Tuesday, December 30, 2014

அரைக்காப்புடி டம்ளரும் அதீத அன்பும்


ராஜலிங்கம் எனும் ராஜு சித்தப்பா, என் அப்பாவுடன் பிறந்தவர் இல்லை. ஆனால், எங்களுக்கு மிகவும் முக்கியமானவர். அப்பாவுடன் பிறந்தவர்களுக்கோ, அம்மாவுடன் பிறந்தவர்களுக்கோ இருக்கும் ஆயிரத்தெட்டு பிரச்சினை அவருக்கு இல்லை என்பதால் இன்னும் நெருக்கம். எங்கள் குடும்பத்தில் ஆறு நபர்கள், அவர் குடும்பத்தில் ஐந்து நபர்கள். ரெண்டு நாட்களுக்கு ஒரு முறை இங்கிட்டு இருந்து அங்கிட்டு போனாலோ, அங்கிட்டு இருந்து இங்கிட்டு வந்தாலோ சேர்மாதேவிக்கும், கல்லூருக்கும் இடையே யாராவது ஒருத்தர், இன்னொருத்த‌ர் மீது மோதிக்கொள்ளத்தான் வேண்டும்.

அன்புத் தம்பியான‌ ராஜுவுக்குத் தெரியாமல் யாதொன்றும் செய்ப‌வராய் என் அப்பா இல்லை. 'மேல வயாவ‌க் கொடுத்துட்டு கிழக்கால கருங்கொளத்துப் பக்கமா ஒண்ணு வருது, அத வேங்கிர‌லாம்னு பாக்கேன் தம்பி' என்பது போன்ற முக்கிய விஷயமாக இருந்தாலும் சரி, 'நேத்து இப்பிடித்தாம் ரிமோட் கீழ உளுந்து சுச்சி அமுங்கிப்போச்சி' என்பது போன்ற சில்லறை விஷயமானாலும் சரி, ராஜு சித்தப்பாவின் காதுக்குப் போய்விடும். 'இந்த மோட்டரை கழத்தி போடணும் தம்பி, ஒயாம ஏர் வாங்கிட்டு கிடக்கிது கழுத, தண்ணி ஊத்தி முடியல..' என்பார். சித்த‌ப்பா மோட்டரை கழற்றி எடுத்து பழுதுநீக்கும் விற்பன்னரும் இல்லை, அதை வெளியே எடுத்துச்சென்று சரிபார்க்கப்போவதும் இல்லை, என்ற போதிலும்.

ராஜுவும், அண்ணாச்சியைக் கலக்காமல் வீட்டிலிருக்கும் கொசுவிரட்டியைக் கூட மாற்றமாட்டார். பிள்ளை எந்த காலெஜில் சேரவேண்டும் என்றாலும் அப்பாதான். வாழைக்கு என்ன உரத்தைப் போடணும் என்றாலும் அப்பாதான். 'தோட்டத்து மரத்துல புளிய இன்னைக்கு உலுப்பிறவா, இன்னும் ஒரு வாரம் செல்லட்டுமா?' என்றாலும் அப்பாதான். 


இந்த ஜோடியை விட ஒரு படி மேலான‌, இவர்களே தேவலாம் என்பது போல இருக்கும் இன்னொரு ஜோடி சித்தியும் என் அம்மாவும். 'என்னத்த மாயப்புளிக்கொழம்ப வைக்கப்போற, எடுத்து வைச்சிட்டு பேசாம இங்க வந்துரு.. வடக்க அயிர துள்ளுதாம். சீக்கிரமா வா, இல்லைனா நா ஒத்தையில ஆயணும். 4 மணி காருக்கு பிள்ளையளுக்கும் எடுத்துட்டுப் போயிரலாம்' என்பார் அம்மா. 'வடக்க அயிர துள்ளுதாம்' என்றால், எங்கள் ஊருக்கு வடக்கே உள்ள கருக்குளத்துக் கண்மாயில் அயிரை மீன் விழுந்துகொண்டிருக்கிறதாம், அதை வாங்கி வர ஆள் அனுப்பப்போகிறேன் என்று அர்த்தமாகும். 'உங்களுக்கென்ன நினைச்சா அயிரை மீன் சாப்பிடலாம்' என நகரவாழ் நண்பர்கள் சொல்லும்போது பெருமைக்காக நான், "ஊம்" கொட்டினாலும் உண்மை அதுவல்ல. கண்மாயில் அயிரை வருடம் பூராவும், தினமும் துள்ளிக்கொண்டிருப்பதில்லை. பொங்கல் சமயத்தில் குளம் நிரம்பி கண்மாய் ததும்பும் அரிய சில நாட்களில்தான் அயிரை துள்ளும். அதுவும் அயிரையே மனது வைத்தால்தான் நடக்கும். நாக்கு ஊற எதிர்பார்த்துக்கொண்டு கிடந்தால் கெண்டையும், கெழுத்தியும்தான் துள்ளும். பிறகென்ன.. புளிக்கொழம்புதான். அதனால் அயிரை துள்ளினால் அது எங்களுக்கும் மிக முக்கியமான விஷயம்தான்.

நாரத்தையில் ஊறுகா போட்டாலும், வெயிலில் காய்ந்து வத்தல் ஊற்றினாலும் அப்பணி இரு வீட்டார் கூட்டணியில்தான் நடக்கும். நீள்விடுமுறைக்கெல்லாம் காத்திராமல் சனி, ஞாயிறு என்றால் கூட நான் உட்பட்ட எங்கள் வீட்டு சிறுசுகள் அங்கு செல்வதும், அங்குள்ளவை இங்கு வருவதும் சகஜமான ஒன்று. நாளு, கிழமை எனில் பிள்ளைகளோடு பெரியவர்களும், 'திருநாறு' பூசி, அப்பா வாங்கிப் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் புதிய பத்து ரூபா கரன்சியை வாங்கிச்செல்ல வந்துவிடுவார்கள். இன்றைய நாளில் அது சிறியவர்களுக்கு ஐம்பது ரூபாய் எனவும், பெரியவர்களுக்கு நூறு ரூபாய் எனவும் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. நான் சொல்லிக்கொண்டிருக்கும் இந்தக் கதை 15 வருடங்களுக்கு முற்பட்டதாம். 
 
இப்படியான சூழலில் ஒரு நாள், என் அம்மாவுக்கு கொல்லைப்புற அங்கணத்தில் கால் வழுக்கி, லேசாக பிடித்துக்கொண்டது. சுளுக்கு. வலது பாதத்தின் மேல்புற‌த்தில் சிறிய வீக்கம். 

பொதுவாக கிராமங்களில் என்று சொல்வதா? அல்லது எங்கள் குடும்பங்களில் என்று சொல்வதா? யாருக்காவது ஒரு சாதாரண காய்ச்சல், தலைவலி என ஒரு நாள் படுத்துவிட்டால் போதும், இருக்கும் நேரடி சொந்தம் தாண்டி, ஒன்றுவிட்ட, இரண்டுவிட்ட சொந்தங்கள் வரை சுமார் நூறு பேராவது அதைப்பற்றி விசாரித்து அவர்களது துயரில் பங்கெடுப்பது வழக்கமாக இருந்து வந்தது. இப்போதும் கூட இது இருந்து வருகிறது எனினும் சற்றே எண்ணிக்கை குறைந்துவருகிறதாம். அவ்வமயம், இத்தனை பேரையும் வரவேற்று, காப்பித்தண்ணி கொடுத்து அந்த பாழாய்ப்போன காய்ச்சல் எப்படி வந்தது? அதனால் எப்படி தாம் அல்லலுற்றோம் என்பதையெல்லாம் கண்கள் கசியும் படி பாதிக்கப்பட்டவர், விசாரிக்க வந்தவருக்கு எடுத்துரைக்க வேண்டும். சமயங்களில் இத்தனை நீண்ட நிகழ்வைச் சமாளிப்பதற்கு, அந்த காய்ச்சலே எவ்வள‌வோ தேவலாம் போன்ற சூழலும் நிலவும். ஒரு சாதாரண காய்ச்சலுக்காக முதல் சில நாட்களுக்கு விசாரிக்க வருபவர்களின் எண்ணிக்கை குடும்பம், குடும்பமாக‌ 20, 30 நபர்கள் வரை சாதாரணமாக இருக்கும். இதுவே ஒரு ஆபரேஷன், விபத்து மீளல் போன்ற உயர்ரக நோவாக இருப்பின் எண்ணிக்கை நூறைத் தொடும். இவர்களை காலை 8 மணிக்கு ஆரம்பித்து, மணிக்கு இத்தனை பேர் என நாம் எதிர்கொள்ளத் தயாராகவேண்டும். நாள் பூராவும் காப்பியைப் போட்டவண்ணம் இருக்க வேண்டும். காப்பிப் போட்டே காய்ச்சலில் விழும் சூழலும்கூட‌ காப்பிப்போடுபவருக்கு நேரலாம். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வந்து விடுபட்டுப்போன அத்தாளநல்லூர் தாத்தா பத்து நாள் கழித்து வந்து பார்க்கும் போது காய்ச்சலில் கிடந்த நபர், தோட்டத்தில் கோடரி கொண்டு விறகு உடைத்துக்கொண்டிருப்பார். அப்படியும், கோடரியை சற்றே கீழே வைத்துவிட்டு அந்தக் காய்ச்சலை நினைவுகூர வேண்டும். சற்றே ஓய்வெடுத்தாப்போலவும் ஆயிற்று, தாத்தாவுடன் அளவளாவியது போலவும் ஆயிற்று, காய்ச்சலை நினைவுகூர்ந்து கொஞ்சம் பரிதாபத்தை சம்பாதித்தது போலவும் ஆயிற்று.

நான் சொல்ல வந்தது இதைய‌ல்ல, இப்படியாக ஒருவர் காய்ச்சலில் விழுந்தால் அது எப்படி மற்றவரின் காதுகளுக்கு முதலில் போய்ச்சேருகிறது என்பதைத்தான். அதுதான் இந்தக் கட்டுரையின் பிரதான சர்ச்சைக்குரிய விஷயமாகிறது. கூர்ந்து நோக்குவோமேயானால் இதில் சில வகைகள் இருக்கின்றன. ஆபரேஷன், விபத்து போன்ற பேரிடர்கள் ஓரிருவருக்குச் சொல்லப்பட்டு, அது மின்னல் வேகத்தில் செவிவழிப் பரவலாக அனைவரையும் சென்ற‌டைந்துவிடும். இதில் ஆட்கள் விடுபட்டுப்போவது அபூர்வமே. அப்படியே விடுபட்டாலும் பெரிய பின்விளைவுகள் இருக்காது. இருப்பினும், துவக்க நாட்களின் பரபரப்பு குறைந்தவுடன், யாருக்கேனும் தகவல் எட்டாது போயிருக்குமா என்று சிந்தித்துப் பார்த்து விடுபட்டுப்போயிருந்தால் சொல்லிவிடுவது நல்லது.
  
நடுவாந்திர நோய்களான காய்ச்சல், பல்வலியால் பல் பிடுங்கப்பட்டு முகம் வீங்கிக் கிடத்தல் போன்றவற்றுக்கு பாதிக்கப்பட்டவர்கள்தான் முழுப்பொறுப்பு. அவர்கள்தாம் ஒருவரையும் விடாமல் அனைவருக்கும் இத்தகைய சோகத் தகவல்களை சேர்ப்பிக்க வேண்டும். இதில் அசட்டையாக இருந்து, பிற்பாடு நேரக்கூடிய பிரச்சினைகளுக்கு காரணமாகிவிடக்கூடாது. அதுவும் முதல் தர நேரடி சொந்தங்கள் யாரும் விடுபட்டுவிடக்கூடாது. சொல்லாமல் விட்டால் அவர்கள் நம்மால் அவமதிக்கப்பட்டதாகவும், சொன்னபிறகு அவர்கள் வந்து பார்க்காவிட்டால் அவர்களால் நாம் அவமதிக்கப்பட்டதாகவும் திரிபுகள் ஏற்பட வாய்ப்புகள் இங்கே பிரகாசமாக உள்ளன.

மூன்றாவது வகையானது சிறிய வகை நோய்களான சுளுக்கு, தலைவலி, வயிற்றுவலி போன்றன. இதை பெரும்பாலும் நாம் பிறருக்கு பரப்பவேண்டிய அவசியமிருக்காது. ஆயினும் சில சமயங்களில் சுளுக்கு, காலில் முள் குத்தியிருத்தல் போன்றன உடனடி குணம்பெறாமல் தத்திச்செல்லும் நிலையை நமக்கு ஏற்படுத்திவிடக் கூடியவை. தத்திச்செல்லும் நிலை வந்தாலோ, அல்லது இவை குணமாக ஓரிரு நாட்களை விடுத்து ஓரிரு வாரங்களை எடுத்துக்கொண்டாலோ இவை இரண்டாம் வகையைச்சேர்ந்த நோய்களாக பதவி உயர்வு பெறுகின்றன. ஆயின், அது பரப்பப்படவேண்டியது மிக இன்றியமையாததாகும். இதைக் கணிக்கத்தவறினாலோ, எந்த நாளில் இது இரண்டாம் கட்ட நோயாக மாறுகின்றன என்பதில் அசட்டையாக இருந்துவிட்டாலோ சிக்கல்தான்.

எம் அம்மாவின் வலது கால் சுளுக்கு, எங்களால் மிக மோசமான முறையில் அலட்சியப்படுத்தப்பட்டுவிட்டது பரிதாபம்தான். முதலிரு நாட்கள் அம்மா நன்றாகத்தான் நடந்துகொண்டிருந்தார். மூன்றாம் நாள் மெதுவே தத்தினார். நாங்கள் இந்த நோயை அறிந்துகொள்ளும் முன்னமே கண்களால் கண்டவர்கள், வாயினால் செய்தி பரப்ப.. அது தென்காசி பெரியத்தை காதுகளைக்கூட‌ எட்டிவிட்டது. மெல்ல மெல்ல பார்வையாளர்கள் வரத்துவங்கினர். அதிர்வடைந்த‌ நாங்கள் சுதாரித்துக்கொண்டு அந்த சுளுக்கை போர்க்கால நடவடிக்கை மூலமாக பாவூர்க்காரர் எனும் நீவுதல் நிபுணரை வீட்டுக்கே வரவைத்து, அரிய தைலங்கள் மூலமாக நீவி விட்டு அதை இருந்த இடம் தெரியாமல் போக்கடித்துவிட்டோம்.

ஆனாலும் ஐய்யகோ, ராஜலிங்கம் சித்தப்பாவின் காதுகளுக்கு இந்த தகவல் போய்ச்சேரவே இல்லை. சுமார் பத்து நாட்களுக்குப் பின்னர் அவருக்கு விஷயம் யாரோ மூன்றாம் மனிதர் மூலமாக தெரியவந்தபோது முதலில் ஆடிப்போய்விட்டார். மனது நொறுங்கிப்போய் விட்டது. அதுவே, சில‌ நாட்களுக்குள் தாம் அலட்சியமாக ஒதுக்கிவைக்கப்பட்ட உணர்வை ஏற்படுத்தி கோபத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்திவிட்டது. விரோதம் வேர்பிடித்த வேம்புவைப்போல விடுவிடுவென வளரத்துவங்கிவிட்டது.  
 
'அட ஒண்ணுமில்ல தம்பி, ஒரு சின்ன சுளுக்குதான், இவதான் பிரமாதப்படுத்திட்டா.. நீ நாளை வரப்ப நாடார் கடையில் கருப்பட்டி இருந்தா வேங்கிட்டு வந்திரு.. இங்க இல்லங்காணுவோ' என அப்பா ஒரு சகஜ பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால் சமாதானம் தன்னைப்போல நிகழ்ந்திருக்கும். ராஜுவும், 'நாலு நாளா ஊர்ல இல்ல, மதுரைக்கு போயிருந்தேன் பாத்துகிடுங்க.. நமக்கு விஷயம் தெரியாம‌ போயிடுச்சி, ஆமா கருப்பட்டி கருப்பா வேங்கணுமா? எளசா வேங்கணுமா?' என பதில் சொல்லியிருப்பார். அப்பா அப்படி ஒரு போன்காலை செய்யவே இல்லை. 'அட, இப்ப என்னாச்சு எங்க போயிரப்போறான்?' என நினைத்தாரோ அல்லது, 'இவ இப்படி நடக்கமுடியாம கிடக்காளே.. விசயம் தெரிஞ்சா வந்து பாக்கிறதுக்கென்ன? தனியா சொல்லணுமாமா? மத்தவங்க‌ல்லாம் சொல்லியா வந்தாங்க' என நினைத்தாரோ எனக்குத் தெரியவில்லை.

ராஜு சித்தப்பாவாவது, இதுல சொல்லிவிட என்னயிருக்குனு ஒரு எட்டு வந்துட்டுப் போயிருக்கலாம். அல்லது, அந்த டாபிக்கையாவது மறந்திருக்கலாம். கதை நல்லபடியாக முடிந்து போயிருக்கும். மறந்து போக காலம் வாய்ப்பளிக்குமா என்ன! அடுத்த பத்தாவது நாளே சித்திக்கு விஷக்காய்ச்சல் வந்துவிட்டது. இது சொல்லவேண்டிய வகையைச் சேர்ந்த நோயாகும். பழிக்குப் பழி! எங்களுக்குத் தகவல் சொல்லாமல் விட்டுவிட்டார். அதற்கும் பெருந்தன்மையாக என் அப்பா போய்ப் பார்த்திருக்கக்கூடும். ஆனால், ஒண்ணத்துக்கும் உதவாத உதவாக்கறை எங்கப்பாவோட கடைசி தம்பி எனது சொந்த சித்தப்பா கிருஷ்ணமூர்த்திக்கு தகவல் வருகிறது, ஆனால் எங்களுக்கு தகவல் இல்லையாம். என்ன அநீதி!

போச்சு! பனிப்போர் வீரியமாகிக்கொண்டே சென்றது. வாரங்கள் மாதங்களாகின. என் அப்பா பைக்கிலிருந்து விழுந்து கைபிசகிக்கொண்ட பேரிடர் வந்தது ஒருநாள். அதற்கு ராஜுவுக்கு தகவல் மறுக்கப்பட்டது. மாதங்கள் வருடங்களாகின. மூத்த பொண்ணு லலிதாவுக்கு பையனே பார்க்க ஆரம்பித்துவிட்டார் ராஜு சித்தப்பா, அப்பாவை சட்டை செய்யாமல். முடிந்தது. இப்போது வருடங்கள் டிகேட்ஸ் ஆகிவிட்டன. கல்யாணம், காய்ச்சி என விசேஷம் மட்டுமல்ல, மண்ணின் பாரம்பரிய மரியாதையான 'எதிரியானாலும் சாவுக்குப் போவணும்யா' என்பதையும் தாண்டி இருபுறமும் பெருசுகள் மண்டையைப் போட்டதற்கும் அழைப்போ, விசாரணையோ இல்லாது போய்விட்டது.

இப்பவும், அப்பாவைக் கேட்டால், 'பொண்ணுக்க கல்யாணத்துக்கு பத்திரிக்க வைச்சானா அவன்? அந்தப் புள்ள பொறந்தப்ப முதல்ல கையில வேங்குனவன் நான்' எனும் கோபம்தான் கொப்பளிக்கிறது. போலவே, ராஜு சித்தப்பாவுக்கும், 'என்னப் பெத்த தாயி மாதிரி நினச்சிருந்தனே, பெரியாயா சாவுக்கு தகவல் வந்துச்சா எனக்கு?' என‌ப் பொங்க கதைகள் நிறைய இருக்கும். 

ஒண்ணு மட்டும் எனக்கு தெரியும், அரைக்காப்புடி டம்ளரை அங்கணத்துல இருந்து எடுக்கக்குனிஞ்சதால‌ என் அம்மாவுக்கு ஏற்பட்ட அந்த‌ சுளுக்கு மட்டும் ரெண்டு பேருக்கும் நிச்சயம் மறந்துபோயிருக்கும்! 

.

Tuesday, December 23, 2014

ரசிகன் : டைனமோ


பொதுவாகவே மனிதர்களுக்கு மறைபொருள் என்றாலே ஒரு க்யூரியாசிடி உருவாகிவிடுவது இயல்புதான். அதிலும், ‘ஹௌ இட் ஒர்க்ஸ்’ பிரியர்களான எந்திரவியல் மாணவர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். எந்திரவியலில் சூழலின் கடனே என்று சேராமல் அப்போதே ஆர்வம் காரணமாகத்தான் சேர்ந்தேன். பள்ளியிறுதி வகுப்புகளில் மிகத்தற்செயலாக நாற்சக்கர வாகனங்களின் பின்னச்சின் மத்தியில் இருக்கும் டிஃபரன்ஷியல் எப்படி இயங்குகிறது, அதன் தேவை என்னவென்பதை அறிந்தபோது ஏற்பட்ட வியப்பு இன்னும் நினைவில் நிற்கிறது. அதனால்தான் எந்திரவியலை கண்ணை மூடிக்கொண்டு தேர்ந்தேன். 

இப்போதும் சிறப்புப் பணிகளுக்கான எந்திரங்கள் சார்ந்த வேலையில்தான் இருந்துகொண்டிருக்கிறேன். எங்கேனும் புதிய எந்திரங்களைக் காண்கையில், உடனடியாக அதன் உள்ளீடுகளை கற்பனை செய்யத்துவங்கும் என் மனது. ஓரளவு அதன் இயங்குதளம் புரிபட்டபின்புதான் ஒரு நிம்மதி கிடைக்கும். பல சமயங்களில் அவை எளிதில் புரிபட்டுவிடும்தான், சில வேளைகளில் புரியாவிட்டால் அன்றைய தூக்கம் அவ்வளவுதான். மேலும் அவ்வாறான வேளைகளில் சில அரிய/ புதுமையான/ பல்தொழில் கலவைகளை அவ்வியந்திரங்களில் காண நேர்ந்தால், என் மனம் மகிழ்ச்சியில் துள்ளும். ஒரு ஓவியத்தை ரசிப்பதைப்போல, ஒரு கவிதையை ரசிப்பதைப்போல ரசிப்பேன். அதன் வடிவமைப்பாளனுக்கு என் மானசீகமான பாராட்டுகளைத் தருவேன்.

இந்த சுபாவம் எந்திரவியல் தாண்டியும் பரவலானதாகும். அதுவே பொறியியலின் அத்தனைத் துறைகளிலும் மூக்கை நுழைக்கும் ஆவலை உண்டு செய்யும். பொறியியலென்றாலே வியப்புத்தானே! குறிப்பாக கணினித்துறையின் ஒவ்வொரு செயல்பாடுகளும், கருவிகளும் ஒரு மேஜிக்கைப் போன்றவை. சில விஷயங்கள் புரிபடாமல் கோபமும், எரிச்சலும் முட்டும். ஆயினும் அதன் அடிப்படை பைனரி மொழி, அது ஸ்விட்ச் எனும் ஒரு எந்திரப்பொறியின் On, Off எனும் எளிய இரு நிகழ்வுகளை ஆதாரமாகக் கொண்டது என்பதே எனக்குத் தேவையான ஆறுதலைத் தந்துவிட்டது.

அப்பேர்ப்பட்ட மாணவனுக்கு மேஜிக் எனும் நுட்பம் பிடித்துப்போனதில் எந்த ஆச்சரியமும் இருக்காதுதானே! ஒரு மேஜிக் க்ராக் செய்யப்பட்டால் அதன்பின் அதன் மீதான ஆர்வம் முற்றிலும் வடிந்துபோகும். ஆனாலும், மேஜிக் க்ராக் செய்யப்படுவதில் ஆர்வமில்லாதவர்களே இருக்கமுடியாது. உலகை வியப்பில் ஆழ்த்திய எத்தனையோ மேஜிக்குகள் க்ராக் செய்யப்பட்டிருக்கின்றன. இன்னும் மர்மம் விடுபடாத எத்தனையோ மேஜிக்குகள் உள்ளன. 

மேஜிக் ஒரு அற்புதமான கலை. மேஜிக் இவ்வாறான நுட்பம் கொண்டுதான் நிகழ்த்தப்படுகின்றன என்று நம்மால் அவ்வளவு எளிதாக சொல்லிவிடமுடியாது. அசுரத்தனமான பயிற்சியின் விளைவாய்க் கிடைக்கும் வேகம், சராசரி மனிதனின் ஆக்‌ஷன், ரியாக்‌ஷன் போன்றவற்றிலிருந்து முற்றிலும் விலகி நின்று இயங்க முடிகிற லாகவம், இயற்பியல், வேதியியலின் அளப்பறிய பயன்பாடுகள், சீரிய திட்டமிடல், முன் தயாரிப்பு, சிறப்பாக உருவாக்கப்பட்ட பொறிகள், சாதாரணமாக தோற்றமளிக்கும் அசாதாரணமான பொருட்கள், சாதாரண மனிதர்களின் பார்வைத்திறன் மற்றும் மூளைத்திறனை விஞ்சும் அம்சங்களை உள்ளீடாகக் கொள்தல் எனப் பரவிக்கிடக்கும் எத்தனையோ நுட்பங்களில் ஒன்றோ, பலவோ இணைந்துதான் ஒரு வியக்கச்செய்யும் மேஜிக் நிகழ்வு நிகழ்த்தப்படுகிறது.

டேவிட் காப்பர்ஃபீல்டு போன்ற‌ உலகையே தன்வசம் செய்த எத்தனையோ மெஜீஷியன்களைத் தன்னகத்தே கொண்டது வரலாறு. ஹிஸ்டரி சானல் மூலமாக சமீபமாக காணக்கிடைத்தவர் டைனமோ. 1982ல் இங்கிலாந்தில் பிறந்த ஸ்டீவன் ஃப்ரெய்ன் (Steven Frayne) எனும் 32 வயதே ஆகும் இளம் மெஜீஷியனின் செல்லப்பெயர்தான் டைனமோ!


'டைனமோ: மெஜீஷியன் இம்பாஸிபிள்' எனும் தொலைக்காட்சித் தொடரின் மூலமாக உலகெங்கும் பிரபலமான டைனமோவின் மேஜிக் நிகழ்வுகள் ஒவ்வொன்றும் நம்மை வியக்கச்செய்பவை. பாரம்பரிய முறைகளுக்கு அப்பாற்பட்டவை. இவரது மேஜிக் எதுவுமே இதுவரை கட்டவிழ்க்கப்படவில்லை.

தொடர்ந்து இவரது நிகழ்வுகளை இணையத்தில்/ தொலைக்காட்சியில் பார்த்து வரும் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த போது, ஏதேனும் பிடிபடுகிறதா என்ற பேச்சு எங்கள் இருவரையும் பைத்தியம்தான் பிடிக்கச்செய்தது. கடைசியில் நண்பர் சொன்னார், "யுகேடிவி, டைனமோ, நிகழ்வில் கலந்துகொள்பவர்கள் என அனைவருமே கூட்டாக ஒரு பொய்யை இவ்வுலகத்துக்கு நிகழ்த்துகிறார்கள். இந்நிகழ்ச்சியே முற்றிலும் சிஜி மூலமாக செய்யப்படுவதாக இருக்கலாம். சுவாரசியம் கருதி இதை நாம் மன்னிக்கவும் செய்யலாம்"

நுண்ணறிவியலில் ஆர்வம் கொண்ட அவரது குரலில், ஒரே ஒரு மேஜிக்கின் அடிப்படையைக் கூட கண்டுகொள்ள முடியாத‌ ஒரு ஆத்திரம் தொனித்ததை உணர்ந்துகொள்ள முடிந்தது. சட்டென சிரித்துவிட்டேன். எனக்கும் அதே எரிச்சல்தானே?!


சரிதான்! கோள வடிவிலிருக்கும் கால்பந்தை, கையால் நசுக்கியே அமெரிகன் கால்பந்தான ஓவல் வடிவ பந்தாக மாற்றுவது, சிறிய கண்ணாடி பாட்டிலுக்குள் செல்போனை போட்டுவிடுவது, அச்சிடப்பட்ட போஸ்டரின் டிசைனையே மாற்றுவது போன்ற சிறு நிகழ்வுகளையும், கிரேன்களை ஒளித்துவைக்க இயலாத ரியோவின் மலைமுகட்டில் காற்றில் மிதப்பது, தேம்ஸ் நதியின் பரவலான பகுதியில் நீரில் நடப்பது போன்ற பெரிய நிகழ்வுகளையும் பார்க்கையில் எரிச்சல் வராமல் வேறென்ன செய்யும்?
.

Sunday, November 30, 2014

காவியத்தலைவன் - விமர்சனம்

இப்படி ஒரு அறுவைப் படத்தைப் பார்த்து எத்தனை நாளாச்சு? என்பதாக ஜி+ல் குட்டியாக ஒரு விமர்சனம் எழுதிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவதுதான் என் முதல் எண்ணம். அதைச் செய்தபோது பதிலாக, வேறு யாரேனும் அப்படிச்செய்யலாம், நீங்கள் என்பதால் ஒன்று அமைதியாகச் சென்றிட வேண்டும், அல்லது இப்படி பல முனைகளிலும் பாராட்டப்படும் ஒரு படத்தினைப் பற்றி உங்களுடையது எதிர்கருத்தெனின், அதற்கான காரணத்தையும் வைக்க வேண்டும் என்பதாக ஓரிரு எதிர்வினைகளை எதிர்கொள்ள நேர்ந்தது. ’இன்னுமா இந்த உலகம் நம்மை நம்புது?’ என்ற வழக்கமான சுய எள்ளல்தான் அதற்குப் பதில் என்றாலும், படத்தில் நான் உணர்ந்ததை, அல்லது உணரமுடியாதவற்றை பகிரலாம் என்றே தோன்றுகிறது.

கமர்ஷியல் நோக்கமற்ற கதைக்களம், பீரியட் என உழைத்திருக்கும் வசந்தபாலன் மற்றும் அவரது குழு, பின்னணி இசை, அவரவர் வகையில் சிறப்பாக நடித்திருக்கும் நாசர், பிரித்விராஜ், சித்தார்த், வேதிகா என்றிருக்கையில், சட்டென குறை சொல்லிவிட்டு கடந்துபோக கடினமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் என்ன கதையை, எப்படிச் சொல்லிக்கொண்டிருக்கிறோம் என்ற புரிதல் சிக்கல் இயக்குனருக்கும், எதைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்ற புரிதல் சிக்கல் ரசிகனுக்கும் இருக்கும் வரை இப்படிக் கடந்துபோவது தவிர்க்க இயலாததாகிவிடுகிறது.


நாடகக்கலைஞர் சிவதாசருக்கும், அவரது இரு சீடர்களுக்கும் இடையேயான கதையா இது? சிவதாசர், நாடகத்திற்காக உடல் பொருள் ஆவி அனைத்தும் துறந்தவராக சித்தரிக்கப்படுகிறார். அவரது குழுவில் மூன்று லீடிங் காரெக்டர்கள் தவிர்த்து, ஒரு பாடலைக்கூட மனனம் செய்யத்தெரியாத ஒரு பெரிய வெற்றுக் கும்பலே இருக்கிறது. அதைப் பற்றியெல்லாம் அவருக்கு ஏதும் கவலை இருந்த மாதிரி தெரியவில்லை. அவரின் ஒவ்வொரு எதிர்வினைக்கும் காளியப்பாவும், கோமதிநாயகமும் தவமிருக்கிறார்கள். ஆனால், அவரோ ஒரு கிராமத்துப் பண்ணையாரைப் போல நடந்துகொள்வதைத்தவிர வேறென்ன செய்கிறார் என்று சரியாகத் தெரியவில்லை. இத்தனைக்கும் ஒரு குழப்பம் நேர்ந்ததைத் தொடர்ந்து, சீடன் விடும் சாபத்தை சிரமேற்கொண்டு மண்டையையும் கூட போட்டுவிடுகிறார். இல்லை, இது சிவதாசரின் கதையல்ல..

முக்கோண அல்லது நாற்கோண காதல் கதையா இது? காளியப்பாவும், ஒரு ஜமீன்தார் பெண்ணும் ஒருவரையொருவர் காதலிக்க, வடிவாம்பாள், காளியப்பாவைக் காதலிக்க, கோமதிநாயகம், வடிவாம்பாளைக் காதலிக்க.. இப்படியாக! மேலும் இந்தப் பகுதிக்கான காட்சியமைப்புகள் தாங்கவில்லை. ஆளுமை மிகுந்த ஜமீன்தார் பெண்ணை ஏதோ இப்படி அப்படி  என்பதற்குள் கரெக்ட் செய்துவிடுகிறார் காளியப்பா. அரண்மனைக்குள் ஏதோ கொல்லைப்புறம் போய் வருவதைப்போல அவ்வளவு சாதாரணமாக போய் வருகிறார். ஒரு இடத்திலாவது இந்த காதல்களின் தாக்கம் நமக்கு ஏற்படவில்லை. ஏன் இவர்களுக்குள் இப்படி உயிர்துறக்கும் அளவிலான ஒரு ஆழ்ந்த காதல் வந்து தொலைக்கிறது என்பதும் நமக்கு உறைக்கவே இல்லை. இல்லை, இது காதல் கதையல்ல..

ஒருவன் உயிராக அன்பைச்செலுத்த, இன்னொருவன் காலமெல்லாம் துரோகம் நினைக்கும் இரண்டு நண்பர்களின் கதையா? இத்தனைக்கும், இளையவன் காளியப்பா அநாதைக் குழந்தையாக குழுவில் இணையும் போது, யாருமே தராத ஆதரவைத் தந்து அரவணைக்கிறான் மூத்தவன் கோமதிநாயகம். திறமையால் ஒவ்வொரு காலகட்டத்திலும் மூத்தவனை இளையவன் முந்த அது மூத்தவனின் துரோகத்துக்கு வழிவகுக்கிறது. ஆனால் இந்தப்பகுதி சொல்லப்பட்ட விதமும் நெளிய வைக்கிறது. ‘ஆடுகளத்’தைப்போல துரோகத்தின் வீச்சு கொஞ்சமும் இயல்பாக இதிலில்லை. தெரிந்தே காளியப்பா செலுத்தும் அன்பால் எந்தப் பயனும் இறுதி வரை விளையவில்லை. தேர்ந்து விலகி நிற்கக் கூட செய்யாத அறியாமையால் காளியப்பாவின் கதாபாத்திரம் சிதைகிறது. தெரிந்தே சப்பைக்கட்டு கட்டிக்கொண்டு தன் தரப்பு நியாயம் என அதையும் பேசிக்கொண்டே திரியும் கோமதிநாயகத்தின் கதாபாத்திரத்துக்கும் அதே நிலைதான். (தமிழ்நாட்டில் அப்போது காளியப்பாவும், கோமதிநாயகமும் மட்டும்தான் இருந்தார்களா நாடகம் போட? காளியப்பா வரும்வரை, நாடக பூஷணம், கலைப் பித்தன் என்றெல்லாம் பேரும், புகழும், பணமுமாய் இருக்கும் கோமதிநாயகம், காளியப்பா நாடகம் போடத்துவங்கியதும் அப்படியே நொடித்துப்போய் தெருவிற்கே வந்துவிடுகிறார்.) இல்லை, இது துரோகத்தின் கதையல்ல..

நாடு அடிமைப்பட்டுக்கிடந்த வேளை, நாடகக்கலை புராணங்களைப் பேசிக்கொண்டிருந்த தருணத்தில், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி, மக்களிடையே சுதந்திர வேட்கையைப் பரப்ப முற்பட்ட ஒரு நாடகக் கலைஞனின் கதையா இது? அப்படி எண்ணவும் வாய்ப்பளிக்கும் வகையில் படத்தின் பெரும்பகுதியை எடுத்துக்கொள்கிறது இந்தப் பகுதி. காதலில் தோல்வியும், நட்பின் துரோகமும் துரத்த நாட்டுவிடுதலைக்கு போராட எத்தனிக்கும் ஒரு கலைஞன் என்பதைக்கூட நாம் ஏற்கலாம். ஆனால் முதலில் பொறுப்பில்லாமல் குடித்துச்சீரழியத்தான் முற்படுகிறான் அவன். அவனை மீண்டும் நல்வழிப் படுத்த, அவனுக்கு துரோகம் எண்ணும் அதே நண்பன்தான் வரவேண்டியிருக்கிறது. (வாய்ப்பும் தந்து மீண்டும் துரோகத்தையும் புதுப்பித்துக்கொள்கிறான்). இரண்டாம் வாய்ப்பில் தனியே நாடகம் நடத்தச்செல்லும் காளியப்பா நவீன தேசவிடுதலை நாடகங்களை மேடையேற்ற, அதன் பின் விளைவுகளை சந்திக்கிறார். அப்படி என்ன வேட்கையை மக்களிடையே பரப்பிவிடுகிறார், வெள்ளை அரசாங்கம் இவரை சுட உத்தரவு பிறப்பிக்கும் அளவுக்கு, என்று கேட்டால் அதற்கும் பதிலில்லை. ’பகத் சிங் நாடகம் நடக்கிறது’ என்பது போன்ற போஸ்டர்களைத்தான் காண்பிக்கிறார்கள். இல்லை, இது சுதந்திரத்துக்காக உயிர் தரவும் தயங்காத ஒரு கலைஞனின் கதையும் அல்ல..

இப்படி பல கதைகளும் ஒன்றையொன்று பின்னிப்பிணைந்துள்ள காவியம் இது என்று நாம் எடுத்துக்கொள்ள வழியிருக்கிறதா என்று தேடினால் அப்படி எதுவும் என் கண்ணில் படவில்லை. எதிலுமே ஆழமில்லை. வசனம் பெப்பெரப்பே என்று இருக்கிறது. அனேகமாக ஜெயமோகன் எழுதியதை சினிமாவுக்காக செப்பனிடுகிறேன் பேர்வழி என்று வசந்தபாலன் ஓவர்ரிட்டர்ன் செய்திருக்கவேண்டும். கதைப்பிரிவுகள் உண்மையில் ஒன்றோடொன்று ஒத்திசையவில்லை, மேலும் ஒன்றையொன்று சிதைக்கின்றன.

தவிரவும் நடிகர் தேர்வு, கலை இயக்கம், காட்சியமைப்புகள் என ரசிகனை சோதிக்கும் அம்சங்கள் ஏராளம்!

ஆனால், புதுமையான கதைக் களங்களை அறிமுகப்படுத்த விளையும் வசந்தபாலனின் கமர்ஷியல் நோக்கமற்ற தன்மையைப் பாராட்டத்தான் வேண்டும் என்றால் பாராட்டிக்கொள்ளலாம். எனக்கென்னவோ இதைவிட நாலு ஃபைட்டு, நாலு ஸாங்கு என பரபர விறுவிறு படங்களே தேவலாம் என்று தோன்றுகிறது. அதையெல்லாம் செய்யத்தெரியாத வசந்தபாலன், இப்படி டகால்டி வேலை காண்பிக்கிறாரோ என்றுதான் தோன்றுகிறது. ஒரு ‘சிங்கம்’ மாதிரி மசாலா படத்தையோ, ஒரு ‘சூது கவ்வும்’ மாதிரி மாடர்ன் படத்தையோ தந்து வெற்றிக்கொடி நாட்டிவிட்டு, ‘இப்ப பாருடா என் கலைச்சேவையை..’ என இவர் இந்த மாதிரி படங்களை செய்யத்துணியலாம்.

அப்படியும் இருக்கும் நல்ல விஷயங்களுக்காக தாராளமாக பாராட்டி வையுங்கள், நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் தயவு செய்து, இந்தப் படம்தான் தமிழ் நாடகக் கலையின், நாடகக் கலைஞர்களின் வரலாறு, இதுதான் அவர்களின் வாழ்க்கைச்சித்திரம், காளியப்பாதான் கிட்டப்பா, வடிவாம்பாள்தான் சுந்தராம்பாள், சிவதாஸ்தான் சங்கரதாஸ் சுவாமிகள், வாத்தியார்தான் டிகேஎஸ், அந்தக் குட்டிப்பையன்தான் சிவாஜிகணேசன், இதுதான் வரலாற்றைப் பதிவு செய்யும் முயற்சி என்றெல்லாம் சொல்லி வரலாற்றை சோதிக்காதீர்கள், பாவம் விட்டுவிடுங்கள் என்று மட்டும் கேட்டுக்கொள்கிறேன்.

Sunday, October 5, 2014

மெட்ராஸ் - விமர்சனம்


புதிய அலையைத் துவக்கி வைத்த இயக்குனர்களில் ஒருவரான பா.இரஞ்சித் இதோ தனது இரண்டாவது படத்தின் மூலமாக தமிழின் தவிர்க்க இயலாத இயக்குனர்களின் வரிசையில் போய் ஜம்மென்று அமர்ந்துகொள்கிறார். இதை எழுதும் போதே மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆஹா.. இதைத்தானே நண்பர்களே உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.! புதிய அலை இயக்குனர்களில் எத்தனை சொத்தைகள் ஆட்டத்தை விட்டு விலகப்போகிறதோ நமக்குத் தெரியாது, ஆனால் ஒரு முத்து கிடைத்துவிட்டது. எடுத்துக்கொண்ட கதையை அதன் உணர்வுகள் சிதையாமல் படமாக்கிவிடுவது மட்டும்தான் ஒரு இயக்குனரின் கடமை. அதைக் கச்சிதமாக செய்துவிட்டார் இரஞ்சித். தொழிற்கூடங்களும், மென்பொருள் அலுவலகங்களும், வியாபாரத்தலங்களுமாக மாறிவிட்ட மெட்ரோ சென்னையல்ல, நிஜமான சென்னை. சென்னைக்கும் அதற்கேயுரிய தனித்துவமான பண்பாடும், கலாச்சாரமும், அடையாளங்களும் உண்டு. வடசென்னைதான் நிஜமான மெட்ராஸ்.! இரஞ்சித் வடசென்னை மண்ணின் மைந்தர்!

சமீபத்தில் என்ன சமீபத்தில்.. ரொம்ப நாளாச்சு இது போன்ற சினிமாவைப் பார்த்து! தொடர்ந்து அபத்தங்களைப் பார்த்துப் பார்த்து, கமர்ஷியல் சினிமா என்பதற்கான வரையறையை நாமே நிறைய அபத்தங்கள் நிறைந்ததாய் மாற்றிக்கொண்டுவிட்டோம். மெட்ராஸ் எனும் இந்த சினிமா மீண்டும் கலைத்தன்மை மிக்க கமர்ஷியல் சினிமா மீதான நியாயமான பசியை நமக்குத் தூண்டுகிறது. 

