Monday, July 28, 2014

பேரம்


டெல்லிக்கு வடக்கே இரண்டு வாரங்களுக்கும் மேலாக சுட்ட ரொட்டிகளை தின்று உயிர் ஜீவித்த நாட்களுக்கு விடை கொடுக்க, வீட்டுக்கு வரும் வரை மேலும் ஒன்றரை நாட்கள் காத்திருக்கும் பொறுமையில்லாததாலும், தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸைப் பிடிக்க இன்னும் நேரமிருந்ததாலும் புதுடெல்லி ரயில் நிலையத்துக்கு வெளியே வந்து, நேரெதிரே இருந்த சந்துக்குள் எந்நேரமும் பிசியாக இருக்கும் தமிழ்நாடு ஹோட்டலில் புகுந்து, மதிய உணவை உண்டு முடித்து உயிர்மீண்டு சற்று நிம்மதியாக அந்தக் கடைக்கு அருகே பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தேன்.

அப்படியே 'சாப்பாடு ஆஹா.. கனஜோர்!' என்ற வகை இல்லையெனினும் காய்ந்து கிடந்த நாட்களுக்குப் பின்பான தமிழக சாப்பாடு என்பதால் எப்போதுமே தமிழ்நாடு ஹோட்டல் ஒரு ஆனந்தத்தையும், நிம்மதியையும் தரத் தவறியதில்லை. (இதே ஹோட்டல்தான் கேரள மக்களுக்கு கேரளா ஹோட்டலாகவும் விளங்குகிறது!)

சரி, விஷயத்துக்கு வருவோம். அப்போது ஒரு சுத்த ஹிந்தி வியாபாரி ஒருவன் அருகில் வந்து, '1200 ரூ பென் ட்ரைவ் சார், 32 ஜிபி. 1000 ரூபாய்க்குத் தருகிறேன்' என்றான். அடாடா, உங்களுக்கு ஹிந்தியும் தெரியுமா என்று கேட்காதீர்கள். ஆங்கில வார்த்தைகள் நிறைந்த எளிய வாக்கியம் என்பதால்தான் அதை, அதுவும் கும்ஸாகத்தான் புரிந்துகொண்டேன். பணி நிமித்தம் பல வருடங்கள் வடக்கே போக்குவரத்து இருப்பினும், சரஸ்வதியே வந்து என் நாக்கில் எழுத்தாணியை வைத்து எழுதினாலும் கூட இந்த ஹிந்தி மட்டும் எனக்கு வருமா என்பது சந்தேகமே! யாராவது ஏதும் கேட்டால், 'ஹிந்தி நஹி மாலும் ஸாப்! இங்லிஷ்மே போலோ' என்று நான் சொல்லும் அழகிலேயே பதிலுக்கு ஒரு பாரா ஹிந்தியை காது குளிரக்கேட்கும் அனுபவம் கிடைப்பதால், இப்போது, 'நோ ஹிந்தி, நோ ஹிந்தி' என்று மட்டும் சொல்ல ஆரம்பித்திருக்கிறேன்.

'நோ.. நோ' என்றேன் அவனிடம். நல்லவேளை, நான் எதுவும் வாங்கும் மனநிலையிலேயே இருக்கவில்லை.

'ஓகே, ஃபைனல் ரேட். 800 ரூ' என்றான். பென் ட்ரைவ் அழகான பேக்கிங்கில் நன்றாகத்தான் இருந்தது.

'வேண்டாம்' என்றேன் சிரித்துக்கொண்டு.

ஒரு ஐந்து நிமிஷத்துக்கு, 'டோன்ட் வேஸ்ட் யுவர் டைம். கோ.. ஃபைன்ட் சம்படி' என என்ன சொல்லியும் கேளாமல், அவனே ஏதோ பேசிக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக ரேட்டைக் குறைத்தபடி கடைசியாக 200 ரூபாய்க்கு வந்துவிட்டான்.

'நோ' என்றேன் உறுதியாக.

'ஓகே! பைனல் ரேட். 100 ரூ' என்றான்.

டேய் அது என்ன பென் ட்ரைவா, இல்லை வெறும் பென்னா? திருடிக்கொண்டு வந்தால் கூட இந்த ரேட் எப்படிடா கட்டுபடியாகும் என்று மனதில் நினைத்துக்கொண்டு, 'நோ' என்றேன் விடாப்பிடியாக. கடைசியாக எதையோ ஹிந்தியில் திட்டிக்கொண்டே போய்விட்டான்.


இதுபோல உறுதியாக இல்லாத சமயங்களில் நாம் ஒவ்வொருவருமே பல சமயங்களில் நம் தலையில் மிளகாய் அரைக்க அனுமதித்திருப்போம். பேரம் பேசுவது என்பதே ஒரு தனிக்கலை. பொருளின் உண்மையான விலை தெரிந்திருந்தால் ஒழிய பேரம் பேசுவது மிகக்கடினம். இல்லாவிட்டாலும், நாசூக்காக இடது வலது போய் சரியான விலைக்கு வியாபாரியை அழைத்துவரும் பேச்சுவன்மை வேண்டும். இரண்டுக்கும் நமக்கும் ரொம்ப தூர‌ம். வியாபாரி 200 விலை சொல்லும் பொருளை ஒருவர் அடித்துப்பேசி 100 ரூபாய்க்கு வாங்கிச்செல்வதைப் பார்த்துவிட்டு, நாமும் இன்னொரு வியாபாரியிடம் 200 ரூ பொருளை தயங்கித் தயங்கி 150 ரூபாய்க்கு கேட்டு, நன்றாக அவனிடம் திட்டு வாங்கி அவமானமும் பட்டிருப்போம். நம் நேரத்துக்கு அவன் நேர்மையான வியாபாரியாகவும், அந்த 200 ரூபாயே பொருளின் நியாயமான விலையாகவும் இருந்திருக்கும். பிறகென்ன திட்டமாட்டானா? இப்படி பல அனுபவங்கள் இருந்தாலும் ஒன்றை மட்டும் மறக்கவே முடியாது.

