Tuesday, November 20, 2012

துப்பாக்கி - விமர்சனம்

மு.கு: கீழ்வரும் விமர்சனத்திலும் ’படம் நல்லாருக்கு, மீஜிக் சரியில்லை’ங்கிற அதே பல்லவிதான் மீண்டும் பாடப்பட்டிருக்கிறது. ஆகவே புதிதாக எதையும் எதிர்பார்க்கவேண்டாம்.

 நீ....ண்ட நாட்களுக்குப்பிறகு விஜயிடமிருந்து விறுவிறுப்பான ஒரு படம். அதிலும் படத்தை விட விஜய் இன்னும் நன்றாக இருக்கிறார். லீவுக்கு வந்த இடத்தில் போலீஸை நம்பாத ஒரு ராணுவ அதிகாரி, ஒரு பெரிய தீவிரவாத நெட்வொர்க்குக்கு எதிராக போராடும் கதைதான் துப்பாக்கி. வழக்கமான டுபாகூர் கதைதான் என்றாலும், விஜயகாந்த், அர்ஜுன் ரேஞ்சுக்கு டுபாகூர் என்றும் சொல்லிவிடமுடியாது.


அவற்றிலிருந்து இது எந்த வகையில் வேறு படுகிறது? எங்கெல்லாம் இந்த படம் சுவாரசியமாகிறது? விஜய்க்கும், அந்த கும்பலுக்கும் இடையிலான தொடர்பை ஏற்படுத்தும் தற்செயலான ஒரு சம்பவம். அதைத் தொடர்ந்து ஏற்படும் நிகழ்வுகள், பின் நிகழப்போவதை கணித்து அதற்குத் தக்க திட்டமிடும் விஜய், விஜயை விடவும் ஷார்ப்பாக திட்டமிட்டு அவரை சில இடங்களில் முந்திவிடுகிற வில்லன் குழு, தனி ஆளாய் பிஸ்கோத்து காண்பிக்காமல் தீவிரவாத முயற்சிகளை தகர்க்க தனது பட்டாலியனைச் சேர்ந்த ராணுவ வீரர்களையே பயன்படுத்திக் கொள்வது என கிளைமாக்ஸ் (ஒண்டிக்கு ஒண்டி ஃபைட் கொஞ்சம் ஏமாற்றம்) வரைக்கும் மெயின் கதையில் நிறைய சுவாரசியம், திருப்பங்கள், விறுவிறுப்பு.

ஆனால், அதெப்படி ஒரு நல்ல படத்தை நல்லதாகவே விட்டுவைக்க முடியும்? கமர்ஷியல் ஐயிட்டங்கள் வேண்டாமா? காஜல், காதல், ஜெயராம், சத்யன் என வரும் சுமாரான கிளைக்கதைகள் படத்தின் நிறைய பகுதியை விழுங்குகின்றன. நகைச்சுவை இந்தப் படத்துக்கு தேவையிலை எனினும் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் அவை நன்றாக வந்திருக்கலாம். அதாவது பரவாயில்லை. பாடல்கள் என்று ஒரு மாஸ் வெப்பன்!! அவற்றை உருவாக்கிய ஹாரிஸைக்கூட மன்னிக்கலாம். ஆனால் அதையெல்லாம் சின்சியராக ஒன்று விடாமல் படத்திலும் வைத்து ரசிகர்களை சாவடித்த முருகதாஸை என்ன செய்யலாம்? இப்படியெல்லாம் கமர்ஷியல் ஐட்டங்களை வைத்து எவ்வளவு தடவை மண்ணைக் கவ்வினாலும் திருந்த மாட்டீர்களா ஐயா? இந்தப் படமே கூட எதற்காக இப்படி பிய்த்துக்கொண்டு ஓடுகிறது என வெளியே விசாரியுங்கள். முதலில் நல்ல திரைக்கதையையும், உங்களையும் நம்புங்கள் ஐயா. படம் மொக்கையாக இருந்தால் அதை சமாளிக்க கமர்ஷியல் ஐட்டங்களை வைத்து ஒப்பேத்துங்கள். ஆனால் நல்ல படங்களிலும் அவற்றைத் திணித்து கடுப்பேற்றாதீர்கள்.

பின்னணி இசை தந்த ஹாரிஸைத் திட்டாவிட்டால் இந்த விமர்சனம் எழுதிய எனக்கு விமோசனமே கிடைக்காது. ஹீரோயிஸ பில்டப் யாருக்குத்தான் பிடிக்காது.? ஒரு நடிகனுக்காக வலிந்து ஒருபில்டப் சீன் வைக்கப்படுவதுதான் கடுப்ஸே தவிர, ஒரு தகுதியான காரெக்டருக்கு பில்டப் சீன், அதுவும் ஒரு ஆக்‌ஷன் படத்தில் இருப்பது கூடுதல் அழகு. இந்தப் படத்தில் இடைவேளையின் போது அப்படி ஒரு அழகான, ஹீரோயிஸ பில்டப்புக்கான இடம். இயக்குனரும், ஒளிப்பதிவாளரும் கைகோர்த்துக்கொண்டு அமைத்த ஒரு காட்சி, அழகான கோணம், எக்ஸ்பிரஸிவான நடிகர்களின் முகபாவங்கள், ஷார்ப்பான வசனங்கள்.. ம்யூஸிக் எப்படி இருக்கவேண்டும்?... ஹாரிஸ் சொல்கிறார், டுடுடு டுட்டுடாய்ங், டுடுடு டுட்டுடாய்ங்.!!

