Monday, June 3, 2013

கலைஞர் 90


நமக்கு மிக அருகிலே இருக்கும் வரலாற்றைக்கூட அறியாத அறியாமையில்தான் சிக்கியிருக்கிறோம். எத்தனையெத்தனை சமூகப்பிணிகள்! அடிமைத்தனம்! சிந்தனையையும் கூட பற்றிக்கொண்ட அடிமைத்தனம்! அதில், இதில் என்றில்லாத சகலத்திலும்! உயிருக்கும், உடமைக்கும் ஆபத்தில்லாததைப்போன்ற தோற்றம் கொண்ட ஒரு மாய அடிமைத்தனத்திலிருந்து புரட்சி உருவாகுமா? உலக வரலாற்றில் எங்கேனும் உருவாகியிருக்கிறதா? வாய்ப்பு மிகக்குறைவானதுதான்.

ஆனால் இங்கு நிகழ்ந்தது.

அதை நிகழ்த்திய பெரியார் எனும் புரட்சிக்காரன் எழுப்பிய சமூக மறுமலர்ச்சிதான் எத்தகையது? பெருமூங்கில் காடொன்றைச் சடசடவென எரித்தத் தீக்குச்சி அவன்!

அப்பணியைத் தொடர்ந்த பேரறிஞரும், கலைஞரும் அதற்காகவே கொண்டாடப்படவேண்டியவர்கள்.சோர்விலான் என்ற சொல்லின் பொருள் கலைஞர். 

எத்தனையெத்தனைப் பணிகள். பகுத்தறிவுப்பகலவனின் கொள்கைகளை, சுய சிந்தனைகளை எழுத்திலும், சொல்லிலும், ஊடகங்கள் பலவற்றிலும் தன் தங்கத்தமிழ் கொண்டு ஓயாது பரப்பியவர் அவர். மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் கட்டப்பட்டிருந்த ஏற்றத்தாழ்வுகளை உடைத்தெறிந்தது, சுதந்திரத்தை, சுயமரியாதையை எழுத்தறிவில்லாத கடைசி மனிதனும் உணர்வுகளில் ஏந்திக்கொள்ளும்படியாக கொண்டு சேர்த்தது, கல்வியை, வாய்ப்புகளை எல்லோருக்கும் பொதுவாக்கியது, பெண்ணடிமைத்தனம் எனும் தளையை அறுத்தெறிந்தது.. என தி.மு.கவின் சாதனைகள் பட்டியலிட்டு மாளாது. அந்த வெற்றியில் பெரும்பங்கு கலைஞருக்குண்டு. 

உலகின் மூத்த மொழி தமிழ், மூத்த குடி தமிழ்க்குடி என்போர் உளர். தென்கிழக்காசிய நாடுகள் மட்டுமின்றி உலகெங்குமே தமிழர்கள் பரவியிருந்த காலமிருந்தது எனவும், ஒரு வேளை அவர்கள் உலகையே ஆண்டிருக்கவும் கூடும் என்ற கூற்றும் கலாச்சார, பண்பாட்டு ஆய்வாளர்களிடையே உள்ளது. சமீபத்தில் ஆப்பிரிக்கக்கண்டத்தின் கேமரூன் தேசத்து பழங்குடியினர் தெளிவான தமிழ் வார்த்தைகள் பலவற்றை அவர்களது மொழியில் கொண்டுள்ளனர் எனும் செய்தியை அறிகிறோம். இவை ஒருபுறமிருக்க, தமிழ் ஒரு தொல்மொழி என்பதில் நமக்கு ஐயமில்லை.

தமிழ்க் காதல் என்பதே பிறமொழி எதிர்ப்பு என்பதாக பல சமயங்களில் புரிந்துகொள்ளப்படுகிறது. ’மொழியில் என்ன இருக்கிறது?’ என்பதாக பல சமயங்களில், அறியாமையில் விளையும் கேள்விகள் எழுகின்றன. மொழி என்பது சுயம். தாய்மொழியை இழப்பதால் நாம் நம் சுயத்தை இழக்கிறோம். நம் பாரம்பரியத்தை, பண்பாட்டை, இயல்பைத் தொலைக்கிறோம். நம் இனமே இரவல் முகத்தோடு அலையப்போகும் அவலம் நேரலாம்.. சகல சாத்தியங்களையும், அழகையும் கொண்ட மொழியைத் தொலைப்பது என்பது அறிவீனம்!

இத்தகைய நவீன அறிவியல், கணினி உலகிலும் தமிழை இந்த அளவிலாவது நாம் கொண்டுவந்திருக்கிறோம் எனின், அதற்கான பெருமையைப் பெற்றுக்கொள்ளும் மூத்த அறிஞர்களுள், போராளிகளுள் கலைஞர் முதல் வரிசையில் இருப்பார். தமிழிலக்கியத்தில் பங்குபெற்றோர் மட்டும்தான் ’அவரே என் தமிழார்வத்துக்குக் காரணம்’ என்று அவரை புகழமுடியும் என்றில்லை. நம்மைப்போன்ற வாசகர்களும் கூட என் தமிழார்வத்துக்கு கலைஞரே காரணம் என்றும் சொல்லலாமில்லையா? அவரின் நகைச்சுவை இழையோடும் தமிழ்ச்சுவை அத்தகையது. எத்தனை நாவல்கள், எத்தனைக் கட்டுரைகள்!

வரலாற்றையும் கொஞ்சம் வாசித்தறிவோம். கலைஞர் அவர் காலத்தைய, தமிழ் சமூகம் எதிர்கொண்ட முக்கியத் தளைகளுக்கு எதிராக சிறப்பாக போராடினார். பத்து வயதில் தொடங்கிய அந்தப் போராட்டம் தொண்ணூறு வயதில் இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஆனால் நம்மில் சிலர், ஆற்றவேண்டிய நம் பங்கும் இருக்கிறது என்பதை மறந்து இப்போதும் தொடரும் சில சமூகத் தளைகளுக்காகவும், புதிதான அவலங்களுக்காகவும் அவர் என்ன செய்தார் என்பதாக அவரையே சீண்டிக்கொண்டிருக்கிறோம்.

வாழ்த்த வயது ஒரு தடையல்ல..

மூத்த சகோதரனுக்கு என் அன்பு வாழ்த்துகள், தொண்ணூறல்ல, இன்னும் நூறாண்டுகள் காண்!

.

2 comments:

PARITHI MUTHURASAN said...

நிதர்சனமான பதிவு

சித்தன்555 said...

நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும்.