Saturday, October 27, 2012

ரசிகன் : ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்


“டார்ச் வெளிச்சத்துல தெரியுதா? நல்லாப் பாத்துக்கங்க, இதான் சூரியன்”
ஒவ்வொரு துறையிலும் உச்சத்தை தொட்டவர்கள் என்றாலே ஸ்பெஷல்தான். அர்ப்பணிப்பு, கடுமையான உழைப்பு, வியக்கவைக்கும் திறன் இவையெல்லாம் அவர்களிடம் இருக்கும். ஆனால் இவையெல்லாவற்றிலும் கூட, அனாயசம் என்று ஒரு குணம் இருக்கிறது. அது, அரிதானது. அதையும் கொண்ட ஒருவன், கலைஞனாகவும் இருந்துவிட்டால்.. ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான். அவர்களுடைய படைப்புகளில் மூழ்கலாம், திளைக்கலாம்.

சஸ்பென்ஸ் திரில்லர் எனும் ஒரே ஒரு ஜானர். உலகம் தவிர்க்க இயலா வாழ்வியல், தத்துவம், வரலாற்றைப் பேசும் படங்களோடு திரில்லர் படங்களையும் உட்காரவைக்கமுடியுமா? அனாயசமாக முடியும் என்று சிம்மாசனம் போட்டுத் தன் படங்களை அமரவைத்தவர் ஹிட்ச்காக் (Alfred Hitchcock). விஷயம் ஜானரில் மட்டுமே அல்ல. ஹிட்ச்காக்கின் திரைமொழி, ‘கதை சொல்லும் அழகு’ என்பது வியக்கவைப்பது. இப்படி மூன்று வார்த்தைகளில் எப்படிச் சொல்வது அவரது திரைமொழியை? “நான் ஒருத்தியைக் காதலிக்கிறேன்” என்று உங்களிடம் நான் சொன்னால், அந்த ஒருத்தியின் மீதான என் காதலையும், அதன் பரப்பையும் எப்படி உங்களால் உணர்ந்துகொள்ளமுடியும்?

1922ல் தனது 22வது வயதில், சினிமா ஒரு பேசக்கற்காத குழந்தையாக இருந்தபோதே இங்கிலாந்தில் தன் பணியைத்துவங்கிய ஹிட்ச்காக், பின்னர் ஹாலிவுட்டிலும் 1972 வரை கோலோச்சியவர். கதை சொல்லும் பாங்கு மட்டுமல்லாது சினிமாவையே வரையறுத்த, அதற்குத் தவிர்க்க இயலாத பங்களிப்புகளைச் செய்த மேதைகளின் வரிசையிலும் அவருக்கு ஒரு கம்பீரமான இடமுண்டு. சினிமா அதுவரை பார்த்திராத காட்சியமைப்புகள், பிரம்மாண்டம், நுட்பங்கள் என பலவற்றையும் கற்றுத்தந்தவர். பட்டுக்கத்தரிப்பதைப்போல ஒரு திரைக்கதை எங்கு துவங்கவேண்டும், எங்கு நிறைவடையவேண்டும் என்பதற்கான பாடம் இவரது படங்கள் ஒவ்வொன்றும்.

இவரது பல படங்கள் சினிமா வரலாற்றின் தலைசிறந்த படங்களின் வரிசையில் முன்னணியில் இருக்கின்றன. பல படங்கள் தேசிய பொக்கிஷமாக அமெரிக்க அரசால் பாதுகாக்கப்படுகின்றன. தலைசிறந்த இயக்குநர்கள் பலரின் ஆதர்சமாக, அவர்களை பாதித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். திரில்லர் எனும் ஒரே ஜானர் எனினும் படங்கள் ஒவ்வொன்றும் தனித்தன்மையுடையவை.

எனக்கு அவரது எல்லாப் படங்களுமே ரொம்பப்பிடிக்கும் என்றாலும் பர்சனல் டாப் 10 என்று கேட்டால், இப்படிச்சொல்வேன்.
Rope
Rear Window
North by Northwest
Psycho
Vertigo
The Birds
Rebecca
Dial M for Murder
I Confess
The Man who Knew too much

...ஆகவே, ’எல்லோரும் ஒரு படத்தைக்கூட விடாம ஹிட்ச்காக்கின் எல்லாப் படங்களையும் பார்த்துடுங்க, நானும் மிச்சம் வைச்சிருக்கிற படங்களைப் பார்க்கப்போறேன்’ என்று சொல்வதைத்தவிர வேறொன்றும் சொல்வதற்கு இல்லை. அப்படியே நீங்களும் ஏற்கனவே ஹிட்ச்காக் பைத்தியமாக இருந்தால் உங்களுடைய டாப் 10ஐயும் சொல்லி விட்டுப்போங்கள்.

இன்னும் வாசிக்க: http://en.wikipedia.org/wiki/Alfred_Hitchcock

தலைவலிக்கு என்னிடம் ஒரு சிறந்த மருத்துவம் இருக்கிறது. தலையைச் சீவி விடுவதே அது.                                                                                    -ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்
.

Wednesday, October 17, 2012

மாற்றான்லு

மாற்றானின் தெலுங்கு வெர்ஷன் ‘பிரதர்ஸ்’ பார்த்ததால தலைப்புல ஒரு லு எக்ஸ்ட்ரா.. ஹிஹி!   அதாவது நான் இன்னும் வேலை விஷயமாய் தெலுகு தேசத்திலேயே சிக்கிக்கொண்டிருக்கிறேன் என்பது இதன் உட்பொதிந்திருக்கும் சேதி! சரி, படத்தைப் பற்றிப்பார்ப்போம்..

சூர்யாவிடம் ஒரு பிரச்சினை இருக்கிறது. ஆனா அது என்னன்னுதான் எனக்கும் புரியவில்லை. நிறைய வெரைட்டி காண்பிக்க மனிதர் மெனக்கெடுகிறார். ஆனால் அதுவே ரிவர்ஸாகி, நமக்கு ஏற்படுற ஃபீலிங்க்ஸ் என்னவோ ரொம்ப மொனாடனஸா இருக்கு. எந்த காரெக்டர்ல அவரைப் பாத்தாலும் சஞ்சய் ராமசாமி மாதிரியே ஒரு ராயல்+கேனை ஃபீல்தான் வருது. அவர் சரியில்லையா? அல்லது அவரை நம்ப டைரக்டர்ஸ்ங்கதான் சரியா பயன்படுத்தறதில்லையானு கொழப்பமாவே இருக்கு. மேலும் அவர் இந்த ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ ஸ்டைல்லயே வசனம் பேசறதைக் குறைச்சுக்கிறது நல்லது. நடிப்பை விட உழைப்பு சமயங்களில் பிரமிக்கவைக்கும். தசாவதாரம் கமல், எந்திரன் ரஜினி மாதிரி. சூர்யாவின் உழைப்பும் அத்தகையதுதான். அதற்காகவேனும் பாராட்டத்தான் வேண்டும். மேலும், சில ஸோலோ காட்சிகளில், ஆக்டிவா, ஜிவ்வுனு இருக்கிறார். லாஜிகல் ஆக்‌ஷன் படங்கள்ல ஜொலிப்பார்னு தோணுது. கிடைக்கணுமே. பாப்போம்.

