Saturday, August 25, 2012

ஷாஷங் ரிடம்ஷன்

ஷாஷங் ரிடம்ஷன் (The Shawshank Redemtion) எனும் இந்தப் படத்தைப் பற்றி எந்தக் கட்டுரையை வாசிக்க நேர்ந்தாலும், ‘எந்தச் சூழலிலும் நம்பிக்கை இழக்காத ஒருவனுடைய கதை, நாம் ஒவ்வொருவரும் மனதில் கொள்ளவேண்டிய கருத்து’ என்ற வரிகள் தவறாமல் இருக்கும். அடச்சே, ஏதோ ஆர்ட்ஃபிலிமாக இருக்கப்போவுது’ என்பது போலவே ஃபீல் ஆகி, படம் பார்க்கும் ஆர்வத்தையே இழந்துவிடுவோம். ஆனால் உண்மை வேறு விதமாக இருக்கிறது.

’எப்படித்தான் இவ்வளவு அழகான, சுவாரசியமான, விறுவிறுப்பான கதையைப் பிடிக்கிறான்களோ இந்த ஹாலிவுட்காரனுக..’ என்ற வியப்புதான் முதலில் ஏற்படுகிறது. அதன் பின்னர்தான் அதிலிருக்கும் தன்னம்பிக்கைச் செய்தியெல்லாம்.

விதவிதமான குற்றங்களுக்காக அதிகபட்சம், நாற்பதாண்டுகள், ஐம்பதாண்டுகள் என கிட்டத்தட்ட முழு வாழ்நாளையுமே சிறையில் கழித்தாக வேண்டிய நிலையில் ஷாஷங் சிறைச்சாலையினுள் கைதிகள். கூண்டிலடைபட்ட பறவைகளுக்கு ஒரு கட்டத்தில் வானம் வசமிழந்து போய் பறப்பதே வலி தருவதாய் மாறிவிடக்கூடும். சிறைக்கூட வாழ்க்கை மட்டுமே எல்லாமாகிவிடும். விடுதலை என்பது நோக்கமானாலும், அது கிடைக்கும் போது அது இன்னொரு வகையான தண்டனையாக இருந்துவிடலாம். அப்பேர்ப்பட்ட நிலையில் ஒரு கைதி ரெட்.

மனைவியை கொலை செய்யத்துணிந்து, கடைசியில் மனம் மாறி விலகிச்சென்ற பின்பும், அவரின் மனைவியைக் கொலை செய்த பழியில் சிக்கி, ஷாஷங் சிறைச்சாலை வருகிறார் ‘ஆன்டி’ எனும் ஒரு வங்கி அதிகாரி.

ஷாஷங் சிறைக்கூடம், அதுவரை எவருமே தப்ப முடிந்திராத ஒரு வேற்றுலகம்.

ஆன்டி, ஒரு சாதாரண கைதியாக இல்லை. வேறு யாரையும் போல, அவனிடம் சிறையின் துவக்க நாட்கள் எந்தவித பயத்தையும், பரிதவிப்பையும் ஏற்படுத்த முடியவில்லை. செய்யாத குற்றத்துக்காக தண்டனை பெறுகிறோமே என்ற சுய பச்சாதாபம் அவனிடம் இல்லை. அவனது அமைதியை யாரும், எந்தச் சூழலும் கெடுக்கமுடியவில்லை. ஒரு சூழலில் ரெட்டும், ஆன்டியும் நண்பர்களாகின்றனர். சிறைக்கூட அதிகாரிகளுக்கான வரி ஏய்ப்பு வழிகளைச் சொல்லித்தருவதால் அவர்களுக்கும் நட்பாகிறான். அந்த நட்பில், அதிரிகாரிகளின் சுயநல நோக்கே தூக்கலாக இருக்கிறது. அவனது, நியாயமான ஓரிரு அத்து மீறலுக்காக அவன் வீரியமாகத் தண்டிக்கவும் படுகிறான். இருப்பினும் ரெட்டுக்கும், இன்னும் சில கைதிகளுக்கும் பாலையிலும், சோலையிலிருப்பதைப் போன்ற ஒரு மனநிலையை ஏற்படுத்தித்தருகிறான் ஆன்டி.

ஒரு நாள் ரெட்டிடம் இப்படிக் கூறுகிறான், ‘என்றாவது ஒரு நாள் நாம் விடுதலை பெறுவோம். நான் முதலில் விடுதலையடைந்தால் உனக்கான ஒரு செய்தியை ஓரிடத்தில் விட்டுச்செல்வேன். மீதமிருக்கும் நல்வாழ்க்கையை உன்னைப்போல ஒரு நண்பனுடன் வாழவேண்டும் என்று விரும்புகிறேன்’. சொல்லிவிட்டு அந்த இடத்தைப் பற்றியும் குறிப்பு தருகிறான்.

காலங்கள் உருண்டோடுகின்றன.

இருபதாண்டுகள் கழிந்த ஒரு நாளின் இரவுப்பொழுதில், ஆன்டி’ ஷாஷங்கின் காற்றோடு கலந்து காணாமல் போகிறான்.

எப்படி?

ஒரே ஒரு நாளின் சில மணி நேர தப்புதல் நிகழ்வுக்காக, 20 ஆண்டுகளாக ஆன்டி ஒவ்வொரு நாளும் தயாராகிக்கொண்டிருந்தது நம்மை வியப்பின் உச்சிக்கே கொண்டு செல்கிறது. அவன் சிறைக்குள் செய்த ஒவ்வொரு காரியமும் அவனது நோக்கம் சார்ந்ததாகவே இருந்திருக்கிறது. திட்டமிடலும், உழைப்பும், நம்பிக்கையும் ஒரு மனிதனிடம் செதுக்கியிருக்கும் பேரழகைக் கண்கள் விரியக் காண்கிறோம்.

பின்னர், பெயிலில் வெளியேறும் ரெட், நண்பனைத் தேடியடைகிறார். அடையாளங்கள் மாறிய சூழலில் அவர்களுக்கான மீதமிருக்கும் வாழ்க்கையைத் துவங்குகிறார்கள்.