திருநெல்வேலி அரிவாளும், வெட்டுக்குத்துகளும் நிறைந்த ஒரு ஊராக பலராலும் உணரப்படுவதுண்டு. ஆனால் உண்மையை உற்று நோக்கினால் இரண்டு தனிப்பட்ட குழுக்களுக்குள் காலம் காலமாக, தலைமுறை தலைமுறையாக நிலவி வந்த பகையும், அதனால் ஏற்பட்ட இருதரப்பு பழிவாங்கல் கொலைகளும்தான் அந்த நகருக்கே அப்படியொரு பெயரை நல்கியிருக்கிறது. அதைப்போன்றதொரு கதை. கூடுதலாக அதிகார போதை மட்டுமே என்றாகிப்போய்விட்ட அரசியல் களம். கட்சியின் மேல் மட்டத்தில் நடக்கும் பிரிவுகளும், மீள் இணைப்புகளும் அந்தக் கட்சிகளைச் சார்ந்த கீழ்மட்ட தலைவர்களை, தொண்டர்களை எவ்வாறெல்லாம் உணர்வுப்பூர்வமாக சிதைக்கும் என்ற உண்மை முகத்திலறைகிறது. அப்படியான இரு குழுக்களில் ஒன்றைச்சார்ந்த, அதன் தலைவருடன் நட்பாக இருக்கிற, அவர்களின் அரசியல் நிகழ்வுகளில் கலந்துகொள்ளாத, அதில் பெரிதாக ஆர்வம் கூட இல்லாத இன்னொரு மூன்றாவது கதாப்பாத்திரம்தான் படத்தின் கதாநாயகன். நண்பன், அவனது மனைவி, அம்மா, அப்பா, வீடு, நான்கு பேர் சேர்ந்தாற்போல் நிற்கக்கூட முடியாத அந்த வீட்டின் ஹால், வேலை, விளையாட்டு, அவசரமும், முரட்டுத்தனமும் கொண்ட சுபாவம், பெண்ணின் அருகாமையைத் தேடும் வயது, கல்யாண ஆசை என்று செல்கிறது கதாநாயகன் காளியின் கதாப்பாத்திர வடிவமைப்பும், சூழலும். காளி மட்டுமல்ல, படத்தின் ஒரு காட்சியில் வந்து போகும் காரெக்டர்கள் வரை ஒவ்வொன்றும் தனித்துவமான இயல்புகளோடு முழுமையாக உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு சிற்பியின் கவனத்தோடு ஒவ்வொரு கதாப்பாத்திரங்களையும் செதுக்கியிருக்கிறார் இயக்குனர். கதையில் காளியின் நண்பன் அன்புவுக்கு என்ன நேரப்போகிறது, இரண்டாம் பாதி எப்படி இருக்கும் என்பதை நாம் ஊகித்துவிடமுடியும் என்றாலும் ஒவ்வொன்றும் நிகழ்கையில் அதன் தாக்கம் அதிர்வூட்டுவதாய் இருக்கிறது. அம்மாவிடம் பேசும்போதும், காதலியிடம் பேசும் போதும், நண்பனிடம் பேசும் போதும் அதே மெல்லிய அறியாமை இழையோடும் கோபமும், அவசரமுமாய் இருக்கிறான் காளி! அரசியலின் வீரியத்தை, நிஜமான சூழலை உணர்கையில் கூட பொறுமையாக, சிந்தித்து செயல்படுபவனாக அவன் மாறிவிடுவதில்லை. 

சில அற்பமான விஷயங்கள் சில மனிதர்களின் வாழ்வில் மிக முக்கியமானதாகிவிடுகின்றன. நீண்ட அரசியல் வாழ்வும், முதுமையும் தந்த சோர்வில் அத்தனையிலும் ஆர்வம் இல்லாது போய்விட்டாலும், ஒரு சுவரில் வரையப்பட்டிருக்கும் தன் தந்தையின் படத்தில்தான் தனது முழு கௌரவமும் அடங்கியிருக்கிறது என்று உணர்கிறது ஒரு வயதான கதாபாத்திரம். அதற்காக எதையும் செய்யத்துணிகிறது அது, கொலைகள் உட்பட! இறுதியில் அந்தப் படம் அழிக்கப்படுகையில், அதன் எதிர்வினை நமக்கு வியப்பூட்டுகிறது.

வரம் வாங்கிப் பெற்ற பிள்ளைக்கு உலகில் இல்லாத பேரழகியைத்தான் பெண்ணாகப் பார்த்துவருவேன் என்று வார்த்தைக்கு வார்த்தைப் புலம்பிக்கொண்டிருக்கும் அம்மா, தன் பிள்ளை விரும்புகிறான் என்பதாலேயே அந்தப் பெண்ணிடம் தன் அன்பை, ஆற்றாமையை வெளிப்படுத்துவது கவிதை. இந்தக் காட்சி படத்தில் இல்லாமலே உணரவைக்கப்படுவது இன்னும் அழகு.

இப்படி படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்தைப் பற்றியும் சொல்லிக்கொண்டே போகலாம். போதும்! ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிடிங், நடிப்பு போன்ற அத்தனை விஷயங்களும் எப்படி இப்படி ஒத்திசைந்து இயங்கின என்பதே ஆச்சரியமாக இருக்கிறது. இயக்குனர் எனும் முன்னேர் ஒழுங்காகச் சென்றால் அத்தனையும் ஒழுங்கே பின்னே செல்லும் என்பது மீண்டும் ஒரு முறை இங்கே நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு தமிழ்ப்படம் என்பதற்காக நாம் பெருமைப் பட்டுக்கொள்ளலாம். காணத் தவறாதீர்கள்!

முடிப்பதற்கு முன்னால் ஒன்றே ஒன்று!

கார்த்தி!இது போன்ற ஒரு கதைக்கு ஒரு ஸ்டார் அந்தஸ்து இல்லாத ஒரு நடிகரோ, புதுமுகமோ செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ என்று நான் முதலில் எண்ணினேன். ஆனால், இரண்டாம் பகுதியில் அந்தக் காரெக்டருக்கு இருக்கும் முக்கியத்துவம் கார்த்தியின் / ஒரு ஸ்டாரின் அவசியத்தை, முக்கியத்துவத்தை உணர்த்தியது. ஒரு நடிகரின் பிரபலம், ஒரு படத்தை மக்களிடம் கொண்டுசெல்ல உதவவேண்டும், அதே நேரம் ஒரு படம் ஒரு நடிகரை மக்களிடம் இன்னும் நெருக்கமாகக் கொண்டு செல்ல உதவவேண்டும். அதுதான் மிகச்சரியான பொருத்தம். அது இங்கே நிகழ்ந்திருக்கிறது. காளியுடன் கார்த்தி தன்னை முழுமையாக பொருத்திக்கொண்டிருக்கிறாரே தவிர, கார்த்திக்காக காளி சிறிதேனும் மாறியிருக்கவில்லை. உண்மையில் இது ஒரு வியப்பான விஷயம்தான். பருத்தி வீரனுக்குப் பிறகு, நான் மகான் அல்ல தவிர்த்து சொல்லிக்கொள்ளும் படி ஒரு படம் கூட உருப்படியாக கார்த்தி செய்திருக்கவில்லை. இத்தனைக்கும் சிறப்பான பின்னணி, மணிரத்னத்திடம் உதவி இயக்குனர், நல்ல சினிமா அறிவு கொண்டவர் என சொல்லக்கேள்வி. இவரும் இப்படி அஜித், விஜய், சூர்யாவுக்கு போட்டியாக மரண மொக்கை போட்டுத் தள்ளிக்கொண்டிருக்கிறாரே என வருந்தியதுண்டு. அப்படியான கார்த்தி இந்தப் படத்தைச் செய்தமைக்கு நம் நிஜமான பாராட்டுகள். இதனால் தொடர்ந்து அவரும், ஏனைய ஸ்டார்களும் சற்றே கதைக்காக இறங்கி வருவார்கள் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.
.

Tuesday, September 30, 2014

ரசிகன்: முகமது அலி


சமயங்களில் சில எளிய விஷயங்களை அவ்வளவு எளிதாக விளக்கிவிடமுடியாது. ஆனால் சில சிக்கலான விஷயங்களை எளிதாக விளக்கிவிடலாம். மாறாக அவ்வளவு எளிதாக விளக்கிவிடமுடியாத மிகச்சிக்கலான விஷயங்களும் நம்மிடையே உண்டு.

’நீ என்னை எவ்ளோ லவ் பண்றே?’ என்று ஒரு முறை என் காதலியிடம் கேட்டபோது, என்ன மனநிலையில் இருந்தாளோ தெரியவில்லை, குழந்தைத்தனமாக இரண்டு கைகளையும் விரித்து வைத்துக்கொண்டு, ‘இம்மாம்பெரிசு லவ் பண்றேம்ப்பா’ என்று சொல்லாமல், சிரித்தவாறே, ‘மெஷர்ஸ் ஏதாவது வைச்சிருக்கிறியா? அளந்து சொல்றதுக்கு.. டோண்ட் பி சில்லி! லவ் பண்றேன், அவ்ளோதான், அதுக்கு மேல கேட்காதே!’ என்று சொன்னாள். என்ஜினியர்ஸை லவ் பண்ணினால் இந்த இம்சையெல்லாம் இருக்கத்தான் செய்யும். மாறாக, அவள் கைகளை விரித்துவைத்துக்கொண்டு, ‘இம்மாம்பெரிசு’ என்று சொல்லியிருந்தாலும் அதன் அர்த்தம் ஒன்றுதான்.

அது மாதிரிதான், ‘அலி இஸ் கிரேட். ஐ அட்மைர் ஹிம்’ என்று எளிமையாக சொல்லிவிட்டுப் போய்விடலாம் அல்லது இரண்டாயிரம் வார்த்தைகளில் விளக்க முற்படவும் செய்யலாம்.அனைவருக்குமான தேடல், வெற்றியும் அதன் விளைவான அங்கீகாரமாகவும் இருக்கலாம். ஆனால், அதற்கும் முந்தைய ஒரு அடிப்படைத் தேவைதான் மரியாதை. சக மனிதர்கள் தன்னை அவர்களுள் ஒருவராக ஏற்கவேண்டும் என்ற நியாயமான எதிர்பார்ப்பு. ஆனால் இதில்தான் உலகெங்கும், வரலாறெங்கும் மனித இனம் சறுக்கியிருக்கிறது. காரணிகள் ஏராளம், விளைவு ஒன்றுதான்... அடிமைத்தனம்! சக மனிதனை, குழுக்களை விலங்குக்கும் கீழாக மதிக்கும் சூழலை உருவாக்குவது மற்றும் பேணிக்காப்பது. அதிலும் அந்த அடிமைத்தனத்தை அவனே ஏற்றுக்கொள்ளும்படியான சுயமரியாதையில்லா உணர்வை ஏற்படுத்திவிடுவது. வரலாறெங்கும் இந்த அநீதி நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. இன்றும்! இன்று இதன் காரணிகள் வேறு, அவ்வளவுதான்! அத்தகைய குழுக்களில் விழிப்புணர்வு தோன்றுகையில், விழிப்புணர்வு கொண்ட மனிதர்கள் தோன்றுகையில் அந்தச் சூழல் எத்தகைய வலி மிகுந்திருக்கும் என்பதை நாம் உணரமுடியும்.

அப்படியாக அடக்கப்பட்ட குழுக்களுக்காக, குழுக்களிலிருந்து போராளிகள் தோன்றியிருக்கிறார்கள். அவர்களால் மக்கள் இயக்கங்கள் தோன்றியிருக்கின்றன. பெரும்போராட்டங்களும், அதன் விளைவாய் விடுதலையும் பெறப்பட்டிருக்கின்றன. முகம்மது அலி அப்படி ஒரு போராளிதான். அலி வித்தியாசப்படுவது அவரது போராட்ட வழிமுறையில்! அலி ஒரு தனி மனிதன். தன்னுடைய வெற்றிக்காக, தன்னுடைய அங்கீகாரத்துக்காக போராடியவன். அதையே தன் இனத்துக்கான போராட்டமாகவும் மாற்றியவன். கலை, அறிவியல் சாதனையாளர்கள் பட்டியலில்தான் வரலாறு தனி மனிதர்களின் பெயர்களைப் பொறித்து வைத்திருக்கும். சமூக விடுதலைக்கான பட்டியலில் பெரும் பின்புலமும், மக்கள் ஆதரவும் கொண்ட தலைவர்களைத்தான், போராளிகளைத்தான் வரலாறு தன்னகத்தே கொண்டிருக்கும். அலி இரண்டாம் பட்டியலில் இருக்கும் தனி மனிதன். அவனது குரலை உலகம் கேட்டது. சர்வவல்லமை கொண்ட அரசுகள் அவனிடம் அடிபணிந்தன. அலி ஒரு தனி மனித இயக்கம்!

1942ல் அமெரிக்காவில் பிறந்தார் கேசியஸ் மார்சிலஸ் க்ளே ஜூனியர்! பணத்துக்காக கலந்துகொண்ட உள்ளூர் குத்துச்சண்டைப் போட்டிகள் தந்த பயிற்சி கேசியஸின் மார்பில் 1960ல் ஒலிம்பிக் தங்கத்தை தவழச்செய்தன. 1962ல் உலகின் மிக இளம் வயது குத்துச்சண்டை சாம்பியன் ஆனபோது கேசியஸின் வயது 22. சாம்பியன் பட்டம் வென்றதுமே அவர் தன் போராட்ட வாழ்வினைத் துவங்குகிறார். அடிமைத்தனத்தை குறிக்கும் தன் பெயரிலிருந்தும், தம் இன விடுதலைக்கு உதவவில்லை என்று அவர் கருதிய கிருத்துவத்திலிருந்தும் விடுபடுகிறார். முகமது அலியாக உலகுக்கே தன் சுதந்திரத்தை அறிவிக்கிறார். ஏனெனில் என்றுமே அவர் தன்னை தனி மனிதனாக உணரவில்லை. கறுப்பினத்தின் அங்கமாகவே உணர்ந்தார். 

அலியின் பேச்சும், செயலும் எப்போதும் தாக்கத்தயங்காத, பரபரப்பான வகைமையைச் சார்ந்தது. குத்துச்சண்டைப் போட்டியில் எதிராளியை எள்ளிநகையாடினார். தம்மை ஏற்காதோரை வலிமையாக மறுத்தார். தன் முந்தையை பெயரைப் பயன்படுத்தி தம்மை அழைத்து சிறுமைப் படுத்தியமைக்காக ஒரு முறை டெரல் எனும் குத்துச்சண்டை வீரரை எளிதில் தோற்கவிடாமல் செய்து 15 ரவுண்டுகள் வரை முழுதுமாக போட்டியை நிலைக்கச்செய்து சிறுகச்சிறுகத் தாக்கிப் பழிவாங்கினார். தனக்கென தனித்துவமான வழிமுறைகளை ஏற்படுத்திக்கொண்டு குத்துச்சண்டை வரலாற்றின் மிக அற்புதமான சண்டைகளை நிகழ்த்திய அலி, இது போன்ற கேவலமான சண்டைகளும் தன் வரலாற்றில் இருக்கப்போவதைப் பற்றிக் கவலை கொள்ளவில்லை. அமெரிக்க அரசு புதிய பெயரை ஏற்காத காரணத்தினாலேயே அலி ஒலிம்பிக் பதக்கத்தையும், சாம்பியன் பட்டத்தையும் இழக்க நேர்ந்தது. அதன் பின்னர் அமெரிக்கா இறங்கி வந்ததும், மேலும் இரண்டு உலக சாம்பியன் பட்டங்கள் அவரைத் தேடி வந்ததும், இனப்போராளியாக அவர் தம்மை முழுமைப்படுத்திக்கொண்டதும் வரலாறு.

"I'm the greatest" 

மேலோட்டமாக ஆணவம் தொனிக்கும் இத்தகைய அலியின் வரிகளின் பின்னால் ஒரு பெரும் வேட்கை இருப்பதை, அடிமைத்தனத்தின் அநீதியை உணரமுடிந்தவர்களால் உணரமுடியும்.


