ்ந்தவாறே சென்றான்.

“அதை விடியோ வேற எடுத்தீங்களாடா? ஏண்டா மானத்தை வாங்குறீங்க.. ஃபேஸ்புக்குல போட்டுக்கீட்டுத் தொலைச்சிறப்போறீங்க” சிரித்துக்கொண்டே சண்முகம் கிச்சனுக்குள் ஏதோ செய்துகொண்டிருந்தான்.

அலிஃப், “அதெல்லாம் சரி, இன்னும் அரைமணிக்குள்ள சாப்பாடு ரெடியாகிடும். அப்பால என்ன பண்றது? எங்க போகலாம். இன்னும் பாதி பேரு ரெடியாவலை”

“எங்க போவச்சொல்ற? சாப்டுட்டு, வெளிய போவாதவன்லாம் இன்னொரு ரவுண்டு அடிப்போம். வெளியே போறவனுங்க போயிட்டு வரட்டும். அதான் 8 மணிக்கு வந்துருவானுகல்ல.. வந்தவுடனே நேத்திக்கு மாதிரி கண்டினியூ பண்ணுவோம்..”

“தண்ணியடிக்கணும் சரி, அதுக்காக பகல்லயும் அதே பொழப்பா இருக்கணுமாடா? கிஷோர், சுகு ஒரு கார்ல போறானுக. விஜய் ஒரு காரை எடுத்துகிட்டு போறான். சண்முகம் அவங்க ஆண்டி வீட்டு பங்ஷனுக்கு அவன் கார்ல போறான். எனக்கு போரடிக்குது, நானும் அவனோட போயிட்டு வர்றேன்.. நீங்க ரெண்டு பேர் மட்டும் இங்கயே கிடங்க..”

அலிஃப் அவனோடு வருவதாய் பிளான் செய்வதை கேட்டு சண்முகத்தின் முகம் கொஞ்சம் குழப்பத்தில் ஆழ்ந்தது.

“என்றா.. உனக்கு ஓகேதானே..?” என்று சண்முகத்தை நோக்கி அலிஃப் கேட்க, யோசனையோடே, தோள்களை குலுக்கி ”ஓகே” என்றான்.

ஜீடி, அவசரமாக பிரசாத்தை வயிற்றைப் பிடித்து உலுக்கி எழுப்பி, “மாமா, எந்திருங்க.. எந்திருங்க.. இவனுக எல்லோரும் நம்ப 2 பேரை மட்டும் விட்டுட்டு வெளிய போக திட்டம் போடுறானுக..சீக்கிரம்!!”

மெதுவாக எழுந்த பிரசாத், “போணும்னா போய்த் தொலையட்டுமே.. நாம சாப்டுட்டு இன்னொரு ரவுண்டு தூங்குவோம்..”

“இவனுங்க வர லேட்டாச்சுன்னா என்ன பண்றது? உங்க மூஞ்சியவே எவ்ளோ நேரம் மாமா பாத்துகினு இருக்குறது? எந்திருச்சு கிளம்புங்க, 3 கார்ல ஒண்ணுல நாமளும் ஏறிகிடலாம். அப்போதான் சீக்கிரமா இவனுகளை பத்திக் கொண்டுவரமுடியும்.”

“இன்னமும் மாடு பத்துற பழக்கம் போவுதா பாரு இவருக்கு?”

“ஆமாடா, உங்களோட குப்பை கொட்டுறதுக்கு மாடு மேய்க்கவே போயிரலாம்..”

அடுத்த சற்று நேரத்துக்கெல்லாம் ஒவ்வொருத்தராக கிளம்ப, சாப்பாட்டையும் முடித்துக்கொண்டு முதல் காரில் கிஷோரும், சுகுவும் எங்கோ கிளம்பிச் சென்றார்கள். அடுத்து இன்னொரு கார் கிளம்பத் தயாரானது. அதில் சண்முகமும், அலிஃபும். 

”ஆமா, சாய்ங்காலம்னு சொல்லிட்டு இவ்வளவு சீக்கிரமா கிளம்புறானுகளே இவனுக..” என்று புலம்பிக்கொண்டே ஜீடி, பிரசாதிடம், “மாமா இவனுக வண்டியில போறதா? இல்லைன்னா விஜய் வண்டியில போறதா? சொல்லுங்க.. விஜி, நீ எத்தனை மணிக்கு போகணும்?”

“எனக்கு 5 மணிக்குதாண்ணா.. நீங்க 2 பேரும் எதுக்கும் சண்முகம் வண்டியிலயே போங்க..”

“ஆமா, இவன் எதுக்கு மச்சி நம்பளை கழட்டி விடுறதிலேயே குறியா இருக்கான்? டேய் மருவாதியா உண்மையைச் சொல்லு. 6 மணிக்கு மேல அப்படி என்ன கிளையண்ட் மீட்டிங்?”

“அட, நிஜமாத்தான்ங்க.. ப்ளேஸ்மென்ட் சம்பந்தமா முக்கியமான மீட்டிங். என்னோட வந்தா போரடிக்கும். அவங்களாவது ஃபங்ஷனுக்கு போறாங்க.. உங்களுக்கும் டைம் பாஸாகும்ல..”

”எனக்கென்னவோ சந்தேகமாவே இருக்கே..” பிரசாத் முனகியவாறே சண்முகம் வண்டியில் ஏற, பிரசாத், சண்முகம், ஜீடி, அலிஃப் என நால்வரோடு அந்த வண்டி கிருஷ்ணராஜாபுரத்தை நோக்கி கிளம்பியது.

“சாவியை மாடி வீட்ல குடுத்துடு.. யார் முதல்ல வந்தாலும் வாங்கிக்கலாம்” என்று விஜயை நோக்கி சொல்லிவிட்டு வண்டியை கிளப்பினான் சண்முகம்.

அடுத்த அரைமணி நேரத்தில் அவனது உறவினர் வீட்டை அடைந்தது கார். மொத்தமாகவே ஒரு நான்கைந்து பேர்தான் இருந்தனர். யாரோ ஒரு குழந்தைக்கு பிறந்த நாள் போலும். இவர்கள் நால்வரும் போனதும்தான் ஒரு பங்க்‌ஷன் போன்ற சூழலே தோன்றியது. ஒரு குழந்தையின் கன்னத்தைக்கிள்ளிக் கொஞ்சிவிட்டு, ஒரு கார் பொம்மைப் பார்சலைக் கொடுத்தான் சண்முகம். எதிர்பார்த்தது போலலல்லால் அரைமணிக்குள்ளாகவே சண்முகத்தால் கிளம்பமுடிந்தது. கிளம்பினர். சண்முகத்தின் முகம் சுரத்தே இல்லாமல் இருந்தது.

அலிஃபும், சண்முகமும் ஏதோ கிசுகிசுப்பாக பேசிக்கொண்டனர்.

“ஏண்டா இஞ்சி தின்ன குரங்கு மாதிரி இருக்கே..?”

“ஒண்ணுமில்ல மச்சி..” சண்முகம்.

“சரி, மணி நாலுதான் ஆவுது. அடுத்து எங்க போறது? பேசாம கிஷோர் எங்க போயிருக்கானுங்கன்னு கேட்டுட்டு அங்க போயிட்டு ஒண்ணா ரிடர்ன் ஆயிடலாமா?” அலிஃப்.

அலிஃப் போனை எடுத்து கிஷோரை அழைக்க போன் கட்டானது. பின்னர் சுகுமாரை அழைத்தான்.

“எங்கடா இருக்கீங்க?”

“ஒயிட்ஃபீல்ட், ஹோட்டல் கிராண்ட். அவன் உள்ள போயிருக்கான், யாரையோ பார்க்க. நான் கார்ல இருக்கேன்..”

“ஓகே, நாங்களும் அங்க வர்றோம். ரிடர்ன் ஒண்ணாப்போயிடலாம்”

வண்டி ஒயிட்ஃபீல்டை நோக்கி கிளம்பியது. 

*

சரியாக மணி 5 ஆகும் போது ஹோட்டல் கிராண்டில் முதல் தள ரெஸ்ட்ராண்டில் குழுமம் கூடியிருந்தது. பிரசாத், ஜீடி, சுகுமார், அலிஃப், சண்முகம், கிஷோர் என ஆறு பேரும் வலது புறத்திலிருந்த சிக்ஸ் ஸீட்டரில் நிறைந்திருந்தனர். கிஷோர் அதே ஹோட்டலில் தங்கியிருந்த அவன் பார்க்கவேண்டிய நபரை பார்த்துவிட்டு அவனும் பிறரோடு ரெஸ்ட்ராண்டுக்கு வந்து சேர்ந்திருந்தான். 

”என்னடா.. அப்படி இப்படினு சொல்லிட்டு வேலை சீக்கிரமாவே முடிஞ்சு அசெம்பிளாயிட்டோமே. விஜி மட்டும் மிஸ்ஸிங்.. இங்கயே ஒரு ரவுண்டை போடுவோமா? இல்லை வீட்டுக்கேப் போலாமா?” பிரசாத்.

கிஷோரின் கண்கள் ரெஸ்டாரண்டை நோட்டமிட்டுக்கொண்டிருந்தது. அந்த ரெஸ்டாரெண்டின் இண்டீரியரே அதன் வசதியையும், செழிப்பையும் பறைசாற்றுவதாக இருந்தது. மெல்லிய நீல நிற ஒளி எங்கிருந்து வருகிறது என்பதே தெரியாமல் வியாபித்திருந்தது. அந்த பெரிய ஹாலின் பெரும்பாலான மேஜைகள் காலியாக இருந்தன. இவர்களுக்கு நேர் பின்புறம் இரண்டாவது மேஜையில் ஒரு பெண்கள் கூட்டம் அமர்ந்திருந்தது.

அதில் மையமாக ஹாலின் நீல நிறத்துக்கு ஒப்பாக நீல நிற சல்வாரில் ஷெரீன் அமர்ந்திருந்தாள். அவர்களின் கலகலப்பும், சிரிப்பும் இவர்களின் மேஜை வரை வந்தன.

