Tuesday, August 7, 2012

அஞ்சு ரூவா


சமீபத்தில் சுவாரசியமான, குழந்தைகள் கதை போன்ற தொனியுடன் கூடிய ஒரு சிறுகதையை வாசித்தேன். 'தமிழ்’”' எனும் சிற்றிதழில் வெளியாகியிருந்தது. அந்த எழுத்தாளரின் அனுமதியுடன் அது இங்கே உங்களுக்காக.. இதென்ன புதுப் பழக்கம்ங்கிறீங்களா? அந்த எழுத்தாளர் என் பிரியத்துக்குரிய என் தாய்மாமா என்பதால் அப்படி. :-)) நீங்களும் எவ்வளவு நாள்தான் நான் எழுதுறதையே படிச்சிகிட்டிருப்பீங்க. அதான் ஒரு சேஞ்சுக்காக.

-----------------------------------------------------

அஞ்சு ரூவா..!
(சிறுகதை: பாப்பாக்குடி. இரா.செல்வமணி)

இப்ப மணி என்ன தெரியுமா? முந்தி கருக்கல்னு சொல்லுவாங்களே, அந்த ஆறேமுக்காலாச்சு... இப்பதான் ஒரு புண்ணியவாட்டி என்னை இந்த உண்டியல்ல கொண்டு வந்து சேர்த்தா... இந்த உண்டியல கொடைக்கு கொடைதான் திறப்பாங்களாம். அதனால இன்னும் ஒன்றரை வருசத்துக்கு நல்ல ஓய்வுதான். ஆனாலும் நான் அச்சடிச்சு வந்ததிலேர்ந்து என் வாழ்க்கைல இன்னிக்கு பட்ட கஷ்டம் மாதிரி ஒருநாளும் பட்டதில்ல. அத கொஞ்சம் நீங்க கேட்டே ஆகனும். அப்பதான் எனக்கும் நிம்மதியா தூக்கம் வரும்.

நேத்து ராத்திரி மதுரைக்கு பக்கத்துல வீரங்குடி கொத்தனார் ஒருத்தன் என்னைய பெட்டிக்கடைலிருந்து வாங்கி சட்டைப்பைல போட்டுக்கிட்டு வீட்டுக்கு வந்தான். வந்தவன் நடுக்கட்டுல ஒரு ஓரமா கட்டியிருந்த கயத்துல கழட்டிப்போட்டவுடனே நான் கீழே விழுந்துட்டேன். மறுநாள் என்னைக் காணாம, பதறப்போறது தெரியாம அப்படியே போட்டுட்டு சாப்பிட போயிட்டான். அவன் சம்சாரம் எம்பக்கத்துலயே நாலு முறை போயிட்டுவந்தா.. அப்பவாவது எடுத்துருக்கலாம். இல்ல. ராத்திரி பெருக்கிட்டு படுத்தாலாவது நான் கண்ணுல தென்பட்டிருப்பேன். அதுவுமில்ல. நானும் நாளைக்கி என்ன ஆகப் போறேனோங்கிற கவலைல தூங்கிட்டேன்.

திடீர்னு ஜில்லுனு ஒரு கை பட்டுது. முழிச்சுப்பார்த்தா.. அட விடிஞ்சுடுதா?.. ஆமா, நாம யார் கையில இருக்கோம்? அய்யய்யோ.. கொத்தனாரோட ஒன்றரை வயசுப்பய என்ன வாயில போடவும் எடுக்கவுமா இருக்கானே. வீட்ல யாருமில்லையா?... முழுங்கி தொலைச்சுடக்கூடாதேன்னு நினைக்கையிலேயே அவனோட வாயில சிக்கிட்டேன். என்னடா செய்ய ஒரு பிஞ்சு செத்துப்போக நாம காரணமாயிருந்துடக்கூடாதேங்கிற பயம். நல்லவேளை அவ அம்மாக்காரி பாத்துட்டா...

'ஏங்க இங்க வாங்க...ஒரு ஆட்டோ பிடிச்சுட்டு உடனே வாங்க ... நம்ம பய துட்ட முழுங்கிட்டான். டாக்டர்கிட்ட போகணும்!'

