Tuesday, July 17, 2012

ஷெரீன் - 3


முன்குறிப்பு: வழக்கமாக நாம் அப்படிச் செய்வதில்லை எனினும் இந்தத் குறுந்தொடர் சில தவிர்க்கவியலாத காரணங்களால் தாமதமாகிவிட்டது. இட்ஸ் ஆல் ரைட். :-))
------------------- 
முன்கதைச் சுருக்கம் :

ஷெரின் கொல்கத்தாவில் ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் அழகிய இளம்பெண். வேலை நிமித்தம் 2 நாள் பயணமாக பெங்களூர் கிளம்புகிறாள். அவளது தோழன் விஜய் சென்னையில் இருக்கிறான். அவனை சந்திக்கவிரும்பி பெங்களூர் வரச்சொல்கிறாள். அவன் வேலையிருப்பதாக முதலில் மறுத்தாலும் மாலை ப்ளைட்டில் வந்து இரவே கிளம்பிவிடுவதாக சொல்லவும் சம்மதிக்கிறாள்.

7 பேர் கொண்ட விஜய்யின் ஃபேஸ்புக் நண்பர்கள் குழு, ஷெரின் பெங்களூர் வரும் அதே நாட்களில் ஊட்டிக்கு டூர் திட்டமிடுகிறார்கள். அதை விஜய் குழப்பி டூர் ஸ்பாட்டாக பெங்களூர் என திட்டத்தை மாற்றிவிடுகிறான். நண்பர்களுடன் சுற்றிக்கொண்டிருப்பதை ஷெரினிடம் மறைத்தும், இவர்களுக்குத் தெரியாமல் சில மணிநேரங்கள் ஷெரினை சந்தித்துவரவுமாய் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது அவன் நோக்கம். சென்னை நண்பர்கள் குழு பெங்களூர் நோக்கி காரில் கிளம்புகிறது.

இனி :

நான்கு பேருடன் சென்னையிலிருந்து கிளம்பிய வெண்டோ ஸ்ரீபெரும்புதூரைத் தொட்டபோது மணி மாலை 4. மனைவியருக்கு போன்கால்கள், அலுவலக அழைப்புகள், கோவை வண்டி கிளம்பிவிட்டதா என்ற அப்டேட்டுகள் செய்வது என இந்த வேலைகளை முடிப்பதற்குள்ளாககவே வண்டி வேலூரைக் கடந்துவிட்டது. அலிஃப் ஸ்டியரிங்கில் இருந்தான். எல்லாவற்றையும் விட பெங்களூர்க்காரன் தேவைப்படுமளவு வெரைட்டியான பாட்டில்களை வாங்கி ஸ்டாக் வைத்துவிட்டானா, ஊருக்குப் போயிருக்கும் அவனது மனைவி, பிள்ளைகள் தடாலடியாக வந்து நின்றுவிடமாட்டார்கள்தானே என்பதான முக்கிய அறிக்கையை அப்டேட் செய்து, உறுதிமொழியும் பெறப்பட்டது. 

“ஊர் சுத்தவா? என்ன விளையாடுறியா? நானே நாளைக்கே சப்ளையர் எண்ட்ல வேலை முடிஞ்சுடுமா, கூட ஒரு நாள் ஆயிடுமோன்னு டென்ஷன்ல போய்கிட்டிருக்கேன். நாளைக்கு சாய்ங்காலம் ப்ளைட் புடிச்சி வந்துருவேன். அதெல்லாம் ஒருத்தனையும் பார்க்கவேண்டியதில்லை. வேலை முடிஞ்சதும் கிளம்பிருவேன். நீ போனை வையி முதல்ல..” ஜீடி போனில் மனைவியுடன் பேசிக்கொண்டிருந்தான். இடையில் கலாய்த்துவிடாமலிருக்க பார்வையாலாயே கெஞ்சிக்கொண்டிருந்தான் மற்றவர்களை.

அலிஃபுக்கு இந்த மாதிரி விஷயங்கள் என்றால் சிரிப்புப் பிய்த்துக்கொள்ளும். கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தான். போனை வைத்ததும் வாய்விட்டு சிரித்தவனாக, “கூட ஒரு நாள் ஆயிடுமோனு இவரு டென்சன்ல இருக்காராம்.. நாம கிளம்பப்போறதே நாளாகழிச்சுதான். ஹஹாஹா.. முதல்ல இவனைப் போட்டுக்கொடுக்கணும்டா. சிஸ்டருக்கு போனைப்போடு..”

“முதல்ல உன் வேலையைப் பாருடா வென்று..” என்று அவனை அதட்டிவிட்டு கிஷோரை நோக்கித் திரும்பி, 

“மச்சி, இன்னும் என்னத்தை நோண்டிகிட்டிருக்க.. ஓபன் பண்ணுடா.. எள்ளுதான் எலிப்புழுக்கைக்கு காயுது. எண்ணை நாம ஏன் காயணும்.?”

கிஷோர் மும்முரமாக பியர் பாட்டில்களை ஓபன் பண்ணிக்கொண்டிருந்தான்.

விஜய் சின்சியராக மொபைல் போனை நோண்டிக்கொண்டே, “அண்ணா, பழமொழியை தப்பா சொல்றீங்க..”

“ரொம்ப முக்கியம், முதல்ல அது பழமொழியே இல்ல.. வந்துட்டான் என்னைத் திருத்த..”

அலிஃப், “நாங்கள்லாம் வீட்ல உண்மையைச் சொல்லிட்டுதானே வர்றோம், நீ மட்டும் ஏண்டா இப்படி இருக்கே?”

"ஒலகத்துலயே எவனுக்கும் புரியாத ஒரு விஷயம் இருக்குன்னா அது அடுத்தவனோட ‘புருஷன்-பொண்டாட்டி’ தகறாறுதான். அதெல்லாம் யுனிக் மச்சி. அதனால அதை விட்டுட்டு உருப்புடியா வேற விஷயம் பேசலாமா?”

“இப்பவே தத்துவம் ஆரம்பிச்சிட்டானே, இன்னும் பியர் வேற உள்ளாறப்போவப்போகுது.. என்ன ஆகப்போகுதோ?”

”சைட்டிஷ் ஒண்ணியும் உருப்படியா வாங்கலை, போற வழிக்கு அன் டைமா இருந்தாலும் ஆம்பூர்ல பிரியாணி வாங்கணும், நிப்பாட்டு. மறந்துறாத..”

“ஆம்பூர் பிரியாணி? அதுவும் யாரு? நானு? மறந்துருவேனா?”

விஜய் ஒருவழியாய் போனை வைத்துவிட்டு, பின்பக்கமிருந்த அவன் பேக்கைப் போராடி எடுத்து அதை நோண்டத்துவங்கினான்.

“இவனை எதுக்குடா டூர்க்கு கூட்டினு வந்தீங்க.?”

“இல்லைண்ணா, ஒரு நிமிசம். போன சண்டே புக் பங்ஷன்க்கு டிஸ்கவரி போனேன்ல, ஃப்ரீயா கொடுத்தாங்க.. அதான் உங்களுக்கும் கொடுக்கலாம்னு எடுத்துட்டு வந்தேன்..”

ஒரு புக்கை எடுத்து வெளியே போட்டான்.

“டூர்ல எப்பிடி புக்கெல்லாம் படிக்க டைம் கிடைக்கும்?”

“படிக்கவா கொண்டுவந்தேன்? வேணும்னா உங்க பேக்ல போட்டுக்கங்க.. வீட்ல போய் படிங்க..”

ட்ரைவர் சீட்ல இருந்தே புக் ரேப்பரை பார்த்த அலிஃப், “இந்த புக்கு போடுற பதிவருங்க தொல்லை தாங்கலைப்பா.. குண்டூசி விக்கிறவன், புண்ணாக்கு விக்கிறவன்லாம் தொழிலதிபர்ங்கிற மாதிரி, பிளாக் எழுதுறவன்லாம் எழுத்தாளரா? சாவடிக்கிறானுங்க..”


