Saturday, August 31, 2013

தங்க மீன்கள் -விமர்சனம்


சரியாகப் படிக்காமல், பணம் சம்பாதிக்கத் துப்பில்லாமல், எதையும் முகத்துக்கு நேராகவும், நேர்மையாகவும் பேசக்கூடிய, மெல்லிய குணங்களை மதிக்கும், செம்புக் கலக்காத தங்கத்தைப் போலிருக்கும் (இவ்வளவு நீட்டி முழக்காமல் பிலோ ஆவரேஜ்னு சிம்பிளா சொன்னா ஈஸியா புரிஞ்சிப்பீங்களே..) கல்யாணி எனும் ஒருவன். அவனைப் போலவே இருக்கும் அவனது செல்ல மகள் செல்லம்மா! இவர்கள் இருவருக்குமிடையே இருக்கும் பாசப்பிணைப்பைச் சொல்ல முயல்கிறது இந்தத்தங்க மீன்கள்’.

படத்தில் வரும் ஒவ்வொரு காரெக்டர்களும் இயல்பை ஒட்டி நிற்பது அழகு. மகனின் குணத்தை முழுதும் புரிந்துவைத்துக்கொண்டு உள்ளுக்குள் பாசமும், வெளியில் கண்டிப்புமாய் பரிதவிக்கும் தந்தை, போலவே ஒரு தாய், காதல் மனைவி, அவர்களுக்கிடையேயான அன்பும், மோதலுமான அழகிய இயல்பான உறவு. சற்று நேரமே வந்தாலும் அண்ணன் மீதும், மருமகள் மீதும் பாசம் கொண்ட தங்கை, இயல்பு மீறாமல் வந்து போகும் செல்லம்மாவின் சின்னத்தோழி நித்யஸ்ரீ, செல்லம்மாவின் எவிட்டா மிஸ் என அத்தனை காரெக்டர்களும் நிறைவாக செதுக்கப்பட்டுள்ளன. அதிலும் இரண்டு, மூன்று காட்சிகளில் மட்டுமே தலைகாட்டும் எவிட்டா மிஸ்ஸின் நெகிழ்வான பின்னணிக் கதை, திரையில் எங்குமே சொல்லப்படாமல், நாமே கற்பனை செய்துகொள்ளும்படி சொல்லப்பட்டிருப்பது க்யூட்! அவ்வப்போது மனைவிக்கேயுரிய விதங்களில் கோபம் கொண்டாலும், 12ம் வகுப்பு படிக்கும்போதே காதலன் அழைத்தான் என்பதற்காக ஓடிவந்து கல்யாணம் செய்துகொண்ட வடிவு, தன் காதல் கணவன் மீது கொண்டுள்ளதொரு குறைவில்லாக் காதலும் மெனெக்கெட்டுக் காட்சிப்படுத்தாமலே நமக்குச் சொல்லப்படுகிறது. குட்டிப்பெண் நித்யஸ்ரீயின் தற்கொலை செய்துகொள்ளுமளவுக்கான ஒரு சோகமும், அதை, அவள் செய்யாமலிருப்பதற்கான காரணமும் ஒரு க்யூட் கவிதை!!ஆனால், இப்படி ஒவ்வொரு கதாபாத்திரங்களும், குணநலன்களும் செவ்வனே செதுக்கப்பட்டிருக்க, படத்தின் ஆதார பாத்திரங்களான செல்லம்மா, மற்றும் அவளது அப்பா கல்யாணியின் பாத்திரங்கள்? இங்குதான் சறுக்குகிறார் ராம்.

செல்லம்மா, சமயங்களில் புத்திசாலிக் குழந்தையாகவும், சமயங்களில் நெகிழ்வை உண்டு பண்ணவேண்டும் என்பதற்காகவே மண்டாகவும் இருக்கிறாள். படிப்பின்மை, குழந்தை மீதான பாசம், எல்லாம் ஒருபுறம் இருந்தாலும் குழந்தைக்கு அந்த வயதின் குழந்தைமை கிடைக்கவேண்டும் என்ற உயரிய எண்ணம், படிக்காதவன், சம்பாதிக்காதவன் ஒன்றும் முட்டாளல்ல என்பதான தெளிவு என சமயங்களில் தெளிவாக இருக்கும் கல்யாணி, குறைந்த பட்ச வருமானத்துக்குக்கூட வழியறியாது நிற்பது, அப்பாவோடு புரிதலில்லாமல் இருப்பது, பெரும் பணவரவு இல்லாத நிலையிலும் பிள்ளையைப் பிரிந்து தூரம் செல்வது என்பதெல்லாம் சிம்பதி நோக்கத்துக்கான காட்சியமைப்புகளாவே இருக்கின்றன. அதுவும் பழம்பொருள் ஒன்றைத்தேடும் கிளைக்கதையெல்லாம் அவசியமில்லாத இணைப்பாகவே இருக்கிறது. அதிலும், அதைப்பற்றி விசாரிக்கும் பொறுமை கூட இல்லாமல், லாப்டாப்பை அவன் தூக்கிக்கொண்டு ஓடுவதெல்லாம் அபத்தம். கதையோடு, உணர்வுகளோடு ஒன்றவிடாமல் நம்மைத் தள்ளிவிடும் காட்சிகள் இவை.

போலவே, படத்தின் ஆதாரக் கதையும் நிலையாக இல்லை, அல்லது உறுதியாக வடிவமைக்கப்படவில்லை. இருவரின் பிலோ ஆவரேஜ் அறிவும், அதனால் அவர்கள் சகமனிதர்களிடையே அடையும் இன்னலும் என்று புரிந்து கொள்வதா? தனியார் பள்ளிகளுக்கும், அரசுப்பள்ளிகளுக்குமிடையேயான சாதக பாதகங்களை அலசுகிறது எனக்கொள்வதா? அன்புக்குழந்தையைச் சூழல் காரணமாகப் பிரியும் தகப்பன், குழந்தை அறியாமையில் கேட்கும் ஒரு பரிசினைத் தர மேற்கொள்ளும் போராட்டமெனக் கொள்வதா? என.. நிறையக் கேள்விகள்!

நல்ல படங்கள் மீதுதான் நமக்கு விமர்சனங்களும் அதிகமாக இருக்கின்றன. ஏனெனில் தப்பான விஷயங்கள் சரியா செய்யப்பட்டிருந்தால் என்ன? தப்புத் தப்பாக செய்யப்பட்டிருந்தால் என்ன? எல்லாம் ஒன்றுதான். நல்ல விஷயங்கள் தப்புத் தப்பாக செய்யப்படும்போதுதான் சிக்கலே. இதன் பின் விளைவுகளோ, பொருளாதாரத் தோல்விகளோ இதைப்போன்ற பின் தொடரும் நல்முயற்சிகளை எப்போதும் பாதிப்பதாகவே இருக்கும். எனவே ராம் போன்றவர்களுக்கான பொறுப்பு, மற்றவர்களை விட கொஞ்சம் அதிகமே!

இதெல்லாவற்றையும் தாண்டி படம், அச்சுப்பிச்சு வில்லன்கள், நச்சுக்குத்துப் பாடல்கள் என அபத்தங்களின் மீது நம்பிக்கையில்லாத ஒரு இயக்குநரின் ஆர்வத்தையும், அழகுணர்ச்சியையும் காட்டுகிறது. மெல்லிய உணர்வுகளைப் பேசுகிறது. அழகிய பாடல்கள், அருமையான ஒளிப்பதிவு, நல்ல நடிப்பு என டெக்னீஷியன்களின், நடிகர்களின் நிறைவான பங்களிப்புகள். அதுவும் லொகேஷன்கள் படத்தின் மிகப்பெரிய ப்ளஸ்! நிச்சயம் வரவேற்கப்படவேண்டிய முயற்சி.

தவறவிடக்கூடாத ஒரு படம், இந்தத்தங்க மீன்கள்’!

.

6 comments:

rajasundararajan said...

இது ஜெயமோகன் தன் மகன் அஜிதனை மெட்ரிகுலேஷன் பள்ளியிலிருந்து அரசுப் பள்ளிக்கு மாற்றிய கதை அல்லவா? இருக்க, இது தன் கதை என்கிறாரே ராம், என்ன வகையான திருட்டு இது? அதுவும் ஜெயமோகன் முதலான நவீன இலக்கியவாதிகள் திரைப்பட இயக்குநர் விக்கிரமன் சென்டிமென்டைத்தான் இன்னும் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள் என்றெல்லாம் உளறிவிட்டு, இப்படித் திருடலாமா?

தமிழ் வசந்தன் said...

நியாயமா இந்த விமர்சனத்த எழுதினவர் படம் பார்க்க விரும்பல. அறிவியல் நோட்டு போல, கம்யூட்டர் டேட்டாபேஸ் போல வெறும் டேட்டாவா நிரம்பியிருக்கனும்னு விரும்புறார். அதுக்குப் பேர் படமில்ல சார். வெறும் டேட்டா... நீங்க சொன்னமாதிரி எந்தக் குறையும் படத்தில கொஞ்சம் கூட தெரியல... இது மாதிரி எதிர்ப்பா எழுதினா... நாலு பேர் கூடுதலா கமெண்ட் போடுவாங்கன்ணே திட்டம்போட்டு எழுதறவங்க சங்கத்த சேர்ந்தவர் போல... எப்பத்தான் இந்தத் தரங்கெட்ட அரசியல் பண்றத விட்டுட்டு நேர்மையா விமர்சனம் செய்வாங்களோ... எனக்கு மட்டுமில்ல... என்னோடு சேர்ந்து படம்பார்த்த என் உறவுகள், குடும்பம், நண்பர் வீடு என்று கேட்கிற இடத்திலெல்லாம் நல்ல விமர்சனங்கள் மட்டுந்தான் காதில் விழுகின்றன. கையில் கீ போர்டு கிடைச்சுட்டா பப்ளிசிட்டிக்காக என்ன வேணும்னாலும் எழுதிடுவீங்களா... இதில நல்ல படங்களத்தான் விமர்சிக்க முடியும்... தப்பான படங்கள விமர்சிச்சா என்ன... பண்ணலைனா என்னன்னு தத்துவம் வேற... ஐயா, ராசா, தப்பான படங்கள கழுவி ஊத்தினாத்தான் அடுத்தது அது மாதிரி எடுக்கனும் நினைக்கிறவன் கொஞ்சமாது யோசிப்பான். இப்படி நல்ல படங்கள ஓவரா விமர்சனம் பண்ணி அந்த முயற்சி எடுக்கிறவங்கள மூலைல உட்கார விட்டுறுவீங்க உங்கள மாதிரி ஆளுங்க. இதுக்குப் பேரு அறிவாளித்தனம்னா... அப்ப நல்லாயிருக்குன்னு சொல்ற பெரும்பாலான சனங்க... இல்ல... மத்தவங்க எல்லாருமே அறிவே இல்லாத முட்டாளுங்க... நீங்க மட்டுந்தான் உலக அறிவாளின்னு நெனப்பா... நல்ல வழில போய் நல்ல பேர் எடுக்கப் பாருங்க. கொச்சையா எழுதி பப்ளிசிட்டி தேடிக்கிற பொழப்பெல்லாம் ஒரு பொழப்பா...

Erode VIJAY said...

இன்னும் படம் பார்க்கவில்லை என்பதால் உங்கள் விமர்ச்சனத்தை எந்த அளவுக்கு என் எண்ணங்களோடு பொருத்துவது என்று தெரியவில்லை. ;)

சற்று மேலே பின்னூட்டமிட்டிருக்கும் நண்பரின் வரிகளைப் படித்தபின்பு உங்கள் விமர்ச்சனமே எனக்கு மறந்துவிட்டது, ஆதி! ;)

ஊப்! ஒரு பிளாக் நடத்துவது இவ்வளவு கஷ்டமானதா?!!

Bagavath Kumar.A.Rtn. said...

படம் பார்த்தேன். “குழ்ந்தைமையை” தன் குழந்தைக்கு கொடுக்க முயலும் அன்புத்தந்தை யாக வரும் ராமின் நடிப்பு அருமை. சில இடங்களில் என் கண்ணில் கண்ணீர் துளிர்த்ததை கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனாலும் ராம் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் அழுத்தமான உணர்வுகளோடு வெற்றிகரமான படத்தை கொடுத்திருக்கலாம்

ஆதி தாமிரா said...

@விஜய்,

சண்டையில கிழியாத சட்டை எங்கயிருக்கு? பொதுசேவைனு வந்துட்டாலே இதெல்லாம் சகஜம்தானே.. அதோட நாம வேற நியாயவாதியா போய்ட்டோமா? அதனால நம்ப தளத்துல மாற்றுக்கருத்துகளுக்கும் இடமுண்டு! :-))))))

Shunmuganathan T said...

உங்களது கருத்து சுதந்திரத்தை மதிக்கிறேன். அதே சமயம் மென்மையான வார்த்தைகளைப் பயன்படுத்த ஒரு வேண்டுகோளும் வைக்கிறேன். !