Monday, August 6, 2012

சமரசம் உலாவும் இடமே..



’மதுபானக் கடை’ ஒரு வழக்கமான தமிழ்த் திரைப்படம் அல்ல. எந்த நிமிடமும், ஒரு பரபரப்பான காதல் கதையாக, கள்ள மதுச்சந்தை பற்றிய அதிரடிக்கதையாக, உருக்கமான பின்னணி கொண்ட காரெக்டர்களின் செண்டிமெண்ட் கதையாக ஆகி விறுவிறுப்பான கிளைமாக்ஸுடன் நிறைவடைந்திருக்கவேண்டிய படம் இது. அப்படிச் செய்திருந்தால் இந்தப்படத்துக்குத் தணிக்கைச் சான்றிதழ் வாங்குவதிலும், வெளியாவதிலும் இருந்ததாக கூறப்படும் சிக்கல்கள் இருந்திருக்காது. மேலும் இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் ஒரு கமர்ஷியல் வெற்றியையும், பணத்தையும் வாரியிறைத்திருக்கும். அப்படியே ஆகியிருந்தாலும் கூட ஒரு சாதாரண கமர்ஷியல் படம் என்று நாம் சொல்லி ஒதுக்கிவிடமுடியாதபடிக்கு இந்தப் படம் நல்ல கூறுகளுடனுள்ள ஒரு தரமான படமாகவே வந்திருக்கும். ஆனாலும் இயக்குனர் கமலக்கண்ணனின் நோக்கம் ஆச்சரியகரமாக அதுவாக இல்லை. ஹீரோயிஸத்தையும், மொக்கைகளையும் பார்த்து நொந்துபோயிருக்கும் நமக்கு ஆறுதலாக ஒரு சமூகப் பதிவை தன் சினிமா மூலமாக செய்திருக்கிறார். 

**

நாவலில் செய்வதை சிறுகதையில் செய்யமுடியாது. ஒரு சிறுகதையின் அடர்த்தியை நாவல் கொண்டிருக்கமுடியாது. கவிதையின் நோக்கம் வேறு. நாடகம் நிகழ்த்திக் காண்பிப்பதை கவிதையால் காண்பிக்க முடியாது. போலவே சினிமா என்பது ஒரு பிரத்தியேக வடிவம். அதன் தன்மையைத் தாண்டி வேறெதுவும் அதில் செய்யலாமா என்று எனக்குச் சொல்லத்தெரியவில்லை. ஆனால், எல்லாவற்றிலும் விதிவிலக்குகள் இருக்கலாம்தான். கலை என்பது மக்களையும், அந்தந்த காலகட்டத்தின் சமூக லட்சணங்களையும் பதிவு செய்வதாக இருக்கவேண்டும். ‘மதுபானக் கடை’ ஒரு சினிமாவாகவே இருந்துகொண்டு அதைச் சாதித்திருக்கவேண்டும். என்னைப் பொறுத்தவரை, மதுபானக் கடை ஒரு சிறந்த ஆவணப் படமாகவே இருக்கிறது. ஆகவே சினிமா என்ற வடிவத்தை எதிர்பார்த்து வரும் மக்களை அது ஏமாற்றக்கூடும்.

**

இந்தப்படம் கோர்வையான ஒரு பிரதான கதையை மையமாகக் கொண்டதல்ல, எனினும் ஏராளமான கிளைக்கதைகளை, நிஜக் கதைகளை நம்மையே ஊகித்துணரும்படி செய்திருக்கிறார்கள். டாஸ்மாக்கில் நிகழும் ஒரு நாள் சம்பவங்களை நம்முன்னே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். டாஸ்மாக்கில் டேபிளைக் கவனிக்கும் பையனைக் காதலிக்கும் அந்தப் பெண்ணின் அப்பாவித்தனம் நம்மைப் பதறவைக்கிறது. அவளது காதலில் உடலார்வமே மேலோங்கியிருப்பதாக சந்தேகிக்கிறோம். பெட்டிஷன் மணி குடிச்சாலை தவிர்த்து வேறெப்படியெல்லாம் என்னவெல்லாம் செய்துகொண்டிருப்பாரோ என்ற ஆர்வம் தோன்றுகிறது. மனநலம் பாதிப்பட்ட அந்த மனிதனுக்கு உறவென்று ஒருவர் கூடவா இல்லை என்ற பரிதாபம் வருகிறது. குடித்துவிட்டு பள்ளிக்குச்செல்லும் அந்த ஆசிரியரை என்ன செய்யலாம் என்ற எரிச்சல் ஏற்படுகிறது. இப்படியாக இந்தப் படத்தின் காரெக்டர்கள் சிறப்பாக செதுக்கப்பட்டிருக்கின்றன. அந்த வகையில் இது ஆவணப்படம் என்ற இடத்திலிருந்து சினிமா என்ற இடத்தை நோக்கி நகர்கிறது.

