Tuesday, October 8, 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்- ஒரு பார்வை


விறுவிறுப்பு, ஆக்‌ஷனுக்குப் பஞ்சமில்லாத கச்சிதமான ஒரு கிரைம் த்ரில்லர். இந்தத் த்ரில்லர் சினிமாவை, ‘ஒரு சாதாரண த்ரில்லர்’ என்பதைத்தாண்டியும் ஒரு உயர்வான இடத்துக்குக் கொண்டுசென்ற விதத்தில்தான் மிஷ்கின் வேறு படுகிறார். இரண்டு காரணங்கள். ஒன்று, மிஷ்கினின் பிரத்யேக கதை சொல்லும் பாணி. இரண்டு, வணிக சமரசங்கள் ஏதுமில்லாத மிஷ்கினின் துணிச்சல். இவற்றால் இந்தப் படம் தமிழின் முக்கியமான படங்களின் வரிசையில் ஓரிடத்தைப் பிடித்துக்கொண்டுவிட்டது.

பொதுவாகவே விமர்சனம் என்ற பெயரில் கதையைக் கொஞ்சம் சொன்னால் அது ஸ்பாயிலராக அமைந்துவிடும். அதிலும் த்ரில்லர் படங்களுக்குக் கேட்கவே வேண்டாம். ஆக, திரையரங்குகளிலிருந்து இந்தப் படம் ஓடிவிடும் முன்பு, தவறவிடாமல் உடனே ஓடிப்போயாவது பார்த்துவிடுங்கள் என்று மட்டும் கேட்டுக்கொள்கிறேன்.

மிக அரிதான சந்தர்ப்பங்கள் தவிர்த்து, சினிமாவில் குத்துப் பாடல்கள் மட்டுமின்றி எல்லாவிதமான பாடல்களையுமே நான் வெறுக்கிறேன். அவை சினிமா அனுபவத்தை குலைக்கின்றன என்பது என் தனிப்பட்ட கருத்து. இந்தப் படத்திலும் பாடல்கள் இல்லை, நகைச்சுவை என்ற பெயரில் வெறுப்பேற்றும் காட்சிகள் இல்லை. மிஷ்கினின் பிரத்யேக கிளிஷேக்கள், அவ்வளவு ஆர்வமான காத்திருப்புக்குப் பின்பான பின்கதை போதாமை, கிளைமாக்ஸ் நிஞ்சா ஃபைட் போன்ற சிற்சில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன.

ஆயினும் இளையராஜாவின் இசை, மிஷ்கினின் தனித்துவமான காட்சியமைப்புகள், நேர்த்தியான காரெக்டர்கள் வடிவமைப்பு, விறுவிறுப்பான திரைக்கதை, ஃபிளாஷ்பேக் உத்தி போன்ற புதுமைகள், நடிகர்களின் சிறப்பான பங்களிப்பு போன்றன அவற்றின் உச்சத்திலிருப்பதால் இந்தப் படம் ஒரு சிறப்பான உயரத்தை அடைந்திருக்கிறது.

மிஷ்கின், ஸ்ரீ, ஷாஜி போன்றோரின் காரெக்டர்கள் சிறப்பானவை. மிஷ்கினைத் துரத்தும் ஷாஜியின் தீவிரத்தையும், சலிப்பையும் மிகவும் ரசிக்கமுடிகிறது.

ராஜசுந்தர்ராஜன் ஐயா, மற்றும் அவர்தம் சீடர்கள் கண்டுணர்ந்து தரும் பின்னவீனத்துவ குறியீடுகளை உணரும் திறமையெல்லாம் எனக்கு இல்லை. முதல் காட்சியின் முதல் ஷாட்டிலேயே கதையைத் துவக்கிவிடும் கச்சிதமும், அந்த ஷாட்டின் அழகுணர்ச்சியும் எனக்கு மிகவும் பிடித்திருந்ததுதான், ஆனால் ராஜசுந்தர்ராஜன் அந்த ஷாட்டிலிருக்கும் குறியீடாக அவர் உணர்ந்ததைச் சொன்னபோது ஆச்சரியமாகத்தான் இருந்தது. இதெல்லாம் மிஷ்கினுக்குத் தெரியுமா? என்று நகைச்சுவையாக நான் சிந்தித்த போது.. மிஷ்கினே ஒரு விழாவில்.. ‘ஸ்ரீ ஏன் மிஷ்கினை முதுகில் தூக்கிக்கொண்டு அலைகிறான் தெரியுமா? சிலுவைய்ய்ய்யா அது. சிலுவையை சுமக்கிறான் அவன்’ என்று முழங்கினார். இப்படியெல்லாம் குறியீடுகளைக் கண்டுணர்ந்து உய்க்கும் திறன் இருந்தால் மிகவும் மகிழ்ச்சி...

இல்லாதவர்களுக்கு இது ஒரு நீட் அண்ட் க்ளீன் எண்டெர்டெயினர்!!


பின்னிணைப்பு:

சென்ற ஞாயிறு மாலை, சென்னையில் ’டயலாக்’ என்ற அமைப்பின் சார்பில் எழுத்தாளர் பவா.செல்லத்துரை மற்றும் அவரது நண்பர்களால் இப்படம் குறித்த ஒரு உரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அன்று காலைதான் படத்தைப் பார்த்திருந்தேன். நிச்சயம் பாராட்டுக் கூட்டத்தில் கலந்துகொண்டு அவருக்கான வாழ்த்தைப் பதிவு செய்யவேண்டியது அவசியம் என்று தோன்றியதால், அவ்வாறே எண்ணம் கொண்டிருந்த நண்பர்கள் இருவருடன் சென்றிருந்தேன். நிகழ்வு உரையாடல் என்று சொல்லப்பட்டு, பாராட்டுவிழாவாக மட்டுமே அமைந்தது. அதிலும் தவறில்லை. விமர்சனம், மாற்றுக்கருத்து, விவாதம் என்பதையெல்லாம் தாண்டி நல்ல முயற்சி செய்யும் கலைஞர்களை முதலில் மனம் திறந்து பாராட்டிவிடுவது முக்கியம்தான்.


ரசிகர்கள் பக்கமிருந்தும், கலைஞர்கள் பக்கமிருந்தும் ஏராளமானோர் மேடையேறி மிஷ்கினை மனம் திறந்து பாராட்டினார்கள். வழக்கம் போல ரசிகர்கள் பக்கமிருந்து சில ஓவர் டோஸ் உரைகளும் இருந்தன. இதுவும் இணைய உலகில் தவிர்க்கமுடியாததுதான். இணையப் பயனர்கள் என்போர் சற்றே முதிர்வு குறைவான நம் சமூகத்தின் ஒரு மாதிரிதானே தவிர, அதனினும் சற்று மேம்பட்ட சிந்தனையாளர்களாக, படைப்பாளிகளுக்கு நிகரானவர்களாக நான் கருதவில்லை. (மீ ட்டூ.. :-))) ) ஆகவே பெரும்பாலும் சமூகத்தின் ரசனையைத்தான் இணையமும் பிரதிபலிக்கும்.

பின்னர் கடைசியாக மிஷ்கின் ஏற்புரையாற்ற வந்தார். துவக்கத்தில், தேர்தல் நேர அரசியல்வாதி போல அவ்வளவு கொதிப்பு பேச்சில். சிரித்தால் இறங்கி வந்து உதைப்பார் என்று தோன்றியதால் அடக்கிக்கொண்டேன். தொடர்ந்து கொஞ்சம் அமைதியடைந்து சில நல்ல கருத்துகளையும் பகிர்ந்துகொண்டார். அதில், குறிப்பிடத் தகுந்த விஷயங்கள் பல இருந்தன.

”90 சதவீதத்துக்கும் அதிகமாக கமர்ஷியல் என்ற பெயரில் பொறுப்பற்ற குப்பைகள் வந்துகொண்டிருக்கும் ஒரு சூழலில், என்னைப் போல, தங்கமீன்கள் ராமைப் போல நல்ல முயற்சிகள் செய்பவர்களிடம் கொஞ்சம் பரிவோடு நடந்துகொள்ளுங்கள். இம்முயற்சிகளுக்கு மதிப்பளியுங்கள். நாங்கள் ஒன்றும் தவறிழைக்காத, முழுமையான மனிதர்கள் அல்லர். நாங்களும் உங்களைப்போலத்தான். எங்கள் படங்களிலும் சில தவறுகள் இருக்கலாம். அதையெல்லாம் தாண்டி எங்கள் நோக்கம் என்ன என்பதை புரிந்துகொள்ள முயற்சியுங்கள். எல்லா படைப்புகளும் விமர்சனங்களுக்குட்பட்டவைதான். ஆனால் விமர்சனம் என்றால் என்ன என்பதை புரிந்துகொண்டு எழுதுங்கள். ஒரு படைப்பை நிதானமாக உள்வாங்கிக்கொண்டு சிந்தித்து எழுதுங்கள். முதல் நாளே, முதல் காட்சி முடிந்ததுமே எழுத அப்படி என்ன அவசரம்? எப்படி அந்தப் படைப்பை அதற்குள் எடைபோடமுடியும்? அரைகுறையாக, அவசரமாக எழுதி ஒரு படைப்பைக் குத்திக் கிழிக்காதீர்கள், படைப்பாளியைக் காயப்படுத்தாதீர்கள். விமர்சகர்களுக்கு மிகவும் பொறுப்பு இருக்கிறது. பார்க்கும் உங்களுக்கு இருக்கும் அறிவைப்போலவே, எங்களுக்கும் அறிவு இருக்கிறது என்பதை உணருங்கள். மதிப்பளியுங்கள். ஒரு காட்சியை உருவாக்கும் போது ஏராளமான சிந்தனைக்கும், தர்க்க விவாதங்களுக்கும், கற்றலுக்கும், உழைப்புக்கும் பின்னரே அதைச்செய்கிறோம் என்பதை நம்புங்கள்”

மிகவும் சரியான கருத்துகள்தான். கேடிபில்லா கில்லாடிரங்காவையும், தங்க மீன்களையும் ஒரே விமர்சனப் பார்வையோடு அணுகுவது மிகவும் தவறுதான். விமர்சனம் என்ற பெயரில் இணையத்தில் ‘இணையம் எனக்குப் பரிச்சயம்’ என்ற ஒரே காரணத்தினாலேயே விமர்சனம் எழுதும் நண்பர்கள் இவற்றை மனதில் கொள்வது நல்லது (யாருக்கு? யாருக்கோ! :-)) ).

ஆனால் பேச்சின் துவக்கத்தில், “என் படத்தையா குறை சொல்கிறாய்? விட்டேனா பார். என்ன அறிவு இருக்கிறது உனக்கு? நீ வந்து படத்தை எடுத்துப்பாருய்யா, அப்பதான் அதோட கஷ்டம் என்னான்னு உனக்குத் தெரியும். முடியுமா உன்னால? என்ன மாதிரி 90 கிலோ உடம்ப வைச்சுகிட்டு ஓடமுடியுமா உன்னால? என்னையவா விமர்சனம் பண்றே? ட்ரிபூட்னா என்னான்னு தெரியுமா? என்னையவா காப்பியடிச்சேனு சொல்றே? கதைனா என்னான்னு தெரியுமா? சினிமான்னா என்னான்னு தெரியுமா? புரட்யூஸர்னா யார்னு தெரியுமா? குத்துபாட்டு இல்லைனா என்னாகும்னு தெரியுமா? ஒரு சினிமா எடுக்குறதுக்கு முன்னால முப்பது புக்கு படிக்கிறேன், முன்னூறு சினிமா பார்க்கிறேன், சம்பந்தப்பட்டவங்ககிட்ட மூவாயிரம் தடவை டிஸ்கஸ் பண்றேன். யாருகிட்ட.? பிச்சி பிச்சி..” என்று வேட்டியை மடிச்சிக்கட்டிகிட்டு களத்தில் இறங்கிவிட்டார்.

இதற்கும் வரிக்கு வரி ஒரே அப்ளாஸ்!! நம்மாட்களைப் பற்றிதான் தெரியுமே! போட்டு உதைச்சாலும் சிரிச்சி, ரசிச்சி, என்ஜாய் பண்ணி மஸாஜ் மாதிரி ஏத்துப்பாங்களே.. :-)))

ஒரு நல்ல கலைஞனுக்கு ஏன் இந்தப் பேச்சு? ஒரு சினிமா எடுப்பதே கடினம்தான். மேலும், வர்த்தக சமரசங்கள் ஏதுமில்லாமல் எடுப்பது இன்னும் கடினமான பணிதான். அதனால்தான் ராஜேஷுக்கும், மிஷ்கினுக்கும் வேறு வேறு இடங்கள் தரப்பட்டிருக்கின்றன. அதனால்தான் இந்த பாராட்டுக்கூட்டத்தில் இருக்கை இல்லாவிடினும் பரவாயில்லை என இரண்டு மணி நேரம் நின்று, கைத்தட்டி வாழ்த்து, அன்பு, நன்றியெல்லாம் தெரிவிக்கப்படுகிறது. அப்படி அதைச் சாதித்தவன் இப்படியெல்லாம் பேசிக்கொண்டிருக்காமல் அமைதிகாப்பதுதான் அவனது மேன்மையை இன்னும் உயர்த்தும்.

இத்தருணத்தில் கமல்ஹாஸன் மீது இன்னும் கொஞ்சம் மரியாதை முகிழ்ப்பதைத் தவிர்க்க இயலவில்லை. கமல்ஹாஸனை, அவரது முயற்சிகளை நாம் எத்தனை தடவை தூக்கி எறிந்திருக்கிறோம். அதற்காகவெல்லாம் இப்படி அவர் பேசிக்கொண்டிருந்தால், அந்த உரைதான் எவ்வளவு நீண்டதாக இருந்திருக்கும்? :-)))

*

11 comments:

shiva said...

சூப்பர்ணே.

Karthik Somalinga said...

அருமையான பதிவு ஆதி!! குறிப்பாக, இந்தக் கருத்து அட்டகாசம்!:

//இணையப் பயனர்கள் என்போர் சற்றே முதிர்வு குறைவான நம் சமூகத்தின் ஒரு மாதிரிதானே தவிர, அதனினும் சற்று மேம்பட்ட சிந்தனையாளர்களாக, படைப்பாளிகளுக்கு நிகரானவர்களாக நான் கருதவில்லை.//

இணையத்தில் இருப்பவர்கள் அனைவரும் அறிவாளிகளும் அல்ல, முட்டாள்களும் அல்ல! இணையம் என்பது சமூகத்தின் ஒரு மினியேச்சர் பிரதி அவ்வளவே! அதில் அனைத்து வகையினரும் இருப்பார்கள்! ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கருத்தும் இருக்கும்! அப்படி இருக்க "இணையத்தில் மோசமான விமர்சனம் போடுகிறார்கள்" என்பதை மட்டும் ஹைலைட் செய்து ஓவராக பொங்கும் படைப்பாளிகள் - இணையத்தில் அவர்களுக்கு சாதகமான விமர்சனங்களும் போடப்படுகின்றன என்ற உண்மையை மட்டும் convenient ஆக மறந்து விடுவது இணையமகா காமெடிதான்!!!

KSGOA said...

இங்க வந்தா கண்டிப்பா பாக்கணும்........

shortfilmindia.com said...

நானும் உங்களுடன் அங்கே இருந்த போது சொல்ல நினைத்ததுதான். .. சொல்ல டைமில்லை. நீங்க சொல்லிட்டீங்க..

யாத்ரீகன் said...

>> வேட்டியை மடிச்சிக்கட்டிகிட்டு களத்தில் இறங்கிவிட்டார்.<<

i saw it as a genuine anger from a person who has spent sincere effort and dedication. we cannot say that he cannot be angry and cannot express anger in this way. imagining us at same situation in our work, where we put our utmost sincerity to achieve as much as perfection (in our view) to complete a work and someone comes to bluntly criticize it, however true the criticism is, our response completely depends on how the criticism is expressed to us. and Myshkin is (as he expressed), he isn't a saint, he is a ordinary person.

Selvakumar Subramanian said...

Well said !!

Erode VIJAY said...

நீங்கள் விமர்சனம் செய்து, அதனால் ஒரு உந்துதல் ஏற்பட்டு, இதுவரை பார்க்கமுடியாமல்(!) போன படங்கங்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறதே, ஆதி அவர்களே?! :(
நானே சென்னைக்கு ஒரு விசிட் அடித்து மிஸ்கினின் பேச்சை நேரில் கேட்டதைப் போன்ற உணர்வு!
ஆர்வமாய் ஒரு கட்டுரை படிக்கும்போது பாதியிலேயே முடிந்த மாதிரி ஒரு உணர்வு தோன்றியதும் உண்மையே!!(அதுவும் கமல் பற்றி பேச்சைத் துவங்கிவிட்டு அப்படியே பப்பரக்கா என்று பாதியில் விட்டுச் செல்வதை 'கொடுமை' என்றும் கூறலாம்)

என்னவோ போங்க! :)

Erode VIJAY said...

'இணையம் - இச்சமூகத்தின் ஒரு மினியேச்சர் பிரதி' என்ற தலைப்பில் நீங்க ஒரு தனிப்பதிவே போடலாம் போலிருக்கே கார்த்திக்? :)

விஸ்கி-சுஸ்கி said...

