Friday, December 6, 2013

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய கவிதை ஒன்று:


வானேகுதல்

தங்கக் கூண்டிலிருந்து விடுபடுகிறது
சிறு பறவையொன்று
இனி இரைக்கு போட்டியிருக்கலாம்
இருப்பே கேள்வியாகலாம்
ஆயினும்
அது
தன் சின்னஞ்சிறு சிறகுகளால்
அளைந்துகொண்டிருப்பது வானை.

*

இன்று எழுதிய அந்தக்கவிதையின் தொடர்ச்சி:வசப்படாத வானத்தின் துளிகள் 
தங்கிவிட்ட சிறகுகளோடு
கூண்டுக்குத் திரும்புகிறது
சிறு பறவையொன்று
இரை இனி தேடிவரும்தான்
இருப்பும் ஊஞ்சலில்தான்
ஆயினும்
அது காத்திருக்கும்
மீண்டும் நிகழப்போகும்
அந்த வானேகுதலுக்காக! 

*


Photograph courtesy: Vijay Armstrong

*

Monday, November 25, 2013

இரண்டாம் உலகம்


இரண்டாம் உலகம் தமிழில் அரிதாக அவ்வப்போது வரும் உலகப்படங்களில் ஒன்றாகும். இந்த வகைப்படங்களெல்லாம் சாதா ஆடியன்ஸுக்கு அவ்வளவாக புரியாது என்பதால், ஸ்பெஷல் சாதாவான நான் கொஞ்சம் சிரமம்பார்க்காமல் கதையை விளக்க முற்படுவது வழக்கம். குருவி, யாருக்கு யாரோ ஸ்டெப்னி, ஆழ்வார், நையாண்டி போன்ற முந்தைய உலகப்படங்களுக்கும் இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை அறிவீர்கள்தானே! ஆகவே இதுவரை படம் பார்க்காத, இனி பார்க்கும் எண்ணமுள்ளவர்கள், முன்னதாக சஸ்பென்ஸ் விடுபட விருப்பமில்லாதவர்கள், சொந்தமாக கதையைப் பார்த்துப் புரிந்துகொள்ளும் சக்தி படைத்தவர்கள் ஆகியோர் மேற்கொண்டு இதைத் தொடரவேண்டாம்.முதலில் நம் உலகம், அதாவது பூமி. இங்கொரு ஆர்யா. மிக மிக நல்லவர். சாந்த சொரூபி. திடுமென விறுவிறுப்பாக ஓடியாடி வேலை செய்கிறார். திடுமென சொங்கி மாதிரி அமைதியாக இருக்கிறார். ஆனால், அனுஷ்கா காதலைச்சொல்ல வந்தால் பேந்தப் பேந்த விழிக்கிறார். அனுஷ்கா, பரவாயில்லை என்று சொல்லிவிட்டுப்போய் வேறு மாப்பிள்ளைக்கு ஓகே சொன்னவுடன் இவருக்கு காரணமே இல்லாமல் காதல் வந்துவிடுகிறது. அனுஷ்காவை ஃபாலோ செய்கிறார். அவர் ஒரு ஆணுடன் பேசிக்கொண்டிருக்கையில் பக்கத்தில் போய், ஒன்றும் பேசாமல் மண்டையை அங்குமிங்கும் திருப்பி லூசு மாதிரி நிலத்தை உற்றுப்பார்க்கிறார், பின் மூஞ்சியை உற்றுப் பார்க்கிறார். திடுமென, லவ்வர் பாயாக மாறி, பின்னாடியே போய் ஜாலியாக சீண்டி விளையாடுகிறார், மெடிகல் கேம்ப் எனப்படும் டூர் இந்தப்படத்திலும் வருகிறது. பாட்டுப்பாடுகிறார். ஒரு கட்டத்தில் அனுஷ்காவுக்கு மீண்டும் இவர் மீது காதல் வந்துவிட்டதோ, நாம் பிழைத்தோமா! அந்தோ பரிதாபம், அப்போதுதானா அனுஷ்கா கால் தடுக்கி விழுந்து மண்டையைப் போடவேண்டும்! ஸோ ஸேட்! 

மீண்டும் ஒரே திக்கையே வெறித்து உட்கார்ந்தவரை ஒரு நாய் வந்து எங்கோ கூட்டிப்போகிறது. பின்னவீனத்துவவாதிகளால் மாய யதார்த்த, இணைக்கனா, இச்சாலோகம், ஃபேண்டஸி என்றெல்லாம் கணிக்கப்படும் உலகுக்குள் போகப்போகிறோம் என கொஞ்சம் இடுப்புப் பெல்டை இறுக்கிக்கொண்டால் ஊஹூம், இல்லை. அதன்பின்பு, நோய்வாய்ப்பட்ட தந்தை ப்ரிஸ்க்காக ஸ்கூட்டரில் வந்து ’அனுஷ்கா எங்கும் போகவில்லை, இங்கேதான் இருக்கிறார், நன்றாகத் தேடு’ என்று குறியீடுகள் நிறைந்த ஒரு அறிவுரையைச் சொல்லும் போதாவது போய்விடுவோம் என்று பார்த்தால் அப்போதும் நிகழவில்லை. இப்படித்தான் சாதா ஆடியன்ஸ் எதிர்பார்க்கும் பல விஷயங்கள் இதில் நிகழ்வதே இல்லை. (இலக்கியப்படம், உலகப்படம், பின்னவீனத்துவபடம் போன்ற பல வார்த்தைகள் நினைவுக்கு வருமே உங்களுக்கு!). அதன்பின், பூகம்பம் போல ஏதோ ஒன்று வர, நல்ல மழையில் இவர் ஒரு காரை எடுத்துக்கொண்டு எதற்காகவோ, எங்கோ ஒரு மலையுச்சிக்குப் போகிறார்.

நிற்க.

அந்த இணையான இன்னோர் உலகம்! அப்படின்னா? ரொம்ப சிம்பிள்தான். இங்கு நம் உலகில் வானம் நீல நிறம், காடுகளும், மரங்களும் பச்சை நிறமாக இருக்கிறதல்லவா? அங்கு, இவையெல்லாமே ஜிங்குச்சா ஜிங்குச்சா மல்டி கலர். மஞ்சள், ஊதாப்பூ கலர்கள் சற்று தூக்கலாக இருக்கும், அவ்வளவுதான். அங்குமொரு ஆர்யாவும், அனுஷ்காவும் வாழ்கிறார்கள். கூடவே ஒரு ராஜா, மந்திரி, ஒரு இளம் சாமியாரிணி, கொஞ்சம் சிப்பாய்கள், ஒரு எதிரி ராஜா, அவருக்கும் கொஞ்சம் சிப்பாய்கள். மந்திரியின் மகன்தான் ஆர்யா. 

இனிமேல்தான் சிக்கலான இடம் வருகிறது, கதையைக் கவனமாகக் கேளுங்கள். அந்த ஊரில் காதல், அன்பு, பூக்கள் இவையெல்லாம் கிடையாது. இவையெல்லாம் இல்லாமல் அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆக, இவையெல்லாம் நமக்கு மட்டும் எதற்கு என இயக்குனர், நம்மைப் பார்த்து ஒரு தத்துவார்த்த கேள்வியையும் எழுப்புகிறார் எனவும் கொள்ளலாம். சரி, இங்குள்ள இரண்டாம் ஆர்யாவுக்கு வருவோம். பார்க்க ஆஜானுபாகுவாக இருந்தாலும் அவர் ஒரு சொங்கி என அப்பா உட்பட, ஊருக்குள் ஒருவரும் மதிப்பதில்லை. அவருக்கோ, அனாதையாக சுற்றித்திரியும், ஆண்களை வெறுக்கும் அனுஷ்கா மீது மோகம். அடைய முயற்சிக்கிறார். முடியவில்லை. ஏனெனில் அவர் இவரைவிட ஆஜானுபாகுவாக இருப்பதாலும், சண்டைக்கலையில் தேர்ந்திருப்பதாலுமாகும். இந்த சமயத்தில் ராஜாவும், அனுஷ்காவைப் பார்த்து மையலாகிவிட அனுஷ்கா அதற்கும் ஒப்புக்கொள்ளாததால் சிறைப்படுகிறார். அவரை விடுவிக்க, ஆர்யா, யாருமே இதுவரை வென்றிராத, ஒரு பெரிய பறக்கும் சிங்கமொன்றை வேட்டையாடவேண்டும் என நிபந்தனை விதிக்கப்படுகிறது. 

பிற உயிரினங்கள் என்று பார்த்தால், அந்த ஊரில் அந்த சிங்கத்தைத் தவிர லாங்ஷாட்டில் பறக்கும் சில டைனோ பறவைகள் மட்டும்தான் இருக்கின்றன. சரி, அந்த சிங்கத்தை வேட்டையாடுவது எப்படி? அதொன்றும் பிரச்சினை இல்லை, ஐந்து ஆனை பெரிசுக்கு, ஒரு டைனோசர் மாதிரி இருக்கும் அந்த சிங்கம், தவக்கா மாதிரி இங்குமங்கும் குதித்துக்கொண்டுதான் இருக்கும், கடிக்கவெல்லாம் செய்யாது. ஒரு குட்டிக் கத்தியை வைத்து அதை குத்திச் சாய்த்துவிடுகிறார் ஆர்யா. அனுஷ்கா விடுதலையாகிறார். அட, இன்னும் அனுஷ்காவுக்கு அவர் மீது அபிப்பிராயம் வந்தபாடில்லை, காட்டுக்குள் ஓடி ஒளிந்துகொள்கிறார். அதுவாவது பரவாயில்லை, அந்த ராஜாவுக்கும், மற்ற மக்களுக்கும் கூட இவர் வீரத்தின் மீது மரியாதை வந்ததா என்றால் அதுவுமில்லை. சில படைவீரர்கள், ஒரு பெரிய மலையைக் காட்டி இதுதான் சாமி மலை, இதன் மீது யாருமே இதுவரை ஏறியதில்லை, அதன் மீது ஏறினால்தான் நீ வீரன் என்று ஒப்புக்கொள்வோம் என்கின்றனர். அவரும் டக்கென்று ஏறிவிடுகிறார்.

நிற்க.

அந்த மலைதான், இந்த மலை. மலை மலை, மருத மலை! காரில் மலை மீது முதலில் ஏறிய முதல் ஆர்யா, மாய மனநிலையில் காரோடு மலை மீதிருந்து கீழே விழும் தருவாயில் இரண்டாமவர், அவரைக் காப்பாற்றி இரண்டாம் உலகுக்கு அழைத்துவருகிறார். (இப்போதாவது, மற்றவர்கள் இவரை வீரர் என்று ஒப்புக்கொண்டார்களா என்று ஞாபகமாக கேட்கிறீர்களா? அட போங்கங்க, உங்களுக்கு ரொம்பதான் ஞாபக சக்தி!). இரண்டாம் ஆர்யாவைப் பார்த்ததும் மனமகிழும் சாமியாரிணி, நம் உலகுக்கு காதல் எனும் உணர்வை ஒருவன் கொண்டுவந்துவிட்டான், பூக்கள் பூக்கப்போகின்றன, சற்று நாட்களில் முதல் காதல் மலரப்போகிறது என்கிறார். சொன்னபடியே, அவ்வளவு நாட்கள் மொட்டாக இருந்த பூக்கள் பூக்கின்றன. மக்கள் எல்லாம் தேமேவென அவரவர் வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அப்போது பார்த்து அந்த வில்லன் ராஜா, இந்த புனிதத் தன்மைகள் நிறைந்த சாமியாரிணியை கடத்திக்கொண்டு போக முயற்சிக்க, வழி மறிக்கும் ஆர்யா, சுமார் 50 பேர் கொண்ட அந்தப்படையை ஒற்றையாளாக, மதுவருந்தியபடியே, ஒற்றைக்கையால் துவைத்து எடுத்து சாமியாரிணியைக் காக்கிறார். (துணைக்கு காட்டிலிருந்து அனுஷ்காவும் வந்து சண்டை போட்டுவிட்டு மீண்டும் காட்டுக்குள் போய்விடுகிறார்). நம் ராஜாவும், படைவீரர்களும் தேமேவென்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அப்பாடி, இப்போதாவது ஆர்யாவின் வீரத்தை எல்லோருக்கும் தெரிந்துகொள்ள சந்தர்ப்பம் வந்ததே என நாம் நினைத்தால், அடக்கடவுளே, இப்போதும் யாரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. அதன்பின்பும் அவரைத் தூற்றுகிறார்கள். இரண்டாவது முயற்சியாகவும், பெரும்படையோடு அந்த வில்லன் கும்பல் வந்து சாமியாரிணியை கடத்திவிடுகிறார்கள். இந்த முறையும் ஆர்யா மட்டும் பின்னாடியே ஓடிப்போய் அவர்களிடம் மாட்டிக்கொள்கிறார். அவரை, குதிரையில் கயிறு கட்டித் தரதரவென இழுத்துப்போகிறார்கள். 

இரண்டாம் ஆர்யாவைப் பார்த்ததும், அனுஷ்காவுக்கும் உள்ளுக்குள் பூ ஏற்கனவே மலர்ந்துவிட்டிருந்தது. அதனால், அந்த ஆர்யா எஃபெக்டில், கொஞ்சம் லேட்டானாலும் அவரது இரண்டாம் உலக ஆர்யா மேல் ஒருவழியாக லவ் வந்துவிடுகிறதோ, கிளைமாக்ஸ் வந்துவிடுகிறதோ. நாம் பிழைத்தோம்! 

அவர்கள் ஆர்யாவையும் பிடித்துக்கொண்டு போய்விட்டதால், இப்போது அனுஷ்கா அவரை மீட்க கிளம்புகிறார். உடன் யாரும் வராததால், நம் ஆர்யா துணைக்குப் போகிறார். இவர்கள் பெரும் மலைக்காடுகள், பனிப்பிரதேசம் எல்லாம் கடந்து செல்வதற்குள், இரண்டாம் உலக ஆர்யா, சாமியாரிணியைக் காப்பாற்றிக்கொண்டு எதிரே வந்துவிடுகிறார். வேலை மிச்சம்! எப்படிக் காப்பாற்றினார் என்று கேட்கவில்லையே! அந்தம்மாவை அவர்கள் ஒரு அறையில் போட்டுவைத்திருக்க, வாசலில் ஒரு 50 பேர் காவல். ஆர்யாவை அவர்கள் எங்கும் போட்டு அடைத்துவைக்கவெல்லாம் இல்லை, சும்மாதான் திரிந்துகொண்டிருக்கிறார். இவர் அந்த அறைக்குப் பக்கத்தில் போகவும், வாசலில் இருந்த காவலாளிகள், ‘உங்கக்காவுக்கு உடம்பு சரியில்லைல்ல, வா, பாத்துட்டு வந்துடுவோம்’, ’வாயேன், ரெண்டு வடை தின்னுட்டு வருவோம்’, ‘உங்க மாமா ஊர்லயிருந்து வந்திருக்காரா? அவரப்பாத்து நாளாச்சே! வா போலாம்’ என்று சொல்லிவிட்டு வரிசையாக இரண்டிரண்டு பேராக கிளம்பிவிடுகின்றனர். சாமியாரிணி எஃபெக்ட் என நாம் நினைத்துக்கொள்ள வழியிருக்கிறது. ஆக, இவர் எளிதாக போய் கூப்பிட்டுக்கொண்டு வந்துவிடுகிறார். இதற்கு ஏன் இவர் வேலைமெனக்கெட்டு போகவேண்டும்? அவரேதான் வந்துவிடலாமே என்றெல்லாம் என்னைக் கேட்காதீர்கள். 

நால்வரும் ஒரு படகில் ஊருக்குத் திரும்புகையில், நமது ஆர்யா வில்லனின் ஆயுதம் பட்டு தொபுக்கடீர்னு தண்ணீருக்குள் விழுந்துவிடுகிறார். இரண்டாம் உலகத்து ஆர்யாவும், அனுஷ்காவும் துடிக்க, சாமியாரிணியம்மா அர்த்தபுஷ்டியோடு அவர்களைத் தடுக்கிறார். அதாவது தண்ணீருக்குள் போன ஆர்யா மூன்றாம் உலகத்துக்குப் போய்விடுகிறார். அங்கும் அன்பு, காதல் எல்லாவற்றையும் அறிமுகப்படுத்தவேண்டுமல்லவா? 

சுபம்! 

ஒருவேளை நமக்குதான் குறியீடுகள் புரியவில்லையோ, அன்புக்கு வரும் சோதனைகளையும், அன்பே உலகை ஆளும் என்ற தத்துவார்த்தத்தையும்தான் இரண்டாம் உலகத்து மனிதர்களின் ஒவ்வொரு டைப் டைப்பான நடவடிக்கைகளும் குறிப்பால் உணர்த்துகின்றனவோ என்றும் நாம் சந்தேகிக்கலாம். ஆனாலும். ஆர்யா, ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையே முழுசா ஒரு நிமிஷம் கேப் எடுத்துகொண்டு வசனம் பேசுவதையெல்லாம் எந்த பின்னவீனத்துவ வகையில் சேர்ப்பது என்றுதான் எனக்குப் புரியவில்லை. ஒரு 10 மணி நேர படத்தை 2.30 மணி நேரத்துக்கு கண்டமேனிக்கு கத்தரித்துக் கோர்த்தால் எப்படியிருக்குமோ, அப்படி இருந்தது எனக்கு. ஒரு கச்சிதமான படத்தின் எந்த ஒரு காட்சியை உருவினாலும், படம் அர்த்தமிழந்துபோகும் என்பார்கள். இந்தப் படத்தில் ஒவ்வொரு காட்சியாக, எந்தக் காட்சியை எடுத்தாலும் படத்தைப் புரிந்துகொள்வதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. ஏனெனில் ஏற்கனவே ஏதாவது புரிந்திருந்தால்தானே பிரச்சினை? உலகே ஒரு வெங்காயம் என்பது மாதிரி என்ற தத்துவத்தையும் நாம் இந்த எடிடிங் மூலமாக அறியலாம்.

பர்சனலாக எனக்குப் பிடிக்கவில்லை எனினும், முதல் படி இருந்தால்தானே அடுத்த படியில் கால்வைக்க முடியும்? இந்த சிஜி ஒர்க்கெல்லாம், தமிழில் நிச்சயம் வரவேற்கப்படவேண்டிய ஒன்றுதான். அடுத்து அனுஷ்கா. வயது முதிர்ச்சியடைந்தாலும், சிலரின் க்யூட்னெஸுக்கு முதிர்ச்சியே கிடையாது. அதன்பின் ராம்ஜி. அற்புதமான ஒளிப்பதிவு. 

சமீபத்தில் முத்து காமிக்ஸ் தளத்தில் ஒரு விவாதம் நடந்தது. ஆக்‌ஷன், அட்வென்சர், காமெடி காமிக்ஸுகளுக்கு நடுவே, கிராஃபிக் நாவல் எனும் பெயரில், ஓரிரு வரலாற்றுப் பின்னணி கொண்ட சீரியஸ் காமிக்ஸ் புத்தகங்கள் சமீபத்தில் வெளியாயின. நமக்குக் கிடைக்கிற காமிக்ஸே கொஞ்சூண்டுதான். இதில் ஏன்யா எங்களை சீரியஸ் கதை சொல்லி அழவைக்கிறீங்க, எங்களுக்கு கமர்ஷியல் கதைகளே போதும் என ஒரு பக்கத்து வாசகர்கள் போர்க்கொடியெழுப்பினார்கள். அடப்பாவிகளா, உங்களுக்குப் புரியலைன்னா போச்சா, அற்புதம்யா அவை, ஆக, சீரியஸ் கதைகளும் வேண்டும் என இன்னொரு பக்கத்து வாசகர்கள் எதிர்விவாதம் செய்தனர். இரண்டாவது கோஷ்டியில் நான் இருந்தேன். அதை சற்றே இங்கும் நாம் பொருத்திப்பார்க்கலாம். உனக்குப் புரியலைன்னா போச்சா? எங்களுக்கு பல உள்ளீடுகள் புரிகின்றன ஐயா, நாங்கள் ரசிக்கிறோமே என்று ஒருசாரார் சொன்னால் அதில் நியாயம் இருக்கத்தானே செய்கிறது? 

சரிதான், ஒரு சாராருக்குப் புரியாத, இன்னொரு சாரார் உணர்ந்து அனுபவிக்கிற பின்னவீனத்துவம் என்று ஒன்று இருக்கிறதுதான். ஆனால், பின்னவீனத்துவமும், போலி பின்னவீனத்துவமும் பார்ப்பதற்கு ஒன்றுபோலவேதான் இருக்கும். எங்களுக்கு இரண்டுமே தெரியப்போவதில்லை, அதனால் பிரச்சினையில்லை. நீங்கள்தான் பாவம், பச்சைத் தண்ணீரைக்குடித்துவிட்டு பாயசம் குடித்ததாய் நினைத்துக்கொள்ள நேரிடும், ஜாக்கிரதையாக இருந்துகொள்ளுங்கள்! வாழ்த்துகள்!

Tuesday, October 15, 2013

கிராவிட்டி (Gravity)

ஹாலிவுட் படங்கள் பார்க்கத்துவங்கிய காலத்திலெல்லாம் எல்லாப் படங்களும் பிரமிப்பாக இருக்கும். 1999ல் சென்னைக்கு வந்து, பின் தொடர்ந்த சில வருடங்களில், சம்பாதித்த கொஞ்ச பணத்தையும் ஹாலிவுட் படங்கள் பார்த்தே கரைத்திருக்கிறேன். நிறுத்தி நிதானமாக ரசிக்க, சப்-டைட்டில் வைத்துக்கொண்டு புரிதலோட பார்க்க டிவிடி கிடையாது, நினைத்த உடன் டவுன்லோட் பண்ணிப் பார்க்க டோரண்ட் கிடையாது. எல்லாம் தியேட்டர்தான். புரிந்தாலும், புரியாவிட்டாலும், பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் அவ்வளவுதான். சிக்ஸ்த் சென்ஸ், வெர்டிகல் லிமிட், தி மம்மி, மேட்ரிக்ஸ், க்ளாடியேட்டர், எக்ஸ்-மென் போன்ற படங்கள் எல்லாம் அந்தச் சமயங்களில் பார்த்த மறக்க முடியாத படங்கள்தான்.

சென்னை வந்ததே ஒரு துணிச்சலான காரியம் எனக்கு. இந்த அழகில் வந்த புதிதில், தேவி தியேட்டரில்தான் ஸ்பீஸிஸ் (எந்த பாகம்னு ஞாபகம் இல்லை) படம் பார்க்க வேண்டும் என்ற ஆசை. தேவி தியேட்டரில் அதுவரை படம் பார்த்ததில்லை. நான் அடம்பிடிக்க, ரூம் மேட்ஸ் ஒருவரும் உடன் வர ஒத்துக்கொள்ளவில்லை. தன்னந்தனியாக சென்று மாலைக் காட்சி பார்த்துவிட்டு, அதுவும் 70எம்.எம்மில் பார்த்த வியப்பில் திறந்த வாய்மூடாமல் அறைக்குத் திரும்பினேன். வழியை மறந்துவிடாமல் இரவு பத்திரமாக ஜாஃபர்கான்பேட்டையில் இருந்த ரூமுக்கு வந்து சேர்ந்ததெல்லாம் சாதனையாக்கும்!

வருடங்கள் செல்லச்செல்ல, அதுவும் இந்த டிவிடி வந்த பின்பு சகட்டுமேனிக்கு ஆசைப்பட்ட ஹாலிவுட் படங்களையெல்லாம் பார்க்கத்துவங்கினேன். அதுவும் போதாமல், டோரண்ட் வந்த பிறகு கெசபலான்கா, கிங்காங் (1933) வரைக்கும் பின்னோக்கிச் சென்றும் பார்த்தாயிற்று. முக்கியமான படம் என்று யாராவது சொன்னால்- பஸ்ஸில் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர் முதலாக- சொன்னா போதும், உடனே போடு டவுன்லோடை என்று ஆகிவிட்டது. என்ன.. கொஞ்சம் இலக்கியம் தூக்கலாக இருக்கும் படங்கள்தான் கொட்டாவி வரவைத்தன, அதனால் அப்படியான படங்கள் இருக்கும் பக்கம் மட்டும் போவதில்லை. மற்றபடி வியப்பெல்லாம் போய் ஒரு கட்டத்தில், ’யாரப்பா டைரக்டர்? கேமரூனா! நல்லா எடுப்பானே பையன், அவன் படம்னா தியேட்டருக்குதான் போகணும்’ என்கிற லெவலுக்கு வந்தாச்சு.

எல்லா இடங்களிலும் நம்மை மாதிரி மனிதர்கள்தானே இருக்கிறார்கள்.. ’போடுறா மொக்கையனு.. அங்கேயும் 2 விஜய், 4 பேரரசு, 8 சற்குணம்னு இருக்கத்தானே செய்வாங்க’ என்பது பின்னர்தான் கொஞ்சம் கொஞ்சமாக தெரிய ஆரம்பித்தது. வேறென்ன.. அனுபவம்தான். அதன் பின்பு கொஞ்சம் செக் பண்ணிவிட்டு, படம் பார்க்கும் வழக்கம் வந்தது. ஆனாலும் முன்பு போல பிரமிப்பூட்டும் படங்களைக் காண்பது என்பது மிக அரிதான ஒன்றுதான்!!

கிராவிடி பிரமிப்பூட்டும் ஒரு படம்!


நல்ல இயக்குனர்கள், குழுக்கள் ஒன்று சேரும் போது, டெக்னாலஜி, செய்நேர்த்தி ஆகியன உச்சம் தொடுகின்றன. அதையெல்லாம் விளக்க முடியாது. விளக்குவதற்கும் கொஞ்சம் விவரம் வேண்டுமே.. அதோடு விளக்குவதெல்லாம் போதாது, இந்தப் படத்தைப் பொறுத்தவரை இது அனுபவிக்கப்பட வேண்டிய விஷயம். சர்வதேச விண்வெளிக்கூடத்தில் நிகழும் ஒரு நிகழ்வையும், அதைத் தொடரும் சிக்கல்களுமே கதை. இவை படமாக்கப்பட்ட விதமெல்லாம் நிச்சயம் அந்தத் துறை சார்ந்த டெக்னீஷியன்களையே (அதாவது கலை ரசனை கொண்டவர்களை மட்டும்)  வியக்கச்செய்யும் என்பதில் ஐயமில்லை. கதைக் களத்துக்கே நம்மைக் கொண்டு செல்லும் 3டி நுட்பம் இந்தப் படத்திற்கு சாலவும் பொருத்தமானது.

ஸ்பேஸில் மிதந்து கொண்டிருக்கும் ஒரே ஒரு பிரதான கதாப்பாத்திரம், அதன் கூடவே தத்தளிக்கும் நாம். பூமி எத்தனை அரிய ஒரு வாழிடம் இந்த மனிதர்களுக்கு என்பது மண்டைக்கு உறைக்கிறது.

டிஸம்பரில் இங்கிருக்கும் டெல்லிக்கு சென்றால் கூட குளிரில் விரைத்துக்கொண்டு காது அடைத்துக்கொள்ளும் போது, போதும்டா சாமீ, எப்போது போவோம் ஊருக்கு? ஒரு ஐந்து நிமிடம் கிடைக்காதா எனது சொந்த ஊரின் காற்று என்று ஆகிவிடும். சமயங்களில் நேரும் தனிமை என்பது நமக்குள் பல்வேறு சிந்தனைகளை ஏற்படுத்தும். ஆழ்கடல் நீச்சல், நம் புவியை நீங்கிச்செல்லும் உணர்வை ஏற்படுத்தி, நமது அற்ப நிலையை உணர்த்தும் என்பார்கள். அதைப்போல பன்மடங்கு இந்த விண்வெளி ஏற்படுத்தும் என்பதை உணரமுடிகிறது. ஆனால், இதெல்லாம் புரிந்தும் கூடத்தான் இத்தனைப் போராட்டங்கள், சல்லித்தனங்கள் நம்மிடையே! இன்னும் இன்னுமென.. நிலவைத் தொடட்டுமா, செவ்வாய்க்குச் செல்லட்டுமா என விண்ணைத் தொடுகிறது மனிதனின் ஆசை!

நம் இருப்பிடத்தின் அரிதான தன்மையை, சக மனிதனின் அரிதான தன்மையை உணரச்செய்யும் ஒரு அற்புதமான படமாக மலர்ந்திருக்கிறது கிராவிடி! அதுவும் அந்த கிளைமாக்ஸ், முத்தாய்ப்பு!


இறுதியாக ஒன்று. அந்த பிரதான கதாபாத்திரத்தில் தோன்றும் சாண்ட்ரா புல்லக். இத்தனைப் பெரிய கதையை, கதாபாத்திரத்தைத் தாங்கி, மிளிரச் செய்யவேண்டுமானால் அதற்கு எத்தகைய திறனும், அனுபவமும் வேண்டும்.!? ஸ்பீட் படம் பார்த்ததிலிருந்து சாண்ட்ராவின் ரசிகன் நான். பெயரை நினைவில் கொள்ளுமளவு நான் ரசித்த முதல் ஹாலிவுட் நடிகை இவர். கொஞ்சம் ஆண்மை கலந்த சாண்ட்ரா, ஹிலாரி ஸ்வாங்க், ஏஞ்சலினா ஜோலி, மிஷெல் ரோட்ரிகெஸ் போன்றோர் எனக்கு மிகவும் பிடித்தமானவர்கள். சாண்ட்ராவின் திரைவாழ்வின் மிக முக்கியமான படம் இந்த கிராவிடி! தவற விடாதீர்கள் என்ற வழக்கமான சொல்லாடல் மிகக்குறைவு இந்தப் படத்துக்கு!


Tuesday, October 8, 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்- ஒரு பார்வை


விறுவிறுப்பு, ஆக்‌ஷனுக்குப் பஞ்சமில்லாத கச்சிதமான ஒரு கிரைம் த்ரில்லர். இந்தத் த்ரில்லர் சினிமாவை, ‘ஒரு சாதாரண த்ரில்லர்’ என்பதைத்தாண்டியும் ஒரு உயர்வான இடத்துக்குக் கொண்டுசென்ற விதத்தில்தான் மிஷ்கின் வேறு படுகிறார். இரண்டு காரணங்கள். ஒன்று, மிஷ்கினின் பிரத்யேக கதை சொல்லும் பாணி. இரண்டு, வணிக சமரசங்கள் ஏதுமில்லாத மிஷ்கினின் துணிச்சல். இவற்றால் இந்தப் படம் தமிழின் முக்கியமான படங்களின் வரிசையில் ஓரிடத்தைப் பிடித்துக்கொண்டுவிட்டது.

பொதுவாகவே விமர்சனம் என்ற பெயரில் கதையைக் கொஞ்சம் சொன்னால் அது ஸ்பாயிலராக அமைந்துவிடும். அதிலும் த்ரில்லர் படங்களுக்குக் கேட்கவே வேண்டாம். ஆக, திரையரங்குகளிலிருந்து இந்தப் படம் ஓடிவிடும் முன்பு, தவறவிடாமல் உடனே ஓடிப்போயாவது பார்த்துவிடுங்கள் என்று மட்டும் கேட்டுக்கொள்கிறேன்.

மிக அரிதான சந்தர்ப்பங்கள் தவிர்த்து, சினிமாவில் குத்துப் பாடல்கள் மட்டுமின்றி எல்லாவிதமான பாடல்களையுமே நான் வெறுக்கிறேன். அவை சினிமா அனுபவத்தை குலைக்கின்றன என்பது என் தனிப்பட்ட கருத்து. இந்தப் படத்திலும் பாடல்கள் இல்லை, நகைச்சுவை என்ற பெயரில் வெறுப்பேற்றும் காட்சிகள் இல்லை. மிஷ்கினின் பிரத்யேக கிளிஷேக்கள், அவ்வளவு ஆர்வமான காத்திருப்புக்குப் பின்பான பின்கதை போதாமை, கிளைமாக்ஸ் நிஞ்சா ஃபைட் போன்ற சிற்சில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன.

ஆயினும் இளையராஜாவின் இசை, மிஷ்கினின் தனித்துவமான காட்சியமைப்புகள், நேர்த்தியான காரெக்டர்கள் வடிவமைப்பு, விறுவிறுப்பான திரைக்கதை, ஃபிளாஷ்பேக் உத்தி போன்ற புதுமைகள், நடிகர்களின் சிறப்பான பங்களிப்பு போன்றன அவற்றின் உச்சத்திலிருப்பதால் இந்தப் படம் ஒரு சிறப்பான உயரத்தை அடைந்திருக்கிறது.

மிஷ்கின், ஸ்ரீ, ஷாஜி போன்றோரின் காரெக்டர்கள் சிறப்பானவை. மிஷ்கினைத் துரத்தும் ஷாஜியின் தீவிரத்தையும், சலிப்பையும் மிகவும் ரசிக்கமுடிகிறது.

ராஜசுந்தர்ராஜன் ஐயா, மற்றும் அவர்தம் சீடர்கள் கண்டுணர்ந்து தரும் பின்னவீனத்துவ குறியீடுகளை உணரும் திறமையெல்லாம் எனக்கு இல்லை. முதல் காட்சியின் முதல் ஷாட்டிலேயே கதையைத் துவக்கிவிடும் கச்சிதமும், அந்த ஷாட்டின் அழகுணர்ச்சியும் எனக்கு மிகவும் பிடித்திருந்ததுதான், ஆனால் ராஜசுந்தர்ராஜன் அந்த ஷாட்டிலிருக்கும் குறியீடாக அவர் உணர்ந்ததைச் சொன்னபோது ஆச்சரியமாகத்தான் இருந்தது. இதெல்லாம் மிஷ்கினுக்குத் தெரியுமா? என்று நகைச்சுவையாக நான் சிந்தித்த போது.. மிஷ்கினே ஒரு விழாவில்.. ‘ஸ்ரீ ஏன் மிஷ்கினை முதுகில் தூக்கிக்கொண்டு அலைகிறான் தெரியுமா? சிலுவைய்ய்ய்யா அது. சிலுவையை சுமக்கிறான் அவன்’ என்று முழங்கினார். இப்படியெல்லாம் குறியீடுகளைக் கண்டுணர்ந்து உய்க்கும் திறன் இருந்தால் மிகவும் மகிழ்ச்சி...

இல்லாதவர்களுக்கு இது ஒரு நீட் அண்ட் க்ளீன் எண்டெர்டெயினர்!!


பின்னிணைப்பு:

சென்ற ஞாயிறு மாலை, சென்னையில் ’டயலாக்’ என்ற அமைப்பின் சார்பில் எழுத்தாளர் பவா.செல்லத்துரை மற்றும் அவரது நண்பர்களால் இப்படம் குறித்த ஒரு உரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அன்று காலைதான் படத்தைப் பார்த்திருந்தேன். நிச்சயம் பாராட்டுக் கூட்டத்தில் கலந்துகொண்டு அவருக்கான வாழ்த்தைப் பதிவு செய்யவேண்டியது அவசியம் என்று தோன்றியதால், அவ்வாறே எண்ணம் கொண்டிருந்த நண்பர்கள் இருவருடன் சென்றிருந்தேன். நிகழ்வு உரையாடல் என்று சொல்லப்பட்டு, பாராட்டுவிழாவாக மட்டுமே அமைந்தது. அதிலும் தவறில்லை. விமர்சனம், மாற்றுக்கருத்து, விவாதம் என்பதையெல்லாம் தாண்டி நல்ல முயற்சி செய்யும் கலைஞர்களை முதலில் மனம் திறந்து பாராட்டிவிடுவது முக்கியம்தான்.


ரசிகர்கள் பக்கமிருந்தும், கலைஞர்கள் பக்கமிருந்தும் ஏராளமானோர் மேடையேறி மிஷ்கினை மனம் திறந்து பாராட்டினார்கள். வழக்கம் போல ரசிகர்கள் பக்கமிருந்து சில ஓவர் டோஸ் உரைகளும் இருந்தன. இதுவும் இணைய உலகில் தவிர்க்கமுடியாததுதான். இணையப் பயனர்கள் என்போர் சற்றே முதிர்வு குறைவான நம் சமூகத்தின் ஒரு மாதிரிதானே தவிர, அதனினும் சற்று மேம்பட்ட சிந்தனையாளர்களாக, படைப்பாளிகளுக்கு நிகரானவர்களாக நான் கருதவில்லை. (மீ ட்டூ.. :-))) ) ஆகவே பெரும்பாலும் சமூகத்தின் ரசனையைத்தான் இணையமும் பிரதிபலிக்கும்.

பின்னர் கடைசியாக மிஷ்கின் ஏற்புரையாற்ற வந்தார். துவக்கத்தில், தேர்தல் நேர அரசியல்வாதி போல அவ்வளவு கொதிப்பு பேச்சில். சிரித்தால் இறங்கி வந்து உதைப்பார் என்று தோன்றியதால் அடக்கிக்கொண்டேன். தொடர்ந்து கொஞ்சம் அமைதியடைந்து சில நல்ல கருத்துகளையும் பகிர்ந்துகொண்டார். அதில், குறிப்பிடத் தகுந்த விஷயங்கள் பல இருந்தன.

”90 சதவீதத்துக்கும் அதிகமாக கமர்ஷியல் என்ற பெயரில் பொறுப்பற்ற குப்பைகள் வந்துகொண்டிருக்கும் ஒரு சூழலில், என்னைப் போல, தங்கமீன்கள் ராமைப் போல நல்ல முயற்சிகள் செய்பவர்களிடம் கொஞ்சம் பரிவோடு நடந்துகொள்ளுங்கள். இம்முயற்சிகளுக்கு மதிப்பளியுங்கள். நாங்கள் ஒன்றும் தவறிழைக்காத, முழுமையான மனிதர்கள் அல்லர். நாங்களும் உங்களைப்போலத்தான். எங்கள் படங்களிலும் சில தவறுகள் இருக்கலாம். அதையெல்லாம் தாண்டி எங்கள் நோக்கம் என்ன என்பதை புரிந்துகொள்ள முயற்சியுங்கள். எல்லா படைப்புகளும் விமர்சனங்களுக்குட்பட்டவைதான். ஆனால் விமர்சனம் என்றால் என்ன என்பதை புரிந்துகொண்டு எழுதுங்கள். ஒரு படைப்பை நிதானமாக உள்வாங்கிக்கொண்டு சிந்தித்து எழுதுங்கள். முதல் நாளே, முதல் காட்சி முடிந்ததுமே எழுத அப்படி என்ன அவசரம்? எப்படி அந்தப் படைப்பை அதற்குள் எடைபோடமுடியும்? அரைகுறையாக, அவசரமாக எழுதி ஒரு படைப்பைக் குத்திக் கிழிக்காதீர்கள், படைப்பாளியைக் காயப்படுத்தாதீர்கள். விமர்சகர்களுக்கு மிகவும் பொறுப்பு இருக்கிறது. பார்க்கும் உங்களுக்கு இருக்கும் அறிவைப்போலவே, எங்களுக்கும் அறிவு இருக்கிறது என்பதை உணருங்கள். மதிப்பளியுங்கள். ஒரு காட்சியை உருவாக்கும் போது ஏராளமான சிந்தனைக்கும், தர்க்க விவாதங்களுக்கும், கற்றலுக்கும், உழைப்புக்கும் பின்னரே அதைச்செய்கிறோம் என்பதை நம்புங்கள்”

மிகவும் சரியான கருத்துகள்தான். கேடிபில்லா கில்லாடிரங்காவையும், தங்க மீன்களையும் ஒரே விமர்சனப் பார்வையோடு அணுகுவது மிகவும் தவறுதான். விமர்சனம் என்ற பெயரில் இணையத்தில் ‘இணையம் எனக்குப் பரிச்சயம்’ என்ற ஒரே காரணத்தினாலேயே விமர்சனம் எழுதும் நண்பர்கள் இவற்றை மனதில் கொள்வது நல்லது (யாருக்கு? யாருக்கோ! :-)) ).

ஆனால் பேச்சின் துவக்கத்தில், “என் படத்தையா குறை சொல்கிறாய்? விட்டேனா பார். என்ன அறிவு இருக்கிறது உனக்கு? நீ வந்து படத்தை எடுத்துப்பாருய்யா, அப்பதான் அதோட கஷ்டம் என்னான்னு உனக்குத் தெரியும். முடியுமா உன்னால? என்ன மாதிரி 90 கிலோ உடம்ப வைச்சுகிட்டு ஓடமுடியுமா உன்னால? என்னையவா விமர்சனம் பண்றே? ட்ரிபூட்னா என்னான்னு தெரியுமா? என்னையவா காப்பியடிச்சேனு சொல்றே? கதைனா என்னான்னு தெரியுமா? சினிமான்னா என்னான்னு தெரியுமா? புரட்யூஸர்னா யார்னு தெரியுமா? குத்துபாட்டு இல்லைனா என்னாகும்னு தெரியுமா? ஒரு சினிமா எடுக்குறதுக்கு முன்னால முப்பது புக்கு படிக்கிறேன், முன்னூறு சினிமா பார்க்கிறேன், சம்பந்தப்பட்டவங்ககிட்ட மூவாயிரம் தடவை டிஸ்கஸ் பண்றேன். யாருகிட்ட.? பிச்சி பிச்சி..” என்று வேட்டியை மடிச்சிக்கட்டிகிட்டு களத்தில் இறங்கிவிட்டார்.

இதற்கும் வரிக்கு வரி ஒரே அப்ளாஸ்!! நம்மாட்களைப் பற்றிதான் தெரியுமே! போட்டு உதைச்சாலும் சிரிச்சி, ரசிச்சி, என்ஜாய் பண்ணி மஸாஜ் மாதிரி ஏத்துப்பாங்களே.. :-)))

ஒரு நல்ல கலைஞனுக்கு ஏன் இந்தப் பேச்சு? ஒரு சினிமா எடுப்பதே கடினம்தான். மேலும், வர்த்தக சமரசங்கள் ஏதுமில்லாமல் எடுப்பது இன்னும் கடினமான பணிதான். அதனால்தான் ராஜேஷுக்கும், மிஷ்கினுக்கும் வேறு வேறு இடங்கள் தரப்பட்டிருக்கின்றன. அதனால்தான் இந்த பாராட்டுக்கூட்டத்தில் இருக்கை இல்லாவிடினும் பரவாயில்லை என இரண்டு மணி நேரம் நின்று, கைத்தட்டி வாழ்த்து, அன்பு, நன்றியெல்லாம் தெரிவிக்கப்படுகிறது. அப்படி அதைச் சாதித்தவன் இப்படியெல்லாம் பேசிக்கொண்டிருக்காமல் அமைதிகாப்பதுதான் அவனது மேன்மையை இன்னும் உயர்த்தும்.

இத்தருணத்தில் கமல்ஹாஸன் மீது இன்னும் கொஞ்சம் மரியாதை முகிழ்ப்பதைத் தவிர்க்க இயலவில்லை. கமல்ஹாஸனை, அவரது முயற்சிகளை நாம் எத்தனை தடவை தூக்கி எறிந்திருக்கிறோம். அதற்காகவெல்லாம் இப்படி அவர் பேசிக்கொண்டிருந்தால், அந்த உரைதான் எவ்வளவு நீண்டதாக இருந்திருக்கும்? :-)))

*

Tuesday, September 17, 2013

வித்யா போஷக்

வித்யாபோஷக்கிற்காக இயங்கும் அன்பு நண்பர் திரு.வெங்கடேசனின் வேண்டுகோள் கீழிருக்கும் செய்தி. நண்பர்களே, இயன்றவர்கள் தவறாது டொனேட் செய்யுங்கள், செய்தியை ஊடகங்களில் பகிர்ந்து தகவல் பரவச்செய்யுங்கள். நன்றி.

 
அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.

வித்யா போஷக் தொண்டு நிறுவனத்திற்கு உங்கள் ஆதரவை நாடுகிறேன். 'Give India Challenge' போட்டியில் வித்யா போஷக் பங்கெடுத்துள்ளது. இப்போட்டியில் இருநூறு தனிப்பட்ட நன்கொடைகளை  முதலாவதாக நாங்கள் பெற்று விட்டால், ரூ.2,00,000.00 வெல்லும் வாய்ப்புக்கிட்டும்.

ரூ.100 அளவிலான உங்கள் ஒவ்வொருவரின் எளிய நன்கொடையானது  502 பட்டதாரி, கிராமப்புற  மாணவர்களை வேலைக்கான தகுதியுள்ளவர்களாக மாற்றும் வல்லமையை எங்களுக்குத் தரக்கூடியது. எங்கள் பயிற்சி குறித்த மேலதிக விவரங்களை இணைத்துள்ள கோப்பில் பார்க்கலாம்.

தற்போது வித்யா போஷக் இப்போட்டியில் 48 தனிப்பட்ட நன்கொடைகளுடன் முதலாவது இடத்தில உள்ளது. நாங்கள் ஊக்கதொகையான ரூ 2,00,000.00 வெல்ல இன்னும் 152 பங்களிப்பாளர்கள் கூடுமானவரை விரைவாக வித்யா போஷக் நிறுவனத்துக்கு வழங்க வேண்டுகிறேன்.

உங்கள் பங்களிப்பு ரூ. 100 முதலானதாக இருக்கலாம்..கீழ்க்கண்ட தொடுப்புகள் மூலம், நெட் பாங்கிங், கடன் அட்டை அல்லது டெபிட் கார்டு வாயிலாக   உங்கள் பங்களிப்பை வழங்க இயலும். http://www.giveindia.org/iGive-NurtureMerit

இத்தகவலை உங்கள் நண்பர்களிடமும், இணையத்திலும் பகிர வேண்டுகிறேன். கீழ்க்கண்ட இணைப்பின் வாயிலாக Give India Challenge' போட்டியில் எங்கள் தற்போதைய நிலையைக்காணலாம்.   http://www.giveindia.org/t-india-giving-challenge-2013-league-standings-challengers-overall.aspx

வித்யா போஷக் குறித்த தகவல்களுக்கு: http://vidyaposhak.org/

*

Monday, September 16, 2013

மூடர் கூடம் - விமர்சனம்

எந்த சமயமும் புதிய அலை ஓய்ந்துவிடும், ஏனெனில் ஓகே ஓகே ராஜேஷ் போன்றோர்களின் அசுர பலத்தின் முன்னால் புதியவர்கள் நிலைபெறுவது கடினம்தான் என்ற அவநம்பிக்கை எனக்கு இன்னும் இருந்துகொண்டேதான் இருக்கிறது. அதைக் குறைக்க, நல்ரசனையை நம்பி இன்னுமொரு சினிமா தமிழில் வெளியாகியிருக்கிறது. நவீன் எனும் ஒரு புதிய இயக்குனர் நாளைய நம்பிக்கைக்குரிய வரிசையில் வந்தமர்ந்திருக்கிறார்.

மிக எளிமையான கதையும், பலமான திரைக்கதையும், இயல்பை ஒட்டிய அட்டகாசமான கதாபாத்திர உருவாக்கமும் இவர்களது பலம். நவீனும் அதே பாதையில்.. வெற்றிகரமாக பயணித்திருக்கிறார்.

மூடர் கூடம்!


வெவ்வேறு பின்னணி கொண்ட, வாழ வழி தெரியாது அலையும் நால்வர் இணைந்து ஒரு வீட்டில் திருட திட்டமிடுகிறார்கள். அவர்கள், அந்த வீட்டிற்குள் சிறைபிடிக்கப்படும் நபர்கள், அவர்களோடு தொடர்புடைய வெளியாட்கள், நடக்கும் சம்பவங்களுக்கு ஒவ்வொருவரின் ரியாக்‌ஷன்ஸ், விதம் விதமான திருப்பங்கள் என மிக சுவாரசியமான சினிமா. அனேக இடங்களில் மனம்விட்டு சிரிக்கமுடிகிறது. மிகத் தேர்ந்த கதாபாத்திர உருவாக்கம் மற்றும் நடிப்பு. சின்னச்சின்ன காரெக்டர்களும் ரசனை. சிப்ஸு, ஐஸ்க்ரீம், லட்டு, பூரி என வாய் நிறைய பேசும் சிறுமி, திருடர்களிடம் கொஞ்சம் அடங்கி நடந்துகொண்டாலும், அலட்சியமாக வாடா, போடா என விரட்டும் ஓவியா, தாவூதின் சென்னை கிளையின் லீடர், ஆட்டோ குமாரு, சேட்டு மற்றும் அவரது தமிழ் என ஒவ்வொரு காரெக்டர்களும் ரசித்துச் செதுக்கப்பட்டிருக்கின்றன. எந்தக்காட்சியை எடுத்துக்கூறினாலும் படம் பார்க்கும் சுவாரசியம் தடைபடக்கூடும். ஆக, கட்டாயம் இந்தப்படத்தை தவறவிடாமல் பார்த்துவிடுங்கள்.

தமிழில் அரிதாக இருக்கும் மெச்சூர்டு நகைச்சுவை வகை படம் இது. காட்சிகள், வசனங்கள், ஒளிப்பதிவு என அத்தனையும் அதனதன் சிறப்பான உயரத்தில் இருக்கின்றன. (துவக்கக்காட்சிகளில் வரும் சில அநாவசிய வசனங்கள் தவிர, அவை அந்த காரெக்டருக்கான இயல்பு என்ற போதும்). நவீன் எனும் காரெக்டரில் நடித்திருக்கும் இயக்குனர் நவீன் நிறைய பேசுகிறார். சமூகம், அதன் ஏற்றத்தாழ்வுகள் குறித்த தன் கருத்துகளை நிறைய பேசுகிறார். எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. இன்னும் கொஞ்சம் போயிருந்தால் ஆபத்தான அளவைத் தொட்டிருக்க்கும். அடுத்தடுத்த படங்களில் கொஞ்சம் கட்டுப்பாடோடு அவர் இருப்பது நமக்கு நன்மை பயக்கும். குறிப்பாக பின்னணி இசை மிகவும் ரசித்துச் செய்யப்பட்டிருக்கிறது. சில பெரிய படங்களுக்கு ஏனோ தானோவென்று இசையமைக்கும் இசையமைப்பாளர்கள் இதைக் கவனிக்கலாம். இசையின் முக்கியத்துவத்தைக் கொஞ்சம் மதிக்கலாம்.

நவீனுக்குத் தருவோம் ஒரு வார்ம் வெல்கம்!!

டிஜிடல் மயமும், புதியவர்களின் வருகையும் ஒரு புதிய நம்பிக்கையைத் தந்திருக்கிறது. இந்தப் புதிய வரவுகளின் அடுத்தடுத்த படங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. வெற்று சினிமாக்களை தகர்த்தெறியும், தமிழ் சினிமாவைத் திசை திருப்பும்  மிகப்பெரிய பொறுப்பு அவற்றுக்கு இருப்பதாக நினைக்கிறேன். உங்களைப்போன்றே நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன் நம்பிக்கையோடு.

*

Sunday, September 15, 2013

பழிவாங்கும் பேய்

உங்களுக்கு என்னைப் பற்றி நன்கு தெரியும்தானே.. கவிதை, கட்டுரை, கதை என்று எழுத்தின் எல்லா வடிவங்களையும் சோதித்துப் (ஆமாம், அவற்றுக்கே சோதனை ஏற்படுத்துவதுதான்) பார்க்கும் பன்முகம் கொண்டவன் என்று!

அதில் மிச்சம் இருந்தது மொழிபெயர்ப்பு, அதையேன் விட்டுவைக்க வேண்டும்? சோதனை பண்ணிவிடுவதுதானே முறை.. ஹிஹி! அதுவும் ஒரு காமிக்ஸுக்கான மொழிபெயர்ப்பு என்பது இன்னும் ஸ்பெஷல். முத்து காமிக்ஸ் தளத்தில் நடத்தப்பெற்ற சிறு போட்டிக்காக எழுதப்பட்டு முதலிடம் வென்ற Payment in Full எனும் ஒரு காமிக்ஸ் திகில் சிறுகதையின் எனது மொழியாக்கம் ‘பழிவாங்கும் பேய்’ உங்கள் பார்வைக்காக.

சில கணினி விளையாட்டுகளில் முன்னறிவிப்பு செய்யப்பட்டிருக்கும், ’ப்ளே லைக் எ சைல்ட்’ என. காமிக்ஸ் குழந்தைகள் விஷயம் இல்லை எனினும் இந்தக் கதைக்கு மட்டும் அது பொருந்தலாம். ‘ரீட் லைக் எ சைல்ட்’!

கதையின் தொடர்ச்சியைக் காண முத்து காமிக்ஸ் தளத்துக்குச் செல்லலாம்.

இந்நேரத்தில், சென்னையில் பகுதி விநியோகம் கொண்ட ’சென்னை அவென்யூ’ எனும் டேப்லாய்ட் வாரப் பத்திரிகையில், வாரம் தவறாது இந்தத் தளத்தில் எழுதப்பட்ட ஓரிரு படைப்புகளை இடம்பெறச்செய்யும் நண்பர் சுகுமார் சுவாமிநாதனுக்கு அன்பைம், நன்றியையும் இங்கே பதிவுசெய்கிறேன்!

இன்றைய இதழின் பக்கங்கள்..


*

Saturday, August 31, 2013

தங்க மீன்கள் -விமர்சனம்


சரியாகப் படிக்காமல், பணம் சம்பாதிக்கத் துப்பில்லாமல், எதையும் முகத்துக்கு நேராகவும், நேர்மையாகவும் பேசக்கூடிய, மெல்லிய குணங்களை மதிக்கும், செம்புக் கலக்காத தங்கத்தைப் போலிருக்கும் (இவ்வளவு நீட்டி முழக்காமல் பிலோ ஆவரேஜ்னு சிம்பிளா சொன்னா ஈஸியா புரிஞ்சிப்பீங்களே..) கல்யாணி எனும் ஒருவன். அவனைப் போலவே இருக்கும் அவனது செல்ல மகள் செல்லம்மா! இவர்கள் இருவருக்குமிடையே இருக்கும் பாசப்பிணைப்பைச் சொல்ல முயல்கிறது இந்தத்தங்க மீன்கள்’.

படத்தில் வரும் ஒவ்வொரு காரெக்டர்களும் இயல்பை ஒட்டி நிற்பது அழகு. மகனின் குணத்தை முழுதும் புரிந்துவைத்துக்கொண்டு உள்ளுக்குள் பாசமும், வெளியில் கண்டிப்புமாய் பரிதவிக்கும் தந்தை, போலவே ஒரு தாய், காதல் மனைவி, அவர்களுக்கிடையேயான அன்பும், மோதலுமான அழகிய இயல்பான உறவு. சற்று நேரமே வந்தாலும் அண்ணன் மீதும், மருமகள் மீதும் பாசம் கொண்ட தங்கை, இயல்பு மீறாமல் வந்து போகும் செல்லம்மாவின் சின்னத்தோழி நித்யஸ்ரீ, செல்லம்மாவின் எவிட்டா மிஸ் என அத்தனை காரெக்டர்களும் நிறைவாக செதுக்கப்பட்டுள்ளன. அதிலும் இரண்டு, மூன்று காட்சிகளில் மட்டுமே தலைகாட்டும் எவிட்டா மிஸ்ஸின் நெகிழ்வான பின்னணிக் கதை, திரையில் எங்குமே சொல்லப்படாமல், நாமே கற்பனை செய்துகொள்ளும்படி சொல்லப்பட்டிருப்பது க்யூட்! அவ்வப்போது மனைவிக்கேயுரிய விதங்களில் கோபம் கொண்டாலும், 12ம் வகுப்பு படிக்கும்போதே காதலன் அழைத்தான் என்பதற்காக ஓடிவந்து கல்யாணம் செய்துகொண்ட வடிவு, தன் காதல் கணவன் மீது கொண்டுள்ளதொரு குறைவில்லாக் காதலும் மெனெக்கெட்டுக் காட்சிப்படுத்தாமலே நமக்குச் சொல்லப்படுகிறது. குட்டிப்பெண் நித்யஸ்ரீயின் தற்கொலை செய்துகொள்ளுமளவுக்கான ஒரு சோகமும், அதை, அவள் செய்யாமலிருப்பதற்கான காரணமும் ஒரு க்யூட் கவிதை!!ஆனால், இப்படி ஒவ்வொரு கதாபாத்திரங்களும், குணநலன்களும் செவ்வனே செதுக்கப்பட்டிருக்க, படத்தின் ஆதார பாத்திரங்களான செல்லம்மா, மற்றும் அவளது அப்பா கல்யாணியின் பாத்திரங்கள்? இங்குதான் சறுக்குகிறார் ராம்.

செல்லம்மா, சமயங்களில் புத்திசாலிக் குழந்தையாகவும், சமயங்களில் நெகிழ்வை உண்டு பண்ணவேண்டும் என்பதற்காகவே மண்டாகவும் இருக்கிறாள். படிப்பின்மை, குழந்தை மீதான பாசம், எல்லாம் ஒருபுறம் இருந்தாலும் குழந்தைக்கு அந்த வயதின் குழந்தைமை கிடைக்கவேண்டும் என்ற உயரிய எண்ணம், படிக்காதவன், சம்பாதிக்காதவன் ஒன்றும் முட்டாளல்ல என்பதான தெளிவு என சமயங்களில் தெளிவாக இருக்கும் கல்யாணி, குறைந்த பட்ச வருமானத்துக்குக்கூட வழியறியாது நிற்பது, அப்பாவோடு புரிதலில்லாமல் இருப்பது, பெரும் பணவரவு இல்லாத நிலையிலும் பிள்ளையைப் பிரிந்து தூரம் செல்வது என்பதெல்லாம் சிம்பதி நோக்கத்துக்கான காட்சியமைப்புகளாவே இருக்கின்றன. அதுவும் பழம்பொருள் ஒன்றைத்தேடும் கிளைக்கதையெல்லாம் அவசியமில்லாத இணைப்பாகவே இருக்கிறது. அதிலும், அதைப்பற்றி விசாரிக்கும் பொறுமை கூட இல்லாமல், லாப்டாப்பை அவன் தூக்கிக்கொண்டு ஓடுவதெல்லாம் அபத்தம். கதையோடு, உணர்வுகளோடு ஒன்றவிடாமல் நம்மைத் தள்ளிவிடும் காட்சிகள் இவை.

போலவே, படத்தின் ஆதாரக் கதையும் நிலையாக இல்லை, அல்லது உறுதியாக வடிவமைக்கப்படவில்லை. இருவரின் பிலோ ஆவரேஜ் அறிவும், அதனால் அவர்கள் சகமனிதர்களிடையே அடையும் இன்னலும் என்று புரிந்து கொள்வதா? தனியார் பள்ளிகளுக்கும், அரசுப்பள்ளிகளுக்குமிடையேயான சாதக பாதகங்களை அலசுகிறது எனக்கொள்வதா? அன்புக்குழந்தையைச் சூழல் காரணமாகப் பிரியும் தகப்பன், குழந்தை அறியாமையில் கேட்கும் ஒரு பரிசினைத் தர மேற்கொள்ளும் போராட்டமெனக் கொள்வதா? என.. நிறையக் கேள்விகள்!

நல்ல படங்கள் மீதுதான் நமக்கு விமர்சனங்களும் அதிகமாக இருக்கின்றன. ஏனெனில் தப்பான விஷயங்கள் சரியா செய்யப்பட்டிருந்தால் என்ன? தப்புத் தப்பாக செய்யப்பட்டிருந்தால் என்ன? எல்லாம் ஒன்றுதான். நல்ல விஷயங்கள் தப்புத் தப்பாக செய்யப்படும்போதுதான் சிக்கலே. இதன் பின் விளைவுகளோ, பொருளாதாரத் தோல்விகளோ இதைப்போன்ற பின் தொடரும் நல்முயற்சிகளை எப்போதும் பாதிப்பதாகவே இருக்கும். எனவே ராம் போன்றவர்களுக்கான பொறுப்பு, மற்றவர்களை விட கொஞ்சம் அதிகமே!

இதெல்லாவற்றையும் தாண்டி படம், அச்சுப்பிச்சு வில்லன்கள், நச்சுக்குத்துப் பாடல்கள் என அபத்தங்களின் மீது நம்பிக்கையில்லாத ஒரு இயக்குநரின் ஆர்வத்தையும், அழகுணர்ச்சியையும் காட்டுகிறது. மெல்லிய உணர்வுகளைப் பேசுகிறது. அழகிய பாடல்கள், அருமையான ஒளிப்பதிவு, நல்ல நடிப்பு என டெக்னீஷியன்களின், நடிகர்களின் நிறைவான பங்களிப்புகள். அதுவும் லொகேஷன்கள் படத்தின் மிகப்பெரிய ப்ளஸ்! நிச்சயம் வரவேற்கப்படவேண்டிய முயற்சி.

தவறவிடக்கூடாத ஒரு படம், இந்தத்தங்க மீன்கள்’!

.

Friday, August 16, 2013

ஆதலால் காதல் செய்வீர் – விமர்சனம்


நன்றாக ஞாபகமிருக்கிறது, ’நாத்திகம் காத்தல்’ என்ற ஒரு கட்டுரை இந்தத் தளத்திலேயே மிக அதிக பார்வைகளைப் பெற்ற ஒன்றாகும். மிக அதிக விமர்சனங்களையும், பின்னூட்ட விவாதங்களைப் பெற்றதும் கூட அதுவே. அந்த இடுகைக்குப்பின் என் மனதைப் பாதித்த இன்னொரு பொருள் குறித்து ‘கன்னிமை காத்தல்’ என்ற தலைப்பில் நீண்டதொரு பத்தியை எழுதி, திருப்தியின்றி, நீண்ட நாட்கள் ட்ராஃப்டிலேயே வைத்திருந்து பின்பொரு நாள் அழித்திடவும் செய்தேன்.

சுசீந்திரனின் ‘ஆதலால் காதல் செய்வீர்’ என்ற இந்தப் படத்தைப் பார்த்தபோது அந்த அழிக்கப்பட்ட கட்டுரைதான் ஞாபகம் வந்தது. அஃதொன்றும் பிரமாதமாக எழுதப்பட்ட கட்டுரை இல்லையாயினும், இந்தப் படம் அந்தப்பொருளைப் பற்றி ஆணித்தரமாக பேசும் ஒரு பிரமாதமான படமாக அமைந்துவிட்டது.


ஆண், பெண் பழக்கங்கள், பாலின ஈர்ப்பை காதலாகக் கொள்ளும் அவசரம், நற்காதலேயாயினும் கூட காமத்துக்கான காத்திருப்பின்மை, அதிலும் கூட பொறுப்பின்மை, அதனால் தொடரும் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் விதம் என இன்றைய இளைஞர்களின் போக்கைப் பார்க்க நேர்கையில், நட்பு வட்டாரங்களில் நிறைய கதைகளைக் கேட்க நேர்கையில், சமீப வருடங்களில் ஒரு பெரிய கலாச்சார மாற்றமே நிகழ்ந்து வருகிறது என்பதை புரிந்து கொள்ளமுடிகிறது. ’கிழ போல்டு’ என என்னை நீங்கள் கருதினாலும் பரவாயில்லை, இந்தக் கலாச்சாரத்தின் மீது கொஞ்சம் வருத்தமும், அதிர்ச்சியும் கூட இருக்கிறது எனக்கு.

முன்னெப்போதையும் விட (முன்பு வெளியே தெரியாதிருந்தது, இப்போதைய அவசர உலகில் விஷயம் வெளியே தெரிகிறது, எப்போதும் இதன் விகிதம் ஒன்றுதான் என்ற மாற்றுக்கருத்தும் உலவுகிறது. நான் அதை ஏற்கவில்லை) இப்போது உடலுறவு என்பது மிக எளிதில் நிகழ்ந்துவிடுகிறது. கல்யாணம் வரை காத்திருக்கும் பொறுமையும் கூட காதலர்களுக்குள் இல்லை. அது கட்டுப் பெட்டித்தனமாகவும் கூட பார்க்கப்படுகிறது. திருமணத்துக்கு வெளியேயான, திருமணத்துக்கு முன்னதான உடலுறவுகள், தோழமைக்குள்ளே நிகழும் உடலுறவுகள் என மிக அதிகம் கேள்விப்பட நேர்கிறது.

செக்‌ஷுவல் சுதந்திரம் என்பது என்ன? எது வரையில் அது இருக்கலாம்? அது எல்லை மீறும் போது இச்சமூகத்தில் நிகழப்போவதென்ன? என்றெல்லாம் ஆய்வுக்குள் செல்ல நான் விரும்பவில்லை, அதற்கான மேதைமையும் எனக்கில்லை. ஆனால், காதலுணர்வைப்போல, காம உணர்வையும் ஒரு அழகியலாக நான் காண்கிறேன். அன்பைப்போல அதைக் கைக்கொள்ளவும் ஒரு அடிப்படை நேர்மையும், ரசனையும் வேண்டும் என எண்ணுகிறேன். மரத்திலேயே கனியும் கனியைப்போன்றது அது! அப்படியான உறவுக்குப் பின்னால் கிடைக்கும் நிறைவு என்பதே ‘நிறைவு’!

சில காலம் முன்பு வரை, இருக்கிறது என நான் உணர்ந்த ‘கன்னிமை காத்தல்’ இன்றைய இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் ‘அவுட் ஆஃப் ஃபேஷன்’ ஆகிவிட்டதா? என நான் எண்ணியதுண்டு.

‘ஆதலால் காதல் செய்வீர்’ என்ற இந்தப்படமும் இதைச்சார்ந்த ஒரு கதையைத்தான் பேசுகிறது.

நான் மகான் அல்ல’ என்றொரு படம். காதல், ஃபேமிலி செண்டிமெண்ட், ஆக்ஷன் கலந்த ஒரு கமர்ஷியல் கதைதான். ஆனால் அதில் கதாபாத்திரங்களின் வடிவமைப்பும், இயல்புத்தன்மையும் மிகச்சிறப்பாக அமைக்கப்பட்டு, அப்படியொரு கமர்ஷியல் படத்துக்கு அழகியதொரு கலைத்தன்மை தரப்பட்டிருந்தது. பெரும்பாலான கதாப்பாத்திரங்கள் இயல்புக்கு மிக அருகில் இருந்தார்கள். அதைச் செய்தது சுசீந்திரன். அதுவே ஒரு படத்தின் அழகியலை நிர்ணயிக்கிறது என நான் நினைக்கிறேன்.
அதை விடவும் ஒரு பங்கு அதிகச் சிறப்புடன், ’ஆதலால் காதல் செய்வீரின்’ கதாப்பாத்திரங்களைப் புனைந்திருக்கிறார் சுசீந்திரன். இயல்பும், நேர்மையும், சமூகப்பொறுப்பும் கொண்ட ஒரு திரைக்கதை மற்றும் இயக்கம். இன்றைய சூழலில் பேசப்பட வேண்டிய ஒரு பொருள்!

சினிமா ஒரு பொழுதுபோக்கு ஊடகம் என்றே நம்புகிறேன் நான். இங்கே சமூகத்தை மாற்றும், திருத்தும், உட்கார வைத்து ’உழக்கு நிறைய’ அறிவுரை கூறும் வேலைகளுக்கெல்லாம் இடமில்லை என்றும் கருதுகிறேன். ஆனால் நல்ல கதைகள் வாசகனுடன், ரசிகனுடன் பகிர்ந்துகொள்ள எப்போதும் தன்னகத்தே ஒரு செய்தியை, உணர்வை பொதிந்து வைத்திருக்கின்றன. அத்தகைய ’ஸ்டஃப்’ இல்லாத கதைகள் வெற்று ஜிகினாக்களாகவே மதிக்கப்படும், மறக்கப்படும். இந்தப்படமும் அத்தகைய ஒரு உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிறது. உடலுறவைத் துச்சமாகக் கருதுபவர்களின் மனதில் ஒரு விநாடியாவது இந்தப்படம், ஒரு தயக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

ஒரு கல்லூரியின் மாணவ, மாணவிகள், பாலின ஈர்ப்புகள், எந்நேரமும் அவர்களின் பேச்சுக்குள், நடவடிக்கைகளுக்குள் நிறைந்திருக்கும் காதல், கலகலப்பு. அவர்களுக்குள் ஒரு காதல் ஜோடி, அவர்களின் குடும்பங்கள் எனத்துவங்கும் கதை, அவர்களுக்குள் நிகழும் எல்லை மீறல், அதன் பின் விளைவுகள், கதாப்பாத்திரங்களின் எதிர்வினைகள் என விரிகிறது. நல்ல படமா? போச்சுடா மெதுவே நகரும் சோகப்படமாக இருக்குமோ.. என்று நினைத்துவிடாதீர்கள்.. இந்தக் கதை சுவாரசியம் குன்றாமலும், இறுதி வரை விறுவிறுப்பாகவும் இந்தக்கதை சொல்லப்பட்டிருக்கிறது. இறுதியில் அத்தனை ரசிகர்களும் எழுந்து நின்று கைத்தட்டி தம் பாராட்டைத் தெரிவித்த நிகழ்வே இதன் சாட்சி!நிதர்சனமான, நெஞ்சைக் கனக்கச்செய்யும் முடிவு பலதரப்பட்ட எண்ணங்களை நமக்குள் ஏற்படுத்தி சலனப்படுத்துகிறது.

சிறந்த திரைக்கதை, இயக்கம். ஒளிப்பதிவு, எடிட்டிங், பின்னணி இசை, பாடல்கள், நடிகர்களின் சிறப்பான பங்களிப்பு என ஒவ்வொன்றும் நிறைவு. நடிக, நடிகையரின் பங்களிப்பை குறிப்பிட்டுப் பாராட்டத்தோன்றுகிறது, கதாநாயக, நாயகியரின் பெற்றோராக வரும் நான்கு கதாப்பாத்திரங்களையும் ஏற்றிருக்கும் நடிகர்களின் பங்கு அற்புதமானது. இன்னும் விளக்கிக்கொண்டு போனால், அது ஸ்பாயிலராக அமைந்துவிடுமென்பதால் முடித்துக்கொள்கிறேன். கூடுதலாக முடிவுக்குப் பின்னுமொரு முடிவாய் வரும் கடைசிப் பாடலும், அதன் படமாக்கலும் ஏற்படுத்திய இம்பாக்ட் எதிர்பாராத ஒன்று, அதிரச்செய்யும் ஒன்று.

ஆக, ‘ஆதலால் காதல் செய்வீர்’தவறவிடக்கூடாதவொரு படம்.

’ராஜபாட்டை’க்கு நான் எழுதிய காட்டமான விமர்சனத்தில் மாற்றமில்லை எனினும், அந்த ஒரு படத்துக்காக சுசீந்திரனின் திறனையே சந்தேகித்து நான் எழுதியமைக்காக, அன்கண்டிஷனல் வருத்தத்தை இங்கே பதிவு செய்வதில் எனக்கு எந்தத் தயக்கமுமில்லை. ஸாரி சுசி!
.

Wednesday, August 7, 2013

லிம்போ


ரொம்பவே நாட்களாகின்றன, ஒரு விறுவிறுப்பான கம்ப்யூட்டர் கேமை விளையாடி.! தற்போதைய வேலை, குடும்பச் சூழலுக்கு கம்ப்யூட்டர் கேமை நிறையவே மிஸ் செய்துகொண்டுதான் இருக்கிறேன். ஆயினும் அவ்வப்போது அவற்றை நலம் விசாரித்துக்கொள்வதுண்டு. 

ஒரு கேம் பிடித்துப்போவதும், பிடிக்காமல் போவதும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட ரசனை சார்ந்த விஷயம். டாப் செல்லராக, மிக பாப்புலராக இருக்கும் பல கேம்கள் எனக்குப் பிடிப்பதில்லை. கணினி வரைகலையின் வீச்சு, கதையம்சம், நிகழ்வுகள், கண்ட்ரோல்களின் பயன்பாடு என ஏராளமான அம்சங்கள் அதன் காரணமாக அமைகின்றன. எனது தேர்வு எப்போதும் கால் ஆஃப் ட்யூட்டி (Call of Duty), டோம்ப் ரைடர் (Tomb Raider), மெடல் ஆஃப் ஹானர் (Medal of Honor) போன்ற ஹை-எண்ட் கம்ப்யூட்டர் கேம்களாகவே இருக்கும். இவையே பிற அமசங்களை விட, அதிகபட்ச கிராஃபிகல் நுணுக்கங்களை துய்க்க விரும்பும் என்னைப்போன்ற ரசிகர்களின் பெரும்பாலான தேர்வாக அமைகின்றன. இந்த அனுபவத்தை எளிய வகை கேம்களான ப்ளாட்பார்ம் கேம்கள் தருவது சிரமமான விஷயம், அதை அங்கே எதிர்பார்ப்பதுமே கூட தவறான ஒன்றே! 

ஆனால், மிராக்கிள்ஸும் எப்போதாவது நிகழத்தானே செய்கின்றன..

180 MB அளவே உள்ள ஒரு சிறிய ப்ளாட்ஃபார்ம் வகை கேம் உங்களை வியக்கச்செய்ய முடியுமா? ஆக்‌ஷன், அட்வென்சர், ஸ்டன்னிங் கிராஃபிக்ஸ், எளிமை, நுணுக்கமான ஸ்ட்ராடஜியை, சிந்தனையைக் கோரும் சவால்கள், மிக எளிமையான கண்ட்ரோல்கள், ஒரு அழகான கதையம்சம், அதற்கொரு க்யூட்டான முடிவு என, நீண்டகால பசிக்கு ஒரு பெரிய விருந்தாகவே அந்த கேம் அமைந்தது எனக்கு.

அது லிம்போ (Limbo).பொதுவாக சிறிய வகை/போர்ட்/ப்ளாட்ஃபார்ம் வகை கேம்கள் குழந்தைகள் விளையாடத்தகுந்தவை என்ற என் எண்ணத்தையும் இது சிதறடித்தது. வெளியாகி இரண்டாண்டுகளுக்கு மேலாகியும், சமீபத்தில்தான் இதைக் கண்டெடுத்தேன். இவ்வளவுக்கும் இது ஒன்றும் இந்தத்துறை சார்ந்த லெஜண்ட் கம்பெனிகளுள் ஒன்றின் தயாரிப்பு அல்ல, டென்மார்க்கைச் சேர்ந்த புதிய குழுவின் (Independent Game Developers) தயாரிப்பு என்பது இன்னுமொரு ஆச்சரியம். இதன் வடிவமைப்பும், கேம் நிகழ்வுகளும், அந்த க்யூட் முடிவும் ஒன்றும் கேம் உலகுக்கு முற்றிலும் புதிதானவை அல்லதான். ஆயினும் அந்த பழகிய விஷயங்களுக்கு இவர்கள் தந்திருக்கும் முற்றிலும் புதிய பரிமாணம் நிச்சயம் ஒரு புதிய அனுபவம்தான். அதில்தான் லிம்போ டெவலப்பர்களின் புத்திசாலித்தனமும், தனித்துவமும் அடங்கியிருக்கிறது. ஆக, லிம்போ ரசிகர்களின் ஏகபோக வரவேற்பையும், கேம்களுக்கான ஏராளமான பரிசுகளையும், விருதுகளையும் அள்ளிக்கொண்டதில் எந்த வியப்பும் இல்லை.

ஹை-எண்ட் கேம்கள் விளையாட அவசியமான, காஸ்ட்லியான, மேம்படுத்தப்பட்ட கணினி உட்கட்டமைப்புகள் இதற்குத் தேவையில்லை என்பதால் எளிய கம்யூட்டர்களிலும் கூட விளையாட முடியும் என்பது சிறப்பு. வழக்கம்போல Xbox, PS வெர்ஷன்களும் இருக்குன்றன. ஆனால், இது குழந்தைகளுக்கானது அல்ல, கொஞ்சம் ஹாரர் எஃபெக்டும் நிகழ்வுகளில் இருக்கிறது.

கேம்களில் ஆர்வமும், அதே நேரம் சில பல காரணங்களால் தயக்கமும்,சந்தர்ப்பம் எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்கள் துவங்க வேண்டியது இங்கேதான், லிம்போவில் உங்களோடு பயணிக்கக் காத்திருக்கிறான் குட்டிப்பயல்!

----------

எக்ஸ்ட்ரா:

பெரியவர்களுக்காக மட்டுமின்றி என்னைப்போன்ற குட்டிப்பசங்கள் ரசிக்கிற மாதிரி வேற குட்டி கேம்ஸ் எதுவும் இருக்கிறதா என்று கேட்டால், சமீபத்தில் கொஞ்ச நாட்கள் என்னை அடிக்ட் செய்த இன்னொன்றை சஜஸ்ட் செய்கிறேன். ரொம்பவே பிளானிங் தேவைப்படுகிற கலர்ஃபுல் அட்வென்சர் இது, குட்டீஸ்க்காக!


கார்டன் ரெஸ்க்யூ (Garden Rescue2 CE)

*

Wednesday, July 24, 2013

மரியான் - விமர்சனம்

கடலை நேசிக்கும், கடலிலேயே வாழும் ஒரு கடற்புறத்து இளைஞன். அவனக்கொரு அழகிய காதலி. அவளது கடனுக்காக, கடலைப் பிரிய மனமில்லாது இரண்டாண்டுகள் தூரதேசம் போகவேண்டிய சூழல். அந்த தேசத்தில் உள்நாட்டு தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டு, காதலியை அடைய அவன் மேற்கொள்ளும் போராட்டம். இறுதியில் அவளை அடைகிறான்.

இந்தக் கதை, படிக்கிறப்போ எவ்வளவு அழகா இருக்குல்ல.. ஆனால் கதறக்கதற மொக்கை போட்டு அனுப்புகிறார் இயக்குனர் பரத்பாலா. பரத்பாலாவின் துவக்க கால விடியோ ஆல்பங்களை எல்லாம் பார்த்துவிட்டு, இந்த மாதிரி ஆட்கள் எல்லாம் ஏன் சினிமாவுக்கு வருவதில்லை என எண்ணியது இப்போதும் நன்றாக ஞாபகம் இருக்கிறது.

இது மரியானுக்கும், பனிக்கும் இடையிலான காதல் கதையா? சூடான் தேசத்தின் உள்நாட்டு போராட்டத்தின் கதையா? என்பதிலேயே இயக்குனருக்கு தெளிவில்லை போலிருக்கிறது. இது காதல் கதைதான். ஆனால் இடைவேளை வரை நீளும் காதல் காட்சிகளில் அழுத்தமான காதல் இல்லை. இது சூடான் தீவிரவாதக் கதை இல்லைதான். ஆனால் இரண்டாம் பகுதி முழுக்க டுப்டுப் என துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இலக்கில்லாமல் ஜீப்பில் அலையும் தீவிரவாதிகள்தான்.ஹீரோயிஸம் இல்லாத இலக்கியக்கதை போலிருக்கு, அதான் உதை வாங்கிக்கொண்டு அடைந்தே கிடக்கிறார் மரியான் என்றால், அதுவும் இல்லை, கிளைமாக்ஸ் வரும் வரை சும்மா இருந்துவிட்டு பின்பு, ஒண்டிக்கு ஒண்டி சண்டை போட்டுதான் தப்பிவருகிறார். அதெப்படி தீவிரவாதிகளுடன் ஒண்டிக்கு ஒண்டி? அதெல்லாம் நீட்டி முழக்கிச் சொல்லிக் கொண்டிருக்க முடியாது, அது அப்படித்தான்!

சிறுத்தைகள் கற்பனை, மீன் குழம்பு கற்பனை, தீவிரவாதிகள் கட்டாயப்படுத்தி மரியானை ஆடிப்பாட வைக்கும் பாடல் (?! நீங்கள் திருதிருவென முழிப்பது தெரிகிறது) என உணர்வுப்பிரவாகமாக இருக்கும் என இயக்குனர் நினைத்த காட்சிகளெல்லாம் படத்தில் காமெடிக் காட்சிகள் இல்லாத குறையைத் தீர்ப்பதாக அமைந்தது பரிதாபம்.

பாடல்களெல்லாம் பொருத்தமில்லாத இடங்களில் வந்து மிக செயற்கையான ஒரு உணர்வைத் தருகின்றன. நிகழ்வுகள் இம்பாக்ட் செய்யாத போது பின்னணி இசையும் பொருந்தாமல் நெளியச்செய்கிறது. தனுஷ், பார்வதியின் நடிப்பு, பரத்பாலா என்றால் விஷுவல்ஸ் என்ற எதிர்பார்ப்பை வீணடிக்காத அற்புதமாக விஷுவல்ஸ் மற்றும் அதன் ஒளிப்பதிவு என எல்லாமே விழலுக்கிறைத்த நன்னீராய்ப் போகின்றன.

குறிப்பாக பார்வதியின் அழகும், நடிப்பும் தனிப்பட்ட முறையில் என்னை அசத்திய விஷயங்கள். அவ்வளவு எக்ஸ்ப்ரஸிவான முகம், உணர்வுகளைக் கடத்தும் கண்கள் என அவரைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போன்ற உணர்வு. (இதுக்குப் பேர்தான் ஜொள்ளா?) அதுவும் அழுத்தமில்லாக் காட்சிகளில் பொருந்தாமல் வீணாய்ப்போவது சோகம்!

மரியானை, சமீபத்திய பெரிய ஏமாற்றம் என்றுதான் சொல்லவேண்டும்!

Tuesday, June 4, 2013

கலைஞர் 90 - தொடரும் சில கேள்விகள்


முந்தைய ‘கலைஞர் 90’ பதிவைப் படித்த நண்பர்களில் இரண்டு பேரிடமிருந்து அழைப்புகள். எங்கோ துவங்கி, பேச்சு வேறெங்கோ சென்றாலும் அவர்களின் அழைப்பின் நோக்கம் ஒன்றுதான். ’உங்களைப் போன்ற பொதுவான நண்பர்கள் ஏன் இது போன்ற சாயங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்? தவிர்த்திருக்கலாமே.. அதோடு கலைஞர் இப்படியான புகழுக்குத் தகுந்த நபர்தானா?’ -என்பதுதான் அது.

எனது ரசனையின் தளம் விரிவானது என நம்பிக்கொண்டிருக்கிறேன். நான் பல்வேறு விஷயங்களையும் துய்க்க விரும்புகிறேன், பகிர விரும்புகிறேன். ஆகவே, எனக்கு இது போன்ற குழு அடையாளங்களுக்குள் சிக்கிக்கொள்வதில் எப்போதும் விருப்பமிருந்ததில்லை. அதனால்தான் அரசியல் கட்சி சார்ந்து விரிவான எனது கருத்துகளை, ஏற்புகளை, மறுப்புகளை நான் பொதுவில் பேசியதில்லை. பேச விரும்புவதுமில்லை, அது என் தனிப்பட்ட விஷயம். ஆயினும் அதற்காக என்னால் முற்றிலுமான ஒரு முகமூடியை அணிந்துகொள்ள முடியாது. இந்த எண்ணம்தான், ஆங்காங்கே பெரியார் மீதான, கலைஞர் மீதான எனது எண்ணங்கள் இயல்பாக வெளியாவதை வலுவில் தடுக்காமல் செய்கிறது.

‘ட்டாக்டர் க்கலைஞர்.. வாழ்க!’ என தொண்டை வறளக் கத்தப்படும் கோஷ ஒலியாக என் குரல் இருப்பதை எப்போதும் நான் விரும்பியதில்லை. அந்தக் கட்டுரை கலைஞர் எனும் தனிப்பட்ட மனிதர் மீதான, அவரது தமிழ் எனக்குள் ஏற்படுத்திய ஆர்வத்தின் காரணமாக எழுந்த அன்பில் விளைந்த ஒன்றே! அந்தக் கட்டுரையில் கூட சமூக விழிப்புணர்வு, மறுமலர்ச்சி, தமிழியக்கம் போன்ற பாராட்டப்படவேண்டிய விஷயங்களுக்கு தனி மனிதராக அவரை மட்டுமே முழு காரணகர்த்தாவாக்கிவிடாமல், அதற்குக் காரணமான அண்ணன்மார்களில் முக்கியமான ஒருவராகவே அவரைக் குறிப்பிட்டு வாழ்த்தியிருக்கிறேன். அவரை விடவும் கருத்துச்செறிவும், சமூக அக்கறையும், தமிழுணர்வும் மிக்க படைப்புகளை தர இங்கு ஆளேயில்லை என்பது அறிவீனமாகும். ஆயினும், கலைஞர் மீது நான் கொண்டது, பசுமரத்தாணி போல இளமையில் ஏற்பட்ட உணர்வு. அப்போது, அது.. எனக்குக் கிடைத்தது, நாணயம் சுண்டப்பட்டபோது பூ விழுந்தது, அவ்வளவே! இதில் வியக்க ஒன்றுமில்லை. அதனால் எல்லாம் அவரின் அரசியலை எந்த எதிர் கேள்வியுமின்றி ஏற்றுக்கொள்ளும் மடமையை பெரியாரோ, தி.மு.கவோ எனக்குக் கற்பிக்கவில்லை.

தனியொருவர் என்ற முறையில் பார்த்தால், 1950களில் துவங்கி சமீப காலம் வரை, தமிழகம் கலைஞரின் பேச்சுக்கும், எழுத்துக்கும், நாடகம், சினிமா முதலான கலைப்படைப்புகளுக்கும் கட்டுண்டு, மயங்கியிருந்தது. இந்தக் கட்டுண்டிருந்தது, மயங்கிக்கிடந்தது என்பதே ஒரு அலங்காரம் கருதி எழுதப்படும் பிழைதான். அவரின் பேச்சும், எழுத்தும் சமூகத்தின் மொத்த சிந்தனையை பீடித்திருந்த தளையை உடைக்க உதவின என்றுதான் கூறவேண்டும். ஆகவேதான் ஆட்சிக்கட்டிலில் அவரை தமிழகம் அமரவைத்தது என நான் எண்ணுகிறேன். தனி மனிதனாகச் சரி, ஒரு ஆட்சியாளராக கலைஞர் எவ்வாறானவர்? அதைப் பற்றி உன் கருத்தென்ன? சரி, ஒரு நீண்ட விமர்சனத்தைத்தான் வைப்போமே, வேண்டாம் எனினும் தொலைபேசியில் அழைத்தாவது ’அதைப்பேசினால், இதையும்தான் பேசவேண்டும்’ என்று குட்டுகிறார்களே என இதை எழுதத் துவங்குகிறேன். யாரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களில்லை, கலைஞருக்கு மட்டும் என்ன விதிவிலக்கு?


எதையெதையெல்லாம் எழுதவேண்டும்? எங்கு துவங்கலாம்?

முதல் கேள்வி, கலைஞரின் பேச்சும், எழுத்தும், படைப்புகளும் தமிழ்ச்சமூகத்தின் மொத்த சிந்தனையை பீடித்திருந்த தளைகளை உடைத்தனவா? இல்லையா? அதற்கான பரிசுதான் மக்கள் அவரை ஆட்சி பீடத்தில் அமர்த்தி அழகு பார்த்ததா? இல்லை, பின்பு எம்.ஜி.ஆர் நிகழ்த்தியதைப் போன்ற ஒரு கவர்ச்சி, மாய பிம்பத்தைத்தான் அப்போதைய அவரின் பேச்சும், எழுத்தும் மக்களிடையே அவருக்கு உருவாக்கித்தந்ததா? அந்த விஷயத்திலும் எம்.ஜி.ஆரின் முன்னோடிதான் கலைஞரா? அதற்காகத்தான் எம்.ஜி.ஆரைப் போலவே அவருக்கும் ஆட்சி வாய்ப்பு எனும் மரியாதை வழங்கப்பட்டதா? கலைஞரின் எழுத்தும், பேச்சும் மக்களைக் கவர்ந்து ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் மட்டுமே உருவானதா? அல்லது அதில் சமூக விழிப்புணர்வும், விடுதலையும், வளமான எதிர்காலம் நோக்கிய கனவும் மட்டுமே நோக்கமாக இருந்ததா? அல்லது இரண்டுமேவா? எது சரி? ஆட்சி வாய்ப்பு வழங்கப்பட்டதும் சுயமரியாதை மிக்க, வளமான தமிழ்ச்சமூகம் என்ற கொள்கை அவருக்குப் முக்கியமாக இருந்ததா? இல்லையா? அல்லது முதலில் இருந்து பின்னர் தேய்ந்ததா? இருந்ததாயின், இன மான உணர்வையே நோக்கமென கொண்ட அவரை இலவச தொலைக்காட்சிப்பெட்டிகளை வழங்கச்செய்து, தமிழரின் மானத்தை விலைபேசச் செய்த காரணி எது? இதெல்லாம் இல்லை, அவரது நோக்கம் கடல் கடந்தும் கடாரம் வென்ற பழம் சக்கரவர்த்திகளுக்கு இணையாக, பன்னெடுங்காலம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து, புகழ் குன்றாமல் வாழ்ந்த செங்கோலன் எனும் பெயர் மட்டுமேதான் எனலாமா? அது சரியா? சரியெனின், வரலாறெங்கும் அவ்வாறான தலைவர்கள் இருந்திருக்க, அந்த எண்ணம் முற்றிலும் தவறானதா? தமிழ்ச்சூழலில் நல்லாட்சி என்பதென்ன? அதை எப்படியெல்லாம் வரையறுக்கலாம்? இந்திய மேலாண்மையின் ஒரு பகுதியான மாநிலத்தின் ஒரு முதல்வர் என்னென்னவெல்லாம் செய்யமுடியும்?

உண்மையான விவசாய மலர்ச்சி, உட்கட்டமைப்புப் பெருக்கம், அறிவியலோடு இயைந்த வளர்ச்சி, தொழில்வளர்ச்சி, கல்வி, வேலைவாய்ப்புப் பெருக்கம், உற்பத்திப்பெருக்கம், கட்டுக்குள்ளிருக்கும் விலைவாசி, மக்கள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அண்டை மாநிலங்களோடு நல்லுறவு, மத்திய அரசோடு நல்லுறவு, நீர், மின்சாரம் போன்ற அத்தியாவசிய வளங்களைப் பேணுதல் மற்றும் அவற்றை தடையறத்தருதல்.. இவை முதலாக இன்னும் நீளும் ஓர் பட்டியலைத் தயார் செய்யலாமா? இதைக் கலைஞர் அரசு கசடறச் செய்ததா? இல்லையா? அல்லது பின் வந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அரசுகளாவது செய்தனவா?

முதல் கேள்வியில் தளைகள் எனப்பட்ட சாதி முன்னிறுத்தும் ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமை, பெண்ணடிமைத்தனம், மலிந்த மூடநம்பிக்கைகள், முதலாளித்துவம், கல்வியின்மை போன்ற காலத்தால் முந்தைய முக்கியப் பிரச்சினைகளுக்காக போராடியவர்கள் யாவர்? அவர்களுள் கலைஞரின் பங்கு யாது? அவரைப் பாராட்டுகையில் அதை எந்த அளவில் கருத்தில் கொள்ளவேண்டும்? அப்படியான விஷயங்களைக் காலத்தால் முந்தைய அவலங்கள் என நான் குறிப்பிடுவதைப் பார்த்து, ‘அடேடே.. அப்படி இல்லை தம்பி!’ என என்னை நோக்கிச் சிரிப்பவர்கள் யாரார்? நன்மை செய்யாவிட்டாலும் தவறில்லை, அமைதியாகவேனும் இருக்கலாமே என்று கூட இல்லாமல் அவ்வாறான சாத்தானின் குட்டிகளை மரணிக்கவிடாமல் பேணிப் பாதுகாத்து, அவற்றுக்கு அவர்கள் மட்டுமின்றி, நம்மையும் நாளை துடிக்கத் துடிக்க உணவாகத் தரக் காத்திருப்போர் யாரார்?

தவிர, இலவசங்கள், மது விற்பனையெனும் ஆட்சியின் ஆதாரம், மலிந்து பெருகிய ஊழல் போன்ற அருவருப்பான விஷயங்கள் தமிழகத்தில் எப்போது துவங்கின? எப்போது பெருகின? அதில் கலைஞருக்கு பங்கு இருக்கிறதா? இல்லையா?

கலைஞர் அவர்தம் குடும்பத்தினருக்கு ஏற்படுத்தித்தந்த அரசியல் வாய்ப்புகள் தவறானதா? எது வரையில்?

அவருக்கிருந்த வாய்ப்புகளிலிருந்து கலைஞர் இது வரை தந்த ஆட்சியிலிருந்து, முற்றிலும் வேறான நல்லாட்சியை வழங்கியிருக்க முடியுமா? அல்லது, அதே வாய்ப்புகளால் முற்றிலும் மோசமான ஆட்சியைக் கூட வழங்கியிருக்கக் கூடுமோ? போராடித்தான் அதைத் தவிர்த்தாரா? அல்லது, அவருக்கிருந்த கவர்ச்சிகரமான போட்டிகளை சமாளிப்பதிலேயே கணிசமான காலத்தை இழந்தாரா?

தமிழகம் இங்கே இத்தனை விஷயங்களுக்காகக் காத்திருக்க, அதனூடே நம் தலைவர்கள், ஈழத்துக்கு எதிரான இந்தியத்திருநாட்டின் பகுதியினராய் இருந்துகொண்டு, அருகிருந்தும் அந்நியமாகிப்போன நம் ஈழத்துக்காக என்னென்னவெல்லாம் செய்திருக்க முடியும்? யாரெல்லாம் என்னென்ன செய்தனர்? கலைஞர் செய்தது என்ன? அது போதுமானதா?

காமராசரைப்போல ஒரு சுயநலமில்லா முதல்வர் இனி சாத்தியமா? கலைஞரின் ஆளுமையோடு, அவ்வாறான சுயநலமின்மையும் இருந்திருந்தால் தமிழகம் இன்று சுபிட்ச பூமியாக இருந்திருக்குமா? அல்லது அதற்காக கலைஞரையும் நாம் காணாமல் போகச்செய்திருப்போமா? சமூக நன்மைக்காக அப்படிக் காணாமல் போனாலும் துன்பமில்லை என்பதுதானே தர்மம்? அந்த தர்மம் இன்று சாத்தியமான ஒன்றா? அல்லது எத்தனை தூரம் அதற்கு அருகில் ஒரு நிஜ முதல்வர் செல்ல இயலும்? ஒருவேளை கலைஞர் இருந்திருக்காவிட்டால், அந்த இடத்திற்கு, அப்படியான ஒரு தேவதூதனைக் நாம் கண்டடைந்திருப்போமா?

விமர்சனம் எழுத அமர்ந்தால் என்ன இது, இத்தனைக் கேள்விகள் எழுகின்றன? பலவற்றுக்கு பதில் தெரியவில்லை, சிலவற்றுக்காவது எனது எண்ணங்களைப் பதிலாக எழுத முடியுமாயினும் அது முழுமையாக இராது என இப்போது தோன்றுகிறது. அத்தகைய ஒரு நீண்ட கட்டுரையை தகுந்த தரவுகளோடு எழுத எனது வாசிப்பனுபவத்தால் நிச்சயம் இயலாது. பெரிய வாசிப்பு மட்டுமின்றி, அரை நூற்றாண்டுக்கும் மேலான தமிழகத்தை அருகிருந்து அக்கறையுடன் பார்த்த அனுபவம், பொறுப்புணர்வு, சமூக நோக்கு, நல்லெண்ணம், ஆய்வறிவு, வரலாற்றறிவு, உளவியல் ஞானம், மொழியுணர்வு போன்ற பல்வேறு குணங்களும் ஒருங்கே அமையப்பெற்ற ஒரு அறிஞர்தான் இத்தகைய கேள்விகளுக்கெல்லாம் பதிலான கலைஞர் மீதான விமர்சனத்தை சரியான முறையில் வைக்கமுடியும் என நினைக்கிறேன்!

நிச்சயம் கலைஞர் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரில்லைதான், ஏற்கனவே சொன்னது போல.. ஆனால் அதைச்செய்ய நான் சரியானவனில்லை என்பதுதான் என்னுள் தோன்றிய இத்தனைக் கேள்விகள் சொல்கின்றன!
எந்த ஒரு சாமானியனுக்குமே அவனளவில் யார் மீதும், எதன் மீதும் விமர்சனம் என்ற ஒன்றுண்டு. அதைப் பகிராமல், ஒரு வியப்பை ஏற்படுத்தித் தப்பித்துக்கொள்ளும் மனோபாவம் இக்கட்டுரையின் நோக்கமில்லை. நிஜமாகவே ஏதோ ஒரு போதாமை எனைத் தடுக்கிறது என அந்த தொலைபேசி நண்பர்களும், அதே போன்ற ஒத்த சிந்தனை கொண்டவர்களும் நம்பினால் போதும்.

நன்றி.
.