Sunday, September 30, 2012

రెబల్ - ரெபலு (தெலுகு)


’ரெபல் ஸ்டார்’ பிரபாஸ் ஒரு மிகச்சிறந்த நடிகர். ஆக்‌ஷன், டான்ஸ், காமெடி என்று கமர்ஷியல் படங்களில் கலக்குவது மட்டுமில்லாமல், சிறந்த நடிப்புக்கும் பெயர் போனவர். அவர் படமென்றால் முதல் நாளே பார்த்துவிடுவேன். தொடர்ந்த இரண்டு மெகா ஹிட்டுகளுக்குப் பின் இந்தபடத்தில், ஹாட்ரிக் வெற்றி பெறுவாரா என்ற வகையில் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது என்றால் அது மிகையாகாது. அந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்ததா என்று பார்ப்போம்.

ஹிஹி.. மேல சொன்னது பூரா டுபாகூர். பிரபாஸ்னா யார்னே எனக்குத் தெரியாது. இங்க வைசாக்ல ஒரு வேலை விஷயமா வந்து சிக்கிக்கொண்டு ஒரு வாரம் ஆகிறது. வேலை முடிந்து சென்னை கிளம்ப இன்னும் ஒரு வாரம் ஆகும். நேத்திக்கு சனிக்கிழமை மாலை, தங்கியிருக்கும் இடத்தில் பவர்கட் வேற. (இங்கயும் ஒரு நாளைக்கு 3 மணி நேரம், மூணு ஷிப்ட்ல பவர்கட் ஆவுது). பக்கத்துல ஒரு தியேட்டர் இருக்கிறது. அங்கே ரெண்டு நாளா, பேனர்ஸ், பட்டாசு, மேளதாளம்னு ஒரே கூத்து. விஜய் மாதிரி ஏதோ ஒரு ஸ்டார் படம் ரிலீஸாகியிருக்குனு எளிதாக கெஸ் பண்ணிக்கொண்டேன். பொழுது போவாம, என்ன பண்றதுனு தெரியாமத்தான் அந்த தியேட்டர்க்கு படத்துக்குப் போகவேண்டிவந்தது. (போஸ்டரில் தமன்னா தந்திருந்த ஒரு பயங்கர குத்து டான்ஸ் போஸைப் பார்த்துதான் நான் உள்ளே போனேன் என்று தயவுசெய்து யாரும் நினைக்கவேண்டாம்). மத்தபடி தமிழ் தவிர வேற இந்திய மொழிப் படங்களுக்கும், நமக்கும் எந்த பந்தமும் கிடையாது. அதோட நமக்கு தெலுகும் ராது!

சரி, இனி படத்தைப் பற்றி பாப்போம். நம்மாளுகளுக்கு தமிழில் கதை சொல்வதால் ஒண்ணும் சஸ்பென்ஸ் போய்விடாது என்பதால் முதலில் கதை.


ஒரு வீராதி வீரர், சூராதி சூரரான அப்பா. (சண்டைக்கோழி, அரசு என ஏராளமான படங்களில் பார்த்த அதே ப்ளாஷ்பேக் பில்டப் அப்பா. இவர் ஒரு குத்துவிட்டால் ஸ்டண்ட்மேன் ஃபுட்பால் போல பறந்து, பக்கத்து டிரான்ஸ்பார்மரில் போய் மோதி வெடிப்பார்). அவருக்கு ஒரு பையர் (ஹீரோ பிரபாஸ். அப்படியானால் இவர் குத்துவிட்டால் என்ன ஆகும்னு நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்)- வெளியூரில் எங்கேயோ படித்துக்கொண்டிருக்கிறார், நல்லவர் போல நடிக்கும் ஒரு தம்பி (மெயின் வில்லர்), பையர் போன்ற நேர்மையான ஒரு அடியாள், மனைவி, தோட்டம் துரவு, ஆள் அம்பு, ஒரு 200 அடியாட்கள் (எல்லோர் கையிலும் ஷாட் கன்ஸ்), 500 கார்கள்.

இவர் ஆதரவில் ஜெயித்த ஒரு எம்மெல்லே ஒருவர், அடுத்த தேர்தல்லயும் இவர் ஆதரவை கேட்டு இவர் வீட்டுக்கு வந்து காலில் விழுந்து கெஞ்சுகிறார். அவர் கடந்த 5 வருசமாக ஒழுங்கா ஆட்சி பண்ணவில்லை என்பதால், இவர் அவர் மூஞ்சியிலேயே நாலு குத்துவிட்டு அனுப்பிவிடுகிறார். இவரை அவ்வளவு எளிதில் ஜெயிக்க முடியாது என்பதால் எம்மெல்லே, சதித்திட்டம் தீட்டி அவரது தம்பியையே ஏற்பாடு செய்து, கூடவே ராபர்ட் (இவர் ஒரு மிகப்ப்ப்பெரிய அடியாள், மார்ஷியல் ஆர்ட் பிஸ்தா, இவருக்கென்று ஒரு ஐம்பது ஸ்பெஷல் அடியாட்களும் இருக்கிறார்கள். இவருக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை எனினும் இவர் பெயர்தான் படம் பூரா அடிபடுகிறது) என்பவரையும் வரவைத்து சூராதி சூர அப்பாவையும், குடும்பத்தையும் கொலை செய்துவிடுகிறார். அப்பா, அம்மா, காதலி என அனைவரும் ரத்தவெள்ளத்தில் கிடக்க, வந்து பார்க்கும் ஹீரோ வெறியாகி பழிவாங்க கிளம்புகிறார். ஆனால் பாருங்கள் பாவம், வில்லர் சித்தப்பாவும், ராபர்டும் அதற்குள்ளாகவே எங்கேயோ கண்காணாத இடத்துக்கு ஓடிவிடுகிறார்கள். ஆனால் அந்த முட்டாள் எம்மெல்லே என்ன செய்கிறார் என்பது ட்விஸ்ட். அவரும் கும்பலோடேயே ஓடிப்போகாமல் ஹீரோவுக்கு முன்னால் நூறடி தூரத்தில் வந்து நின்றுகொண்டு, “ஹிஹி, பாத்தியா உங்கப்பாவை கொலைபண்ணிட்டேன். ஆனா அவங்க ரெண்டு பேரும் எங்க போனாங்கனு சொல்லமாட்டேன்” என்று வலிப்பு காட்டுகிறார். அவர் இவரை பிடிக்க பக்கத்தில் வருவதற்குள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலையும் செய்துகொள்கிறார். (நெற்றிப்பொட்டில் சுட்டுக்கொண்ட பின்பும் ஒரு டயலாக் பேசுகிறார்).

மேலே சொன்ன அத்தனையும் இடைவேளைக்குப் பிறகு இரண்டாவது காதலி தமன்னாவுக்கு, ஹீரோ உண்மையை உரைக்கும் போது கிளைமாக்ஸுக்கு முன்னர் வரை சொல்லப்படுவது. முதல் பகுதி படம் பூராவும் ‘ராபர்டை’த் தேடி ஹீரோ ஹைதராபாத், வைசாக், பாங்காக் எல்லா இடமும் அலைகிறார். அவர் யாரென்ற உண்மையும் நமக்குத் தெரியாது. எதற்குத் தேடுகிறார் என்றும் நமக்குத் தெரியாது. அந்த தேடும் வைபவத்தில்தான் ஜாலியான பாட்டுகள், தமன்னாவுடன் காதல். (தமன்னாவின் அப்பா ஒரு பெரிய டான். கடைசியில் அவர், ராபர்டுக்கே அடியாள்தான் என்றும் தெரிகிறது.)