“டேய் மானத்தை வாங்காதடா.. சைட் அடிக்கிற வயசா எருமை உனக்கு? இவன் பொண்டாட்டிக்கு போனைப் போடுங்கடா?”

“இல்ல மச்சி, அந்த ஃபிகரை எங்கயோ பாத்த மாதிரி இருக்குது, அதான் யோசிக்கிறேன்..”

“அழகா ஒரு ஃபிகரைப் பாத்துட்டா, உடனே யோசிக்க ஆரம்பிச்சிருவானே”

“இல்ல மச்சி”

“இருந்தாலும், அவ செமையாத்தான் இருக்கா.. அதுல ஒண்ணும் சந்தேகமில்ல”

“யோவ் மாமா, உன்னை யாராவது இப்போ சர்டிபிகேட் கேட்டாங்களா?”

“ஆங்.. ஞாபகம் வந்துடுச்சி. ஃபேஸ்புக்ல பாத்துருக்கேன். பேரு ஷெரின்னு நினைக்கிறேன்..”

“அத விடுங்கடா, எவனாவது ஆர்டர் பண்ணுங்கடா.. எனக்கு பிராண்டி”

“பொம்பளைங்க யாரு, ப்ரொபைல் போட்டோ ஒழுங்கா வைச்சிருக்கிறது? சும்மா ஒளறாத..”

“கூட இருக்குற ஃபிகருங்களையும் பாரேன். எப்பிடி இருக்குதுங்க, பெங்களூர்னா பெங்களூர்தான்..”

“இந்த இருட்டுக்குள்ள என்ன எளவு தெரியுது. லூசுப்பசங்க ஒரு டியூப் லைட்டை போட்டுத்தொலைக்கப்பிடாதா? பார்னா அது லைட்டு கம்மியாத்தான் இருக்கணும்னு எவன் கண்டுபிடிச்சான்?” 

“சரி, நம்ப வேலையைப் பாப்போம்டா..”

“மாமா, எனக்கு ஃபிங்கர் பிஷ்.!”

“செமை ஃபிகர் மாமா..”

அடுத்த அரைமணி நேரத்தில் கலகலப்பும், சலசலப்புமாக இவர்கள் ரெண்டு ரவுண்டைக் கடந்திருக்க, ஷெரினின் மேஜையிலிருந்து அத்தனை பெண்களும் கிளம்பிக்கொண்டிருந்தனர்.

அவர்கள் சென்றதும் மேஜை மீண்டும் கிளீனாகிவிட ஷெரீன் மட்டும் அங்கேயே உட்கார்ந்திருந்தாள். அவள் காதில் போனில் மெல்லிய குரலில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள்.

“யாருக்கோ அவ வெயிட் பண்றான்னு நினைக்கிறேன் மச்சி!” பிரசாத்.

பிரசாதின் வார்த்தைகளை உண்மையாக்கிக்கொண்டு அடுத்த சில நிமிடங்களிலெல்லாம் ஒரு இளைஞன் அவளுக்குப் பின்புறமாக வந்து தோளில் சில்மிஷம் செய்துவிட்டு அவளை ஆச்சரியப்படுத்தி முன்புறமாக வந்து அமர்ந்தான். அவளும் செல்லமாக கோபிப்பதைப்போல இருந்தது.

ஊம்ஹூம், கிஷோருக்கும், பிரசாத்துக்கும் முதுகைக்காட்டிக் கொண்டிருந்த அந்த இளைஞன் விஜய்தான் என்பதைக் கண்டுபிடிக்க முழுதாக ஒரு நிமிடம் கூட ஆகவில்லை.

“மாமா, மாட்டிகிட்டாண்டா மாப்ள.. போட்டுப் பிச்சிப்புடுவோம் வாங்க..” சுகுமார்.

“சங்கோஜப்படுத்தாதீங்கடா.. வீட்டுக்கு வந்த பிறகு மொத்தலாம், இப்ப விட்டுருங்க..” அலிஃப்.

“இவன் ஒரு நியாயஸ்தன். அடப் போடா.. நான் எவ்ளோ தடவை கேட்டேன். கல்லுளி மங்கன், எப்பிடி, கிளையண்ட் மீட்டிங்க்தான்னு ஒரே சாதனையா சாதிச்சிட்டான் பாத்தியா? உடக்கூடாதுடா அவனை..”

சுகுமார், கிஷோர், சண்முகம் என மூவரும் அந்த டேபிளை நோக்கிப் போய் அவன் முதுகுக்குப் பின்னால் நின்றனர். ஷெரீன் கேள்விக்குறியோடு அவர்களைப் பார்க்க, சற்றும் அவகாசம் கொடுக்காமல் ஒருவன் விஜயின் கண்களைப் பொத்த, மற்ற இருவரும் அவன் முதுகில் மொத்தினர். முதலில் அதிர்ச்சியும், ஆச்சரியமும், பின்னர் விவரம் தெரிந்து கொஞ்சம் வெட்கமுமாக பேச்சற்று நின்றுகொண்டிருந்தாள் ஷெரீன். அவள் வெட்கப்படுவதே அவளுக்கு ஆச்சரியம்தான். சற்று நேரத்துக்கெல்லாம் அவளே தன்னைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு இயல்பு நிலைக்குத் திரும்பினாள்.

