Sunday, November 30, 2014

காவியத்தலைவன் - விமர்சனம்

இப்படி ஒரு அறுவைப் படத்தைப் பார்த்து எத்தனை நாளாச்சு? என்பதாக ஜி+ல் குட்டியாக ஒரு விமர்சனம் எழுதிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவதுதான் என் முதல் எண்ணம். அதைச் செய்தபோது பதிலாக, வேறு யாரேனும் அப்படிச்செய்யலாம், நீங்கள் என்பதால் ஒன்று அமைதியாகச் சென்றிட வேண்டும், அல்லது இப்படி பல முனைகளிலும் பாராட்டப்படும் ஒரு படத்தினைப் பற்றி உங்களுடையது எதிர்கருத்தெனின், அதற்கான காரணத்தையும் வைக்க வேண்டும் என்பதாக ஓரிரு எதிர்வினைகளை எதிர்கொள்ள நேர்ந்தது. ’இன்னுமா இந்த உலகம் நம்மை நம்புது?’ என்ற வழக்கமான சுய எள்ளல்தான் அதற்குப் பதில் என்றாலும், படத்தில் நான் உணர்ந்ததை, அல்லது உணரமுடியாதவற்றை பகிரலாம் என்றே தோன்றுகிறது.

கமர்ஷியல் நோக்கமற்ற கதைக்களம், பீரியட் என உழைத்திருக்கும் வசந்தபாலன் மற்றும் அவரது குழு, பின்னணி இசை, அவரவர் வகையில் சிறப்பாக நடித்திருக்கும் நாசர், பிரித்விராஜ், சித்தார்த், வேதிகா என்றிருக்கையில், சட்டென குறை சொல்லிவிட்டு கடந்துபோக கடினமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் என்ன கதையை, எப்படிச் சொல்லிக்கொண்டிருக்கிறோம் என்ற புரிதல் சிக்கல் இயக்குனருக்கும், எதைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்ற புரிதல் சிக்கல் ரசிகனுக்கும் இருக்கும் வரை இப்படிக் கடந்துபோவது தவிர்க்க இயலாததாகிவிடுகிறது.


நாடகக்கலைஞர் சிவதாசருக்கும், அவரது இரு சீடர்களுக்கும் இடையேயான கதையா இது? சிவதாசர், நாடகத்திற்காக உடல் பொருள் ஆவி அனைத்தும் துறந்தவராக சித்தரிக்கப்படுகிறார். அவரது குழுவில் மூன்று லீடிங் காரெக்டர்கள் தவிர்த்து, ஒரு பாடலைக்கூட மனனம் செய்யத்தெரியாத ஒரு பெரிய வெற்றுக் கும்பலே இருக்கிறது. அதைப் பற்றியெல்லாம் அவருக்கு ஏதும் கவலை இருந்த மாதிரி தெரியவில்லை. அவரின் ஒவ்வொரு எதிர்வினைக்கும் காளியப்பாவும், கோமதிநாயகமும் தவமிருக்கிறார்கள். ஆனால், அவரோ ஒரு கிராமத்துப் பண்ணையாரைப் போல நடந்துகொள்வதைத்தவிர வேறென்ன செய்கிறார் என்று சரியாகத் தெரியவில்லை. இத்தனைக்கும் ஒரு குழப்பம் நேர்ந்ததைத் தொடர்ந்து, சீடன் விடும் சாபத்தை சிரமேற்கொண்டு மண்டையையும் கூட போட்டுவிடுகிறார். இல்லை, இது சிவதாசரின் கதையல்ல..

முக்கோண அல்லது நாற்கோண காதல் கதையா இது? காளியப்பாவும், ஒரு ஜமீன்தார் பெண்ணும் ஒருவரையொருவர் காதலிக்க, வடிவாம்பாள், காளியப்பாவைக் காதலிக்க, கோமதிநாயகம், வடிவாம்பாளைக் காதலிக்க.. இப்படியாக! மேலும் இந்தப் பகுதிக்கான காட்சியமைப்புகள் தாங்கவில்லை. ஆளுமை மிகுந்த ஜமீன்தார் பெண்ணை ஏதோ இப்படி அப்படி  என்பதற்குள் கரெக்ட் செய்துவிடுகிறார் காளியப்பா. அரண்மனைக்குள் ஏதோ கொல்லைப்புறம் போய் வருவதைப்போல அவ்வளவு சாதாரணமாக போய் வருகிறார். ஒரு இடத்திலாவது இந்த காதல்களின் தாக்கம் நமக்கு ஏற்படவில்லை. ஏன் இவர்களுக்குள் இப்படி உயிர்துறக்கும் அளவிலான ஒரு ஆழ்ந்த காதல் வந்து தொலைக்கிறது என்பதும் நமக்கு உறைக்கவே இல்லை. இல்லை, இது காதல் கதையல்ல..

ஒருவன் உயிராக அன்பைச்செலுத்த, இன்னொருவன் காலமெல்லாம் துரோகம் நினைக்கும் இரண்டு நண்பர்களின் கதையா? இத்தனைக்கும், இளையவன் காளியப்பா அநாதைக் குழந்தையாக குழுவில் இணையும் போது, யாருமே தராத ஆதரவைத் தந்து அரவணைக்கிறான் மூத்தவன் கோமதிநாயகம். திறமையால் ஒவ்வொரு காலகட்டத்திலும் மூத்தவனை இளையவன் முந்த அது மூத்தவனின் துரோகத்துக்கு வழிவகுக்கிறது. ஆனால் இந்தப்பகுதி சொல்லப்பட்ட விதமும் நெளிய வைக்கிறது. ‘ஆடுகளத்’தைப்போல துரோகத்தின் வீச்சு கொஞ்சமும் இயல்பாக இதிலில்லை. தெரிந்தே காளியப்பா செலுத்தும் அன்பால் எந்தப் பயனும் இறுதி வரை விளையவில்லை. தேர்ந்து விலகி நிற்கக் கூட செய்யாத அறியாமையால் காளியப்பாவின் கதாபாத்திரம் சிதைகிறது. தெரிந்தே சப்பைக்கட்டு கட்டிக்கொண்டு தன் தரப்பு நியாயம் என அதையும் பேசிக்கொண்டே திரியும் கோமதிநாயகத்தின் கதாபாத்திரத்துக்கும் அதே நிலைதான். (தமிழ்நாட்டில் அப்போது காளியப்பாவும், கோமதிநாயகமும் மட்டும்தான் இருந்தார்களா நாடகம் போட? காளியப்பா வரும்வரை, நாடக பூஷணம், கலைப் பித்தன் என்றெல்லாம் பேரும், புகழும், பணமுமாய் இருக்கும் கோமதிநாயகம், காளியப்பா நாடகம் போடத்துவங்கியதும் அப்படியே நொடித்துப்போய் தெருவிற்கே வந்துவிடுகிறார்.) இல்லை, இது துரோகத்தின் கதையல்ல..

நாடு அடிமைப்பட்டுக்கிடந்த வேளை, நாடகக்கலை புராணங்களைப் பேசிக்கொண்டிருந்த தருணத்தில், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி, மக்களிடையே சுதந்திர வேட்கையைப் பரப்ப முற்பட்ட ஒரு நாடகக் கலைஞனின் கதையா இது? அப்படி எண்ணவும் வாய்ப்பளிக்கும் வகையில் படத்தின் பெரும்பகுதியை எடுத்துக்கொள்கிறது இந்தப் பகுதி. காதலில் தோல்வியும், நட்பின் துரோகமும் துரத்த நாட்டுவிடுதலைக்கு போராட எத்தனிக்கும் ஒரு கலைஞன் என்பதைக்கூட நாம் ஏற்கலாம். ஆனால் முதலில் பொறுப்பில்லாமல் குடித்துச்சீரழியத்தான் முற்படுகிறான் அவன். அவனை மீண்டும் நல்வழிப் படுத்த, அவனுக்கு துரோகம் எண்ணும் அதே நண்பன்தான் வரவேண்டியிருக்கிறது. (வாய்ப்பும் தந்து மீண்டும் துரோகத்தையும் புதுப்பித்துக்கொள்கிறான்). இரண்டாம் வாய்ப்பில் தனியே நாடகம் நடத்தச்செல்லும் காளியப்பா நவீன தேசவிடுதலை நாடகங்களை மேடையேற்ற, அதன் பின் விளைவுகளை சந்திக்கிறார். அப்படி என்ன வேட்கையை மக்களிடையே பரப்பிவிடுகிறார், வெள்ளை அரசாங்கம் இவரை சுட உத்தரவு பிறப்பிக்கும் அளவுக்கு, என்று கேட்டால் அதற்கும் பதிலில்லை. ’பகத் சிங் நாடகம் நடக்கிறது’ என்பது போன்ற போஸ்டர்களைத்தான் காண்பிக்கிறார்கள். இல்லை, இது சுதந்திரத்துக்காக உயிர் தரவும் தயங்காத ஒரு கலைஞனின் கதையும் அல்ல..

இப்படி பல கதைகளும் ஒன்றையொன்று பின்னிப்பிணைந்துள்ள காவியம் இது என்று நாம் எடுத்துக்கொள்ள வழியிருக்கிறதா என்று தேடினால் அப்படி எதுவும் என் கண்ணில் படவில்லை. எதிலுமே ஆழமில்லை. வசனம் பெப்பெரப்பே என்று இருக்கிறது. அனேகமாக ஜெயமோகன் எழுதியதை சினிமாவுக்காக செப்பனிடுகிறேன் பேர்வழி என்று வசந்தபாலன் ஓவர்ரிட்டர்ன் செய்திருக்கவேண்டும். கதைப்பிரிவுகள் உண்மையில் ஒன்றோடொன்று ஒத்திசையவில்லை, மேலும் ஒன்றையொன்று சிதைக்கின்றன.

தவிரவும் நடிகர் தேர்வு, கலை இயக்கம், காட்சியமைப்புகள் என ரசிகனை சோதிக்கும் அம்சங்கள் ஏராளம்!

ஆனால், புதுமையான கதைக் களங்களை அறிமுகப்படுத்த விளையும் வசந்தபாலனின் கமர்ஷியல் நோக்கமற்ற தன்மையைப் பாராட்டத்தான் வேண்டும் என்றால் பாராட்டிக்கொள்ளலாம். எனக்கென்னவோ இதைவிட நாலு ஃபைட்டு, நாலு ஸாங்கு என பரபர விறுவிறு படங்களே தேவலாம் என்று தோன்றுகிறது. அதையெல்லாம் செய்யத்தெரியாத வசந்தபாலன், இப்படி டகால்டி வேலை காண்பிக்கிறாரோ என்றுதான் தோன்றுகிறது. ஒரு ‘சிங்கம்’ மாதிரி மசாலா படத்தையோ, ஒரு ‘சூது கவ்வும்’ மாதிரி மாடர்ன் படத்தையோ தந்து வெற்றிக்கொடி நாட்டிவிட்டு, ‘இப்ப பாருடா என் கலைச்சேவையை..’ என இவர் இந்த மாதிரி படங்களை செய்யத்துணியலாம்.

அப்படியும் இருக்கும் நல்ல விஷயங்களுக்காக தாராளமாக பாராட்டி வையுங்கள், நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் தயவு செய்து, இந்தப் படம்தான் தமிழ் நாடகக் கலையின், நாடகக் கலைஞர்களின் வரலாறு, இதுதான் அவர்களின் வாழ்க்கைச்சித்திரம், காளியப்பாதான் கிட்டப்பா, வடிவாம்பாள்தான் சுந்தராம்பாள், சிவதாஸ்தான் சங்கரதாஸ் சுவாமிகள், வாத்தியார்தான் டிகேஎஸ், அந்தக் குட்டிப்பையன்தான் சிவாஜிகணேசன், இதுதான் வரலாற்றைப் பதிவு செய்யும் முயற்சி என்றெல்லாம் சொல்லி வரலாற்றை சோதிக்காதீர்கள், பாவம் விட்டுவிடுங்கள் என்று மட்டும் கேட்டுக்கொள்கிறேன்.

1 comment:

amon Mohanya said...

இன்னைக்குத் தமிழ் சினிமா இருக்குற சூழ்நிலைல நாலு கொரியன் படமும் அஞ்சு ஈரானியப் படமும் பாத்து சினிமா எடுக்காம…. கொஞ்சமாவது முயற்சி பண்ணி வித்தியாசமா படம் எடுக்கனும்னு நெனச்ச காரணத்துக்காகவே இந்த முயற்சிகளை வரவேற்க வேண்டாமா?
இந்த மாதிரி முயற்சிகளைப் பாராட்டி ஊக்கப்படுத்தாட்டி ஒங்களுக்கெல்லாம் ஒலக சினிமால திருடுன சினிமாதான் கெடைக்கும். இந்தப் படத்துல வந்து அது சொத்தை இது சொள்ளைன்னு விமர்சனம் பண்றவங்கள்ளாம் நூத்துக்கு நூறு இயல்பான சினிமாவா பாக்குறீங்க? இந்த மாதிரிப் படங்களை ஊக்கப்படுத்துனா… அடுத்தடுத்து யாராச்சும் இன்னும் சிறப்பா எடுக்க முயற்சி செய்வாங்க. அடிவேர்லயே வென்னீர் ஊத்துற மாதிரி நடந்துக்கிட்டா சுப்பிரமணிய சுவாமி ராஜபக்‌ஷே நாடகத்தனத்தோடதான் படங்கள் வரும்.

அடப் போங்கய்ய்யா! மசாலா விழுங்கிகளா!