இந்தக் கதை முழுதுமே ரெட்டின் மூலமாக ஓவர்லாப்பில் நமக்குச்சொல்லப்படுகிறது. ரெட் காரெக்டரில் மார்கன் ஃப்ரீமேன். அவருடைய வசீகரிக்கும் குரல், முதல் காட்சியிலிருந்தே நம்மைக் கட்டிப்போடுகிறது. ஃப்ரீமேன் மற்றும் டிம் ராபின்ஸ் ஆகியோரின் அற்புதமான நடிப்பில் நாம் கதையுடன் திளைக்கிறோம். முதல் காட்சியிலிருந்தே நம்மைத்தொற்றும் விறுவிறுப்பு, இறுதியில் நம்பிக்கை தந்த மகிழ்ச்சி, உற்சாகப்புன்னகையுடன் நிம்மதிப் பெருமூச்சுடன் நிறைவடைகிறது. 

எந்தச் சூழலிலும் நம்பிக்கை இழக்காத ஆன்டியின் கதை, நாம் ஒவ்வொருவரும் மனதில் கொள்ளவேண்டிய கருத்தாகும்.

.

Tuesday, August 21, 2012

ரமா அப்டேட்ஸ்

(கூகிள் ப்ளஸ்ஸில் எழுதியவை)

00000

மனைவியர் நன்றாக சமைக்கத்தெரியாமல் இருந்தால் அதற்காக வருத்தப்படாமல், மகிழ்ச்சியடையுங்கள். அப்போதுதான் அவர்கள் தவறுதலாக என்றைக்காவது ரொம்ப டேஸ்டியாக சமைத்துவிடும்போது அதை ரசித்துக்கொண்டாட முடியும். தினமும் சாப்பாடு நன்றாக இருந்தால் போரடிச்சிடுமில்ல..

(இன்றைய ஆச்சரிய டேஸ்டி மெனு: பூண்டு குழம்பு, சிறுகீரைப் பொரியல், முட்டை அடை)


00000

சமீபத்தில் சன் டிவியில் தமிழ் வெர்ஷனில், வௌவ்வால் மனிதனின் அட்டகாசங்கள் என்ற அறிவிப்போடு, 'தி டார்க் நைட்’ ஒளிபரப்பப்பட்டது. பொதுவாக சினிமா அவ்வளவு ஆர்வமாக பார்க்காத ரமாவும் ஏதோ பொழுதுபோகவில்லையோ என்னவோ உட்கார்ந்து முழு படத்தையும் பார்த்துவிட்டு ஒருவகையான முகபாவத்தோடு உட்கார்ந்திருந்தார். தூங்கி எழுந்து வந்த நான்,

”என்னம்மா?”

”பேட்மேன் படம் நல்லாத்தான் இருக்குற மாதிரி இருக்கு. ஆனா அங்கன கொஞ்சம் இங்கன கொஞ்சம்னு ஒரே குழப்பமா இருக்குற மாதிரி இல்ல.?”

பெரிய்ய்ய பெரிய்ய்ய அறிவாளிகளே மண்ணைக் கவ்விகிட்டு மறுக்கா மறுக்கா பாத்துகினு கிடக்குறாங்களாம், நானே இன்செப்ஷன் பாத்து குப்புறக்கா விழுந்தவன் இன்னும் எந்திரிக்கவே இல்லை. இதுல உனக்கு உடனே புரிஞ்சிருமா? இதைச் சொன்னேன்னு நினைக்கிறீங்களா? அஸ்க்கு புஸ்க்கு. எவன் உதை வாங்குறது? அதை மனசுக்குள்ள நினைச்சுட்டு,

“நம்ப கெப்பாசிட்டிக்கு நோலன் படம்லாம் சாதாரணம்மா, சாப்பாடு போடு.. சாப்புட்டுட்டு, ரெண்டு பேருமா உக்காந்து ஸ்டான்லி க்யூப்ரிக் படத்தைப் போட்டு புரியுதான்னு பாப்போம்..”


00000

ட்ரெஸ் எடுக்கப்போகணும்னு உங்க மனைவி சொன்னால் துணிக்கடைக்கு மட்டும் அழைத்துச்செல்லும் வழி இருந்தால் ஆராய்ந்து அதை கண்டுபிடியுங்கள். அந்தக் காலத்துல திறந்த மாட்டுவண்டி இருக்கையில் ஏன் பெண்களுக்கென மெனெக்கெட்டு கூண்டுவண்டி தயாரித்தார்கள் எனும் காரணத்தை இப்போதுதான் உணர்கிறேன்.

டூவீலரில் சாலையில் சென்றால் துணிக்கடை வருவதற்கு முன்னால் எத்தனைக் கடைகள்தான் கண்களில் படுகின்றன. ”ஐய்யய்யோ.. பிளாஸ்டிக் கடை.. தம்பிக்கு குட்டிச்சேர் வாங்கணும், என்னங்க.. பேக்குக் கடை.. இந்த பேக்கு எடுத்து 1 வருசம் ஆவப்போவுது, அடடா.. செப்பல் கடை.. புது செப்பல் வாங்கணுமே, ஹைய்யோ.. செல்போன் கடை.. இந்த ஓட்டை போனை எப்போதான் மாத்தித்தரப்போறீங்கனு பாக்குறேன், அங்க பாருங்க பாத்திரக்கடை.. குட்டி பால்குக்கர் ஒண்ணு வாங்கணும்னு எவ்ளோ நாளா சொல்லிகிட்டிருக்கேன்..”


00000

ஒரு உயர்வு நவிற்சியாக பூரிக்கட்டை, பேச்சு வழக்கில் பயன்படுகிறதே தவிர அஃதொன்றும் அடிக்கடி கையாளப்படக்கூடிய பொருளல்ல. இருப்பினும், பூரி செய்துகொண்டிருக்கும் போது வாகாக பக்கத்தில் வேறு நின்று கொண்டு யாரும் தங்கமணிகளிடம் வாக்குவாதம் செய்யாமலிருப்பது நல்லது.

00000

ஒரு மூன்று வாக்கியங்கள் சொல்கிறேன் கேளுங்கள். (இது புனைவு அல்ல)

“வீட்டில் என் மனைவி இன்று மீன் சமைத்தார். சுவையாக இருந்தது. மகிழ்ச்சியடைந்தேன்..”

இதிலென்ன விசேஷம்? இஃதொரு ஆர்டினரி சம்பவம்தானே. எல்லோர் வீட்டிலும் நடப்பதுதானே.. ஆம், மனைவியர் மீன் சமைக்கும் போது அது சுவையாக அமைவது ஆச்சரியமான விஷயம்தான். அதனால் அது சுவையாக இருந்தால் நாம் மகிழ்வதும் இயல்புதான். சரி, இத்தோடு இன்னும் இரண்டு வாக்கியங்களைச் சேர்த்துப்பார்க்கலாம்.

