Tuesday, February 11, 2014

சுபாவுடன் ஒரு நாள்!


ஞாயிறு முழுதுமே வெளியே செல்வதில் விருப்பமின்றி, வீட்டிலேயே உழல்வதுதான் என் வழக்கமெனினும் சென்ற ஞாயிறு காலையிலேயே எங்காவது கிளம்பவேண்டுமென ஒரு உந்துதல். ஒன்றுமில்லையெனில் ஏதாவது படத்துக்காகவேனும் வெளியே கிளம்பிவிட திட்டமிட்டேன். ரமாவுடன் சில நாட்களாக நிலை: தகராறு என்பதால், மீண்டும் கூட்டணி அமைக்கும் பொருட்டு அவரையும் அழைத்துச்செல்ல முதலில் யோசித்தேன். பின்பு மனதை மாற்றிக்கொண்டு தனியே கிளம்பலாம் என முடிவு செய்தேன். மதியம் 3 மணி வாக்கில் கிளம்பியபோது திடுமென சுபாவுடன் கூட்டணியமைக்க முடிவு செய்தேன். சட்டென அவனும் ஓகே சொல்லி, மேலிடத்தில் அனுமதியும் பெற்று ஆடை மாற்றித் தயாராகிவிட்டான். கிளம்பினோம்.

ரமா இல்லாமல் தனியே இவன் இப்படி என்னுடன் வருவது இதுதான் முதல் தடவை. கிளம்பும் போது முதலில், இன்று பல புதிய விஷயங்களைக் காண்பிப்போம், அவனுக்கு இது ஒரு ஜாலியான நாளாக அமையப்போகிறது என எண்ணி மகிழ்ந்தேன் நான், ஆப்புகள் மிகுந்த நாளாக இது எனக்கு அமையப்போகிறது என்ற உண்மை தெரியாமல்!

முதல் நிறுத்தம், பீஸா கார்னர். அது அவனுக்காக இல்லை என்று உங்களுக்கு நன்கு புரிந்திருக்கும். என்றைக்கோ சாப்பிட்ட சிக்கன் பீஸா நினைவிலாட அதைக் கண்டுபிடித்துவிடும் நோக்கில்தான் அங்கு நிறுத்தினேன். அந்தத் தேடலில் சமீபத்தில் பாஸ்தா எனும் படுகுழியில் நான் விழுந்தது கூட உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஜாலியாக உள்ளே போய் அமர்ந்தோம். புதிய இடங்களில் 'சற்று நேரம் சமர்த்து' எனும் பாலிஸிபடி கொஞ்ச நேரம் அமைதியாக அமர்ந்திருந்தான். மெனு கார்டு வருவதற்குள்ளேயே அவனது உரையாடலின் வால்யூம் கொஞ்சம் அதிகமாகியிருந்தது. மெனு கார்டு
அவன் சைஸுக்கு இருந்ததால் படம் பார்க்க ஆரம்பித்தான். நான் அந்த சிக்கன்
பீஸாவை தேடும் தீவிர‌ பணியிலிருந்தேன்.

சத்தமாக கேட்டான்.

"என்னப்பா பூராம் இங்லிஷ்ல இருக்கு?"

என்னவோ தமிழில் இருந்தால் முழுதும் வாசித்துத் தள்ளிவிடுவதைப்போல இருந்தது தொனி. உஸ்ஸ்.. என்று அமைதிப்படுத்திவிட்டு,

"பரவால்லம்மா, நான் ஆர்டர் பண்ணிக்கிறேன். முதல்ல எதுன்னாலும் நீ அமைதியா பேசு"

"ஏன்?"

"மத்தவங்களுக்கு டிஸ்டர்பன்ஸா இருக்கும்ல.."

"ஓஹோ..!" என்று சொல்லிவிட்டு மெனு கார்டில் கவனமானவன், திடுமென அதிர்ச்சியாகி மீண்டும் சத்தமாக,

"யப்பா.. எல்லாம் டூ ஹன்ட்ரட், த்ரீ ஹன்ட்ரட்னு காஸ்ட்லியா போட்டுவைச்சிருக்கான் கடைக்காரன். கொஞ்சம் பணத்துக்கு ஏதாவது சொல்லுங்க.. இங்க பாருங்க ஒன் தர்டி ஃபைவ்!"

அடப்பாவி, மானத்தை வாங்குனானேன்னு வாயைப்பொத்தி அமைதிப்படுத்தினேன். ரூபாய்னாலே என்னான்னு தெரியாது, அதுக்குள்ளே எப்போ இந்தளவுக்கு பொருளாதார நிபுணரானான்னு யோசிச்சபிற‌குதான் தொடர்ந்து ஒரு வாரமாக விளையாடிக்கொண்டிருக்கும் பைக் ரேஸ் ஞாபகம் வந்தது. கலர், வீல் டிஸைன், ஹெல்மெட்னு ஒவ்வொரு விஷயத்துக்கும் சேகரிக்கும் பணத்தைக் கொடுத்து அப்கிரேட் செய்வது போன்ற கேம். அதில் புதிய பைக் வாங்க பொறுமையாக நிறைய பணம் எப்படி சேகரிப்பது, எப்படி சிக்கனமாக இருப்பது போன்ற விஷயங்களைச் சொல்லிக்கொடுத்ததன்
இம்மீடியட் பின் விளைவு இது. அந்தச் நேரத்திலும் டூ ஹன்ட்ரடை விட ஒன் தர்ட்டிஃபைவ் குறைச்சல் எனும் அவனது கணிதத் தேர்ச்சியை மனதுக்குள் மெச்சிக்கொண்டேன். அதோடு பெட்டிக்கடையிலிருந்து, ஷாப்பிங் மால் வரை எல்லோருக்கும் ஒரே சொல் கடைக்காரன். அட்லீஸ்ட் அதைக் கடைக்காரர் என திருத்த முயன்று கொண்டிருக்கிறேன்.

"பரவாயில்லம்மா, ஒரு நாள்தானே.. உனக்கு என்ன வேணும்னு மட்டும் சொல்லு"

அடுத்த சிக்ஸர், "ஓஹோ, நிறைய பணம் வைச்சிருக்கீங்களா? ஆஃபீஸ்ல உங்க ஸார் நிறைய பணம் கொடுத்திருக்காங்களா?"

அதாவது ஸ்கூலில் அவனுக்கொரு மிஸ் இருப்பது போல ஆஃபீஸில் எனக்கொரு ஸார். அதுக்கு மேல் விளக்க முடியாது என்பதால் நைஸாக, "ஆமா" என்றேன்.

"சரி, அப்ப பீஸா எதுனாலும் சொல்லுங்க.. எனக்கு ஐஸ்க்ரீம் மட்டும் நிஜமா
சொல்லிடுங்க" பீஸா என்கிற சொல் தெளிவாக, கச்சிதமாக இருந்தது.

ஆர்டர் செய்தேன், ஆங்கிலத்தில்.

"என்னப்பா இங்கிலிஷ்ல சொல்றீங்க? அவங்களுக்கு தமிழ் தெரியாதா?"

அவனே பதிலை எடுத்துக் கொடுத்துவிட்டதால், "ஆமாம்மா.. அதான்" என்றேன்.

மீண்டும் ஒரு, "ஓஹோ"

இவர்கள்தான் ஆர்டர் செய்த பிறகுதான் பீஸாவுக்கு மாவே பிசைய ஆரம்பிப்பவர்களாச்சே! வருவதற்குள் விடிந்துவிட்டது. அதற்குள் ஃபுல் ஃபார்முக்கு வந்துவிட்டான். 'சேர் ஏன் இப்படியிருக்கு? ஏன் என் தண்ணி பாட்டில எடுத்துட்டு வரல நீங்க? மறந்துட்டீங்களா? அடுத்து நாம எங்கப் போகப்போறோம்? பார்க்குக்கு கண்டிப்பா போகணும். சறுக்கு விளையாடணும். ஏன் இவங்க இன்னும் கொண்டு வரமாட்டேங்கிறாங்க? வீட்டுக்கு போலாமா?'. அரைமணி நேரம் தாக்காட்டிய பிறகு, பீஸாவும், ஜூஸும் வந்தது.