“நான் சண்டையிட விரும்புவது என் சுய கௌரவத்திற்காக மட்டுமல்ல. அமெரிக்காவில், உண்ண ஏதுமில்லாது,வெற்றுக் கட்டாந்தரையில் உறங்கும் என்னுடைய கறுப்பின சகோதரர்களுக்காக! தங்களைப்பற்றியே எவ்வித அறிதலும் இல்லாத என் கறுப்பு மக்களுக்காக!!”

-முகமது அலி. 

.
மேலும் வாசிக்க..

http://en.wikipedia.org/wiki/Muhammad_Ali
http://blog.vijayarmstrong.com/2012/03/i-am-greatest.html

.

Monday, August 25, 2014

பூரிக்கிழங்கு -ரமா அப்டேட்ஸ்


சில நாட்களுக்கு முன்பாக கேகே நகரின் ஒரு தெருவைக் கடந்துகொண்டிருந்தபோது ஒரு வீட்டிலிருந்து வெளியேறிய ஒரு வாசனை என்னைத் தாக்கியது. சரிதான், தாக்கியது என்றுதான் சொல்லவேண்டும். ஒரு நிமிடம் சர்வமும் ஆடிப்போய்விட்டேன். சட்டென எங்கெங்கோ அலைபாய்ந்த என் நினைவு, மூளையின் எங்கோ ஒரு அடிமூலையில் பதிந்து கிடந்த ‘அந்த வாசனை எதனுடையது?’ என்ற தகவலைத் தேடியலைந்தது. கூகுள் தேடுபொறி சில மைக்ரோ விநாடிகளுக்குள் கிடைக்கவில்லை எனில் நாம் தேடும் பொருளை, ’அப்படியோன்று இல்லை’ என்று சொல்லிவிடும். அப்படி எல்லாம் தளர்ந்துவிடாமல் எந்தெந்த உணவுகளோடெல்லாமோ மின்னல் வேகத்தில் ஒரு ஒப்பீட்டை நிகழ்த்திக்கொண்டிருந்தது என் நினைவு. சுமார் முப்பது முழு விநாடிகள் போராடி அந்தப்பொருளை மீட்டெடுத்தேன். மகிழ்ச்சியும், துக்கமும் பெருக்கெடுக்கும் ஒரு கணம்.

பூரிக்கிழங்கு எனப்படும் எளிய காலை உணவின் ஒரு பகுதியான கிழங்குதான் அது.

சுமார் 25 வருடங்களுக்கு முன்னால், என்னுடைய பத்து, பன்னிரண்டு வயதில், அம்பாசமுத்திரத்தில் ஏதோ ஒரு சிறிய கடையில் என் அப்பா வாங்கித் தந்த பூரிக்கிழங்கின் வாசனைதான் அது. அதன்பின் அந்த வாசனையை, அந்தக் கிழங்கை என் வாழ்க்கையில் நான் எங்குமே சந்தித்திருக்கவில்லை. எப்படியான இழப்பு இது? இனியும் அதற்கு நான் எங்கே போவது? ஒரு நிமிடம், என்ன வாழ்க்கை இது என்றாகிவிட்டது எனக்கு.

சமயங்களில் நானும், ரமாவும் ஆதர்ஸ நண்பர்களைப் போலவும் பழகிக்கொள்வதுண்டு. (அதென்ன ஆதர்ச நண்பர்கள்? ஆதர்ச தம்பதி இல்லையா.. அது மாதிரிதான் இதுவும்.)

இன்றும் சமையலுக்கு பூண்டு உரித்துக்கொடுத்துக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நினைவுக்கு வர, ரமாவிடம் சொன்னேன். கூடவே,

”அதே உருளைக்கிழங்குதான், அதே மசாலாப்பொருட்கள்தானே..  என் அம்மா செய்வதும் அப்படியில்லை, நீ செய்வதும் அப்படியில்லை. அதன்பின் அப்படியொரு கிழங்கை யாருமே என் வாழ்க்கையில் செய்து தரவில்லை.? ஏன் அப்படி?” என்றேன்.

“அதே மாதிரி கை, கால்தான் எங்களுக்கும் இருக்கு. என்னாலயோ, உங்கம்மாவாலயோ பரதநாட்டியம் ஆடமுடியுமா?”

யோசிக்காமல் சட்டென சொன்னாள். என் மாமனாருக்குத்தான் கொஞ்சம் சமத்து பத்தாது, இவளை வக்கீலுக்குப் படிக்க வைத்திருக்கலாம்.

*****

வெஜ், நான் வெஜ் விபரங்களை விளக்கிக்கொண்டிருந்தேன் சுபாவிடம்.

”நான் வெஜ்னா என்னனு சொல்லு பாப்பம்?”

“சிக்கன், மட்டன், ஃபிஷ், முட்டை”

“வெரிகுட். அதோட முயல், நண்டு..”

“முயலா.. அது கடிக்காதா? அத எப்படி சாப்பிடமுடியும்? ஹிஹி!” (முட்டையெல்லாம் ஏதோ மைதா மாவில் செய்த உணவுப்பண்டம் என்று நினைத்திருப்பான் போலும்)

“சரி அதவிடு, வெஜிடேரியன்னா என்னான்னு சொல்லு..”

ரொம்ப கஷ்டமான கேள்வி மாதிரி ரொம்ப நேரம் யோசித்துக்கொண்டிருந்தான். அடச்சே, இது கூட பிள்ளைக்குத் தெரியலையே, என்ன சொல்லிக்கொடுக்கிறோம் நாம்னு சலித்துக்கொண்டு பதில் சொல்ல வாயைத்திறப்பதற்குள், பதிலைப் பிடித்துவிட்டவன் போல,

“ஆங்.. கோயிலுக்குப் போகும்போது இப்படி இப்படி (காற்றில் வரைந்து காண்பித்து) ஒரு குட்டி இலை குடுப்பாங்களே.. அது!”

குட்டி இலையா, கோயில்லையா, குட்டி இலைல குடுக்குற சர்க்கரைப்பொங்கலா இருக்குமோ?

“பொங்கல் இல்லைப்பா, குட்டி இலைப்பா.. என்னப்பா நீங்க?”

அப்புறம்தான் பிடித்தேன்.

அது துளசி! தெய்வீகத்துக்கும், வெஜிடேரியனுக்கும் எப்படி தொடர்பு கிடைக்கிறது பார்த்தீர்களா? Be வெஜிடேரியன்!*****

புத்தகமும் படிக்காமல், இணையத்திலும் மேயாமல், டிவியையும் போடாமல் இன்று மதிய உணவுக்குப் (மோர்க்குழம்பும், உருளைப் பொரியலும்) பின்பு படுக்கையில் படுத்து சோம்பேறியாய் உருண்டு கொண்டிருந்தேன். கூட கம்பெனிக்கு, சுபாவும். 

நாக்கு கொறிக்க ஏதாச்சும் கேட்டது. ரமா அருகில் வந்ததும்,

“ஏதாச்சும் பண்டம் செஞ்சி தரலாம்லம்மா..” (பண்டம் என்றால் பொருள் என்று பொருள்பட்டாலும், நெல்லை வழக்கில் இனிப்புத்தின்பண்டம் என்பதே பொருளாம்.)

“பண்டமா?”

”அந்தக் காலத்துலல்லாம் வீட்ல செய்ற மாதிரி, இப்போ வீட்ல செய்யக்கூடாதுனு சட்டம் ஏதும் போட்டிருக்காங்களா? அதிரசம், தேன்குழல் இப்படி ஏதாவது செய்யலாம்ல..”

”தேன்குழல்னா முறுக்குங்க, பண்டம் இல்ல”

“ஓகோ, எனக்குத் தெரியும், உனக்குத் தெரியுதானு பாத்தேன். சரி, அதிரசம், உம்.. ம்ம்ம்.. (அவசரத்துக்கு ஒண்ணும் ஞாபகம் வந்து தொலைக்காது).. ஆங்.. முந்திரி கொத்து, சுசியம், பொரிவிளங்கா உருண்டை இப்படி ஏதாச்சும்.. அதெல்லாம் மறந்தே போச்சு”

“ஆமா, நீங்க பெட்ல படுத்து உருண்டுகிட்டு கிடங்க.. நான் ட்ரஸ்ஸ மாத்திகிட்டு கடைக்குப் போய், மாவு, மண்ணாங்கட்டி இதெல்லாம் வாங்கிட்டு வந்து, கரைச்சு, அரைச்சு, குனிஞ்சி, நிமிந்து, நெய் விக்கிற விலையில அதை வம்பாக்கி, அடுப்புக்குள்ள அரைமணி நேரம் உக்காந்து, வெந்து வேக்காடாகி எதையாச்சும் செஞ்சி எடுத்துகிட்டு வந்தா ஒண்ணே ஒண்ணை எடுத்து எலி கரும்புன மாதிரி கரும்பிட்டு.. நாளைய இயக்குனர்ல சுந்தர் சி சொல்றமாதிரி, இது சுமார், அது நல்லால்லனு சொல்லிட்டு அப்படியே போட்டுருவீங்க.. எனக்கு இதெல்லாம் தேவையா?”

நான் இப்ப அப்படி என்ன கேட்டுட்டேன்? அவ்வ்வ்வ்!!

*****

Monday, August 4, 2014

சத்தமில்லாமல் ஒரு சாதனை


சில மாதங்களுக்கு முன்னால் ‘மேக்னம் ஸ்பெஷல்’ எனும் ஒரு கட்டுரையில் முத்து-லயன் காமிக்ஸ் நிறுவனத்தின் 30ம் ஆண்டுக் கொண்டாட்டமாக ’தி மேக்னம் ஸ்பெஷல்’ எனும் பெயரில் ஒரு மெகா இதழ் வெளியாகவிருக்கிறது, முன்பதிவு செய்துகொள்ளுங்கள் என நினைவூட்டியிருந்தேன். 

எதிர்பார்ப்புகளை விஞ்சும் வண்ணம், இரு தினங்களுக்கு முன்பாக‌ ஈரோடு புத்தகத் திருவிழாவில் அவ்விதழ் வெளியாகிவிட்டது. 550 ரூபாய் விலையுள்ள அந்த இரட்டை இதழ்கள் ஒரு விலைமதிப்பில்லா ஓவிய விருந்தைத் தன்னகத்தே கொண்டுள்ளன. ஹார்ட் பவுண்ட் அட்டை, வழவழப்பான ஆர்ட் பேப்பர், முழு வண்ணத்தில் 6 காமிக்ஸ் கதைகள், தரமான பேப்பரில் மேலும் 3 கறுப்பு வெள்ளைக் கதைகள் என மொத்தத்தில் 900+ பக்கங்களில் அட்டகாசமான சிறப்பிதழ்களாக மலர்ந்திருக்கின்றன. முந்தைய மோசமான முன்னனுபவம் காரணமாக, குறைவான எண்ணிக்கையிலேயே புத்தகங்களைப் பதிப்பிக்கும் வழக்கம் கொண்டிருக்கிறது லயன் நிறுவனம். ஆக, இந்த சிறப்பிதழை ஏறத்தாழ ஒரு எடிட்டர்ஸ் கலக்‌ஷன் என்றே குறிப்பிடலாம். முன்பதிவு செய்தவர்கள் தவிர்த்து எஞ்சிய இதழ்கள் எந்நேரமும் விற்பனையாகிப்போகலாம். ஆகவே, உங்கள் காப்பியைப் பெற்றுக்கொள்ள முனைப்போடு விரையுங்கள்.தமிழில் காமிக்ஸ் ரசிகர்களின் வட்டம் மிகச்சிறிதாயினும், அவர்களின் ஆர்வமும், ஈடுபாடும் காமிக்ஸை கலாச்சார அடையாளங்களுள் ஒன்றாகக் கொண்டிருக்கும் எந்த ஒரு நாட்டின் ரசிகர்களுக்கும் குறைந்ததல்ல. இத்தாலி, பிரான்ஸ் மற்றும் பெல்ஜிய காமிக்ஸ்களின் மொழியாக்கமாகவே நமது முத்து-லயன் வெளியீடுகள் பெரும்பாலும் அமைகின்றன. ஆனால் அந்த நாட்டு ரசிகர்களே கூட கண்டிராத அளவுகளில், தரத்தில் தொகுப்புகளை நமக்கு சாத்தியமாக்கியிருக்கும் பிரகாஷ் பப்ளிஷர்ஸ் திரு. விஜயனுக்கு இந்நேரத்தில் நமது நன்றிகளையும், வாழ்த்துகளையும் பதிவு செய்துகொள்கிறேன்.


விதம் விதமான கதைகளங்களில் காமிக்ஸ்கள் வெளியாகும் சூழலிலும், ஆக்‌ஷன் ஹீரோக்களுக்கு இருக்கும் இடமே தனிதான். சிறு வயதில் காமிக்ஸ்களை வாசித்து பின்பு கடந்து வந்துவிட்ட வாசகர்களுக்கும் கூட இன்றும் கேப்டன் டைகர், ரேஞ்சர் டெக்ஸ் வில்லர் போன்ற கதாபாத்திரங்கள் நினைவில் நீங்காமலிருக்கும். ’தி மேக்னம் ஸ்பெஷலை’ ஏறத்தாழ ஒரு கலக்டர்’ஸ் ஸ்பெஷல் என வர்ணித்தேன்.. ஆனால் வெகு விரைவில் கேப்டன் டைகர் தோன்றும் ’மின்னும் மரணம்’ எனும் ஒரு காமிக்ஸ் கதை 500+ வண்ணப்பக்கங்களில் ஒரு பெரிய தொகுப்பாக, ஒரு நிஜமான கலக்டர்ஸ் ஸ்பெஷலாக மலரவிருக்கிறது. இத்தொகுப்பு முன்பதிவு செய்யாதவர்களுக்கு கிடைக்குமா என்பது சந்தேகமே (ஒருவேளை கொஞ்ச எண்ணிக்கை ஜனவரி சென்னை புக்ஃபேரில் கிடைக்க வாய்ப்பிருக்கலாம். எதுவும் உறுதியில்லை!) என்பதால் விருப்பம் கொண்டோர் அனைவரும் தவறாமல் கீழ்க்காணும் வழிமுறையில் முன்பதிவு செய்துகொள்ளுகள். காமிக்ஸ் ரசிகர்கள், ஓவிய விருப்பம் கொண்டோருக்குச் இதை நான் சொல்லத்தேவையில்லை, தவிர்த்த பிறரும் காமிக்ஸின் மகத்துவத்தை உணரவேண்டும் என்பது என் பேரவா. இளம் சிறார்க்கும், அடுத்த தலைமுறைக்கும் வாசிக்கும் வழக்கம் குறைந்துவருகிறது என வெறுமனே குறைகண்டு புலம்பிக்கொண்டு மட்டுமே இருப்பவர்கள் புலம்பல்களோடு நிறுத்திக்கொள்ளாமல், காமிக்ஸின் மூலமாக தம் குடும்பத்தின் அடுத்த தலைமுறையினரிடையே வாசிப்பை ஏற்படுத்த முயலலாம். அவர்களின் ஆதரவும் இதுபோன்ற தமிழ்ச்சூழலிலும் காமிக்ஸ் சாதனைகள் நிகழ உறுதுணையாக அமையும்.