**

நாஞ்சில்நாடன் ஒரு கட்டுரையில், தன் எழுத்தால் ஏற்படுத்திய உணர்வை, இந்தப் படம் நம்மிடம் ஏற்படுத்துகிறது. அவ்வகையில், கவனிக்கத்தக்க, சமூகப்பொறுப்புள்ள, திறம்மிக்க ஒரு இயக்குனரை தமிழ் சினிமா பெற்றிருக்கிறது எனலாம். ‘உண்ணற்க கள்ளை’ என்ற நாஞ்சில்நாடனின் அந்தக் கட்டுரையே இப்படத்துக்கும் ஒரு தூண்டுகோலாக அமைந்தது என்பது கூடுதல் தகவல்.

**

இன்றைய டாஸ்மாக் குடிச்சாலை என்பது, இத்தனை ஆயிரம் ஆண்டுகளில் தமிழ்ச் சமூகம் இதுகாறும் அறிந்திருந்த, கண்டுணர்ந்திட்ட அவலங்களிலேயே மிக முக்கியமானதாகும். சொல்லப்போனால் இந்த ‘மதுபானக் கடை’ என்ற படம் ஓரளவு மனிதர்களைக் காட்சிப்படுத்துவதில்தான் வெற்றியடைந்திருக்கிறதே அன்றி, டாஸ்மாக்கின் உண்மையான கோரத்தைப் பதிவு செய்யவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ‘சமரசம் உலாவும் இடமே..’ என்ற வரிகள் மனிதர்களுக்கிடையேயான ஏற்றத்தாழ்வுகள், மாறுபாடுகளைக் களைந்து மனிதர்கள் பழகும் இடம் என்பதாக உணரப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையில் நாய்களும், பன்றிகளும், சாக்கடைக்கொசுக்களும், ஈக்களும், மனிதர்களும் எந்த வேறுபாடுமின்றி கலக்கும் இடம் என்ற அர்த்தத்தில்தான் அந்த வரிகள் கவனிக்கப்படவேண்டும். அந்த வகையில் ஈக்களற்ற, இவ்வளவு சுத்தமான டாஸ்மாக் குடிச்சாலையை நான் உண்மையில் நேரில் எங்குமே கண்டதில்லை. இந்த வகையில் படத்தின் ஒரே குறையாக ‘ஆர்ட் டைரக்‌ஷனை’ சொல்லுவேன்.

**

சின்னச்சின்ன காரெக்டர்கள், காட்சிகள், வசனங்கள், நடிப்பு, இசை, பாடல்கள் என அத்தனையுமே சிறப்பு. அதிலும், சமரசம் உலாவும் இடமே பாடல் படத்தின் முத்தாய்ப்பு. கமலக்கண்ணன் மற்றும் குழுவுக்கு மனமார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துகள். இறுதிக் காட்சியில் ஒரு சிறு தூண்டலில் கொந்தளித்து, உணர்ச்சி மேலோங்க, ஆவேசமாக பொங்கியெழும் துப்புறவுத்தொழிலாளியின் கேள்விகள், அந்த ஆதிக்கசாதி மனிதனை நோக்கி மட்டுமே எழுவது அல்ல, அது நம்மை நோக்கி, இந்த சமூகத்தை நோக்கி, இந்த அரசாங்கத்தை நோக்கி எழுவதாகும். அவனது கேள்விகளுக்கு நம்மிடம் பதில் இல்லை. கண்கள் பனிக்க, ‘என்னை மன்னித்து விடு’ என்று மனதுக்குள் முனகிக்கொண்டே எழுந்தேன். 

.

5 comments:

இல்யாஸ்.மு said...

படத்தை போலவே விமர்சனமும் ஆர்பாட்டமில்லாமல் நேர்த்தியா இருக்கு!!

புதுகைத் தென்றல் said...

இப்படி படம் வந்ததே தெரியாது ஃப்ரெண்ட். அருமையான விமர்சனம்

s suresh said...

வித்தியாசமான முறையில் சிறப்பான விமர்சனம்! நன்றி!

இன்று என் தளத்தில் மழை!ஹைக்கூக்கள்!http://thalirssb.blogspot.com/2012/08/blog-post_6.html

ரங்குடு said...

இந்தியாவில் உள்ள அரசாங்கங்கள் என்னென்ன செய்யக்கூடாதோ அதைத்தான் செய்கின்றன. எனவே சமூகப் பிரச்சனைகளுக்கு அரசாங்கத்தை நம்புவதோ, எதிர்பார்ப்பதோ மிகவும் தவறானதாகும்.

டாஸ்மாக்கை வைத்து அரசாங்கத்தில் இருப்பவர்கள் பணம் பார்க்கும் நேரமிது.

கூடுதல் தகவல்: டாஸ்மாக்கில் வேலை செய்யும் என் நண்பன், குடிகாரர்களுக்கு சரக்குடன் தன் சிறுநீரையும் கலந்து கொடுப்பதாகக் கூறுகிறான்.

அறிவன்#11802717200764379909 said...

|| கூடுதல் தகவல்: டாஸ்மாக்கில் வேலை செய்யும் என் நண்பன், குடிகாரர்களுக்கு சரக்குடன் தன் சிறுநீரையும் கலந்து கொடுப்பதாகக் கூறுகிறான். ||

வேண்டியதுதான்.. :))