Tuesday, December 23, 2014

ரசிகன் : டைனமோ


பொதுவாகவே மனிதர்களுக்கு மறைபொருள் என்றாலே ஒரு க்யூரியாசிடி உருவாகிவிடுவது இயல்புதான். அதிலும், ‘ஹௌ இட் ஒர்க்ஸ்’ பிரியர்களான எந்திரவியல் மாணவர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். எந்திரவியலில் சூழலின் கடனே என்று சேராமல் அப்போதே ஆர்வம் காரணமாகத்தான் சேர்ந்தேன். பள்ளியிறுதி வகுப்புகளில் மிகத்தற்செயலாக நாற்சக்கர வாகனங்களின் பின்னச்சின் மத்தியில் இருக்கும் டிஃபரன்ஷியல் எப்படி இயங்குகிறது, அதன் தேவை என்னவென்பதை அறிந்தபோது ஏற்பட்ட வியப்பு இன்னும் நினைவில் நிற்கிறது. அதனால்தான் எந்திரவியலை கண்ணை மூடிக்கொண்டு தேர்ந்தேன். 

இப்போதும் சிறப்புப் பணிகளுக்கான எந்திரங்கள் சார்ந்த வேலையில்தான் இருந்துகொண்டிருக்கிறேன். எங்கேனும் புதிய எந்திரங்களைக் காண்கையில், உடனடியாக அதன் உள்ளீடுகளை கற்பனை செய்யத்துவங்கும் என் மனது. ஓரளவு அதன் இயங்குதளம் புரிபட்டபின்புதான் ஒரு நிம்மதி கிடைக்கும். பல சமயங்களில் அவை எளிதில் புரிபட்டுவிடும்தான், சில வேளைகளில் புரியாவிட்டால் அன்றைய தூக்கம் அவ்வளவுதான். மேலும் அவ்வாறான வேளைகளில் சில அரிய/ புதுமையான/ பல்தொழில் கலவைகளை அவ்வியந்திரங்களில் காண நேர்ந்தால், என் மனம் மகிழ்ச்சியில் துள்ளும். ஒரு ஓவியத்தை ரசிப்பதைப்போல, ஒரு கவிதையை ரசிப்பதைப்போல ரசிப்பேன். அதன் வடிவமைப்பாளனுக்கு என் மானசீகமான பாராட்டுகளைத் தருவேன்.

இந்த சுபாவம் எந்திரவியல் தாண்டியும் பரவலானதாகும். அதுவே பொறியியலின் அத்தனைத் துறைகளிலும் மூக்கை நுழைக்கும் ஆவலை உண்டு செய்யும். பொறியியலென்றாலே வியப்புத்தானே! குறிப்பாக கணினித்துறையின் ஒவ்வொரு செயல்பாடுகளும், கருவிகளும் ஒரு மேஜிக்கைப் போன்றவை. சில விஷயங்கள் புரிபடாமல் கோபமும், எரிச்சலும் முட்டும். ஆயினும் அதன் அடிப்படை பைனரி மொழி, அது ஸ்விட்ச் எனும் ஒரு எந்திரப்பொறியின் On, Off எனும் எளிய இரு நிகழ்வுகளை ஆதாரமாகக் கொண்டது என்பதே எனக்குத் தேவையான ஆறுதலைத் தந்துவிட்டது.

அப்பேர்ப்பட்ட மாணவனுக்கு மேஜிக் எனும் நுட்பம் பிடித்துப்போனதில் எந்த ஆச்சரியமும் இருக்காதுதானே! ஒரு மேஜிக் க்ராக் செய்யப்பட்டால் அதன்பின் அதன் மீதான ஆர்வம் முற்றிலும் வடிந்துபோகும். ஆனாலும், மேஜிக் க்ராக் செய்யப்படுவதில் ஆர்வமில்லாதவர்களே இருக்கமுடியாது. உலகை வியப்பில் ஆழ்த்திய எத்தனையோ மேஜிக்குகள் க்ராக் செய்யப்பட்டிருக்கின்றன. இன்னும் மர்மம் விடுபடாத எத்தனையோ மேஜிக்குகள் உள்ளன. 

மேஜிக் ஒரு அற்புதமான கலை. மேஜிக் இவ்வாறான நுட்பம் கொண்டுதான் நிகழ்த்தப்படுகின்றன என்று நம்மால் அவ்வளவு எளிதாக சொல்லிவிடமுடியாது. அசுரத்தனமான பயிற்சியின் விளைவாய்க் கிடைக்கும் வேகம், சராசரி மனிதனின் ஆக்‌ஷன், ரியாக்‌ஷன் போன்றவற்றிலிருந்து முற்றிலும் விலகி நின்று இயங்க முடிகிற லாகவம், இயற்பியல், வேதியியலின் அளப்பறிய பயன்பாடுகள், சீரிய திட்டமிடல், முன் தயாரிப்பு, சிறப்பாக உருவாக்கப்பட்ட பொறிகள், சாதாரணமாக தோற்றமளிக்கும் அசாதாரணமான பொருட்கள், சாதாரண மனிதர்களின் பார்வைத்திறன் மற்றும் மூளைத்திறனை விஞ்சும் அம்சங்களை உள்ளீடாகக் கொள்தல் எனப் பரவிக்கிடக்கும் எத்தனையோ நுட்பங்களில் ஒன்றோ, பலவோ இணைந்துதான் ஒரு வியக்கச்செய்யும் மேஜிக் நிகழ்வு நிகழ்த்தப்படுகிறது.

டேவிட் காப்பர்ஃபீல்டு போன்ற‌ உலகையே தன்வசம் செய்த எத்தனையோ மெஜீஷியன்களைத் தன்னகத்தே கொண்டது வரலாறு. ஹிஸ்டரி சானல் மூலமாக சமீபமாக காணக்கிடைத்தவர் டைனமோ. 1982ல் இங்கிலாந்தில் பிறந்த ஸ்டீவன் ஃப்ரெய்ன் (Steven Frayne) எனும் 32 வயதே ஆகும் இளம் மெஜீஷியனின் செல்லப்பெயர்தான் டைனமோ!


'டைனமோ: மெஜீஷியன் இம்பாஸிபிள்' எனும் தொலைக்காட்சித் தொடரின் மூலமாக உலகெங்கும் பிரபலமான டைனமோவின் மேஜிக் நிகழ்வுகள் ஒவ்வொன்றும் நம்மை வியக்கச்செய்பவை. பாரம்பரிய முறைகளுக்கு அப்பாற்பட்டவை. இவரது மேஜிக் எதுவுமே இதுவரை கட்டவிழ்க்கப்படவில்லை.

தொடர்ந்து இவரது நிகழ்வுகளை இணையத்தில்/ தொலைக்காட்சியில் பார்த்து வரும் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த போது, ஏதேனும் பிடிபடுகிறதா என்ற பேச்சு எங்கள் இருவரையும் பைத்தியம்தான் பிடிக்கச்செய்தது. கடைசியில் நண்பர் சொன்னார், "யுகேடிவி, டைனமோ, நிகழ்வில் கலந்துகொள்பவர்கள் என அனைவருமே கூட்டாக ஒரு பொய்யை இவ்வுலகத்துக்கு நிகழ்த்துகிறார்கள். இந்நிகழ்ச்சியே முற்றிலும் சிஜி மூலமாக செய்யப்படுவதாக இருக்கலாம். சுவாரசியம் கருதி இதை நாம் மன்னிக்கவும் செய்யலாம்"

நுண்ணறிவியலில் ஆர்வம் கொண்ட அவரது குரலில், ஒரே ஒரு மேஜிக்கின் அடிப்படையைக் கூட கண்டுகொள்ள முடியாத‌ ஒரு ஆத்திரம் தொனித்ததை உணர்ந்துகொள்ள முடிந்தது. சட்டென சிரித்துவிட்டேன். எனக்கும் அதே எரிச்சல்தானே?!


சரிதான்! கோள வடிவிலிருக்கும் கால்பந்தை, கையால் நசுக்கியே அமெரிகன் கால்பந்தான ஓவல் வடிவ பந்தாக மாற்றுவது, சிறிய கண்ணாடி பாட்டிலுக்குள் செல்போனை போட்டுவிடுவது, அச்சிடப்பட்ட போஸ்டரின் டிசைனையே மாற்றுவது போன்ற சிறு நிகழ்வுகளையும், கிரேன்களை ஒளித்துவைக்க இயலாத ரியோவின் மலைமுகட்டில் காற்றில் மிதப்பது, தேம்ஸ் நதியின் பரவலான பகுதியில் நீரில் நடப்பது போன்ற பெரிய நிகழ்வுகளையும் பார்க்கையில் எரிச்சல் வராமல் வேறென்ன செய்யும்?
.

1 comment:

Namma Veedu said...

சரிதான்! கோள வடிவிலிருக்கும் கால்பந்தை, கையால் நசுக்கியே அமெரிகன் கால்பந்தான ஓவல் வடிவ பந்தாக மாற்றுவது, சிறிய கண்ணாடி பாட்டிலுக்குள் செல்போனை போட்டுவிடுவது, அச்சிடப்பட்ட போஸ்டரின் டிசைனையே மாற்றுவது போன்ற சிறு நிகழ்வுகளையும், கிரேன்களை ஒளித்துவைக்க இயலாத ரியோவின் மலைமுகட்டில் காற்றில் மிதப்பது, தேம்ஸ் நதியின் பரவலான பகுதியில் நீரில் நடப்பது போன்ற பெரிய நிகழ்வுகளையும் பார்க்கையில் எரிச்சல் வராமல் வேறென்ன செய்யும்?

This Person Doing Realy Great !
.