காமிக்ஸ் ஆர்வலர்களின் பெருக்கம் என்பது உண்மையில் ரசனையான சூழலின் பெருக்கமாகும்! ஒரு லக்கிலூக் புத்தகம், லட்சம் பிரதிகள் அச்சாகும் ஒரு நாள் வரவேண்டும்... கனவுதான், கண்டு வைக்கிறேன்.. காசா பணமா?

*******

மேக்னம் ஸ்பெஷலைப் பெறவும்,
மின்னும் மரணம் முன்பதிவுக்கு அணுகவும்..ரெகுலர் சந்தா, நேரடி வங்கிப் பணப் பரிமாற்ற முறையில் குறிப்பிட்ட‌ இதழ்களைப் பெறவோ, ரெகுலர் சந்தாதாரராக இணையவோ கீழ்க்கண்ட கூப்பனிலுள்ள‌ வங்கி எண்ணை பயன்படுத்திக்கொள்ளலாம்.


*

Monday, July 28, 2014

பேரம்


டெல்லிக்கு வடக்கே இரண்டு வாரங்களுக்கும் மேலாக சுட்ட ரொட்டிகளை தின்று உயிர் ஜீவித்த நாட்களுக்கு விடை கொடுக்க, வீட்டுக்கு வரும் வரை மேலும் ஒன்றரை நாட்கள் காத்திருக்கும் பொறுமையில்லாததாலும், தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸைப் பிடிக்க இன்னும் நேரமிருந்ததாலும் புதுடெல்லி ரயில் நிலையத்துக்கு வெளியே வந்து, நேரெதிரே இருந்த சந்துக்குள் எந்நேரமும் பிசியாக இருக்கும் தமிழ்நாடு ஹோட்டலில் புகுந்து, மதிய உணவை உண்டு முடித்து உயிர்மீண்டு சற்று நிம்மதியாக அந்தக் கடைக்கு அருகே பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தேன்.

அப்படியே 'சாப்பாடு ஆஹா.. கனஜோர்!' என்ற வகை இல்லையெனினும் காய்ந்து கிடந்த நாட்களுக்குப் பின்பான தமிழக சாப்பாடு என்பதால் எப்போதுமே தமிழ்நாடு ஹோட்டல் ஒரு ஆனந்தத்தையும், நிம்மதியையும் தரத் தவறியதில்லை. (இதே ஹோட்டல்தான் கேரள மக்களுக்கு கேரளா ஹோட்டலாகவும் விளங்குகிறது!)

சரி, விஷயத்துக்கு வருவோம். அப்போது ஒரு சுத்த ஹிந்தி வியாபாரி ஒருவன் அருகில் வந்து, '1200 ரூ பென் ட்ரைவ் சார், 32 ஜிபி. 1000 ரூபாய்க்குத் தருகிறேன்' என்றான். அடாடா, உங்களுக்கு ஹிந்தியும் தெரியுமா என்று கேட்காதீர்கள். ஆங்கில வார்த்தைகள் நிறைந்த எளிய வாக்கியம் என்பதால்தான் அதை, அதுவும் கும்ஸாகத்தான் புரிந்துகொண்டேன். பணி நிமித்தம் பல வருடங்கள் வடக்கே போக்குவரத்து இருப்பினும், சரஸ்வதியே வந்து என் நாக்கில் எழுத்தாணியை வைத்து எழுதினாலும் கூட இந்த ஹிந்தி மட்டும் எனக்கு வருமா என்பது சந்தேகமே! யாராவது ஏதும் கேட்டால், 'ஹிந்தி நஹி மாலும் ஸாப்! இங்லிஷ்மே போலோ' என்று நான் சொல்லும் அழகிலேயே பதிலுக்கு ஒரு பாரா ஹிந்தியை காது குளிரக்கேட்கும் அனுபவம் கிடைப்பதால், இப்போது, 'நோ ஹிந்தி, நோ ஹிந்தி' என்று மட்டும் சொல்ல ஆரம்பித்திருக்கிறேன்.

'நோ.. நோ' என்றேன் அவனிடம். நல்லவேளை, நான் எதுவும் வாங்கும் மனநிலையிலேயே இருக்கவில்லை.

'ஓகே, ஃபைனல் ரேட். 800 ரூ' என்றான். பென் ட்ரைவ் அழகான பேக்கிங்கில் நன்றாகத்தான் இருந்தது.

'வேண்டாம்' என்றேன் சிரித்துக்கொண்டு.

ஒரு ஐந்து நிமிஷத்துக்கு, 'டோன்ட் வேஸ்ட் யுவர் டைம். கோ.. ஃபைன்ட் சம்படி' என என்ன சொல்லியும் கேளாமல், அவனே ஏதோ பேசிக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக ரேட்டைக் குறைத்தபடி கடைசியாக 200 ரூபாய்க்கு வந்துவிட்டான்.

'நோ' என்றேன் உறுதியாக.

'ஓகே! பைனல் ரேட். 100 ரூ' என்றான்.

டேய் அது என்ன பென் ட்ரைவா, இல்லை வெறும் பென்னா? திருடிக்கொண்டு வந்தால் கூட இந்த ரேட் எப்படிடா கட்டுபடியாகும் என்று மனதில் நினைத்துக்கொண்டு, 'நோ' என்றேன் விடாப்பிடியாக. கடைசியாக எதையோ ஹிந்தியில் திட்டிக்கொண்டே போய்விட்டான்.


இதுபோல உறுதியாக இல்லாத சமயங்களில் நாம் ஒவ்வொருவருமே பல சமயங்களில் நம் தலையில் மிளகாய் அரைக்க அனுமதித்திருப்போம். பேரம் பேசுவது என்பதே ஒரு தனிக்கலை. பொருளின் உண்மையான விலை தெரிந்திருந்தால் ஒழிய பேரம் பேசுவது மிகக்கடினம். இல்லாவிட்டாலும், நாசூக்காக இடது வலது போய் சரியான விலைக்கு வியாபாரியை அழைத்துவரும் பேச்சுவன்மை வேண்டும். இரண்டுக்கும் நமக்கும் ரொம்ப தூர‌ம். வியாபாரி 200 விலை சொல்லும் பொருளை ஒருவர் அடித்துப்பேசி 100 ரூபாய்க்கு வாங்கிச்செல்வதைப் பார்த்துவிட்டு, நாமும் இன்னொரு வியாபாரியிடம் 200 ரூ பொருளை தயங்கித் தயங்கி 150 ரூபாய்க்கு கேட்டு, நன்றாக அவனிடம் திட்டு வாங்கி அவமானமும் பட்டிருப்போம். நம் நேரத்துக்கு அவன் நேர்மையான வியாபாரியாகவும், அந்த 200 ரூபாயே பொருளின் நியாயமான விலையாகவும் இருந்திருக்கும். பிறகென்ன திட்டமாட்டானா? இப்படி பல அனுபவங்கள் இருந்தாலும் ஒன்றை மட்டும் மறக்கவே முடியாது.

ஒரு முறை தாஜ்மஹாலுக்குப் போயிருந்தபோது ‍(இன்று வரை ஒரு முறைதான் போயிருக்கிறேன். ஹிஹி!) சுற்றிமுடித்து வெளிவந்தபின்பு, வந்த நினைவாக வீட்டுக்குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கலாம் என நினைத்து சில பொருட்களை வாங்கினோம்.

பெண் குழந்தைகளுக்கான அழகிய காதணிகள் கொண்ட ஒரு சிறிய பெட்டியைப் பார்த்தேன். மிகவும் பிடித்திருந்தது. வித்தியாசமான டிஸைன்களில் 10 ஜோடி ஸ்டட்டுகள் இருந்தன. 300 ரூபாய் சொன்னான்.

நன்றாக யோசித்து, 200 ரூபாய்க்குக் கேட்டேன். துணைக்கு அருகில் நண்பர்களும் இருந்தார்கள், அந்த தைரியம் வேறு. அந்த வியாபாரி, சற்று சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு, 'அடக்க விலையே அவ்வளவுதான் சார், ஒரு இருபது ரூபாயாவது சேர்த்துக்கொடுங்கள்' என்றான். சரியான விலையைப் பிடித்துவிட்ட மகிழ்ச்சி எனக்கு.

'ம்ஹூம், முடியவே முடியாது. 200 ரூபாய்க்கு மேல் ஒரு பைசா தரமாட்டேன். இல்லையென்றால் இந்தப் பொருளே எனக்கு வேண்டாம்' என்றேன் சற்றும் இரக்கமில்லாமல்.

'சரி சார், இன்னிக்கு வியாபாரமே ரொம்ப டல். அதனால் தருகிறேன்' என்று சொல்லி அதைத் தந்துவிட்டான். வெற்றிக்களிப்பு எனக்கு. நண்பர்களும் சில பொருட்களை வாங்கிக்கொண்ட பின்பு வண்டியை நோக்கிச் சென்றோம்.

வண்டிக்கு அருகே இன்னொரு சிறுவன் கைகளில் பல பொருட்களை வைத்துக்கொண்டு விற்றுக்கொண்டிருந்தான். எங்களைப் பார்த்ததும் சூழ்ந்துகொண்டான். அப்போதுதான் கவனித்தேன், அவன் கைகளிலும் அதே காதணிகள் கொண்ட சிறு பெட்டி இருந்தது. ஒரு ஆர்வத்தில் அதன் விலையறிந்துகொள்ள அவனைக் கேட்டேன். சட்டென விற்கும் நோக்கில், '100 ரூபாய்தான் சார், வாங்கிக்கொள்ளுங்கள்' என்றான். குப்பென்று பரவிய ஏமாற்றத்தை முகத்தில் காண்பித்துக்கொள்ளாமல் சமாளித்துக்கொண்டு வண்டியில் ஏறினேன். அப்போதுதான் அவனும் என்னிடமிருந்த அதே பொருளைக் கவனித்தான். விலை கேட்க கேட்டேன் என புரிந்துகொண்டானோ, அல்லது இன்னொன்று வாங்குவான் என புரிந்துகொண்டானோ, 'சார் சார்' என விடாமல் முயற்சித்தான்.

'நோ, நோ' என்பதை காதில் வாங்கிக்கொள்ளாமல் விலையை இறக்கிக்கொண்டே 50 ரூபாய்க்கு வந்துவிட்டான். ஒவ்வொரு முறை அவன் விலையை இறக்கும் போதும் எனக்கு அதிர்ச்சி. அவன் என்ன புரிந்துகொண்டானோ தெரியவில்லை, சிரித்தபடியே கடைசியாக, 'கடைசியா பத்து ரூபாய்!' என்றான்.

நான் வெறுப்பாக எங்கள் ட்ரைவரை, 'வண்டிய எடுங்க போலாம்' என்றேன்.

விற்பதை விட என்னை வெறுப்பேற்றுவது என முடிவு செய்துவிட்டானோ என்னவோ? நண்பர்கள் சிரித்துக்கொண்டிருந்தனர். வண்டி நகர்ந்தது. கடைசியாகச் சொன்னான்,

'சரி, பத்து ரூபாய்க்கு ரெண்டு பாக்ஸ்! இப்ப என்ன சொல்றீங்க!'
.

Wednesday, July 16, 2014

ரசிகன்: கணேஷ்-வசந்த்


நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இன்று ஓட்டம்தான் வாழ்க்கை என்றாகிவிட்டது. அலுவல், டென்ஷன், டிராஃபிக், குடும்பம், இம்சை என ஓய்வைப் பார்ப்பதே அரிதாக இருக்கிறது. பொழுதுபோக்குக்கான ஒதுக்கீட்டிலும் கொஞ்சம் சினிமா, கொஞ்சம் இண்டர்நெட் என வேறு பணிகளுக்கு நேரமில்லா நெருக்கடிதான். அப்படியும் அக்கடாவென படுக்கையில் விழும் நேரத்தில் கைக்கெட்டும் தூரத்தில் ஒரு புத்தகமும், அதற்கான சிறுவிளக்கும் வைத்திருக்கத்தான் செய்கிறோம். அங்கும் ஒரு சிக்கல்! படுக்கை நேர புலம்பல்கள் இல்லாத இரவுகள் கிடைக்கவேண்டுமே! அப்படியும் அமைந்துவிடும் ஒரு நேரத்தில் நம் கண்களும் சொக்கிப்போகாமலிருக்கும் வரமும் கிடைத்திருந்தால் எடுக்கும் புத்தகம் நம்மை எங்கே கொண்டு செல்லவேண்டும்

ஒன் டூ த்ரீ.. செட் கோ!

கொர்ர்ர்.. கிர்கொர்ர்ர்.. கிரக்கொர்ர்ர்!

மூன்றாவது பக்கத்திலேயே, திறமையான எழுத்தாளரெனின் மூன்றாவது பாராவிலேயே பரலோக சஞ்சாரம் செய்துவிடமுடிகிறது. அப்படியும் அந்த புத்தகத்தை முடித்தே தீருவது என்று கங்கணம் செய்துகொண்டீர்களானால் அரிதாய் சென்றடையும் அந்த அடுத்த வேளையில் முதலிலிருந்துதான் துவங்கவேண்டும். இப்போது அதே மூன்றாவது பாராவையோ, பக்கத்தையோ கடந்துவிட்டால் அது அந்த எழுத்தாளரின் சாதனைதான், ஒப்புக்கொள்ளலாம்!

எழுத்தாளரைச் சொல்வானேன்? நமது வேலைப்பளு, ஓட்டம், அயர்ச்சி, கூடவே முதிர்ச்சி.. (அவ்வ்.!) அப்படியாகிவிட்டது!

இதையும் மீறி படிக்க வருபவனை அடித்து நிமிர்த்த வேண்டுமென்றால் அது ஒரு சிலரால்தான் முடிகிறது.

சுஜாதா! எழுத்து!

இப்ப கிளம்பறதுக்கு கொஞ்ச நாளைக்கு முன்னாடி எழுதிய கட்டுரையாகட்டும், 40 வருசத்துக்கு முன்னாடி எழுதிய கதையாகட்டும்.. பெட்டு கட்டலாம்! ஆரம்பிச்சா முடிக்காம வைக்கமுடியுமா? எல்லோரும் மூணு பாராவில் விளக்கிக்கொண்டிருந்த வேளையில், மூணு வார்த்தைகளில் சொல்லிவிட்டு, ‘உனக்கு புரியுதில்ல மச்சி, அப்பால என்ன? வா.. முதல்ல கதை என்னாச்சுனு பாப்போம்’னு வாசகனை கூட்டிக்கொண்டு சென்ற அந்த டெக்னிக்ஸ்தான் சுஜாதாவின் தனித்தன்மை. இல்லையில்லை அவரது சிறப்பு கதைத்தன்மைதான், அடர்த்திதான் என்று நீங்கள் ஆளாளுக்கு ஒன்றை எடுத்துக்கொண்டு வந்தீர்களானால் நானென்ன இல்லை என்றா சொல்லப்போகிறேன்.

