Friday, May 23, 2014

வலைப்பூவில் 6 ஆண்டுகள்


எழுதுவதில் அவ்வப்போது தொய்வேற்பட்டிருந்தாலும் வெற்றிகரமாக, இன்றோடு ஒரு தமிழ் வலைப்பதிவராக ஆறு ஆண்டுகளை நிறைவு செய்கிறேன். இது ஒரு மைல் கல் தருணமாச்சே.. (ஐந்தாம் ஆண்டு நிறைவில் இப்படி எழுத நினைச்சு தவறவிட்டதால், மைல் கல்லை ஒரு வருஷம் தள்ளிவைச்சாச்சு. ஹிஹி!) ஆகவே, சற்றே கொசுவத்தி சுற்றலாம். சப்ஜெக்ட் ஆம், அதேதான் நான் எவ்வாறு எழுதவந்தேன், எப்படி எழுதிக்கீச்சேன் என்பதுதான். ப்ரோட்டாக்கால் படி அதுதானே எழுதணும்! போரடிச்சிட்டு இருக்கிறவங்க கேளுங்க, மற்றவங்க ஏதும் உருப்படியான வேலை இருந்தால் போய்ப் பாருங்க! ஹிஹி!

என்னுள்ளே இருந்த படைப்பூக்கம் எப்படி பீறிட்டுக் கிளம்பியதென்றால்.. பள்ளியில் பயின்று கொண்டிருக்கும் போதே சிறுகதைகளும், நாடகங்களும் புனைந்து.. அடச்சூ! கொஞ்சம் உண்மை பேசலாம். அட, ஆமாங்க உண்மைக்குமே பத்தாப்பு படிக்கிறப்பவே சிறுகதை எழுதணும்னு எனக்கு ரொம்ப ஆசை! அதுவும் சிறுவர்மலர் ஸ்டான்டர்டுக்கு அல்லாமல், விகடன் ஸ்டான்டர்டுக்கு கலைப்படைப்பாய் இருக்கணும்னு ஆசை, ஹிஹி.. அதுக்குப் பேரு பேராசைங்கிறீங்களா? சரிதான். ஆசை மட்டும்தான் இருந்ததே தவிர வேறு எதுவும் என்னிடம் இல்லை. எப்படி நம்மைத் தயார் செய்துகொள்வது என்று கூட தெரியாது. மனம்போன போக்கில் வாசித்தது மட்டும்தான் ஒரே ஒரு உருப்படியான காரியம். அது சிறுகதை எழுத உதவி செய்ததோ இல்லையோ, என்னை நானாக்க உதவியது.

ஓரிரு சிறுகதைகள் எழுதினேன். உண்மையில் அவை நிகழ்வுகள், சிறுகதைகள் அல்ல என்பது பின்னர்தான் புரிந்தது. நல்லவேளையாக அவற்றை பத்திரிகைகளுக்கு அனுப்பி, உதவி ஆசிரியர்களின் வாழ்க்கையை வெறுப்படையச் செய்யும் கொடுமையையெல்லாம் செய்யவில்லை.

பின்னர் வந்த +2 தருணங்களில்தானா காதலும் முகிழ்த்துத் தொலைக்கவேண்டும்? ஒரு தவக்காவைப் போல சிறுகதையிலிருந்து 'உப்ப்ப்'பென்று ஒரே ஜம்ப்பாக கவிதைக்குத் தவ்விவிட்டேன். கவிதை என் கைகளில் கொலைப்பாடு படத்துவங்கியிருந்தது. நாட்கள் கடந்தன. ஒரு நன்னாளில் என் காதல் தோல்வியுற்று, அமரஜீவிதமான நிலைக்குச் சென்றுவிட, பிடித்தது கவிதைக்கு மேலும் சனி! தீவிரமாக கவிதையைப் பிரித்து ஆராய்ந்தேன். கல்லூரி விழாக்களில் எனக்கு விருப்பமில்லாவிட்டாலும், நண்பர்களுக்காக 'ஏய் தமிழா' என்பதாகத் துவங்கும் அகவலோசைக் கவிதைகளும் கூட புனையப்பட்டன. அதிலொன்று முதல் பரிசெல்லாம் கூட வென்றது. அவ்வ்வ்!

பின்பு சில காலம், படிப்பு, வேலை, கல்யாணம் என எல்லோரையும் போல காலச்சதுரங்கம் என் வாழ்க்கையிலும் காய்களை நகற்றியதோ என் படைப்பூக்கம் சற்றே நித்திரைக்குச் சென்றதோ நீங்கள் பிழைத்தீர்கள்!

பின்பொரு மைல்கல் தருணத்தில், வாசகனுக்கும், எழுத்தாளனுக்கும் இடைப்பட்ட தூரத்தை காக்கவேண்டியது எவ்வளவு அவசியம் என்பதையும், அதை எப்படி காத்துவருவது என்ற பாடத்தைக் கற்பிக்க வாழ்க்கை முடிவு செய்ததோ என்னவோ, நானும் கண்ணனும் அந்தத் தவறைச்செய்தோம். ஒரு சென்னை சங்கம நிகழ்வில் உரையாற்றிய சுதேசமித்திரனின் உரையில் மயங்கி, நானும் கண்ணனும் அவர் நட்பைக் கோரிப்பெற்றோம். நட்பு வளர்ந்தது. அவரால் சாரு போன்ற இன்னும் முக்கியமான சிலரின் நட்பும் கிடைத்தது. இங்கே ஒரு இடைச்செருகல்: சாருவின் படைப்புலகம் சார்ந்து விமர்சிக்க, என் வாசிப்பு போதாது எனினும், பர்சனலான என் ஒப்பீனியன் அவர் பழக மிகவும் இனிமையானவர். நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர். அவ்வமயங்களில் சுதேசமித்திரனுக்கு சில கடிதங்கள் எழுதினேன். அப்போதுதான் அந்த விப‌த்து நிகழத்துவங்கியது. அந்தக் கடிதங்களில் ஒரு சுவை இருப்பதாக ஒரு நாள் தெரியாத்தனமாக பாராட்டிவிட்டார் சுதேசமித்திரன். அதற்காக பின்னாளில் எத்தனை முறை வருத்தப்பட்டிருப்பாரோ எனக்குத் தெரியாது. அந்தச்சுவை என்பதை ஒரு எழுத்தாளனின் சாயல் என்பதாக நானே கற்பனை செய்துகொண்டேன். 

ஸீரோ டிகிரி நாவலுக்கு நான்கே வரிகளில் எழுதியிருந்த என் எதிர்வினை கடிதத்தை ஏற்றுக்கொண்ட சாரு தன் வலைப்பூவில் ஏற்றினார் ஒரு நன்னாளில். வாசக எதிர்வினை என பின்பு கடிதங்கள் அவர் வலைப்பூவில் தொடர்ந்து இடம்பெறுவதற்கான துவக்கமாக இருந்தது அது.

எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதாக அம்ருதா இதழில் லேஅவுட் ஆர்டிஸ்டாக இருந்த நண்பர், கவிஞர் ஸ்ரீபதிபத்மநாபா, அம்ருதாவின் ஒரு காதல் சிறப்பிதழில் ஆங்காங்கே என் கவிதைகளை வேறு தூவிவிட்டார்.

ஆச்சுடா! ஆக, தமிழிணைய வானில் ஒரு நட்சத்திரம் உருவாவதை, இணையக் கடலில் ஒரு பதிவர் குதிப்பதை யாராலும் தடுக்க இயலாது போயிற்று!

கல்யாணம் தந்த அதிர்வுகள், மேலும் சிற்சில, பற்பலவென எங்கு திரும்பினாலும் ஒரே அறிவுரை மயம். 'நேத்திக்கு நைட்டு மறந்து போய் கதவைச் சாத்தாமல் தூங்கிவிட்டேன்' என்று யாரிடமாவது சொன்னால் கூட, 'அடாடா, அப்புறம்? திருடன் பூந்துட்டானா' என்று கிரியேடிவாக கேட்காமல், 'இனிமே மறக்காமல் சாத்திக்கொள்' என்று அறிவுரைதான் கிடைத்தது. ‘ஒய்ஃப் ஊரிலில்லை, இன்று உப்புமாதான் செய்து சாப்பிட்டேன்’ என்றால், ’அய்யோ பாவம்’ என்று பரிதாபப்படாமல், ‘ஊறுகாய் தொட்டுக்கொள், உப்புமாக்கு நன்றாக இருக்கும்’ என்றார்கள். ’குழந்தை முதல்நாள் ப்ரீகேஜி போறான்.. உலகம் வியப்பானது’ என்றால், ‘ஆஹா.. வாழ்க்கை ஒரு கவிதைல்ல’ என்று ரசிக்காமல், ‘மறக்காம பேக்கில் எக்ஸ்ட்ரா ஜட்டி வைச்சி விட்டீங்கள்ல’ என்றார்கள். எனக்குத் தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை 'அறிவுரை' என்றானது. 'அலிபாபாவும், நூற்றியெட்டு அறிவுரைகளும்' என்றொரு வலைப்பூவை துவங்கினேன். பழிக்குப் பழியாய் கண்ட விஷயங்களிலும் அறிவுரை சொல்லி இந்த சமூகத்தைத் திருத்திவிடுவது என கங்கணம் கட்டிக்கொண்டேன். ஆனால், கங்கணம் கழன்றுவிட்டதோ என்னவோ, அது பத்தே நாட்களில் போரடித்துவிட்டது.

பின்பொருநாள், குருவி எனும் ஒரு சினிமா, எனக்கு இனிமா தந்தது.. சினிமா விமர்சனங்கள் எழுதத் துவங்கினேன். தூங்கிக்கொண்டிருந்த கவிதைக்குருவி ஒரு நாள் என் மனக்கதவைக் கொத்தத்துவங்கியது.. கவிதைகள் எழுதத் துவங்கினேன். அலுவலகம் என்னை பேஸ்தடிக்கச்செய்தது.. டெக்னிகல் கட்டுரைகள் எழுதத்துவங்கினேன். கல்யாணம் எனும் உண்மை சுட்டது.. காதல் எனும் பொய்யை எழுதத்துவங்கினேன். நண்பர்கள் சிறுகதை என்ற பெயரில் எதையோ எழுதி ஆத்திரத்தைக் கிளப்பினர்.. சிறுகதைகள் எழுதத்துவங்கினேன். முதலில் ரமாவும், அவளின் தொடர்ச்சியாய் சுபாவும் இம்சித்தனர்.. அப்டேட்ஸ் எழுதத்துவங்கினேன்.

அந்தக் கடைசி சப்ஜெக்டின் காரணமாய் வலைப்பூவின் பெயர் புலம்பல்களானது.

ஆனால், ஊக்கம்? ஃபேஸ்புக்கில் இன்று ஒற்றை லைக்குக்காக போராடும் கூட்டத்தைப்போல, வலைப்பூவில் ஒற்றை கருத்துரைக்காக போராடிய‌ காலம் ஒன்றிருந்தது. அந்த சமயத்தில்தான் ஒத்த ரசனையுள்ள குழுவொன்று உருவானது. இன்று வரை பேசிவைத்துக்கொண்டு ஒற்றை கருத்துரை இட்டதில்லை எனினும், சாட்டிங், ஜி+, ஃபேஸ்புக்கில் கிடைக்கும் குழு உரையாடல் அன்று வலைப்பூ பக்கங்களிலேயே நிகழ்ந்தது. பின்னாளில் நிஜ வாழ்விலும் நெருக்கமாக இணைந்துவிட்ட நண்பர்கள் அப்போதுதான் கிடைத்தார்கள்.

பத்திரிகைகள் வாசிப்பு என அதுநாள் வரை இருந்த வழக்கத்துக்கு, இணைய வாசிப்பு, வலைப்பூ வாசிப்பு முற்றிலும் புதிய மாற்றாக அமைந்தது.

தமிழ்மணம் எனும் வலைப்பூ திரட்டி தந்த ஊக்கம் அந்த நாட்களில் மறக்கமுடியாதவை. உற்சாகமாக எழுதித் தள்ளினேன்.