கேவி.ஆனந்த்+சுபா கூட்டணி ஓரளவு நல்ல பொழுதுபோக்கைத் தரும்னு நம்பலாம், என்ன இந்த வாட்டி ஜஸ்ட் மிஸ்ஸு. செம்ம மொக்கை போட்டுருக்காங்க. சுபாவின் நாவல்கள் படிக்கிறப்போ படம் பாக்குற அனுபவத்தைத் தரும். இந்தப்படம் அப்படியே ரிவர்ஸ். நாவல்ல மட்டுமே படிக்கமுடியக்கூடிய கண்டெண்ட்ஸ் படத்தில் நிறைய. முடியலை.. அதுவும் இவர் ஃபாரின் போய் ‘எனர்ஜியானின்’ பின்னணியை கண்டுபுடிக்கிறாரு, கண்டுபுடிக்கிறாரு (அதுவும் எப்பிடி? ஒவ்வொரு ஆளா விசாரிச்சிகினே இருக்காரு, கூட சின்மயி.. ஸாரி காஜல்) படம் முடியுற வரை கண்டுபுடிச்சிகினே இருக்காரு. கதைதான் இப்படி ஜவ்வு மிட்டாய்னு பாத்தா, அதெல்லாம் என்ன பிஸாத்துனு.. மட்டமான ஆக்‌ஷன் கோரியோகிராஃபி, மட்டமான மியூஸிக், மட்டமான காஸ்ட்யூம்னு எல்லோரும் கூட்டு சேர்ந்து கும்மியிருக்காங்க. முன்னாடில்லாம் வில்லன்கள், ஹீரோ போற காருக்கு ரெண்டு சைட்லயும் வெடிக்கிறா மாதிரி கரெக்டா வெடிகுண்டு போடுவாங்க. இப்போ ராக்கெட் லாஞ்சர் வரைக்கும் முன்னேறியிருக்கோம். மிஸைல்ஸ் கரெக்டா சைட்லயே விழுந்து வெடிக்குது. என்ன பண்றது? காஜல் அகர்வாலுக்கு காஸ்ட்யூம் டிஸைன் பண்ணியவரை கூப்பிட்டு வைச்சு மண்டையிலயே கொட்டலாம். இவ்வளவு அழகான ஹீரோயினையும் எப்படிய்யா கஷ்டப்பட்டு இப்படி அசிங்கப்படுத்துனேன்னு.
எல்லாத்துக்கு முக்கியமா ஒண்ணு. மற்றவங்களுக்கு எப்படியோ தெரியாது, எனக்கு இந்த டிவின்ஸ் லாஜிக் பிடிக்கவே இல்லை. ஒட்டிய ரெட்டைனா அது எவ்ளோ காம்ளிகேஷன். இவங்க ரெண்டு பேரும் ஏதோ விலாவுல சூயிங்கம் வைச்சு ஒட்டினா மாதிரி இருக்காங்க. அதுலயும் அவங்க இஷ்டத்துக்கு, ஒரு நேரம் நெருக்கமா ஒட்டிகிட்டிருக்காங்க, இன்னொரு நேரம் அரையடி, ஒரு அடினு முடிஞ்சவரைக்கும் விலகிக்கிறாங்க. எங்க சூயிங்கம் பிச்சிக்குமோனு நமக்கு அப்பப்போ ஒரு பயம் இருந்துகிட்டேயிருக்கு. இந்த அழகுல ஒருத்தருக்கு இதயமே இல்லையாம். இன்னொருத்தருக்கும் சேர்த்து ஒரு இதயம்தான் வேலை செய்யுதாம். ப்ளட் சர்குலேஷன்லாம் இந்த சூயிங்கம் வழியாத்தானாம். அதுலயும் இதயமில்லாதவர் தெம்பா எக்ஸர்ஸைஸ் பண்ணி, சிக்ஸ் பேக்ல வேற இருக்காரு. என்னவோ போங்க! டெக்னிகல் வளர்ச்சியையும், சூர்யாவின் உழைப்பையும் கூட மெச்ச மனம் வரவில்லை நமக்கு, இந்த லாஜிக் பிரச்சினையில்.

ஒருவரைப் பிரிந்த பின் இன்னொருவர் கொள்ளும் வேதனை போன்ற சில இடங்களில் சூர்யா மனம் கவர்கிறார். ஆனால் அதற்குக் கூட நேரம் கொடுக்காமல், இயக்குனர்தான் ஜெனிடிக்ஸ், இரட்டை, பிரிவு, காதல், அப்பா, ஆராய்ச்சி, பசுமாடு, எனெர்ஜியான், ராக்கெட் லாஞ்சர்னு எல்லாவற்றையுமே ’ஜஸ்ட் லைக் தட்’ டா ஹேண்டில் பண்ணியிருக்கிறார். 

மொத்தத்தில் மாற்றான்.. ஏமாத்றான்!