கொத்தனார் பதறியடிச்சுட்டு ஓடிப்போய் ஆட்டோ கிடைக்கலன்னு ஒரு காரப்புடிச்சுட்டு வந்தான். தல்லாகுளத்துல இருக்கிற ஆஸ்பத்திரிக்கு வேகமாவே போய்ட்டாங்க... நல்ல வேளையா டாக்டர் இருந்தாரு. அந்த சின்னப்பய கால புடிச்சு தலகீழா தூக்கி  பொடறில  ஒருதட்டு  தட்ட சல்லுனு  நான்  கீழே விழுந்துட்டேன். அவன் அழுதான். நல்லவேளைப்பா! தப்பிச்சோம் ஒருபெரிய பழிலேருந்து... நம்மள இப்புடியே போட்டுட்டு போய்டுவாங்களோ... இல்ல... என்ன துடச்சி பைல போட்டுக்கிட்டாரு கொத்தனாரு. அப்புறமென்ன அவன் சம்சாரம் பக்கத்து கோயில்ல பூ போட்டு கும்பிடனும்னு என்னய பூக்காரிட்ட குடுத்துட்டு போய்ட்டா.

ஒருவழியா பூவாசத்துல கொஞ்சம் ஆசுவாசப்டுத்திக்கலாம் நினைச்சா 'டேய் தம்பி டீ வாங்கிட்டுவாடா'ன்னு என்னோட ஒரு ஒத்த ரூவா நண்பனையும் சேர்த்து குடுத்தனுப்ப டீக்கடைக்காரன் கல்லாவுல போய் விழுந்தேன். நான் நெனச்ச மாதிரியே டீக்கடைக்காரன் என்னை அஞ்சு நிமிஷத்துல ஒரு மீன் வியாபரிட்ட கை மாத்திட்டான். ஒரே நாத்தம்!

இன்னிக்கு முழிச்ச முழிப்பே சரியில்ல போலிருக்கு... இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போவுதோன்னு சிந்திச்சிட்டு இருக்கையிலேயே மீன் வாங்க வந்த ஒரு வயசுப்பொண்ணுட்டே என்னை மீதியாக்குடுத்துட்டான் மீன் வியாபாரி;. நல்ல வேளை.. அந்தப்பொண்ணுக்கு தங்க மனசு. பக்கத்துல இருந்த தண்ணிக்குழாயில என்ன குளிப்பாட்டி பர்சுல போட்டு தன் சட்டைக்குள்ள வைச்சுகிட்டா. நல்ல சுகமாத்தானிருந்தது. ஆனா அந்தப்பொண்ணு அவ வீட்டுக்குள்ள போறதுக்குள்ள அவ தம்பி வந்து  'துட்டு குடுக்கா... பரீட்சைக்கு பேப்பர் வாங்கணும்'னு கேட்க பள்ளிக்கூடத்து பையங்கைல நான்.

பயபுள்ள, அவங்கக்காட்ட பொய் சொல்லிருக்கு போல.. பள்ளிக்கூடத்து பக்கத்துல இருக்கிற கடைல என்ன கொடுத்து 'மஞ்ச்' வாங்கித் தின்னுட்டு போவுது. சரி போட்டும்...  கடைக்காரன் கல்லாவுல நம்ம தோழர்கள் கூட்டம். கொஞ்ச நேரம் அவங்கவுங்க கதைய கேட்கலாம்னு பார்த்தா எங்கள வரிசையா அடுக்கி பொட்டலம் போட்டு மொத்தவியாபாரிட்ட தூக்கி குடுத்துட்டான். ஒரே மூச்சு முட்டல். ரப்பர் பேண்ட எப்ப எடுப்பானோ தெரியலியேன்னு கவலைல இருந்தேன். இதென்ன.. இது யாரு கை? அட கண்டக்டர் வந்துட்டாருப்பா. ஒருகாலத்துல, எங்கள குடுத்து கண்டக்டர்ங்க எல்லாம் கமிஷன் பர்த்தாங்க... இப்ப அவங்களே கமிஷன் குடுத்து எங்கள வாங்கிட்டு போறாங்க. இவருக்கு என்ன திண்டாட்டமோ? ஒருவழியா விடுதல பண்ணி தோல் பைல போட்டுகிட்டாரு.

'கண்டக்டர், கண்டக்டர் கொஞ்ச முன்னால இருந்த மாதிரி ஒரு சின்னப்பொண்ணு கையில என்னை பிடிச்சு குடுய்யா'ன்னு சொன்னேன்... செவிட்டுப்பயலுக்கு காதே கேட்கல போலிருக்கு. மதுரைலேயிருந்து திருநெல்வேலிக்கு போற பஸ் அது. ஏறி டிக்கட் போட ஆரம்பிச்சவுடனேயே கடைசி சீட்டுல இருந்த குடிகாரப்பய கைல மீதிச்சில்லறையா என்ன தூக்கி குடுத்துட்டான். உவ்வே... ஒரே குமட்டல் குமட்டலா வந்துச்சு. இதுக்கு அந்த மீன் வாடையே தேவலாம்போல. பையில என்னப்போட்டுக்கிட்டு அங்கியும் இங்கியும் அவன் ஆடுன ஆட்டத்துல இன்னிக்கு     நம்மள யாருமில்லாத நடு ரோட்டுல போட்டுறப் போறான்னு நினைச்சேன். நல்லவேளையா திருமங்கலத்துல கொஞ்ச பேர் இறங்கினதால நடுவரிசைல ஒரு சீட்டுல போய் சாஞ்சி உக்காந்து தூங்க ஆரம்பிச்சுட்டான்.

நான் என் நிலைமைய கொஞ்சம் அசை போட்டுபார்த்தேன். நேத்து இவ்ளோ நேரம் திருச்சில... முந்தாநாளு இவ்ளோ நேரம் பெங்களுர்ல... அதுக்கு முதநாளு சென்னைல... அட நம்மளும் பைசா செலவில்லாம நல்லாத்தான் ஊரச் சுத்திப்பாத்துகிட்டிருக்குறோம்.
   
'வண்ணாரப்பேட்ட ரவுண்டானால்லாம் இறங்குங்க!...'

கண்டக்டர் போட்ட சத்துத்ததுல முழிச்சப்புறம்தான் திருநெல்வேலி வந்துட்டுனு புரிஞ்சுது. நாம அசதில நல்லாத்தான் தூங்கிட்டோம் போலிருக்கு!. குடிகாரப்பய கொஞ்சம் தெளிவாயிட்டான். ரவுண்டானாவுல ஸ்டெடியா இறங்குனவன் முத வேளையா கலைஞர் டைல்ஸ் போட்டு பளிச்சுனு கட்டி வச்சிருக்குற செல்லப்பாண்டியன் மேம்பாலத்துக்கு அடி வழியாப்போய் அந்த முக்குல இருந்த பெட்டிக்கடையில என்னைக்குடுத்து பான்பராக் வாங்கிவாயில ஒதுக்கிட்டு போனான்.. மூதேவிக்கு எல்லா கெட்டப்பழக்கமும் உண்டு போலிருக்கு... எனக்கென்ன அதப்பத்தி... அட அதுக்குள்ள என்னய வாங்கி பேண்டு பாக்கெட்டுல போடுறது யாருப்பா?... ஒரு இளைஞன். படிச்சவன் மாதிரி தெரியுது. இவன் பைக்குல, நம்ம எங்க கொண்டு போவப்போறானோ? கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க வுடுங்கப்பா... ஒரே நாள்ல எவ்ளோதான் அலைறது?. பாக்கெட்டு ரொம்ப சின்னது போலிருக்கு. வாய்க்கு பக்கத்துலதான் நானிருந்தேன். அதுவும் நல்லதாப்போச்சு. ஒன்றரைக்கண்ணால வேடிக்கப் பார்த்துகிட்டே வந்தேன்.
   
ஈரடுக்குமேம்பாலம்... நெல்லையப்பர்கோயில்... பேட்டை... கல்லூர்... சேரன்மாதேவி விலக்கு... முக்கூடல்... அட இவன் எங்கதான் போறான்?... அடுத்த ஊரு பாப்பாக்குடின்னு படிக்கிறதுக்குள்ள...ஐயோ... கீழே விழுந்திட்டேனே...டேய்!..நான் உனக்கு வேண்டாமாடா?. போயே போய்ட்டான்.

இன்னிக்குதான் நமக்கு எவ்ளோ அனுபவமாயிப்போச்சு... அட அதுக்குள்ள பார்த்துட்டியளா... யாரோ ஒரு நடுத்தர வயசுக்காரி என்னை எடுத்து அவ வச்சிருந்த கூடைல போட்டுக்கிட்டா... இதென்ன ஒரு மாதிரி கமறுது.. பீடித்தூளா? இதுலேர்ந்து எப்ப விடுதலையோ தெரியலையே... இந்தம்மா எங்க போறான்னே தெரியலியே. நடந்துக்கிட்டே இருக்குது. பஸ் ஏறுரமாதிரியும் தெரியல. இருட்டிக்கிட்டு வேற வருது.

’யக்கா.. சாட்டுபத்துக்கு இப்படி போயிறலாமா?'

'இதே வழிதான் ஆத்துப்பாலத்துக்கு முன்னாடி திரும்பிறாதிய... நேராப்போங்க!'

சரிதான். பக்கத்துல ஏதோ கிராமம் போலிருக்கு. இதென்ன... எங்க வந்து நிக்குறாப்புல.. ஏதோ கோயில் மாதிரியிருக்கு...

'அருள்மிகு சங்கிலி பூதத்தார்-தளவாய் மாடசாமி கோயில் - உண்டியல்'

நம்மள உண்டியல்ல போடப்போறாப்புலயா... அதைப் படிச்சு முடிக்கிறதுக்குள்ள.. க்ளுங்... உண்டியல்லேயே வுழுந்துட்டேன்...

இப்பபுரியுதா?... நான் இங்க எப்படி வந்தேன்னு... சரி சரி கதை கேட்டது போதும் போய் வேற வேலை இருந்தா போய் பாக்குற வழியப்பாருங்க! ஏம்பொழப்பு என்னோட!

.

4 comments:

சேக்காளி said...

//இதென்ன ஒரு மாதிரி கமறுது.. பீடித்தூளா//
இப்பமும் அங்க உள்ள பொம்பளய பீடி தான் சுத்துறாங்களா. அவுங்களுக்கெல்லாம் எப்பதான் விடிவு பொறக்க போவுதோ.அவுகளால தேர்ந்தெடுக்க பட்ட மந்திரி,சட்டசபை உறுப்பினர்களுக்கு அவுகள பத்துன சிந்தனையெல்லாம் அடுத்த தேர்தல் வரும் போதுதான் வரும்.அதுனால் உண்டியலுல இருக்க போற ஒண்ணரை வருசம் தெனமும் பீடி சுத்துற பொம்பளயளுக்கு நல்ல வழி காமிச்சி அவுகள ஆரோக்கியமா வைங்கன்னு சங்கிலி பூதத்தானையும்,தளவாய் மாடசாமியையும் கும்பிட்டுக்கா.என்ன நாஞ் சொன்ன மா(தி)ரி செய்வியா.

s suresh said...

வித்தியாசமான் முறையில் சரளமானநடையில் சிறப்பான கதை! சிறப்பு! நன்றி!
இன்று என் வலைப்பூவில் பேய்கள் ஓய்வதில்லை! தொடர் http://thalirssb.blogspot.in/2012/08/3.html

சுரேகா.. said...

சான்ஸே இல்லை!!

கலக்கலா இருக்கு..!!

உங்க தாய்மாமாக்கிட்ட பேசணும் தலைவரே!

எனக்கு இதுமாதிரி பேசாப்பொருட்கள் பேசுவதுமாதிரி கதை எழுதுவதில் அதீத ஆர்வம் உண்டு..!!

கலக்கிட்டாரு!!

சூப்பரோ சூப்பர்!

வல்லிசிம்ஹன் said...

நாணயத்தின் மறுப்பக்கமா ஒரு கதை. திகில் பயணம். அழகா கதை சொல்லி இருக்காரு.என்ன ஒரு கற்பனை வளம்:)