பத்திரிகைத்துறை நண்பர்கள் கிடைத்தார்கள். சினிமாத்துறை நண்பர்கள் கிடைத்தார்கள். விகடனின் வலைப்பூ சிபாரிசு இணையப் பக்கத்தில் நிறைய தடவைகள் என் பதிவுகள் பகிரப்பட்டன. கனவைப்போல நினைத்திருந்த விகடனிலிருந்தும், ஒரு நாள் ஒருபக்கக் கதைகள் எழுதும் வாய்ப்பும் வந்தது, இரண்டு கதைகள் எழுதினேன். இணைய இதழ்களிலும், சில அச்சிதழ்களிலும் சில படைப்புகள் வெளியாயின. தொடர்ந்து அச்சிதழ்களுக்கு எழுதும் ஆசை இருந்தும் முயற்சிக்கத் தவறினேன். பரவலாக பதிவர்கள் புத்தகங்கள் வெளியிட்ட அந்தத் தருணங்களில் யார் யாரோ தடுத்துவிட, லாகவமாக அதிலிருந்து தப்பினேன். ஹிஹி! 

இந்த ஆறு ஆண்டுகளில் 580க்கும் அதிகமான பதிவுகளை எழுதிக்குவித்திருக்கிறேன். பாதிக்கு மேல் பதர்தான் எனினும் இப்போது திரும்பிப் பார்க்கையில் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. மகிழ்வாகவும்!

ஒரு நாள் வந்தது மீண்டுமொரு பெரிய பிரேக்! பணிமாற்றம், சூழல் என! எழுதுவது குறைந்தது, ஆர்வமும் கூட! ஆனால் குறைந்தது வலைப்பூவில் எழுதும் ஆர்வம்தானே தவிர எழுதும் ஆர்வமல்ல! முயற்சித்த வடிவங்கள் தாண்டி, இன்னும் புதிய வடிவங்களில், புதிய விஷயங்களை எழுதவேண்டும் என்ற ஆவல் இருக்கிறது. நாவல் எழுதும் திட்டம் கூட இருக்கிறது. பப்ளிஷர் உட்பட எல்லாம் தயார், இன்னும் கதைதான் கிடைக்கவில்லை. ஹிஹி! எதற்கும் தயாராக  இருந்துகொள்ளுங்கள். 

இந்தக் கட்டுரையில் பகிரவேண்டிய பல செய்திகளை நான் தவறவிடுவதாக தோன்றுகிறது. இருப்பினும் பரவாயில்லை. சில நண்பர்களை தனியே குறிப்பிட்டு நன்றி சொல்ல ஆசைகொள்கிறேன். ஆயினும் அதற்கும் அவசியமில்லை. நிறைய மகிழ்வான தருணங்கள், சிற்சில சங்கடங்கள் எனினும் எப்போதும் என்னோடு வந்துகொண்டிருக்கும், ஊக்குவித்துக்கொண்டிருக்கும் என் அன்பு வாசகர்களுக்கு (அதான் 6 வருஷம் ஆச்சில்ல, சொல்லவிடுங்கையா, இப்பக்கூட சொல்லாட்டி நான் எப்பதான் சொல்றதாம்?) என் முதலன்பு! 

.

Tuesday, May 13, 2014

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்


படத்தைத் நிச்சயமாக பார்த்தே ஆகவேண்டும் என ஏற்கனவே முடிவு செய்திருந்தேன். ஆனால், சந்தானத்துக்காக அல்ல! சந்தானத்தின் கலாய்த்தல் ஜோக்ஸெல்லாம் எப்போதோ போரடிக்கத் துவங்கிவிட்டன. பிறகேன்? படம் கொஞ்ச நாட்களுக்கு முன்னால் தெலுங்கில் மெகா ஹிட்டான, எஸ்.எஸ்.ராஜமௌலியின் ‘மரியாத ராமண்ணா’ படத்தின் ரீமேக் என்பதால் மட்டுமே அந்த முடிவு!

ராஜமௌலி ஒரு சுவாரசியமான மனிதர். இவர் கமர்ஷியல் படங்களைப் பின்னும் அழகே தனிதான். மாஸ் ஹீரோக்களை வைத்து பிளாக் பஸ்டர்களைத் தந்தவருக்கு, திடீரென, தன் படங்கள் ஹிட்டாவதற்கு ஹீரோக்கள் மட்டுமே காரணமில்லை என்று நிரூபிக்க ஆசை வந்ததோ என்னவோ தெலுங்கில் பிரபலமான சுனில் எனும் காமெடியனை வைத்து இந்த மெகா ஹிட்டைத் தந்தார். (பிற்பாடு, இப்படி காமெடியன் கூட தேவையில்லை என்று ஒரு ஈயை ஹீரோவாக்கி பாக்ஸ் ஆஃபீஸை அடித்து நொறுக்கியதெல்லாம்தான் நீங்கள் அறிவீர்களே!) அப்படிப்பட்டவரின் படம் எப்படி இருக்கும் என்று காண ஆசையிருக்காதா எனக்கு? இவர்கள் ரீமேக் செய்த அழகில், எப்படியும் கோக்குமாக்குகள் இருக்கத்தான் செய்யும் எனினும், தெலுங்குப் படம் பார்க்காத நமக்கு ஒப்பிட்டுப் பார்க்கும் அந்தப் பிரச்சினை கிடையாது. மேலும் மினிமம் சுவாரசியம் நிச்சயம் என்ற நம்பிக்கையிருந்தது. அந்த நம்பிக்கை வீண் போகவில்லை.

இப்படி ஒரு படம் திட்டமிட்ட பிறகு ராஜமௌலியின் முன்னால் என்னென்ன தேவையெல்லாம் இருந்திருக்கும்? காமெடியனை வைத்து ஃபுல் லெங்க்த் காமெடி படம் பண்ண ராஜமௌலி தேவையில்லை. அதே நேரம் ஆக்‌ஷன் மசாலாவும் பண்ணமுடியாது. இங்குதான் அவரது பலமான கதை முக்கியத்துவம் பெறுகிறது. 


வழக்கம்போல ஒரு தெலுங்கு கிராமத்து பண்ணையார். அவர்தான் வில்லன். என்ன பிரச்சினையோ தெரியவில்லை, அவரது தம்பிக்கும், தங்கையின் கணவருக்கும் வெட்டுகுத்து பகை. இருவரும் வெட்டிக்கொண்டு இறந்துபோகிறார்கள். தம்பியை கொன்றவன் இறந்து போய்விட்டாலும், மிச்சமிருக்கும் தங்கையையும், தங்கை குழந்தையையும் கொன்றே தீருவேன் என்று கொந்தளிக்கிறார் பண்ணையார். தங்கையோ, குழந்தையோடு சென்னைக்குத் தப்பிவிடுகிறார். அந்தக் குழந்தைதான் ஹீரோ! என்னடா இது இவன் கதை சொல்லி ஸ்பாய்ல் செய்கிறானே என்றெல்லாம் நினைக்கவேண்டாம். இந்தக் கதையெல்லாம் டைட்டில் போடுவதற்கு முன்னமே சொல்லிவிடுகிறார்கள்.

அப்புறம்?

25 வருடங்களுக்குப் பின்னரும், அந்தப் பண்ணையாருக்கும், அவர்தம் இரண்டு கிங்கரர்கள் போலிருக்கும் பிள்ளைகளுக்கும் முகம் தெரியாத ஹீரோ மீது இன்னும் கொலை வெறி! இந்த நிலையில் இவர்களுக்கு ஒரு விநோத வழக்கம் இருக்கிறது. இவர்கள் தாம் வாழும் இல்லத்தை ஒரு கோயிலைப்போல மதிக்கிறார்கள். தம்மை லைட்டாக கிண்டல் பண்ணினால் கூட வெட்டி வீசத் தயங்காத இவர்கள் அந்தத் தவறை தம் வீட்டுக்குள் வைத்து மட்டும் செய்வதில்லை.

இப்போது புரிந்திருக்கும் ராஜமௌலியின் கதை சொல்லும் அழகு! சந்தானம் மீண்டும் கிராமத்துக்கு ஏன் வருகிறார்? எதற்கு அந்த வீட்டுக்குள் செல்கிறார்? இவர்தான் அவர்கள் தேடிக்கொண்டிருந்த நபர் என்பதை அவர்கள் அப்படி உணர்ந்தார்கள்? சற்று நேரத்திலேயே, இந்த வீட்டின் வாயில்படியைத் தாண்டினால் வெட்டி வீழ்த்தப்படுவோம் என்பதை சந்தானம் எப்படி உணர்ந்தார்? அரிவாட்களோடு வாயிலில் ஆட்கள், நடுக்கத்தோடு வீட்டுக்குள் சந்தானம்.. அதன் பிறகு நிகழ்ந்ததென்ன? 

விறுவிறுப்புக்குப் பஞ்சமிருக்குமா என்ன? இப்போ தெரியுதா இந்த சோப்பை நான் ஏன் வாங்கினேன்னு?

Srinath

இந்தப்படத்தை இயக்கியிருப்பது எனக்குப் பிடித்த காமெடியன் ஸ்ரீநாத். அதான் சந்தோஷ் சுப்பிரமணியத்தில் ஜெயம் ரவி நண்பர்களில் ஒருவராக வருவாரே அவர்தான். நன்றாகத்தான் செய்திருக்கிறார். ஆனால், இந்தப் படம் அப்பட்டமான ராஜமௌலி படம். சுவாரசியத்துக்காக நிச்சயம் ஹிட்டாகத்தான் செய்யும். இதுதாண்டா சாக்கு, இனி நானும்தாண்டா ஹீரோனு சந்தானமும் குத்து சாங், டூயட், பல்லி சண்டைனு கிளம்பிடுவாரோனுதான் கொஞ்சம் பயம்மா இருக்கு!
.

பிற்சேர்க்கை:
14.05.14

https://www.youtube.com/watch?v=47yq9XTbDNY&app=desktop

பஸ்டர் கீட்டன் எனும் சார்லி சாப்ளினின் சம காலத்தைய ஜீனியஸின் 'அவர் ஹாஸ்பிடாலிடி'(1923) எனும் படத்தின் அப்பட்டமான தழுவலே மேற்சொன்ன படம் என்பது நண்பர்கள் மூலமாக தெரியவருகிறது. பாராட்டுகள் ராஜமௌலியைச் சேரவேண்டியவை அல்ல!
.

Thursday, May 8, 2014

தழுவு


மனிதனின் காலடிகள் இன்னும் பதிந்திரா காங்கோ மலைக் காடுகளிலும், சஹாரா பாலைகளிலும் இப்போதும் பொழிந்துகொண்டிருக்கிறது ஒரு மென்மழை!

நான் மதுரைக்குப் போயிருந்த அந்த ஒரு மாத காலத்தில்தான் நீ வேறாகிவிட்டாய். உன்னை என்னால் பார்க்கவே முடியவில்லை. வெட்கத்தால் தவித்தேன். எனக்கு வெட்கமே புதிது. நீ வேறு புதிதாய் இருந்தாய். என் மீது மூடிப் படர்ந்திருந்த இலையும் அப்போதுதான் விலகி உதிர்ந்தது.

மனிதன் பால்வெளியை கற்க விழைந்ததைப் போலத்தான், நீ என் காதலை ஏற்க விழைந்ததுதும். உனக்கான கோடி டெரா பைட்டுகள் தகவல்களிலிருந்து, சில கிலோ பைட்டுகளை மட்டுமே எடுத்துக்கொண்டாய். நான் இன்னும் உன்னை எண்ணி சிரித்துக்கொண்டிருக்கிறேன். 

இன்னும் சற்று நேரம் இருப்பாயாக, உன்னைப் பார்த்துக்கொள்கிறேன், என் கண்கள் நிறையட்டும் என்பதாய் என் வலக்கையைப் பிடித்து நிறுத்திய அன்றைக்கும் நீ நீல நிற தாவணியைத்தான் அணிந்திருந்தாய். பெட்ரோலும், காற்றும் கலந்த கலவை வெடிப்பதற்கு முந்தைய மைக்ரோ கணத்தில் இருப்பதைப் போலவே நான் இருந்தேன். அந்த அழுத்தத்தைத் தாங்குமளவு மனிதன் வடிவமைக்கப்படவில்லை. நீ சற்றுத் தள்ளி நின்றுகொண்டாய். 

பெருகி வரும் வியப்பு, ஊற்றெடுக்கும் மகிழ்ச்சி, சாரல் தொட்டெழுப்பும் சிலிர்ப்பு, மின்னல் அருகில் இறங்குவதாய் ஒரு அதிர்வு.. இத்தனையையும் சரிவிகிதமாய் கலந்தொரு உணர்வு! இதை பின்னெப்போதோ தந்தாய்!

படுக்கையிலிருந்து, முகம் முழுக்க எதிர்பார்ப்புடன் உதடுகள் குவித்து, கைகளை நீட்டி அலைபாய்ந்து, என்னைத் தூக்கிக்கொள் என பரிதவித்த குழந்தையை நீ தூக்கிக்கொள்ளவேவில்லை.  உதடுகள் கோணி அது அழத்துவங்குமுன் பனித்துத் துளிர்த்த கண்ணீரை அதன் கண்களில் என்னால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. நீ பால் கொணரத்தான் சென்றாய். ஆயினும் உனக்கு கல்மனது.


உன் கண்கள். அன்று அதிலிருந்த ஏற்புதான் இன்றைக்கு நான் கனவைப் போன்ற இந்த என் உலகை கட்டியெழுப்ப முடிந்தது. அதற்காக நான் சொல்லவேண்டுமா இன்னொரு நன்றி?

என்னதான் வேண்டுமென்று இரைந்து கத்துகிறாய் இப்போது நீ!

ஒரு தாயைப்போல தழுவு, அது போதுமென்கிறேன் நான்!

-பிறந்த நாள் நல்வாழ்த்துகள் எஸ்ஜி, கேகேவிடமிருந்து அன்புடன்!

Thursday, May 1, 2014

மகாபாரதம்


டிவி சீரியலுக்கும், நமக்கும் ஏழாம் பொருத்தம் எனினும் மகாபாரதம் ரொம்பவே ஸ்பெஷல். தவறவிடாமல், தவறவிட்டாலும் நெட்டில் தேடியாவது பார்த்துவிடுகிறேன் மகாபாரதம் சீரியலை!

அவ்வளவு நல்லாயிருக்கா சன் டிவி மகாபாரதம் என்கிறீர்களா? கெட்டது போங்கள்! நான் சொல்வது விஜய் டீவி சீரியலை!!

சன் டிவியில் ஞாயிறுகளில் ஒளிபரப்பாகும் மகாபாரதத்தை ஓரிரு வாரங்கள் பார்த்துவிட்டு மகாபாரதம் அல்ல, வாழ்க்கையே வெறுத்துப் போய்விட்டது எனக்கு. அவ்வளவு மகாமட்டமான மேக்கிங். எந்த ஒரு அடிப்படையிலும், அதில் பாராட்ட ஒன்றுமே இல்லை. இந்த சமயத்தில்தான் விஜய் டிவியில் திங்கள் முதல்-வெள்ளி வரை ஹிந்தியிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட மகாபாரதம் ஒளிபரப்பாகத்துவங்கியது. அதை எப்படிச் சொல்வது? சிம்ப்ளி சூப்பர்!

பொருத்தமான நடிகர் தேர்வு, நடிப்பு, காஸ்ட்யூம், கலை, அருமையான ஒளிப்பதிவு, கச்சிதமான சிஜி வேலைகள், பின்னணி இசை.. முன்னதாக சின்னச்சின்ன புதுமைகள் புகுத்தப்பட்ட திரைக்கதை என அனைத்து அம்சங்களிலும் பிரமிப்பூட்டியிருக்கிறார்கள். குறிப்பாக தமிழ் மொழியாக்கத்தையும், டப்பிங் குரல் தந்தவர்களையும் பாராட்டியே ஆகவேண்டும். காஸ்ட்யூம்ஸ் ஒரு புறம் எனில் நகை வடிவமைப்புக்கு இன்னொரு புறம் தனி குழுவே இயங்கியிருக்கவேண்டும். ஒவ்வொரு பாத்திரத்துக்குமான பிரத்யேகமான நகைகள், மணிமகுடங்கள் என கடும் உழைப்பை நல்கியிருக்கிறார்கள். சில முக்கியப்பாத்திரங்களுக்கென பிரத்யேக தீம் பாடல்கள் சிறப்பு சேர்க்கின்றன. 

கிருஷ்ணர், பீஷ்மர், துரோணர், யுதிஷ்ட்ரன், அர்ஜுனன், துரியோதனன், கர்ணன், சகுனி என ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் நடிகர்கள் மிகச்சிறப்பாக உயிரூட்டியிருக்கின்றனர். ஒவ்வொரு காரெக்டரும் தனித்துவமான காட்சியமைப்புகளில் மிளிர்கின்றனர்.


இதெல்லாவற்றையும் விட முக்கியமாகக் குறிப்பிடப்படவேண்டியது இயக்கம். அவ்வளவு ரசனை! 

ஒவ்வொரு காரெக்டருக்கும் பொருத்தமான பில்டப் காட்சிகள், கதையில் தொடர்ச்சியாக இருந்துகொண்டிருக்கும் எதிர்பார்ப்பு, ஒரு நிகழ்வுக்காக மெல்ல மெல்ல ஏற்படுத்தப்படும் டெம்போ என சகல வகைகளிலும் பின்னியிருக்கிறார்கள். இயல்பிலேயே மகாபாரதம் ஏராளமான திருப்பங்களையும், சுவாரசியங்களையும், கிளைக்கதைகளையும் கொண்டது. அதன் ஆதாரக்கதையில் பாதிப்பில்லாமல் இவர்களும் கதையில் நிறைய புதுமைகளைப் புகுத்தியிருக்கிறார்கள். உதாரணமாக, சிசுபாலன், கிருஷ்ணனின் ஜென்மவிரோதி என்பதையும், சிசுபாலனின் நூறு தவறுகள் வரை பொறுமை காக்கவேண்டியது கிருஷ்ணனின் வரம் என்பதையும் நாம் அறிவோம். அதைச் சாக்காகக் கொண்டு பேச்சில் தொடர்குற்றமிழைக்கும் சிசுபாலன் தன் தவறுகளை கணக்கில் கொள்ள இடுப்பிலிருக்கும் மயிலிறகுகளை, ஒவ்வொரு தடவையும் ஒவ்வொன்றாக எடுத்து வீசுவது க்யூட்!

டெக்னிகல் விஷயங்களைப் பயன்படுத்தி மேக்கிங்கிலும் வியப்பூட்டியிருக்கிறார்கள். விற்போரில் சிறந்த அர்ஜுனன், கர்ணன் போன்றோர் வில்லை மட்டும் கையில் வைத்துக்கொண்டால் போதும், அம்பறாத்தூளியை முதுகில் கட்டிக்கொண்டு அம்பை எண்ணிக்கொண்டு அலையவேண்டாம். ஒவ்வொரு முறையும் தேவையான அம்புகள், கிராபிக்ஸில் உருவாகுவது அழகு. போலவே எந்நேரமும் கர்ணன் கவசத்தை அணிந்துகொண்டு அலையவேண்டியதில்லை. ஆபத்து வரும் தருணத்தில் அவரது மார்பில் கவசம் (சிஜி உதவியுடன்) பரவுவதாக அமைத்திருக்கிறார்கள். ஒரு தடவை, துரியோதனனுக்கு எதிரே யாரோ ஆயுதம் ஏந்துகின்றனர். கடமை உணர்ச்சியோடு கர்ணன், துரியோதனனுக்கு முன்னால் குறுக்கே வந்து நிற்பதும், மார்பில் கவசம் மெல்ல மெல்லப் பரவி மூடத்துவங்கியபோது அந்தக் காட்சியின் வீரியம், விறுவிறுப்பு அதனால் பன்மடங்காகியிருந்தது.

ஒரே குறையாக, சீரியல்களுக்கே உரிய சோதிக்கும் அதிக ரியாக்‌ஷன் டைம், சற்று இழுவையாக சில இடங்களில் இருந்து தொலைக்கிறது. இப்போது சில வாரங்களாக இந்த இம்சை இல்லை. பல இன்னல்களுக்குப் பின்னர் பாண்டவர்கள் இந்திரப்பிரஸ்தம் நகரை நிர்மாணித்து பொறுப்பேற்கும் சுவாரசியமான நிகழ்வுகள் போய்க்கொண்டிருக்கிறது. எப்படியானாலும் இப்போதைக்கு சண்டை வராது, கிளைமாக்ஸ் வரை காத்திருக்கத்தான் வேண்டும் என்று நமக்குத் தெரிந்தாலும், எந்நேரம் பாண்டவர்களும், கௌரவர்களும் முட்டிக்கொள்ளப்போகிறார்களோ என்ற எதிர்பார்ப்பிலேயே நம்மை வைத்திருப்பதில் இயக்குனர் வெற்றியடைந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.

தொடர்ந்து இதைப் பார்த்துக்கொண்டிருப்பவர்கள் என் கூற்றை நிச்சயம் ஏற்றுக்கொள்வீர்கள், பார்க்காதவர்கள் இனியும் அதைத் தவறவிடாதீர்கள் என்று நினைவூட்டவே இந்தச் சிறு பத்தி!

.