//ஒரு நல்ல கலைஞனுக்கு ஏன் இந்தப் பேச்சு? ஒரு சினிமா எடுப்பதே கடினம்தான். மேலும், வர்த்தக சமரசங்கள் ஏதுமில்லாமல் எடுப்பது இன்னும் கடினமான பணிதான். அதனால்தான் ராஜேஷுக்கும், மிஷ்கினுக்கும் வேறு வேறு இடங்கள் தரப்பட்டிருக்கின்றன. அதனால்தான் இந்த பாராட்டுக்கூட்டத்தில் இருக்கை இல்லாவிடினும் பரவாயில்லை என இரண்டு மணி நேரம் நின்று, கைத்தட்டி வாழ்த்து, அன்பு, நன்றியெல்லாம் தெரிவிக்கப்படுகிறது. அப்படி அதைச் சாதித்தவன் இப்படியெல்லாம் பேசிக்கொண்டிருக்காமல் அமைதிகாப்பதுதான் அவனது மேன்மையை இன்னும் உயர்த்தும்.//

நான் அதிகமா சினிமாவை FOLLOW செய்வதில்லை ஆதி சார்! எனக்கு எல்லா விதமான படைப்பு தொழில்கள்/NON-COMMERCIAL CREATIVE HABITS மேலயும் மேம்போக்க ஒரு OPINION இருக்கு.

இந்த CREATIVITY பழக்கம் ஒரு போதை மாதிரி. பெரும்பாலும் படைப்பாளிகள் தங்களோட சுய கட்டுப்பாட்டுக்கு கீழே இந்த CREATIVITYயை வைச்சிருக்காங்க. ஒரு சிலர் மட்டும் இந்த CREATIVITY எனும் போதையில தங்களை இழந்திடறாங்க.

இதில் மிஸ்கின் இரண்டாம் வகையா தெரியுது.இவர் இந்த படத்தை எடுக்க தன்னுடைய RESOURCES சை கடைசி சொட்டுள்ளவரை பிழிந்துள்ளார் என்று எங்கேயோ ப்ளாக்கில் படித்த ஞாபகம்.இது இந்த போதையின் உச்சம்.மற்றவர்களை குறை சொல்வதில் எந்த பயனும் விளையப்போவது இல்லை. இந்த நிலை எவ்வளவு கடினமான மனிதரையும் உடைத்துவிடும். அதன் வெளிப்பாடே அந்த உரையாக தெரிகிறது.LETS HOPE HE GAINS HIS COMPOSURE.


//இத்தருணத்தில் கமல்ஹாஸன் மீது இன்னும் கொஞ்சம் மரியாதை முகிழ்ப்பதைத் தவிர்க்க இயலவில்லை. கமல்ஹாஸனை, அவரது முயற்சிகளை நாம் எத்தனை தடவை தூக்கி எறிந்திருக்கிறோம். அதற்காகவெல்லாம் இப்படி அவர் பேசிக்கொண்டிருந்தால், அந்த உரைதான் எவ்வளவு நீண்டதாக இருந்திருக்கும்? :-)))//

கமல் சார் அந்த BREAKING POINT டின் EDGEசுக்கு பல முறை சென்றுள்ளார்.BUT HAD HIS SENSES ALWAYS IN HIS CONTROL ! : ) VERY RARE PERSONALITY!

ஆதி தாமிரா said...

@யாத்ரீகன் & விஸ்கி-சுஸ்கி,

இந்த விமர்சனம் மிஷ்கினின் கோபத்தைக் குறைசொல்லவில்லை. அது என் நோக்கமுமில்லை. ஆயினும் உயரம் தொடும் கலைஞன் அமைதியாகவும் இருந்தால் அது அவருக்கு இன்னும் எத்தகைய மேன்மையைத்தரும், அழகைத் தரும் என்ற ஆதங்கத்தைத்தான் வெளிப்படுத்தியுள்ளேன்.

புரிதலுக்கு நன்றி.

ஆதி தாமிரா said...

@ஈரோடு விஜய், கார்த்திக் சோமலிங்கா,

தொடர்ந்து பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்திவரும் தங்களுக்கு நன்றி. (இதுக்குப் போயி ஏன்யா ரெண்டு பேரும் அப்படி சிரிக்கிறீங்க.? ஹாஹா!!! )