Tuesday, October 15, 2013

கிராவிட்டி (Gravity)

ஹாலிவுட் படங்கள் பார்க்கத்துவங்கிய காலத்திலெல்லாம் எல்லாப் படங்களும் பிரமிப்பாக இருக்கும். 1999ல் சென்னைக்கு வந்து, பின் தொடர்ந்த சில வருடங்களில், சம்பாதித்த கொஞ்ச பணத்தையும் ஹாலிவுட் படங்கள் பார்த்தே கரைத்திருக்கிறேன். நிறுத்தி நிதானமாக ரசிக்க, சப்-டைட்டில் வைத்துக்கொண்டு புரிதலோட பார்க்க டிவிடி கிடையாது, நினைத்த உடன் டவுன்லோட் பண்ணிப் பார்க்க டோரண்ட் கிடையாது. எல்லாம் தியேட்டர்தான். புரிந்தாலும், புரியாவிட்டாலும், பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் அவ்வளவுதான். சிக்ஸ்த் சென்ஸ், வெர்டிகல் லிமிட், தி மம்மி, மேட்ரிக்ஸ், க்ளாடியேட்டர், எக்ஸ்-மென் போன்ற படங்கள் எல்லாம் அந்தச் சமயங்களில் பார்த்த மறக்க முடியாத படங்கள்தான்.

சென்னை வந்ததே ஒரு துணிச்சலான காரியம் எனக்கு. இந்த அழகில் வந்த புதிதில், தேவி தியேட்டரில்தான் ஸ்பீஸிஸ் (எந்த பாகம்னு ஞாபகம் இல்லை) படம் பார்க்க வேண்டும் என்ற ஆசை. தேவி தியேட்டரில் அதுவரை படம் பார்த்ததில்லை. நான் அடம்பிடிக்க, ரூம் மேட்ஸ் ஒருவரும் உடன் வர ஒத்துக்கொள்ளவில்லை. தன்னந்தனியாக சென்று மாலைக் காட்சி பார்த்துவிட்டு, அதுவும் 70எம்.எம்மில் பார்த்த வியப்பில் திறந்த வாய்மூடாமல் அறைக்குத் திரும்பினேன். வழியை மறந்துவிடாமல் இரவு பத்திரமாக ஜாஃபர்கான்பேட்டையில் இருந்த ரூமுக்கு வந்து சேர்ந்ததெல்லாம் சாதனையாக்கும்!

வருடங்கள் செல்லச்செல்ல, அதுவும் இந்த டிவிடி வந்த பின்பு சகட்டுமேனிக்கு ஆசைப்பட்ட ஹாலிவுட் படங்களையெல்லாம் பார்க்கத்துவங்கினேன். அதுவும் போதாமல், டோரண்ட் வந்த பிறகு கெசபலான்கா, கிங்காங் (1933) வரைக்கும் பின்னோக்கிச் சென்றும் பார்த்தாயிற்று. முக்கியமான படம் என்று யாராவது சொன்னால்- பஸ்ஸில் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர் முதலாக- சொன்னா போதும், உடனே போடு டவுன்லோடை என்று ஆகிவிட்டது. என்ன.. கொஞ்சம் இலக்கியம் தூக்கலாக இருக்கும் படங்கள்தான் கொட்டாவி வரவைத்தன, அதனால் அப்படியான படங்கள் இருக்கும் பக்கம் மட்டும் போவதில்லை. மற்றபடி வியப்பெல்லாம் போய் ஒரு கட்டத்தில், ’யாரப்பா டைரக்டர்? கேமரூனா! நல்லா எடுப்பானே பையன், அவன் படம்னா தியேட்டருக்குதான் போகணும்’ என்கிற லெவலுக்கு வந்தாச்சு.

எல்லா இடங்களிலும் நம்மை மாதிரி மனிதர்கள்தானே இருக்கிறார்கள்.. ’போடுறா மொக்கையனு.. அங்கேயும் 2 விஜய், 4 பேரரசு, 8 சற்குணம்னு இருக்கத்தானே செய்வாங்க’ என்பது பின்னர்தான் கொஞ்சம் கொஞ்சமாக தெரிய ஆரம்பித்தது. வேறென்ன.. அனுபவம்தான். அதன் பின்பு கொஞ்சம் செக் பண்ணிவிட்டு, படம் பார்க்கும் வழக்கம் வந்தது. ஆனாலும் முன்பு போல பிரமிப்பூட்டும் படங்களைக் காண்பது என்பது மிக அரிதான ஒன்றுதான்!!

கிராவிடி பிரமிப்பூட்டும் ஒரு படம்!


நல்ல இயக்குனர்கள், குழுக்கள் ஒன்று சேரும் போது, டெக்னாலஜி, செய்நேர்த்தி ஆகியன உச்சம் தொடுகின்றன. அதையெல்லாம் விளக்க முடியாது. விளக்குவதற்கும் கொஞ்சம் விவரம் வேண்டுமே.. அதோடு விளக்குவதெல்லாம் போதாது, இந்தப் படத்தைப் பொறுத்தவரை இது அனுபவிக்கப்பட வேண்டிய விஷயம். சர்வதேச விண்வெளிக்கூடத்தில் நிகழும் ஒரு நிகழ்வையும், அதைத் தொடரும் சிக்கல்களுமே கதை. இவை படமாக்கப்பட்ட விதமெல்லாம் நிச்சயம் அந்தத் துறை சார்ந்த டெக்னீஷியன்களையே (அதாவது கலை ரசனை கொண்டவர்களை மட்டும்)  வியக்கச்செய்யும் என்பதில் ஐயமில்லை. கதைக் களத்துக்கே நம்மைக் கொண்டு செல்லும் 3டி நுட்பம் இந்தப் படத்திற்கு சாலவும் பொருத்தமானது.

ஸ்பேஸில் மிதந்து கொண்டிருக்கும் ஒரே ஒரு பிரதான கதாப்பாத்திரம், அதன் கூடவே தத்தளிக்கும் நாம். பூமி எத்தனை அரிய ஒரு வாழிடம் இந்த மனிதர்களுக்கு என்பது மண்டைக்கு உறைக்கிறது.

டிஸம்பரில் இங்கிருக்கும் டெல்லிக்கு சென்றால் கூட குளிரில் விரைத்துக்கொண்டு காது அடைத்துக்கொள்ளும் போது, போதும்டா சாமீ, எப்போது போவோம் ஊருக்கு? ஒரு ஐந்து நிமிடம் கிடைக்காதா எனது சொந்த ஊரின் காற்று என்று ஆகிவிடும். சமயங்களில் நேரும் தனிமை என்பது நமக்குள் பல்வேறு சிந்தனைகளை ஏற்படுத்தும். ஆழ்கடல் நீச்சல், நம் புவியை நீங்கிச்செல்லும் உணர்வை ஏற்படுத்தி, நமது அற்ப நிலையை உணர்த்தும் என்பார்கள். அதைப்போல பன்மடங்கு இந்த விண்வெளி ஏற்படுத்தும் என்பதை உணரமுடிகிறது. ஆனால், இதெல்லாம் புரிந்தும் கூடத்தான் இத்தனைப் போராட்டங்கள், சல்லித்தனங்கள் நம்மிடையே! இன்னும் இன்னுமென.. நிலவைத் தொடட்டுமா, செவ்வாய்க்குச் செல்லட்டுமா என விண்ணைத் தொடுகிறது மனிதனின் ஆசை!

நம் இருப்பிடத்தின் அரிதான தன்மையை, சக மனிதனின் அரிதான தன்மையை உணரச்செய்யும் ஒரு அற்புதமான படமாக மலர்ந்திருக்கிறது கிராவிடி! அதுவும் அந்த கிளைமாக்ஸ், முத்தாய்ப்பு!


இறுதியாக ஒன்று. அந்த பிரதான கதாபாத்திரத்தில் தோன்றும் சாண்ட்ரா புல்லக். இத்தனைப் பெரிய கதையை, கதாபாத்திரத்தைத் தாங்கி, மிளிரச் செய்யவேண்டுமானால் அதற்கு எத்தகைய திறனும், அனுபவமும் வேண்டும்.!? ஸ்பீட் படம் பார்த்ததிலிருந்து சாண்ட்ராவின் ரசிகன் நான். பெயரை நினைவில் கொள்ளுமளவு நான் ரசித்த முதல் ஹாலிவுட் நடிகை இவர். கொஞ்சம் ஆண்மை கலந்த சாண்ட்ரா, ஹிலாரி ஸ்வாங்க், ஏஞ்சலினா ஜோலி, மிஷெல் ரோட்ரிகெஸ் போன்றோர் எனக்கு மிகவும் பிடித்தமானவர்கள். சாண்ட்ராவின் திரைவாழ்வின் மிக முக்கியமான படம் இந்த கிராவிடி! தவற விடாதீர்கள் என்ற வழக்கமான சொல்லாடல் மிகக்குறைவு இந்தப் படத்துக்கு!


Tuesday, October 8, 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்- ஒரு பார்வை


விறுவிறுப்பு, ஆக்‌ஷனுக்குப் பஞ்சமில்லாத கச்சிதமான ஒரு கிரைம் த்ரில்லர். இந்தத் த்ரில்லர் சினிமாவை, ‘ஒரு சாதாரண த்ரில்லர்’ என்பதைத்தாண்டியும் ஒரு உயர்வான இடத்துக்குக் கொண்டுசென்ற விதத்தில்தான் மிஷ்கின் வேறு படுகிறார். இரண்டு காரணங்கள். ஒன்று, மிஷ்கினின் பிரத்யேக கதை சொல்லும் பாணி. இரண்டு, வணிக சமரசங்கள் ஏதுமில்லாத மிஷ்கினின் துணிச்சல். இவற்றால் இந்தப் படம் தமிழின் முக்கியமான படங்களின் வரிசையில் ஓரிடத்தைப் பிடித்துக்கொண்டுவிட்டது.

பொதுவாகவே விமர்சனம் என்ற பெயரில் கதையைக் கொஞ்சம் சொன்னால் அது ஸ்பாயிலராக அமைந்துவிடும். அதிலும் த்ரில்லர் படங்களுக்குக் கேட்கவே வேண்டாம். ஆக, திரையரங்குகளிலிருந்து இந்தப் படம் ஓடிவிடும் முன்பு, தவறவிடாமல் உடனே ஓடிப்போயாவது பார்த்துவிடுங்கள் என்று மட்டும் கேட்டுக்கொள்கிறேன்.

மிக அரிதான சந்தர்ப்பங்கள் தவிர்த்து, சினிமாவில் குத்துப் பாடல்கள் மட்டுமின்றி எல்லாவிதமான பாடல்களையுமே நான் வெறுக்கிறேன். அவை சினிமா அனுபவத்தை குலைக்கின்றன என்பது என் தனிப்பட்ட கருத்து. இந்தப் படத்திலும் பாடல்கள் இல்லை, நகைச்சுவை என்ற பெயரில் வெறுப்பேற்றும் காட்சிகள் இல்லை. மிஷ்கினின் பிரத்யேக கிளிஷேக்கள், அவ்வளவு ஆர்வமான காத்திருப்புக்குப் பின்பான பின்கதை போதாமை, கிளைமாக்ஸ் நிஞ்சா ஃபைட் போன்ற சிற்சில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன.

ஆயினும் இளையராஜாவின் இசை, மிஷ்கினின் தனித்துவமான காட்சியமைப்புகள், நேர்த்தியான காரெக்டர்கள் வடிவமைப்பு, விறுவிறுப்பான திரைக்கதை, ஃபிளாஷ்பேக் உத்தி போன்ற புதுமைகள், நடிகர்களின் சிறப்பான பங்களிப்பு போன்றன அவற்றின் உச்சத்திலிருப்பதால் இந்தப் படம் ஒரு சிறப்பான உயரத்தை அடைந்திருக்கிறது.

மிஷ்கின், ஸ்ரீ, ஷாஜி போன்றோரின் காரெக்டர்கள் சிறப்பானவை. மிஷ்கினைத் துரத்தும் ஷாஜியின் தீவிரத்தையும், சலிப்பையும் மிகவும் ரசிக்கமுடிகிறது.

ராஜசுந்தர்ராஜன் ஐயா, மற்றும் அவர்தம் சீடர்கள் கண்டுணர்ந்து தரும் பின்னவீனத்துவ குறியீடுகளை உணரும் திறமையெல்லாம் எனக்கு இல்லை. முதல் காட்சியின் முதல் ஷாட்டிலேயே கதையைத் துவக்கிவிடும் கச்சிதமும், அந்த ஷாட்டின் அழகுணர்ச்சியும் எனக்கு மிகவும் பிடித்திருந்ததுதான், ஆனால் ராஜசுந்தர்ராஜன் அந்த ஷாட்டிலிருக்கும் குறியீடாக அவர் உணர்ந்ததைச் சொன்னபோது ஆச்சரியமாகத்தான் இருந்தது. இதெல்லாம் மிஷ்கினுக்குத் தெரியுமா? என்று நகைச்சுவையாக நான் சிந்தித்த போது.. மிஷ்கினே ஒரு விழாவில்.. ‘ஸ்ரீ ஏன் மிஷ்கினை முதுகில் தூக்கிக்கொண்டு அலைகிறான் தெரியுமா? சிலுவைய்ய்ய்யா அது. சிலுவையை சுமக்கிறான் அவன்’ என்று முழங்கினார். இப்படியெல்லாம் குறியீடுகளைக் கண்டுணர்ந்து உய்க்கும் திறன் இருந்தால் மிகவும் மகிழ்ச்சி...

இல்லாதவர்களுக்கு இது ஒரு நீட் அண்ட் க்ளீன் எண்டெர்டெயினர்!!


பின்னிணைப்பு:

சென்ற ஞாயிறு மாலை, சென்னையில் ’டயலாக்’ என்ற அமைப்பின் சார்பில் எழுத்தாளர் பவா.செல்லத்துரை மற்றும் அவரது நண்பர்களால் இப்படம் குறித்த ஒரு உரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அன்று காலைதான் படத்தைப் பார்த்திருந்தேன். நிச்சயம் பாராட்டுக் கூட்டத்தில் கலந்துகொண்டு அவருக்கான வாழ்த்தைப் பதிவு செய்யவேண்டியது அவசியம் என்று தோன்றியதால், அவ்வாறே எண்ணம் கொண்டிருந்த நண்பர்கள் இருவருடன் சென்றிருந்தேன். நிகழ்வு உரையாடல் என்று சொல்லப்பட்டு, பாராட்டுவிழாவாக மட்டுமே அமைந்தது. அதிலும் தவறில்லை. விமர்சனம், மாற்றுக்கருத்து, விவாதம் என்பதையெல்லாம் தாண்டி நல்ல முயற்சி செய்யும் கலைஞர்களை முதலில் மனம் திறந்து பாராட்டிவிடுவது முக்கியம்தான்.


ரசிகர்கள் பக்கமிருந்தும், கலைஞர்கள் பக்கமிருந்தும் ஏராளமானோர் மேடையேறி மிஷ்கினை மனம் திறந்து பாராட்டினார்கள். வழக்கம் போல ரசிகர்கள் பக்கமிருந்து சில ஓவர் டோஸ் உரைகளும் இருந்தன. இதுவும் இணைய உலகில் தவிர்க்கமுடியாததுதான். இணையப் பயனர்கள் என்போர் சற்றே முதிர்வு குறைவான நம் சமூகத்தின் ஒரு மாதிரிதானே தவிர, அதனினும் சற்று மேம்பட்ட சிந்தனையாளர்களாக, படைப்பாளிகளுக்கு நிகரானவர்களாக நான் கருதவில்லை. (மீ ட்டூ.. :-))) ) ஆகவே பெரும்பாலும் சமூகத்தின் ரசனையைத்தான் இணையமும் பிரதிபலிக்கும்.

பின்னர் கடைசியாக மிஷ்கின் ஏற்புரையாற்ற வந்தார். துவக்கத்தில், தேர்தல் நேர அரசியல்வாதி போல அவ்வளவு கொதிப்பு பேச்சில். சிரித்தால் இறங்கி வந்து உதைப்பார் என்று தோன்றியதால் அடக்கிக்கொண்டேன். தொடர்ந்து கொஞ்சம் அமைதியடைந்து சில நல்ல கருத்துகளையும் பகிர்ந்துகொண்டார். அதில், குறிப்பிடத் தகுந்த விஷயங்கள் பல இருந்தன.

”90 சதவீதத்துக்கும் அதிகமாக கமர்ஷியல் என்ற பெயரில் பொறுப்பற்ற குப்பைகள் வந்துகொண்டிருக்கும் ஒரு சூழலில், என்னைப் போல, தங்கமீன்கள் ராமைப் போல நல்ல முயற்சிகள் செய்பவர்களிடம் கொஞ்சம் பரிவோடு நடந்துகொள்ளுங்கள். இம்முயற்சிகளுக்கு மதிப்பளியுங்கள். நாங்கள் ஒன்றும் தவறிழைக்காத, முழுமையான மனிதர்கள் அல்லர். நாங்களும் உங்களைப்போலத்தான். எங்கள் படங்களிலும் சில தவறுகள் இருக்கலாம். அதையெல்லாம் தாண்டி எங்கள் நோக்கம் என்ன என்பதை புரிந்துகொள்ள முயற்சியுங்கள். எல்லா படைப்புகளும் விமர்சனங்களுக்குட்பட்டவைதான். ஆனால் விமர்சனம் என்றால் என்ன என்பதை புரிந்துகொண்டு எழுதுங்கள். ஒரு படைப்பை நிதானமாக உள்வாங்கிக்கொண்டு சிந்தித்து எழுதுங்கள். முதல் நாளே, முதல் காட்சி முடிந்ததுமே எழுத அப்படி என்ன அவசரம்? எப்படி அந்தப் படைப்பை அதற்குள் எடைபோடமுடியும்? அரைகுறையாக, அவசரமாக எழுதி ஒரு படைப்பைக் குத்திக் கிழிக்காதீர்கள், படைப்பாளியைக் காயப்படுத்தாதீர்கள். விமர்சகர்களுக்கு மிகவும் பொறுப்பு இருக்கிறது. பார்க்கும் உங்களுக்கு இருக்கும் அறிவைப்போலவே, எங்களுக்கும் அறிவு இருக்கிறது என்பதை உணருங்கள். மதிப்பளியுங்கள். ஒரு காட்சியை உருவாக்கும் போது ஏராளமான சிந்தனைக்கும், தர்க்க விவாதங்களுக்கும், கற்றலுக்கும், உழைப்புக்கும் பின்னரே அதைச்செய்கிறோம் என்பதை நம்புங்கள்”

மிகவும் சரியான கருத்துகள்தான். கேடிபில்லா கில்லாடிரங்காவையும், தங்க மீன்களையும் ஒரே விமர்சனப் பார்வையோடு அணுகுவது மிகவும் தவறுதான். விமர்சனம் என்ற பெயரில் இணையத்தில் ‘இணையம் எனக்குப் பரிச்சயம்’ என்ற ஒரே காரணத்தினாலேயே விமர்சனம் எழுதும் நண்பர்கள் இவற்றை மனதில் கொள்வது நல்லது (யாருக்கு? யாருக்கோ! :-)) ).

ஆனால் பேச்சின் துவக்கத்தில், “என் படத்தையா குறை சொல்கிறாய்? விட்டேனா பார். என்ன அறிவு இருக்கிறது உனக்கு? நீ வந்து படத்தை எடுத்துப்பாருய்யா, அப்பதான் அதோட கஷ்டம் என்னான்னு உனக்குத் தெரியும். முடியுமா உன்னால? என்ன மாதிரி 90 கிலோ உடம்ப வைச்சுகிட்டு ஓடமுடியுமா உன்னால? என்னையவா விமர்சனம் பண்றே? ட்ரிபூட்னா என்னான்னு தெரியுமா? என்னையவா காப்பியடிச்சேனு சொல்றே? கதைனா என்னான்னு தெரியுமா? சினிமான்னா என்னான்னு தெரியுமா? புரட்யூஸர்னா யார்னு தெரியுமா? குத்துபாட்டு இல்லைனா என்னாகும்னு தெரியுமா? ஒரு சினிமா எடுக்குறதுக்கு முன்னால முப்பது புக்கு படிக்கிறேன், முன்னூறு சினிமா பார்க்கிறேன், சம்பந்தப்பட்டவங்ககிட்ட மூவாயிரம் தடவை டிஸ்கஸ் பண்றேன். யாருகிட்ட.? பிச்சி பிச்சி..” என்று வேட்டியை மடிச்சிக்கட்டிகிட்டு களத்தில் இறங்கிவிட்டார்.

இதற்கும் வரிக்கு வரி ஒரே அப்ளாஸ்!! நம்மாட்களைப் பற்றிதான் தெரியுமே! போட்டு உதைச்சாலும் சிரிச்சி, ரசிச்சி, என்ஜாய் பண்ணி மஸாஜ் மாதிரி ஏத்துப்பாங்களே.. :-)))

ஒரு நல்ல கலைஞனுக்கு ஏன் இந்தப் பேச்சு? ஒரு சினிமா எடுப்பதே கடினம்தான். மேலும், வர்த்தக சமரசங்கள் ஏதுமில்லாமல் எடுப்பது இன்னும் கடினமான பணிதான். அதனால்தான் ராஜேஷுக்கும், மிஷ்கினுக்கும் வேறு வேறு இடங்கள் தரப்பட்டிருக்கின்றன. அதனால்தான் இந்த பாராட்டுக்கூட்டத்தில் இருக்கை இல்லாவிடினும் பரவாயில்லை என இரண்டு மணி நேரம் நின்று, கைத்தட்டி வாழ்த்து, அன்பு, நன்றியெல்லாம் தெரிவிக்கப்படுகிறது. அப்படி அதைச் சாதித்தவன் இப்படியெல்லாம் பேசிக்கொண்டிருக்காமல் அமைதிகாப்பதுதான் அவனது மேன்மையை இன்னும் உயர்த்தும்.

இத்தருணத்தில் கமல்ஹாஸன் மீது இன்னும் கொஞ்சம் மரியாதை முகிழ்ப்பதைத் தவிர்க்க இயலவில்லை. கமல்ஹாஸனை, அவரது முயற்சிகளை நாம் எத்தனை தடவை தூக்கி எறிந்திருக்கிறோம். அதற்காகவெல்லாம் இப்படி அவர் பேசிக்கொண்டிருந்தால், அந்த உரைதான் எவ்வளவு நீண்டதாக இருந்திருக்கும்? :-)))

*