இனி கிளைமாக்ஸ். என்ன முக்கியும் இவரால் வில்லன் கும்பலை கண்டுபிடிக்கமுடியவில்லை. கிளைமாக்ஸ் வந்துவிட்டதால் அவர்கள் இரண்டு பேருமே இவர் முன்னால் பிரசன்னமாகி, “ஹிஹி.. எங்களதானே தேடிகிட்டிருக்கே..”னு தமன்னாவை பிடித்து வைத்துக்கொள்கிறார்கள். அவர்களோ ஷாட் கன் சகிதம் 100 பேர். இவரோ தனியர். பாவம், இவரது ஸ்டன் கன் அடியாட்கள், 500 கார்கள், அதன் ட்ரைவர்கள் எல்லோரும் லீவில் போய்விட்டார்கள் போலிருக்கிறது. அப்போதான் இன்னொரு ட்விஸ்ட். ”5 நிமிசம் உங்களுக்கு டைம் தர்றேன். எத்தனை பேர் வந்துவேண்டுமானாலும் என்னை அடியுங்கள், நான் பதிலுக்கு அடிக்கமாட்டேன். நான் டயர்டாயி தோத்துட்டா நீங்க ஜெயிச்சிருவீங்க.. இல்லாம நான் டயர்டாவலைனா திரும்பவும் சண்டை போடுவோம். யாரு ஜெயிக்கானு பாப்போம்”னு ஒரு வித்தியாசமான சவால் விடுகிறார். எனக்கு தெலுகு தெரியாததால் ஏன் இப்படி ஒரு வித்தியாசமான சவால் விடுகிறார்னு எனக்கு சரியா புரியலை.

அதேதான். எல்லோரும் சேர்ந்து இவரை மொத்துமொத்துனு மொத்துறாங்க. ரத்தம் கக்கக் கக்க மயங்கிவிழுறார். 5 நிமிசம் முடியுது. தமன்னா சியர் அப் பண்ணவும், அப்பாவை சுட்டதையெல்லாம் பிளாஷ்கட்ல நினைச்சுப்பாத்து திரும்பவும் எழுந்து நிற்கிறார். தட்ஸ் ஆல். டம்மு, டும்மு, சடார், மடேல், குமுக், மளுக், கிறிக், கிளிங், சதக், மடார்.. ஒத்த ஒத்த சவுண்டுதான். ஒரு சவுண்டுக்கு ஒரு ஆள் என்ற கணக்கில் மடார், மடார்னு சரிந்து விழுகிறார்கள். அடாடா, நாம் மெயின் வில்லர் நினைச்ச மார்ஷியல் ஆர்ட் ‘ராபர்ட்’டும் மூஞ்சியில் விழுந்த ஒரே ‘டொமுக்’கில் மல்லாந்து விழுந்து பிராணனை விட்டுவிடுகிறார். சண்டை சீக்கிரம் முடிந்துவிடுவதால் சித்தப்பாவுக்கு மட்டும் ஸ்பெஷலாக இன்னும் நாலு குமுக்குகளை கொடுத்து, இடது பக்கமும், வலது பக்கமும் நாலு தடவை பறக்கவைத்து படத்தை முடித்து வைக்கிறார் ஹீரோ.

எ ஃபிலிம் பை ராகவா லாரன்ஸ். 

அடாடா, டான்ஸ் மூவ்மெண்டோடு பைட்டர்ஸ் பறக்கும் போதே மைல்டா சந்தேகப்பட்டேன். (உள்ள போறதுக்குள்ள டைட்டில் முடிஞ்சிடுச்சு. சரியான கூட்டம்) கன்பர்ம் பண்ணாம விட்டுட்டேன். இந்தக் கதையில் காமெடி, பாசம், காதல், அனாதை-ஊனமுற்ற குழந்தைகளின் பாச செண்டிமெண்ட் என சரிவிகிதமாய் கலந்து பின்னியிருக்கிறார் லாரன்ஸ். பிரம்மானந்தமும், இன்னும் இரண்டு சீனியர் காமெடியன்ஸும் (எம்.எஸ்.நாராயணா, அலி) ஒரு ஒரு சீன் வந்தாலும் விலா நோக சிரிக்கவைகிறார்கள். தெலுங்கு தெரியாத நானே அப்படிச் சிரித்தேன். காமெடிக்கும், சண்டைக்கும் தியேட்டரே உற்சாகமாக அலறுகிறது. எனக்கே கன்ஃபர்மா தெரியுது, இது தெலுங்கில் சரி ஹிட்டடிக்கும்னு. ஒண்ணு மட்டும் நிச்சயம். உன்னால நான் கெட்டேன், என்னால நீ கெட்டேன்னு தெலுங்கு சினிமாவும், தமிழ் சினிமாவும் ஒரு காலமும் உருப்படப்போறதில்லை. ஜாண் ஏறினால் முழம் சறுக்கத்தான் செய்யும். லாரன்ஸுகளுக்கும், ராஜேஷ்களுக்கும் முன்னால் பாலாஜிசக்திவேல்களும், ராதாமோகன்களும் நிற்பது சிரமம்தான்.

இயல்பான படங்கள்லாம் நமக்கு அத்தி மலர்கள்தாம்!! 
.

Saturday, September 22, 2012

கிரியேடிவான காப்பியும், இன்ஸ்பைரிங்கான ட்ரிப்யூட்டும்.


கிரியேஷன் (Creation) என்பது சாத்தியமா? இன்ஸ்பைரேஷன் (Inspiration) என்பது மட்டும்தான் சரியா? ஒரு படைப்பாளி, அவனது எல்லா படைப்புகளையுமே அவனது வாழ்க்கையிலிருந்தேதான் எடுக்கிறான். அதிகற்பனை எனப்படும் வகை கூட வாழ்க்கை அவனுக்கு அமைத்துத்தந்த சூழல் தந்த வாய்ப்பினாலேயே அமைகிறது. ஒவ்வொரு படைப்பாளியின் வாழ்க்கையும், ஒவ்வொரு மனிதனுடையதைப்போல தனித்துவம் கொண்டது. ஆகவே ஒருவன் தன்னை இன்ஸ்பையர் செய்த ஒன்றையோ, ஒன்றுக்கு மேற்பட்டவற்றை கலந்தோ உருவாக்கும் படைப்பு என்பது நிச்சயம் கிரியேஷன்தான். அது பிறரை வசீகரிப்பதாக, பாதிப்பதாக அமைகையில், தனித்துவமானதாகவும் ஆகிறது. #தீர்ப்பு-1

ஆயின் ஏதோ ஒரு கலை வடிவத்தில் உருவாக்கப்பட்டுவிட்ட ஒரு படைப்பிலிருந்தே இன்ஸ்பையர் ஆவதும், அதன் தொடர்ச்சியாக படைப்புகள் உருவாவதும் சரியா? நிச்சயமாக சரியே! அவை அவற்றின் தொடர்ச்சியாக மட்டுமின்றி அந்தப் படைப்பிலிருந்தும் மேம்பட்ட சிந்தனையைத் தருவதாக, பயனைத் தருவதாக அமையவேண்டும். பறவையைக் கண்டு உருவாக்கப்பட்ட கிளைடர், வாழ்க்கை தந்த இன்ஸ்பிரேஷனில் உருவான ஒரு படைப்பு எனில், அதன் தொடர்ச்சியான விமானங்களும், ஹெலிகாப்டர்களும், ராக்கெட்டுகளும் கூட தனித்துவமான படைப்புகளே! மேலும் அவை ஆதார படைப்புக்கு நியாயத்தையும், பெருமையையும் செய்கின்றன. #தீர்ப்பு-2

அப்படியானால் காப்பி (Copy) என்பது என்ன? காப்பி என்பது படைப்பாவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா? படைப்பின் மேம்பட்ட தொடர்ச்சியை உருவாக்காத எவையும் நிச்சயம் காப்பியே. கற்பனை வறட்சியில், லாப நோக்கில் செய்யப்படும் இந்தக் காரியத்தின் பொறுப்பாளி, படைப்பாளி அல்லன். மேலும் அவை விரைவில் வெளுத்துப்போவதாகவும், முழுமையற்றதாகவும் இருக்கின்றன. ஒரு பயிற்சிக்காக செய்யப்படுவதாக இருப்பினும் காப்பிகள் கூட என்றும் மரியாதையைப் பெறுவதில்லை. மாறாக அவை படைப்பின் மீது சேறிறைக்கின்றன. காப்பிகள் ஒருபோதும் படைப்பாக முடியாது. #தீர்ப்பு-3

ட்ரிப்யூட் (Tribute) என்பது என்ன? எது ஒரு படைப்புக்கு ட்ரிப்யூட் செய்யமுடியும்? டிஜிடல் (Digital) தொழில்நுட்பத்தால் ஃபிலிம் (Film) தொழில்நுட்பம் இறக்கும் தருவாயில் இருக்கிறது. ஆயினும் டிஜிடல், பிலிமுக்குச் செய்வது ஒருவகையில் ட்ரிப்யூட்டே. ஃபிலிம் தந்துகொண்டிருந்த காட்சியனுபவத்தை, அதிலும் பன்மடங்காக தருகின்ற டிஜிடலின் இன்ஸ்பைரேஷன் ஃபிலிம் என்பது அதன் பெருமையாகிறது. இன்ஸ்பைரேஷனில் விளையும் ஒவ்வொரு படைப்புமே மூலத்துக்கான பெருமையைச் செய்வதாகத்தான் இருக்கமுடியும். அரிதான ஒரு படைப்பு, எந்த வெளிக்கலப்புமின்றி மீண்டும் நவீனப்படுவது ட்ரிப்யூட். கிங்காங் 2005 என்பது ஒரு படைப்பு என்பதையும் விட, பீட்டர் ஜாக்ஸன், கிங்காங் 1933க்கு செய்த ஒரு ட்ரிப்யூட் என்பதுதான் பொருத்தமாக இருக்கும். #தீர்ப்பு-4

அப்டீனா..

*முகமூடி ஒரு காப்பியா? அல்லது அது பேட்மேனுக்கு மிஷ்கின் செய்த ட்ரிபியூட்டா?
*காப்பிகளை ட்ரிப்யூட் என்று யாரேனும் சொன்னால் அவர்களை என்ன செய்யலாம்?
*கமல்ஹாஸன், மணிரத்னம்கள் செய்துகொண்டிருந்தவை இன்ஸ்பைரேஷனா? காப்பியா?
*விக்ரம், டைரக்டர் விஜய் வைகையறாக்கள் செய்வது காப்பியா? கிரியேஷனா?
*காப்பிகளை செய்துவிட்டு ஒளிந்துகொண்டாலும் கூட பரவாயில்லை, ’பல்லு கூட விளக்காம இதைச்செய்தோம்’னு பெருமை பீத்துபவர்களை என்ன செய்யலாம்?

இதுக்கெல்லாம் நேரமிருந்தா நீங்களே தீர்ப்பு சொல்லுங்க.. ஹிஹி.. ஒர்க் காலிங், மீ கோயிங்!
.

Tuesday, September 4, 2012

முகமூடி


இத்தனை பேர் எடுத்துச்சொன்ன பிறகும் தெகிரியமா போயிருந்தேன் முகமூடியைப் பார்க்க. எதிர்பார்ப்புகள் இல்லாத அந்த பஞ்சரான நிலையிலேயே மேற்கொண்டும் துவைச்சு அனுப்ப முடிந்திருக்கிறது மிஷ்கினால். இரண்டரை மணி நேரம் ஒரே ‘கேரா’க இருந்தது. என்ன நடந்தது? என்ன படம் பாத்தோம்னே ஒண்ணும் புரியலை. ஹீரோயின், நரேன், செல்வா, போலீஸ் எல்லோரும் ஒண்ணு சேர்ந்து கூட்டணி அமைச்சு மொக்கையைப் போட்டுத் தள்ளிட்டாங்க..
உதா:

1. போலீஸ்ல மாட்டுன கூட்டாளிய சுட்டுட்டு முகமூடிகள் வேன்ல சொய்ங்குனு கிளம்பி போறாங்க.. ஒரு 20 போலீஸ் ஆச்சரியப்பட்டுகிட்டு அங்கயே நிக்கிறாங்க.. ஓடக்கூட வேண்டாம், பக்கத்துல போலீஸ் கார் நிக்கிது, அதிலயாவது ஏறி தொறத்தலாம்ல.. அது கூட பரவால்ல, அவங்க முதுகுப் பக்கத்துலயிருந்து ஹீரோ முகமூடி அவங்களுக்குள்ள பூந்து தாண்டி ஓடி வர்றாரு.. வில்லன் முகமூடிகளை பிடிக்க.. அப்ப போலீஸ் என்ன பண்ணுது? ம்.. அதேதான்.. இன்னும் ஆச்சரியமா அதைப் பாத்துகிட்டே இருக்காங்க. ஷாட் கம்போஸிஷன் வேற உலகத்தரமா? ரொம்ப நேரமா அவங்க நின்னுகிட்டே இருக்காங்க.. நாமளும் தேமேனு பாத்துகிட்டிருக்கோம்.

2. நண்பனை கொன்ன கோவத்தில் யாருமே பிடிக்கமுடியாத வில்லன் முகமூடியை பிடிக்க ஆத்திரத்துடன் ஹீரோ முகமூடி கிளம்புகிறார். அவரோட 2 தாத்தாஸும், ‘போகாதே, அவன் ரொம்ப டேஞ்சரானவன்..’னு ரொம்ப கெஞ்சறாங்க.. அவர் பிடிவாதம் பிடிக்கிறார். உடனே அவங்க, ‘சரி, அப்படினா இப்படியே போனா உன்னால பிடிக்கமுடியாது, உனக்கு ஒண்ணு தர்றோம்.. வா’னு கூட்னு போயி ஒண்ணு குடுக்குறாங்க.. அது என்ன? அதான்ங்க.. ஒரு தாத்தா டைலராச்சா.. புதுசா ப்ளூ கலர்ல சிக்ஸ்பேக் வைச்சு தைச்ச ட்ரெஸ்ஸ அவருக்கு மாட்டிவிடுறாங்க. அதைப் போட்னு போயி அவரு கெலிச்சிடுறாரு.

3. ஹீரோ யாரோ 4 ரவுடிஸை போட்டு சாத்த, அதைப்பாத்த ஹீரோயின், இவரை ஒரு பொறுக்கினு முடிவு பண்ணி கோவம் பிச்சிகிட்டு வர, ஒரு குச்சியை எடுத்துனு வந்து இவரை போட்டு மொத்துது. அவரு சிரிச்சிகினே இருக்காரு. அது அடிக்கிற அழகைப் பாக்கணுமே.. மாமங்காரனை கொழுந்தியா கொஞ்சுற மாதிரி.. அடாடா ‘ரொம்ப கியூட்டான’ சீன்னு டைரக்டர் நினைச்சிருப்பாரு போல. அப்பால அவரு சிரிச்சிகினு இருக்குறதால ஓடிப்போயி தள்ளி நின்னுகிட்டு செங்கல்லு, செருப்புனு வீசுது. அதையும் சிரிச்சிகினே வாங்கிகிறாரு. அப்பால? அப்பால என்ன.. டயர்டாயி அந்தம்மா ஸ்கூட்டரை எடுத்துகினு போயிருது.

இது மாதிரி படம் பூரா நிறைய காட்சிகள். குருவி படத்துக்கு இப்படி ஒரு நீண்ட விமர்சனம் எழுதுன ஞாபகம். அதே மாதிரி நாலு மடங்கு உழைப்பை இதுக்கு செலுத்தணும்.. பூரா எழுதுதணும்னா! முடியல.. :-))))

இணையத்தில் ரசித்த சில முகமூடி விமர்சனங்கள்:

அதிஷா ஆன்லைன்

வலைமனை 

.