கதைத் தலைப்புகள் ஞாபகமில்லா முன்காலத்தில் வாசித்தது கணேஷ்-வசந்த் துப்பறியும் கதைகளை. மீண்டும் ஒரு நாள் மொத்தமாக வாசிக்கவேண்டும் என திட்டமிருந்தது. இப்படித்தான் பல திட்டங்கள் பரணில் கிடக்கின்றன. ஆனால், இம்முறை எடுத்துவிட்டேனே.. உயிர்மை பதிப்பகத்தின் சுஜாதாவின் குறுநாவல்கள் மூன்றாம் தொகுப்பு கணேஷ்-வசந்த் கதைகளை!

தூக்கம் சொக்கும் 11 மணிக்கு படுக்கைக்கு வந்தாலும் கூட, ஒரு நாவலை படித்துவிட்டுத் தூங்கலாமே என்று எடுப்பதும், இன்னும் ஒன்றே ஒன்று என என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டு மேலும் படித்தது எல்லாம் எனது சின்ன வயதில் இரவுகளில் தூக்கம் தொலைத்து, 
அம்மாவிடம் திட்டு வாங்கிக்கொண்டு படித்த இரவுகளையெல்லாம் ஞாபகப்படுத்தியது. அது சுஜாதா!

சரி, அப்படியே உங்களுக்கும் ஞாபகப்படுத்தி வைப்போமே என்று இதை எழுதத்துவங்கினேன்… எழுதுறதுதான் எழுதுறோம், இதுவரை சுஜாதா எழுதிய நாவல்கள் எத்தனை? அதில் கணேஷ்-வசந்த் வரும் நாவல்கள் எத்தனை என்று ஒரு தகவல் தரலாம் என்று நினைத்து, எத்தனைத் தடவியும் இந்த இணையத்தில் அது கிடைக்கவில்லை. http://www.writersujatha.com/ எனும் தளத்தில் அவரது படைப்புகள் பலவற்றின் பிடிஎஃப் கோப்புகள் விற்பனைக்கு உள்ளன. அவரது புத்தகங்களை பதிப்பிக்கும், விற்பனை செய்யும் உரிமை பெற்றிருக்கிறது உயிர்மை பதிப்பகம் (http://www.uyirmmai.com/). இந்த தளங்களிலும் எந்த தகவல்களும் இல்லை. ஒரு தொகுப்பில் என்னென்ன நாவல்கள் இடம்பெற்றிருக்கின்றன என்ற தகவலையாவது தரக்கூடாதா ஐயா? http://balhanuman.wordpress.com/ எனும் தளத்தில் சில பயனுள்ள குறிப்புகள் கிடைத்தன.


கணேஷ் வசந்தின் முக்கியமான நாவல்களாக பார்க்கப்படுகின்றவற்றுள் கொலையுதிர் காலம், சில்வியா, வசந்த்!வசந்த்!, யவனிகா, நிர்வாணநகரம் போன்றனவும் உள்ளன. உயிர்மை குறுநாவல்கள் மூன்றாம் தொகுப்பில் (கணேஷ்-வசந்த் நாவல்களின் முதல் தொகுப்பு) இந்நாவல்கள் இல்லை. இதில் இடம்பெற்றுள்ள நாவல்கள் மொத்தம் 13.

1.பாதி ராஜ்யம்
2.ஒரு விபத்தின் அனாடமி
3.மாயா
4.காயத்ரி
5.விதி
6.மேற்கே ஒரு குற்றம்
7.மேலும் ஒரு குற்றம்
8.உன்னைக்கண்ட நேரமெல்லாம்..
9.மீண்டும் ஒரு குற்றம்
10.அம்மன் பதக்கம்
11.மெரீனா
12.புகார்..புகார்..புகார்
13.ஐந்தாவது அத்தியாயம்

கணேஷ் வசந்த் பற்றிய சில சுவாரசியமான சில குறிப்புகள்:

*1968ல் சுஜாதா எழுதிய ’நைலான் கயிறு’ எனும் கதையில் கணேஷ் ஒரு கெஸ்ட் ரோலில் வருகிறார். அப்போதோ, பின்பு ’பாதி ராஜ்யம்’ எழுதும்போதோ கூட கணேஷ் துப்பறியும் நாவல்களை தொடர்ந்து எழுதும் எண்ணம் சுஜாதாவுக்கு இருந்திருக்குமா தெரியவில்லை.

*பாதி ராஜ்யம் கதையில் நீரஜா எனும் கிளையண்ட் வருகிறார். அந்தக்கதையின் முடிவில் அவரைக் கிட்டத்தட்ட கணேஷ் காதலிக்கிறார். கல்யாணமும் செய்துகொள்கிறார் எனவும் நாம் ஊகிக்கலாம். ஏனெனில் அடுத்து வரும் ‘விபத்தின் அனாடமி’ நாவலில் நீரஜா வருகிறார். அதில் அவர் கணேஷின் மனைவி என்றோ, அசிஸ்டெண்ட் என்றோ எங்கும் குறிப்பிடப்படவில்லை. பின்பு வந்த கதைகளில் நீரஜா மெல்ல மெல்ல மறைந்து விட்டதால் அதுவும் குறிப்பாக வசந்த் வந்தபின்பு கணேஷ், வசந்த் காரெக்டர்கள் நிலைபெற்றுவிடுகின்றனர். ஆக, நீரஜா முன்பும் அசிஸ்டெண்ட் என்றளவிலேயே இருந்தார் என மாற்றப்பட்டுவிட்டார். அதன்பின்பு காதல், கல்யாணம் என்ற சிக்கல்களில் எப்போதும் இந்த இருவரும் விழவில்லை. பார்க்கும் இளம்பெண்களையெல்லாம் காதலிக்கும் வசந்தின் லவர் பாய் அட்டகாசமே போதுமென்றாகிவிட்டது.

*வசந்த் 1973ல் எழுதப்பட்ட ‘ப்ரியா’ எனும் நாவலில்தான் அறிமுகமாகிறான். அதுவரை பம்பாய், டெல்லி என அலைபாய்ந்து கொண்டிருந்த கணேஷ் சென்னை தம்புச்செட்டித்தெருவில் நிரந்தரமாக குடிபெயர்கிறார்.

*எந்த நேரமும் விளையாட்டு, கேலி, ஏ ஜோக்ஸ், உற்சாகம் என இருக்கும் வசந்த் ஒரு டேட்டாபேங்க் ஆகவும், இக்கட்டான தருணங்களில் கணேஷுக்கு பாயிண்டுகளை எடுத்துத்தருபவராகவும் விளங்குகிறார். சுஜாதாவின் நீண்ட எழுத்துப்பயணத்தில் சில ஜோக்ஸ் ரிப்பீட்டும் ஆகியிருக்கிறது. சட்டப்புத்தகத்தை நீண்டநேரம் நோண்டிவிட்டு, ’செக்‌ஷன் 316 டிவிஷன் 4 அண்டர் கண்டிஷன் Bயில் இந்தக் கேஸ் வருமாடா வசந்த்?’ என கணேஷ் கேட்கும் போது, கூலாக டிவி பார்த்தபடி, ’அது கண்டிஷன் C பாஸ்’ என பதில் சொல்கிறான் வசந்த்.
‘எப்படிடா இவ்ளோ ஞாபகசக்தி?’
‘நீங்க ஆபீஸ் வரதுக்கு முன்னாடி அதத்தானே 3 மணி நேரமா முக்கி முக்கி பாத்துகிட்டிருந்தேன்’

*இப்படி நெருக்கமாக இருக்கும் இருவருக்கும் இடையே ஒரு நாவலில் சண்டையும் வருகிறது. ‘மேலும் ஒரு குற்றத்’தில் கணேஷ் மிகக்கடுமையாக பேசிவிட மனம் நோகும் வசந்த் அதனால் கஞ்சா அடிப்பதாகவும் கூட வருகிறது.

*காயத்ரி, ப்ரியா போன்ற சில கதைகள் படமாகியிருக்கின்றன. (காயத்ரியில் ரஜினி வில்லனாகவும், ப்ரியாவில் ரஜினி கணேஷாகவும் நடித்திருக்கிறார்). இரண்டும் சுஜாதாவுக்கும், ரசிகர்களுக்கும் ஏமாற்றமாக இருந்திருக்கக்கூடும். ‘உன்னைக்கண்ட நேரமெல்லாம்’ நாவலில் ப்ரியா படத்தில் அவர்களை இப்படிக் காண்பித்தமைக்காக ’இந்த ரைட்டர் சுஜாதா மேல் கேஸ் போடணும் பாஸ்! என்ன நினைச்சிகிட்டிருக்கான் அந்தாளு?’ என்று எரிச்சல்படுகிறான் வசந்த்!

*மீண்டும் ஒரு குற்றம் கதையில் கலர் டிவி ஒரு பெரிய டெக்னிகல் வளர்ச்சி என்பதாக பார்க்கப்படுகிறது. வசந்த் அதில் ஏஷியாட் விளையாட்டுப் போட்டிகள் பார்க்கிறான். ஐந்தாவது அத்தியாயம் கதையில்தான் செல்போன், கம்ப்யூட்டரே வருகிறது. அதுவரை இவை எதுவுமில்லை. ஒரு கதையில் கேஸ் விஷயமாய் பிளைட் பிடித்து பாரிஸ், ம்யூனிச் நகரங்களுக்குச் செல்வதையும், அதற்கான செலவுத்தொகையையும் மிகப்பிரமாதமான விஷயமாய் பேசுகிறார்கள் இருவரும்! இத்தொகுப்பிலிருப்பவை பெரும்பாலும் 70, 80களில் எழுதப்பட்ட கதைகளாக இருக்கலாம். காலம் பற்றிய குறிப்பு புத்தகத்தில் இல்லை.

*இருவரின் குடும்பம் பற்றிய தகவல்கள் இல்லை. வசந்தின் இனிஷியல் ஆர்! கணேஷின் இனிஷியல் ஜே! தலா ஒரு கதையில் மிகத்தற்செயலாக இவை வருகின்றன.


சுஜாதா மட்டுமல்ல, கணேஷ்-வசந்தும் என்றும் நம் நினைவிலிருந்து நீங்காதவர்கள்தாம். மீண்டும் அவர்களை தரிசிக்கும் அட்டகாசமான அனுபவத்தைத் தந்தது ’உயிர்மை’யின் இந்த மூன்றாம் தொகுதி. சென்னை திரும்பியதும் நான்காம் தொகுதியையும் கையில் எடுக்கவேண்டும்.
.

Wednesday, June 18, 2014

முண்டாசுப்பட்டி


1982. ஒரு தமிழகக் கிராமம். ஒரு ஸ்டுடியோவில் போட்டோ எடுக்க ஒருவர் வருகிறார். அவரைக் கேமிரா முன்பு நிற்கவைத்துவிட்டு கேமிராவைத் தயார் செய்கிறார் போட்டோகிராஃபரான நம் ஹீரோ. தயார் செய்துவிட்டுத் திரும்பிப் பார்க்கிறார், அதிர்ச்சியடைகிறார். என்னவென்று பார்த்தால் அந்த ஒருவரோடு இன்னும் நால்வர் நிற்கிறார்கள். அதாவது பேமிலி போட்டோ எடுக்க வந்தார்களாம். இது நகைச்சுவை, இதற்கு நாம் சிரிக்கவேண்டும். அடுத்து அவர்களை போட்டோ எடுக்க வாகாக நீண்டநேரம் முன்பின்னாக, இடவலமாக நகர்த்திக் கொண்டேயிருக்கிறார் ஹீரோ. அதுவும் நகைச்சுவையாம். அதற்கும் நாம் சிரிக்கவேண்டும். அதன் பின் போட்டோ எடுக்கும் முன், வாசலில் நிற்கும் நண்பர் அழைக்க வெளியே செல்லும் ஹீரோ மறந்துபோய் சினிமாவுக்குப் போய்விட்டு இரவு ஸ்டுடியோ திரும்புகிறார். இந்த குடும்பம் இன்னும் காமிரா முன்பு நின்றுகொண்டிருக்கிறது. இதுவும் நகைச்சுவை, இதற்கும் நாம் சிரிக்கவேண்டும். இன்னும்.. சலிப்பூட்டும் கண்டதும் காதல், முதியவர் மரணிப்பதற்கு முன்பே போட்டோகிராஃபர்களை வரவழைப்பது, இவர்களும் நாட்கணக்கில் தங்குவது, மெதுவாக செல்லும் பைக் என பிரச்சினைகள் ஏராளம். இப்படி எரிச்சலைக் கிளப்பும் ஓவர் சினிமாடிக் நகைச்சுவைகளுடன் துவங்கும் படம், ஒரு கட்டத்தில் எழுந்து ஓடிவிடலாமா என்ற எண்ணம் தோன்றும் தருவாயில்தான் சற்று திசைதிரும்பி சுவாரசியம் பிடிக்கிறது.

சில படங்களுக்கு முதல் 10 நிமிடங்களைத் தவறவிடாதீர்கள் என அறிவிப்பு செய்வார்கள். இந்தப் படத்துக்கு முதல் 30 நிமிடங்களைத் தயவு செய்து தவறவிடுங்கள் என அறிவிப்புச் செய்யலாம்!


சாணியள்ளி 5 ரூபாய் பணம் சம்பாதித்துக்கொண்டு போட்டோ எடுத்துக்கொள்ள முனீஸ்காந்த் எனும் காரெக்டர் மீண்டும் வரும் இடத்திலிருந்துதான் கதை துவங்குகிறது, படமும் பிக்கப் ஆகிறது. விஷ்ணுவை விட காளியே அந்த ஹீரோ காரக்டரைச் செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இடைவேளைக்குப் பிறகு அதுவும் குறிப்பாக இறுதிக்காட்சிகளில் சுவாரசியம் கூடிவர, நகைச்சுவையில் படம் அதகளம் செய்கிறது. 

ஹீரோ விஷ்ணுவின் நண்பர் பாத்திரத்தில் வரும் காளி வெங்கட்டும், அவரின் இயல்பான டயலாக்குகளும், முனீஸ்காந்த் பாத்திரத்தில் முற்றிலும் எதிர்பாராத விருந்தை அளித்த நடிகர் ராம்தாஸும்தான் படத்தை தூக்கி நிறுத்துகிறார்கள் என்றால் அது மிகையில்லை. அதிலும் முகபாவங்கள், தனித்துவமான குரல், திறமைக்குத் தீனி போடும் அட்டகாசமான கதாபாத்திரம் என ராம்தாஸ் ஜொலிக்கிறார். இத்தனை நாட்கள் எங்கு ஒளிந்திருந்தீர்கள் ராம்தாஸ்? நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு படத்தை இரண்டாம் முறையும் காணவேண்டும் என்ற ஆவல் தோன்றுகிறது. அதற்கு ஒரே காரணம் ராம்தாஸ். குறிப்பாக விஷ்ணுவை அடித்து, அடிவாங்கும் காட்சியில் மனிதர் காட்டும் பரிதவிப்பு, கலக்கல் ரகம்! நீண்டநாட்களுக்குப் பின்னர் ஆனந்தராஜ், அவரது டிபிகல் மேனரிசத்தில் தோன்றுவது அழகு.

வானமுனி கல்லை அதுவும் கிளைமாக்ஸில் அலட்சியமாக‌ பயன்படுத்திய விதம், சாமியார் காரெக்டரின் பேக்ட்ராப் (வரம்பு மீறும் அந்த ஏ ஜோக் தவிர்த்து), பாஸ்மார்க் வாங்கும் 1982 பீரியட் ஆர்ட், விறுவிறுப்பான கடைசி அரைமணி நேரம், வசனம், பாடல்களை அளந்து பயன்படுத்தியது என பல விஷயங்களால் புதிய அலை இயக்குனர்கள் வரிசையில் ராம்குமாருக்கும் நிச்சயம் இடம் தரலாம். பார்க்கவேண்டிய படம்!

Wednesday, June 4, 2014

விக்கிரமசிம்ஹா -கோச்சடையான்லு


மோஷன் கேப்சரிங், மற்றும் அதன் மேம்பட்ட தொழில்நுட்பமான பர்ஃபார்மென்ஸ் கேப்சரிங் போன்றன இன்று மிகச்சிறப்பான நிலையை அடைந்துவிட்டிருக்கின்றன. எனினும், இன்னும் ஹாலிவுட்டில் கூட நிஜ மனிதர்களின் பிரதியான, அனிமேட்டட் மாடல்களை உருவாக்கிப் பயன்படுத்தும் நிலைமை பரவலாக இல்லை. பர்ஃபாமன்ஸ் கேப்சரிங் மிக அவசியமான ஒன்றுதான். ஆனால், நிஜ நடிகர்களின் மாடல்களுக்கு அவசியம் என்ன?அவற்றை கசடற உருவாக்க‌ இன்றைய தொழில்நுட்பத்தின் திறன் போதுமானதா? போன்ற கேள்விகள் நம்முன் எஞ்சி நிற்கின்றன.

நிஜ மனிதர்களின் அசைவுகளையும், முகபாவங்களையும் உருவாக்கும் தேவை சில வகை கம்ப்யூட்டர் கேம்களுக்கான அத்தியாவசியமாகிட, கேமிங் துறையே இவ்வாறான தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு முதலில் அடிக்கோலிட்டன. இந்தத்துறை, இந்த நுட்பத்தை தொண்ணூறுகளின் துவக்கத்திலிருந்தே பயன்படுத்தத்துவங்கி, தொடர்ந்து வளர்ச்சியுற்று, இன்று ஒரு தேர்ந்த நிலையை அடைந்திருக்கிறது. சமீபத்தில் வெளியான 'தி லாஸ்ட் ஆஃப் அஸ்', 'பியான்ட்: டூ ஸோல்ஸ்' போன்ற கேம்கள் இவ்வகையின் லேட்டஸ்ட் வளர்ச்சியை பறைசாற்றுகின்றன. இவ்வாண்டின் இறுதியில் வரவிருக்கும், 'கால் ஆஃப் டூட்டி: அட்வான்ஸ்டு வார்ஃபேர்'‍‍ கேமில் ஒரு காரெக்டரில் தோன்றியிருக்கும் பிரபல நடிகர் கெவின் ஸ்பேஸியின் பிரதியை இந்த இணைப்பில் உள்ள விடியோவில் காணலாம்.

https://www.youtube.com/watch?v=sFu5qXMuaJU

Kevin Spacey
இந்த விடியோவின் 57வது விநாடியில் க்ளோஸப்பில் கிடைக்கும் கெவினின் உருவமும், முகபாவமும்தான் இன்றைய சூழலில் உண்மைக்கு மிக நெருக்கமான பர்ஃபாமன்ஸ் கேப்சரிங் அனிமேஷனாக இருக்கலாம். இது வருங்காலத்தில் இன்னும் மேம்படக்கூடும்.

Kevin in Call of Duty
ஹாலிவுட் சினிமாவை எடுத்துக்கொண்டால், கேம்களைப் போலவே நீண்டகாலமாக‌ இந்த நுட்பம் பயன்பாட்டிலிருக்கிறது. ஆனால் அவை நிஜ மனிதர்களை பிரதியெடுக்கும் வேலையில் பெரும்பாலும் ஈடுபடவில்லை. 'டெர்மினேட்டர் சால்வேஷன்' படத்தில் ஒரு காட்சியில் வரும் 'அர்னால்ட்', 'போலார் எக்ஸ்ப்ரஸ்' படத்தின் சில காட்சிகளில் வரும் 'டாம் ஹேங்க்ஸ்' போன்று ஆங்காங்கே நிஜ மனிதர்கள் பிரதியெடுக்கப்பட்டிருந்தாலும் முழு நீளப் படங்கள் என்று பார்த்தால் ஃபைனல் ஃபேன்டஸி, பியோவுல்ஃப் போன்ற மிகச்சில படங்களே தென்படுகின்றன. பியோவுல்ஃபில் ஏஞ்சலினா, ஆன்டனி ஹாப்கின்ஸ் போன்றோர் பிரதியெடுக்கப்பட்டிருந்தனர்.

Arnold back to his 20s in Terminator: Salvation

Angelina Jolie in Beowulf

(ஆனால், அதன் பிரதான காரெக்டரான பியோவுல்ஃபுக்கு நடிப்பை வழங்கிய நடிகர் 'ரே வின்ஸ்டனி'ன் உருவம் அந்தக் காரெக்டருக்காக பிரதியெடுக்கப்படவில்லை. முற்றிலும் வேறான ஒரு உருவத்துக்கு அவர் தன் நடிப்பை வழங்கியிருந்தார். இதுவே இந்த நுட்பத்திலிருக்கும் இன்னொரு பலமான அம்சம். ஒரு நடிகரின் உருவம் 3டியில் ஸ்கேன் செய்யப்பட்டு அந்த உருவுக்கு முற்றிலும் வேறான ஒரு நடிகரின் நடிப்பை வழங்கிவிடமுடியும். கோச்சடையான் படத்தில் நாகேஷை மீண்டும் திரையில் தோன்ற வைக்கமுடிந்தது இப்படித்தான்) 

Ray winstone as Beowulf
ஆக‌, நடிகர்கள் பிரதியெடுக்கப்படுவது குறைவாகவே இருந்தாலும் பர்ஃபாமன்ஸ் கேப்சரிங் நுட்பம் நீண்டகாலமாக தொடர்ந்து பல படங்களில் பயன்படுத்தப்பட்டுவருகிறது. லார்ட் ஆஃப் தி ரிங்ஸில் 'கோல்லும்' கேரக்டர் ஒரு பிரபலமான உதாரணம். மனிதர்கள் அல்லாத கற்பனை உருவங்களை உருவாக்கவும், அவற்றை செழுமைப்படுத்தவுமே இந்நுட்பத்தைப் பயன்படுத்தி புத்திசாலித்தனமாக செயல்படுகின்றனர் ஹாலிவுட் இயக்குனர்கள். இதனால் இதன் குறைகள் மறைக்கப்படுகின்றன. 'அட்வென்சர் ஆஃப் தி டின்டின்' படத்தின் அனிமேஷன் காரெக்டர்கள் இதுவரையில்லாத அளவு மனித அசைவுகளை மிகத்துல்லியமாக கொண்டிருந்ததைக் கண்டு வியந்தோம். ஆனால் அந்த உருவங்கள் நிஜ மனிதர்களின் அனாடமியை கொண்டிருக்கவில்லை. 'அவதாரி'ல் நவி மக்கள் வாழும் பன்டோரா எனும் புது உலகே அற்புதமாக உருவாக்கப்பட்டிருந்தது. நவிக்கள் மனிதர்களைப் போலவே இருந்தாலும் அவர்களின் முக வடிவமைப்பு, விலங்குகளைப் போன்ற பழுப்பு நிற பெரிய கண்கள், மெலிந்த உடல், உயரம், குறிப்பாக தோலின் இருவேறு நீல நிறங்கள் என அவர்கள் நிறைய வேறுபடுத்தப்பட்டிருந்தார்கள். கதை அதற்கேற்ப இசைந்திருந்தது. இதனால் தொழில்நுட்பக் குறைபாட்டை நாம் கண்டுகொள்ளமுடியாதபடி/ அல்லது அதற்கு அவசியமில்லாதபடி செய்யப்பட்டது. ஆனாலும் பர்ஃபாமன்ஸ் கேப்சரிங்கை துல்லியமாக பதிவு செய்ததில் இன்றுவரை அவதாருக்கே முதலிடம் தரலாம். ஜோ ஸல்தானா, நேய்த்ரிக்கு தந்த முகபாவங்கள் அற்புதமான ஒன்று.

Zoe saldana as Neyitiri
கதை தீர்மானிக்கிறதோ, தொழில்நுட்பத்தின் போதாமையோ, பட்ஜெட்டின் போதாமையோ மில்லியன் டாலர்களில் புரளும் ஹாலிவுட் இன்னும் நிஜ மனிதர்களைப் பிரதியெடுத்து காரெக்டர்களை உருவாக்கும் வேலையில் முனைப்பாக இறங்கவில்லை.

அதனால் நமக்கென்ன‌ போச்சு என தைரியமாக நிஜ நடிகர்களின் பிரதியை உருவாக்கி தமிழில் படம் ஒன்றை உருவாக்கிய‌ சௌந்தர்யாவை பாராட்டுவதா, அல்லது படத்தின் ஆக்கத்தைப் பார்த்துவிட்டு பேமுழி முழிப்பதா என்றுதான் எனக்குத் தெரியவில்லை. தமிழில் இன்னும் உருப்படியாக ஒரு அனிமேஷன் படம் கூட வரவில்லை, அதற்குள்ளாக‌ பர்ஃபாமன்ஸ் கேப்சரிங், அதற்கும் மேலாக நிஜ மனிதர்களின் மாடல்கள்! இதற்குப் பெயர்தான் ஆர்வக்கோளாறு என்பதா? ஆனால், ஏற்கனவே மோஷன் கேப்சரிங் நுட்பம் தமிழில் சிறப்பாக பயன்படுத்தப்பட்டிருக்கிறதுதான், நல்ல வேளையாக அதுவும் ரஜினியின் படம்தான். எந்திரன்! ரோபோவின் அசைவுகளுக்காக சில காட்சிகளில் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் குறிப்பிடத்தகுந்தவை அவை!

கோச்சடையானைப் பொறுத்தவரை தமிழில் ஒரு நல்ல அனிமேஷன் முயற்சி என்பதோடு நாம் முடித்துக்கொள்வது நல்லது. எனக்கென்னவோ கோச்சடையான் ஒரு அவியல் மாதிரிதான் தெரிந்தது. சௌந்தர்யா, சுல்தான் தி வாரியர், ஈராஸின் ஒப்பந்தம், பட்ஜெட் என பல பிரச்சினைகள். ரஜினி ரசிகர்கள் படத்தை விட்டுக்கொடுக்காமல், எதைத் தேடிப்பிடிப்பது என முயற்சித்து கடைசியில் கே.எஸ்.ரவிக்குமாரை போட்டுப் பாராட்டித் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். அவர் மாவும் விக்கணும், காத்தும் அடிக்குதுங்கிற கவனத்தோட ஏதோ ஒட்டுவேலைகளை முயற்சித்திருக்கிறார். ஆனால், அது முழுமையாவது ஒரு இயக்குனரின் கைகளிலேயே இருக்கிறது. காப்பி பேஸ்ட் ஆப்ஷன் இருந்ததோ, சௌந்தர்யாவின் அனிமேஷன் டீம் பிழைத்ததோ! வீரர்கள், குதிரைகள், அவர்களின் அசைவுகள் அனைத்தும் ஒரே மாதிரித் தோற்றம். அதிலும் குதிரையின் அனிமேஷன் எல்லாம் சிறுபிள்ளைத்தனம். 'லிட்டில் கிருஷ்ணா'வில் வரும் விலங்குகள் கூட அநாயசமாக இயங்குகின்றன. லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் படத்தில் நூற்றுக்கணக்கான வீரர்கள் போரிடுவதைப்போன்ற காட்சிகளில், ஒவ்வொரு வீரனின் அசைவும் தனித்துவமாக இருக்க வேண்டுமென்பதற்காக மேஸிவ் எனும் தனித்துவமான மென்பொருளே உருவாக்கப்பட்டதென்று படித்ததெல்லாம் தேவையில்லாமல் இங்கே ஞாபகம் வருகிறது.


ரஜினி ஒரு நல்ல என்டர்டெயினர். ஆனால், எல்லாவற்றையும் விட தயாரிப்பாளர்களின் தங்கம். விளைவுகள் தெரிந்தே படத்தின் விளம்பரத்துக்காக காட்சிகள் வைப்பது, ரசிகர்களின் டெம்போவை பொத்திப் பாதுகாப்பது, விளம்பர ஸ்டன்டுகள் அடிப்பது போன்றவற்றில் விற்பன்னர். அதனால்தான் அமிதாப், சிரஞ்சீவியெல்லாம் எங்கோ போயிருக்க, இன்னமும் ரஜினியின் இடம் அவரிடமே இருக்கிறது. ஆக, இந்தியாவிலேயே முதல் முறையாக பர்ஃபாமன்ஸ் கேப்சரிங், உசிலம்பட்டியிலேயே முதல்முறையாக 3டி, என்றெல்லாம் விளம்பரத்துக்காக இவர்கள் அடிக்கும் ஜல்லிகளையெல்லாம் தேவையென்றால் நம்பிக்கொள்ளுங்கள். தமிழகத்தில் ஒன்றும் பிரச்சினை இல்லை, நாம் ரஜினி கொட்டாவி விட்டால் கூட 'ஆகா எவ்ளோ பெரிய வாய்!' என்று வியக்கக்கூடியவர்கள். ஆனால், தெலங்கானாவில் 'ரஜினி படமா? சூப்பராயிருக்குமே..' என்று என்னுடன் ஆர்வமாக வந்த நண்பர், 'பக்கத்து தியேட்டரில் பாலகிருஷ்ணா விடும் பஞ்ச் டயலாக்கைக் கேட்கப்போயிருப்பேனே.. என்னாதிது..' என்று அலறியதைப் பார்க்கையில் பாவமாகத்தான் இருந்தது!
.