ஒரு முறை தாஜ்மஹாலுக்குப் போயிருந்தபோது ‍(இன்று வரை ஒரு முறைதான் போயிருக்கிறேன். ஹிஹி!) சுற்றிமுடித்து வெளிவந்தபின்பு, வந்த நினைவாக வீட்டுக்குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கலாம் என நினைத்து சில பொருட்களை வாங்கினோம்.

பெண் குழந்தைகளுக்கான அழகிய காதணிகள் கொண்ட ஒரு சிறிய பெட்டியைப் பார்த்தேன். மிகவும் பிடித்திருந்தது. வித்தியாசமான டிஸைன்களில் 10 ஜோடி ஸ்டட்டுகள் இருந்தன. 300 ரூபாய் சொன்னான்.

நன்றாக யோசித்து, 200 ரூபாய்க்குக் கேட்டேன். துணைக்கு அருகில் நண்பர்களும் இருந்தார்கள், அந்த தைரியம் வேறு. அந்த வியாபாரி, சற்று சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு, 'அடக்க விலையே அவ்வளவுதான் சார், ஒரு இருபது ரூபாயாவது சேர்த்துக்கொடுங்கள்' என்றான். சரியான விலையைப் பிடித்துவிட்ட மகிழ்ச்சி எனக்கு.

'ம்ஹூம், முடியவே முடியாது. 200 ரூபாய்க்கு மேல் ஒரு பைசா தரமாட்டேன். இல்லையென்றால் இந்தப் பொருளே எனக்கு வேண்டாம்' என்றேன் சற்றும் இரக்கமில்லாமல்.

'சரி சார், இன்னிக்கு வியாபாரமே ரொம்ப டல். அதனால் தருகிறேன்' என்று சொல்லி அதைத் தந்துவிட்டான். வெற்றிக்களிப்பு எனக்கு. நண்பர்களும் சில பொருட்களை வாங்கிக்கொண்ட பின்பு வண்டியை நோக்கிச் சென்றோம்.

வண்டிக்கு அருகே இன்னொரு சிறுவன் கைகளில் பல பொருட்களை வைத்துக்கொண்டு விற்றுக்கொண்டிருந்தான். எங்களைப் பார்த்ததும் சூழ்ந்துகொண்டான். அப்போதுதான் கவனித்தேன், அவன் கைகளிலும் அதே காதணிகள் கொண்ட சிறு பெட்டி இருந்தது. ஒரு ஆர்வத்தில் அதன் விலையறிந்துகொள்ள அவனைக் கேட்டேன். சட்டென விற்கும் நோக்கில், '100 ரூபாய்தான் சார், வாங்கிக்கொள்ளுங்கள்' என்றான். குப்பென்று பரவிய ஏமாற்றத்தை முகத்தில் காண்பித்துக்கொள்ளாமல் சமாளித்துக்கொண்டு வண்டியில் ஏறினேன். அப்போதுதான் அவனும் என்னிடமிருந்த அதே பொருளைக் கவனித்தான். விலை கேட்க கேட்டேன் என புரிந்துகொண்டானோ, அல்லது இன்னொன்று வாங்குவான் என புரிந்துகொண்டானோ, 'சார் சார்' என விடாமல் முயற்சித்தான்.

'நோ, நோ' என்பதை காதில் வாங்கிக்கொள்ளாமல் விலையை இறக்கிக்கொண்டே 50 ரூபாய்க்கு வந்துவிட்டான். ஒவ்வொரு முறை அவன் விலையை இறக்கும் போதும் எனக்கு அதிர்ச்சி. அவன் என்ன புரிந்துகொண்டானோ தெரியவில்லை, சிரித்தபடியே கடைசியாக, 'கடைசியா பத்து ரூபாய்!' என்றான்.

நான் வெறுப்பாக எங்கள் ட்ரைவரை, 'வண்டிய எடுங்க போலாம்' என்றேன்.

விற்பதை விட என்னை வெறுப்பேற்றுவது என முடிவு செய்துவிட்டானோ என்னவோ? நண்பர்கள் சிரித்துக்கொண்டிருந்தனர். வண்டி நகர்ந்தது. கடைசியாகச் சொன்னான்,

'சரி, பத்து ரூபாய்க்கு ரெண்டு பாக்ஸ்! இப்ப என்ன சொல்றீங்க!'
.

3 comments:

KSGOA said...

ம்ம்ம்ம்...பேரம் பண்ணுவது ஒரு கலை

அமுதா கிருஷ்ணா said...

டில்லியில் எதாச்சும் வாங்கினா அடுத்து அந்த பொருள் பத்தி யார்கிட்டேயும் வாயே திறக்க கூடாது. இல்லாட்டா ஒன்றுமே வாங்க கூடாது.

KSGOA said...

அமுதா மேம் சொல்றது ரொம்ப சரி....