".. James horner reinvented the romance for Jack & Rose .."- James cameron

-நீங்க எதையும், யாருக்காகவும் ரீஇன்வெண்டெல்லாம் பண்ணித்தொலைக்க வேண்டாம், ஆனா ஏதோ பாத்துப் போட்டுக்குடுங்க சாமீ..
.

Saturday, November 3, 2012

ஸ்கைஃபால் -SKYFALL

பியர்ஸ் பிராஸ்னன் காலத்திய ஜேம்ஸ்பாண்ட் ரசிகன் நான் என்ற போதிலும் காலத்திற்கேற்ப கதைப்பாங்கிலும், ஸ்டைலிலும் நிறைய மாற்றங்களைத் தாங்கி வந்திருக்கும் ஜேம்ஸின் இன்றைய டேனியல் கிரெய்க்தான் அந்தப் பாத்திரத்துக்கு மிகப்பொருத்தமாகயிருக்கிறார் என்பது என் எண்ணம். பிராஸ்னன் ஒரு அழகான ஜோம்ஸ்பாண்ட் என்பதில் மாற்றுக்கருத்தில்லை, ஆனால் அது மட்டும் போதுமா? எல்லோராலும் இன்றும் ஏற்றுக்கொள்ளப்படும் ஷான் கானரி ரொம்பவும் சினிமாடிக்கா இருக்குற மாதிரி எனக்கு ஒரு ஃபீலிங். ஒரு வேளை படங்கள் ரொம்ப பழசாயிட்டதால் எனக்கு அப்படித் தோன்றுகிறதோ என்னவோ? 

ரோஜர் மூரும் அப்படியே. அதுவும் இந்தியாவில் பெரும்பகுதி கதை நடக்கும் படமான ‘ஆக்டோபஸி’, ஜேம்ஸ் படங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றதாகும். ஆனால் அதுவே இப்போ பார்த்தால் நிறையவே டுபாகூர்தனமாக இருப்பது தெரிகிறது. பொதுவாகவே இந்த சீரிஸே ஒரு பெரிய டுபாகூர் சீரிஸ்தான் என்பதால் தனித்தனியே அது பெரிய டுபாகூரா இல்லை, இது பெரிய டுபாகூரா என்று ஆராய்ச்சி பண்ணாமல், ஜஸ்ட் என்ஜாய் பண்ணிவிட்டுப்போவதுதான் நல்லது. 

கூர்மையான நீல நிறக் கண்கள், கம்பீரம், உடற்கட்டு, உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத முகம் என கிரேய்க்தான் என்னோட பெஸ்ட் ஜேம்ஸ்பாண்ட்! அதுவும் காஸினோ ராயலில் சும்மா பரபரன்னு பத்திக்குமே ஒரு சேஸிங்!! ஆனா இவர் வந்த நேரமோ என்னவோ, ஜேம்ஸ் கேரக்டருக்கு கொஞ்சம் ரியாலிடியை கொடுக்கிறேன் பேர்வழினு ஜேம்ஸ் யூஸ் பண்ற வித்தியாசமான கருவிகளைப் பிடுங்கிக்கிட்டாங்க. சில இடங்கள்ல தோத்துப்போறாரு, வில்லன்கள்கிட்ட மாட்டிக்கிறாரு, உதை வாங்குறாரு, படக்கூடாத இடத்துல அடிபடுது. யாரு இதையெல்லாம் கேட்டா? அழுக்குப் படாம ஆக்‌ஷன், அட்வென்ச்சர்னு பண்ணிட்டுப் போக வேண்டியதுதானே.? ஜேம்ஸுக்கு என்ன ரியாலிடி?

ஸ்கைஃபால்! 

பாண்ட் சினிமாவுக்கு அறிமுகமாகி 50வது ஆண்டில் வெளியாகும் 23வது படம்.

எப்படி, எதுக்குன்னெல்லாம் கேட்கப்பிடாது.. அந்த அளவுக்கு எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறிப்போய் இருந்தது எனக்கு. அந்த எதிர்பார்ப்புக்கு இது ரொம்பவே ஏமாற்றம்தான். வில்லனாகப்பட்டவர் ஜேம்ஸைப் போலவே திறமையான Mi6ன் (முன்னாள்) உளவாளி, அவரது அதிருப்தி மற்றும் அவரது டார்கெட் M என்றெல்லாம் களத்தை செமையாய் ரெடி செய்த பின்பும் படம் சொதப்பிடுச்சு. ஓபனிங் சேஸிங்கைத் தவிர்த்து, படம் பூரா சவசவ. பத்தும் பத்தாததுக்கு அத்துவானக் காட்டுல மொக்கை கிளைமாக்ஸுன்னு கொஞ்சம் கஷ்டமாப் போயிடுச்சு. இன்னும் நிறையச்சொல்லலாம். ஆனா பூரா நெகடிவாத்தான் இருக்கும். ஒரு படத்துக்காகவெல்லாம் ஜேம்ஸைப் பற்றி அப்படியெல்லாம் அவதூறு பரப்பக்கூடாது.. வாங்க, ஒழுங்கா அடுத்த படத்துக்காக வெயிட் பண்ணுவோம், ஓகே.?

இப்போதைக்கு இந்த சேஸைப் பார்த்து கொஞ்சம் மனசைத் தேத்திக்குங்க.. http://www.youtube.com/watch?v=m5M5R2pcPJ0

.