விஜய் ஒருவொருவராய் அறிமுகப்படுத்தினான் அவளுக்கு.

இரண்டு புறமும் பொய் சொல்லிவிட்டு வந்ததில் விஜய் கும்பலில் வசமாக சிக்கியிருந்தான். அத்தனை பேருக்கு முன்னால் “எங்கேடா ப்ளைட் டிக்கெட்? காண்பி..” என்று ஷெரீன் அவன் காலரைப் பிடித்தாள்.

“ஏண்டா, இவ்வளவு பெரிய விஷயத்தை மறைச்சே.. ராஸ்கல்?” அலிஃப்.

“வீட்ல பேசிட்டோம். எல்லோருக்கும் ஓகேதான். அடுத்த மாசம் என்கேஜ்மெண்ட். டேட் ஃபிக்ஸ் ஆனப்புறம் உங்க எல்லாத்துக்கும் சர்ப்ரைஸா சொல்லலாம்னு நினைச்சிகிட்டிருந்தேன்..”

அடுத்தவருக்குக் கேட்காமல் ஜீடி, பிரசாத்தின் காதில் முணுமுணுத்துக்கொண்டிருந்தான், “அதெப்பிடி மாமா, சுமாரா இருக்குற பசங்களுக்கெல்லாம் சூப்பரா பொண்டாட்டி கிடைக்கிறாங்க?”

“அது எனக்குத் தெரிஞ்சா, நான் ஏன் இப்படி உன்கூட சுத்திகிட்டு இருக்கப்போறேன்.. ஹும். நம்ப தலையெழுத்து” முனகிய பிரசாத் அலிஃபை நோக்கி,

“மதியானம் என்னத்தைடா சமைச்சீங்க? நெஞ்செரிச்சலா இருக்கு.. இங்க ஈனோ கிடைக்குமா கேளேன்..”

“எனக்கும் ஒண்ணு..” ஜீடி.


.
(முற்றும்)

Tuesday, July 17, 2012

ஷெரீன் - 3


முன்குறிப்பு: வழக்கமாக நாம் அப்படிச் செய்வதில்லை எனினும் இந்தத் குறுந்தொடர் சில தவிர்க்கவியலாத காரணங்களால் தாமதமாகிவிட்டது. இட்ஸ் ஆல் ரைட். :-))
------------------- 
முன்கதைச் சுருக்கம் :

ஷெரின் கொல்கத்தாவில் ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் அழகிய இளம்பெண். வேலை நிமித்தம் 2 நாள் பயணமாக பெங்களூர் கிளம்புகிறாள். அவளது தோழன் விஜய் சென்னையில் இருக்கிறான். அவனை சந்திக்கவிரும்பி பெங்களூர் வரச்சொல்கிறாள். அவன் வேலையிருப்பதாக முதலில் மறுத்தாலும் மாலை ப்ளைட்டில் வந்து இரவே கிளம்பிவிடுவதாக சொல்லவும் சம்மதிக்கிறாள்.

7 பேர் கொண்ட விஜய்யின் ஃபேஸ்புக் நண்பர்கள் குழு, ஷெரின் பெங்களூர் வரும் அதே நாட்களில் ஊட்டிக்கு டூர் திட்டமிடுகிறார்கள். அதை விஜய் குழப்பி டூர் ஸ்பாட்டாக பெங்களூர் என திட்டத்தை மாற்றிவிடுகிறான். நண்பர்களுடன் சுற்றிக்கொண்டிருப்பதை ஷெரினிடம் மறைத்தும், இவர்களுக்குத் தெரியாமல் சில மணிநேரங்கள் ஷெரினை சந்தித்துவரவுமாய் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது அவன் நோக்கம். சென்னை நண்பர்கள் குழு பெங்களூர் நோக்கி காரில் கிளம்புகிறது.

இனி :

நான்கு பேருடன் சென்னையிலிருந்து கிளம்பிய வெண்டோ ஸ்ரீபெரும்புதூரைத் தொட்டபோது மணி மாலை 4. மனைவியருக்கு போன்கால்கள், அலுவலக அழைப்புகள், கோவை வண்டி கிளம்பிவிட்டதா என்ற அப்டேட்டுகள் செய்வது என இந்த வேலைகளை முடிப்பதற்குள்ளாககவே வண்டி வேலூரைக் கடந்துவிட்டது. அலிஃப் ஸ்டியரிங்கில் இருந்தான். எல்லாவற்றையும் விட பெங்களூர்க்காரன் தேவைப்படுமளவு வெரைட்டியான பாட்டில்களை வாங்கி ஸ்டாக் வைத்துவிட்டானா, ஊருக்குப் போயிருக்கும் அவனது மனைவி, பிள்ளைகள் தடாலடியாக வந்து நின்றுவிடமாட்டார்கள்தானே என்பதான முக்கிய அறிக்கையை அப்டேட் செய்து, உறுதிமொழியும் பெறப்பட்டது. 

