Monday, January 21, 2013

பாப்கார்ன் தின்பவர்கள்

புத்தக விழா

சென்னையின் பெருமைக்குரிய அடையாளங்களுள் ஒன்றான கோலாகலமான ஜனவரி புத்தகத்திருவிழாவைத் தவறவிடாமல் இந்த ஆண்டும் சென்று வந்தாயிற்று, நேற்று. பல இணைய நண்பர்களும் புலம்பிக்கொண்டிருப்பதைப் போலவே சென்ற சில ஆண்டுகளாக வாங்கப்பட்ட புத்தகங்களையே இன்னும் வாசித்து முடித்தபாடில்லை, மேலும் பொருளாதாரச் சிக்கல் எனினும் போகாமல் இருக்கவே முடியாது என்பதான விஷயம் இது. வழக்கம்போலவே எந்தப் புத்தகமும் வாங்கக்கூடாது, சும்மா வேடிக்கை மட்டுமே என்று தீர்மானம் செய்துகொண்டு போனாலும் அங்கு போனதும் வழக்கம் போலவே உள்ளுக்குள்ளிருக்கும் இலக்கிய வாசகன் முழித்துக்கொண்டு வழக்கம் போலவே நம் பர்ஸை பொத்தல் போடுவது இவ்வாண்டும் நடந்தது.


என் பிரியம், என் ஆதர்சம் என்றெல்லாம் டுபாகூர் விட்டுக்கொண்டிருந்தாலும் அந்த நான்கைந்து எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களில் படித்தவை என்று கணக்குப் பார்த்தால் கால் பாதம் கூட நனையாது. என்றைக்கு முழுகி முத்தெடுக்க?

ஒவ்வொரு கடையாய் ஏறி இறங்குவது சாத்தியமே இல்லாமல் போய்விட்டது, அவ்வளவு பிரமாண்டம், அவ்வளவு கூட்டம். குறைந்த பட்சமாய் சந்தைக்குள் ஒரு தெருவையும் விடாமல் ஸ்டால்களின் பெயரை மட்டும் வாசித்துக்கொண்டே சுற்றினேன். முடிவில் நாஞ்சில் நாடன், கிரா ஆகியோரது நான்கைந்து கட்டுரை மற்றும் சிறுகதைத் தொகுப்புகளையும், முத்து காமிக்ஸின் NBSயும் எடுத்துக்கொண்டு, மக்கள் வெள்ளத்தில் நீந்தி வெளிவருவதற்குள் 3 மணி நேரத்துக்கும் மேலாகிவிட்டது. 

இந்த பாப்கார்னை கண்டுபிடித்தவனை என்ன செய்தால் தேவலைனு யோசிக்கணும். தெர்மோக்கோல் போல அது ஒரு பண்டம், அதையும் மெகா சைஸ் அட்டைப்பெட்டிகளில் வாங்கிக்கொண்டு ஏதோ பாப்கார்ன் தின்பதற்கென்றே பிறப்பு எடுத்தது போல சிலர் நடந்துகொள்வதைப் பார்க்கும் போது எரிச்சல் மண்டுகிறது. அந்தப் பெட்டிகளோடுதான் காட்சியரங்கத்துக்குள் நுழைகிறதே! (தியேட்டர்களிலும் இதே நிகழ்வுதான்! சமயங்களில் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு படம் முடியும் வரை சவுக்கு, சவுக்குனு இவர்கள் தரும் ஸ்பெஷல் எஃபெக்ட் ஒலியமைப்புடனேதான் முழு படத்தையும் பார்த்தாகவேண்டும்). தவிர கசாமுசாவென குழந்தைகள் கூட்டம்... என்னவோ போங்க!

இந்த முறை, அப்படியே சந்தைக்கு இடம் பார்த்தவர்களுக்கு ஏதாவது அவார்டு குடுத்தால் தேவலை. ஸ்டால்களுக்கான இடம் தாராளமாய் இருந்ததோ என்னவோ.. வாசல், பார்க்கிங், டிக்கெட் கவுண்டர் என பிற எல்லாவற்றிற்கும் அடுத்தவன் முதுகை இடித்துக்கொண்டே பயணிக்கவேண்டியிருந்தது. இதற்கு ஆங்கிலோ-இந்தியன் பள்ளியே சிறப்பு என எண்ணுகிறேன். பார்ப்போம் அடுத்தாண்டு!

************

பொங்கல் விடுமுறை

வழக்கம் போலவே குடும்பத்தோடு கொண்டாட்டம் என மகிழ்வாக கழிந்தாலும் வடக்குக்குளத்தில் தண்ணீர் பெருகாமலிருந்துவிட்டதால் ‘அயிரை’ மீன் துள்ளவில்லை. அது என் தனிப்பட்ட சோகம். இனி அடுத்தவருடம் வரை காத்திருக்கவேண்டும்! ட்ரிப்பின் ஹைலைட், குட்டி ஆதி (தம்பி மகன்) யின் அட்டகாசங்கள். 

“ஆஜ்ஜி, ஆஜ்ஜி.. பெர்பாவுக்கு இஞ்சின் குடுக்குணும்.. சீக்ரம் கொண்டாங்க.. நா புடிஜ்ஜிகிறேன். அழுனாலும் விடக்குடாது”

கல்யாணத்தைப் பற்றி நமக்கு ஏராளமான மாற்றுக்கருத்துகள் உண்டு. ஆனால் வாழ்க்கை இன்பத்துக்குள் துன்பத்தையும், அதற்குள் இதையும் பொதிந்தேதான் தருகிறது. இரண்டு வயதிலிருந்து 6 வயது வரை குழந்தைகள் தரும் மழலை இன்பத்துக்கு முன்னால் இன்னும் ரெண்டு கல்யாணத்தைப் பண்ணிக்கொண்டு இன்னும் இரண்டு பெண்களை சமாளிக்கலாம்தான் போல! வேறு வாக்கியத்தில் சொல்லவேண்டுமானால் அந்தக் கொடுந்தவத்துக்கான குட்டி வரம் என்றும் கொள்ளலாம்!

சுபாவின் பாடு கொஞ்சம் திண்டாட்டமாக போய்விட்டது. பொம்மைகள், விளையாட்டு என எல்லாவற்றிலும் அவன் பிடிவாதத்துக்கு முன்னால் ஒரு வயது மூத்தவன் என்ற முறையில் இவனே எல்லாவற்றிலும் விட்டுக்கொடுக்கவேண்டியதாக இருக்கிறது. ஆயினும் அந்த மனம் இன்னும் வரவில்லை. தடுமாற்றம்தான். கோபமும், அழுகையுமாய் விட்டுக்கொடுத்தான். அதே நேரம் அவனைக் கண்டிக்கவும் விடவில்லை. அவனைக் கண்டித்தால் இவனுக்குக் கோபம் வருகிறது. ஒரு முறை அவன் அடித்துவிட்டதை தாங்கிக்கொண்டான். சரி, கொஞ்சம் பொறுப்போடு நடந்துகொள்கிறானா இருக்கும் என்று நினைத்தேன். பிறகு கேட்டபோது சீரியஸாகவே சொன்னான்,

“என்கிட்ட ஸ்பைடர்மேன் பவர் இருக்கு, அடிச்சா வலிக்காது”

சுத்தம்!

*************

விஸ்வரூபம்

கமல்ஹாஸன் கூட இவ்வளவு சிந்தித்திருப்பாரா தெரியவில்லை, அவ்வளவு சிந்தனை. அவர் மட்டும், ’பரவாயில்லை, என்ன பண்ணியிருக்கலாம்னு நீங்க நினைக்கிறீங்க? வந்து கொஞ்சம் அட்வைஸ் பண்ணுங்க..’ என்று சொல்லியிருந்தால் போச்சு, மனுஷன் உயிர் பிழைப்பது கஷ்டம்தான். ஏதாவது கருத்து சொல்லியே ஆகவேண்டும் என்பது போல அரிப்பு. அடக்கு, அடக்கு என அடக்கிக்கொள்கிறேன்! படம் வந்தபிறகு நேரமிருந்தால் மொத்தமாக பேசிக்கொள்வோம். அலுவலகப் பயணமாக சத்தீஸ்கர் செல்வதால் துவக்க நாட்களில் இங்கே இருக்கமாட்டேன் என நினைக்கிறேன். வந்துதான் பார்க்கவேண்டும். இல்லாவிட்டால் இந்தி விஸ்வரூபத்துக்கு விமர்சனம் போட்டால் போச்சு! அதை ஏன் விட்டுவைக்கணும்?

*************

எழுத்து

எப்போதாவது போனால் போகிறது என்று பழைய வாசகர்கள் (?), “என்னாச்சு, சிறுகதை இலக்கியத்தை தூக்கி நிறுத்திவிட்டுத்தான் மறுபேச்சுனு சபதம்லாம் எடுத்தாமாதிரி இருந்தது. இப்போ இங்கன பத்திக்கே வழியைக் காணோமே..” என்று குசலம் விசாரிக்கிறார்கள். உண்மையும் அதுதானே.. பத்தி எனும் எளிய வடிவமே நமக்கு தண்ணி காண்பிக்கையில், சிறுகதையையெல்லாம் எங்க தூக்கி, எங்க நிறுத்த.. முடிஞ்சா செய்யமாட்டோமா? சென்ற சில ஆண்டுகளில் தலைகீழாக மாறிப்போய்விட்ட பணிச்சூழல், பொருளாதாரச் சூழல்! தூரத்தில் மாற்றங்கள் கண்களில் தென்படுகின்றன. கிடைக்கும் பொழுதுகளில் எழுத்துப்பணியையும் தொடர்வதாக உத்தேசம். பிறகு, நீங்களும்தான் என்ன செய்வீர்கள், பாவம்!

3 comments:

பரிசல்காரன் said...

என்னா எழுத்துடா!

தமிழ் ப்ளாக் உலகை நீயும் நானும்தான் காப்பாற்றவேண்டும் என்று மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறாய்!

அந்தப் பொங்கல் விடுமுறை பத்தி ஒரு அட்டகாசமான சிறுகதை. வேஸ்ட் பண்ணீட்டியே!

புதுகைத் தென்றல் said...

கிடைக்கும் பொழுதுகளில் எழுத்துப்பணியையும் தொடர்வதாக உத்தேசம். பிறகு, நீங்களும்தான் என்ன செய்வீர்கள், பாவம்!//

:))) சத்தீஸ்கர் சலோன்னு போய்க்கிட்டு இருக்கீக போல. அங்கன போய் வந்ததையும் எழுதுங்க.

அமுதா கிருஷ்ணா said...

ஹிந்தி விஸ்வரூபம் ஹிந்தியிலேயே எழுத போறீங்களா??