"ஐயா, புண்ணியவான்களே.. கையோட ஐஸ்க்ரீமையும் இப்பயே கொடுத்துடுங்க" இப்போது தமிழிலேயே சொன்னேன்.

அதேதான் கரெக்டா, தப்பான பீஸாவை செலக்ட் செய்திருக்கிறேன் போல.. வாயில் வைக்க முடியவில்லை. அவனுக்கு ஒரு வாய் கொடுத்ததும்,

"நல்லாருக்குப்பா, ஆனா எனக்கு வேண்டாம்.. நீங்களே சாப்புடுங்க!" என்றான் ரொம்ப நல்லவன் போல. ஜூஸை மட்டும் 'விருட் விருட்'டென உறிஞ்சி முடித்தான். முடிந்தவரை முயற்சித்தேன்.

"என்னப்பா, முக்கித் தக்குற மாதிரி இருக்குது" என்றான் நைஸாக. அடப்பாவி, நக்கல் வேறயா!

பின்பு ஐஸ்க்ரீம் வந்தது. கருமம் பிடிச்சவனுங்க.. அந்தப் பெரிய கிண்ணம், அதைச்சுற்றிய வெள்ளைத்தட்டு என அனைத்திலும் கோடு கோடாய் விளிம்புவரை சாக்லெட்டை ஊற்றி வைத்திருந்தான்கள். இதுதானாய்யா உங்கள் உணவ‌லங்காரம்? நானே கவனிக்காமல் ஏதோ டிஸைனாக்கும் என்று கையை வைக்க, சுபாவும் அதற்குள் இரண்டு கையையும் வைத்துவிட்டு சட்டென சட்டையில் இழுவிக்கொண்டான். கையில் ஏதும் ஆகிவிட்டால் சட்டென சட்டையில் துடைத்துக்கொள்ளும் பழக்கம் இன்னும் போகவில்லை.

"அடச்சூ" (அடத்தூவின் மருவிய டீஸன்டான வடிவம். நான் ஒரு நாள் எதற்கோ இதைச்சொல்ல, அவன் அதை துருவித் துருவிக்கேட்டதால் மாற்றிச்சொல்ல நேர்ந்தது. திடுக்கிடும் நேரங்களில் அவன் அதை ஜாலியாக பயன்படுத்துகிறான்.)

"அடச்சூ" என்று நானும் சொல்லி டிஷ்யூவால் துடைத்துவிட,

"ஏம்பா கடைக்காரன் இப்படி இழுவி வைச்சிருக்கான்?"

எனக்கு வந்த ஆத்திரத்துக்கே அவனுகளைக் கேட்கணும் போலிருந்தது. அவன் கேட்க மாட்டானா? எதையோ சொல்லி சமாளித்து மேலும் நான்கைந்து முறை சாக்லெட்டை இழுவிக்கொண்டு ஒருவழியாக‌ சாப்பிட்டு முடித்து வெளியே வந்தோம்.

அடுத்து, கேகே நகர் சிவன் பார்க்.

உள்ளே நுழையவுமே, "அப்பா, பலூன்ப்பா"

"நீ என்ன குட்டிப்பிள்ளையா? பலூன் கேக்கிற?"

சிரித்துக்கொண்டே, "ஓஹோ"

சறுக்கு விளையாட்டுப் பகுதி. அவனுக்கு மிகப்பிடித்தமான விளையாட்டு. அதற்காகத்தானே இந்த மெனக்கெடல். ஆனால் இம்முறை கூடவே நில்லாமல் தனியே விடுவதென முன்பே தீர்மானித்திருந்தேன். தூரமும் இல்லாமல், மிக அருகும் இல்லாத இடத்தில் நின்றுகொண்டு நீயே போய் விளையாடு என்று அனுப்பிவிட்டு, வேறெங்கோ கவனிப்பதாய் பாசாங்கு
செய்துகொண்டிருந்தேன். வெளியுலகில் எப்படி இயங்குகிறான் எனப் பார்க்க ஒரு ஆர்வம்.