“ஊர் சுத்தவா? என்ன விளையாடுறியா? நானே நாளைக்கே சப்ளையர் எண்ட்ல வேலை முடிஞ்சுடுமா, கூட ஒரு நாள் ஆயிடுமோன்னு டென்ஷன்ல போய்கிட்டிருக்கேன். நாளைக்கு சாய்ங்காலம் ப்ளைட் புடிச்சி வந்துருவேன். அதெல்லாம் ஒருத்தனையும் பார்க்கவேண்டியதில்லை. வேலை முடிஞ்சதும் கிளம்பிருவேன். நீ போனை வையி முதல்ல..” ஜீடி போனில் மனைவியுடன் பேசிக்கொண்டிருந்தான். இடையில் கலாய்த்துவிடாமலிருக்க பார்வையாலாயே கெஞ்சிக்கொண்டிருந்தான் மற்றவர்களை.

அலிஃபுக்கு இந்த மாதிரி விஷயங்கள் என்றால் சிரிப்புப் பிய்த்துக்கொள்ளும். கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தான். போனை வைத்ததும் வாய்விட்டு சிரித்தவனாக, “கூட ஒரு நாள் ஆயிடுமோனு இவரு டென்சன்ல இருக்காராம்.. நாம கிளம்பப்போறதே நாளாகழிச்சுதான். ஹஹாஹா.. முதல்ல இவனைப் போட்டுக்கொடுக்கணும்டா. சிஸ்டருக்கு போனைப்போடு..”

“முதல்ல உன் வேலையைப் பாருடா வென்று..” என்று அவனை அதட்டிவிட்டு கிஷோரை நோக்கித் திரும்பி, 

“மச்சி, இன்னும் என்னத்தை நோண்டிகிட்டிருக்க.. ஓபன் பண்ணுடா.. எள்ளுதான் எலிப்புழுக்கைக்கு காயுது. எண்ணை நாம ஏன் காயணும்.?”

கிஷோர் மும்முரமாக பியர் பாட்டில்களை ஓபன் பண்ணிக்கொண்டிருந்தான்.

விஜய் சின்சியராக மொபைல் போனை நோண்டிக்கொண்டே, “அண்ணா, பழமொழியை தப்பா சொல்றீங்க..”

“ரொம்ப முக்கியம், முதல்ல அது பழமொழியே இல்ல.. வந்துட்டான் என்னைத் திருத்த..”

அலிஃப், “நாங்கள்லாம் வீட்ல உண்மையைச் சொல்லிட்டுதானே வர்றோம், நீ மட்டும் ஏண்டா இப்படி இருக்கே?”

"ஒலகத்துலயே எவனுக்கும் புரியாத ஒரு விஷயம் இருக்குன்னா அது அடுத்தவனோட ‘புருஷன்-பொண்டாட்டி’ தகறாறுதான். அதெல்லாம் யுனிக் மச்சி. அதனால அதை விட்டுட்டு உருப்புடியா வேற விஷயம் பேசலாமா?”

“இப்பவே தத்துவம் ஆரம்பிச்சிட்டானே, இன்னும் பியர் வேற உள்ளாறப்போவப்போகுது.. என்ன ஆகப்போகுதோ?”

”சைட்டிஷ் ஒண்ணியும் உருப்படியா வாங்கலை, போற வழிக்கு அன் டைமா இருந்தாலும் ஆம்பூர்ல பிரியாணி வாங்கணும், நிப்பாட்டு. மறந்துறாத..”

“ஆம்பூர் பிரியாணி? அதுவும் யாரு? நானு? மறந்துருவேனா?”

விஜய் ஒருவழியாய் போனை வைத்துவிட்டு, பின்பக்கமிருந்த அவன் பேக்கைப் போராடி எடுத்து அதை நோண்டத்துவங்கினான்.

“இவனை எதுக்குடா டூர்க்கு கூட்டினு வந்தீங்க.?”

“இல்லைண்ணா, ஒரு நிமிசம். போன சண்டே புக் பங்ஷன்க்கு டிஸ்கவரி போனேன்ல, ஃப்ரீயா கொடுத்தாங்க.. அதான் உங்களுக்கும் கொடுக்கலாம்னு எடுத்துட்டு வந்தேன்..”

ஒரு புக்கை எடுத்து வெளியே போட்டான்.

“டூர்ல எப்பிடி புக்கெல்லாம் படிக்க டைம் கிடைக்கும்?”

“படிக்கவா கொண்டுவந்தேன்? வேணும்னா உங்க பேக்ல போட்டுக்கங்க.. வீட்ல போய் படிங்க..”

ட்ரைவர் சீட்ல இருந்தே புக் ரேப்பரை பார்த்த அலிஃப், “இந்த புக்கு போடுற பதிவருங்க தொல்லை தாங்கலைப்பா.. குண்டூசி விக்கிறவன், புண்ணாக்கு விக்கிறவன்லாம் தொழிலதிபர்ங்கிற மாதிரி, பிளாக் எழுதுறவன்லாம் எழுத்தாளரா? சாவடிக்கிறானுங்க..”


“அப்டில்லாம் சொல்லாத மச்சி. ஆதின்னு ஒருத்தரு.. ரொம்ப நல்லா வெரைட்டியா எழுதுவாரு.. ஃபேமிலி பத்தி செமை காமெடியா எழுதுவாரு. அதைத்தான் தொகுத்து புக்கா போட்டுருக்காங்கன்னு நினைக்கிறேன்..”

“நீ ஏண்டா இப்படி கொசுவுக்கெல்லாம் கொடை புடிக்கிற.?”

கிஷோர், “புக்கையெல்லாம் தூக்கிப்போடுங்கடா, அப்பால பாப்போம். அலி, வண்டியை ஒரு அஞ்சி நிமிசம் ஓரமா நிப்பாட்டுறியா, ஒரு ரவுண்டு அடிச்சிட்டு, ஒரு தம்மை போட்டுட்டு போகலாம்..”

“அடிக்கடி பிரேக் பண்ணாதீங்கடா.. நைன், நைன் தர்டிக்கெல்லாம் கோவை வண்டி போய்ச்சேர்றதுக்குள்ள நாம போயிடணும்..” ஹைவேஸில் வெண்ணையாய் வழுக்கிக்கொண்டு 90ல் பறந்துகொண்டிருந்த வெண்டோவை மட்டுப்படுத்தி சாலையோரத்தில் நிறுத்தினான் அலிஃப்.

பின்பு அங்கிருந்து கிளம்பி, ஆம்பூர் பிரியாணியையெல்லாம் கடந்து, பெங்களூரைத் தொட்டுக் கடந்து, பீன்யா இண்டஸ்ரியல் எஸ்டேட்டையெல்லாம் தாண்டி, ஷ்ரவனூருக்கு அருகிலிருந்த ஒரு ஏரியாவில் இருந்த சண்முகத்தின் வீட்டை அடைந்தபோது இரவு மணி 10.30. சரியாக ஜீடியும் இரண்டு பியர் பாட்டில்களை அடித்துமுடித்து மட்டையாகியிருந்தான்.

கோவையிலிருந்து சுகுமார், பிரசாத்தை பிக்கப் செய்துகொண்டு இருவரும் 9 மணிக்கெல்லாம் வந்துவிட்டிருந்தனர்.

“ஜீடிக்கு ஏண்டா அதுக்குள்ள ஏத்திவிட்டீங்க? அவரோட நிறைய பேசணும்னு ஆவலா இருந்தேன்..” சுகுமார்.

“ஆமா, நாங்க வேற தனியா ஏத்திவிடுறோம்? சின்ன நொள்ளை பாரு?”

மீண்டும் ஜமா கூடியது. ஈரோட்டிலிருந்து பிரசாத் 11 பேருக்கு ஒரே மாதிரியான ரவுண்ட் நெக் டி ஷர்ட்களை கொண்டுவந்திருந்தான். ’இதென்னடா பொம்பளைங்க மாதிரி மஞ்ச சேலை ஜிங்குச்சா, பச்சை சேலை ஜிங்குச்சானு யுனிஃபார்மா போட்டுகிட்டு, நல்லாவாயிருக்கு..’ என்று நக்கல் பண்ணினாலும் ஆர்வமாக முதல் ஆளாக வாங்கி மாட்டிக்கொண்டான் கிஷோர். பெரிய ஹாலில் பாட்டில்கள், பிரியாணி, சைட்டிஷ்கள் சகிதம் ரவுண்டு கட்டி அமர்ந்திருந்தனர் அத்தனை பேரும். ஜீடி முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பி, எண்ணிக்கைக்காக கூட உட்கார்த்தி வைத்திருந்தார்கள்.

“ச்சியர்ஸ்..”

சொல்லி முதல் ரவுண்டை ஆரம்பித்து முடிக்கும் முன்னரே அலிஃப் ஆரம்பித்தான்.

“நாளைக்கு காலையில என்னடா பிளான்?”

“என்ன பிளான் வாரியக்கட்டை, அதைக் காலையில பாப்போம்..” பிரசாத்.

“ஆமால்ல, இதை எப்போ முடிச்சு எத்தனை மணிக்கு தூங்குவமோ தெரியாது. 3 மணி ஆவுதோ, விடிஞ்சு 5 மணி ஆவுதோ? காலையில பேசுவோமே..” விஜய்.

“ஏண்டா ஒரே விஷயத்தை எத்தனை வாட்டிடா பேசவைப்பீங்க? தண்ணியடிக்கிறதுன்னா அதை சென்னையிலயே அடிச்சிருக்கலாமே.. எல்லோருமா ஏதாவது ரோட் ட்ரிப், சைட் ஸீயிங் போலாம்னுதானே இவ்ளோ தூரம் வந்தோம்?” இது அலிஃப்.

கொஞ்சம் தெளிஞ்ச முகத்தோடு ஜீடி, “ஏன் சைட் ஸீயிங்னா, சென்னையிலயே போயிருக்கமுடியாதா? ஃப்ரண்ட்ஸோட ஒண்ணுமண்ணா சேர்ந்து தண்ணியடிக்கத்தானே வந்தோம். அப்போ அதுதான் முக்கியம்..”

“ஆமா, மாமா” இது பிரசாத்.

“கடுப்பேத்தாதீங்க.. ஒழுங்கா நாளைக்கு காலையிலேயே எங்காவது அவுட்டிங் போவோம். நாளை மறுநாள் சாய்ங்காலம் சென்னைகு கிளம்புறதால அன்னிக்கு காலையில எங்கயும் கிளம்பவும் முடியாது, டைமும் இருக்காது, இண்டரஸ்டும் இருக்காது.. சொல்லிட்டேன்”

“அலி சொல்றதும் கரெக்டுதான் மச்சி, நாளாகழிச்சி எங்கயும் போகமுடியாது, அதனால நாளைக்கே பக்கத்துல எங்காவது போயிட்டுவரலாம். சண்முகம், பக்கத்துல பார்க்குற மாதிரி ஏதாவது இடம் இருந்தா சொல்லுடா.. ஆனா ஒண்ணு, ப்ளீஸ் ஞாபகம் வைச்சுக்கோங்க. சாய்ங்காலம் 4 மணிக்கு எனக்கு சிட்டிக்குள்ள ஒரு வேலை இருக்கு. ஒரு முக்கியமான ஆளை மீட் பண்ணப் போகணும். சுகுமாரை மட்டும் கூட்டிகிட்டுப் போறேன். அதுக்கு மட்டும் அலவ் பண்ணுங்க, 7-8 மணிக்கெல்லாம் திரும்பி வந்துடறோம்..” இது கிஷோர்.

”ஆமாடா” இது சுகுமார்.

“நானும் சொல்லணும்னு நினைச்சேண்ணா, என்னோட கிளையண்ட் ஒருத்தரைப் பாக்கவேண்டியிருக்கு. நாளைக்கு ஈவினிங் மட்டும் நான் போகணும். 8 மணிக்கெல்லாம் வந்துடறேன். அதனால வேற எப்போன்னாலும் பிளான் பண்ணுங்க, நாளை ஈவினிங் மட்டும் வேண்டாம்”

“ஏண்டா இப்பிடி, டூர் வர்றப்போவும் இப்பிடி எதுனா வேலையை வைச்சுக்கிட்டே வருவீங்களாடா? நா வர்லை, நீ வர்லைனு கடுப்பேத்திகிட்டு.. மாமா, இவனுங்களை என்னான்னு கேளு..” பிரசாத்.

“இவனுகளை நம்பி கொலை கூட பண்ணமுடியாது..” ஜீடி.

சண்முகம் நைஸாக வாயைத்திறந்தான், “எனக்கும் நாளைக்கு சாய்ங்காலம் ஒரு வேலை இருக்கு மச்சி. கிருஷ்ணராஜாபுரத்துல எங்க ஆண்டி ஒருத்தங்க வீட்டுக்குப் போகணும். ஒரு பங்க்ஷன். டூ அவர்ஸ்தான். ஸ்வப்னாவோட ரிலேடிவ்ஸ், அவ வேற இல்ல, அதனால கண்டிப்பா என்னைப் போகச்சொல்லியிருக்கா. உங்களையெல்லாம் வீட்ல வைச்சிட்டு கொஞ்ச நேரம்தானே.. நான் மட்டும் போயிட்டு வந்துரலாம்னு நினைச்சேன்..”

பிரசாத் கடுப்பில், “ஊம்.. வேற? வேற எவனுக்கெல்லாம் எங்கல்லாம் போகணும். இருக்கறது 7 பேரு. அதுல 4 பேருக்கு வேலை இருக்காம். ஜீடி நீ எங்காவது போகணுமா? அலிஃப் உனக்கு?”

“கூல் டவுன் மாமா.. நாளைக்கு ஈவினிங் பிரச்சினைக்கு இன்னைக்கு ஏன் டென்ஷனாவுற? வுடு காலையில பாத்துக்கலாம். லெட்ஸ் என்ஜாய்.!”

“ஆமாண்ணா..” விஜய்.

பிரசாத், ஜீடி இருவரின் செல்போன்களைத் தவிர பிறரின் போன்கள் பிஸியாக SMSகளை அனுப்பும் வேலையை ரகசியமாகத் செய்யத் துவங்கியிருந்தன.-தொடரும்.
.

Friday, July 6, 2012

முட்டை வாங்குவது எளிதான காரியமா?


இது கடைக்குப் போய் கோழி முட்டை வாங்குவது பற்றிய பதிவு அல்ல. அதிலும் கூட சில சிரமங்கள் இருக்கத்தான் செய்கின்றன எனினும் இப்போது நாம் பேசவிருப்பது பரீட்சையில் முட்டை வாங்குவது பற்றி.

ரமாவுடன் ஏதோ பேசிக்கொண்டிருந்த போது எப்படியோ பரீட்சையில் மார்க்குகள் எடுப்பதைப்பற்றி பேச்சு திசைதிரும்பியது. நான் ஏதோ வாய்க்கு வந்ததைப் புளுகி வைக்க..

‘சும்மா புளுவாதீங்க.. 100 மார்க்ஸ் எடுக்குதது எவ்ளோ கஷ்டம் தெரிமா? மத்த பாடத்தை விடுங்க, கணக்குல கூட விடிய விடிய படிச்சிட்டுப் போய் எழுதி, எல்லாஞ் சரியா எழுதிட்டு ஒரே ஒரு கணக்குல ஒரே ஒரு ஈக்கோல்ட்டு போடலன்னாக் கூட ஒரு மார்க்கு போயிரும். எவ்ளவு வயித்தெரிச்சலா இருக்கும் தெரிமா?’ என்றைக்கோ வாங்கின 99 மார்க் இப்போது ஞாபகம் வந்து கொஞ்சம் நிஜமாகவே ஃபீல் பண்ணினார் ரமா.

நமக்கெங்க அந்த ஃபீலிங்க்லாம்.? 34 மார்க்கு வாங்கிவிட்டு, ‘படுபாவி, கூட ஒத்த மார்க்கு போட அவனுக்கு என்ன கொள்ளை?’ என்றுதான் பல தடவைகள் ஃபீல் பண்ணியிருக்கிறோம். ஆனால் அதையெல்லாமா ரமாவிடம் சொல்லமுடியும்? அப்புறம் நம்ம ப்ரஸ்டீஜ் என்னாகுறது? அதனால்தான் இரண்டாவது பாராவில், ‘நூறு மார்க்கு வேங்குறதெல்லாம் எனக்கு சர்வ சாதாரணமாக்கும்’ என்று புளுகிவைத்ததே.

ரமா பொதுவாக எல்லாப் பாடங்களிலும் 90க்கு மேல் எடுப்பவர் போலிருக்கிறது. இருந்தாலும் அவர் பேசியதைக் கேட்டுவிட்டு சும்மா போனால் நல்லாவா இருக்கும்? அவர் பேசுவதற்கு ஏறுக்கு மாறாக பேசினால்தானே ஒரு நிம்மதி கிடைக்கிறது.

‘90க்கு மேல எடுக்குறதுக்குல்லாம் என்ன கஷ்டம் வேண்டிகிடக்கு? முத நாளு உக்காந்து கொஞ்சம் படிச்சாலே போதும். ஆனா முட்டை எடுக்குறதுதான் கஷ்டம்..’

வழக்கம் போல கிக்கீகிக்கீ என்று சிரித்துவிட்டு, ‘முட்டை எடுக்குததுக்கு எதுக்கு கஷ்டம்? ஒண்ணும் எழுதாம பேப்பரக் குடுத்துட்டு வந்தாதான் முட்டை வேங்கிறலாமே?’ என்றார்.

’அதென்ன அப்பிடி சாதாரணமா சொல்லிட்ட? என் பிரண்டு ஒருத்தன் இருக்கான். அவன் சொல்லுவான்.. 3 மணி நேரம் உக்காந்துட்டு பேப்பரை சும்மாக் குடுக்கமுடியுமா? சூப்பர்வைசிங் பண்ணுவாங்கல்ல, சும்மா நேரத்தப் போக்க கொஸ்டின் பேப்பரப் பாத்து கேள்வியவே அப்படியே ஆன்ஸர் ஷீட்ல எழுதுனாக்கூட பாவம் பாத்து ரெண்டு, மூணு மார்க்கு போட்டுருவாங்க.. அதாவது பரவால்ல, கிளாஸ்ல திருத்துன பேப்பரக் குடுக்கும்போது முட்டை வேங்கியிருந்தா எப்பிடியிருக்கும்னு நினைச்சுப்பாரு? மானம், மரியாத, சூடு, சொரணை ஒண்ணும் இருக்கக்கூடாது. ரேங்க் கார்டுல வீட்ல கையெழுத்து வாங்குறத நினைச்சுப் பாரு.. வாரியப்பூசை வேங்கணும். அதெல்லாம் எவ்ளோ கஷ்டம் தெரியுமா?’
சீரியஸாப் பேசும் போது சிரிப்பதும், ஜோக் சொல்லும்போது சீரியஸா திங்க் பண்ணுவதும் ரமாவின் ஸ்பெஷாலிடி. ‘அட ஆமால்ல..’ என்று முட்டை வாங்குபவர்களுக்காக கொஞ்ச நேரம் அனுதாபப்பட்டுவிட்டு என்னைப் பார்த்தார். பொதுவாக எதையும் சொல்றப்போ நாம் சீரியஸாக சொல்வதில்லை எனினும் இந்த ‘முட்டை’ விஷயத்தை கொஞ்சம் பழைய விஷயங்கள் நினைவிலாட உணர்வுப்பூர்வமாக சொன்னதாலோ என்னவோ நாத்தழுதழுத்துவிட்டது என நினைக்கிறேன். அதை சில விநாடிகள் தாமதமானாலும் கண்டுகொண்டுவிட்டார்.

‘ஏங்க, புளுவாதீங்க.. நீங்கதான முட்டை முட்டையா வேங்குனது?’ கிக்கீகிக்கீயென சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.