Monday, January 7, 2013

பிரளயம்


பயமும், துடிப்பும் உச்சத்திலிருக்க கையில் குழந்தையை வைத்துக்கொண்டு வீட்டையே பார்த்துக்கொண்டிருந்தேன். அருகே, என் மனைவி தரையில் விழுந்துகிடந்தாள்.

எங்கும் மரண ஓலம்.

இது கனவா? என்னால் சிந்திக்கவே முடியவில்லை. தெருவில் நிற்பது மட்டும் பாதுகாப்பான செயலா என்பதெல்லாம் எனக்கு உறைக்கவில்லை. அரை மணி நேரத்துக்கு முன்னால் வீடு குலுங்கிய போது செல்போனையும், பர்ஸையும் தூக்கிக்கொண்டு தெருவுக்கு ஓடிவந்தால் போதும், இந்த பூகம்பம் பணிந்து திரும்பிவிடும் என்றுதான் எண்ணியிருந்தேன் எல்லோரையும் போல.

இப்போது என் முன்னே என் வீடு இல்லை. ஒரு பிரம்மாண்டமான கான்க்ரீட் குப்பைதான் கிடந்தது. எந்தக்கட்டிடமும் சாய்ந்து விழமுடியாத ஒரு பகுதியாக தேடி ஒதுங்கி நின்றேன். திடும் திடுமென பேரொலிகள் தூரத்திலும், அருகிலும் கேட்டவண்ணமிருந்தன. தரையும் அமைதியாக இல்லை. ஒரு உலுக்கலில் கீழே விழுந்தேன். எந்த நேரமும் பெரும் பிளவுகள் தோன்றலாம், யாவற்றையும் விழுங்கிவிடலாம். இதுவரை பூகம்பம் என்பது சற்றே பரபரப்பையும், கதை பேச ஒரு சுவாரசியமாகவும்தான் இருந்து கொண்டிருந்திருக்கிறது. பூகம்பமும், சுனாமியும் ஜப்பானுக்கும், இந்தோனேஷியாவுக்கும் சொந்தமானது. நமக்கு அது ஒரு செய்தி மட்டுமே. திடுமென சூழல் திரிந்துவிடுகையில், எதைச்செய்வது, அடுத்து என்ன என்பதையே சிந்திக்க இயலாத அறியாமையில்தான் இருந்துகொண்டிருக்கிறோம். குடிக்கும் ஒரு குவளை நீருக்கு, இந்த உலகையே சகல உயிரினங்களோடு சேர்த்துக் குடித்துவிடும் சக்தியிருக்கிறது என்பதை மனம் எப்போதும் உணர்வதேயில்லை. தெருவிலிருந்த வீடுகள் அத்தனையும் தரைமட்டமாயிருந்தன. தெருவென்ன? கண்கள் காணும் தொலைவு வரை இருந்த எந்தக் கட்டிடங்களையுமே காணவில்லை. உள்ளிருந்த அத்தனை மனிதர்களையும், பொருட்களையும் விழுங்கிக்கொண்டு அதுவரை வாழிடமாக இருந்த கட்டிடங்கள் அனைத்தும் சமாதியாகியிருந்தன.

என் கட்டிடத்திலிருந்த ஓரிருவர் என்னருகே விழுந்துகிடந்திருந்தனர். சிலர் உள்ளே மாட்டிக்கொண்டுவிட்டவர்களை மீட்கும் முயற்சியில் இருந்ததைப்போல உணர்ந்தேன். எதுவுமே கண்களுக்குச் சரியாக புலப்படவில்லை. அவர்கள் அப்படிச் செல்வது அவர்களுக்கும் ஆபத்தாக முடியும் என்பதை கத்திச்சொல்ல நான் நினைத்தாலும் அதைச் சொல்லும் நிலையிலும் நான் இல்லை, அதை அவர்கள் கேட்கும் நிலையிலும் இல்லை.

செல்போன் வேலை செய்யவில்லை. எங்கள் தெருவிலிருந்தே வெளியே மீளமுடியாத நிலையில் சுற்றிலும் இடிபாடுகள். கண்களை மறைக்கும் புகை, தூசு மண்டலம், சூறைக்காற்று. எங்கே செல்வது? அரசாங்கம் ஏதும் மீட்புப்பணியில் ஈடுபடும். அதுவரை காத்திருக்கவா? அல்லது எங்கே செல்வது? வேளச்சேரியிலிருக்கும் நண்பன் வீட்டுக்கு நடந்தே போய்விடலாமா?
 
இந்தப் பேரழிவின் பிரம்மாண்டம் புத்தியில் உறைத்தது. இந்தத் தெரு மட்டும்தான் மூழ்கிப்போனதா? இந்தப் பகுதியேவா? இல்லை இந்த மொத்த சென்னையுமேவா? அரசினர், அதிகாரிகள், படையினர் அனைவருமே மூழ்கியிருப்பார்களா? ஆயினும் மத்திய அரசு உதவ ஓடிவருமல்லவா?

இது பூகம்பமா? பிரளயமா?

புழுதி மண்டலத்துக்குள் குழந்தையைக் காக்க என் சட்டையை கழற்றிப் பொத்திக்கொண்டு படுத்துக்கிடந்தேன். எத்தனை ஊர்களில் எத்தனை எத்தனை உறவுகள்? யாருக்கு என்ன ஆயிற்று? செல்போனை பார்த்துக்கொண்டிருந்தேன். தரை மீண்டும் குலுங்கியது. இது எப்போது முடிவுக்கு வரும்? அதன் பின் என்ன? அதுவரை என்ன? பக்கத்துத் தெருவுக்குப் போனால்? பக்கத்து மெயின்ரோட்டுக்குச் சென்றால்? அதுவரையிலாவது வழியை கண்டுபிடித்துப் போய்விட முடியுமா? மரணம் எனக்கும் அருகில்தான் நின்றுகொண்டிருக்கிறதா? சற்று அருகில் சரிந்த பில்டிங்கோடு சேர்ந்து வீழ்ந்த மரங்களைத் தவிர, தாக்குப் பிடித்து நின்று கொண்டிருந்த ஒன்றிரண்டு தென்னை மரங்களும் சரிந்துகொண்டிருந்தன. தரையில் படுத்துக்கிடப்பது ஓடும் வாகனத்தின் தளத்தில் படுத்திருப்பதைப்போல இருந்தது. எங்கிருந்தோ வந்த புழுதிப்படலம் ஒன்று எங்களை மூழ்கடித்தது. அதற்கு மேலும், இடிபாடுகளோ, வேறு பொருட்களோ வந்து எங்கள் மீது விழுந்தாலும் அதை உணர்ந்து விலகிச்செல்லக்கூட நேரமிருக்குமா தெரியவில்லை. 

பெரிய அச்சம் என்னை சூழ்ந்திருந்தது. எனக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த மனைவி என்னவானாள் என்று பார்க்க பார்வையை திருப்பினேன். சற்று தொலைவில் இரண்டு, மூன்று பேர் குப்புற விழுந்துகிடந்தனர். அவர்களில் ஒருவராக அவளும் இருக்கலாம். இயற்கையின் பெரும் சக்திக்கு முன்னால் சட்டென நசுங்கி உயிர்துறக்கும் ஒரு எறும்பைப்போல என்னை உணர்ந்தேன்.

சற்று நேரத்தில் நில அதிர்வுகள் நின்றுபோயிருந்தன. பேய்க்காற்று சுழன்றடித்துக்கொண்டிருந்தது. மழை வரக்கூடும் என்பதாகவும் தோன்றியது. குழந்தையை மார்போடு சேர்த்து எனது சட்டைக்குள்ளாக அணைத்துப்பிடித்து குழந்தையின் மேல் பாரம் விழாமல் முடிந்தவரை குப்புறப் படுத்திருந்தேன். கைகளில் வலியெடுக்கத் துவங்கியிருந்தது. எங்கோ ஏதோ ஓலம் நிரந்தரமாக கேட்டுக்கொண்டேயிருந்தது. பின்புறமாகத் திரும்பி மனைவியை பெயரைச்சொல்லி சத்தமாக அழைத்தேன். புழுதி மூடிக்கிடந்த நபர்களிடம் அசைவு தெரிந்தது. அதில்தான் இருக்கிறாள். மெதுவாகத் தவழ்ந்தவாறே என்னருகில் வந்தாள். தலை, முகமெல்லாம் புழுதி அப்பியிருந்தது. முதலில் என் மார்போடிருந்த குழந்தையை தொட்டுப்பார்த்துக்கொண்டாள். கீச்சுக்குரலில் அழுதுகொண்டிருந்த குழந்தையை தேற்றுமுகமாய் ஏதேதோ சொன்னாள். அடி எதுவும் படவில்லையே என்பதை முனகலாய் என் காதோடு கேட்டாள். அவளது இரண்டு கைகளிலும் சிராய்ப்புகளில் ரத்தக்கசிவைக் கண்டேன். அவளையும் இன்னும் சற்று நேரம் படு என்பதாய் சைகை காட்டிவிட்டு, மீண்டும் குப்புறப் படுத்தேன்.

ஏற்கனவே மழை துவங்கியிருந்தது. இது ஆசுவாசமா? இன்னுமொரு பிரச்சினையா? ஒரு பாதுகாப்பான இடத்தைத் தேடவேண்டும். செல்போனை மீண்டும் பார்த்தேன். அந்த ஐ போன், வேறெந்த உதவியையும் செய்யத்திறனிழந்து, தன் ஞாபகப்பகுதியிலிருந்த ஏராளமான பாடல்களை மட்டும் வேண்டுமானால் எனக்காக பாடிக்காண்பிக்கத் தயாராக இருந்தது. மழை வலுக்கத்துவங்க, குழந்தையை முடிந்தவரை சட்டைக்குள் பொதிந்துகொண்டு எழுந்தேன். என் மனைவியும் எழுந்தாள்.

மணித்துளிகள் உருண்டுகொண்டிருந்தன. பின்னர், இடிபாடுகளில் ஏறி தோராயமாக பிரதான சாலை நோக்கிச் சென்றோம். இடிபாடுகளில் சிக்கி ஏராளமானோர் இறந்து போயிருந்தனர். இன்னும் ஏராளமானோர் உயிருக்காக போராடிக்கொண்டிருக்கக்கூடும். எந்த மீட்புப்பணியும் நாங்கள் சென்ற எந்த இடத்திலும் துவங்கியிருக்கவில்லை. மழை கோபத்தோடு கொட்டிக்கொண்டிருந்தது. சரிந்தும் சரியாமலிருந்த சாய்வான ஒரு சுவருக்குக் கீழே அடைக்கலமானோம்.

அரசு உதவி கிடைக்கும் வரை பிழைத்திருந்தால் போதும் என்பதாக மனைவியை ஆறுதல் செய்து, அவள் கைகளில் பிள்ளையைத் தந்து அவளை மழை படாத இடமாக, உட்புறமாக ஒரு கல்லில் உட்காரவைத்தேன். தரையில் உட்காரமுடியாதபடிக்கு எங்கள் காலடியில் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. இந்நிகழ்வு துவங்கி பாதி நாளைக் கடந்திருந்தோம். மழையோடு இரவும் எங்களைச் சூழ்ந்திருந்தது. எனக்குப் பசி என்ற உணர்வே அற்றுப்போயிருந்தது. ஆனாலும் பசி எந்நேரமும் கொதித்தெழும் ஒரு நோய். இரவு உணவு? மனைவியையும், குழந்தையையும் பார்த்தேன். குழந்தை தாய்ப்பாலைக் குடிக்கும் வயதிலிருப்பது எவ்வளவு பெரிய ஆறுதல்? செல்போனில் நேரத்தைப் பார்த்தேன். செல்போனின் மின்சேமிப்புக் கூட இப்போது எவ்வளவு அவசியமானது? அதை அணைத்து பேண்ட் பாக்கெட்டில் பத்திரப்படுத்தினேன். பர்ஸை எடுத்துத்திறந்தேன். சதசதவென நனைந்து போயிருந்தது. சில நூறு ரூபாய்கள். முக்கிய வங்கிகளின், பல்லாயிரம் மதிப்புள்ள டெபிட், மற்றும் கிரெடிட் அட்டைகள். அதையும் பத்திரப்படுத்தினேன். உள்ளுக்குள் சிரிக்கிறேனோ? எந்த பொருட்களுமே விற்பனைக்கு இல்லாத போது இந்த பணத்துக்கும், அட்டைகளுக்குமான அர்த்தமென்ன?

சட்டையை மீண்டும் பிழிந்து குழந்தைக்காக வைத்துக்கொண்டதில், வெறும் பனியனோடு மழையில் நின்றுகொண்டிருந்தேன். அவர்களை அங்கேயே இருக்கச்சொல்லிவிட்டு எங்கு போவது? எதைத் தேடி என்று ஒரு முடிவும் இல்லாதவனாக நடக்கத்துவங்கினேன். நேற்று நான் பார்த்த இடமா இது?

இரவிலும் ஓயாத ஓலங்கள். சற்றுத் தொலைவிலிருந்த ஒரு கோயிலும் சரிந்து மண்ணொடு மடிந்திருந்தது. ஆனால் அந்தக்கோவிலைச் சுற்றியிருந்த வெட்டவெளி முழுதும் ஏராளமான மனிதர்கள் பெரும் திகைப்பில் நின்றுகொண்டிருந்தனர். பலரும் படுகாயங்களுடன் கிடைத்த இடங்களில் படுத்துக்கிடந்தனர். துணிகளை, பேப்பர்களை தலைக்குப் பிடித்தவாறு உட்கார்ந்திருந்தனர். மரங்களும், கட்டிடங்களும் ஒன்றும் மிச்சமில்லாத வகையில் இடிந்து, சரிந்து போய்விட்டனவா என்ன? வெளியுலகம் என்ன நிலையில்தானிருக்கிறது? நேற்று வரை உலகின் அடுத்த மூலையில் நடந்த விஷயங்களை அடுத்த நிமிசமே என்னிடம் கொண்டுவந்து கொட்டிய ஊடகங்கள் எங்கே? அவசியத்தைக் கூட அப்டேட் செய்துகொள்ள இயலாத சூழல் மூளையில் இறுக்கத்தை ஏற்படுத்தியது. உணவுப் பொட்டலங்களை வீசிடும் ஹெலிகாப்டர்களுக்குக் கூடவா வழியில்லை?

பசியோடு மீண்டும் மனைவி, பிள்ளை இருந்த இடத்துக்கே திரும்பினேன். அவர்களை மழையிலிருந்து காக்க ஒரு பெரிய பாலிதீன் தாளைத்தான் என்னால் கொண்டுபோக முடிந்தது. கற்களை அந்தச் சின்னக் கூட்டுக்குள் சேகரித்து அதன் மேல் பாலிதீனை விரித்து அவர்களைப் படுக்கவைத்தேன். நானும் அதற்குள் ஒண்டிக்கொண்டிருக்க இடமில்லாமல் வெளியே மழையில் அமர்ந்தேன். மனைவி, நெருக்கிக்கொண்டு அதற்குள் என்னையும் வந்துவிடுமாறு சைகை காட்டினாள். நேரம் என்ன? செல்போனை உயிர்ப்பிக்கவா? இந்தப் பேய் மழையில் அது நிரந்தரமாக உயிரை விட்டுவிடக்கூடும். யோசனையோடே எவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்தேனோ தெரியவில்லை.

மீண்டும் நான் எழுந்து உணவுக்காகவும், தங்குவதற்கு ஒரு இடத்தைத் தேடியும் கிளம்பினேன். அந்த இருளிலும், என் நினைவில் கடைகள் நிறைந்திருந்த மார்க்கெட் பகுதியை நோக்கித் தோராயமாக நடக்கத்துவங்கினேன். நிறைய இடிபாடுகளுக்கிடையே பயணித்ததில் சோர்வாக உணர்ந்தேன். அந்த இடத்தை நான் அடைந்தபோது அந்தப் பகுதி பெரும் வெள்ளப்பகுதியாக மாறியிருந்ததைக் கண்டேன். மனித நடமாட்டமே அங்கில்லை. ஏராளமான மரத்துண்டுகளும், ஓலைகளும் வெள்ளப்பகுதியில் சிக்கி அடைபட்டிருந்தன. இடுப்பளவு நீரில் இறங்கி இலக்கில்லாமல் போய்க்கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில், மிகுந்த சிரமத்துக்குப் பின்னர் ஒரு பழக்கூடை அந்தச் சிக்கலுக்குள் ஒதுங்கிச் சிக்கிக்கொண்டிருந்ததைக் கவனித்து நெருங்கிச்சென்றேன். ஆச்சரியம்தான், அதில் சில ஆப்பிள் பழங்கள் கிடந்தன. ஆவலோடு அதை எடுத்துக்கொண்டு எங்கள் இருப்பிடத்தை நோக்கிக் கிளம்பினேன். வெள்ளப்பகுதியிலிருந்து மீண்டு, இடிபாடுகளுக்குள் ஏறி வந்த வழியே செல்லத்துவங்கினேன்.

சற்று தூரம் சென்றிருந்தேன். எதிரே இரண்டு நபர்கள் இடிபாடுகளுக்குள் எதையோ தேடிச்சலித்து நிமிர்ந்தவாறே என்னைப் பார்த்தனர். உடனேயே எழுந்து நின்று என்னை உற்று நோக்கினர். சாதாரணமாக நடந்துகொண்டிருந்த நான், ஏதோ விபரீதமாய் உறைக்க.. நின்றேன். அவர்களின் பார்வை என் கையிலிருந்த ஆப்பிள் பழங்களின் மீதே இருந்தது.

அவர்களில் ஒருவனின் கைகளில் ஒரு வலுவான மரத்தடி ஒன்று இருந்தது. வெளிச்சம் மிகக்குறைவாக இருந்த அந்தச் சூழலிலும் அந்தக் தடியில் ஏதோ ரத்தக்கறை போல தென்பட்டதை நான் கவனிக்கத்தவறவில்லை. அவர்கள் என்னை நெருங்கினார்கள். இதயம் படபடக்க நான் அமைதியாக நின்றுகொண்டிருந்தேன். ஒருவன் என் கைகளிலிருந்த பழங்களை எடுத்துக்கொண்டான். அவனது கண்கள் மின்னிக்கொண்டிருந்தன. பின்னர் இருவரும் இருளுக்குள் சென்று மறைந்தனர்.


எத்தனை நேரம் அப்படியே நின்றுகொண்டிருந்தேன் என்று தெரியவில்லை. பின்னர், அதற்கு அடுத்தத் தெருவில் நுழைந்தபோது, அங்கிருந்த இடிபாடுகளுக்கிடையே துழாவினேன். ஒரு மின்னலின் வெளிச்சத்தில் பளபளத்த பலமான ஒரு இரும்புக்கம்பி கையில் சிக்கியது. அதை வெளியே உருவி எடுக்கத்துவங்கினேன்.

பசி வயிற்றில் ஒரு தீப்பிழம்பைப்போல கிளை பிரிந்து அரிக்கத் துவங்கியிருந்தது.

.

7 comments:

DiaryAtoZ.com said...

அருமையான கதை தொடருங்கள்

அன்புடன் அருணா said...

good one!

பரிசல்காரன் said...

நல்லாருக்கு ஆதி.

புதுகைத் தென்றல் said...

ரொம்ப நல்லா இருக்கு

R. Jagannathan said...

This is my first visit to your site. I have made up my mind to follow you regularly. This story and the earlier one 'Thuppaaki' are really very well written - both in style and content. Regards - R. Jagannathan

Rishi Haran said...

mm... This is my story my life

ஸ்ரீமதி said...

OMG!!!