“அப்டில்லாம் சொல்லாத மச்சி. ஆதின்னு ஒருத்தரு.. ரொம்ப நல்லா வெரைட்டியா எழுதுவாரு.. ஃபேமிலி பத்தி செமை காமெடியா எழுதுவாரு. அதைத்தான் தொகுத்து புக்கா போட்டுருக்காங்கன்னு நினைக்கிறேன்..”

“நீ ஏண்டா இப்படி கொசுவுக்கெல்லாம் கொடை புடிக்கிற.?”

கிஷோர், “புக்கையெல்லாம் தூக்கிப்போடுங்கடா, அப்பால பாப்போம். அலி, வண்டியை ஒரு அஞ்சி நிமிசம் ஓரமா நிப்பாட்டுறியா, ஒரு ரவுண்டு அடிச்சிட்டு, ஒரு தம்மை போட்டுட்டு போகலாம்..”

“அடிக்கடி பிரேக் பண்ணாதீங்கடா.. நைன், நைன் தர்டிக்கெல்லாம் கோவை வண்டி போய்ச்சேர்றதுக்குள்ள நாம போயிடணும்..” ஹைவேஸில் வெண்ணையாய் வழுக்கிக்கொண்டு 90ல் பறந்துகொண்டிருந்த வெண்டோவை மட்டுப்படுத்தி சாலையோரத்தில் நிறுத்தினான் அலிஃப்.

பின்பு அங்கிருந்து கிளம்பி, ஆம்பூர் பிரியாணியையெல்லாம் கடந்து, பெங்களூரைத் தொட்டுக் கடந்து, பீன்யா இண்டஸ்ரியல் எஸ்டேட்டையெல்லாம் தாண்டி, ஷ்ரவனூருக்கு அருகிலிருந்த ஒரு ஏரியாவில் இருந்த சண்முகத்தின் வீட்டை அடைந்தபோது இரவு மணி 10.30. சரியாக ஜீடியும் இரண்டு பியர் பாட்டில்களை அடித்துமுடித்து மட்டையாகியிருந்தான்.

கோவையிலிருந்து சுகுமார், பிரசாத்தை பிக்கப் செய்துகொண்டு இருவரும் 9 மணிக்கெல்லாம் வந்துவிட்டிருந்தனர்.

“ஜீடிக்கு ஏண்டா அதுக்குள்ள ஏத்திவிட்டீங்க? அவரோட நிறைய பேசணும்னு ஆவலா இருந்தேன்..” சுகுமார்.

“ஆமா, நாங்க வேற தனியா ஏத்திவிடுறோம்? சின்ன நொள்ளை பாரு?”

மீண்டும் ஜமா கூடியது. ஈரோட்டிலிருந்து பிரசாத் 11 பேருக்கு ஒரே மாதிரியான ரவுண்ட் நெக் டி ஷர்ட்களை கொண்டுவந்திருந்தான். ’இதென்னடா பொம்பளைங்க மாதிரி மஞ்ச சேலை ஜிங்குச்சா, பச்சை சேலை ஜிங்குச்சானு யுனிஃபார்மா போட்டுகிட்டு, நல்லாவாயிருக்கு..’ என்று நக்கல் பண்ணினாலும் ஆர்வமாக முதல் ஆளாக வாங்கி மாட்டிக்கொண்டான் கிஷோர். பெரிய ஹாலில் பாட்டில்கள், பிரியாணி, சைட்டிஷ்கள் சகிதம் ரவுண்டு கட்டி அமர்ந்திருந்தனர் அத்தனை பேரும். ஜீடி முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பி, எண்ணிக்கைக்காக கூட உட்கார்த்தி வைத்திருந்தார்கள்.

“ச்சியர்ஸ்..”

சொல்லி முதல் ரவுண்டை ஆரம்பித்து முடிக்கும் முன்னரே அலிஃப் ஆரம்பித்தான்.

“நாளைக்கு காலையில என்னடா பிளான்?”

“என்ன பிளான் வாரியக்கட்டை, அதைக் காலையில பாப்போம்..” பிரசாத்.

“ஆமால்ல, இதை எப்போ முடிச்சு எத்தனை மணிக்கு தூங்குவமோ தெரியாது. 3 மணி ஆவுதோ, விடிஞ்சு 5 மணி ஆவுதோ? காலையில பேசுவோமே..” விஜய்.

“ஏண்டா ஒரே விஷயத்தை எத்தனை வாட்டிடா பேசவைப்பீங்க? தண்ணியடிக்கிறதுன்னா அதை சென்னையிலயே அடிச்சிருக்கலாமே.. எல்லோருமா ஏதாவது ரோட் ட்ரிப், சைட் ஸீயிங் போலாம்னுதானே இவ்ளோ தூரம் வந்தோம்?” இது அலிஃப்.

கொஞ்சம் தெளிஞ்ச முகத்தோடு ஜீடி, “ஏன் சைட் ஸீயிங்னா, சென்னையிலயே போயிருக்கமுடியாதா? ஃப்ரண்ட்ஸோட ஒண்ணுமண்ணா சேர்ந்து தண்ணியடிக்கத்தானே வந்தோம். அப்போ அதுதான் முக்கியம்..”

“ஆமா, மாமா” இது பிரசாத்.

“கடுப்பேத்தாதீங்க.. ஒழுங்கா நாளைக்கு காலையிலேயே எங்காவது அவுட்டிங் போவோம். நாளை மறுநாள் சாய்ங்காலம் சென்னைகு கிளம்புறதால அன்னிக்கு காலையில எங்கயும் கிளம்பவும் முடியாது, டைமும் இருக்காது, இண்டரஸ்டும் இருக்காது.. சொல்லிட்டேன்”

“அலி சொல்றதும் கரெக்டுதான் மச்சி, நாளாகழிச்சி எங்கயும் போகமுடியாது, அதனால நாளைக்கே பக்கத்துல எங்காவது போயிட்டுவரலாம். சண்முகம், பக்கத்துல பார்க்குற மாதிரி ஏதாவது இடம் இருந்தா சொல்லுடா.. ஆனா ஒண்ணு, ப்ளீஸ் ஞாபகம் வைச்சுக்கோங்க. சாய்ங்காலம் 4 மணிக்கு எனக்கு சிட்டிக்குள்ள ஒரு வேலை இருக்கு. ஒரு முக்கியமான ஆளை மீட் பண்ணப் போகணும். சுகுமாரை மட்டும் கூட்டிகிட்டுப் போறேன். அதுக்கு மட்டும் அலவ் பண்ணுங்க, 7-8 மணிக்கெல்லாம் திரும்பி வந்துடறோம்..” இது கிஷோர்.

”ஆமாடா” இது சுகுமார்.

“நானும் சொல்லணும்னு நினைச்சேண்ணா, என்னோட கிளையண்ட் ஒருத்தரைப் பாக்கவேண்டியிருக்கு. நாளைக்கு ஈவினிங் மட்டும் நான் போகணும். 8 மணிக்கெல்லாம் வந்துடறேன். அதனால வேற எப்போன்னாலும் பிளான் பண்ணுங்க, நாளை ஈவினிங் மட்டும் வேண்டாம்”

“ஏண்டா இப்பிடி, டூர் வர்றப்போவும் இப்பிடி எதுனா வேலையை வைச்சுக்கிட்டே வருவீங்களாடா? நா வர்லை, நீ வர்லைனு கடுப்பேத்திகிட்டு.. மாமா, இவனுங்களை என்னான்னு கேளு..” பிரசாத்.

“இவனுகளை நம்பி கொலை கூட பண்ணமுடியாது..” ஜீடி.

சண்முகம் நைஸாக வாயைத்திறந்தான், “எனக்கும் நாளைக்கு சாய்ங்காலம் ஒரு வேலை இருக்கு மச்சி. கிருஷ்ணராஜாபுரத்துல எங்க ஆண்டி ஒருத்தங்க வீட்டுக்குப் போகணும். ஒரு பங்க்ஷன். டூ அவர்ஸ்தான். ஸ்வப்னாவோட ரிலேடிவ்ஸ், அவ வேற இல்ல, அதனால கண்டிப்பா என்னைப் போகச்சொல்லியிருக்கா. உங்களையெல்லாம் வீட்ல வைச்சிட்டு கொஞ்ச நேரம்தானே.. நான் மட்டும் போயிட்டு வந்துரலாம்னு நினைச்சேன்..”

பிரசாத் கடுப்பில், “ஊம்.. வேற? வேற எவனுக்கெல்லாம் எங்கல்லாம் போகணும். இருக்கறது 7 பேரு. அதுல 4 பேருக்கு வேலை இருக்காம். ஜீடி நீ எங்காவது போகணுமா? அலிஃப் உனக்கு?”

“கூல் டவுன் மாமா.. நாளைக்கு ஈவினிங் பிரச்சினைக்கு இன்னைக்கு ஏன் டென்ஷனாவுற? வுடு காலையில பாத்துக்கலாம். லெட்ஸ் என்ஜாய்.!”

“ஆமாண்ணா..” விஜய்.

பிரசாத், ஜீடி இருவரின் செல்போன்களைத் தவிர பிறரின் போன்கள் பிஸியாக SMSகளை அனுப்பும் வேலையை ரகசியமாகத் செய்யத் துவங்கியிருந்தன.-தொடரும்.
.

3 comments:

குசும்பன் said...

//அப்டில்லாம் சொல்லாத மச்சி. ஆதின்னு ஒருத்தரு.. ரொம்ப நல்லா வெரைட்டியா எழுதுவாரு.. ஃபேமிலி பத்தி செமை காமெடியா எழுதுவாரு. அதைத்தான் தொகுத்து புக்கா போட்டுருக்காங்கன்னு நினைக்கிறேன்..”//

நான்: அப்படியே அவரு எழுதுறதை படிக்கும் பொழுது ஜெப்ரி ஆர்சர் எழுதுறதை படிக்கிற மாதிரியே இருக்கும்.....

கவுண்டர்: டேய்ய்ய் நீ ஜெபரி ஆர்சரை பார்த்து இருக்கியா? இல்ல கலைஞர் ஆர்சையாவது பார்த்து இருக்கியா?

நான்: இல்ல...

கவுண்டர்: அப்புறம் ஏன் டா...இப்படி சொன்னே...

நான்: இந்தா இவருதான்...10 ரூபாய் கொடுத்து நான் கதை எழுதும் பொழுது எல்லாம் இதுமாதிரி கமெண்ட் போட சொன்னாருங்க...

கவுண்டர்: சரி நீ போ...டேய் இங்க வா...

ஆதி: ம்ம்ம்

கவுண்டர்: வாங்குற 4, 5 ஹிட்டுக்கு இதெல்லாம் தேவையா...

ஆதி: ஒரு வெளம்பரம்...

கவுண்டர்: என்னடா விளம்பரம்...புக்கு பப்ளிசர்ஸ்தான் ஊருக்கு ஊரு புக் ரிலீஸ் செஞ்சி புக்கை விக்கிறாங்கன்னா..நீயுமா...

Raghav said...

கொஞ்சம் பஞ்சதந்திரம் ஞாபகம் வந்தாலும் அருமையாக இருக்கிறது.
Pls continue...

அப்பறம் ஆதியோட book பின்னாடி எழுதினது யாரு? போட்டோ அண்ட் சங்கு பதிப்பகம் - good combination!

KSGOA said...

நல்லா இருக்குங்க.அந்த புத்தகத்தின் பின் அட்டை வரிகள் சூப்பர்!!!!!!!நடுவே சில
பல உள்குத்துகளும் சூப்பர்!!