“அவர் முதல் முறையாக மீன் சமைத்தார். எங்களுக்குத் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகின்றன.”

ஆச்சரியம் வருகிறதல்லவா? சரி, இனி இந்த வாக்கியங்களை ஆராய்வோம். இவற்றைப் படித்ததும் உங்களுக்கு என்னவெல்லாம் தோன்றலாம்?

”இந்தாள் வழக்கம் போல தங்கமணி ஜோக் சொல்கிறானா? இல்லை நிஜத்தைச் சொல்றானா? நிஜமாக்கூட இருக்குமோ? அப்படியானால், நான் -வெஜ் சமைக்கவும், சாப்பிடவும் கூடிய ஒரு குடும்பத்தில் 6 ஆண்டுகளாக மீன் சமைக்காத காரணம் என்னவாக இருக்கமுடியும்?”

இதுக்கு விடை தெரிந்தவர்கள் எனது வாசகர்கள். தெரியாதவர்களைப் பார்த்து நானும், என் வாசகர்களும் சிரிக்கிறோம். ஹிஹி..


.

Sunday, August 19, 2012

லயன் காமிக்ஸின் லக்கி லூக்!


நல் ரசனையை ஏற்படுத்துவது, அதை உயர்த்திப்பிடிப்பது, மேம்படுத்துவது என்பது ஒரு நல்ல சமூகத்துக்கான அடிப்படையான தேவை. அதையும் இளம் தலைமுறையினரிடம் அதை வலுவாகச் செய்வது என்பது அச்சமூகத்துக்குக் கிடைக்கவேண்டிய அத்தியாவசியமாகும். அதில் பல கூறுகள் இருந்தாலும் வாசிப்பு என்பது முதன்மையானதென்பதை அறிவோம். வாசிப்பை எப்படி இன்றைய பிள்ளைகளிடையே ஏற்படுத்தமுடியும்? தமிழ்ச்சூழலில் இப்படி நற்காரியங்களெல்லாம் நடக்குமென்பதை நாம் எதிர்பார்க்கமுடியாது. நடந்தாலும் அது ஆச்சரியத்துக்குரிய ஒரு செய்தியேயாகும். தமிழில் காமிக்ஸ்எனும் அத்தகைய ஆச்சரியத்தை, சேவையை பிரகாஷ் பப்ளிஷர்ஸ் என்ற நிறுவனம் நெடுங்காலமாக தொழில் என்பதையும் மீறிய காதலுடன் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். நம் சூழலில் இது அரிதான ஒன்றுதான்.

80களில் பள்ளிப் புத்தகங்கள், விளையாட்டு இவற்றைத் தவிர சிறார்களுக்கு வேறு வேலைகளே இருக்கவில்லை. அந்த ஏற்புடைய சூழலிலும் கூட வாசிப்பை தமிழ்ப் பெற்றோர்கள் ஊக்குவித்ததும் இல்லை, சிறார்களும் தன்னிச்சையாய் வாசிக்கும் வழக்கத்தை பெரும்பாலும் ஏற்படுத்திக்கொள்ளவும் இல்லை. வகுப்புக்கு ஓரிருவர் என்ற விகிதத்தில் வாசிக்கும் வழக்கம் உள்ள மாணவர்கள் நினைவுக்கு வருகிறார்கள். அதுவே நம் சமூகத்தின் வாசிக்கும் விகிதமாகவும் இருக்கலாம். அந்தச் சூழலிலேயே அப்படி என்றால் இன்றைய காலகட்டத்தில்? மாணவர்களின் தன்னிச்சை ஒருபுறம் இருக்க பெற்றோரின் மனநிலையே ஒரு பைத்தியக்காரனைப் போல மதிப்பெண்கள் எனும் மாயையை சுற்றிக்கொண்டிருக்கிறது. மேலும் டிவி, குத்து டான்ஸ், மொபைல் போன், SMS, சினிமா, கணினி, இணையம், பள்ளி, மதிப்பெண்கள், கட்டாய எக்ஸ்ட்ரா கரிகுலர் என எத்தனையோ தடைகளைத் தாண்டித்தான் வாசிப்புக்கு வரவேண்டும். அப்படி ஏழு கடல் தாண்டி வருபவர்களை வரவேற்க என்னதான் நம்மிடையே இருக்கிறது?

ஒன்றுமில்லை என்று சொல்லிவிட முடியாதபடிக்கு இருக்கிறது, கொஞ்சூண்டு காமிக்ஸ். பெரும் ஆலமரமாய் பின்னாளில் தளைத்தவர்களுக்கும் துவக்கமாய் காமிக்ஸ்கள்தான் இருந்திருக்கின்றன. காமிக்ஸ், வாசிப்பைத் தூண்ட ஒரு எளிய மற்றும் வலிமையான வழி.  

கடந்த, சுமார் 40 வருடங்களாக தமிழில் காமிக்ஸை சாத்தியப்படுத்திக் கொண்டிருப்பவர்கள் முத்து, லயன் காமிக்ஸ் வெளியீட்டாளர்களான பிரகாஷ் பப்ளிஷர்ஸ். அதுவும் 90களுக்குப் பிறகு தமிழ் காமிக்ஸ் உலகம் தொய்வடைந்து கிடந்த பல்லாண்டுகளுக்குப் பிறகும், அதைத் தாங்கியதோடு மட்டுமின்றி, மீண்டும் ஒரு புது எழுச்சியோடு இப்போது அவர்கள் இயங்குவது ஒருவகையில் நாம் செய்த அதிர்ஷ்டமே.

இப்போதும் அதே திட்டமிடலுடன் மலிவுப்பதிப்பாக மையுறிஞ்சும் தாளில் கருப்பு-வெள்ளையில் காமிக்ஸ்கள் வந்து கொண்டிருந்தால் அது செல்லுபடியாகுமா? இன்றைய இளம் தலைமுறையைக் கவரமுடியுமா? நல்லவேளையாக காலத்துக்கேற்ற மாற்றங்களுடன் உயர்தர தாளில், அளவில் பெரிதாக, அச்சு நேர்த்தியுடன், வண்ணமயமாக வந்திருக்கிறார்கள். இதை தமிழ் காமிக்ஸ்களின் மறுமலர்ச்சி என்றே சொல்லலாம். இந்த காமிக்ஸ் மறுமலர்ச்சி, நம்மைப்போன்ற முன்னாள் சிறுவர்கள்/காமிக்ஸ் ரசிகர்கள்/இன்று பணம் படைத்தவர்களால் மட்டும்தான் மீண்டும் தங்கள் பால்யத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக ஆதரிக்கப்படுகிறதா என்பதை சற்று சிந்திக்கவேண்டும். அது மட்டுமே இந்த எழுச்சியின் காரணமாக அமைந்துவிடக்கூடாது. இது மீண்டும் இன்றைய இளம் சிறார்களையும் பற்றிக்கொள்வதாக அமையவேண்டும் என்பது என் ஆசை.

அந்த ஆசை, இன்னும் அ, ஆ கூட சரியாக படிக்கத்தெரியாத என் 4 வயது பையன், 4 நாட்களாக நியூலுக் ஸ்பெஷலைக் கையில் விடாமல் வைத்துக்கொண்டு, படம் பார்த்துக்கொண்டு திரிவதை காண்கையில் நிறைவேறும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.


சென்ற மாத வெளியீடான, நியூலுக்ஸ்பெஷலில் பனியில் ஒரு கண்ணாமூச்சி, ஒரு வானவில்லைத் தேடி என இரண்டு அட்டகாசமான படக்கதைகள். அதகளம் என்றுதான் சொல்லவேண்டும். ஓவியங்களை ரசிக்கவா? கதையோடு பரபரவென ஓடவா? சில லாங் ஷாட் ஓவியங்கள், உங்கள் கார்டூனிஸ்டுகளுக்கெல்லாம் கூட நாங்கள்தான் இன்ஸ்பைரிங்காக இருக்கிறோம் என்பதைச் சொல்லாமல் சொல்கின்றன. மேற்கை நோக்கிப் பயணிக்கும் ஒரு பெரிய குதிரைவண்டித் தொடர், பாதுகாப்புக்காக உடன்செல்லும் லக்கி லூக், சாக்லெட்டுக்காக அவரைக் கெஞ்சி சம்மதிக்க வைக்கும் சிறுவன், வண்டித்தொடரிலேயே ஒரு ஸ்டோர், சலூன், புஜ்ஜிமா பள்ளிக்கூடம் என பல்வேறு வண்டிகள், கெட்டவார்த்தை பேசும் அக்ளி பர்ரோ, டர்ர்ர்ரி டர்ர்ரிரி ம்யூசிக் என ஒவ்வொரு காரெக்டர்களும் சிரித்து சிரித்து, கன்னம் வலிக்க, என் முகத்தில் ஒரு நிரந்தரப் புன்னகையே ஒட்டிக்கொண்டுவிட்டதோ எனுமளவு நிறைவைத்தந்தன. உண்மையில் அந்த அனுபவத்தை இப்படி ஒரே பத்தியில் சுருக்காமல் ஒரு தனி பதிவாகப் போடுவதுதான் நியாயமாக இருக்கும். பல பக்கங்களில் வெடிச்சிரிப்பு, காலத்துக்கேற்ற அழகான மொழிபெயர்ப்பு என ஒரு கலக்கலான அனுபவம். தவறவிடாதீர்கள்.

சென்றிடுவீர் எட்டுத்திக்கும், கலைச்செல்வம் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!! என்ற ஆன்றோர் வாக்கு இன்றைக்கு யாருக்குப் பொருந்துகிறதோ, இல்லையோ, பிரகாஷ் பப்ளிஷர்ஸ் திரு. விஜயனுக்கு சாலவும் பொருந்தும். தமிழில் ஏறத்தாழ இல்லை என்றே சொல்லிவிடக்கூடிய கலையாம் காமிக்ஸை, ஆங்கிலம், பிரஞ்சு, ஸ்பானிஷ் என உலக மொழிகளிலெல்லாம் தேடித்தேடி அவரால் இயன்றதை இங்கு கொண்டுவந்து சேர்க்கிறார். வாழ்த்துகளும், நன்றிகளும் அவருக்கு!


.

அட்டக் கத்தி

எங்கேயும் எப்போதும், மெரீனா, மதுபானக்கடை என கதையே இல்லாமல், சம்பவங்களால் கோர்க்கப்பட்ட திரைக்கதையுடன் கூடிய சினிமாக்களை இப்போது அடிக்கடி காணமுடிகிறது. அந்த வரிசையில் தலைப்புக்குப் பொருத்தமாய் இதோ இன்னொரு ’அட்டக்கத்தி’. கதை சொல்வதும், அதைக் கேட்க, படிக்க, பார்க்க வைப்பதும் ஒரு பெரிய சவால்தான். உண்மையில் கதை என்பது ஒரு அற்புதம். கேட்கவும், படிக்கவும், பார்க்கவும் வைக்கும் திறன் வாய்ந்த கதைசொல்லிகள்தான் அரிதான, காணக்கிடைக்காத ஒரு விஷயமாக இருக்கிறார்கள். எளிய உதாரணமாக வலைப்பூக்களைக் குறிப்பிடலாம். கதை புனையும், அல்லது கதையாக புனையும் திறன் இல்லாமையாலே பத்தி எனும் வடிவத்தையே அனைவரும் பிடித்துக்கொண்டிருக்கிறோம். நம் அனுபவங்களைப் பகிர பத்தி எளிதானதாக இருக்கிறது. பத்தி ஒரு கோடு எனில் கதை என்பது கோட்டோவியம். எல்லோருக்கும் அது கைவருவதில்லை. சரி, சம்பவங்கள் மட்டுமே சினிமாவுக்குப் போதுமா? அதிலேயே சமூகப்பதிவுகளுடனும், அக்கறையுடனும், பொறுப்புடனும், நேர்த்தியாக ஒரு சினிமா எடுக்கமுடியுமா? அப்படி ஒரு சினிமா படைக்கப்பட்டால் அது சரிதானா? அப்படியானால் கதையம்சம் என்பது கட்டாயம் இல்லையா? நம் இயக்குனர்கள் கதைப்பஞ்சத்தால் இந்த வழியைக் கையிலெடுத்திருக்கிறார்களா? அல்லது ஒரு மாற்றம் வேண்டி இதைச் செய்கிறார்களா? இந்த வடிவத்தை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? இந்தக் கேள்விகளுக்கு நம்மிடம் பதிலில்லை. காலம் பதில் சொல்லும். ரொம்ப மண்டையை சூடு செய்துகொள்ளாமல் நம் அளவுகோல்களின் படி பிடித்திருந்தால் மகிழ்ந்தும், இல்லையெனில் ஒதுங்கியும் சென்று கொண்டிருப்போம். சரியானது, தப்பிப் பிழைத்திருக்கும்.


சுவாரசியமான சம்பவங்களால், அதுவும் எவர்கிரீன் இளமைக்கால காதல்களும், அதைச்சார்ந்த நிகழ்வுகளுமாய் கோர்க்கப்பட்டிருக்கும் அட்டக்கத்தி, அதையாவது நிறைவாகச் செய்ததா என்று கேட்டால் மதில் மேல் பூனை என்றுதான் சொல்லவேண்டும். இடைவேளை வரை கலகலப்பாகச் செல்லும் படம் பின்னர், பிரதான கதை என்று எதையும் சொல்லவில்லையே என்ற இயக்குனரின் பயத்தில் தடம் மாறுகிறது. பிறவற்றைப்போலவே கடந்து போயிருக்கவேண்டிய ஒரு நிகழ்வையே படத்தின் பிரதான கதையாக உருமாற்ற முயற்சித்து அதில் தோல்வியடைந்து, இடைவேளைக்குப் பிறகான படத்திலும், கிளைமாக்ஸிலும் மிகப்பெரிய ஒரு தொய்வைத் தந்திருக்கிறார். அம்பத்தூரின் 19 வயது லோக்கல் இளைஞன், 2000க்கு சற்று முன்னே பின்னே எப்படி இருந்திருப்பான்? அவன் கடந்துவரும் பெண்கள், அவனது நண்பர்கள், அவனது குடும்பம் காட்சிப் படுத்தப்பட்டிருக்கிறது. பல காட்சிகள் நம்மை நம் பால்யத்துக்கு அழைத்துப்போகும் வலிவுள்ளவை. பல சம்பவங்களை நாமும் கடந்துவந்திருக்கிறோம். வெள்ளைத் தாவணியில் அந்த ஹீரோயின் பஸ்ஸில் பள்ளிக்குச் செல்லும் அழகைக் கண்டபோது, நாம் இன்னும் கூட கொஞ்சம் பெட்டராய் கடந்திருக்கலாம் அந்தக் காலத்தை என்ற எண்ணம் எனக்குள் ஓடியது. படத்தின் மிக முக்கியமான அம்சம் கேரக்டரைசேஷன். ஒவ்வொரு காரெக்டரும் நிஜத்துக்கு மிக அருகில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு மகுடம் போல ஹீரோ, மற்றும் ஹீரோயின் கதாபாத்திரங்கள். ’அட்ட’ காரெக்டரால் தினேஷ் ஜொலிக்கிறாரா அல்லது தினேஷால் ’அட்ட’ ஜொலிக்கிறதா தெரியவில்லை, தினேஷைப் பாராட்டுவதே இந்த விமர்சனம் எழுதப்படுவதின் பிரதான நோக்கம். அவ்வகையில் நடிகர் தினேஷும், இயக்குனர் இரஞ்சித்தும் நம்பிக்கைக்குரிய வரவுகள். இவர்களாவது வெற்றி தரும் மிதப்பில், கும்மாங்குத்துப் பாடல்களையும், பல்லி சண்டைகளையும் நோக்கித் திசை திரும்பாமலிருக்க பிரார்த்திப்போம்.

.

Tuesday, August 7, 2012

அஞ்சு ரூவா


சமீபத்தில் சுவாரசியமான, குழந்தைகள் கதை போன்ற தொனியுடன் கூடிய ஒரு சிறுகதையை வாசித்தேன். 'தமிழ்’”' எனும் சிற்றிதழில் வெளியாகியிருந்தது. அந்த எழுத்தாளரின் அனுமதியுடன் அது இங்கே உங்களுக்காக.. இதென்ன புதுப் பழக்கம்ங்கிறீங்களா? அந்த எழுத்தாளர் என் பிரியத்துக்குரிய என் தாய்மாமா என்பதால் அப்படி. :-)) நீங்களும் எவ்வளவு நாள்தான் நான் எழுதுறதையே படிச்சிகிட்டிருப்பீங்க. அதான் ஒரு சேஞ்சுக்காக.

-----------------------------------------------------

அஞ்சு ரூவா..!
(சிறுகதை: பாப்பாக்குடி. இரா.செல்வமணி)

இப்ப மணி என்ன தெரியுமா? முந்தி கருக்கல்னு சொல்லுவாங்களே, அந்த ஆறேமுக்காலாச்சு... இப்பதான் ஒரு புண்ணியவாட்டி என்னை இந்த உண்டியல்ல கொண்டு வந்து சேர்த்தா... இந்த உண்டியல கொடைக்கு கொடைதான் திறப்பாங்களாம். அதனால இன்னும் ஒன்றரை வருசத்துக்கு நல்ல ஓய்வுதான். ஆனாலும் நான் அச்சடிச்சு வந்ததிலேர்ந்து என் வாழ்க்கைல இன்னிக்கு பட்ட கஷ்டம் மாதிரி ஒருநாளும் பட்டதில்ல. அத கொஞ்சம் நீங்க கேட்டே ஆகனும். அப்பதான் எனக்கும் நிம்மதியா தூக்கம் வரும்.

நேத்து ராத்திரி மதுரைக்கு பக்கத்துல வீரங்குடி கொத்தனார் ஒருத்தன் என்னைய பெட்டிக்கடைலிருந்து வாங்கி சட்டைப்பைல போட்டுக்கிட்டு வீட்டுக்கு வந்தான். வந்தவன் நடுக்கட்டுல ஒரு ஓரமா கட்டியிருந்த கயத்துல கழட்டிப்போட்டவுடனே நான் கீழே விழுந்துட்டேன். மறுநாள் என்னைக் காணாம, பதறப்போறது தெரியாம அப்படியே போட்டுட்டு சாப்பிட போயிட்டான். அவன் சம்சாரம் எம்பக்கத்துலயே நாலு முறை போயிட்டுவந்தா.. அப்பவாவது எடுத்துருக்கலாம். இல்ல. ராத்திரி பெருக்கிட்டு படுத்தாலாவது நான் கண்ணுல தென்பட்டிருப்பேன். அதுவுமில்ல. நானும் நாளைக்கி என்ன ஆகப் போறேனோங்கிற கவலைல தூங்கிட்டேன்.

திடீர்னு ஜில்லுனு ஒரு கை பட்டுது. முழிச்சுப்பார்த்தா.. அட விடிஞ்சுடுதா?.. ஆமா, நாம யார் கையில இருக்கோம்? அய்யய்யோ.. கொத்தனாரோட ஒன்றரை வயசுப்பய என்ன வாயில போடவும் எடுக்கவுமா இருக்கானே. வீட்ல யாருமில்லையா?... முழுங்கி தொலைச்சுடக்கூடாதேன்னு நினைக்கையிலேயே அவனோட வாயில சிக்கிட்டேன். என்னடா செய்ய ஒரு பிஞ்சு செத்துப்போக நாம காரணமாயிருந்துடக்கூடாதேங்கிற பயம். நல்லவேளை அவ அம்மாக்காரி பாத்துட்டா...

'ஏங்க இங்க வாங்க...ஒரு ஆட்டோ பிடிச்சுட்டு உடனே வாங்க ... நம்ம பய துட்ட முழுங்கிட்டான். டாக்டர்கிட்ட போகணும்!'

கொத்தனார் பதறியடிச்சுட்டு ஓடிப்போய் ஆட்டோ கிடைக்கலன்னு ஒரு காரப்புடிச்சுட்டு வந்தான். தல்லாகுளத்துல இருக்கிற ஆஸ்பத்திரிக்கு வேகமாவே போய்ட்டாங்க... நல்ல வேளையா டாக்டர் இருந்தாரு. அந்த சின்னப்பய கால புடிச்சு தலகீழா தூக்கி  பொடறில  ஒருதட்டு  தட்ட சல்லுனு  நான்  கீழே விழுந்துட்டேன். அவன் அழுதான். நல்லவேளைப்பா! தப்பிச்சோம் ஒருபெரிய பழிலேருந்து... நம்மள இப்புடியே போட்டுட்டு போய்டுவாங்களோ... இல்ல... என்ன துடச்சி பைல போட்டுக்கிட்டாரு கொத்தனாரு. அப்புறமென்ன அவன் சம்சாரம் பக்கத்து கோயில்ல பூ போட்டு கும்பிடனும்னு என்னய பூக்காரிட்ட குடுத்துட்டு போய்ட்டா.

ஒருவழியா பூவாசத்துல கொஞ்சம் ஆசுவாசப்டுத்திக்கலாம் நினைச்சா 'டேய் தம்பி டீ வாங்கிட்டுவாடா'ன்னு என்னோட ஒரு ஒத்த ரூவா நண்பனையும் சேர்த்து குடுத்தனுப்ப டீக்கடைக்காரன் கல்லாவுல போய் விழுந்தேன். நான் நெனச்ச மாதிரியே டீக்கடைக்காரன் என்னை அஞ்சு நிமிஷத்துல ஒரு மீன் வியாபரிட்ட கை மாத்திட்டான். ஒரே நாத்தம்!

இன்னிக்கு முழிச்ச முழிப்பே சரியில்ல போலிருக்கு... இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போவுதோன்னு சிந்திச்சிட்டு இருக்கையிலேயே மீன் வாங்க வந்த ஒரு வயசுப்பொண்ணுட்டே என்னை மீதியாக்குடுத்துட்டான் மீன் வியாபாரி;. நல்ல வேளை.. அந்தப்பொண்ணுக்கு தங்க மனசு. பக்கத்துல இருந்த தண்ணிக்குழாயில என்ன குளிப்பாட்டி பர்சுல போட்டு தன் சட்டைக்குள்ள வைச்சுகிட்டா. நல்ல சுகமாத்தானிருந்தது. ஆனா அந்தப்பொண்ணு அவ வீட்டுக்குள்ள போறதுக்குள்ள அவ தம்பி வந்து  'துட்டு குடுக்கா... பரீட்சைக்கு பேப்பர் வாங்கணும்'னு கேட்க பள்ளிக்கூடத்து பையங்கைல நான்.

பயபுள்ள, அவங்கக்காட்ட பொய் சொல்லிருக்கு போல.. பள்ளிக்கூடத்து பக்கத்துல இருக்கிற கடைல என்ன கொடுத்து 'மஞ்ச்' வாங்கித் தின்னுட்டு போவுது. சரி போட்டும்...  கடைக்காரன் கல்லாவுல நம்ம தோழர்கள் கூட்டம். கொஞ்ச நேரம் அவங்கவுங்க கதைய கேட்கலாம்னு பார்த்தா எங்கள வரிசையா அடுக்கி பொட்டலம் போட்டு மொத்தவியாபாரிட்ட தூக்கி குடுத்துட்டான். ஒரே மூச்சு முட்டல். ரப்பர் பேண்ட எப்ப எடுப்பானோ தெரியலியேன்னு கவலைல இருந்தேன். இதென்ன.. இது யாரு கை? அட கண்டக்டர் வந்துட்டாருப்பா. ஒருகாலத்துல, எங்கள குடுத்து கண்டக்டர்ங்க எல்லாம் கமிஷன் பர்த்தாங்க... இப்ப அவங்களே கமிஷன் குடுத்து எங்கள வாங்கிட்டு போறாங்க. இவருக்கு என்ன திண்டாட்டமோ? ஒருவழியா விடுதல பண்ணி தோல் பைல போட்டுகிட்டாரு.

'கண்டக்டர், கண்டக்டர் கொஞ்ச முன்னால இருந்த மாதிரி ஒரு சின்னப்பொண்ணு கையில என்னை பிடிச்சு குடுய்யா'ன்னு சொன்னேன்... செவிட்டுப்பயலுக்கு காதே கேட்கல போலிருக்கு. மதுரைலேயிருந்து திருநெல்வேலிக்கு போற பஸ் அது. ஏறி டிக்கட் போட ஆரம்பிச்சவுடனேயே கடைசி சீட்டுல இருந்த குடிகாரப்பய கைல மீதிச்சில்லறையா என்ன தூக்கி குடுத்துட்டான். உவ்வே... ஒரே குமட்டல் குமட்டலா வந்துச்சு. இதுக்கு அந்த மீன் வாடையே தேவலாம்போல. பையில என்னப்போட்டுக்கிட்டு அங்கியும் இங்கியும் அவன் ஆடுன ஆட்டத்துல இன்னிக்கு     நம்மள யாருமில்லாத நடு ரோட்டுல போட்டுறப் போறான்னு நினைச்சேன். நல்லவேளையா திருமங்கலத்துல கொஞ்ச பேர் இறங்கினதால நடுவரிசைல ஒரு சீட்டுல போய் சாஞ்சி உக்காந்து தூங்க ஆரம்பிச்சுட்டான்.

நான் என் நிலைமைய கொஞ்சம் அசை போட்டுபார்த்தேன். நேத்து இவ்ளோ நேரம் திருச்சில... முந்தாநாளு இவ்ளோ நேரம் பெங்களுர்ல... அதுக்கு முதநாளு சென்னைல... அட நம்மளும் பைசா செலவில்லாம நல்லாத்தான் ஊரச் சுத்திப்பாத்துகிட்டிருக்குறோம்.
   
'வண்ணாரப்பேட்ட ரவுண்டானால்லாம் இறங்குங்க!...'

கண்டக்டர் போட்ட சத்துத்ததுல முழிச்சப்புறம்தான் திருநெல்வேலி வந்துட்டுனு புரிஞ்சுது. நாம அசதில நல்லாத்தான் தூங்கிட்டோம் போலிருக்கு!. குடிகாரப்பய கொஞ்சம் தெளிவாயிட்டான். ரவுண்டானாவுல ஸ்டெடியா இறங்குனவன் முத வேளையா கலைஞர் டைல்ஸ் போட்டு பளிச்சுனு கட்டி வச்சிருக்குற செல்லப்பாண்டியன் மேம்பாலத்துக்கு அடி வழியாப்போய் அந்த முக்குல இருந்த பெட்டிக்கடையில என்னைக்குடுத்து பான்பராக் வாங்கிவாயில ஒதுக்கிட்டு போனான்.. மூதேவிக்கு எல்லா கெட்டப்பழக்கமும் உண்டு போலிருக்கு... எனக்கென்ன அதப்பத்தி... அட அதுக்குள்ள என்னய வாங்கி பேண்டு பாக்கெட்டுல போடுறது யாருப்பா?... ஒரு இளைஞன். படிச்சவன் மாதிரி தெரியுது. இவன் பைக்குல, நம்ம எங்க கொண்டு போவப்போறானோ? கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க வுடுங்கப்பா... ஒரே நாள்ல எவ்ளோதான் அலைறது?. பாக்கெட்டு ரொம்ப சின்னது போலிருக்கு. வாய்க்கு பக்கத்துலதான் நானிருந்தேன். அதுவும் நல்லதாப்போச்சு. ஒன்றரைக்கண்ணால வேடிக்கப் பார்த்துகிட்டே வந்தேன்.
   
ஈரடுக்குமேம்பாலம்... நெல்லையப்பர்கோயில்... பேட்டை... கல்லூர்... சேரன்மாதேவி விலக்கு... முக்கூடல்... அட இவன் எங்கதான் போறான்?... அடுத்த ஊரு பாப்பாக்குடின்னு படிக்கிறதுக்குள்ள...ஐயோ... கீழே விழுந்திட்டேனே...டேய்!..நான் உனக்கு வேண்டாமாடா?. போயே போய்ட்டான்.

இன்னிக்குதான் நமக்கு எவ்ளோ அனுபவமாயிப்போச்சு... அட அதுக்குள்ள பார்த்துட்டியளா... யாரோ ஒரு நடுத்தர வயசுக்காரி என்னை எடுத்து அவ வச்சிருந்த கூடைல போட்டுக்கிட்டா... இதென்ன ஒரு மாதிரி கமறுது.. பீடித்தூளா? இதுலேர்ந்து எப்ப விடுதலையோ தெரியலையே... இந்தம்மா எங்க போறான்னே தெரியலியே. நடந்துக்கிட்டே இருக்குது. பஸ் ஏறுரமாதிரியும் தெரியல. இருட்டிக்கிட்டு வேற வருது.

’யக்கா.. சாட்டுபத்துக்கு இப்படி போயிறலாமா?'

'இதே வழிதான் ஆத்துப்பாலத்துக்கு முன்னாடி திரும்பிறாதிய... நேராப்போங்க!'

சரிதான். பக்கத்துல ஏதோ கிராமம் போலிருக்கு. இதென்ன... எங்க வந்து நிக்குறாப்புல.. ஏதோ கோயில் மாதிரியிருக்கு...

'அருள்மிகு சங்கிலி பூதத்தார்-தளவாய் மாடசாமி கோயில் - உண்டியல்'

நம்மள உண்டியல்ல போடப்போறாப்புலயா... அதைப் படிச்சு முடிக்கிறதுக்குள்ள.. க்ளுங்... உண்டியல்லேயே வுழுந்துட்டேன்...

இப்பபுரியுதா?... நான் இங்க எப்படி வந்தேன்னு... சரி சரி கதை கேட்டது போதும் போய் வேற வேலை இருந்தா போய் பாக்குற வழியப்பாருங்க! ஏம்பொழப்பு என்னோட!

.

Monday, August 6, 2012

சமரசம் உலாவும் இடமே..’மதுபானக் கடை’ ஒரு வழக்கமான தமிழ்த் திரைப்படம் அல்ல. எந்த நிமிடமும், ஒரு பரபரப்பான காதல் கதையாக, கள்ள மதுச்சந்தை பற்றிய அதிரடிக்கதையாக, உருக்கமான பின்னணி கொண்ட காரெக்டர்களின் செண்டிமெண்ட் கதையாக ஆகி விறுவிறுப்பான கிளைமாக்ஸுடன் நிறைவடைந்திருக்கவேண்டிய படம் இது. அப்படிச் செய்திருந்தால் இந்தப்படத்துக்குத் தணிக்கைச் சான்றிதழ் வாங்குவதிலும், வெளியாவதிலும் இருந்ததாக கூறப்படும் சிக்கல்கள் இருந்திருக்காது. மேலும் இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் ஒரு கமர்ஷியல் வெற்றியையும், பணத்தையும் வாரியிறைத்திருக்கும். அப்படியே ஆகியிருந்தாலும் கூட ஒரு சாதாரண கமர்ஷியல் படம் என்று நாம் சொல்லி ஒதுக்கிவிடமுடியாதபடிக்கு இந்தப் படம் நல்ல கூறுகளுடனுள்ள ஒரு தரமான படமாகவே வந்திருக்கும். ஆனாலும் இயக்குனர் கமலக்கண்ணனின் நோக்கம் ஆச்சரியகரமாக அதுவாக இல்லை. ஹீரோயிஸத்தையும், மொக்கைகளையும் பார்த்து நொந்துபோயிருக்கும் நமக்கு ஆறுதலாக ஒரு சமூகப் பதிவை தன் சினிமா மூலமாக செய்திருக்கிறார். 

