Tuesday, September 30, 2014

ரசிகன்: முகமது அலி


சமயங்களில் சில எளிய விஷயங்களை அவ்வளவு எளிதாக விளக்கிவிடமுடியாது. ஆனால் சில சிக்கலான விஷயங்களை எளிதாக விளக்கிவிடலாம். மாறாக அவ்வளவு எளிதாக விளக்கிவிடமுடியாத மிகச்சிக்கலான விஷயங்களும் நம்மிடையே உண்டு.

’நீ என்னை எவ்ளோ லவ் பண்றே?’ என்று ஒரு முறை என் காதலியிடம் கேட்டபோது, என்ன மனநிலையில் இருந்தாளோ தெரியவில்லை, குழந்தைத்தனமாக இரண்டு கைகளையும் விரித்து வைத்துக்கொண்டு, ‘இம்மாம்பெரிசு லவ் பண்றேம்ப்பா’ என்று சொல்லாமல், சிரித்தவாறே, ‘மெஷர்ஸ் ஏதாவது வைச்சிருக்கிறியா? அளந்து சொல்றதுக்கு.. டோண்ட் பி சில்லி! லவ் பண்றேன், அவ்ளோதான், அதுக்கு மேல கேட்காதே!’ என்று சொன்னாள். என்ஜினியர்ஸை லவ் பண்ணினால் இந்த இம்சையெல்லாம் இருக்கத்தான் செய்யும். மாறாக, அவள் கைகளை விரித்துவைத்துக்கொண்டு, ‘இம்மாம்பெரிசு’ என்று சொல்லியிருந்தாலும் அதன் அர்த்தம் ஒன்றுதான்.

அது மாதிரிதான், ‘அலி இஸ் கிரேட். ஐ அட்மைர் ஹிம்’ என்று எளிமையாக சொல்லிவிட்டுப் போய்விடலாம் அல்லது இரண்டாயிரம் வார்த்தைகளில் விளக்க முற்படவும் செய்யலாம்.அனைவருக்குமான தேடல், வெற்றியும் அதன் விளைவான அங்கீகாரமாகவும் இருக்கலாம். ஆனால், அதற்கும் முந்தைய ஒரு அடிப்படைத் தேவைதான் மரியாதை. சக மனிதர்கள் தன்னை அவர்களுள் ஒருவராக ஏற்கவேண்டும் என்ற நியாயமான எதிர்பார்ப்பு. ஆனால் இதில்தான் உலகெங்கும், வரலாறெங்கும் மனித இனம் சறுக்கியிருக்கிறது. காரணிகள் ஏராளம், விளைவு ஒன்றுதான்... அடிமைத்தனம்! சக மனிதனை, குழுக்களை விலங்குக்கும் கீழாக மதிக்கும் சூழலை உருவாக்குவது மற்றும் பேணிக்காப்பது. அதிலும் அந்த அடிமைத்தனத்தை அவனே ஏற்றுக்கொள்ளும்படியான சுயமரியாதையில்லா உணர்வை ஏற்படுத்திவிடுவது. வரலாறெங்கும் இந்த அநீதி நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. இன்றும்! இன்று இதன் காரணிகள் வேறு, அவ்வளவுதான்! அத்தகைய குழுக்களில் விழிப்புணர்வு தோன்றுகையில், விழிப்புணர்வு கொண்ட மனிதர்கள் தோன்றுகையில் அந்தச் சூழல் எத்தகைய வலி மிகுந்திருக்கும் என்பதை நாம் உணரமுடியும்.

அப்படியாக அடக்கப்பட்ட குழுக்களுக்காக, குழுக்களிலிருந்து போராளிகள் தோன்றியிருக்கிறார்கள். அவர்களால் மக்கள் இயக்கங்கள் தோன்றியிருக்கின்றன. பெரும்போராட்டங்களும், அதன் விளைவாய் விடுதலையும் பெறப்பட்டிருக்கின்றன. முகம்மது அலி அப்படி ஒரு போராளிதான். அலி வித்தியாசப்படுவது அவரது போராட்ட வழிமுறையில்! அலி ஒரு தனி மனிதன். தன்னுடைய வெற்றிக்காக, தன்னுடைய அங்கீகாரத்துக்காக போராடியவன். அதையே தன் இனத்துக்கான போராட்டமாகவும் மாற்றியவன். கலை, அறிவியல் சாதனையாளர்கள் பட்டியலில்தான் வரலாறு தனி மனிதர்களின் பெயர்களைப் பொறித்து வைத்திருக்கும். சமூக விடுதலைக்கான பட்டியலில் பெரும் பின்புலமும், மக்கள் ஆதரவும் கொண்ட தலைவர்களைத்தான், போராளிகளைத்தான் வரலாறு தன்னகத்தே கொண்டிருக்கும். அலி இரண்டாம் பட்டியலில் இருக்கும் தனி மனிதன். அவனது குரலை உலகம் கேட்டது. சர்வவல்லமை கொண்ட அரசுகள் அவனிடம் அடிபணிந்தன. அலி ஒரு தனி மனித இயக்கம்!

1942ல் அமெரிக்காவில் பிறந்தார் கேசியஸ் மார்சிலஸ் க்ளே ஜூனியர்! பணத்துக்காக கலந்துகொண்ட உள்ளூர் குத்துச்சண்டைப் போட்டிகள் தந்த பயிற்சி கேசியஸின் மார்பில் 1960ல் ஒலிம்பிக் தங்கத்தை தவழச்செய்தன. 1962ல் உலகின் மிக இளம் வயது குத்துச்சண்டை சாம்பியன் ஆனபோது கேசியஸின் வயது 22. சாம்பியன் பட்டம் வென்றதுமே அவர் தன் போராட்ட வாழ்வினைத் துவங்குகிறார். அடிமைத்தனத்தை குறிக்கும் தன் பெயரிலிருந்தும், தம் இன விடுதலைக்கு உதவவில்லை என்று அவர் கருதிய கிருத்துவத்திலிருந்தும் விடுபடுகிறார். முகமது அலியாக உலகுக்கே தன் சுதந்திரத்தை அறிவிக்கிறார். ஏனெனில் என்றுமே அவர் தன்னை தனி மனிதனாக உணரவில்லை. கறுப்பினத்தின் அங்கமாகவே உணர்ந்தார். 

அலியின் பேச்சும், செயலும் எப்போதும் தாக்கத்தயங்காத, பரபரப்பான வகைமையைச் சார்ந்தது. குத்துச்சண்டைப் போட்டியில் எதிராளியை எள்ளிநகையாடினார். தம்மை ஏற்காதோரை வலிமையாக மறுத்தார். தன் முந்தையை பெயரைப் பயன்படுத்தி தம்மை அழைத்து சிறுமைப் படுத்தியமைக்காக ஒரு முறை டெரல் எனும் குத்துச்சண்டை வீரரை எளிதில் தோற்கவிடாமல் செய்து 15 ரவுண்டுகள் வரை முழுதுமாக போட்டியை நிலைக்கச்செய்து சிறுகச்சிறுகத் தாக்கிப் பழிவாங்கினார். தனக்கென தனித்துவமான வழிமுறைகளை ஏற்படுத்திக்கொண்டு குத்துச்சண்டை வரலாற்றின் மிக அற்புதமான சண்டைகளை நிகழ்த்திய அலி, இது போன்ற கேவலமான சண்டைகளும் தன் வரலாற்றில் இருக்கப்போவதைப் பற்றிக் கவலை கொள்ளவில்லை. அமெரிக்க அரசு புதிய பெயரை ஏற்காத காரணத்தினாலேயே அலி ஒலிம்பிக் பதக்கத்தையும், சாம்பியன் பட்டத்தையும் இழக்க நேர்ந்தது. அதன் பின்னர் அமெரிக்கா இறங்கி வந்ததும், மேலும் இரண்டு உலக சாம்பியன் பட்டங்கள் அவரைத் தேடி வந்ததும், இனப்போராளியாக அவர் தம்மை முழுமைப்படுத்திக்கொண்டதும் வரலாறு.

"I'm the greatest" 

மேலோட்டமாக ஆணவம் தொனிக்கும் இத்தகைய அலியின் வரிகளின் பின்னால் ஒரு பெரும் வேட்கை இருப்பதை, அடிமைத்தனத்தின் அநீதியை உணரமுடிந்தவர்களால் உணரமுடியும்.


“நான் சண்டையிட விரும்புவது என் சுய கௌரவத்திற்காக மட்டுமல்ல. அமெரிக்காவில், உண்ண ஏதுமில்லாது,வெற்றுக் கட்டாந்தரையில் உறங்கும் என்னுடைய கறுப்பின சகோதரர்களுக்காக! தங்களைப்பற்றியே எவ்வித அறிதலும் இல்லாத என் கறுப்பு மக்களுக்காக!!”

-முகமது அலி. 

.
மேலும் வாசிக்க..

http://en.wikipedia.org/wiki/Muhammad_Ali
http://blog.vijayarmstrong.com/2012/03/i-am-greatest.html

.