Sunday, October 5, 2014

மெட்ராஸ் - விமர்சனம்


புதிய அலையைத் துவக்கி வைத்த இயக்குனர்களில் ஒருவரான பா.இரஞ்சித் இதோ தனது இரண்டாவது படத்தின் மூலமாக தமிழின் தவிர்க்க இயலாத இயக்குனர்களின் வரிசையில் போய் ஜம்மென்று அமர்ந்துகொள்கிறார். இதை எழுதும் போதே மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆஹா.. இதைத்தானே நண்பர்களே உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.! புதிய அலை இயக்குனர்களில் எத்தனை சொத்தைகள் ஆட்டத்தை விட்டு விலகப்போகிறதோ நமக்குத் தெரியாது, ஆனால் ஒரு முத்து கிடைத்துவிட்டது. எடுத்துக்கொண்ட கதையை அதன் உணர்வுகள் சிதையாமல் படமாக்கிவிடுவது மட்டும்தான் ஒரு இயக்குனரின் கடமை. அதைக் கச்சிதமாக செய்துவிட்டார் இரஞ்சித். தொழிற்கூடங்களும், மென்பொருள் அலுவலகங்களும், வியாபாரத்தலங்களுமாக மாறிவிட்ட மெட்ரோ சென்னையல்ல, நிஜமான சென்னை. சென்னைக்கும் அதற்கேயுரிய தனித்துவமான பண்பாடும், கலாச்சாரமும், அடையாளங்களும் உண்டு. வடசென்னைதான் நிஜமான மெட்ராஸ்.! இரஞ்சித் வடசென்னை மண்ணின் மைந்தர்!

சமீபத்தில் என்ன சமீபத்தில்.. ரொம்ப நாளாச்சு இது போன்ற சினிமாவைப் பார்த்து! தொடர்ந்து அபத்தங்களைப் பார்த்துப் பார்த்து, கமர்ஷியல் சினிமா என்பதற்கான வரையறையை நாமே நிறைய அபத்தங்கள் நிறைந்ததாய் மாற்றிக்கொண்டுவிட்டோம். மெட்ராஸ் எனும் இந்த சினிமா மீண்டும் கலைத்தன்மை மிக்க கமர்ஷியல் சினிமா மீதான நியாயமான பசியை நமக்குத் தூண்டுகிறது. 

திருநெல்வேலி அரிவாளும், வெட்டுக்குத்துகளும் நிறைந்த ஒரு ஊராக பலராலும் உணரப்படுவதுண்டு. ஆனால் உண்மையை உற்று நோக்கினால் இரண்டு தனிப்பட்ட குழுக்களுக்குள் காலம் காலமாக, தலைமுறை தலைமுறையாக நிலவி வந்த பகையும், அதனால் ஏற்பட்ட இருதரப்பு பழிவாங்கல் கொலைகளும்தான் அந்த நகருக்கே அப்படியொரு பெயரை நல்கியிருக்கிறது. அதைப்போன்றதொரு கதை. கூடுதலாக அதிகார போதை மட்டுமே என்றாகிப்போய்விட்ட அரசியல் களம். கட்சியின் மேல் மட்டத்தில் நடக்கும் பிரிவுகளும், மீள் இணைப்புகளும் அந்தக் கட்சிகளைச் சார்ந்த கீழ்மட்ட தலைவர்களை, தொண்டர்களை எவ்வாறெல்லாம் உணர்வுப்பூர்வமாக சிதைக்கும் என்ற உண்மை முகத்திலறைகிறது. அப்படியான இரு குழுக்களில் ஒன்றைச்சார்ந்த, அதன் தலைவருடன் நட்பாக இருக்கிற, அவர்களின் அரசியல் நிகழ்வுகளில் கலந்துகொள்ளாத, அதில் பெரிதாக ஆர்வம் கூட இல்லாத இன்னொரு மூன்றாவது கதாப்பாத்திரம்தான் படத்தின் கதாநாயகன். நண்பன், அவனது மனைவி, அம்மா, அப்பா, வீடு, நான்கு பேர் சேர்ந்தாற்போல் நிற்கக்கூட முடியாத அந்த வீட்டின் ஹால், வேலை, விளையாட்டு, அவசரமும், முரட்டுத்தனமும் கொண்ட சுபாவம், பெண்ணின் அருகாமையைத் தேடும் வயது, கல்யாண ஆசை என்று செல்கிறது கதாநாயகன் காளியின் கதாப்பாத்திர வடிவமைப்பும், சூழலும். காளி மட்டுமல்ல, படத்தின் ஒரு காட்சியில் வந்து போகும் காரெக்டர்கள் வரை ஒவ்வொன்றும் தனித்துவமான இயல்புகளோடு முழுமையாக உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு சிற்பியின் கவனத்தோடு ஒவ்வொரு கதாப்பாத்திரங்களையும் செதுக்கியிருக்கிறார் இயக்குனர். கதையில் காளியின் நண்பன் அன்புவுக்கு என்ன நேரப்போகிறது, இரண்டாம் பாதி எப்படி இருக்கும் என்பதை நாம் ஊகித்துவிடமுடியும் என்றாலும் ஒவ்வொன்றும் நிகழ்கையில் அதன் தாக்கம் அதிர்வூட்டுவதாய் இருக்கிறது. அம்மாவிடம் பேசும்போதும், காதலியிடம் பேசும் போதும், நண்பனிடம் பேசும் போதும் அதே மெல்லிய அறியாமை இழையோடும் கோபமும், அவசரமுமாய் இருக்கிறான் காளி! அரசியலின் வீரியத்தை, நிஜமான சூழலை உணர்கையில் கூட பொறுமையாக, சிந்தித்து செயல்படுபவனாக அவன் மாறிவிடுவதில்லை. 

சில அற்பமான விஷயங்கள் சில மனிதர்களின் வாழ்வில் மிக முக்கியமானதாகிவிடுகின்றன. நீண்ட அரசியல் வாழ்வும், முதுமையும் தந்த சோர்வில் அத்தனையிலும் ஆர்வம் இல்லாது போய்விட்டாலும், ஒரு சுவரில் வரையப்பட்டிருக்கும் தன் தந்தையின் படத்தில்தான் தனது முழு கௌரவமும் அடங்கியிருக்கிறது என்று உணர்கிறது ஒரு வயதான கதாபாத்திரம். அதற்காக எதையும் செய்யத்துணிகிறது அது, கொலைகள் உட்பட! இறுதியில் அந்தப் படம் அழிக்கப்படுகையில், அதன் எதிர்வினை நமக்கு வியப்பூட்டுகிறது.

வரம் வாங்கிப் பெற்ற பிள்ளைக்கு உலகில் இல்லாத பேரழகியைத்தான் பெண்ணாகப் பார்த்துவருவேன் என்று வார்த்தைக்கு வார்த்தைப் புலம்பிக்கொண்டிருக்கும் அம்மா, தன் பிள்ளை விரும்புகிறான் என்பதாலேயே அந்தப் பெண்ணிடம் தன் அன்பை, ஆற்றாமையை வெளிப்படுத்துவது கவிதை. இந்தக் காட்சி படத்தில் இல்லாமலே உணரவைக்கப்படுவது இன்னும் அழகு.

இப்படி படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்தைப் பற்றியும் சொல்லிக்கொண்டே போகலாம். போதும்! ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிடிங், நடிப்பு போன்ற அத்தனை விஷயங்களும் எப்படி இப்படி ஒத்திசைந்து இயங்கின என்பதே ஆச்சரியமாக இருக்கிறது. இயக்குனர் எனும் முன்னேர் ஒழுங்காகச் சென்றால் அத்தனையும் ஒழுங்கே பின்னே செல்லும் என்பது மீண்டும் ஒரு முறை இங்கே நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு தமிழ்ப்படம் என்பதற்காக நாம் பெருமைப் பட்டுக்கொள்ளலாம். காணத் தவறாதீர்கள்!

முடிப்பதற்கு முன்னால் ஒன்றே ஒன்று!

கார்த்தி!இது போன்ற ஒரு கதைக்கு ஒரு ஸ்டார் அந்தஸ்து இல்லாத ஒரு நடிகரோ, புதுமுகமோ செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ என்று நான் முதலில் எண்ணினேன். ஆனால், இரண்டாம் பகுதியில் அந்தக் காரெக்டருக்கு இருக்கும் முக்கியத்துவம் கார்த்தியின் / ஒரு ஸ்டாரின் அவசியத்தை, முக்கியத்துவத்தை உணர்த்தியது. ஒரு நடிகரின் பிரபலம், ஒரு படத்தை மக்களிடம் கொண்டுசெல்ல உதவவேண்டும், அதே நேரம் ஒரு படம் ஒரு நடிகரை மக்களிடம் இன்னும் நெருக்கமாகக் கொண்டு செல்ல உதவவேண்டும். அதுதான் மிகச்சரியான பொருத்தம். அது இங்கே நிகழ்ந்திருக்கிறது. காளியுடன் கார்த்தி தன்னை முழுமையாக பொருத்திக்கொண்டிருக்கிறாரே தவிர, கார்த்திக்காக காளி சிறிதேனும் மாறியிருக்கவில்லை. உண்மையில் இது ஒரு வியப்பான விஷயம்தான். பருத்தி வீரனுக்குப் பிறகு, நான் மகான் அல்ல தவிர்த்து சொல்லிக்கொள்ளும் படி ஒரு படம் கூட உருப்படியாக கார்த்தி செய்திருக்கவில்லை. இத்தனைக்கும் சிறப்பான பின்னணி, மணிரத்னத்திடம் உதவி இயக்குனர், நல்ல சினிமா அறிவு கொண்டவர் என சொல்லக்கேள்வி. இவரும் இப்படி அஜித், விஜய், சூர்யாவுக்கு போட்டியாக மரண மொக்கை போட்டுத் தள்ளிக்கொண்டிருக்கிறாரே என வருந்தியதுண்டு. அப்படியான கார்த்தி இந்தப் படத்தைச் செய்தமைக்கு நம் நிஜமான பாராட்டுகள். இதனால் தொடர்ந்து அவரும், ஏனைய ஸ்டார்களும் சற்றே கதைக்காக இறங்கி வருவார்கள் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.
.

No comments: