Wednesday, May 8, 2013

இப்போதைக்கு கொஞ்சம் அப்போதை!


அந்த விதை அதற்கு முன்னதாகவே விழுந்துவிட்டது. இளமையின் புத்தம் புதிய சிறகுகள்! உடல் எழுதும் ஓவியம்தான். உள்ளம் செய்ததாய் ஒரு கூடுதல் கற்பனை. செய்வனவற்றுக்கான நியாயங்கள் கற்பிப்பதே.. அதில் திளைத்திருப்பதே.. சுகம்தான்.

உணர்வாய் மனமே, அவள் இன்னும் சின்னப் பெண்தான்!

உனது பதினாறே உற்சாகம் எனில், அவளது பதினாறு? அது கடலை தன்னுள் கொண்டிருக்கும் துளி. காண உனக்கு கண்களும் போதாது. உணரவும் உய்க்கவும் உனது ரசனையும் போதாது. கடுமலையின் மீது பொழியும் பெருமழையில் கொஞ்சமாய் நீ நனைந்துகொள். எத்தனை போதாமை கொண்டது இந்த வாழ்வு? நீ நூறு பேராக இருந்தால் இது சாத்தியமாகுமா?

இத்தனை அழகாகவா ஒருத்தி இருக்கமுடியும்?

உனக்கு பொறுப்பே இல்லை பெண்ணே.. கொண்டாட்டம், பரிபூரணம், வாழ்வு எதுவும் உனக்குப் புரியவே இல்லை. விடு, நீ தவறு செய்தால் கூட அது அழகுதான்!

ஒவ்வொரு முறை உன்னை எழுத முயற்சிக்கும் போதும், ஐந்து வயதிலிருக்கும் என் மகள், சொல்ல வரும் விஷயத்தைச் சொல்ல ஒரு வார்த்தையைத் தேடித் திக்கித்திணறி நிமிடங்களாக போராடி, ’என்ன மொழி இது, இத்தனைக் கடினமா.. சொல்லாமலே புரியாதா உங்களுக்கு?’ என்ற அர்த்தம் தொனிக்க “அப்பா!” என்று முடித்துவிட்டு விலகும் தருணமாகவே எனக்கும் ஆகிவிடுகிறது.‘புரியாதா உங்களுக்கும்? இது காதல்!’ :-))

இன்று மே 8! இது எனக்கான பிப்ரவரி 14! வாழ்த்துகள் அனைவருக்கும்!
.

Friday, May 3, 2013

சூது கவ்வும் -விமர்சனம்

சமீப காலமாக தமிழ்சினிமா இதுவரை பார்க்காத புதிய கதைக்களங்களை (genre) புதிதாக வரும் இளைஞர்கள் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது. காதலில் சொதப்புவது எப்படி, அட்டகத்தி, பீட்ஸா, நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்.. போன்ற படங்களின் வரிசையில் இதோ சூது கவ்வும்!

சின்னச்சின்ன லாஜிக் குறைபாடுகள், அவ்வப்போது கிளைக்கதைகளில் அலைபாயும் திரைக்கதை என சில பிரச்சினைகள் இருந்தாலும் இந்தப்படத்தில் பாராட்டுவதற்கும், ரசிப்பதற்கும் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.

ஒழுக்கமான விதிமுறைகளோடு இயங்கும் ஒரு காமிக்கல் கடத்தல்காரனாக விஜய் சேதுபதி. சூழல் காரணமாக அவருடன் இணையும் மூன்று இளைஞர்கள். தவிர்க்க இயலாமல் அவர்கள் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டிய, அவர்களது விதிகளை மீறிய ஒரு பிராஜக்ட்! அதன் தொடர்ச்சி, அரசியல்வாதிகள், போலீஸ்காரர்கள் என் பிற்பகுதி, நிறைய சம்பவங்களோடும், காரெக்டர்களோடும் முடிவுக்கு வருகிறது. பெண்களே இல்லாத ஒரு திரைக்கதை. ஒரு ஹீரோயினே இல்லாமல் போரடித்துவிடாது நமக்கு? நலனின் இந்த முதல் புத்திசாலித்தனமே நம்மைக் கட்டிப்போட்டுவிடுகிறது. ஏற்கனவே காமெடியா, சீரியஸா எனப் பிரிக்க முடியாதபடியான காரெக்டர்கள், சம்பவங்கள். அதோடு கூட விஜய் சேதுபதிக்கு ஹலுசினேஷன் பிரச்சினை. கூடவே அவருடைய காதலி இருப்பதாக ஒரு பிரமை. பிறகென்ன விஜய் மொத்து வாங்கும் இடங்களில் கூட பளபளக்கும் லிப்ஸ்டிக்குடன், கசங்காத மினி ஆடைகளுடன் லாஜிக் பிரச்சினையே இல்லாமல் ஐஸ்க்ரீம் தின்றுகொண்டிருக்கிறார் ஹீரோயின்!


பெரும்பாலும் குறும்படங்களில் நாம் பார்த்த நடிகர்கள். பிரமாதமான பங்களிப்பு. சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் ராதாரவியின் காரெக்டர் அட்டகாசம். எம்.எஸ். பாஸ்கரின் இடம், அவரது மகனுக்கு இடம்மாறும் போது வரும் பாடலும், காட்சிகளும் நம்மைச் சிரிக்கவைத்தாலும் கொஞ்சம் கூட நிஜம் மிகைப்படுத்தப்படாத காட்சிகள் அவை. காட்சிக்கு காட்சி வெடிச்சிரிப்பு சிரிக்கவைக்கும் வசனங்கள் இல்லை. இருப்பினும் விறுவிறுப்பில் குறைவில்லை. லாஜிக் மீறலே ஆயினும் ஹெலிகாப்டர் கடத்தல், இருட்டு அறையில் முரட்டுக்குத்து போன்ற விஷயங்கள் ரசிக்கவைக்கின்றன. அதுவும் பலான டயலாக்காக பயன்படுத்தப்பட்டுவந்த இந்த முரட்டுக்குத்துக்கு இனி அர்த்தம் மாறும். தியேட்டரே அல்லோலகல்லோலப்படுகிறது அந்தக் காட்சியில். முரட்டு போலீஸ் அதிகாரியின் நடவடிக்கைகளில் ஒரு ஆக்‌ஷன் படத்துக்கான சுவாரசியம். அவருக்கான க்யூட் முடிவும், அரசியல்வாதி கதையின் க்யூட் முடிவும், விஜய்சேதுபதிக்கான க்யூட் முடிவும் என படம் மொத்தத்தையுமே க்யூட் என்றாலும் தகும்! விஜய் சேதுபதி, தனக்கான கதைகளை தேர்ந்தெடுப்பதில் புத்திசாலியாகத் தெரிகிறார். தொடர் வெற்றி ஏதும் மிதப்பைத் தருமானால் கூடிய சீக்கிரமே விமல், விதார்த் போல மூன்று இஞ்ச் தடிமனுக்கு பகுடர் பூசிக்கொண்டு ஹீரோயினோடு டூயட் பாடக்கூடும். அப்படி ஒரு துரதிருஷ்டம் இவருக்கோ, நமக்கோ நேராமலிருப்பதாக! கடுப்பேற்றும் பாடல்களையே சினிமாவிலிருந்து மொத்தமாக தூக்கிக் கடாசிவிடும் காலம் தூரத்திலில்லை என நினைக்கிறேன். இதில் கதையோட்டத்துக்கு இடைஞ்சலில்லாத வகையில் ஒன்றிரண்டு பாடல்கள் மட்டுமே.  பின்னணி இசை, ஒளிப்பதிவு என எல்லாமே நிறைவு.

நலன் குமாரசாமியை கைகுலுக்கி வரவேற்போம்.

உண்மையைச் சொல்லவேண்டுமானால் சூது கவ்வும் மட்டுமல்லாது மேற்கூறிய அனைத்துப் படங்களிலுமே ஏதோவொரு குறை, குறிப்பாக கதையோட்டத்தில் இருப்பதை நாம் உணரமுடியும். இருப்பினும் அதையும் தாண்டி இந்தப் படங்கள் அனைத்துமே வரவேற்கபடவேண்டியவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இதே இயக்குனர்களின் இரண்டாவது மற்றும் அடுத்தடுத்த படங்கள் தமிழ்ச்சூழலில் மிக முக்கியமாக எதிர்பார்க்கப்படவேண்டியவை. அவை இந்தப் படங்களிலிருந்த குறைகளும் கூட இல்லாமல், இன்னும் புதுமையும், விறுவிறுப்புமாக தமிழ் கமர்ஷியல் சினிமாவின் போக்கையே மாற்றியமைக்கத்தக்க படங்களாக, ரசனையை தூக்கிப்பிடிக்கும் படங்களாக அமையவேண்டும் என்பது நம் ஆசை. இவர்கள் பாக்ஸ் ஆபீஸை சிதறடிப்பதன் மூலம் இன்றைய வெற்று கமர்ஷியல் இயக்குனர்களையும், பில்டப் ஹீரோக்களையும் வான்வெளியிலிருந்து தரைக்கு இறங்கி வரவைக்க வேண்டும். இவர்கள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவார்கள் என்று நம்புவோம்.

.

போனஸ்: உதயம் NH4

ஒரு நல்ல சுவாரசியமான படத்துக்கு திரைக்கதைதான் முக்கியம் முக்கியம் என்று பேசிக்கொண்டிருக்கிறோம், கேள்விப்பட்டிருக்கிறோம் இல்லையா? ஒரு இயக்குனர் நினைத்தால் எப்பேர்ப்பட்ட திரைக்கதையையும் கூட சொதப்பி, கண்கொண்டு பார்க்கவிடாமல் செய்துவிடமுடியும் என்பதற்கு உதாரணம் இந்தப்படம்.

அதையும் மீறி, படம் ஓரிரு இடங்களில் நன்றாக இருக்கிறது என்றால் இயக்குனர் நல்லவேளையாக அப்போதெல்லாம் டயர்டாகி தூங்கியிருப்பார் என நம்பலாம். இயக்குனர் மணிமாறன், வெற்றிமாறனின் மாமனோ, மச்சானோ தெரியல, ஒரு நல்ல ஆக்‌ஷன் ஸ்க்ரிப்ட் போச்சு. மேலும் இப்படி ஒரு ஹீரோயினை கண்டுபிடித்து கொண்டுவந்தவருக்கும் ஏதாவது சிறப்புப் பரிசு வழங்கலாம். முடியல..

.