Thursday, October 11, 2012

ஸ்ரீதேவியின் ’இங்கிலிஷ்’

அனுபவம் தரும் அழகே தனி!

ஒவ்வொரு வேலையிலும் ஆர்வத்தால், பயிற்சியால், திறனால் வரும் சிறப்போடு கூடுதலாக பல்லாண்டுகளாக வாய்க்கும் அனுபவம் தரும் முழுமையை பளிச்சென உணரமுடியும்.

மெல்லிய உணர்வுகளைக் காட்சிப்படுத்த முயலும் ஒரு சினிமா, இங்க்லிஷ், விங்க்லிஷ். ஸ்ரீதேவி இல்லாவிட்டால் இந்தப்படம் மிகச்சாதாரணமாக ஆகியிருக்கக்கூடும். அழகாக வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு காரெக்டருக்கு, ஒரு திறன்வாய்ந்த, அனுபவமிக்க ஒரு நடிகை எப்படி உயிரூட்டம் தந்திருக்கிறார் என்பதற்கு உதாரணம் ’சஷி’.


என்ன ஒரே ஸ்ரீதேவி புராணமாகயிருக்கிறது. பார்ட்டி 40ஐத் தாண்டிருக்கும் போலயேனு சந்தேகப்படாதீங்க.. மீ கௌதமி பார்ட்டி! அண்ணன்மார்களின் காலத்தைச்சேர்ந்தவர் எனினும் ஸ்ரீதேவி என்றால் ஒரு தனி ப்ரியம்தான். அவரது வீச்சு அப்படி. விருதுநகரிலிருந்து கிளம்பி நமக்காக, வடக்கை வென்றவர் அல்லவா? சிவப்பு ரோஜாக்களில் வெட்கப்பட்ட ஸ்ரீதேவியைப் பற்றி மூன்று மணி நேரம் மூச்சுவிடாமல் சொல்லப்பட்ட கதைகளை கேட்டிருக்கிறேன். ஸ்ரீதேவியைப்போலவே அவரது குரலும் தனித்துவமானது.

சஷியை ரசிக்க, அவரது மெல்லிய கோபத்தை, ஏக்கத்தை, உணர்வுகளைப் புரிந்துகொள்ள நாம் ஸ்ரீதேவியின் ரசிகராக இருக்கவேண்டும் என்ற அவசியமும் இல்லை, 40 வயதைத் தாண்டியிருக்கவேண்டிய அவசியமுமில்லை.

ஆங்கில அறியாமையால் கிடைக்கும் கணவர், குழந்தைகளின் சிறு சீண்டல்கள், திடீரென தனியே அமெரிக்கா செல்லவேண்டிய சூழல், அதனால ஆங்கிலத்துக்கான அதிகரிக்கும் திடீர் தேவை, தேவை சிறிதானாலும் அவள் மனதுக்குள் பூதாகரமாக நிற்கும் அந்த அவமானம். ஆங்கிலம் கற்கிறாள். மனநிறைவு அடைகிறாள். இறுதியில் கணவர் முன்னால் நிகழ்த்தவேண்டிய உரைக்கான வாய்ப்பு கிடைக்கையில், அதிரடியாக அமெரிக்கன் அக்ஸெண்டில் ஆங்கிலத்தில் பேசி பரபரப்பாக்கவில்லை. திக்கித் திக்கிப் பேசினாலும், தன்னம்பிக்கைச் சிதறாமல், எண்ணியதை எடுத்தியம்பி அனைவர் மனதையும் கொள்ளைகொள்கிறார். படம் நெடுகவே இயல்பு அதன் தன்மையை மீறவில்லை.

நியூயார்க் சென்றயிடத்தில் ஹோட்டலில் உணவை ஆர்டர் செய்யமுடியாமல் கலங்கும் இடத்திலும், லட்டு செய்யவே பிறந்தவள் என பாராட்டும் கணவனில் குரலில் இருக்கும் எள்ளலில் காயப்படும் இடத்திலும், இறுதியில் இறுதி வகுப்புக்குச் செல்லமுடியாத ஏக்கத்திலும், படமெங்கிலும் சஷியின் உணர்வுகளை நமக்கும் ஏற்படுத்தியிருக்கிறார் ஸ்ரீதேவி.

படம் முடிகையில், சஷியோடு ஆங்கிலம் கற்க வரும் பிரஞ்சுத் தோழனின் மனநிலையில்தான் நாமும் இருக்கிறோம்.

பி.கு:

அஜித் நடித்து எனக்கு ஒரு படம் ரொம்ப ரொம்ப பிடித்திருந்தது எனில் அது இதுவாகத்தான் இருக்கும். நடிப்புக்காக அல்ல, அவரது ஸ்க்ரீன் பிரஸன்ஸுக்காக.. சால்ட்&பெப்பர் கெட்டப்பில் அஜித் அவ்வளவு பாந்தம். ஒரு லெஜண்ட்ரி நடிகைக்குப் பக்கத்தில் இயல்பாக பொருந்திப் போகவேண்டுமெனில், அது சற்று நேரமேயாயினும் கூட ஒரு தனித்திறன் வேண்டும். அது அவருக்கு இருக்கிறது.

.

Friday, October 5, 2012

தாங்குதிறன் (Endurance)

ஆங்கில வார்த்தைகளில் இந்த எண்டூரன்ஸ் (Endurance) என்ற சொல் எனக்குப் பிடித்தமான ஒன்றாகும். தாங்குதிறன் என்பது கூட அதன் முழுமையான மொழிபெயர்ப்பல்ல. இந்தச் சொல் உற்பத்தித் துறையில் பணிபுரிபவர்களுக்கு மிகவும் பழகிய ஒன்றாக இருக்கும்.

ஒரு ஹை வோல்டேஜ் சர்க்யூட் பிரேக்கரை எடுத்துக்கொண்டால் அதன் வாழ்நாளான சுமார் 20 வருடங்களில் சராசரியாக மாதம் ஒரு முறை என்று வைத்துக்கொண்டாலும் கூட (இப்போதைய இந்தக் கேவலமான மின்பற்றாக்குறை காலத்தைக் கணக்கில் கொள்ளாமல்) 240 முறைதான் இயங்குகிறது. ஆனால் அதன் பொறுப்பு கருதி, அது சுமார் 20000 முறை இயங்கினாலும் கூட அதன் பாகங்கள் தாங்கும் படியாக அது வடிவமைக்கப்படுகிறது. அதைச் சோதிக்கும் வழிமுறைதான் எண்டீரன்ஸ் டெஸ்ட் எனப்படுகிறது. ஒரு புதிய வெர்ஷன் உருவாக்கப்பட்டாலோ, உள்ளிருக்கும் பாகங்களில் ஒன்றோ, சிலவோ தொடர் முன்னேற்றம் (Continuous improvement  ) கருதி ஏதோ மாற்றங்கள் செய்யப்பட்டாலோ அந்தத் தொகுதியின் முதல் பிரேக்கர் இப்படியான எண்டூரன்ஸ் சோதனைக்கு ஆளாகும்.

தானியங்கி முறையில் எண்டூரன்ஸ் சோதனைச்சாலையில் வாரக்கணக்கில் அது தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டே இருக்கும். அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக இருக்கும். பெரும்பாலும் அவை வெற்றியிலேயே முடியும். முடிவில் அந்த பிரேக்கர் எப்படியான மாற்றங்கள் அடைந்திருக்கின்றன, எந்தெந்தப்பகுதிகள் இன்னும் நலமாக நீடித்திருக்கின்றன, எவை சேதமடைந்திருக்கின்றன என்பதையெல்லாம் ஆய்வோம். அரிதாக சோதனையின் நடுவே அது தோல்வியடையவோ, வெடித்துவிடவோ செய்யக்கூடும். அப்போதும் அதுபோலவே ஆய்வு நடக்கும். 

இதில் இன்னொரு வகையான சிறப்புச் சோதனையும் இருக்கிறது. 20000 தடவைகள் என்ற கணக்கின்றி, பிரேக்கர் சிதைந்து இயக்கம் நிற்கும் வரையிலான சோதனை.

இதைப்போன்றே, கார்கள் உற்பத்தி, என்ஜின் உற்பத்தி, மெஷின்கள் உற்பத்தி போன்ற பல துறைகளிலும் வாகனங்களும், மெஷின்களும், கருவிகளும் இந்த எண்டூரன்ஸ் சோதனைக்கு ஆளாகின்றன. 

எனக்கு இந்தச் சோதனை, எப்போதும் பல்வேறு விதமான சிந்தனைகளை கிளப்பிவிட்டுக்கொண்டே இருக்கும். பல்வேறு விஷயங்களில் மனிதனின் உச்சபட்ச தாங்குதிறன் என்ன? சிந்தனையில்? செயலில்? ஈடுபாட்டில்? உடலை எந்த அளவுக்கு எண்டூரன்ஸ் சோதனைக்கு ஆளாக்கலாம்? மனதை? மனித செயல்பாடுகளுக்கு யாரும் அளவீடுகளைச் செய்துவிடமுடியாது. மனித உடலும், மனமும் அதன் தேவைக்கேற்ப, சூழலுக்கேற்ப எத்தகைய எண்டூரன்ஸையும் தாங்கும் வலிமை பெற்றது. எத்தனையோ விதமான மனிதர்களின் கதைகளைச் சொல்லலாம்.

அதையெல்லாம் விடுத்து, நாம் நம்மளவில் யோசித்தால் எந்த நிகழ்வுகளையெல்லாம் எனக்கு நடந்த எண்டூரன்ஸாக நான் கொள்ளமுடியும்?சில ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு பயிற்சியின் போது எதிர்பாராத விதமாக சுமார் 16 கிமீ நடக்கவைக்கப்பட்டேன். ஒரு இலக்கை அடைந்து மீண்டும் துவக்க இடத்துக்கேத் திரும்ப வேண்டும். செல்கையில் சாலையிலும், திரும்புகையில் கடற்கரை மணலிலும். 16 கிமீ என்பது ஒரு சாதாரண மனிதனுக்கு மிகச்சாதாரண ஒரு தொலைவுதான். வாகன வசதிகளை அடையும் முன்பு நூற்றுக்கணக்கான கிமீகளை நடந்தேதான் நம் முன்னோர்கள் பயணித்திருக்கிறார்கள். இப்போதும் கூட கோவிலுக்குச் செல்வது போன்ற எத்தனையோ காரியங்களுக்காக எத்தனையோ கிமீகளை நடந்தே பயணிக்கின்றனர் நம் மக்கள். ஆனால் எதனாலோ, எப்படியோ கண்டிஷன் செய்யப்பட்ட எனக்கு 16 கிமீ என்பது சாதாரணமா என்பது முதல் கேள்வி. முதலில் தூரம் அறிவிக்கப்படவில்லை. போக வர 2 கிமீ இருக்கலாம் என்ற கணிப்பில் உற்சாகமாக துவங்கிய என் பயணம் எப்படி முடிந்தது? எனக்குள் என்னென்ன மாற்றங்களை அது உண்டுசெய்தது? 

முதலில் ஏதோ சிறார் மனநிலையில் ஒரு விளையாட்டைப்போலத்தான் நிகழ்வு உற்சாகமாக துவங்கியது. மூன்றாவது கிமீ-ரைத் தாண்டியபோது பரவாயில்லை என்று நினைத்தாலும் அதே அளவு திரும்பவும் நடக்கவேண்டுமே என்ற கோபம் முளைத்தது. என்னது இது சின்னப்பிள்ளைத்தனமாக இருக்கிறது என்ற எரிச்சல், ஆர்கனைஸர்ஸ் மீது. 4வது 5வது கிமீ கடக்கையில் கடும் கோபம். எவன் ஏற்பாடு செய்தது இதை? கால்கள் துவள ஆரம்பித்திருந்தன. வலியெடுக்கத்துவங்கியிருந்தது. பல வருடங்களுக்கு முன்னர், ஒரு சிறிய விபத்தில் வலது கால் முட்டியிலும், குதிகாலிலும் அடிபட்டிருந்த இடங்களில் வலியெடுப்பதைப்போன்ற ஒரு பிரமை. லேசாக வலி தோன்றியிருந்ததும் உண்மைதான். ஆனால் என் இயலாமைக்குக் காரணம் தேடிக்கொண்டிருந்த மனம், அதையே பூதாகரமாக ஆக்கிக்கொண்டிருந்தது. 7வது கிமீ-யில் வலது கால் பாதம் சுளுக்கிக்கொண்டதைப்போல வலி.