**

நாவலில் செய்வதை சிறுகதையில் செய்யமுடியாது. ஒரு சிறுகதையின் அடர்த்தியை நாவல் கொண்டிருக்கமுடியாது. கவிதையின் நோக்கம் வேறு. நாடகம் நிகழ்த்திக் காண்பிப்பதை கவிதையால் காண்பிக்க முடியாது. போலவே சினிமா என்பது ஒரு பிரத்தியேக வடிவம். அதன் தன்மையைத் தாண்டி வேறெதுவும் அதில் செய்யலாமா என்று எனக்குச் சொல்லத்தெரியவில்லை. ஆனால், எல்லாவற்றிலும் விதிவிலக்குகள் இருக்கலாம்தான். கலை என்பது மக்களையும், அந்தந்த காலகட்டத்தின் சமூக லட்சணங்களையும் பதிவு செய்வதாக இருக்கவேண்டும். ‘மதுபானக் கடை’ ஒரு சினிமாவாகவே இருந்துகொண்டு அதைச் சாதித்திருக்கவேண்டும். என்னைப் பொறுத்தவரை, மதுபானக் கடை ஒரு சிறந்த ஆவணப் படமாகவே இருக்கிறது. ஆகவே சினிமா என்ற வடிவத்தை எதிர்பார்த்து வரும் மக்களை அது ஏமாற்றக்கூடும்.

**

இந்தப்படம் கோர்வையான ஒரு பிரதான கதையை மையமாகக் கொண்டதல்ல, எனினும் ஏராளமான கிளைக்கதைகளை, நிஜக் கதைகளை நம்மையே ஊகித்துணரும்படி செய்திருக்கிறார்கள். டாஸ்மாக்கில் நிகழும் ஒரு நாள் சம்பவங்களை நம்முன்னே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். டாஸ்மாக்கில் டேபிளைக் கவனிக்கும் பையனைக் காதலிக்கும் அந்தப் பெண்ணின் அப்பாவித்தனம் நம்மைப் பதறவைக்கிறது. அவளது காதலில் உடலார்வமே மேலோங்கியிருப்பதாக சந்தேகிக்கிறோம். பெட்டிஷன் மணி குடிச்சாலை தவிர்த்து வேறெப்படியெல்லாம் என்னவெல்லாம் செய்துகொண்டிருப்பாரோ என்ற ஆர்வம் தோன்றுகிறது. மனநலம் பாதிப்பட்ட அந்த மனிதனுக்கு உறவென்று ஒருவர் கூடவா இல்லை என்ற பரிதாபம் வருகிறது. குடித்துவிட்டு பள்ளிக்குச்செல்லும் அந்த ஆசிரியரை என்ன செய்யலாம் என்ற எரிச்சல் ஏற்படுகிறது. இப்படியாக இந்தப் படத்தின் காரெக்டர்கள் சிறப்பாக செதுக்கப்பட்டிருக்கின்றன. அந்த வகையில் இது ஆவணப்படம் என்ற இடத்திலிருந்து சினிமா என்ற இடத்தை நோக்கி நகர்கிறது.

**

நாஞ்சில்நாடன் ஒரு கட்டுரையில், தன் எழுத்தால் ஏற்படுத்திய உணர்வை, இந்தப் படம் நம்மிடம் ஏற்படுத்துகிறது. அவ்வகையில், கவனிக்கத்தக்க, சமூகப்பொறுப்புள்ள, திறம்மிக்க ஒரு இயக்குனரை தமிழ் சினிமா பெற்றிருக்கிறது எனலாம். ‘உண்ணற்க கள்ளை’ என்ற நாஞ்சில்நாடனின் அந்தக் கட்டுரையே இப்படத்துக்கும் ஒரு தூண்டுகோலாக அமைந்தது என்பது கூடுதல் தகவல்.

**

இன்றைய டாஸ்மாக் குடிச்சாலை என்பது, இத்தனை ஆயிரம் ஆண்டுகளில் தமிழ்ச் சமூகம் இதுகாறும் அறிந்திருந்த, கண்டுணர்ந்திட்ட அவலங்களிலேயே மிக முக்கியமானதாகும். சொல்லப்போனால் இந்த ‘மதுபானக் கடை’ என்ற படம் ஓரளவு மனிதர்களைக் காட்சிப்படுத்துவதில்தான் வெற்றியடைந்திருக்கிறதே அன்றி, டாஸ்மாக்கின் உண்மையான கோரத்தைப் பதிவு செய்யவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ‘சமரசம் உலாவும் இடமே..’ என்ற வரிகள் மனிதர்களுக்கிடையேயான ஏற்றத்தாழ்வுகள், மாறுபாடுகளைக் களைந்து மனிதர்கள் பழகும் இடம் என்பதாக உணரப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையில் நாய்களும், பன்றிகளும், சாக்கடைக்கொசுக்களும், ஈக்களும், மனிதர்களும் எந்த வேறுபாடுமின்றி கலக்கும் இடம் என்ற அர்த்தத்தில்தான் அந்த வரிகள் கவனிக்கப்படவேண்டும். அந்த வகையில் ஈக்களற்ற, இவ்வளவு சுத்தமான டாஸ்மாக் குடிச்சாலையை நான் உண்மையில் நேரில் எங்குமே கண்டதில்லை. இந்த வகையில் படத்தின் ஒரே குறையாக ‘ஆர்ட் டைரக்‌ஷனை’ சொல்லுவேன்.

**

சின்னச்சின்ன காரெக்டர்கள், காட்சிகள், வசனங்கள், நடிப்பு, இசை, பாடல்கள் என அத்தனையுமே சிறப்பு. அதிலும், சமரசம் உலாவும் இடமே பாடல் படத்தின் முத்தாய்ப்பு. கமலக்கண்ணன் மற்றும் குழுவுக்கு மனமார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துகள். இறுதிக் காட்சியில் ஒரு சிறு தூண்டலில் கொந்தளித்து, உணர்ச்சி மேலோங்க, ஆவேசமாக பொங்கியெழும் துப்புறவுத்தொழிலாளியின் கேள்விகள், அந்த ஆதிக்கசாதி மனிதனை நோக்கி மட்டுமே எழுவது அல்ல, அது நம்மை நோக்கி, இந்த சமூகத்தை நோக்கி, இந்த அரசாங்கத்தை நோக்கி எழுவதாகும். அவனது கேள்விகளுக்கு நம்மிடம் பதில் இல்லை. கண்கள் பனிக்க, ‘என்னை மன்னித்து விடு’ என்று மனதுக்குள் முனகிக்கொண்டே எழுந்தேன். 

.