Thursday, April 3, 2014

பிச்சை புகும் டாஸ்மாக் தமிழன்


டாஸ்மாக்கில் மது அருந்துவதை நான் கௌரவக்குறைச்சலாக நினைப்பதில்லை எனினும் அதற்குரிய சகிப்புத்தன்மை என்னிடம் வற்றிவிட்டதால் அக்காரியத்தில் நான் ஈடுபடுவதில்லை. எனது மது அருந்தும் தேவை மிகக்குறைவே என்பதாலும் எனக்கு பிற மார்க்கங்களும் இருக்கின்ற‌மையால் டாஸ்மாக்கைத் தவிர்ப்பது எளிதாயிற்று. ஆயினும் சில நண்பர்களுக்காக எப்போதாவது டாஸ்மாக் செல்வதுண்டு. அவ்வமயங்களில் மது அருந்தும் குழுவிற்கு நடுவே அமர்ந்து டச்சர்களை மட்டும் மேய்ந்துகொண்டு மதுவை விடவும் சுவையான உரையாடல்களை ரசிக்கும் சைவபட்சிணியாக பெரும்பாலும் நான் மாறிவிடுவேன்.

ஒரு வேலை காரணமாக சென்ற மாதம் முழுதும் அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கு ஏறத்தாழ தினமும் சென்றுவர நேர்ந்தது. பெரும்பாலான மாலை நேரங்களில் நட்புக்காக அப்பகுதியின் ஏதேனும் ஒரு டாஸ்மாக் மதுக்கூடத்தில் வேடிக்கை மட்டும் பார்க்கும் சைவபட்சிணியாக ஓரிரு மணி நேரங்களை கழிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

(இந்தக்கட்டுரைக்கு அவசியமில்லாத இடைச்செருகல்: சென்னையின் ஆகக் கழிவான சாக்கடைக்கு ஒப்பான டாஸ்மாக் மதுக்கூடங்கள் வடபழனியிலிருந்து போரூர் வரையான ஆற்காடு சாலையில் அமைந்திருக்கின்றன. சென்னையின் சற்றே சுத்தமான, ஏற்கத்தக்க மதுக்கூடங்கள் அம்பத்தூர் எஸ்டேட் பகுதிகளில் அமைந்திருக்கின்றன.)


ஏற்கனவே அறிவேன் எனினும் அப்போதுதான் ஒரு விஷயம் என்னை மிகவும் உறுத்தத்துவங்கியது. ஒரு சாதாரண மனிதன் அருந்தும் அளவான குவார்ட்டர் மதுவின் விலை குறைந்த பட்சம் 70 ரூபாயாக உயர்ந்துவிட்டது. அதிக பட்ச விலைக்கு வரம்பில்லை என்பதால் சராசரியாக சற்றே 'நானொரு சராசரி மனிதன்' என நினைப்பவனின் பாட்டில் விலை சுமார் 120 ரூபாயாக இருக்கிறது. இவர்கள் ஓரிரு மணி நேரங்களை மகிழ்வாகக் கழிக்க‌ தனியாகவோ, நண்பர்களுடனோ மதுக்கூடங்களுக்கு வருகின்றனர். அநியாயம் என்ற சொல்லுக்கு பொருள் தரும் விலையில் இவர்களுக்கு டச்சர்கள் விற்கப்படுகின்றன. அதைப் பற்றி கவலை கொள்ளவோ, அறச்சீற்றம் கொள்ளவோ யாருக்கும் நேரமில்லை. நமது பேச்சும் இவர்களைப் பற்றியதில்லை. ஒரு நாளைக்கு 70 அல்லது 80 ரூபாய் மட்டுமே டாஸ்மாக்கில் செலவழிக்க இயலக்கூடிய நபர்களைப் பற்றியது.

இவர்களுக்கான குறைந்த பட்ச தேவையான 100 எம்மெல் தண்ணீர் பாக்கெட் விலை ரூ. 6, குடித்து முடித்ததும் கசக்கி எறியும் பிளாஸ்டிக் தம்ளர் விலை ரூ. 6, ஒரு மாங்காய்த்துண்டுகள் கவர் ரூ. 6! (அந்தக்கவரில் இரண்டு சிட்டிகை மிளகாய்ப்பொடி தூவிய ஒரு பல்லின் அளவே இருக்கும் மாங்காய் துண்டுகளின் எண்ணிக்கை 6 இடம்பெற்றிருக்கும். அதாவது ஒரு சராசரி மாங்காயிலிருந்து சுமார் முப்பது பிளாஸ்டிக் கவர்களை உருவாக்கலாம்).

70 ரூபாய் கொடுத்து பாட்டிலை வாங்கும் சகோதரனுக்கு இந்த 18 ரூபாய் பெரும் பிரச்சினையாய் இருக்கிறது. முன்பு அதிகம் பார்த்திராத அந்த நிகழ்வுகள் கடந்த சில வருடங்களில் பெருமளவு அதிகரித்திருப்பதைக் கண்கூடாக காணமுடிந்தது.

நன்கு உடையணிந்த, பார்க்க சராசரியாக தோன்றக்கூடிய, பெரும்பாலும் படித்திருக்கவும் கூடிய அந்த மனிதர்கள் மதுக்கூடத்துக்கு வெளியே நிச்சயம் செய்யத்தயங்கும் அந்தக் காரியத்தை செய்யத்துவங்கியிருக்கிறார்கள். வெளியே இவர்களுக்கு யாராவது 5 ரூபாய் பிச்சையாக தந்தால் இவர்களில் பெரும்பாலோனர் எப்படி வினையாற்றுவார்கள்? நிச்சயம் அவமானத்தால் கோபம் கொண்டு நம்மை அடிக்கக்கூட வரலாம். ஆனால் உள்ளே, பிறர் குடித்துவிட்டு வைத்துவிட்டுப்போன டம்ளர்களையும், பாதி தண்ணீர் பாக்கெட்டுகளையும் தயக்கமின்றி எடுத்துக்கொள்கிறார்கள். எந்தக்கூச்சமுமின்றி தண்ணீர் பாக்கெட்டுகளை வாங்கும் வசதிகொண்ட நபர்களிடம் அரை டம்ளர் தண்ணீருக்காக‌ கையேந்திவிடுகிறார்கள். மேலும் அந்த மாங்காய் கவரை வாங்கும் சக்தி கொண்டவர்களிடம் ஒரே ஒரு பல் மாங்காயைக் கேட்டோ, ஃபிங்கர் பிரையின் ஒரு துண்டுக்காகவோ, ஒரே ஒரு வீல் சிப்ஸுக்கோ தயக்கமின்றி பிச்சை கேட்கிறார்கள். அது எப்படி அவர்களுக்குப் போதும் என்பது வேறு ஆராய்ச்சிக்குரிய விஷயம். ஆனால், எப்போது இப்படி பிச்சை கேட்கும் தயக்கத்தை விட்டொழித்தார்கள் என்பதுதான் ஆச்சரியமான விஷயம். இரண்டு மணி நேரம் நீங்கள் ஒரு சேரில் அமர்ந்திருந்தால் குறைந்தது 4 நபர்களையாவது இப்படிப் பார்க்கமுடிகிறது.

இவர்களின் சுயமரியாதையும், தன்மானமும் எங்கே போனது? 18 ரூபாய்க்காக இவற்றை விற்கத்துவங்கி ஒரு புதிய இருண்ட காலத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் டாஸ்மாக் தமிழனுக்கான வெளிச்சம் எது? ஒரு பொருளையும், புத்துணர்வையும், சிந்தனையையும் சமைப்ப‌து மிகக்கடினமான காரியம். ஒரு சிற்பத்தைப்போல சிறுகச்சிறுக உருவாவது அது. ஆனால் அழிப்பது மிக எளிது, நொடிகளில் அது நிகழ்ந்துவிடும். பெரியாரின் 100 ஆண்டுகள் கடும் உழைப்பால் தூசு தட்டப்பட்ட தமிழனின் சுயமரியாதை, வெறும் 18 ரூபாய்க்கு முன்னால் அழிந்து கொண்டிருக்கிறது. வேறென்ன சொல்ல.?


4 comments:

புலவர் இராமாநுசம் said...

வேதனை! வேதனை! வேறென்ன சொல்ல!

Ramesh Kumar said...

// சுயமரியாதை, வெறும் 18 ரூபாய்க்கு முன்னால் அழிந்து கொண்டிருக்கிறது. வேறென்ன சொல்ல.? //

மது என்றில்லை, கிட்டதட்ட எல்லா Addiction'களும் மனிதனுக்கு செய்யக்கூடிய அதிகபட்ச கெடுதல் உடல் ரீதியானதல்ல. மனரீதியானது. தன்மான உணர்வு காணாமல் போகும் அதே வேளையில் மற்றவர்களைப் பற்றி Care பண்ணும் யதார்த்தமான மனித இயல்பும் Simultaneous'ஆக விடைபெறும் - if we can go ahead little deeper and research such people / family!

Of course வேதனை.

வெங்கட் நாகராஜ் said...

வேதனை தரும் விஷயங்கள்.....

குரங்குபெடல் said...

மிக அருமையான பதிவு . . .

பகிர்வுக்கு நன்றி

அம்மா உணவகத்தில் 5 ரூபா சாம்பார் சாதம்

இங்கு . . . 10 உடைத்த கடலை பருப்புகள் 6 ரூபா . . கொழிக்கிறார்கள் பார் ஓனர்கள்

" 70 ரூபாய் கொடுத்து பாட்டிலை வாங்கும் சகோதரனுக்கு "

சென்னையில் 72 ஊர்பக்கம் 75 . .

அநியாய கொள்ளை . . . அடிக்கிறார்கள் டாஸ்மாக் ஊழியர்கள் . . .