இந்தப் பயணம் இன்னும் பாதி தூரம் கூட வரவில்லை என்ற உண்மை பூதாகரமாக கண்முன்னால் எழுந்தது. குழுவில் எனக்குச் சாதகமாக கருத்துக்கொண்ட நண்பர்களைத் தேடினேன். சுமார் 25 பேர் இருந்த குழுவில் பாதிக்கும் மேற்பட்டோர், விளையாட்டு என்ற உற்சாகத்தை இழந்திருந்தாலும், இதனால் என்ன, பரவாயில்லை என்பது போல சுவாரசியமாக தொடர்ந்து போய்க்கொண்டிருந்தனர். 50 வயதைத் தாண்டியிருந்த இரண்டு பேர் பயணத்தை பாதியில் நிறுத்திவிட்டதாக செல்போனில் அறிவிக்க, அவர்களை கார் வந்து அழைத்துச்சென்றது. 35 வயதுக்காரனான நான் எப்படி அந்த வண்டியில் ஏறிக்கொள்ளமுடியும். ஒன்றுமே நடவாவதது போல நடந்துகொண்டிருந்தேன். மீதமிருந்த நபர்களில் சிலர் கடுமையாக கோபப்பட்டாலும், திட்டிக்கொண்டே முன்னேறிக்கொண்டிருந்தனர். என்னைப்போலவே  என் வயதையொத்த நபர்கள் தவிப்பும், கோபமுமாய் இரண்டு பேர்தான் மீதமிருந்தனர். அவர்களும் கூட பயணத்தைக் கைவிடத் தயாரில்லை.

‘இப்படி நடக்கவைத்து எதைக் கற்றுத்தரப்போகிறான், அந்தப் படுபாவி?’ என மாறி மாறி திட்டிக்கொண்டே முன்னேறிக்கொண்டிருந்தோம். என்னைவிட வயதில் குறைந்தவர்கள் சிலர் தடுமாறவும் செய்தனர். வயதில் மூத்த சிலர் எந்தக் கவலையுமின்றி எங்களை முந்தி முன்வரிசையில் நடந்துகொண்டுமிருந்தனர். டார்கெட் எத்தனை கிமீ என்பது தெரிந்தாலாவது ஒரு ஆறுதல் இருந்திருக்கும். அதுவும் தெரியாத நிலை, இன்னும் வெறியேற்றுவதாக இருந்தது.  நல்ல உடற்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்த ஓரிருவருக்கு மட்டும் இந்தப் பயணம் இனிமையானதாக உற்சாகமானதாக இருந்தது. அந்த உற்சாகம் அவர்களால் முடிகிறது என்பதற்காக இல்லை, இத்தனை பேரால் முடியவில்லை என்பதனால்தான். அவர்கள், கூடுதலாக எல்லோரையும் சியர் அப் செய்கிறேன் பேர்வழி என்று சிரித்துப்பேசி உற்சாகமூட்டி, வெறுப்பேற்றிக்கொண்டிருந்தனர்.

எட்டாவது கிமீயில் டார்கெட்டைத் தொட்டபோது மகிழ்வதா, வருந்துவதா என்றே புரியவில்லை. மீண்டும் 8 கிமீ, கடற்கரை மணல் காத்திருக்கிறது என்ற உண்மை சுட்டது. அங்கே, சற்றேனும் ஓய்வெடுக்கக் கால்களும், மனதும் கெஞ்சியது. ஆனால் அந்தச்சூழலில் உட்காருவது, தொடர்ந்து பயணிப்பதில் சிக்கல் உண்டாக்கும் என்பதை அறிந்திருந்தேன். மேலும், யாரும் அமர்வதாய்க் காணோம். 

