Saturday, March 22, 2014

குக்கூ- விமர்சனம்


பெரிய இடமென்றாலும் ராஜுமுருகன் என்றதும் நம்ப ஆள் என்பது போல ஒரு நெருக்கம் மனதிலிருந்தது. கூடவே நிறைய எதிர்பார்ப்பும் இருக்கத்தான் செய்தது. ஆயினும் முதல் நாளே போனதற்கு அழைத்துச்சென்ற நண்பர்தான் காரணம்.

தலைப்பு, விளம்பரப் போஸ்டர்கள் இதனாலெல்லாம் இதயம் வருடும் ஒரு மெல்லிய காதல் கதையை எதிர்பார்த்திருந்தேன். ரொம்பச்சரிதான், அதே போல ஒரு கதையைச் சொல்லத்தான் ராஜுமுருகனும் முயன்றிருக்கிறார்.

பார்வையற்ற ஒரு இளைஞனுக்கும், இளம்பெண்ணுக்குமிடையே ஒரு அழகிய காதல். கூடவே பார்வையற்றோர் இந்த வாழ்வை எதிர்கொள்ளும் அழகு. எவ்வளவு அழகான கதைக்களம்! ரசனைமிகுந்த இயக்குனர் வேறு.

இருண்ட திரையில் ஒலிக்கும் குரல்களோடு படம் துவங்குகையில் இன்னும்தான் நம் எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது. பார்வையற்றோரின் உலகம், மெல்ல மெல்ல நம் முன்னே விரிந்து அதில் இயல்பான காரெக்டர்களும், நிகழ்வுகளும் என சுவாரசியமாகத் தொடர்கிறது. இடைவேளை வரையில், ஏன் முக்கால்வாசிப் படம் வரையில் சிரித்துக்கொண்டே இருக்கிறோம். பின்பு காதல் வேகத்தில் முன்னெச்சரிக்கையற்ற காதலன், காதலியின் நடவடிக்கையினால் ஏற்படும் டென்ஷன், வில்லன்களிடம் சிக்கி, இறுதியில் அந்தக் காதல் ஜோடி இணையுமா, இணையாதா என்ற விறுவிறுப்பு வேறு. ஒரு குத்துப் பாடல் தவிர வேறு ஏதும் சொல்லிக்கொள்ளும்படி வணிக சமரசங்களும் இல்லைதான். ஆனால், ராஜுமுருகன் படம் ஜெயிக்கத்தேவையான அத்தனை விஷயங்களையும் நாசூக்காக உள்ளடக்கிய ஒரு தமிழ் சினிமாவை உருவாக்கியிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். குத்துப் பாடல்களும், அந்தரத்தில் பாய்ந்தடிக்கும் சண்டைக்காட்சிகளும் மட்டும்தான் கமர்ஷியல் சினிமாவின் அடையாளங்களா என்ன?

எந்நேரமும் ஹீரோயின் கையோடு வைத்திருக்கும் கடிகாரத்தை தொலைத்துவிட, அதுவரை ஆளில்லாமல் அமைதியாக இருந்த அந்தத் தெருவில் அண்ணாசாலை ட்ராஃபிக் ஏற்பட்டு அதனூடே நம் ஹீரோ பயணித்து, கடிகாரத்தை மீட்டு வருவதை கமர்ஷியல் என்று சொல்லலாமா? ரயில்வே நிலையங்களிலேயே தொழிலையும், வாழ்க்கையையும் நடத்தும் ஹீரோ, ஹீரோயினைத் தேடும் இறுதிக்காட்சியில் ரயில்வே ப்ளாட்பாரத்தில் கடைகளையும், தூண்களையும் மோதிக்கொண்டு ஓடுவதை வேறெப்படி வர்ணிக்கலாம்? பார்வையற்றோரின் நகைச்சுவைக் காட்சிகளில் நகைச்சுவை இருந்ததே தவிர பார்வையற்றோரின் உலகம் இல்லை. இப்படியான விஷயங்களாலெல்லாம் ஒருவகையான சினிமாத்தனம் மிஞ்சியதே தவிர ஊடே இழையோடியிருக்கவேண்டிய உணர்வுகளும், உண்மையும் மிஸ்ஸிங்தான்!

ஒரு கிளாஸிகல் படம் கிடைத்திருக்கும் சகல வாய்ப்புகளும் இங்கு இருந்தன. ஆனால், அத்தகைய தேவதூதன் அவ்வளவு சீக்கிரம் இறங்கி வந்துவிடுவானா என்ன?

அழகிய ஒளிப்பதிவு, இனிய பின்னணி இசை ஆகியன படத்துக்கு இன்னும் அழகூட்டுகின்றன. நடிகர்களின் பங்களிப்பும் சிறப்பே! மாளவிகா அழகு. தினேஷ் அவரளவில் சிறப்பைத் தர முயன்றிருக்கிறார். துவக்கக்காட்சியில் மாளவிகாவிடம் அடிவாங்குகையில் அவர் தரும் ரியாக்‌ஷன் சட்டென நம்மைப் பதறவைக்கிறது. ஆயினும் படம் முழுதும் கண்களை இழுத்துக்கொண்டு ஏன் ஒரு நடிகன் சிரமப்படவேண்டும் என்பதுதான் எனக்குப் புரியவில்லை. காசி விக்ரம், அவன் இவன் விஷால் என ஏன் இப்படி? ஏன் மாளவிகாவைப் போலவே தினேஷுக்கும் பார்வையில்லை எனினும் ஒழுங்கான கண்கள் இருந்தால் என்ன? ஒரு நபரின் கண்ணில் தூசு விழுந்தாலே அதைப் பார்க்கும் கண்களும் கலங்குகின்றன. கண்கள் அத்தனை சென்சிடிவான உறுப்புகள். க்ளோஸப் ஷாட்களில் இரத்தநாளங்கள் சிவக்க, திணறும் கண்களைப் பார்ப்பதாலேயே என்னால் முழுமையாக படத்தோடு ஒன்றமுடிவதில்லை.

தோளோடு தோள் நடக்கையில், வலப்புறமாய் சாலையின் பக்கம் நடக்கும் காதலியிடம் பேசிக்கொண்டே, அனிச்சையாய் அவளை இடப்புறமாய் கொண்டுவந்து தான் வலப்புறம் சாலையின் பக்கமாய் இடம்பெயரும் காதலன், 30 விநாடிகள் வரும் ஒரு இடைவேளை விளம்பரத்தில் (ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல்) தந்த பேரன்பை படம் நிச்சயம் தரவில்லைதான்!

சற்றே அதிகமாயிருந்த என் எதிர்பார்ப்புகளைப் படம் பூர்த்தி செய்யவில்லையே தவிர உடன் வந்த என் நண்பருக்கு படம் மிகவும் பிடித்திருந்தது. ’குக்கூ’ நிச்சயம் வரவேற்கப்படவேண்டிய முயற்சிதான்!


8 comments:

அகல் விளக்கு said...

antha ad link Kidaikkuma thala?

வெங்கட் நாகராஜ் said...

நல்ல விமர்சனம். பாடல்கள் கேட்டேன். நன்றாக இருந்தது.... படம் பார்க்க நினைத்திருக்கிறேன்...

காரிகன் said...

I think this movie has been overrated by the media.

Prunthaban said...

+1. Please give link to that ad :)

Erode VIJAY said...

பார்க்கலாமா வேண்டாமான்னு முடிவெடுக்க முடியாம தெளிவா குழப்பிட்டீங்களே ஆதி!
ஒருவேளை 'அழைத்துக்கொண்டு போக' உங்களுக்குக் கிடைத்த மாதிரியே எனக்கும் ஒரு நண்பர் கிடைச்சா உடனே பார்ப்பேனோ என்னவோ!

:)

Meena Narayanan said...

ADHIRA; 'idu-than- un, 'vima-rasnam; ' oon -nanban- comment; an-'solera?-----------nee dooobukku

ராஜாதமிழா said...

வநக்கம் எண்ணை பொருத்த வரை இந்த படம். ஒரு வியாபாரத்துக்காக, ஒரு சமுதாயத்தின் எதார்த்தத்தைத் தாண்டி, மிகைப்படுத்தப்பட்டு காட்டப்பட்டுல்லது, என்பதுதான் உண்மை. முகத்தில் பவுடர் பூசக்கூடவா பார்வை அற்றவணுக்கு தெரியாது? இது போன்ற யேராலமாண தவருகலை சொல்ல முடியும். இந்த குக்கூ படத்தை போருத்தவரை. ராஜ்முருகணின் வியாபாரத்துக்காக. பொய்யிணால்ும அரியமயாலும் புணயப்பட்ட கதை.
தொடர்ந்து இதைப்பற்றி விபாதிக்க விரும்புவர் எண்ணை தொடர்புக்கொல்லலாம். ராஜா அலைப்பேசி 9940393855. E mail. rajatamila.22@gmail.com நன்றி

SRUCHANDRAN said...

நீங்கள் கூறுவது போல இன்னும் கொஞ்சம் முயற்சி செய்து ஒரு நல்ல திரைப்படமாய் மாற்றியிருக்கலாம். எனினும் அவருடைய முயற்சியை பாராட்ட வேண்டும்.