அன்று குழந்தைகள் கூட்டம் வேறு சற்று அதிகமாக இருந்தது. ஆர்வம் ஒரு பக்கம், தயக்கம் ஒரு பக்கமென போய் முதல் தடவை சறுக்கிவிட்டு வந்தான். அதற்குள் கூட்டமாகிவிட ஒரு சிறிய லைனில் நிற்க வேண்டியதாகிவிட்டது. இவன் ஒழுக்கமாக லைனில் நிற்க, சில பிள்ளைகள் இவனை முந்திக்கொண்டு லைனில் சென்றன. இவன் முந்தைய பிள்ளையை நெருங்கி நின்றால் கூட சிலரைத் தடுத்திருக்கலாம். ஆனால் நெருங்கத் தயங்கினான்.

அடுத்தவரை தொடும் சகிப்புத் தன்மை குறைவால் பொதுவாக லைன்களில் முந்தைய ஆளுக்குப் பின் இடைவெளி விட்டே நிற்பேன் நான். பின்புறம் ஆட்கள் இடித்துக்கொண்டு 'போங்க சார் அதான் இடமிருக்கே' என்றால் கூட, 'பொறுங்களேம்யா.. அதான் ஒரே ஸ்பீட்லதான லைன் போகுது. அடுத்த ஆள் மேல ஏறிகிட்டுதான் நிக்கணுமா?' என்பேன். தப்பாம பொறந்திருக்கான். முடியல.. அவன் பாடு, எப்படியும் விளையாடிவிட்டு வரட்டும் என்று விட்டு விட்டேன். நியாயமான முறையில் லைனில் நின்று இன்னும் நான்கைந்துமுறை விளையாடிவிட்டு வந்தான்.

"ஹேப்பியா?"

"ஹேப்பி! போலாமா? வீட்டுக்கா?" திடுமென, "இன்னும் ஓராட்டி விளையாடிட்டு வரவா?" என்று கேட்டுவிட்டு மீண்டும் ஓடினான்.

(சிவன் பார்க் ஓவியப் பின்னணியில்)

வந்தபின், சற்று நேரம் குழந்தைகள் ரோலர் ஸ்கேட்டிங் விளையாடுவதை வேடிக்கை பார்த்தோம்.

"உனக்கு இந்த ஷூஸ் வேணுமாம்மா?" என்றேன்.

ஒன்றிரண்டு பேர் விழுந்து வாரியதைப் பார்த்தவன், "டூ ஸ்டான்டர்ட் போனப்புறம் வாங்கிக்கலாம்" என்றான். பல சமயங்களில் அவனை சமாளிக்க நான் சொல்லும் வாக்கியம் இது.

பின்பு கிள‌ம்பினோம். ஃபேம் நேஷனல் நிறுத்தம்.

"படத்துக்கு போலாமா?"

"அனிமேஷன் படம்னாத்தான் நான் வருவேன்.. இல்லன்னா வேண்டாம்"

கிழிஞ்சிது போ! இப்ப அப்படி படம் ஒன்றும் வரவில்லை, அயன் மேன் 3 (!?) வந்ததும் அழைத்துப்போகிறேன் என்று நைஸாக பேசி சம்ம‌திக்க வைத்து வீரம் படம் பார்க்கத் திட்டம் போட்டு பாக்ஸ் ஆபீஸ் அருகே சென்றோம். லைனில் ஓரிருவர் நிற்க, நான் அனுமதிச்சீட்டு நிலவரத்தை அறிய டிவியைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

"என்னப்பா டிக்கெட் வாங்காம, டிவி பாத்துகிட்டிருக்கீங்க?"