அவரவர்களின், அத்தாட்சியைப் பெற்றுக்கொண்டு குழு மேலும் முன்னேறிக்கொண்டிருந்தது. குழுவில் கடைசியாக சென்றுகொண்டிருந்த மூவர் அணியில் நானும் இருந்தேன். 10வது கிமீரைத் தாண்டியபோது கால்கள் நிஜமாகவே வீங்கியிருந்தன. ஏற்பாட்டாளர்கள் முன்னமே எச்சரித்திருந்தும், தகுந்த காலணிகளை அணியாமல் அசட்டையாய் இருந்ததில், பாதங்களுக்குள் ஏதோ பிரச்சினை என்பது புரிந்தது. வெய்யில் நன்கு உறைக்கத்துவங்கியிருந்த 14 வது கிமீ-ல், வியர்வையில் குளித்துக்கொண்டே, மணலில் கால்கள் புதையப்புதைய நடந்துகொண்டிருந்தேன். இப்போது எனக்கு யார் மீதும் எந்தக் கோபமும் இல்லை, விளையாட்டு, பயிற்சி எதுபற்றியும் சிந்தனை இல்லை. கால்கள் மரத்துப்போயிருந்தன. எனது ஒரே நோக்கம், இந்தச்சோதனையில் தோல்வியுறாது, திட்டப்படி மீண்டும் நடந்தே அறைக்குத் திரும்பிவிடவேண்டும். அவ்வளவுதான். அதில் வெற்றியும் அடைந்தேன்.

நான் அறைக்குத் திரும்பி ஷூக்களைக் கழற்றியபோது கால்கள் சற்றே வீங்கியிருந்தன, தொடைகள், மூட்டுகள் வலியெடுத்துக்கொண்டிருந்தன. வலது கால் பாதம் சுளுக்கி வீங்கியிருந்தது. இரண்டு பாதங்களிலும் கொப்புளங்கள் ஏற்பட்டிருந்தன.

இந்தக் காரியத்தை என்னால் செய்யமுடிந்தது என்ற மகிழ்ச்சியைத் தவிர வேறெந்தக்குழப்பமோ, யார் மீதும் கோபமோ இல்லை. அன்று மாலை மீண்டும் பயிற்சியின் வேறொரு நிகழ்வில் பங்குபெற வந்தபோது, வழக்கமாக நடக்கும் முந்தைய நிகழ்வின் ரிவ்யூ கூட இல்லாமல், அனைவரும், நான் உட்பட அந்த அடுத்த நிகழ்வில் ஆர்வத்தோடு பங்குபெறத்துவங்கினோம்.

நன்றாக யோசித்தால், உடலுக்கும், மனதுக்கும் அவ்வப்போது எண்டூரன்ஸ் சோதனைகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன என்பதை அறியமுடிகிறது. அதுவே முதிர்ச்சியையும், முழுமையையும் நமக்குத் தருகிறது.

நாட்கணக்கில், மாதக்கணக்கில் தனித்தீவில், காடுகளில், பாலையில் சிக்கிக்கொண்ட மனிதர்கள் மீண்டும் திரும்பிய கதைகளையெல்லாம் கேள்விப்படுகையில் அவர்களது மனமும், உடலும் எத்தகைய எண்டூரன்ஸுக்கு ஆளாகியிருக்கும் என்ற பிரமிப்பு ஏற்படுவதை தவிர்க்க இயலாது.

ஹிஹி.. கல்யாணம் செய்துகொண்டு ஒரு புதிய பெண்ணுடன், முதல் சில வருடங்களை வாழ்ந்து கடப்பதைக் காட்டிலும் ஒரு மனிதனின் மனதுக்கு மிகச்சிறந்த எண்டூரன்ஸ் சோதனை வேறொன்று இருக்க இயலாது என்பதை நாம் ஏற்கனவே அறிவோம்.. இல்லையா.?!

.