Wednesday, April 30, 2014

வாயை மூடி பேசவும்


பனிமலை எனும் ஒரு அழகிய பச்சைப்பசேல் கிராமத்தில் திடுமென அதிசயமாய் ஒரு நோய் பரவுகிறது. ஒரு வகையான வைரஸ் தொற்றால் குரலை இழக்கிறார்கள் மக்கள். எதையெடுத்துக்கொண்டாலும் அதைப்பற்றி தெரியுமோ, தெரியாதோ வண்டி வண்டியாய், வாய்கிழியப் பேசத் தயாராகும் நம் மக்களையும், மீடியாவையும் சட்டையர் செய்ய மிக வசதியான சாட்டையைக் கையிலெடுத்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர் பாலாஜி மோகன். கூடுதலாக ஒரு ஃபேண்டஸி வகை புதுமையாகவும் அது அமைந்துவிட்டது இன்னும் சிறப்பு.

ஆனால் முழு வீச்சில் விளாசியிருக்கிறாரா என்று கேட்டால் யோசிக்கத்தான் வேண்டியிருக்கிறது. இடைவேளை வரை கலகலப்பும், விறுவிறுப்புமாக நகர்கிறது படம். அதன் பின்பு அரசின் பேச்சுத் தடை வந்ததும்தான் சிக்கல். நீண்ட நேரம் வசனமேயில்லாத காட்சிகளை நகர்த்துவதில் ஏற்படும் தகராறு, நம்மைக் கொட்டாவி விட வைக்கிறது. ஆனாலும் சமாளித்துக் கொண்டுசென்று கொஞ்சம் செண்டிமெண்டோடு அழகாக படத்தை முடித்துவைக்கிறார். இப்படி சிம்பிளாக சொல்லி முடித்துவிடமுடியாமல் படத்தில் ரசிக்கத்தகுந்த, பாராட்டப்படவேண்டிய காட்சிகள் நிறையவே உள்ளனதான்.


அதிலும் படம் முழுக்க அடிக்கடி குறுக்கிடும் ப்ரைம் டிவி செய்திகள் குறிப்பிடப்படவேண்டிய ஒன்று. குறிப்பாக, அந்த வாசிப்பாளர், ‘பரபரப்பு’ ஒன்று மட்டுமே தேவை எனும் நோக்கத்தோடு செயல்படுவது அழகு. சப்பை மேட்டரிலெல்லாம் கூட இருக்கும் கடுகு போன்ற தகவல்களை நுண்ணோக்கி கொண்டு மலையாக காண, பேச முயற்சிக்கிறார். ந்யூக்ளியர் ஸ்டார் பூமேஷ் பிடிகொடுக்காமல் தரும் பேட்டி முடிவில் அவரை நோண்டி விட்டு, பஞ்ச் டயலாக் பேச வைத்து, அதில் உள்நோக்கம் கற்பித்து மகிழ்வெதெல்லாம் நம் மீடியாக்களின் லட்சணத்தைப் பறைசாற்றும் காட்சிகள். முக்கியச் செய்திகள் என அடியில் ரோல் ஆகிக்கொண்டிருக்கும் செய்தியின் தமிழ் வார்த்தைகளைக் கூட அவ்வப்போது பிழையாகச் செய்திருப்பது இயக்குனரின் உன்னிப்பான ரசனையைக் காட்டுகிறது. கலகலப்பான துல்ஷாரின் கதாபாத்திரமும், அதற்கு நேர்மாறான நஸ்ரியாவின் பாத்திரமும் சிறப்பு. அதிலும் சோகமும், வெறுமையும் நிறைந்திருக்க அளந்து, அளந்து பேசும் நஸ்ரியாவை ரசிக்க முடிகிறது. அவர் தன் குணத்தை மாற்றிக்கொண்டு, காதலனை நீங்கி, துல்ஷாரை கைபிடிப்பார் என்பது தெரிந்த விஷயம்தான் எனினும் அது நிகழ்கையில் நமக்கும் ஒரு மகிழ்ச்சி, நிறைவு. 

போலவே, துல்ஷாரின் நண்பர் கதாபாத்திரம். எவ்வளவு முன்னெச்சரிக்கையாய் இருப்பினும் பெண்களிடம் பேச முயன்று அவர் உளறுவது அழகு. அதை இன்னும் இரண்டு பெண்களுக்காவது கொண்டுசென்று ரசிக்கவிடாமல், இரண்டாவது பெண்ணையே அவரது காதலியாக்கிவிடுவது ஒரு சின்ன ஏமாற்றம்தான். பூமேஷ் ரசிகர்களுக்கும், குடிகார சங்கத்துக்கும் இடையே நடக்கும் போராட்டங்கள் சற்றே கலகலப்பூட்டுகின்றன. ஆனால் வாய்பேசாதோர் பள்ளிதான் பெரிதாய் கவரவில்லை. போலவே, பாண்டியராஜனின் சுகாதார அமைச்சர் பாத்திரமும். பத்திரிகையாளர்களுக்கு விருந்தாக அமையும் காரெக்டராக அது உருவாக்கப்பட்டிருந்தாலும், பயத்தினாலோ என்னவோ, அந்த காரெக்டரை இயக்குனர் முழுமையாக பயன்படுத்தவேயில்லை. பாடல்கள் இல்லை எனினும் கூட ஒரு தீம் சாங்கை வைத்துக்கொண்டு ரெண்டு ரெண்டு வரியாகவாவது போடும் மேனியா இங்கு நிறையவே இருக்கிறது. இரண்டாம் பாதியில் வரும் ஒரு டூயட்டைத் தவிர்த்து அநாயசமாக பாடல்களைத் தவிர்த்திருக்கிறார்கள். இனி, தமிழ் சினிமாவில் பாடல்கள் எனும் இம்சை குறையத்துவங்கும் என்ற நம்பிக்கை சற்றே துளிர்விடுகிறது.

புதிய அலை இயக்குனர்களில் ஏறக்குறைய முன்னவர் பாலாஜி மோகன். காதலில் சொதப்புவது எப்படி? அவரது முதல் படம். அவர்களின் இரண்டாம் படத்துக்கான எதிர்பார்ப்பு நம்மிடையே அதிகமாகவே இருந்துவருகிறது. இதோ இரண்டாவது படத்தையும் மற்றவர்களை முந்திக்கொண்டு முதலாவதாக தந்திருக்கிறார் பாலாஜி. சிக்ஸர் இல்லையென்றாலும், தேவையான தருணத்தில் ஒரு அழகான பவுண்டரி!
.

Monday, April 28, 2014

தெனாலிராமன்


ஒரு பெரிய கிரியேடிவ் ஐகானுடைய பெயரைத் தாங்கிய இந்தப் படத்துக்கும், கிரியேடிவிடிக்கும் இடைப்பட்ட‌ தூரம் பல கிலோமீட்டர்கள். தெனாலியின் சமயோஜித குணத்துக்கு சான்றாக இந்தப் படத்தில் வரும் நிகழ்வுகள் எல்லாமே குறைந்தபட்சம் 60 வருடங்கள் பழைய நாம் நன்கறிந்த அதே செவிவழிக் கதைகள்தாம். முதலில் 30 வருடங்கள் பழமையான என்று எழுத நினைத்தேன். இதை எழுதும் போது உடனிருந்த‌ என் தந்தையிடம் கேட்டபோது, 'இது நான் சின்னப் புள்ளையா இருக்கும்போதே படிச்ச‌துதான்' என்று அவர் சொன்னதால் 60 ஆண்டுகள் என்று எழுதியிருக்கிறேன். அவ்வளவு கற்பனை வறட்சி!


பசியிலிருக்கும் வடிவேலு எனும் யானைக்கு இது சோளப்பொறி கூட அல்ல! எழுதி, இயக்கிய இயக்குனரை என்ன செய்தால் தகும்? அவ்வளவு மோசமான திரைக்கதை. கதாபாத்திரங்கள், நிகழ்வுகள் என புலிகேசியின் வார்ப்பாகவே பல விஷயங்களும் செய்யப்பட்டிருக்கின்றன. குறிப்பாக தெனாலியின் உடல்மொழி கூட! ஆனால் புலிகேசிக்கும், தெனாலிக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். மக்கள் நலன் மீது அக்கறை கொண்ட மன்னனாகவும், பொறுப்பில்லாத காமெடி மன்னனாகவும் இருவேறாக இருக்கிறது இதன் மன்னர் பாத்திரம். ஒரு முக்கியக் காட்சியில் மக்கள் நலன் காண மாறுவேடத்தில் நகர்வலம் வருகையில் கூட அது சீரியஸாக இருக்கவேண்டுமா, நகைச்சுவையாக இருக்கவேண்டுமா எனப்புரியாது சிதைக்கப்பட்டிருக்கிறது.

யானைக்குள் பானை, கசையடிப் பரிசு என அதே பழைய நிகழ்வுகள் தாண்டி எதையும் நிகழ்த்தாமல் எளிதாக‌ பரிதாபமாக தோற்கிறது தெனாலியின் பாத்திரம். தற்காலிக மன்னர் பொறுப்பு தெனாலிராமனுக்குக் கிடைத்த பின்பும் மக்களே கொதிப்படைந்து சீன ஆதிக்கத்தை எதிர்ப்பதாகவே, அதாவது கடைகளையும், சீன மக்களையும் தாக்குவதாகவே சிறுபிள்ளைத்தனமாக முடிகிறது. அமைச்சர்கள், சீன வியாபாரிகள், போராளிகள், ராதாரவியின் கதாபாத்திரம், ஹீரோயின் என எந்த ஒரு கேரக்டரும் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஏதேனும் நிகழ்வுகள் இருந்தாலல்லவா பாதிப்பு எனும் பேச்சு எழுவதற்கு?

இவ்வளவு வீக்கான படத்தை வடிவேலு மட்டுமே தன்னந்தனியாக‌ தாங்குகிறார். பாராட்ட வடிவேலுவைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை, இந்தப் படத்தில்!

Monday, April 7, 2014

மேக்னம் ஸ்பெஷல்


”நான் எப்போ புத்தகம் வாசிக்க ஆரம்பிச்சேன்னா?.. ஆறாப்பு படிக்கச்சொல்லோ..” என்று நான் கொசுவத்தியை சுழற்ற ஆரம்பித்தால் நீங்கள் “ஆவ்வ்வ்..” என்று கொட்டாவி விட ஆரம்பிப்பீர்கள்! அதனால் நேரடியாக விஷயத்துக்குப் போய்விடலாம்!

வாசிப்பின் துவக்கம் காமிக்ஸ், காமிக்ஸைத் தாண்டிய இலக்கிய உலகம் இலக்கு என்பதாய் நண்பர்கள் கருத்துப் பகிர்வதுண்டு. இலக்கை விட அதற்காக மேற்கொள்ளும் பயணம் இன்னும் அலாதியானது என்பது என் கருத்து. எழுத்தில் கதை சொல்வதைப்போல, மூவியில் கதை சொல்வதைப் போல ஓவியத்தில் கதை சொல்வது என்பது அத்தனை எளிதான காரியமா என்ன? பிரமிப்பு! பகிரவொண்ணா ரசனை அது!


2012ல் மறு எழுச்சியை வெற்றிகரமாக நிகழ்த்திய லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ் இதழ்கள், தற்போது பெரிய அளவுகளில், உயர்தரக் காகிதங்களில், பளபளக்கும் வண்ணக் கதைகளை மாதம் குறைந்தது இரண்டு இதழ்கள், மூன்று கதைகள் என்ற அளவில் எடுத்துச்சென்று ராஜநடை நடந்து கொண்டிருக்கிறது! சிறார் கதைகள் மட்டுமின்றி, ஆக்‌ஷன், அட்வென்ச்சர் போன்ற எவர்கிரீன் வகைகளோடு கிராஃபிக் நாவல்கள் எனும் ஆழ்ந்த வாழ்வியல் கதைகள் என உலக காமிக்ஸ் இலக்கியத்தின் சிறப்பான ஒரு பகுதி இப்போது தமிழுக்கும் சாத்தியமாகிக்கொண்டிருக்கிறது. வாசிப்பை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்ல வேண்டுமே என்ற நற்கவலை கொண்டவர்கள், இளமையில் விட்டுவந்த காமிக்ஸ் நாட்களை மீண்டும் வாழ்ந்து பார்க்க ஆசை துளிர்ப்பவர்கள், ஓவிய ரசத்தை அள்ளிப் பருகும் பேராவல் கொண்டவர்கள் என அனைவரும் சற்றே செவி சாயுங்கள்! இந்த ஆண்டும் மாதம் தவறா திட்டமிடலுடன் கூடிய ஒரு கதைக்குவியலை லயன் காமிக்ஸ் வழங்கிக்கொண்டிருக்கிறது/வழங்கவிருக்கிறது. அதோடு இது லயன் காமிக்ஸின் 30வது ஆண்டுக் கொண்டாட்டமும் கூட! சுமார் 900+ பக்கங்களுடன் ஒரு மெகா இதழகாக லயனின் 30வது ஆண்டு சிறப்பிதழ், ‘தி லயன் மேக்னம் ஸ்பெஷல்’ வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவிருக்கிறது. உங்கள் பிரதிக்கு முந்துங்கள்!


2014க்கான வழக்கமான மாதாந்திர இதழ்கள், சூப்பர் 6 எனப்படும் 2014க்கான சிறப்பிதழ்கள், 2014க்கான கிராஃபிக் நாவல்கள் எனும் பிரிவுகளில் சந்தாக்களை மொத்தமாகவோ, தங்கள் தேர்வுக்கேற்பவோ செலுத்தலாம். வங்கி விபரங்கள், சந்தா விலைகள், இதழ்களைப் பற்றிய அறிவிப்புகள் போன்ற தகவல்களுக்கு லயன் காமிக்ஸின்....


.....ஆகியவற்றுக்குச் செல்லுங்கள். ஏற்கனவே வெளியான இதழ்களை ஆன்லைன் ஸ்டோரிலும் வாங்கலாம். விரைவில் எதிர்பார்க்கலாம் எனினும் இன்னும் கடைகள் தோறும் காமிக்ஸ் புத்தகங்கள் கிடைக்கும் நிலை ஏற்படவில்லை. சந்தாதாரராகிவிடுவதே இப்போதைக்கு சிறப்பு எனும் நிலைமை நிலவுகிறது. அதுவே, லயன் காமிக்ஸை ஸ்திரப்படுத்தவும் உதவும் எனும் போது நாம் ஒவ்வொருவரும் அதைச் செய்யவேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்! 

.

Thursday, April 3, 2014

பிச்சை புகும் டாஸ்மாக் தமிழன்


டாஸ்மாக்கில் மது அருந்துவதை நான் கௌரவக்குறைச்சலாக நினைப்பதில்லை எனினும் அதற்குரிய சகிப்புத்தன்மை என்னிடம் வற்றிவிட்டதால் அக்காரியத்தில் நான் ஈடுபடுவதில்லை. எனது மது அருந்தும் தேவை மிகக்குறைவே என்பதாலும் எனக்கு பிற மார்க்கங்களும் இருக்கின்ற‌மையால் டாஸ்மாக்கைத் தவிர்ப்பது எளிதாயிற்று. ஆயினும் சில நண்பர்களுக்காக எப்போதாவது டாஸ்மாக் செல்வதுண்டு. அவ்வமயங்களில் மது அருந்தும் குழுவிற்கு நடுவே அமர்ந்து டச்சர்களை மட்டும் மேய்ந்துகொண்டு மதுவை விடவும் சுவையான உரையாடல்களை ரசிக்கும் சைவபட்சிணியாக பெரும்பாலும் நான் மாறிவிடுவேன்.

ஒரு வேலை காரணமாக சென்ற மாதம் முழுதும் அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கு ஏறத்தாழ தினமும் சென்றுவர நேர்ந்தது. பெரும்பாலான மாலை நேரங்களில் நட்புக்காக அப்பகுதியின் ஏதேனும் ஒரு டாஸ்மாக் மதுக்கூடத்தில் வேடிக்கை மட்டும் பார்க்கும் சைவபட்சிணியாக ஓரிரு மணி நேரங்களை கழிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

(இந்தக்கட்டுரைக்கு அவசியமில்லாத இடைச்செருகல்: சென்னையின் ஆகக் கழிவான சாக்கடைக்கு ஒப்பான டாஸ்மாக் மதுக்கூடங்கள் வடபழனியிலிருந்து போரூர் வரையான ஆற்காடு சாலையில் அமைந்திருக்கின்றன. சென்னையின் சற்றே சுத்தமான, ஏற்கத்தக்க மதுக்கூடங்கள் அம்பத்தூர் எஸ்டேட் பகுதிகளில் அமைந்திருக்கின்றன.)


ஏற்கனவே அறிவேன் எனினும் அப்போதுதான் ஒரு விஷயம் என்னை மிகவும் உறுத்தத்துவங்கியது. ஒரு சாதாரண மனிதன் அருந்தும் அளவான குவார்ட்டர் மதுவின் விலை குறைந்த பட்சம் 70 ரூபாயாக உயர்ந்துவிட்டது. அதிக பட்ச விலைக்கு வரம்பில்லை என்பதால் சராசரியாக சற்றே 'நானொரு சராசரி மனிதன்' என நினைப்பவனின் பாட்டில் விலை சுமார் 120 ரூபாயாக இருக்கிறது. இவர்கள் ஓரிரு மணி நேரங்களை மகிழ்வாகக் கழிக்க‌ தனியாகவோ, நண்பர்களுடனோ மதுக்கூடங்களுக்கு வருகின்றனர். அநியாயம் என்ற சொல்லுக்கு பொருள் தரும் விலையில் இவர்களுக்கு டச்சர்கள் விற்கப்படுகின்றன. அதைப் பற்றி கவலை கொள்ளவோ, அறச்சீற்றம் கொள்ளவோ யாருக்கும் நேரமில்லை. நமது பேச்சும் இவர்களைப் பற்றியதில்லை. ஒரு நாளைக்கு 70 அல்லது 80 ரூபாய் மட்டுமே டாஸ்மாக்கில் செலவழிக்க இயலக்கூடிய நபர்களைப் பற்றியது.

இவர்களுக்கான குறைந்த பட்ச தேவையான 100 எம்மெல் தண்ணீர் பாக்கெட் விலை ரூ. 6, குடித்து முடித்ததும் கசக்கி எறியும் பிளாஸ்டிக் தம்ளர் விலை ரூ. 6, ஒரு மாங்காய்த்துண்டுகள் கவர் ரூ. 6! (அந்தக்கவரில் இரண்டு சிட்டிகை மிளகாய்ப்பொடி தூவிய ஒரு பல்லின் அளவே இருக்கும் மாங்காய் துண்டுகளின் எண்ணிக்கை 6 இடம்பெற்றிருக்கும். அதாவது ஒரு சராசரி மாங்காயிலிருந்து சுமார் முப்பது பிளாஸ்டிக் கவர்களை உருவாக்கலாம்).

70 ரூபாய் கொடுத்து பாட்டிலை வாங்கும் சகோதரனுக்கு இந்த 18 ரூபாய் பெரும் பிரச்சினையாய் இருக்கிறது. முன்பு அதிகம் பார்த்திராத அந்த நிகழ்வுகள் கடந்த சில வருடங்களில் பெருமளவு அதிகரித்திருப்பதைக் கண்கூடாக காணமுடிந்தது.

நன்கு உடையணிந்த, பார்க்க சராசரியாக தோன்றக்கூடிய, பெரும்பாலும் படித்திருக்கவும் கூடிய அந்த மனிதர்கள் மதுக்கூடத்துக்கு வெளியே நிச்சயம் செய்யத்தயங்கும் அந்தக் காரியத்தை செய்யத்துவங்கியிருக்கிறார்கள். வெளியே இவர்களுக்கு யாராவது 5 ரூபாய் பிச்சையாக தந்தால் இவர்களில் பெரும்பாலோனர் எப்படி வினையாற்றுவார்கள்? நிச்சயம் அவமானத்தால் கோபம் கொண்டு நம்மை அடிக்கக்கூட வரலாம். ஆனால் உள்ளே, பிறர் குடித்துவிட்டு வைத்துவிட்டுப்போன டம்ளர்களையும், பாதி தண்ணீர் பாக்கெட்டுகளையும் தயக்கமின்றி எடுத்துக்கொள்கிறார்கள். எந்தக்கூச்சமுமின்றி தண்ணீர் பாக்கெட்டுகளை வாங்கும் வசதிகொண்ட நபர்களிடம் அரை டம்ளர் தண்ணீருக்காக‌ கையேந்திவிடுகிறார்கள். மேலும் அந்த மாங்காய் கவரை வாங்கும் சக்தி கொண்டவர்களிடம் ஒரே ஒரு பல் மாங்காயைக் கேட்டோ, ஃபிங்கர் பிரையின் ஒரு துண்டுக்காகவோ, ஒரே ஒரு வீல் சிப்ஸுக்கோ தயக்கமின்றி பிச்சை கேட்கிறார்கள். அது எப்படி அவர்களுக்குப் போதும் என்பது வேறு ஆராய்ச்சிக்குரிய விஷயம். ஆனால், எப்போது இப்படி பிச்சை கேட்கும் தயக்கத்தை விட்டொழித்தார்கள் என்பதுதான் ஆச்சரியமான விஷயம். இரண்டு மணி நேரம் நீங்கள் ஒரு சேரில் அமர்ந்திருந்தால் குறைந்தது 4 நபர்களையாவது இப்படிப் பார்க்கமுடிகிறது.

இவர்களின் சுயமரியாதையும், தன்மானமும் எங்கே போனது? 18 ரூபாய்க்காக இவற்றை விற்கத்துவங்கி ஒரு புதிய இருண்ட காலத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் டாஸ்மாக் தமிழனுக்கான வெளிச்சம் எது? ஒரு பொருளையும், புத்துணர்வையும், சிந்தனையையும் சமைப்ப‌து மிகக்கடினமான காரியம். ஒரு சிற்பத்தைப்போல சிறுகச்சிறுக உருவாவது அது. ஆனால் அழிப்பது மிக எளிது, நொடிகளில் அது நிகழ்ந்துவிடும். பெரியாரின் 100 ஆண்டுகள் கடும் உழைப்பால் தூசு தட்டப்பட்ட தமிழனின் சுயமரியாதை, வெறும் 18 ரூபாய்க்கு முன்னால் அழிந்து கொண்டிருக்கிறது. வேறென்ன சொல்ல.?