Sunday, January 27, 2013

விஸ்வரூப ட்விட்ஸ்

*
விஸ்வரூபம் மீதான தடை அவசியமற்ற ஒன்று. கண்டிக்கப்படவேண்டியது. -அமித் கன்னா
*
தணிக்கைக் குழுவின் சான்று பெற்ற ஒரு படத்தை மக்கள் பார்க்கவிடாமல் செய்யப்படுவது தவிர்க்கப்படவேண்டும். -மகேஷ் பட்
*
படத்தைப் பார்த்தபின்பு அவசியமெனில் அதை நிராகரிக்கும் முடிவை மக்கள்தான் எடுக்கவேண்டும், தனிப்பட்ட அமைப்புகள் அல்ல! -சேகர் கபூர்
*
சான்று பெற்ற ஒரு படத்தை தடைசெய்ததன் மூலம், தமிழக அரசு, CBFCயின் அவசியத்தை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. -மனோஜ் பாஜ்பாய்
*
ஜனநாயகத்தின் மீதான வன்முறை இது. -தனுஜ் கர்க்
*
தமிழக அரசின் செயல்கண்டு அதிர்ந்துபோயிருக்கிறேன். -மதுர் பண்டர்கர்
*
தணிக்கைச்சான்று பெற்ற ஒரு படத்தைப் பார்க்காமலேயே எப்படி அது ஒரு இனத்துக்கு எதிரானது என்ற முடிவுக்கு வரமுடிகிறது சிலரால்? அவர்களுக்கு ஒரு மாநில அரசும் எப்படித் துணைபோகமுடியும்? -அனுராக்
*
தமிழ் சினிமாவை இருளுக்குள் தள்ளியிருக்கிறது தமிழக அரசு. -சித்தார்த்
*
CBFCஐ தமிழக அரசு நிராகரிக்கிறதா? அல்லது சட்டம் ஒழுங்கைக் கைக்கொள்ளும் திராணியில்லையா? -அனுபவ் ஸின்ஹா
*
இதை ஏற்கமுடியாது. இது ஒரு கலாச்சார வன்முறை. -பிரகாஷ் ராஜ்
*
அப்பட்டமான படைப்புச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல் இது. என்ன மாதிரியான சுதந்திரம் நமக்கு இருக்கிறது? -மாதவன்

*****

@kanapraba: அரசின் தணிக்கைச் சான்றிதழே அங்கீகரித்த பின்னர் எதற்கு நீதிமன்றத் தடை, இஸ்லாமிய அமைப்புக்களின் வேண்டுகோளுக்கிணங்க 2 வார தடை என்று அரசாணை? அப்படியென்றால் வெத்துவேட்டு தணிக்கைக்குழுவையே கலைத்துவிடலாமே?
@writernaayon: விஸ்வரூபம், தீவிர வாதநோயால் முடங்கிக்கிடக்கிறது.
@iVenkadesh: மனைவி:என்னங்க படம் டைடில் போட்ட உடனே முடிஞ்சிடிச்சி. கணவன்:அது விஸ்வரூபம் எடிட் பண்ணின பிரிண்டாம். மனைவி:???
@NaughtyGann: நாத்திகனாய் இருப்பது எவ்வளவு கடினம் என்று விஸ்வரூபம் விஷயத்திலிருந்து புரிகிறதா?!
@Kaniyen: போற போக்கைப்பார்த்தா கமலே விஸ்வரூபம் படத்தை திருட்டு விசிடியில வெளியிட்டுடுவார் போல..
@cablesankar: நான் ஆந்திரா போயாவது விஸ்வருபம் படம் பார்த்தே தீருவேன்.
@Venkatgangulian: விஸ்வருபம் படத்தை தடை செய்ததை விட சில முஸ்லிம்கலின் வீர வெட்டி வசனம்களை தான் தாங்க முடியவில்லை.
@vnashankar: இன்னும் எவன் எவனெல்லாம் எதிர்ப்பு காட்டனுமோ இப்பயே க்யூல வந்து நில்லு... சும்மா வாரத்துக்கு ஒவ்வொருத்தனா வந்துகிட்டு...
@amalan_a: முதல்ல ஜாதி சங்கத்தையும், மத சங்கத்தையும் Ban பண்ணனும், இம்சப்பா..
@iDookudu: படத்த பாக்காம எந்த கருத்தும் சொல்ல முடியாது! முதல்ல படத்த வெளிவிடுங்கப்பா.
@tubelightbala: நல்லா பாருங்கய்யா.. கலைஞரு விஸ்வரூபம் நல்லாருக்குனு எதுவும் சொல்லிருக்காரானு.. தமிழக அரசு தடைனா டவுட்டா இருக்கு.
@meyrin1217: முஸ்லிம் இயக்கத்தலைவர்கள் விஸ்வரூபம் படம் பார்த்தார்களாம். அவர்களுக்கு மட்டும் ஸ்பெஷல் காட்சியா?
@itisprashanth: லாஸ் ஏஞ்சல்ஸ்-ல இருந்து திரும்பி வரவேண்டாம். அங்கேயே செட்டிலாகிடுங்க கமல் சார். இவனுகளுக்கு அலெக்ஸ்பாண்டியன் தான் லாயக்கு.
‏@iqbalselvan_ : என்னது விஸ்வரூபத்தை தடை பண்ணிட்டாங்களா ?! அப்பவே சொன்னேன் ஆப்கானிஸ்தான் வேண்டாம், அமஞ்சிகரை போதும்ன்னு !
‏@iVenpu: கொய்யால‌.. இனிமே எல்லா ப‌ய‌லுவ‌ங்க‌ளும் விக்ர‌ம‌ன் மாதிரி வில்ல‌னே இல்லாம‌ ல‌ல‌லா ல‌ல‌ல‌ ல‌லலான்னு ப‌ட‌ம் எடுங்க‌ய்யா. :)
@udanpirappe: நம்மூர் அமைப்புகளுக்கு காவிரி பிரச்சினைக்கும்… கரன்ட் பிரச்சினைக்கும் போராடத் தெரியாது… #சினிமா மட்டுமே குறி.
@rajarajan1975: முன்னாடி நம்ம கேப்டன் விஜயகாந்த் அழிச்ச தீவிரவாதிகள எல்லாம் புத்த மதத்தை சேர்ந்தவங்களா?
@alaipesi: எங்களை மோசமாக சித்தரிக்கிறார்கள்ன்னு மாமியார்கள் சங்கம் சீரியல்களுக்கு எதிராக ஏன் கண்டனம் தெரிவிக்கக்கூடாது...?
@iqbalselvan_: திரைப்படங்களை எதிர்ப்பதன் மூலம் மதவாதிகள் விளம்பரம் தேடுவதோடு, ஒட்டு மொத்த சமூகத்தை பிரதிப்பலிப்பதாக பம்மாத்துகின்றார்கள் ..

*******

விஸ்வரூபம் படம் குறித்து Twitter தளத்தில் பகிரப்பட்டிருந்த சில எண்ணங்களே மேலே தொகுக்கப்பட்டவை.

ஆந்திரா சென்று படம் பார்த்துவந்த கேபிள்சங்கரின் விமர்சனம் இது.

வேலை விஷயமாக சில நாட்களாக ராய்பூரிலிருக்கும் நான் முன்னதாக ஹிந்தி வெர்ஷன் பார்த்துவிடலாம் என்று மகிழ்ந்திருந்தேன். பேட் லக்! பிப்.1ல்தான் ஹிந்தி வெர்ஷன் ரிலீஸ் என்பது ஏற்கனவே முடிவுசெய்யப்பட்ட விஷயமாம்.

படம் உண்மையில், இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளின் பின்னணி பேசப்படுவதன் மூலம் இஸ்லாத்துக்கு ஆதரவானதாகவும், பதிலாக அமெரிக்க ராணுவத்தை விமர்சிப்பதாகவும்தான் அமைந்திருக்கிறது. நியாயப்படி பார்த்தா அமெரிக்காதான் இந்தப்படத்தைத் தடைசெய்யவேண்டும் என்பதாக ஆந்திர, மலையாள தேசங்களுக்குள் ஊடுருவி விஸ்வரூபம் பார்த்துவந்த சில நண்பர்கள் கருத்துகள் பகிர்ந்தனர். அரசியல் பின்னணிகளுக்கு முன் தனிமனிதன் நசுக்கப்படுவதெல்லாம் மிகச்சாதாரண விஷயம்தான் இல்லையா? கமலுக்காவது ஏதோ நாலு பேர் சப்போர்ட் பண்ணவாவது செய்கிறோம்.

நாஞ்சில்நாடனின் ‘காவலன் காவான் எனின்’ கட்டுரைதான் ஞாபகத்துக்கு வருகிறது. தண்ணீருக்கு மேலே தெரியும் பனிக்கட்டியின் அளவை ஒத்தவைதான் இந்நிகழ்வுகள் எல்லாம், பெரிதல்ல. ஆனால் தண்ணீருக்கு கீழே பனிமலை காத்திருக்கிறதா இந்த சமூக அமைப்பை மூழ்கடிக்க? பெரும் அச்சமூட்டுவதாக இருக்கிறது இது போன்ற எண்ணங்கள்.

*

Monday, January 21, 2013

பாப்கார்ன் தின்பவர்கள்

புத்தக விழா

சென்னையின் பெருமைக்குரிய அடையாளங்களுள் ஒன்றான கோலாகலமான ஜனவரி புத்தகத்திருவிழாவைத் தவறவிடாமல் இந்த ஆண்டும் சென்று வந்தாயிற்று, நேற்று. பல இணைய நண்பர்களும் புலம்பிக்கொண்டிருப்பதைப் போலவே சென்ற சில ஆண்டுகளாக வாங்கப்பட்ட புத்தகங்களையே இன்னும் வாசித்து முடித்தபாடில்லை, மேலும் பொருளாதாரச் சிக்கல் எனினும் போகாமல் இருக்கவே முடியாது என்பதான விஷயம் இது. வழக்கம்போலவே எந்தப் புத்தகமும் வாங்கக்கூடாது, சும்மா வேடிக்கை மட்டுமே என்று தீர்மானம் செய்துகொண்டு போனாலும் அங்கு போனதும் வழக்கம் போலவே உள்ளுக்குள்ளிருக்கும் இலக்கிய வாசகன் முழித்துக்கொண்டு வழக்கம் போலவே நம் பர்ஸை பொத்தல் போடுவது இவ்வாண்டும் நடந்தது.


என் பிரியம், என் ஆதர்சம் என்றெல்லாம் டுபாகூர் விட்டுக்கொண்டிருந்தாலும் அந்த நான்கைந்து எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களில் படித்தவை என்று கணக்குப் பார்த்தால் கால் பாதம் கூட நனையாது. என்றைக்கு முழுகி முத்தெடுக்க?

ஒவ்வொரு கடையாய் ஏறி இறங்குவது சாத்தியமே இல்லாமல் போய்விட்டது, அவ்வளவு பிரமாண்டம், அவ்வளவு கூட்டம். குறைந்த பட்சமாய் சந்தைக்குள் ஒரு தெருவையும் விடாமல் ஸ்டால்களின் பெயரை மட்டும் வாசித்துக்கொண்டே சுற்றினேன். முடிவில் நாஞ்சில் நாடன், கிரா ஆகியோரது நான்கைந்து கட்டுரை மற்றும் சிறுகதைத் தொகுப்புகளையும், முத்து காமிக்ஸின் NBSயும் எடுத்துக்கொண்டு, மக்கள் வெள்ளத்தில் நீந்தி வெளிவருவதற்குள் 3 மணி நேரத்துக்கும் மேலாகிவிட்டது. 

இந்த பாப்கார்னை கண்டுபிடித்தவனை என்ன செய்தால் தேவலைனு யோசிக்கணும். தெர்மோக்கோல் போல அது ஒரு பண்டம், அதையும் மெகா சைஸ் அட்டைப்பெட்டிகளில் வாங்கிக்கொண்டு ஏதோ பாப்கார்ன் தின்பதற்கென்றே பிறப்பு எடுத்தது போல சிலர் நடந்துகொள்வதைப் பார்க்கும் போது எரிச்சல் மண்டுகிறது. அந்தப் பெட்டிகளோடுதான் காட்சியரங்கத்துக்குள் நுழைகிறதே! (தியேட்டர்களிலும் இதே நிகழ்வுதான்! சமயங்களில் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு படம் முடியும் வரை சவுக்கு, சவுக்குனு இவர்கள் தரும் ஸ்பெஷல் எஃபெக்ட் ஒலியமைப்புடனேதான் முழு படத்தையும் பார்த்தாகவேண்டும்). தவிர கசாமுசாவென குழந்தைகள் கூட்டம்... என்னவோ போங்க!

இந்த முறை, அப்படியே சந்தைக்கு இடம் பார்த்தவர்களுக்கு ஏதாவது அவார்டு குடுத்தால் தேவலை. ஸ்டால்களுக்கான இடம் தாராளமாய் இருந்ததோ என்னவோ.. வாசல், பார்க்கிங், டிக்கெட் கவுண்டர் என பிற எல்லாவற்றிற்கும் அடுத்தவன் முதுகை இடித்துக்கொண்டே பயணிக்கவேண்டியிருந்தது. இதற்கு ஆங்கிலோ-இந்தியன் பள்ளியே சிறப்பு என எண்ணுகிறேன். பார்ப்போம் அடுத்தாண்டு!

************

பொங்கல் விடுமுறை

வழக்கம் போலவே குடும்பத்தோடு கொண்டாட்டம் என மகிழ்வாக கழிந்தாலும் வடக்குக்குளத்தில் தண்ணீர் பெருகாமலிருந்துவிட்டதால் ‘அயிரை’ மீன் துள்ளவில்லை. அது என் தனிப்பட்ட சோகம். இனி அடுத்தவருடம் வரை காத்திருக்கவேண்டும்! ட்ரிப்பின் ஹைலைட், குட்டி ஆதி (தம்பி மகன்) யின் அட்டகாசங்கள். 

“ஆஜ்ஜி, ஆஜ்ஜி.. பெர்பாவுக்கு இஞ்சின் குடுக்குணும்.. சீக்ரம் கொண்டாங்க.. நா புடிஜ்ஜிகிறேன். அழுனாலும் விடக்குடாது”

கல்யாணத்தைப் பற்றி நமக்கு ஏராளமான மாற்றுக்கருத்துகள் உண்டு. ஆனால் வாழ்க்கை இன்பத்துக்குள் துன்பத்தையும், அதற்குள் இதையும் பொதிந்தேதான் தருகிறது. இரண்டு வயதிலிருந்து 6 வயது வரை குழந்தைகள் தரும் மழலை இன்பத்துக்கு முன்னால் இன்னும் ரெண்டு கல்யாணத்தைப் பண்ணிக்கொண்டு இன்னும் இரண்டு பெண்களை சமாளிக்கலாம்தான் போல! வேறு வாக்கியத்தில் சொல்லவேண்டுமானால் அந்தக் கொடுந்தவத்துக்கான குட்டி வரம் என்றும் கொள்ளலாம்!

சுபாவின் பாடு கொஞ்சம் திண்டாட்டமாக போய்விட்டது. பொம்மைகள், விளையாட்டு என எல்லாவற்றிலும் அவன் பிடிவாதத்துக்கு முன்னால் ஒரு வயது மூத்தவன் என்ற முறையில் இவனே எல்லாவற்றிலும் விட்டுக்கொடுக்கவேண்டியதாக இருக்கிறது. ஆயினும் அந்த மனம் இன்னும் வரவில்லை. தடுமாற்றம்தான். கோபமும், அழுகையுமாய் விட்டுக்கொடுத்தான். அதே நேரம் அவனைக் கண்டிக்கவும் விடவில்லை. அவனைக் கண்டித்தால் இவனுக்குக் கோபம் வருகிறது. ஒரு முறை அவன் அடித்துவிட்டதை தாங்கிக்கொண்டான். சரி, கொஞ்சம் பொறுப்போடு நடந்துகொள்கிறானா இருக்கும் என்று நினைத்தேன். பிறகு கேட்டபோது சீரியஸாகவே சொன்னான்,

“என்கிட்ட ஸ்பைடர்மேன் பவர் இருக்கு, அடிச்சா வலிக்காது”

சுத்தம்!

*************

விஸ்வரூபம்

கமல்ஹாஸன் கூட இவ்வளவு சிந்தித்திருப்பாரா தெரியவில்லை, அவ்வளவு சிந்தனை. அவர் மட்டும், ’பரவாயில்லை, என்ன பண்ணியிருக்கலாம்னு நீங்க நினைக்கிறீங்க? வந்து கொஞ்சம் அட்வைஸ் பண்ணுங்க..’ என்று சொல்லியிருந்தால் போச்சு, மனுஷன் உயிர் பிழைப்பது கஷ்டம்தான். ஏதாவது கருத்து சொல்லியே ஆகவேண்டும் என்பது போல அரிப்பு. அடக்கு, அடக்கு என அடக்கிக்கொள்கிறேன்! படம் வந்தபிறகு நேரமிருந்தால் மொத்தமாக பேசிக்கொள்வோம். அலுவலகப் பயணமாக சத்தீஸ்கர் செல்வதால் துவக்க நாட்களில் இங்கே இருக்கமாட்டேன் என நினைக்கிறேன். வந்துதான் பார்க்கவேண்டும். இல்லாவிட்டால் இந்தி விஸ்வரூபத்துக்கு விமர்சனம் போட்டால் போச்சு! அதை ஏன் விட்டுவைக்கணும்?

*************

எழுத்து

எப்போதாவது போனால் போகிறது என்று பழைய வாசகர்கள் (?), “என்னாச்சு, சிறுகதை இலக்கியத்தை தூக்கி நிறுத்திவிட்டுத்தான் மறுபேச்சுனு சபதம்லாம் எடுத்தாமாதிரி இருந்தது. இப்போ இங்கன பத்திக்கே வழியைக் காணோமே..” என்று குசலம் விசாரிக்கிறார்கள். உண்மையும் அதுதானே.. பத்தி எனும் எளிய வடிவமே நமக்கு தண்ணி காண்பிக்கையில், சிறுகதையையெல்லாம் எங்க தூக்கி, எங்க நிறுத்த.. முடிஞ்சா செய்யமாட்டோமா? சென்ற சில ஆண்டுகளில் தலைகீழாக மாறிப்போய்விட்ட பணிச்சூழல், பொருளாதாரச் சூழல்! தூரத்தில் மாற்றங்கள் கண்களில் தென்படுகின்றன. கிடைக்கும் பொழுதுகளில் எழுத்துப்பணியையும் தொடர்வதாக உத்தேசம். பிறகு, நீங்களும்தான் என்ன செய்வீர்கள், பாவம்!

Monday, January 7, 2013

பிரளயம்


பயமும், துடிப்பும் உச்சத்திலிருக்க கையில் குழந்தையை வைத்துக்கொண்டு வீட்டையே பார்த்துக்கொண்டிருந்தேன். அருகே, என் மனைவி தரையில் விழுந்துகிடந்தாள்.

எங்கும் மரண ஓலம்.

இது கனவா? என்னால் சிந்திக்கவே முடியவில்லை. தெருவில் நிற்பது மட்டும் பாதுகாப்பான செயலா என்பதெல்லாம் எனக்கு உறைக்கவில்லை. அரை மணி நேரத்துக்கு முன்னால் வீடு குலுங்கிய போது செல்போனையும், பர்ஸையும் தூக்கிக்கொண்டு தெருவுக்கு ஓடிவந்தால் போதும், இந்த பூகம்பம் பணிந்து திரும்பிவிடும் என்றுதான் எண்ணியிருந்தேன் எல்லோரையும் போல.

இப்போது என் முன்னே என் வீடு இல்லை. ஒரு பிரம்மாண்டமான கான்க்ரீட் குப்பைதான் கிடந்தது. எந்தக்கட்டிடமும் சாய்ந்து விழமுடியாத ஒரு பகுதியாக தேடி ஒதுங்கி நின்றேன். திடும் திடுமென பேரொலிகள் தூரத்திலும், அருகிலும் கேட்டவண்ணமிருந்தன. தரையும் அமைதியாக இல்லை. ஒரு உலுக்கலில் கீழே விழுந்தேன். எந்த நேரமும் பெரும் பிளவுகள் தோன்றலாம், யாவற்றையும் விழுங்கிவிடலாம். இதுவரை பூகம்பம் என்பது சற்றே பரபரப்பையும், கதை பேச ஒரு சுவாரசியமாகவும்தான் இருந்து கொண்டிருந்திருக்கிறது. பூகம்பமும், சுனாமியும் ஜப்பானுக்கும், இந்தோனேஷியாவுக்கும் சொந்தமானது. நமக்கு அது ஒரு செய்தி மட்டுமே. திடுமென சூழல் திரிந்துவிடுகையில், எதைச்செய்வது, அடுத்து என்ன என்பதையே சிந்திக்க இயலாத அறியாமையில்தான் இருந்துகொண்டிருக்கிறோம். குடிக்கும் ஒரு குவளை நீருக்கு, இந்த உலகையே சகல உயிரினங்களோடு சேர்த்துக் குடித்துவிடும் சக்தியிருக்கிறது என்பதை மனம் எப்போதும் உணர்வதேயில்லை. தெருவிலிருந்த வீடுகள் அத்தனையும் தரைமட்டமாயிருந்தன. தெருவென்ன? கண்கள் காணும் தொலைவு வரை இருந்த எந்தக் கட்டிடங்களையுமே காணவில்லை. உள்ளிருந்த அத்தனை மனிதர்களையும், பொருட்களையும் விழுங்கிக்கொண்டு அதுவரை வாழிடமாக இருந்த கட்டிடங்கள் அனைத்தும் சமாதியாகியிருந்தன.

என் கட்டிடத்திலிருந்த ஓரிருவர் என்னருகே விழுந்துகிடந்திருந்தனர். சிலர் உள்ளே மாட்டிக்கொண்டுவிட்டவர்களை மீட்கும் முயற்சியில் இருந்ததைப்போல உணர்ந்தேன். எதுவுமே கண்களுக்குச் சரியாக புலப்படவில்லை. அவர்கள் அப்படிச் செல்வது அவர்களுக்கும் ஆபத்தாக முடியும் என்பதை கத்திச்சொல்ல நான் நினைத்தாலும் அதைச் சொல்லும் நிலையிலும் நான் இல்லை, அதை அவர்கள் கேட்கும் நிலையிலும் இல்லை.

செல்போன் வேலை செய்யவில்லை. எங்கள் தெருவிலிருந்தே வெளியே மீளமுடியாத நிலையில் சுற்றிலும் இடிபாடுகள். கண்களை மறைக்கும் புகை, தூசு மண்டலம், சூறைக்காற்று. எங்கே செல்வது? அரசாங்கம் ஏதும் மீட்புப்பணியில் ஈடுபடும். அதுவரை காத்திருக்கவா? அல்லது எங்கே செல்வது? வேளச்சேரியிலிருக்கும் நண்பன் வீட்டுக்கு நடந்தே போய்விடலாமா?
 
இந்தப் பேரழிவின் பிரம்மாண்டம் புத்தியில் உறைத்தது. இந்தத் தெரு மட்டும்தான் மூழ்கிப்போனதா? இந்தப் பகுதியேவா? இல்லை இந்த மொத்த சென்னையுமேவா? அரசினர், அதிகாரிகள், படையினர் அனைவருமே மூழ்கியிருப்பார்களா? ஆயினும் மத்திய அரசு உதவ ஓடிவருமல்லவா?

இது பூகம்பமா? பிரளயமா?

புழுதி மண்டலத்துக்குள் குழந்தையைக் காக்க என் சட்டையை கழற்றிப் பொத்திக்கொண்டு படுத்துக்கிடந்தேன். எத்தனை ஊர்களில் எத்தனை எத்தனை உறவுகள்? யாருக்கு என்ன ஆயிற்று? செல்போனை பார்த்துக்கொண்டிருந்தேன். தரை மீண்டும் குலுங்கியது. இது எப்போது முடிவுக்கு வரும்? அதன் பின் என்ன? அதுவரை என்ன? பக்கத்துத் தெருவுக்குப் போனால்? பக்கத்து மெயின்ரோட்டுக்குச் சென்றால்? அதுவரையிலாவது வழியை கண்டுபிடித்துப் போய்விட முடியுமா? மரணம் எனக்கும் அருகில்தான் நின்றுகொண்டிருக்கிறதா? சற்று அருகில் சரிந்த பில்டிங்கோடு சேர்ந்து வீழ்ந்த மரங்களைத் தவிர, தாக்குப் பிடித்து நின்று கொண்டிருந்த ஒன்றிரண்டு தென்னை மரங்களும் சரிந்துகொண்டிருந்தன. தரையில் படுத்துக்கிடப்பது ஓடும் வாகனத்தின் தளத்தில் படுத்திருப்பதைப்போல இருந்தது. எங்கிருந்தோ வந்த புழுதிப்படலம் ஒன்று எங்களை மூழ்கடித்தது. அதற்கு மேலும், இடிபாடுகளோ, வேறு பொருட்களோ வந்து எங்கள் மீது விழுந்தாலும் அதை உணர்ந்து விலகிச்செல்லக்கூட நேரமிருக்குமா தெரியவில்லை. 

பெரிய அச்சம் என்னை சூழ்ந்திருந்தது. எனக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த மனைவி என்னவானாள் என்று பார்க்க பார்வையை திருப்பினேன். சற்று தொலைவில் இரண்டு, மூன்று பேர் குப்புற விழுந்துகிடந்தனர். அவர்களில் ஒருவராக அவளும் இருக்கலாம். இயற்கையின் பெரும் சக்திக்கு முன்னால் சட்டென நசுங்கி உயிர்துறக்கும் ஒரு எறும்பைப்போல என்னை உணர்ந்தேன்.

சற்று நேரத்தில் நில அதிர்வுகள் நின்றுபோயிருந்தன. பேய்க்காற்று சுழன்றடித்துக்கொண்டிருந்தது. மழை வரக்கூடும் என்பதாகவும் தோன்றியது. குழந்தையை மார்போடு சேர்த்து எனது சட்டைக்குள்ளாக அணைத்துப்பிடித்து குழந்தையின் மேல் பாரம் விழாமல் முடிந்தவரை குப்புறப் படுத்திருந்தேன். கைகளில் வலியெடுக்கத் துவங்கியிருந்தது. எங்கோ ஏதோ ஓலம் நிரந்தரமாக கேட்டுக்கொண்டேயிருந்தது. பின்புறமாகத் திரும்பி மனைவியை பெயரைச்சொல்லி சத்தமாக அழைத்தேன். புழுதி மூடிக்கிடந்த நபர்களிடம் அசைவு தெரிந்தது. அதில்தான் இருக்கிறாள். மெதுவாகத் தவழ்ந்தவாறே என்னருகில் வந்தாள். தலை, முகமெல்லாம் புழுதி அப்பியிருந்தது. முதலில் என் மார்போடிருந்த குழந்தையை தொட்டுப்பார்த்துக்கொண்டாள். கீச்சுக்குரலில் அழுதுகொண்டிருந்த குழந்தையை தேற்றுமுகமாய் ஏதேதோ சொன்னாள். அடி எதுவும் படவில்லையே என்பதை முனகலாய் என் காதோடு கேட்டாள். அவளது இரண்டு கைகளிலும் சிராய்ப்புகளில் ரத்தக்கசிவைக் கண்டேன். அவளையும் இன்னும் சற்று நேரம் படு என்பதாய் சைகை காட்டிவிட்டு, மீண்டும் குப்புறப் படுத்தேன்.

ஏற்கனவே மழை துவங்கியிருந்தது. இது ஆசுவாசமா? இன்னுமொரு பிரச்சினையா? ஒரு பாதுகாப்பான இடத்தைத் தேடவேண்டும். செல்போனை மீண்டும் பார்த்தேன். அந்த ஐ போன், வேறெந்த உதவியையும் செய்யத்திறனிழந்து, தன் ஞாபகப்பகுதியிலிருந்த ஏராளமான பாடல்களை மட்டும் வேண்டுமானால் எனக்காக பாடிக்காண்பிக்கத் தயாராக இருந்தது. மழை வலுக்கத்துவங்க, குழந்தையை முடிந்தவரை சட்டைக்குள் பொதிந்துகொண்டு எழுந்தேன். என் மனைவியும் எழுந்தாள்.

மணித்துளிகள் உருண்டுகொண்டிருந்தன. பின்னர், இடிபாடுகளில் ஏறி தோராயமாக பிரதான சாலை நோக்கிச் சென்றோம். இடிபாடுகளில் சிக்கி ஏராளமானோர் இறந்து போயிருந்தனர். இன்னும் ஏராளமானோர் உயிருக்காக போராடிக்கொண்டிருக்கக்கூடும். எந்த மீட்புப்பணியும் நாங்கள் சென்ற எந்த இடத்திலும் துவங்கியிருக்கவில்லை. மழை கோபத்தோடு கொட்டிக்கொண்டிருந்தது. சரிந்தும் சரியாமலிருந்த சாய்வான ஒரு சுவருக்குக் கீழே அடைக்கலமானோம்.

அரசு உதவி கிடைக்கும் வரை பிழைத்திருந்தால் போதும் என்பதாக மனைவியை ஆறுதல் செய்து, அவள் கைகளில் பிள்ளையைத் தந்து அவளை மழை படாத இடமாக, உட்புறமாக ஒரு கல்லில் உட்காரவைத்தேன். தரையில் உட்காரமுடியாதபடிக்கு எங்கள் காலடியில் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. இந்நிகழ்வு துவங்கி பாதி நாளைக் கடந்திருந்தோம். மழையோடு இரவும் எங்களைச் சூழ்ந்திருந்தது. எனக்குப் பசி என்ற உணர்வே அற்றுப்போயிருந்தது. ஆனாலும் பசி எந்நேரமும் கொதித்தெழும் ஒரு நோய். இரவு உணவு? மனைவியையும், குழந்தையையும் பார்த்தேன். குழந்தை தாய்ப்பாலைக் குடிக்கும் வயதிலிருப்பது எவ்வளவு பெரிய ஆறுதல்? செல்போனில் நேரத்தைப் பார்த்தேன். செல்போனின் மின்சேமிப்புக் கூட இப்போது எவ்வளவு அவசியமானது? அதை அணைத்து பேண்ட் பாக்கெட்டில் பத்திரப்படுத்தினேன். பர்ஸை எடுத்துத்திறந்தேன். சதசதவென நனைந்து போயிருந்தது. சில நூறு ரூபாய்கள். முக்கிய வங்கிகளின், பல்லாயிரம் மதிப்புள்ள டெபிட், மற்றும் கிரெடிட் அட்டைகள். அதையும் பத்திரப்படுத்தினேன். உள்ளுக்குள் சிரிக்கிறேனோ? எந்த பொருட்களுமே விற்பனைக்கு இல்லாத போது இந்த பணத்துக்கும், அட்டைகளுக்குமான அர்த்தமென்ன?

சட்டையை மீண்டும் பிழிந்து குழந்தைக்காக வைத்துக்கொண்டதில், வெறும் பனியனோடு மழையில் நின்றுகொண்டிருந்தேன். அவர்களை அங்கேயே இருக்கச்சொல்லிவிட்டு எங்கு போவது? எதைத் தேடி என்று ஒரு முடிவும் இல்லாதவனாக நடக்கத்துவங்கினேன். நேற்று நான் பார்த்த இடமா இது?

இரவிலும் ஓயாத ஓலங்கள். சற்றுத் தொலைவிலிருந்த ஒரு கோயிலும் சரிந்து மண்ணொடு மடிந்திருந்தது. ஆனால் அந்தக்கோவிலைச் சுற்றியிருந்த வெட்டவெளி முழுதும் ஏராளமான மனிதர்கள் பெரும் திகைப்பில் நின்றுகொண்டிருந்தனர். பலரும் படுகாயங்களுடன் கிடைத்த இடங்களில் படுத்துக்கிடந்தனர். துணிகளை, பேப்பர்களை தலைக்குப் பிடித்தவாறு உட்கார்ந்திருந்தனர். மரங்களும், கட்டிடங்களும் ஒன்றும் மிச்சமில்லாத வகையில் இடிந்து, சரிந்து போய்விட்டனவா என்ன? வெளியுலகம் என்ன நிலையில்தானிருக்கிறது? நேற்று வரை உலகின் அடுத்த மூலையில் நடந்த விஷயங்களை அடுத்த நிமிசமே என்னிடம் கொண்டுவந்து கொட்டிய ஊடகங்கள் எங்கே? அவசியத்தைக் கூட அப்டேட் செய்துகொள்ள இயலாத சூழல் மூளையில் இறுக்கத்தை ஏற்படுத்தியது. உணவுப் பொட்டலங்களை வீசிடும் ஹெலிகாப்டர்களுக்குக் கூடவா வழியில்லை?

பசியோடு மீண்டும் மனைவி, பிள்ளை இருந்த இடத்துக்கே திரும்பினேன். அவர்களை மழையிலிருந்து காக்க ஒரு பெரிய பாலிதீன் தாளைத்தான் என்னால் கொண்டுபோக முடிந்தது. கற்களை அந்தச் சின்னக் கூட்டுக்குள் சேகரித்து அதன் மேல் பாலிதீனை விரித்து அவர்களைப் படுக்கவைத்தேன். நானும் அதற்குள் ஒண்டிக்கொண்டிருக்க இடமில்லாமல் வெளியே மழையில் அமர்ந்தேன். மனைவி, நெருக்கிக்கொண்டு அதற்குள் என்னையும் வந்துவிடுமாறு சைகை காட்டினாள். நேரம் என்ன? செல்போனை உயிர்ப்பிக்கவா? இந்தப் பேய் மழையில் அது நிரந்தரமாக உயிரை விட்டுவிடக்கூடும். யோசனையோடே எவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்தேனோ தெரியவில்லை.

மீண்டும் நான் எழுந்து உணவுக்காகவும், தங்குவதற்கு ஒரு இடத்தைத் தேடியும் கிளம்பினேன். அந்த இருளிலும், என் நினைவில் கடைகள் நிறைந்திருந்த மார்க்கெட் பகுதியை நோக்கித் தோராயமாக நடக்கத்துவங்கினேன். நிறைய இடிபாடுகளுக்கிடையே பயணித்ததில் சோர்வாக உணர்ந்தேன். அந்த இடத்தை நான் அடைந்தபோது அந்தப் பகுதி பெரும் வெள்ளப்பகுதியாக மாறியிருந்ததைக் கண்டேன். மனித நடமாட்டமே அங்கில்லை. ஏராளமான மரத்துண்டுகளும், ஓலைகளும் வெள்ளப்பகுதியில் சிக்கி அடைபட்டிருந்தன. இடுப்பளவு நீரில் இறங்கி இலக்கில்லாமல் போய்க்கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில், மிகுந்த சிரமத்துக்குப் பின்னர் ஒரு பழக்கூடை அந்தச் சிக்கலுக்குள் ஒதுங்கிச் சிக்கிக்கொண்டிருந்ததைக் கவனித்து நெருங்கிச்சென்றேன். ஆச்சரியம்தான், அதில் சில ஆப்பிள் பழங்கள் கிடந்தன. ஆவலோடு அதை எடுத்துக்கொண்டு எங்கள் இருப்பிடத்தை நோக்கிக் கிளம்பினேன். வெள்ளப்பகுதியிலிருந்து மீண்டு, இடிபாடுகளுக்குள் ஏறி வந்த வழியே செல்லத்துவங்கினேன்.

சற்று தூரம் சென்றிருந்தேன். எதிரே இரண்டு நபர்கள் இடிபாடுகளுக்குள் எதையோ தேடிச்சலித்து நிமிர்ந்தவாறே என்னைப் பார்த்தனர். உடனேயே எழுந்து நின்று என்னை உற்று நோக்கினர். சாதாரணமாக நடந்துகொண்டிருந்த நான், ஏதோ விபரீதமாய் உறைக்க.. நின்றேன். அவர்களின் பார்வை என் கையிலிருந்த ஆப்பிள் பழங்களின் மீதே இருந்தது.

அவர்களில் ஒருவனின் கைகளில் ஒரு வலுவான மரத்தடி ஒன்று இருந்தது. வெளிச்சம் மிகக்குறைவாக இருந்த அந்தச் சூழலிலும் அந்தக் தடியில் ஏதோ ரத்தக்கறை போல தென்பட்டதை நான் கவனிக்கத்தவறவில்லை. அவர்கள் என்னை நெருங்கினார்கள். இதயம் படபடக்க நான் அமைதியாக நின்றுகொண்டிருந்தேன். ஒருவன் என் கைகளிலிருந்த பழங்களை எடுத்துக்கொண்டான். அவனது கண்கள் மின்னிக்கொண்டிருந்தன. பின்னர் இருவரும் இருளுக்குள் சென்று மறைந்தனர்.


எத்தனை நேரம் அப்படியே நின்றுகொண்டிருந்தேன் என்று தெரியவில்லை. பின்னர், அதற்கு அடுத்தத் தெருவில் நுழைந்தபோது, அங்கிருந்த இடிபாடுகளுக்கிடையே துழாவினேன். ஒரு மின்னலின் வெளிச்சத்தில் பளபளத்த பலமான ஒரு இரும்புக்கம்பி கையில் சிக்கியது. அதை வெளியே உருவி எடுக்கத்துவங்கினேன்.

பசி வயிற்றில் ஒரு தீப்பிழம்பைப்போல கிளை பிரிந்து அரிக்கத் துவங்கியிருந்தது.

.

Saturday, January 5, 2013

துப்பாக்கி - சிறுகதை

நான் அன்று தாம்பரம் ஏழாவது பாயிண்டில் நின்றுகொண்டிருந்தேன். முழுவதும் லோட் செய்யப்பட்டிருந்த பிஸ்டல் இடுப்பில் அதன் உறையில் உறங்கிக்கொண்டிருந்தது. சக்திவாய்ந்த டார்ச் லைட் ஒன்று என் கையில் இருந்தது. கையில் வாட்ச் இல்லாததால் செல்போனை எடுத்து நேரத்தைப் பார்த்தேன். மணி 10.50. இன்னும் பத்து நிமிடங்களில் கிளம்பிவிடலாம். 

கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக இதே பாயிண்டில்தான் ட்யூட்டி. ட்ராக்குக்கு அருகே புதிய ட்ராக் வேலைக்காக போடப்பட்டிருந்த இரும்புத் தளவாடங்கள் தொடர்ச்சியாக திருடு போய்க்கொண்டிருந்தன. அதோடு இரண்டு வாரங்களுக்கு முன்னர் அதே பகுதியில் ஒரு கொலையும் வேறு நடந்திருந்தது. அதுவும் கள்ளத்துப்பாக்கியால் சுடப்பட்டு அந்தக் கொலை நிகழ்ந்திருந்தது. அதனால் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி இந்த விஷயத்தில் அதிக தீவிரம் காண்பித்து இந்த ஏற்பாடுகளைச் செய்திருந்தார். பாதுகாப்பு போடப்பட்டதிலிருந்து திருட்டு என்னவோ நிகழவில்லை. ஆயினும் யாரையும் பிடிக்கமுடியவில்லை. எந்த ஒரு அப்நார்மல் நடமாட்டமும் எங்கள் கண்ணில் படவில்லை.

கிருஷ்ணமூர்த்தி சிலரைப் போல விஷயத்தை ஆறப்போட்டு என்ன நடந்தால் நமக்கென்னவென்று நழுவுகிற ஆளில்லை. இந்தப் பிரச்சினையை சமாளிக்க புதிதாக ரெக்ரூட் ஆகியிருந்த எங்கள் டீமிலிருந்து நன்கு பயிற்சிபெற்ற துடிப்பான 4 பேர்களைக் கொண்டு ஒரு சிறிய டீமை உருவாக்கியிருந்தார். ஆனால் அவர் எந்த அளவுக்கு பிரச்சினையில் தீவிரம் காண்பிக்கிறாரோ அந்த அளவுக்கு எங்களுடைய பாதுகாப்பு குறித்தும் கவலைப்படுபவர். அதற்காகவே இந்த இடத்துக்கு பிஸ்டல், லத்தி போன்றவையே போதுமானவைதான் எனினும் சில அலுவலக சிரமங்களுக்கிடையேயும் ஸ்பெஷல் வெப்பன்ஸும் கூட இரவுப்பணிக்கு ஏற்பாடு செய்திருந்தார். 

ஆறாவது பாயிண்டிலிருந்த ராஜுவை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

கிருஷ்ணமூர்த்தி முதல் நாள் பேசுகையில், ‘பாய்ஸ், இதெல்லாம் பயன்படுத்துறதுக்கு இல்ல, எமர்ஜென்ஸிக்குதான். முக்கியமா அக்யூஸ்ட்ஸால உங்களுக்கு எந்த பிரச்னையும் வந்துடக்கூடாதுன்னுதான். வெப்பன்ஸ் ஹெவியா இருந்தா மெண்டலி உங்களை நெருங்கப் பயப்படுவாங்க. ஆனா அதுவே அவங்களை பிடிக்கமுடியாம போறதுக்கும் காரணமாயிடும். அதையும் மீறி யாரையாவது ட்ரேஸ் பண்ணமுடியுதா பாருங்க. கடந்த வருஷத்துல சென்னை லிமிட்டுக்குள்ள நிறைய கேஸ்ல கள்ளத்துப்பாக்கி புக்காயிருக்கு. ரொம்ப அலர்ட்டா இருங்க.’ என்று எச்சரித்திருந்தார். 

ராஜுவை நெருங்கியிருந்தேன். அவனது தோளில் இருபது புல்லட்டுகள் கொண்ட மேகஸின் லோட் செய்யப்பட்டிருந்த இன்ஸாஸ் ரைபிள் தொங்கிக்கொண்டிருந்தது. 

ட்ரைனிங்கில் இன்ஸாஸ் எல்எம்ஜியில் கோல்டு மெடல் வாங்கியவன் நான். அரை கிமீக்கு அப்பால் உள்ள டார்கெட்டையும் துல்லியமாக தாக்கக்கூடியது இன்ஸாஸ். எங்களிடம் முதல் இரண்டு நாட்கள் இருந்த துறுதுறுப்பு, அப்புறம் மெல்லக் குறைய ஆரம்பித்திருந்தது. தினமும் வருவதும், கையெழுத்திட்டு இந்த துப்பாக்கிகளைப் பெறுவதும், மீண்டும் பத்திரமாக ஒப்படைத்துவிட்டு கிளம்புவதுமாக கொஞ்சம் சலிப்பாகிவிட்டிருந்தது என்னை. சமயங்களில் இந்த துப்பாக்கி நமக்கு பாதுகாப்புக்காக இருக்கிறதா? இல்லை, அவற்றின் பாதுகாப்புக்காக நாம் இருக்கிறோமா? உறையிலிருந்த பிஸ்டலை விடுவித்து கையிலெடுத்தேன். ராஜூவை நெருங்கியிருந்தேன்.

“கிளம்பலாமா ராஜூ.?”

“சும்மா ஸ்டேஷன் டூட்டி பார்க்குற மாதிரி ஆயிடும் போலயிருக்கே.. ஒண்ணும் சிக்க மாட்டேங்குதே?”

“அதத்தான் நானும் ஃபீல் பண்ணிகிட்டே வந்தேன்..” சிரித்தேன். ஒன்றாக ஸ்டேஷனை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.

“இந்த மூணு மாசத்துலயே தெரிஞ்சிபோச்சி. ஏன் சீனியர்ஸெல்லாம் இப்படியிருக்காங்கன்னு.. இப்படியே வருசக்கணக்கில் போனா எப்படி ஃபிட்னஸ் மெயிண்டெயின் பண்றதுக்கு ஆர்வம் இருக்கும்.? இதையும் மீறி ஒண்ணு ரெண்டு பேர் கடமையேனு இன்னும் ஃபிட்டா இருக்காங்க பார்க்கிறியா.. செண்ட்ரல்ல சந்திரமோகன்னு ஒருத்தர் பார்த்திருக்கியா? அவருக்கு 50 வயசாம். ஆளு பாத்தியா.. எப்பிடி இருக்கார்னு..”

“அதெல்லாம் டூட்டியைத் தாண்டி பர்சனலா ஒரு ஆர்வம் இருந்தாத்தான் பண்ணமுடியும்..” கையிலிருந்த பிஸ்டலின் மேகஸினை விடுவித்து அந்த இருட்டிலும் புல்லட்டுகளைப் பார்த்துவிட்டு மீண்டும் லோட் செய்து உறையில் போட்டேன். 

“ஒண்ணு பண்ணலாம் ராஜு. நாளைக்கு நாம மஃப்டியில் இங்க சுத்துவோமா? கிருஷ்ணமூர்த்தி சார் இதெல்லாம் சொன்னா கேப்பாரான்னு தெரியலையே.. மஃப்டின்னா கண்டிப்பா ஏதாவது மாட்டும்னு நினைக்கிறேன்..” அவனுடைய இன்ஸாஸை எடுத்து வ்யூ ஃபைண்டரில் தூரத்தில் தெரிந்த ஸ்டேஷனைப் பார்த்தேன்.

“சொல்லிப்பாப்போம்.”

அப்போதுதான் எங்களுக்கு இடதுபுறமாக கடைசி ட்ராக்கைத் தாண்டி இருந்த புதர்களில் ஒரு சலசலப்பை கவனித்தேன். 

ராஜுவைத் தோளில் தொட்ட விநாடிக்குள் அவனும் அதை உள்வாங்கியிருந்தான். இருவரின் உடல் முழுதும் ஒரு அவசர அலர்டுக்குள் விழ, ராஜு ஒரு புல்லட்டைப்போல என்னைக் கடந்து பாய்ந்தான். முதல் ட்ராக்கை ஒரு பந்தைப்போல தாண்டி ஓடினான். அடுத்த சில விநாடிகளில் இருவரும் கடைசி ட்ராக்கை நெருங்கியிருந்தோம். எங்களது சலசலப்பும், டார்ச்சின் ஒளி வெள்ளமும் அதற்குள்ளாக இரண்டு பேரை புதரிலிருந்து கிளம்பி வலப்புறமாய் ஓடவைத்திருந்தது. அவர்களுக்கும் எங்களுக்கும் இடையேயான தூரம் 150 மீட்டர்களுக்குள்ளாகத்தான் இருக்கும். ராஜுவின் வேகத்துக்கு முன்னால் அடுத்த சில நிமிடங்களில் இரண்டு பேரும் கோழிக்குஞ்சுகளைப்போல எங்கள் கைகளில் சிக்கிவிடுவார்கள். அலர்ட்டாகியபின்னர் இந்த டார்ச்சை அணைக்கவிரும்பவில்லை நான். அவர்கள் தப்பிவிடும் ஒரு சிறுவாய்ப்பையும் நான் தரவிரும்பவில்லை. அப்போதுதான் கவனித்தேன், இரண்டாவதாக ஓடிக்கொண்டிருந்தவன் ஓடிக்கொண்டே ஒரு விநாடி திரும்பி எங்களைக் கவனித்தான். தூரத்தையும், சிக்கலின் வீரியத்தையும் அளவிடுவதற்கான முயற்சி. சரியாக அப்போது அவன் கையிலிருந்த துப்பாக்கி வெடித்தது. 

இதை நான் நிச்சயமாக எதிர்பார்த்திருக்கவில்லை, ராஜுவும். அந்த ஒலியையும், வெளிச்சத்தையும் நான் தவறவிடவேயில்லை. சூழலை மனம் முழுதும் உள்வாங்கிக் கொள்வதற்குள்ளாக புல்லட் ராஜுவை வலது தொடையில் தாக்க, அவன் ட்ராக் ஜல்லிக்கற்களுக்குள் புரண்டு விழுந்தான். அவனை நெருங்கி நிலைமையை விநாடிகளுக்குள் புரிந்துகொள்வதற்குள், ராஜு ரத்தவெள்ளத்திலும் என்னைப்பார்த்து,

“கோல்ட், பெரிய ரிஸ்க்.. அடுத்த புல்லட் வர்றதுக்குள்ள முந்திக்குங்க..”

மறைந்துகொள்ள இடமில்லாமல் ராஜுவோடே கற்களில் விழுந்தேன். அனிச்சையாய் பிஸ்டலை எடுத்த வலதுகையை நிறுத்தி ராஜுவின் இன்ஸாஸை எடுத்தேன். பிஸ்டல் ரேஞ்சைக் கடந்துவிட்டார்கள். முகத்தில் பலத்த சோர்வும், வியர்வையும் பொங்கும் நிலையிலும் ராஜு டார்ச் வெளிச்சத்தை ஓடுபவர்களை நோக்கிப் பாய்ச்சினான்.

க்ளீன் ஷாட்ஸ். டிரிக்கரிலிருந்து போதுமான விநாடிகளுக்கு என் விரல்கள் விலகவேயில்லை. துப்பாக்கி வைத்திருந்தவன் விசையினால் உந்தப்பட்டவன் போல தெறித்துவிழுந்தான். மூன்று புல்லட்டுகள். ஒன்று கூட குறி தப்பியிருக்காது. தலையின் கொஞ்சப் பகுதியாவது அவன் உடலில் மிஞ்சியிருந்தால் ஆச்சரியம்தான். விநாடிகளுக்குள்ளாக என் மனம் ஆசுவாசத்தையும், பொறுமையையும் கடைபிடித்ததில் துப்பாக்கி சற்றே கீழிறங்க முன்னதாக ஓடிக்கொண்டிருந்தவன் இடுப்பில் ஒரே ஒரு புல்லட்டை வாங்கிக்கொண்டு சரிந்தான்.

பலப்பல உணர்வுகள் உந்தித்தள்ள படபடப்பாக உணர்ந்தேன். கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டேனோ?

வாக்கி டாக்கியில் நான் தகவல் சொல்வதற்குள்ளாகவே, எழுந்த துப்பாக்கி ஒலியினால் ஸ்டேஷனிலிருந்து குழு ஓடி வரத்துவங்கியிருந்தது. அடுத்த அரைமணி நேரத்துக்குப் பின்னர் சூழல் கட்டுக்குள் வந்தபிறகுதான் ஒரு செய்தி என் காதுக்கு வந்தது. இருநூறு மீட்டர்களுக்கு முன்பாக ஒரு இளம்பெண் வன்புணர்வுக்கு ஆளாகி, கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்திருந்தாள்.

என் கைகளில் இன்னும் லேசாக கதகதப்புடன் இருந்த இன்ஸாஸைப் பார்த்தேன். என் புல்லட்டுகள் தவறு செய்யவில்லை என்றுதான் நினைக்கிறேன்.

.