"எந்த படம் பாக்கணும்? எத்தனை மணிக்கு போடுவாங்க? டிக்கெட் இருக்கா, முடிஞ்சிடுச்சான்னு அதுல வரும்மா. அதான் பாத்துகிட்டிருக்கேன்"

"ஓஹோ"

லைனில் நின்றோம்.

"ரெண்டு டிக்கெட்" என்றேன்.

"ஸாரி ஸார், இல்லை"

"டிஸ்ப்ளே காமிக்குதே"

"ஒண்ணுதான் இருக்கு. அதான் அப்படி! ஹிஹி!"

டேய், எனக்குன்னே பிளான் பண்ணி இப்படில்லாம் பண்ணுவீங்களாடா என்று மனதுக்குள் திட்டிவிட்டு வெளியேறினேன். அந்த கவுன்டர்வாசி சொன்னது என் காதிலேயே சரியாக விழாதபோது சுபாவுக்கு எப்படி கேட்டிருக்கும்?

"என்னப்பா டிக்கெட் வாங்கலையா?"

"டிக்கெட் இல்லையாம். நாம வீட்டுக்குப் போலாமா?"

"அப்போ, டிவியை அவ்ளோ நேரம் பாத்துகிட்டிருந்தீங்க?"

'டேய் எல்லாம் நேரம்டா' என்று மனதுக்குள் சொல்லிவிட்டு பேச்சை மாற்றினேன்.

"கிளம்பலாமா?"

"ஓகே" என்றவன் திடுமென ஞாபகம் வந்தவனாக, "ஒரு நிமிசம் வாங்கப்பா" என்றபடியே மாலுக்குள் ஓடினான். உடனேயே கெஸ் பண்ணிவிட்டேன். எஸ்கலேட்டர் பயணம். இங்கு வந்து நான்கைந்து மாதங்களாவது இருக்கும். ஞாபக சக்தி நன்றாகத்தான் இருக்கிறது. வந்ததற்கு நான்கைந்து தடவைகள் எஸ்கலேட்டரில் மேலும் கீழுமாய் பயணித்துவிட்டு பின்னர், வீட்டுக்குக் கிளம்பினோம். செல்லும் வழியில் ஒரு எலக்ட்ரானிக் கடையில் நிறுத்தம். டிவி ரிமோட் உடைந்துவிட்டதால் வேறு வாங்குவதற்காக நிறுத்தினேன்.

ஏற்கனவே ஓரிரு தடவைகள் வந்தப் பழக்கம் என்பதால் கடைக்காரர் நட்பாகியிருந்தார். சிரித்துப் பேசினார். நானும் மிக கேஷுவலாக,

"ஒழுங்காத்தான் ஓடிகிட்டிருந்தது பாத்துகிடுங்க‌, நேத்து கை தவறி கீழ விழுந்து உடைஞ்சிட்டது.." என்றேன்.

சுபா தடுப்புப் பலகை உயரம் கூட இல்லாததால் சட்டையைப் பிடித்து எதையோ சொல்வதற்காக‌ கீழே இழுத்தான். குனிந்தேன். அதிக சத்தமுமில்லாமல், சற்று கோபமாகவும், பல்லைக் கடித்துக்கொண்டு,

"ஏன் பொய் புளுவுறீங்க.. உம்மையைச் சொல்லுங்க. நீங்கதானே ரிமோட்டை உடைச்சீங்க"

கபால்னு வாயைப் பொத்தினேன். சமீபத்தைய வீட்டுக்கலவரத்தில் ரிமோட் மீதுதான் கோபத்தைக் காட்டியிருந்தேன். அதுசரி, கோபத்தையும் இப்படி 100, 200 ரூபாய் பொருள் மீதுதானே காட்டவேண்டியிருக்கிறது. பக்கத்தில்தான் செல்போன் இருக்கிறது. அதைவிட பெரிதாக ஒரு கம்ப்யூட்டர், அதைவிடவும் பெரிதாக ஒரு டிவி. என்ன கோபமென்றாலும் கை அங்கு செல்லுமா என்ன? அதோடு ஆத்திரத்தில் கொலை செய்வது கண நேர முடிவு என்பார்களே, அதுபோல டிவி பார்த்துக்கொண்டிருக்கும் போதுதான் சண்டை வருகிறது. அதுசரி, வீட்டில் வேறு என்ன காரியம்தான் செய்கிறோம் நாம்? அந்த சமயத்தில் கையில் இருப்பது ரிமோட்தானே! எழுந்து போய் ஷெல்ஃபிலிருக்கும் போனை எடுப்பதற்கு எத்தனை விநாடிகள் ஆகும்? அதுவரை கோபம் இருக்குமா என்ன? அன்னிக்கு, இவன் பெட்ரூமில் ஹோமொர்க்தானே எழுதிக்கொண்டிருந்தான் என்ற சந்தேகத்தோடு,

"இல்லம்மா, அது தானாவேதான் கீழ விழுந்தது"

"இல்லையே, நான் ஒத்தைக்கண்ணால பாத்துகிட்டிருந்தனே.. அம்மா திட்டினாங்க, நீங்களும் திட்டிட்டு ரிமோட்டை கீழ போட்டிங்களே.. எனக்குத் தெரியுமே!"

"இல்லவே இல்ல. ரிமோட் ஷெல்ஃபில் இருந்தது. அப்போ ஒரு குட்டிப்பல்லி பக்கத்துல வந்துது. நான் அம்மாக்கூட பேசிகிட்டிருந்தனா? அப்ப பல்லி தள்ளி விட்டிருச்சு. நான் பிடிக்கலாம்னு போறதுக்குள்ள அது கீழ டப்புனு விழுந்துட்டுது.."

சந்தேகத்தோடயே, "என்கிட்டயும் புளுகிற மாதிரி இருக்குதே.. பொய் சொல்றீங்களா? நான் பாத்தனே.." என்றபடியே பாயின்டைப் பிடித்தான்.

"பல்லி குட்டியா இருக்கும். ரிமோட் பெருசா இருக்கும். அது எப்படி தள்ளமுடியும்?" ஆனாலும் சற்று சந்தேகம் வந்துவிட்டபடியால் அதையே பிக்கப் செய்தேன்..

"ஆங்.. பல்லி தள்ளலை. இப்பதால் ஞாபகம் வருது. ஒரு பெரிய எலி அங்க டக்க்னு வந்துது. அது பல்லிய புடிக்க வேஏஏகமாக வந்தப்போ டம்முனு பல்லி பக்கத்துல இருந்த ரிமோட்ல இடிச்சி, ரிமோட் டொம்னு விழுந்துட்டுது"

"ஓஹோ" இன்னும் சந்தேகம் தீர்ந்தபாடில்லை. இருந்தாலும் நான் கொடுத்த ம்யூசிக் எஃபெக்ட்ஸ் கொஞ்சம் வேலை செய்திருந்தது. புது ரிமோட்டை வாங்கிக்கொண்டு, அதே கதையை மீண்டும் பலவாறாக‌ சொல்லியபடியே வீடு வந்து சேர்ந்தேன்..

வந்த உடனேயே ஆரம்பித்துவிட்டான் அம்மாவிடம்.

"நாங்க எங்கல்லாம் போனோம் தெரியுமா? மொதல்ல சறுக்கு விளையாட பார்க்குக்கு போனோம்.. இல்லல்ல, பீஸா சாப்பிட கடைக்குப் போனோம். அங்க தட்டுல சாக்லெட் டிஸைன் போட்டிருந்தாங்க.. அது கையில இழுவிச்சி.."

பல்லி தள்ளிவிட்ட ரிமோட் வரை கதை ஒன்றுவிடாமல் ஒப்பிக்கப்பட்டது. இதெல்லாம் எப்படி? இதுக்குன்னே ட்ரெயினிங் கொடுக்குறாங்களா? இல்ல, பார்ன் நேச்சரா?

உஸ்ஸ்ஸ்ஸப்பா!

.

6 comments: