Monday, November 23, 2015

கமல்ஹாசன்: நிகழும் ஓர் அற்புதம்

நடப்பு நவம்பர் ’15, ‘அந்திமழை’ இதழில் வெளியாகியுள்ள எனது கட்டுரையின் முழு வடிவம் இங்கே. அந்திமழைக்கு நன்றி!

***********

கமல்ஹாசன்: நிகழும் ஓர் அற்புதம்
-ஆதிமூலகிருஷ்ணன்


எவ்வளவு நாள்தான் அமைதி காப்பது? கொஞ்சம் பேசலாமே கமல்ஹாசன் குறித்தும்.

சமீபத்தில் ஒருநாள், இப்படித்தான் பாரதிதாசனின் குடும்பவிளக்கை வாசித்துவிட்டு ஒரு நண்பரை போனில் அழைத்து, ஏதோ ஜோக் புத்தகம் படித்துவிட்டு, பகிர்ந்து, சிரித்து மகிழ்வதைப்போல சிரித்துக்கொண்டிருக்க நேர்ந்தது. குடும்ப விளக்கு ஒன்றும் ஜோக் புத்தகம் இல்லை எனினும் அந்தச் சிரிப்பு, உண்மையில் தமிழ் தந்த சுகம் பெற்ற மகிழ்ச்சியால் வந்ததாகும்.

குடும்ப விளக்கில், அதிகாலையில் கண்விழிக்கும் தலைவியானவள், இரவு துயில் கொள்ளப்போகும் வரை கைக்கொள்ளும் பொறுப்புகளாக விவரிக்கப்படும் பட்டியல் இன்றைய பெண்களுக்கு தலைசுற்ற வைக்கும் ஆயினும் காலத்துக்கேற்ப அவற்றுக்குப் பொருள் கொள்ளவேண்டியது நம் கடன். அது ஒரு புறமிருக்க, அதில், அந்தத் தலைவியானவள், மதியப் பொழுதில் மகள் வீட்டுக்கு விருந்தாடிச் சென்றுவிட்டு வீடு திரும்பும் மாமனாரையும், மாமியாரையும் வரவேற்கும் காட்சி ஒன்று வரும். அந்த மாட்டு வண்டியிலே எண்ணிக்கையிலே அடங்கா ஏராளமான பொருட்களையும் அவர்கள் ஏற்றி வந்திருக்கின்றனர். 

வாணிபக்குடும்பமாயிற்றே! தலைவியோ, மாமியாருக்கு வணக்கம் கூறி வரவேற்றுவிட்டு ஆச்சரியமாகக் கேட்கிறாள்,

‘இவையெல்லாம் வண்டிக்குள்ளே இருந்தனவென்றால், அந்த அவைக்களம் தனிலே நீவிர் எங்குதான் அமர்ந்திருந்தீர்? சுவைப்புளி அடைத்துவைத்த தோண்டியின் உட்புறத்தே கவர்ந்துண்ணும் பூச்சிகட்கும் கால்வைக்க இடமிராதே?’

அதற்கு மாமி சொல்வாள்: ‘இவைகளின் உச்சி மீதில் குன்றுமேல் குரங்கு போல என்றனைக் குந்த வைத்தார். என் தலைநிமிர வண்டி மூடிமேல் பொத்தலிட்டார்; உன் மாமன் நடந்து வந்தார், ஊரெல்லாம் சிரித்தது’
அதற்கு அந்த மாமன் சொல்லும் பதிலோ இன்னும் நகை. அன்பும், ஆரோக்கிய சூழலும், நல்வாழ்வியலும் நற்றமிழால் விவரிக்கப்படும் இடத்தே சற்று நகைச்சுவையும் கலந்திட்டால்? அதுதான் பாரதிதாசன். சிரிக்காமல், மகிழாமல், நிறையாமல், பகிராமல் நான் என்ன செய்வது? தாசனே இப்படியாயின், முன்னவன் பாரதி?

தேனும் வேம்பாகத்தோன்றும் பள்ளிப் பாடத்திலே பாரதியையும், அவர்தம் தாசனையும், குறளையும் விட்டு வந்த பிறகு மீண்டும் அவர்களை நான் அடைந்ததெப்படி?

எனக்கு ஒரு கமல்ஹாசன்தான் வரவேண்டியிருந்தது. மகாநதி படம் வந்த ஆண்டு 1993. அப்போதுதான் பன்னிரண்டாம் வகுப்பு முடித்திருந்தேன். பதினெட்டு வயது. செயற்கையான சினிமாக்களுக்கிடையே ஓர் அழகிய கிராமத்தையும், குடும்பத்தையும், ஒரு மனிதனுக்கு நிகழவேக் கூடாத உச்சபட்ச மனத்துயரை சந்திக்கும் ஒரு நல்லவனையும் காண்பித்து, இதுதான் உலகம் எனும் பிரமிப்பையும், பயத்தையும் எனக்கு அறிமுகம் செய்தது மகாநதி. பல வகைகளில் தொடர்ந்து சிந்திக்க, வாசிக்க, கற்க வைத்த படம் அது.

‘பிறர்வாடப் பல செயல்கள் செய்து நரைமூடிக் கிழப்பருவமெய்தி, கொடுங்கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப்போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?’

அத்தகைய சூழலிலும் தன்னம்பிக்கையையும், கர்வத்தையும் தருகின்ற அந்தக் கவிதை வரிகளை கமல்ஹாசன் பகிர்கையில் கல்வெட்டுப் போல பதிந்தது எனக்குள். நான் நிச்சயமாக அந்த வேடிக்கை மனிதனாக இருக்கவே கூடாது, இருக்கவே மாட்டேன் என படபடத்தேன். யாருடைய கவிதை இது? யாராவது வைரமுத்தா? இல்லை கமல்ஹாசன்தானா? பாரதியைப் பள்ளிப் பாடமாக மட்டுமே விட்டுவிட்டு வந்த என்னைப் பார்த்து சிரித்தார் கமல்ஹாசன். ஓடிப்போனேன் என் தாத்தனிடம்! இப்போது பாரதி பள்ளிப் பாடமில்லை. காதலானேன். பின்னாளில் என் பிள்ளைக்கு பாரதி என பெயர் தந்த போது, அதற்கு பாரதி மட்டுமே காரணமில்லைதானே? பாரதி பெருமலையெனில், பாரதிதாசன் ஓர் ஊழிக்காற்று.

அதற்கும் முன்னதாக 1986ல் விக்ரம் எனும் படம் வெளிவந்தது. அப்போது நான் விகடனில் படம் பார்த்துக்கொண்டிருந்த ஏழாம் வகுப்புச் சிறுவன். அந்தப் படம் ஸ்பை, கம்ப்யூட்டர், கோடிங், ராக்கெட் எனும் புதுவகையான கதையை, அந்த வயதை ஈர்க்கக்கூடிய கதையைச் சொன்னதால்தான் விழுந்தடித்துக்கொண்டு ராஜேஷ்குமாரையும், சுபாவையும், தமிழ்வாணனையும் நோக்கி ஓடினேன். அதைச் செய்திருக்காவிட்டால் அதைத் தொடர்ந்த பிற வாசிப்பேது?

’சினிமாவும், எழுத்தும் இணைய வேண்டும், மலையாளம், பெங்காலியெல்லாம் உலகத்தரமான சினிமாக்களை உருவாக்கக் காரணம் எழுத்தாளர்கள்தாம். ஆகவேதான் சுஜாதா போன்ற பெரும் எழுத்தாளர்களோடு பணிபுரிய ஆசைகொள்கிறேன்’ என்றெல்லாம் ஏதேதோ காதில் விழுந்தது. சினிமாவை விட எழுத்து என்ன அவ்வளவு பெரிய விஷயமா என்றுதான் ஆச்சரியமாக இருந்தது. அந்த வயதில், நம் சினிமா சமூகத்தில் அது நியாயமான ஆச்சரியம்தானே! விகடன், குங்குமத்தில் சுஜாதாவை படிக்கும் போது, ‘தெரியுமா? இது சுஜாதாவாக்கும்!’ என்று எனக்கு நானே பெருமைப் பட்டுக்கொள்வேன். சட்டென ஜெயமோகனிடமும், சாருநிவேதிதாவிடமும் வந்துவிட இயலாதுதானே! அதன் முந்தைய படிகளை செவ்வனே கடந்து வந்திருக்க வேண்டும். பயிற்சி வேண்டும். வாசிக்கும் வழக்கம் வேண்டும். ரசனை வேண்டும். ரசனையை கமல்ஹாசன்தான் தந்தார் எனக்கு.

“அப்போதெல்லாம் தனியே போட்டோஷூட் கிடையாது. விளம்பரம் உட்பட்ட பல விஷயங்களுக்கும் தேவைப்படும் புகைப்படங்களை ஷூட்டிங்கின்போதே நாங்கள் கவனமாக எடுத்துக்கொள்ள வேண்டும்..” என்று துவங்கிய ஒரு பிரபல சினிமா புகைப்பட நிபுணரின் பேட்டி ஒன்று விகடனில் வெளியாகியிருந்தது. அதில், அந்த புகைப்படக்காரர் ஒன்று சொல்கிறார்.

“நடனமாடுகையில் கமலை போட்டோ எடுக்க முயன்றுகொண்டிருந்தேன். கண நேரம், புகைப்படத்துக்கான எழிலை அவ்வப்போது தரும் திறமைசாலி அவர். அதைக் கண்கொத்திப்பாம்பாய் நாங்கள்தான் கவனித்து எடுத்துக்கொள்ள வேண்டும். ரசிகனின் கலைஞர் அவர். அப்படியும் இந்த அழகான படத்தில் அவரிடம் தோற்றேன்..” என்று வியந்திருந்தார். காற்றிலே துள்ளிய நிலையில் கமல்ஹாசனின் முழு தோற்றம் பதிவாகியிருக்க, அவரது வலது கை மட்டும் அந்த போட்டோவுக்கு வெளியே போயிருந்தது. அவரது துள்ளலில், உருநிலையில் அவரது கைகள் எங்கேயிருக்கும் என்று கணிக்கத்தவறியிருந்ததாக குறிப்பிட்டிருந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நிபுணர்கள் வியக்கும் கலைஞர் கமல்ஹாசன். அதில், நுணுக்கம் என்பதன் பாடம் அழகாயிருந்தது எனக்கு.

தன் பணி என நடிப்பை மட்டும் கருதாது, ஒரு சிறந்த கலைஞனாக, டெக்னீஷியனாக இருக்கிறார். ஒரு கலைஞன், அவன் தொழில் சார்ந்த டெக்னீஷியனாகவும் இருப்பது ஒரு சுகம், ஒரு அனுபவம். அதனால்தான் இன்றைய எனது பொறியியல்துறைப் பணியிலும் ஒரு டெக்னீஷியனாக என்னை தொடர்ந்து ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறேன். அது ஒரு நற்போதை!

அபூர்வ சகோதரர்கள் 1989ல் வெளியானது. கமல்ஹாசனின் மசாலாப் படங்களில் கூட ஊடே கிடக்கும் கலைத்துண்டுகளைத் தனியே அள்ளிச் சேகரிக்கலாம். அதில், சில விநாடிகளே வந்தாலும், ஜனகராஜைப் பார்த்து கண்ணடிக்கும் ஓர் அனிமேஷன் துண்டு என்னை வியப்பிலாழ்த்தியதில் வியப்பேதுமில்லை. இப்படியான முதல் முறைகள் கமல்ஹாசன் படங்கள் அனைத்திலுமே காணக்கிடைப்பவைதானே! உலகெங்கிலுமிருந்து கதைகளைத் தழுவியவர் என அவரைத் தேடித்தேடி நாம் குறை சொல்கையிலேயே, அந்த அறிவுக்கும், விசாலத்துக்குமான விதை அவர் போட்டது என்பதை மறந்துபோகிறோம். கதைகளின் தழுவல் அவரது போதாமையாக இருக்கலாம். ஆனால், ஒரு நல்ல டெக்னீஷியனாக தமிழ் சினிமாவுக்கு, மேலை நாடுகளிலிருந்து, திரவியங்கள் கொண்டு வந்து சேர்த்தவர் அவர். ஒரு டெக்னிக்கை வேறு யாராவது செய்யட்டும், பொறுத்திருந்து அதன் வெற்றியை நாம் பயன்படுத்திக்கொள்வோம் என்றெண்ணாது, களத்தில் முன்னோடியாய் செல்பவர். பணமே பிரதானமான சினிமா எனும் படுகளத்தில் முன்வரிசை வீரனாக களம்புகுவதை என்னென்பது? அதுதான் ரசனை. நம்மாலும் ஆகும் என சக கலைஞர்களுக்கு நம்பிக்கையூட்டியவர்.

2001ல் ஆளவந்தான் வந்தபோது எனக்கு 26 வயது. அப்போதுதான் பல ஆங்கிலப்படங்களையும் அறிமுகம் செய்துகொண்டு பார்க்கத்துவங்கியிருந்தேன். அந்தப்படம் பல சிறப்புகளை உள்ளடக்கியிருந்தாலும், குறிப்பாக நந்து பாத்திரம் வடிவமைக்கப்பட்ட விதம் கண்டு நீண்ட சிந்தனைக்குள்ளிருந்தேன். பிரமிப்பூட்டும் நந்துவின் கவிதைகள் தந்த த்ரில் இன்னும் நினைவிலுள்ளது. இன்னொரு விஷயமும் என்னை உறுத்திக்கொண்டிருந்தது. ‘கவனிச்சியா? உம்.?’ என என்னையே கேட்டுக்கொண்டிருந்தேன் பல தடவை. அதுநாள் வரை இரண்டு வேடங்கள் புனையப்பட்ட படங்களிலிருந்து அது முற்றிலும் வேறாக இருந்ததை யாரும் சொல்லாமலேயே கண்டுகொண்டேன். ஆனால், பிற்பாடுதான் அந்த நுட்பத்தின் பெயரை அறிந்துகொண்டேன். 

அது நாள் வரை இரண்டு கமல்ஹாசன்கள் வரும் காட்சிகளில் அசையாமல் நின்றுகொண்டிருந்த காமிரா, முதல் முறையாக, ‘மோஷன் கண்ட்ரோல்’ கணினி நுட்பத்தைப் பயன்படுத்தி இரண்டு கமல்ஹாசன்களைச் சுற்றி வந்தும், அவர்களோடு ஓடிப்பிடிக்கவும் செய்தது. சிறைக்கம்பிகளுக்கு இருபுறமும் இருவரும் அமர்ந்திருக்க, கைகள் கட்டப்பட்ட நிலையில், நந்து சிமெண்ட் காரையைப் பற்களால் கடித்து, விஜயை நோக்கித் துப்பிக் காயப்படுத்தும் காட்சி இன்னும் மனதில் நிற்கிறது. முன்னதாகவே ஜுராசிக் பார்க் படம் ஏற்படுத்திய தாக்கத்தில், கணினி வரைகலை பற்றி ஆர்வம் கொண்டு நிறைய வாசித்து வைத்திருந்தபடியால் பறக்கும் அந்தக் காரைத்துண்டும், விஜயின் நெற்றியில் ஏற்படும் ரத்தக்கீற்றும் CGI என கணிக்க முடிந்தாலும் விஜயின் பின்புறத்திலிருந்து, நந்துவின் தோளுக்குப் பின்பாக ஓடிவரும் காமிரா தந்த வியப்பு என்றைக்கும் மறக்காது.

குருதிப்புனல் எனும் பெயரைக்கேட்டதும்தான் இந்திரா பார்த்தசாரதியை அறிமுகம் செய்துகொள்ள நூலகத்துக்கு ஓடினேன். அப்போது எனக்கு 21 வயது இருக்கும். நூலக அலமாரிகளைத் துழாவி அந்தப் புத்தகத்தை எடுத்தது கூட நினைவிலுண்டு. அந்தக் கதைக்கும், படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனினும் வாசிப்பைத் தேடி ஓடவைத்தது கமல்ஹாசன்தான். அந்த வயதில் குருதிப்புனலின் கிளைமாக்ஸை ஏற்க முடியாமல் ஒரு நடிகனின் ரசிகனாக என் மனம் வாடியது. ஆனால் அப்போதே நான் நடிகனின் ரசிகனாக அல்லாது சினிமாவின் ரசிகனாக மாற தயாரிக்கப்பட்டிருக்கிறேன் என்பதுதான் உண்மை.

எனது ஓவியக் கண்களை முதலும், கடைசியுமாக ஏமாற்றியது யார் என்றால் அது அவ்வை சண்முகி மட்டும்தான். விகடனின் அட்டைப்படத்தில் குறுக்காக (முன் பின் அட்டைகள் சேர்த்து) முழு தோற்றத்தில் இடம்பெற்றிருந்தது சண்முகியின் படம். யார் இந்தப் பெண்மணி? அதுவும் இப்படி அதிகமாய் மேக்கப் போட்டுகொண்டு? இவருக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம், இந்த விகடனுக்கு வேறு வேலை இல்லையா? என்றுதான் முதல் பார்வையில் நினைத்தேன். பின்பு அது கமல் என்று தெரியவந்தபோது புதியவற்றை முயற்சிக்கும் அவர் மீது பிரியம் வராமல் எப்படி இருக்கும்?

காந்தியார் என்பவர் இன்னொரு பள்ளிப்பாடம். வரலாறு சற்றே சோம்பல் தரும் விஷயமாகயிருந்தது. ஒரே நாளில்தானே விடுதலை கிடைத்தது, அதற்கும் முன்பாக ஒரே நாடாகத்தானே கூடியிருந்தோம்? ஏனிந்த தொடரும் பிரிவினைக் காட்சிகள், சண்டைகள் என சலிப்போடு பாகிஸ்தானைக் கவனித்ததோடு சரி, அதன் பின்னணியை தெரிந்துகொள்ள யாருக்கு நேரம்? அது யார் கதையோ? நமக்கென்ன?
அது நம் கதை. உனது, எனது கதை என்று எனக்குச் சொன்னவர் எந்த எழுத்தாளரும் இல்லை, கமல்ஹாசன்தான். வரலாற்றைத் தெரிந்துகொள்ளாதிருப்பதும் குற்றமே. ”வரலாற்றின் துயரங்களை மறந்தால், அதிலிருந்து பாடங்களை கற்க, ஏற்க மறுத்தால், அதை அனுபவித்து மீண்டும் அறிந்துகொள்ள அது மீண்டும் நிகழும்” என்றொரு எச்சரிக்கைச் சொல்லாடல் இருக்கிறது. ஹேராம்தான் என்னை ‘சத்திய சோதனை’யை வாசிக்கச் செய்தது என்றால் நம்புவீர்களா? காந்தியாரை, மகாத்மாவாகப் போற்றி ஒதுக்கி வைத்திடாதீர்கள் என கமல்ஹாசன் சொல்லும் போது முதலில் சற்றே அதிர்ந்து, பின்பு அவரும் நம்மில் ஒருவர்தான், அவரைப்போல நம்மாலும் சத்தியஜோதியாக ஒளிரமுடியும், அதுவே நாம் அவருக்குச் செய்யும் மரியாதை என்ற தொடர்ச்சியைக் கண்டுகொண்டு ஏற்றேன்.

ஹேராம் படத்தின் காட்சியழகு அதற்கு முன்போ, அதன் பின்போ தமிழில் இன்று வரை பார்த்திராத ஒன்று. அப்படி ஓர் ஓவியமாக அந்தப் படம் திகழ்ந்தது. அதிலும் எத்தனை முதல்கள் இருந்தனவோ தெரியாது, அதன் கலையும், பின்னணி இசையும் அதற்கு முன்பு பார்த்தோ, கேட்டோ அறியாதது. அந்நாளைய ஆனந்த விகடனை கமல்ஹாசன் மாடியறையில் படித்துக்கொண்டிருக்கும் போது, வீதியில் சென்ற பஜனைக்குழுவின் பாடலோசை சத்யம் திரையரங்குக்கு வெளியே கேட்டது இன்னும் நினைவிலிருக்கிறது.

சுய எள்ளலும், நகைச்சுவையுணர்வுமே நம்மை முழுமையாக்குகிறது. தலையாயது அது. கமல்ஹாசன் அதிலும் தேர்ந்தவர் என்பதில் தனிப்பட்ட மகிழ்ச்சி எனக்குண்டு.

“கேள்வி கேக்குறது சுலபம் மாமா. பதில் சொல்லிப்பாத்தாதான் தெரியும்..” என நாகேஷிடம் சிக்கிக்கொண்டு அல்லாடும் பஞ்சதந்திரம் ராமும், அவனது நண்பர்களும் என்றும் எனது ஃபேவரிட். மும்பை எக்ஸ்ப்ரஸெல்லாம் அவரது கவனிக்கப்படாத சாதனைகள் என்பேன். 
“பழிக்குப் பழி, புளிக்குப் புளி” என்று ஆவேசத்தோடும், பதற்றத்தோடும் கிளம்பும் காமேஸ்வரனை யார்தான் மறந்திருக்கமுடியும்?

”அழகுள்ள மலர்கொண்டு வந்தே-என்னை
அழஅழச் செய்துபின் கண்ணை மூடிக்கொள்;
குழலிலே சூட்டுவேன் என்பான்-என்னைக்
குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான்..” என்கிறார் பாரதி.

பாரதிக்கு எப்படியோ.. கண்ணன் பாத்திரம் எமக்குக் கடவுளைக் குறிப்பதல்ல. காதலாம் உணர்வுகளை, அன்பை கற்பனை செய்தே மகிழ பொருத்தமாய் உருக்கொண்ட ஒரு கதாநாயகன் கண்ணன். அவன் காதலி மீரா.

”பின்னிருந்து வந்து எனை பம்பரமாய் சுழற்றி விட்டு உலகுண்ட பெருவாயன் எந்தன் வாயோடு வாய் பதித்தான்.. இங்கு பூலோகம் என்றொரு பொருளுள்ளதை இந்தப் பூங்கோதை மறந்தாளடி..” என்கிறார் கமல்.

கவிஞன்தான் இல்லையா? என் வாயோடு வாய் பதிக்கத்தகுந்தவன் எவன் என ஒரு பூங்கோதை சிந்தித்தால் எப்படி இருக்கும்? என் காதலன் லேசுப்பட்ட ஆளில்லையம்மா.. இந்த உலகையே உண்ட பெருவாய் கொண்டவன், அவன்தான் என் வாயில் முத்தமிடத் தகுந்தவன். என்பதுதான் எத்தனைப் பேறு. அதைச் சொல்லிக்கொள்வதில்தான் எத்தனைக் கர்வம் அந்தக் காதலிக்கு?

“நீ பார்த்த பார்வைக்கும், நமைச் சேர்த்த இரவுக்கும் நன்றி. அயராத இளமையும், அகலாத நினைவும் சொல்லும் நன்றி” என்கிறார் கமல். நான் கவிஞனில்லைதான். ஆனால் காதலிப்பவன்தானே, உணர்வுகள் ஒன்றுதானே! காதலிகள் தரும் உணர்வைத்தான் என்னென்பது? எத்தனை வீச்சைத்தான் அந்த வயதில் நமக்குள் ஏற்படுத்திவிடுகிறார்கள். இந்த ஆளும் என்னைப்போலவே காதலிக்கிறான்யா.. என்பதான உணர்வு அவர்மேல் அன்பைப் பெருக்காது என்ன செய்யும்?

பெரியாரைப் பிழையாமை என்றொரு குறளதிகாரம் உண்டு. எனக்கு மிகப்பிடித்தது. ஆற்றல் மிக்கோரை, மூத்தோரை, ஆசிரியரை மதித்து நடத்தல் குறித்தது அது. ஆசிரியர் எனில் அது பள்ளி ஆசிரியர் மட்டுமன்று, மிகச்சிறியதாயினும் ஒரு கருத்தை, ஒரு பொருளை நமக்குப் புரியவைத்த, ஒரு சிறு நுணுக்கத்தை கற்பித்த எவராயினும் அது பொருந்தும். பள்ளி, வாசிப்பு, டெக்னிகல் பணி, வாழ்வு என அனைத்திலும் நான் பார்த்துக் கற்ற, வியந்த மனிதர்களுக்கென்று ஒரு தனியிடம் என் மனதில் எப்போதும் உண்டு.

நேரில் பார்த்து எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டாலும், இன்றும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையாவது எனக்கேற்படும் டெக்னிகல் சந்தேகங்களை கேட்டுத்தெளிய டெல்லியில் இருக்கும் நண்பனை நினைத்துப்பார்க்கிறேன்.

நேற்று, தமக்கு திருநெல்வேலி வட்டார வழக்கைக் கற்பித்த சுகாவாகட்டும், என்றோ குழந்தையாக தம்மை ஏற்றுக்கொண்ட அவ்வை டி.கே.சண்முகமாகட்டும் அவர் குருவாக ஏற்றுக்கொண்ட நூற்றுக்கணக்கான நபர்களைப் பற்றிப் பேச்சு வரும்போதெல்லாம், முகம் மலர, அகம் மலர, “எனக்குக் கிடைச்ச குருமாரெல்லாம் அப்படியாப்பட்டவங்களாக்கும். அவர்களெல்லாம் சொல்லிக்கொடுத்தும் நான் இதைச் செய்யலைன்னாதான் ஆச்சரியம்..” என ஒரு குழந்தையைப் போல அவர் காட்டும் உற்சாகம் அழகானது. அந்த மரியாதை போற்றுதலுக்குரியது. ”சம்முகம் அண்ணாச்சி.. வின்செண்ட் மாஸ்டர்..” என்று வாய்நிறையத் துவங்கும் அவர் குரலிலேயே பணிவும், குழந்தைத்தனமான துள்ளலும் இருக்கும். விஸ்வரூபம் பட உருவாக்கக் காணொளி ஒன்றைக் காண நேர்ந்த போது, ’எப்போதோ எனில் பரவாயில்லை, இந்த 60 வயதைத்தாண்டிய வயதிலும், சாதனைகளை நிகழ்த்தி உயரத்தில் இருக்கும் போதும் இந்த மனிதனால் இது முடிகிறதா’ என வியக்க வைத்தார். ‘உன்னைக் காணாது..’ பாடலுக்கு நடனமைத்த அந்த நடனப் பண்டிதர், பிஜு மகராஜ் முதுமையால் நீண்ட நேரம் நிற்க இயலாது, ஒரு சோபாவில் அமர்ந்தபடி பாவனையை விளக்கிக்கொண்டிருக்க, தரையில் அமர்ந்தபடி, ஒரு காலை மடித்து ஒரு சிறுவனைப்போல ஆர்வத்துடன் பிஜுவின் முகத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார். கற்றலில் இதுவல்லவா அழகு என உவந்தேன். அந்தப் பாடலை திரையில் காண்கையில் என் கண்கள் தளும்பின. கதைச்சூழலில் வரும் உணர்வுப்பூர்வமான காட்சியோ, பாடலோ அதுவல்ல எனினும் ஏன் இந்த தளும்பல்? அதற்குப் பெயர்தான் நிறைவு.

நடிப்பு, ஆடல், இயக்கம், இசை, ஒப்பனை, எழுத்து, வாசிப்பு, கவிதை, கொள்கை என அனைத்துக்கும் அவருக்குக் கிடைத்த குருக்கள், நண்பர்கள் எல்லாம் லேசுப்பட்டவர்கள் இல்லை என்பது இன்னும் கூடுதல் சேதி.

சுய சிந்தனையும், சுய மரியாதையையும் கற்றுத்தந்த பெரியோரையும், அவர்தம் கொள்கைகளையும் காற்றிலே பறக்கவிட்டோம். அவர்தம் சீடர்தாமும் சூழலுக்காய் தம்மை மாற்றிக்கொண்டுவிட்டனர். கடவுளை மறுக்க, திரி தீர்ந்து மங்கிவிட்ட அறிவொளிச் சுடரை தூண்டிட கரங்கள் இல்லை. பேயாளும் அரசில், பிணம் தின்பது சாத்திரமாகிவிட்டது. தீச்சட்டி சுமந்து மொட்டையடித்து வேண்டுதல் நிறைவேற்றும் அமைச்சர்கள்தாம் நம் தலைவர்கள். மக்களரசின் நான்காம் தூண் ஊடகங்கள் என்ன செய்கின்றன என்றே புரியவில்லை. தலைக்கொரு கவர்ச்சிப்புத்தகத்தையும் போதாமைக்கு, தலைக்கொரு பக்திமலரையும் வெளியிடுகின்றன. பக்கங்களெங்கும் நட்சத்திரபலன்கள் எனும் புளுகுமூட்டைகள்தான். சென்ற நூற்றாண்டின் மத்தியில் ஏற்பட்ட மகத்தான அறிவொளிப் பரவலுக்கு இதே ஊடகங்கள்தான் பெரும்பங்காற்றின என்பது இங்கே ஒரு நகைமுரண். காட்சி ஊடகங்களை விளம்பரப் பைத்தியம் பிடித்தாட்டுகிறது. எழுத்தாளர்களிலும் சத்தமாய் அறிவொளி பேசுவோர் இல்லை, நமக்கேன் வம்பு என்று. மீறிப்பேசுபவர்களின் முன்னால் இருக்கும் ஒலிபெருக்கி அணைக்கப்படுகிறது. யார்தான் ஐயா அதை உடைத்து வெளிவருவீர்கள்? யார்தான் ஐயா உரத்துப் பேசுவீர்கள்? யாரைத்தான் ஐயா நாங்கள் எதிர்பார்ப்பது? ஓரிருவராவது உள்ளீர்களா இல்லையா? சினிமாக்காரன் சொன்னாலாவது நாங்கள் உடனே காதுகொடுப்போம், ஆனால் அங்கும் ஆளில்லை.

இந்த விஷயத்திலும் ஊர் ஒதுக்கிவைத்த பிள்ளையாக, கருப்புச் சட்டை அணிந்த ஒற்றையாளாக கமல்ஹாசன் மட்டும்தான் இருக்கிறார். கஞ்சிக்கு வழியில்லாத ஊரில் பீட்சா கடை எதற்கு? நடிப்பெல்லாம் வேறு ஆள் பார்த்துக்கொள்ளட்டும். கொஞ்சம் கருப்புச்சிந்தனையை பரப்பும் தொழிலுக்கு வரமாட்டாரா இந்த ஆள்? என்று சில சமயம் எண்ணுவதுண்டு. அதுசரி, அவருக்குத் தெரிந்த தொழில் சினிமா, அதையாவது ஒழுங்காகச் செய்யட்டும். நமக்கு ஆளில்லை என்பதற்காக ஒருத்தரையே எவ்வளவுதான், எதற்குத்தான் எதிர்பார்ப்பது என்றில்லாமல் போய்விட்டது.

ஆணும், பெண்ணும் கூடி வாழ்வதுதான் எத்தனை அழகு, ரசனை மிக்க ஒன்று. ஆனால், பொருள் பிரதானமாகிப் போன வாழ்வினால் கல்யாணமெனும் ஒரு தளை கூடிப்போய்விட, அதனால் எத்தனை சிக்கலாக்கிவிட்டது இந்த வாழ்க்கை! சமயங்களில் அர்த்தமற்றதாகவும்!
அன்புதானே, நம்பிக்கைதானே நம்மைப் பிணைக்கவேண்டும்? ஒரு தாலியும், பத்திரப்பதிவுமா தீர்மானிக்க வேண்டும் நமது அன்பினை? இப்படியான கேள்விகளை உள்ளுக்குள்தான் வைத்துக்கொள்ள முடிகிறது இந்த இறுகிப்போய்விட்ட சூழலில்! அத்தனை உயரத்திலிருந்தும் குடும்பத்துக்காக, சூழலுக்காக என நிர்ப்பந்தங்களை உடைக்க இயலாமல் போய், அவர் செய்துகொண்ட திருமணங்கள் இறுதியில் உடைந்துதானே போயின? எல்லாவற்றையும் உதறி எழுந்து, மீண்டும் தன் முனைப்பில் கூடி வாழும் பேறு அவருக்கு அமைந்தது இன்னும் அழகு. சூழல், அவர் வாழ்வில் ஏற்றிவைத்த இன்னொரு திரு அது. இதிலிருந்து கற்கட்டும் இனிவரும் இளைய தலைமுறை அன்பால் கூடி வாழ்தலின் அருமையை, அழகை, ரசனையை!

நானெல்லாம் குணா காலத்துக்குப் பிறகுதான், அவ்வப்போது கலைசார் படங்களில் கமல்ஹாசன் நடிக்கத்தலைப்பட்டார் என வெகு நாட்களாக நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், துவக்கத்திலிருந்தே தனக்குள்ளிருக்கும் ரசிகனுக்காகவும் படம் பண்ணிக்கொண்டிருந்திருக்கிறார் என்பதைப் பிறகுதான் அறிந்துகொண்டேன். 1977ல் நிற்க நேரமில்லாமல் கலர்ஃபுல்லாக பறந்துகொண்டிருந்தபோதே தப்புத்தாளங்களையும், வயநாடன் தம்பானையும் அவரால் பண்ணமுடிந்திருக்கிறது. அவர் கதாசிரியராக பணியாற்றிய படங்களில் பலவும் தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களாகும். தேவர்மகன், ஹேராம், அன்பேசிவம், விருமாண்டி போன்றன மிகவும் குறிப்பிடத்தகுந்தவை.

கமல்ஹாசனை முந்திக்கொண்டு இன்றைய புதியதலைமுறை முன்செல்கிறது, அவர் ஏன் இன்னும் அப்படியே இருக்கிறார் என்பதாக ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. அது உண்மையில் குற்றச்சாட்டு அல்ல, பாராட்டு. அவரே விரும்புவதும் அதைத்தான். என் திறன்மிக்க முன்னோர் போட்டுத்தந்த சாலையில் செல்லும் என் பயணம் அவர்களையும் விஞ்சியதாகத்தான் இருக்கும், இருக்க வேண்டும். போலவே, புதிய தலைமுறை என்னையும் தாண்டித்தான்செல்வர், செல்ல வேண்டும் அதுவே உண்மையான வளர்ச்சி என்ற புரிதல் கொண்டவர் அவர். ஆகவே, இத்தனை மிக நீண்டகாலம் ஒரு முன்னேராக ஓடிக்கொண்டிருந்த சாதனை அவருடையது. அதை விஞ்சும் புதிய தலைமுறை மகிழ்வுக்கும், வரவேற்புக்கும் உரியது. அதோடு சலித்து ஓய்ந்திடாது, அவர்களோடும் முடிந்தவரை போட்டிக்களத்தில் நிற்பதால் கமல் இன்னும் மேம்பட்டுதான் நிற்கிறார் நம் மனதில்!

புதிய தலைமுறையுடன் இணைந்து பயணிக்க, குறிப்பாக புதிய இயக்குநர்களிடம் தம்மை ஒப்படைத்து இன்னும் தரமான படங்கள் தர கமல் முன்வரவேண்டும் என்பதாக ஒரு கருத்து உண்டு. இந்தக் கருத்தை சுமார் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் எழுத்தாளர் சாருநிவேதிதா ஒரு கட்டுரையில் குறிப்பிடுகையில், கமல் தன் ஈகோவை விட்டுத்தந்து அமீர், சசிகுமார் போன்றோருடன் இணைந்து பணியாற்ற வரவேண்டும் என்கிறார். அதில் நமக்கு மாற்றுக்கருத்து இல்லையாயினும், ஐந்தே ஆண்டுகளில் அமீரும், சசிகுமாரும் எங்கு போனார்கள் என்றுதான் நமக்குத் தெரியவில்லை.

நம் சூழலில் உணர்வுப்பூர்வமாக சிந்திக்க, மகிழ, நெகிழ, கலங்க வைக்க எழுத்துகளால்தான் மட்டும்தான் முடியும். கி.ராவும், நாஞ்சில்நாடனும், ச.தமிழ்ச்செல்வனும் அந்த எழுத்துகளைத் தருகையில், அவர்களைச் சென்றடையும் பாதையை எனக்கு அறிமுகம் செய்து வைத்தது இந்த சினிமாக்காரர்தான் என்பதை சொல்லிக்கொள்வதில் எனக்கேதும் தயக்கமில்லை. மேலும் அதே உணர்வுகளைத் தர தன் சினிமாவாலும் முடியும் என முயற்சித்துக் கொண்டிருப்பவரும் இந்த சினிமாக்காரர்தான். எழுத்துக்கான வாசகன் பூனையளவிலும், சினிமாவுக்கான பார்வையாளன் ஆனையளவிலும் இருக்கும் நம் சூழலில், இம்முயற்சியால் ஒரு எழுத்தாளரை விடவும் என் முன்னே இந்த சினிமாக்காரர், ஒரு படி மேலாகத்தான் நிற்கிறார்.

சகலகலாவல்லவனையும், காக்கிச்சட்டையையுமே அவர் பண்ணிக்கொண்டிருந்திருந்தால் இந்நேரம் கரையொதுங்கிப் போயிருப்பார். அஃதொன்றும் தவறில்லை, அது ஒரு தனிமனிதனின் விருப்பம். ஆனால், நான் எப்படி இருந்திருப்பேன் என்றுதான் தெரியவில்லை. வேலராமமூர்த்தியையும், வண்ணதாசனையும் யாரென்று எனக்குத் தெரிந்திருக்காது. அஜித், விஜய் படங்களுக்கு முதல் ஆளாய்ப் போய் விசிலடித்துக் கொண்டிருந்திருப்பேன். என் மனைவியை வேலைக்குப் போகச்சொல்லியோ, போகக்கூடாதென்று சொல்லியோ கட்டாயப்படுத்திக் கொண்டிருந்திருப்பேன். கூசாமல் லஞ்சம் தருபவனாக இருந்திருப்பேன், பதிலாக, எனக்கு ஏதும் லஞ்சம் கிடைக்க வழியுண்டா என ஆராய்ந்து கொண்டிருந்திருப்பேன். இந்த இஸ்லாமியர்கள் ஏன் எங்கு பார்த்தாலும் குண்டு வைத்துக்கொண்டிருக்கிறார்கள், பேசாமல் அவர்களுக்கென ஒதுக்கித் தந்த நாட்டுக்குப் போய்விடவேண்டியதுதானே என சீரியஸாக சிந்திப்பதோடு மட்டுமல்லாமல், அதை ஃபேஸ்புக்கில் போட்டு லைக்ஸ் வாங்கியிருப்பேன். உச்சமாக, அருகில் மனைவியோ, ஒரு நண்பனோ டிவிடியில் ’லைஃப் இஸ் ப்யூட்டிஃபுல்’ படத்தையோ, ;சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’ படத்தையோ பார்த்துக்கொண்டிருக்கும்போது கொட்டாவி விடும் மாபாவத்தைச் செய்துகொண்டிருந்திருப்பேன். பாரதி சொன்ன வேடிக்கை மனிதனின் இலக்கணங்கள் என்னில் நிறைந்திருக்கும்..

ஆக, எனக்கு, கமல்ஹாசன் எனும் இந்த நிகழ்வு ஓர் அற்புதம்தான். இல்லையெனில் இந்த வார்த்தைக்கு எனக்கு அர்த்தம் தெரியவில்லை என்றாகிறது.

*  

Saturday, October 24, 2015

ஃபேஸ்புக் குறிப்புகள்

ஊரோடு ஒத்துவாழ மெல்ல மெல்ல கூகுள் பிளஸிலிருந்து, இருப்பிடத்தை ஃபேஸ்புக்குக்கு மாற்றிக்கொண்டாயிற்று. சமீபத்தில் ஃபேஸ்புக்கில் எழுதப்பட்ட குறிப்புகளின் தொகுப்பு இங்கே! இவற்றையெல்லாம் அவ்வப்போது அறிந்தே ஆகவேண்டுமென்று எண்ணுவோர் தொடர்க: www.facebook.com/thaamiraa


*************

சமீபத்தில் ஒரு தமிழ் செய்திச் சேனலில்:

//
நிலைய அறிவிப்பாளர்: சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது. இன்னும் சற்று நேரத்தில் வாக்குப்பதிவு துவங்க இருக்கிறது. நம்மிடையே களச் செய்தியாளர் முருகேசு இருக்கிறார். அவரிடமே கேட்போம். முருகேசு.. முருகேசு.. அங்க என்ன நிலவரம்.?

களச்செய்தியாளர்(வேகமாக வாசிக்கவும்): ஆமா. வணக்கம், வணக்கம். இங்கே எல்லா விசயங்களும் பரபரப்பாக‌பரபரப்பாக நடந்து... இன்னுஇன்னும் சற்று நேரத்தில் வாக்குப்பதிவு துவங்கதுவங்க‌. நடிகர்கள் வந்துவந்துகொண்டிருக்கிறது. வாக்குப்பதிவுபதிவு சற்றுநேரத்தில் இன்னும் துவங்க இருக்கிறது. நடிகர்கள் கார்களில் நடந்து உள்ளே வந்துவந்துகொண்டிருக்கின்றனர்.

நி.அ: வேறு ஏதேனும் செய்திகள் உண்டா?

க.செ: நடிகர்கள் நடந்துநடந்து உள்ளே வந்துகொண்டிருக்கின்றனர். அவர்கள் உள்ளே போய் போய்வாக்களிப்பார்கள். இன்னும் சற்று நேரத்தில்நேரத்தில் வாக்குப்பதிவுபதிவு துவங்கப்போகிறது. எல்லோரும் உள்ளேஉள்ளே போய் வாக்களிப்பார்கள். இப்போது ரஜினி நடந்து வருகிறார். ராமராஜன் நடந்துவருகிறார். சுரேஷ் நடந்துவருகிறார். நடிகர்கள் உள்ளே வந்துகொண்டு. அவர்கள் உள்ளே போய் போய்வாக்களிப்பார்கள். மாலை 5 மணிவரை தேர்தல் நடக்கும்.

நி.அ: அங்கே நிலவரம் எப்படி இருக்கிறது?

க.செ: நிலவரம் இருக்கிறது. பரபரப்பாக‌பரபரப்பாக நடந்து... இன்னுஇன்னும் சற்று நேரத்தில் வாக்குப்பதிவு துவங்கதுவங்குகிறது. நடிகர்கள் கார்களில் நடந்து கொண்டிருக்கின்றனர். நடிகர்கள் வந்துவந்துகொண்டிருக்கிறது. வாக்குப்பதிவுபதிவு சற்றுசற்றுநேரத்தில் இன்னும் துவங்க இருக்கிறது.

நி.அ: வேறு ஏதேனும் செய்திகள் உண்டா?

க.செ: இன்று காலைகாலை 10 மணிக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தல்தேர்தல் நடந்துகொண்டிருகிறது. அந்த அணியும், இந்த அணியும் மோதுகிறார்கள். நடிகர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். மாலை ஐந்து மணி வரைநடக்கும்.

நி.அ: வேறு ஏதேனும் செய்திகள் உண்டா? எப்போது முடிவுகள் தெரியவரும்?

க.செ: முடிவுகள்முடிவுகள் தேர்தல் முடிந்தவுடன் தெரிதெரியவரும். இங்கு 10 மணிக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தல்தேர்தல் நடந்துகொண்டிருகிறது. இங்கே எல்லா விசயங்களும் பரபரப்பாக‌பரபரப்பாக நடந்து... இன்னும் சற்று நேரத்தில் வாக்குப்பதிவு துவங்கதுவங்க‌. நடிகர்கள் வந்துவந்துகொண்டிருக்கிறது. வாக்குப்பதிவுபதிவு சற்றுநேரத்தில் இன்னும் துவங்க இருக்கிறது. நடிகர்கள் நடந்து உள்ளே வந்துவந்துகொண்டிருக்கின்றனர்.
//

இந்த உரையாடல் இன்னும் 5 நிமிடங்களுக்கு இப்படியேதான் போய்க்கொண்டிருந்தது. அந்த களச்செய்தியாளர் சொல்லவந்தது மொத்தத்தில் நான்கே வாக்கியங்கள்தான்.

“தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் இன்று காலை 10 மணிக்குத் துவங்க இருக்கிறது. நடிகர்கள் பலரும் வாக்களிக்க வந்தவண்ணம் இருக்கின்றார்கள். மாலை 5 மணி வரை தேர்தல் நடக்கும். தேர்தல் முடிந்ததும் வாக்கு எண்ணிக்கைத் துவங்கும்”

இதை ஏற்கனவே அந்த நிலைய அறிவிப்பாளர் சொல்லிவிட்டார். பிறகேன் இரண்டு பேரும் இவ்வளவு நேரம் இப்படி உளறிக்கொண்டிருக்கவேண்டும்? நிலைய அறிவிப்பாளர் ஏற்கனவே சொல்லிவிட்டதை அறியாவிட்டாலும், அந்த களச்செய்தியாளரால், அழகாக, தெளிவாக, கச்சிதமாக ஏன் இந்த நான்கு வரிகளைச் சொல்ல இயலவில்லை. மேலும் இந்த நிகழ்வின் முக்கியமான மொத்தச் செய்தியே அவ்வளவுதான். இனி எண்ணிக்கை முடிவுகள் தெரியவரும் மாலை நேரத்தில்தான் அடுத்த செய்தியை சேகரிக்கவும், சொல்லவும் முடியும். அதற்குள் ஏன் இத்தனைப் பாரெழவு? இந்தச் செய்தி நிறுவனங்கள், தங்களது செய்தியாளர்களுக்கு செய்தி சேகரிக்க, அதை உரைப்படுத்த பயிற்சி என்று எதையாவது கற்றுத்தருகின்றனவா? இல்லையா?

************

தலித் குழந்தைகள் கொல்லப்பட்ட வழக்கில் முன்விரோதம் காரணமாக குற்றம் நடந்ததாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த முன் விரோதம் ஆயிரம் வருடங்களாக இந்தியாவில் புரையோடி போயிருக்கிறது என்பதை சிபிஐ தாக்கல் செய்யுமா?

‍--ராஜ் அருண் (வால்பையன்) ஃபேஸ்புக்கில்.

************

நேரிலோ, போனிலோ அண்ணன் ரமேஷ் வைத்யாவுடன் பேசிக்கொண்டிருக்கும் போது சுமார் இரண்டு நிமிடங்களுக்கொரு முறை கெக்கேபிக்கேவென சத்தமாக சூழல் மறந்து சிரிக்க வேண்டிவரும்.

பார்த்து மிக நாட்களாகிறதே, இன்று பார்க்கச் செல்லலாமா எனும் எண்ணத்தில் அவரை போனில் அழைத்தேன்.

'அண்ணே இப்ப வரலாமா? ஆபீஸ் டைமாச்சே பரவால்லியா?'

'அலுவல் நேரத்துல வெளிய வந்து பேசறது பொதுவா சிரமம்தான். ஆனா மேதைகளோட பேசறதுன்னா எங்க ஆபீஸ்ல ஆட்சேபிக்க மாட்டாங்க. அதனால் நீங்க வரலாம்'

*************

இன்று விடுமுறை தினமாதலால் நானும், சுபாவும் காலையிலேயே தாயக்கட்டம் விளையாட உட்கார்ந்தோம். நான் ஒரு காயை பழம் எடுக்கும் முன்பே, அத்தனைக் காய்களையும் பழமாக்கி பூரண வெற்றியடைந்துவிட்டான்.

“தோக்குளி” ஆயிட்டேனே என நான் சோர்வைக்காண்பித்ததைப் பார்த்து,

“யப்பா.. நான் உங்கம்மாவையே எல்லா காயினையும் தோக்கடிச்சிருவேன். உங்கள தோக்கடிக்கமுடியாதா?” என வீரவசனம் வேறு பேசினான்.
பகடையை உருட்டியது மட்டும்தான் அவன். அவனுக்காக சரியான முறையில் காய்களை நேர்மையாக நகர்த்திக்கொடுத்தது நான்தான் என்பது வேறு விஷயம்.

*************

என்ன இந்த ஏர்டெல்காரனோட‌ லாஜிக்? இப்போதைக்கு அவங்கதான் 4G சேவை தர்றாங்க‌. மத்தவங்களும் ஒன் பை ஒன்னா இந்த சேவைக்கு வரத்தான் போறாங்க. இப்போதைக்கு மத்தவன் சைக்கிள் வைச்சிருக்கிறப்போ இவங்க‌ மட்டும் பைக் வாங்கினது மாதிரி சூழ்நிலை. அதற்குள் வேற யாராவது எங்களவிட ஸ்பீடா இன்டெர்நெட் கொடுத்தா லைப் டைம் டேட்டா ஃப்ரீனு என்ன விளம்பரம் இது? பைக்ல போறவன் சைக்கிள்ல போறவனை போட்டிக்கு கூப்பிடுற மாதிரி இருக்குது. முதல் முறையாக நாங்க 4G தர்றோம்னு டீஸன்டா விளம்பரம் செய்ய‌லாம்ல. மத்தவங்களும் 4G தர ஆரம்பித்ததும் இப்படி போட்டி வைக்க தயாரா இருப்பாங்களா இந்த‌ பிஸ்கோத்து பாய்ஸ்?

*************

குருவினு ஒரு விஜய் படம் பாத்துட்டுதான் சினிமா விமர்சனம்ங்கிற பேர்ல இணையத்துல எழுத வந்தேன். இப்போ புலினு ஒரு விஜய் படம் பாத்துட்டு இனி சினிமா விமர்சனமே எழுதறதில்லங்கிற முடிவு எடுத்திருக்கேன். அது சிம்புதேவன் படமாகவும் இருக்கும்னு நான் நினைக்கல. எப்படி இருந்தா என்ன? கெட்டதிலும் ஒரு நல்லதுனு நினைச்சுக்குங்களேன். ஹிஹி!

*************

Sunday, August 30, 2015

தனி ஒருவன் - விமர்சனம்


கடைசியாக தியேட்டரில் பார்த்த படம் பாபநாசம். கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள். ஆர்வத்தைத் தூண்டும் ஒரு படம் கூட இந்த இடைவெளியில் வெளியாகவில்லை. இருப்பினும் தமிழனால் தியேட்டருக்குப் போகாமல் இருக்கமுடியாது என்ற கூற்றை உண்மையாக்கும் வண்ணம் இந்த வாரம் ஏதாவது ஒரு படத்துக்கு, அது பவர்ஸ்டார் படமாக இருந்தாலும் பரவாயில்லை போய்விடவேண்டியதுதான் என்ற முடிவிலிருந்தேன். ஆனால், கிடைத்ததோ ஒரு இனிய சர்ப்ரைஸ் ஜெயம் ரவி, ராஜா, சுபா கூட்டணியிடமிருந்து. நல்ல வேளையாக தெறிமாஸ், சொறிமாஸ் என்று இறங்காமல் ஒரு க்ளீன் கமர்ஷியல் ஆக்‌ஷன் திரில்லரைத் தந்திருக்கிறார்கள். நம் சூழலில் நல்ல படங்கள் கூட வந்துவிடலாம், ஆனால் நல்ல ஆக்‌ஷன் படங்கள் வருவதுதான் கடினம். ஹீரோ காரெக்டரை ஓவர் பில்டப் செய்யாமல், அளவாகப் பயன்படுத்தினாலே நமது பல படங்கள் நன்றாக வந்துவிடும் என நினைக்கிறேன். ஆனால், விஜய், அஜித், சூர்யா, தனுஷ் இருக்கிற வரை அதெல்லாம் நடக்கிற கதையா? இப்படி எப்போவாவது நல்ல படங்கள் வந்தால் பார்த்து ஆறுதல் பட்டுக்கொள்ளவேண்டியதுதான்.


ஜெயம் ரவி, ராஜா, சுபா, அர்விந்த்சாமி எல்லோரையும் விட ‘தனி ஒருவனி’ன் ட்ரைலரே என் எதிர்பார்ப்பை சற்று தூண்டி, தியேட்டருக்குக் கொண்டுசென்ற காரணியாகியிருந்தது. கதையின் அடிநாதம், ”ஒரே வில்லன், ஒரே ஹீரோ, முடிவில் சமூகத்தில் தேனாறும், பாலாறும்!” என்பதான ’முதல்வன்’ டைப் ஃபேண்டசி கான்செப்ட் என்பதைத் தவிர வேறு எந்த குறையுமில்லாத படமாக வந்திருக்கிறது தனி ஒருவன். 

நிறைய திருப்பங்களுடன், விறுவிறுப்பாக அமைக்கப்பட்ட திரைக்கதையால் சுபா இம்முறை தனித்து மிளிர்கின்றனர். அதை மிக சின்சியராக படமாக்கிய விதத்தில் ராஜாவும் ஆச்சரியப்படுத்துகிறார். மிகப் பொருத்தமான காரெக்டரில், முற்றிலும் எதிர்பாராத ட்ரீட் அர்விந்த்சாமி. பேராண்மையை விடவும் கச்சிதமான காரெக்டரில் ஜெயம் ரவி. சும்மாவே நம் படங்களில் ஃபைட்டர்கள் பறக்கவிடப்படுவார்கள். ஆக்‌ஷன் படம் என்றால் கேட்கவே வேண்டாம். ஆனால், இப்படி ஒரு ஆக்‌ஷன் படத்திலும் அப்படியெல்லாம் இல்லாமல் அளவான சண்டைக்காட்சிகள், பாடல்களுக்கு முக்கியத்துவமில்லாமல் பார்த்துக்கொண்டது என தனி ஒருவன் தனித்து நிற்கிறது. சின்னச்சின்ன விஷயங்களைப் பார்த்துப் பார்த்து ரசித்துச்செய்திருக்கிறார்கள். இக்கட்டான சூழலில் ரவி, நயனிடம் காதலை சொல்லும்போது தியேட்டர் ஆரவாராத்தில் குதூகலிக்கிறது. தம்பி ராமையா காரெக்டர் மட்டுமே படத்தின் நகைச்சுவைப் பகுதியைப் பார்த்துக்கொண்டாலும், அது மிகப்பொருத்தமாகவே செய்யப்பட்டிருக்கிறது. இறுதிக்காட்சியில், அனைத்து வாய்ப்புகளும் அடைக்கப்பட்ட நேரத்தில், அர்விந்த்சாமி யோசிக்க ஐந்து நிமிடம் கேட்குமிடத்தில் நானே அவர் இடத்திலிருந்தால் என்ன முடிவு செய்வேன் என யோசிக்க ஆரம்பித்துவிட்டேன். அந்த அளவுக்கு படம் நம்மை உள்ளிழுத்துக்கொள்கிறது. குண்டடிபட்டு அர்விந்த், ஜெயம்ரவியின் கைகளில் சாகும் தருவாயில், வழக்கமாக அந்த ரிஜிட் காரெக்டருக்கு தனித்துவம் தருகிறேன் பேர்வழி என்று சிரித்தபடி சாகவைத்திருப்பார்கள். அப்படி இல்லாமல், வலியில் கோணலாகும் முகத்தோடு இறக்கிறார் அர்விந்த். அரிதாக ஒரு வில்லன் காரெக்டருக்கு படத்தின் துவக்கத்திலேயே பிளாஷ்பேக் அமைத்து முக்கியத்துவம் தந்திருக்கிறார்கள். அதில் 15 வயது அர்விந்த் கேரக்டர், நாளிதழில் தலைப்புச் செய்தியாக தன் வாழ்க்கையைத் துவக்குகிறது. போஸ்ட் கிளைமாக்ஸில், அதே நாளிதழை ஜெயம் ரவி கேரக்டர் அதன் 15 வயதில் பார்த்தபடி, தன் வாழ்க்கையின் லட்சியப்பாதையை அமைத்துக்கொள்கிறது என்பதாக காண்பிக்கப்படும் காட்சி ரசனை. ஜெயம் ரவி, எம்.ராஜா, சுபா ஆகிய மூவரும் இதுவரை செய்ததிலேயே டாப் என்றால் அது இந்தப்படம்தான். அர்விந்த்சாமிக்கோ இது ஒரு கம்பீரமான ரீஎண்ட்ரி! வம்சி கிருஷ்ணா ஒரு ஹீரோ மெட்டீரியல் என்பது என் கணிப்பு. இந்தப்படத்திலும் ஒரு ஹிட்மேனாகவே வந்துபோகிறார், காத்திருப்போம்.

மொத்தத்தில் தனி ஒருவன், சுவாரசியமான ஆக்‌ஷன் ட்ரீட்! டோண்ட் மிஸ் இட்!

  

Monday, July 20, 2015

பாகுபலி


எஸ்.எஸ்.ராஜமௌலி, ஒரு தேர்ந்த கமர்ஷியல் சினிமா நிபுணர். மேலும், கலைத்தன்மைமிக்க சினிமாவின் மீது சிறிதளவும் நம்பிக்கை கொண்டவராக அவர் தம்மை எப்போதும் காட்டிக்கொண்டதே இல்லை. நாமாக எதையாவது வரிந்து கொண்டோமேயானால் ஏமாற்றம் இயற்கைதான். ஆனால், கான்களின் கமர்ஷியல் இந்தி முகம்தான் இந்திய சினிமாவின் முகம் என உலகுக்குச் சொல்லப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில் உலகெங்கும் கொண்டு செல்லப்படும் ஒரு தென்னிந்திய சினிமா, வேறொரு பெருமைக்குரிய அடையாளத்தை நமக்குத் தந்துவிடாதா என என்னைப்போல ஒரு சாமானிய ரசிகன் எதிர்பார்ப்பதிலும் தவறு இருக்க முடியாதுதான் இல்லையா? ஆனால், அது அத்தனை எளிதானதல்ல என்பதையும் நாம் உணர்ந்தே இருக்கிறோம். இந்த விஷயத்தில் பாகுபலி நம்மை ஏமாற்றியிருக்கிறது என்பதுதான் உண்மை.


ஒரு உலகளாவிய மேக்கிங் தரத்திற்கு அருகே, பாகுபலியை தெலுங்கு சினிமா உருவாக்கியது ஆச்சரியமான ஒரு கோணம். ஆனால், பாகுபலி உள்ளடக்கத்தில் தெலுங்கு சினிமாவாகவே மட்டும் நின்று போனது பரிதாபமான இன்னொரு கோணம்.

கதையிலும், திரைக்கதையிலும் எந்தப் புதுமையும் இல்லை. ஒரு பள்ளத்தாக்கில் ஷிபு எனும் சிறுவன் வளர்ப்புப் பெற்றோரால் வளர்க்கப்படுகிறான். கொட்டும் அருவியை எதிர்த்து மேலேறுவது அவன் உள்மனம் கொண்டுள்ள ஆசை. உண்மையில் அவன் அங்கிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு ராஜ வாரிசு. வாலிப வயதில் அவன் எண்ணப்படி மேலே ஏறியும் விடுகிறான். மேலே ஒருபுறம் ஹீரோயின் உள்ளிட்ட ஒரு குழு. இன்னொரு புறம் மகிழ்மதி அரசாங்கம். அங்கே இன்னும் அவனது அன்னை சிறைவைக்கப்பட்டிருக்கிறாள். மீதி கதையை நாம் எளிதில் ஊகித்துவிடமுடியும்.

போதாத குறைக்கு படுத்தி எடுக்கும் டிபிகல் தெலுங்கு சினிமா ஹீரோயிசம் வேறு. ஹீரோவின், வில்லனின் பராக்கிரமத்தை காண்பிக்கவென்றே லாஜிக் இல்லாத காட்சிகள் படம் நெடுக வந்துபோகின்றன. ஹீரோ பனிமலையில் (பனிமலையா என ஆச்சரியம் கொள்ளாதீர்கள், தேவைப்பட்டால் இப்படி பனிமலை, பேரருவி, பாலைவனம், கானகம் எல்லாம் வரும்) ஒரு பெரும் பனிச்சரிவை ஏற்படுத்திவிட்டு, ஒரு கல்லைப் பெயர்த்து பனிச்சறுக்கி, அதிலிருந்து தப்பி தன் வீரத்தைக் காண்பிக்கிறார் என்றால், வில்லன் ஆனையளவு இருக்கும் காட்டெருதுவை கையால் அடித்தே சாகடிக்கிறார். ஷிபுவின் தந்தையும், பிரதான கேரக்டருமானன பாகுபலியின் பிளாஷ்பேக்கிலும் அவர்தம் பேராற்றலைக் காண்பிக்கவென்றே கதைக்குள் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஒரு பெரும் படையே காலகேயர்கள் எனும் பெயரில் வந்து செல்கிறது. ஒரு பெண் வீரம், கொள்கை மிக்கவளாக இருக்கலாம். ஆனால், இப்படி ஒரு ஹீரோவுக்கு, ஜோடியாக இருப்பதால் பாவம், அவளது மனத்துயர், வீரம் எல்லாம் அவர் முன் செல்லாது. ஒற்றைக்கையில் கட்டிப்பிடித்து அடக்கி கண்மை போட்டுவிட்டுவிடுவார், பொறுத்துக்கொள்ள வேண்டும். படம் பூராவும் இதைப்போன்ற காட்சிகள்தான்.

மேலும் ஒரு குறையாக படம் இடைவேளையை முடிவாகக் கொண்டு முடிகிறது. இப்படித் துண்டு போட்டது போல இரண்டு படங்களாக இதற்கு முன்னர் எங்கும் எடுக்கப்பட்டிருக்கிறதா எனத் தெரியவில்லை.

நடிப்புக்குப் பெரிய வேலை இல்லை எனினும் ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், அனுஷ்கா, ப்ரபாஸ், ராணா போன்றோர் திரையை நிறைக்கும் போது அவர்களின் ஆளுமையைப் புரிந்துகொள்ளமுடிகிறது. இவர்களையெல்லாம் சரிவர நம் சினிமா பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதுதான் நிஜம். இதேதான் இசை, கலை, ஒளிப்பதிவு போன்ற பிற தொழில்நுட்பக் கலைஞர்களின் நிலையாகவும் இருக்கக்கூடும். திறமைகளுக்கு இங்கே பஞ்சமில்லை, அதைப் பயன்படுத்திக்கொள்வதில்தான் நாம் சற்றுப் பின்தங்கிக்கிடக்கிறோம். போலவே இப்படத்தில் பட்ஜெட்டுக்கு ஏற்ற அளவில் சிஜி வேலைப்பாடுகளின் நல்ல தரம், சிக்கலான இடங்களைத் தவிர்த்திருக்கும் புத்திசாலித்தனம் போன்றனவற்றையும் காணமுடிகிறது. குறிப்பாக பிற்பாதியில் வரும் போர்க்களம் உண்மையில் இதுவரை இந்திய சினிமா கண்டிராததுதான். அதில் சிஜியின் பங்களிப்பை விட நிஜ கள உருவாக்கமே அதிகம் என்பதையும் உணரமுடிகிறது. அங்குதான் ராஜமௌலியின் உழைப்பு, நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகிறது. ஆயிரக்கணக்கான மனிதர்களைக் கொண்டு ஒரு நிஜ போர்க்களத்தையே உருவாக்கி போரை நடத்தியிருக்கிறார். ஒளிப்பதிவு, கலை, காஸ்ட்யூம், சிஜி என பலவும் ஒன்றிணைந்து ஒரு அட்டகாசமான காட்சியனுபவத்தைத் தருகின்றன. ஒரு ஓவியத்தைப்போன்ற, அவ்வப்போதைய ஃப்ரீஸிங் காட்சிகள் ஒரு தனி விருந்து. போஸ்டர்களில் நாம் காணும் ஷிபுவின் போர்க்கள பாய்ச்சல்கள், அலைபாயும் மேலாடையுடன் தமன்னா, நீருக்கு மேலே குழந்தையைத் தூக்கிப்பிடித்திருக்கும் கை என ஓவியத்துக்கு நிகரான ரசனைக்கு விருந்தாகும் காட்சித் துண்டுகள் இன்னும் பலவுண்டு படத்தில். 

எஸ்.எஸ்.ராஜமௌலி எனும் பெயர்தான், தென்னிந்திய சினிமாவில் இப்படி ஒரு படத்தை சாத்தியப்படுத்தியிருக்கிறது என்பதை நாம் மறுக்கமுடியாது. தமிழும் சளைத்ததில்லை எனினும் கூட கமர்ஷியல் மொக்கைகளில் தெலுங்கு சினிமாவை அடித்துக்கொள்ளவே முடியாது. ஆனால், பெரும்பாலான கமர்ஷியல் இயக்குநர்களைப்போல, ராஜமௌலி ரசிகர்களை முட்டாள்களாகக் கருதுவதில்லை. இந்த ஒரு விஷயத்தில்தான் அவர் வித்தியாசப்படுகிறார். அதன் பலன்தான் அவருக்குத் தரப்பட்டிருக்கும் இந்த இடமாகும். பாகுபலியை ஒரு மொக்கைப்படமாக மட்டுமே தாண்டிச் சென்றுவிட முடியாதபடிக்கு ராஜமௌலியின் அசுர உழைப்பும், நம்பிக்கையும் நம்முன்னே நிற்கின்றன.

ஆனால் பாகுபலியின் உள்ளடக்கத்தின் மூலம், தேவை, போதாமை பற்றிய கவலைகள் ராஜமௌலிக்கு இல்லை. அதில் ஒரு டிபிகல் தெலுங்கு கமர்ஷியல் இயக்குநரின் இடத்திலிருந்து ராஜமௌலி சிறிதும் வழுவினாரில்லை. இனியும் அதை அவர் செய்யக்கூடியவரில்லை என்பதும் தெளிவாகிறது. அதனால்தான் இப்படியான ஒரு ஹிஸ்டாரிகல் படத்திலும் பச்சைக்கலர் ஜிங்குச்சா என ஒரு டூயட்டும், ஐட்டம் சாங்கும் வைக்கமுடிகிறது. அதனால்தான் அவரது ஹீரோவின் கால்கள் காற்றிலேயே மிதக்கின்றன. அதனால்தான் ஹீரோயிஸம் இருக்கிறதா, அது போதும் என ஒரு தாத்தா காலத்துக் கதையை அப்படியே எந்தப் புதுமையுமில்லாது எடுத்துக்கொண்டிருக்கிறார்.

மொத்தத்தில் படம் முடிகையில், மேக்கிங்கால் ஒருவித உற்சாகமும், திரைக்கதையினால் ஒருவித சோர்வுமான கலவை உணர்வுடன்தான் அரங்கை விட்டு நாம் வெளியேறுகிறோம்.

Friday, July 3, 2015

ஓ.. கிரேட் கண்மணி!

”தா..ரா” என முதல் காட்சியில் நித்யா சொல்லும் போது விழுந்தவன்தான். சிவப்பு சேலை கட்டிக்கொண்டு நித்யா, துல்கருடன் டான்ஸாடிக்கொண்டிருக்கும் போதுதான் படம் முடியப்போகுதில்லை என்ற நினைவுக்கே வந்தேன். அழகு ஆராதிக்கப்படவேண்டிய விஷயமே இல்லைதான், ஆனால் வாழ்வென்பதே முரண்தானே? அழகால் வீழாமல் இருக்க இயலவில்லை. நித்யா மட்டுமல்ல, படமே தன் அழகால் வீழ்த்துக்கிறது நம்மை.

இங்கு மட்டுமா? உலகெங்குமேதான். ஏன் ஒரு படத்தின் எல்லாமாகவும் இருக்கும் இயக்குநரை விட இந்த நடிகை, நடிகர்களுக்கு மட்டும் இத்தனை புகழ்? இத்தனை முன்னுரிமை? என்று யோசித்தோமானால் அதில் நியாயம் ஒன்றும் இல்லாமலில்லை.

ஒரு திரைப்படத்தின் எந்த நுட்பம் அதிமுக்கியமானது என்பதை வரையறுப்பது அத்தனை எளிதல்ல, போலவே கதையை விடவும் கதாபாத்திரங்களின் வடிவமைப்பு பிரதானமானதோ என்று சில சமயங்களில் நான் எண்ணுவதுண்டு. அத்தகைய கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டுவதும், அந்தச்சூழலில் அவர்கள் வாழ்வதாகவும் ஒரு மாயையை உருவாக்கி நம்மை ஒன்றச்செய்வதுமான இமாலயப் பணி அவர்களிடம்தானே இருக்கிறது.

‘ஓ காதல் கண்மணி’ படத்தில் காதலர்களாக வரும் துல்கரும், நித்யாவும் அத்தனை உணர்வுப்பூர்வமான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். பாத்திரப்படைப்பும், கதையும் அதற்கு இணையாய் நின்றிருக்கிறது. முதலாக குறிப்பிடப்படவேண்டியது அதுவே! மொத்தத்தில் பலன் நம் ரசனைக்கு. ஆதியையும், தாராவையும் செதுக்கித் தந்ததில் துல்கருக்கும், நித்யாவுக்கும் மட்டுமே பாராட்டை ஒதுக்கிவிடமுடியாது. மணிரத்னம், பிசி ஸ்ரீராம், ஏஆர்ரகுமான் எனும் மூன்று கிரியேட்டர்கள் ஆனையைப் போல பின்னணியில் நின்றுகொண்டிருக்கிறார்கள். அது ஆப்வியஸ். ஆனால், ஆங்கிலப்படங்களில் மட்டுமே காணக்கிடைக்கும்படியான ஒத்துழைப்பு ஒவ்வொரு பிற துறைகளிடமிருந்தும். மேக்கப், காஸ்ட்யூம், ஆர்ட் என துல்லியம் பிரமிப்பூட்டுகிறது. லைவ் ஒலிப்பதிவு என்பது என் புரிதல். அதில் நித்யாவின் குரல் மயக்குகிறது, அமைதியான அறையில் ஒலிக்கும் கிறிஸ்டல் கிளியர் குரல் போல. பொதுவாக இது மணிரத்னம் படங்களில் இருக்காதுதான். அனன்யாவின் திருமணம் நடக்கும் ஆரம்பக்காட்சியில் அனன்யா, பார்வையாளர் வரிசையிலிருக்கும் ஆதியிடம் ஏதோ சொல்கிறார். ஊஹூம், இரண்டாம் முறை உன்னிப்பாக இருந்தும் காதில் விழவில்லை. சரிதான், அது, ஆடியன்ஸுக்கு அவசியமில்லாத ஒன்றாகத்தான் இருக்கும். அதனால்தான் நித்யாவின் குரலில் இருந்த தெளிவு எனக்கு ஆரவாரமாக இருந்தது. முதல் காட்சியில், “Taa.. Rhaah” என மென்குரலில் சொல்கையில் அவரது நாக்கு மேலண்ணத்தைத் தொடாமல், சரியான இடத்தில் விரவுவதைக் கூட உணரமுடிந்தது. அப்படியான ஒலிப்பதிவு.

மேக்கப், எந்நேரமும் பளீரென இருக்கவைக்க மெனக்கெடாமல் மை கலைந்தோ, கருவளையத்தின் ஆரம்பமோ என நினைக்கவைக்கும் படியாகவும் நித்யாவை அனுமதித்திருக்கிறது. காஸ்ட்யூம், சில தருணங்களில் அவரது உடல்வாகுக்கு பொருத்தமில்லா உடைகளைத் தந்திருக்கிறது. ஆதி இரண்டு நாட்களாக தொலைந்துபோய்விட்டு மீண்டும் வருகையில் நித்யா அணிந்திருக்கும் உடை இயல்பை பிரதிபலிக்கிறது. தப்பைக்கூட பிளான் பண்ணி சரியாக பண்ண மணிரத்னம் குழுவால் மட்டும்தான் முடிகிறது.

இயக்குநரை விடுங்கள், அவரைப் பற்றிப்பேச நமக்குப் பற்றாது. இசை? வேணாஞ்சாமீ! நான் வரலை இந்த ஆட்டத்துக்கு. டயலாக் ரைட்டரை மட்டும் பிடித்துக்கொள்வோம். மணிரத்னத்தின் வசனங்கள் எப்போதும் சற்றே இயல்பு மீறியவைதான் அல்லவா? இல்லையா? ”நா உனக்கு கண்மணியா?” என்ற முகம் நிறைந்த சிரிப்பும் பூரிப்புமாக தாரா கேட்கும் இடமும், ”அழாதே கண்மணி சொல்லு..” என தாரா கேட்கும் இடமும் இப்போது நினைவுக்கு வருகிறது. ரொம்ப ட்ரமாடிக்காக இருக்கிறதோ.? யோசித்துப்பார்த்தால் என் நிஜ வாழ்வில், சில தனித்த தருணங்களில், இதை விடவும் ட்ரமாடிக்காக நான் நடந்துகொண்டதெல்லாம் நினைவுக்கு வருகிறது. ட்ராமா வாழ்க்கையின் ஒரு பகுதி. ட்ராமா ஒரு சுவை.

இன்னும், கணபதி அங்கிள், பவானி ஆண்டி, மூளையில்லாத வாசு, தாராவின் அம்மா, அவரது அஃபையரான (படத்தின் ஒரு காட்சியில் கூட வராத) கமிஷனர் என அத்தனை நிறைவான பாத்திரப்படைப்புகள். தாராவின் அம்மா, அலுவலக மீட்டிங்கில் இருக்கையில் தாரா போன் செய்கிறாள். தர்மசங்கடமான சூழலில் தயங்கும் குரலுடன் “ஸெனித், கேன் வி மீட் ஆப்டர் டூ மினிட்ஸ்?” என அனைவரையும் வெளியே அனுப்புகிறார். ஏன், வழக்கமான தொழிலதிபர் அம்மா மாதிரி அருகில் இரண்டு பிஏக்கள் கையில் பைலுடன் வர, பட்டுச்சேலையில் ஹாலிலிருந்து வாயிலுக்கு வரும் போது பேசலாமே.? மாஸ்டர் ஸ்ட்ரோக்ஸ்!

கதை? படம் இந்த நூற்றாண்டிலும், கல்யாணத்தின் அவசியத்தை நிறுவும் பழமைக்கு ஆதரவாக நிற்கிறதா என்ற கருத்துக்குள் போக வேண்டியதில்லை என நான் நினைக்கிறேன். இதை ஒரு தனிப்பட்ட காதலர்களின் கதை என்றும் அணுகலாம்! ஒரு படைப்பாளி, அதுவும் தேர்ந்த படைப்பாளி தன் கதையினூடாக சமூகத்தை பாதிக்கத்தான் செய்கிறான். ஆகவே இதை அவ்வளவு எளிதாக தாண்டிச்சென்றுவிட முடியாதுதான், கூடாதுதான். ஆனால், இந்தக் கருத்தில் நேர், எதிர் வாதங்களை வைப்பது அத்தனை சுலபமல்ல. எல்லாவற்றிலும் அபத்தங்கள் நிறைந்திருக்கும். இப்போதைக்கு, கல்யாணத்துக்கான சரியான மாற்று இன்னும் கண்டறியப்படவில்லை என்று கொண்டு அதுவரை, அதை ஏற்றுக்கொண்டுதான் தொலைய வேண்டியிருக்கிறது என்று தீர்ப்பு சொல்லிக்கொள்வோம். ஒத்து வாழ்தல், கல்யாணத்துக்கு சரியான மாற்றா என்பதை காலம் முடிவு செய்யும். செய்யட்டும்!

என்னைப் பொறுத்தவரை இந்தக்கதை ஒரு அழகான காதல் கதை அல்லது கவிதை. ஒவ்வொரு காட்சியும், காட்சித்துண்டும் காதல் கவிதைக்கான நியாயம் செய்வனவாக பார்த்துப் பார்த்துச் செய்யப்பட்டிருக்கின்றன ஒரு ஓவியனின் நுணுக்கத்தோடு. கலையில் தேர்ந்தவனின் கரத்திலிருந்து மட்டுமே வெளிப்பட வாய்ப்புள்ள மாஸ்டர் ஸ்ட்ரோக்ஸ்! எளிய கதை, எளிய காட்சிகள்தான். ஆனால் அவற்றை இத்தனை உணர்வுப்பூர்வமாக காட்சிப்படுத்திடுவது அத்தனை எளிதல்லதான். தனது ரசனை, நீண்ட அனுபவம் வாயிலாக அதை சாத்தியப்படுத்தி, தனது அடுத்த படிக்கு முன்னேறியிருக்கிறார் மணிரத்னம்.


எவர்க்ரீன் அலைபாயுதேவை பின்னுக்குத் தள்ளி நம்மை நோக்கிச் சிரிக்கிறாள் இந்த அழகுக் கண்மணி!

*

Friday, May 8, 2015

வீனஸிலிருந்து வந்த பெண்


எங்கிருந்தோ ஒருத்தி வந்தாள். அவள் ஏதோ மாயப்பிசாசாக இருக்க வேண்டும்.

ஒரு நாள் பெருமனதைக் கொண்டவள் போலிருந்தாள். அந்தப் பேரன்பும், அவளின் அணைப்பும்தான் இந்த வாழ்வின் இலக்கு, அதை அடைந்துவிட்டோம் என்று தோன்றியது. 

ஒரு முறை பேரழகைத் தாங்கிய இளங்கன்னியாகத் தோன்றினாள். தன்னிலை மறக்கச்செய்தாள். தணல் போல இருந்தது அந்நிகழ்வு. இரண்டாவதையும் அடைந்துவிட்டோம், இனிமேல் இன்னொரு நிலையிருக்க வாய்ப்பில்லை என்பதாய் உணர்ந்தேன்.

மற்றொரு நேரத்தில், அலைபாயும் கரிய உருவம் கொண்டிருந்தாள். வதைத்தொழிலின் பிரதிநிதியாகவும், நிபுணராகவும் அவள் இருக்ககூடும். வாழ்வென்பதின் சரிபாதி வலி, யாராவது உனக்கதைத் தந்தேதான் ஆகவேண்டும். அதையும் நானே செய்துவிடுகிறேன் என்றாள். மிக வலிதான், ஆயினும் இந்நிலையையும் எட்டிவிட்டால் இந்தக் கதை முடியலாம் என்பதாய் நம்பினேன்.

அடுத்தொரு நாள், அவள் கண்களில் பாலூட்டிய என் தாயின் கண்களைக் கண்டேன். கருணை என்பதை வார்த்தைகளில் மட்டுமே உன்னால் உணர்ந்துகொள்ளமுடியுமா, அத்தனை கற்பனை உனக்கு இருக்கிறதா என்று சிரித்துவிட்டு அதைத் தந்தாள். இன்னொரு கூறு. அந்தப் பேற்றையும் பெற்றேன். இவ்வாழ்வில் இன்னும் பல இருக்கலாம் எனும் உண்மையையே அப்போதுதான் உணர்ந்தேன். 

’இது உன் முறை! உன் விருப்பம்’ எனும் குரல் கேட்கிறது. இப்போது நிறைமணி கொலுசுகள் கிலுங்க, வலக்கையிலிருந்த ஒரு பொம்மையை கிச்சுகிச்சுவென ஆட்டிக்கொண்டு, ஒரு பச்சை நிற காட்டன் கவுனில் உலகின் பேரழகையெல்லாம் தன் கண்களில் தேக்கிக்கொண்டு நிற்கிறாள். உன் பாற்பற்களால் அந்தப் பொம்மையைக் கடிக்காதேடி. என்னையே கடித்து விழுங்கிவிடேன் என்றேன். கரைந்துபோனேன். இன்னும் மிச்சமிருக்கிறது இந்த வாழ்க்கை.ஜாய்ஃபுல், ப்ளிஸ், ஹேப்பினஸ், ப்ளெஷர், எக்ஸ்டஸி எதுவும் ஒன்றல்ல என்பதை, நுணுக்கமான அதன் பிரிவுகளை உணரத்தந்தாய் ஒரு பொழுதில். இந்நாளில் உனக்கும் அவையனைத்தையுமே அருளி ஆசீர்வதிக்கிறேன் பெண்ணே!

-எஸ்ஜிக்கான நல்வாழ்த்துகளுடன் கேகே!
.

Thursday, April 30, 2015

வானிலிருந்து வந்தவொரு ரயில்!

முதல்ல ஒரு விஷயம் சொல்றேன், கேளுங்க. அப்புறமா அதைப் பத்தி டீடெயிலா பேசுவோம்.

*

வந்த காரியம் முடிஞ்சதும் டக்கு புக்குனு ஊர் திரும்பியாகணும்கிற அவசரம், பர்சனல் சோலி. ஜம்முவுக்கு வந்த அலுவலகக் காரியம் எப்ப முடியுமோனு டென்ஷனா காத்திருக்கான் ஒருத்தன். பாவம் என்ன அவசரமோ? என்ன சோலியோ? என்னத்த.. என்னைக்கு நமக்கு ஒண்ணு தேவைப்படும்போது கிடைச்சிருக்குது? ஆனா பாருங்க அதிசயம். குறிச்சாப்புல அவன் வந்த காரியம் முடிஞ்சிடுது. உடனே கிளம்பியாவணும். பிளேன்ல போற அளவுக்கு அலுவலகத்திலயோ, சொந்த செலவுலயோ பட்ஜெட் பத்தாது நம்மாளுக்கு. லேப்டாப்பை நோண்டி ரயில் இருக்கானு மாறி மாறி பாத்துகிட்டிருக்கான். இருக்குது எக்கச்சக்க ரயிலு. ஆனா, டிக்கெட் இருந்தாத்தானே? பூரா ரயில்லயும் 998, 1081னு ஏதேதோ நம்பர்கள்ல வெயிட்டிங் லிஸ்ட்! அதுலயும் பாதி ரிக்ரெட்னு வந்துட்டுது. பாவம் என்ன செய்ய?

சரினு ஏதாச்சும் ஏஜெண்டைப் புடிப்போம்னு போறான். மூணு மாசத்துக்கு முன்னால புக் பண்ணினாலும் கிடைக்காத டிக்கெட்டை மூணு நிமிசத்துல எடுத்துக்குடுக்குற கில்லாடிங்க இருக்கிற ஊராச்சே நம்ப ஊரு! ஆனா பாருங்க, அன்னிக்குனு பாத்து எல்லா ஏஜெண்டும் (இரண்டு பேர்தான்) கையை விரிச்சுட்டான். எவ்ளோ செலவானாலும் பரவால்லனு (இந்த எவ்ளோவுக்கு அர்த்தம் உண்மையில் எவ்ளோவோ இல்ல, டிக்கெட் கமிஷன விட ஒரு 100 ரூவா முன்னப்பின்னனு வைச்சுக்குங்களேன்) சொல்லியும் வேலை நடக்கல. கடுப்பு.

ரூமுக்கு வந்து சோகமா உக்காந்துகிட்டு என்ன பண்ணப்போறமோ, ஏஜெண்டை தட்கல்ல போடச்சொல்லிட்டு லேட்டா போயிச்சேருவோம், வேறென்ன செய்யனு உக்காந்திருக்கான். சரி, கிடைக்காதுனு தெரியும், எதுக்கும் தட்கலாவது முயற்சிப்போம், எதுக்கு ஏஜெண்டுக்கு பணம் கொடுக்கணும்னு நினைக்கிறான். இது 1 பால் இருக்குறப்ப 12 ரன் தேவைங்கிற மாதிரி சூழல். வழக்கம்போல விக்கெட் போயிடுச்சு. ஆனா, அப்போதான் அவன் கண்ணையே நம்ப முடியாத ஒரு காட்சி கணினியில் தெரியுது!

ஒரு ரயில்! இருக்கை நிலவரம்ல ஏதோ ஒரு நம்ப முடியாத நம்பர்! 480 மாதிரி ஏதோ ஒண்ணு! அதுவும் இன்னைக்கு! இது ஏதாச்சும் கனவா இருக்கும்னு முதல்ல நினைக்கிறான். நமக்கு ஏதும் தற்காலிக சித்தக்கலக்கம் ஏற்பட்டிருக்கவும் வாய்ப்பிருக்குதுனு நினைக்கிறான். கணினியை மூடிவிட்டு ஒரு டீயைக் குடித்துவிட்டு வருகிறான். மீண்டும் முயற்சிக்க விருப்பமில்லையெனினும், தன் சித்தத்தை சோதிக்க எண்ணி முயற்சிக்கிறான். ஆச்சரியம் அதே 480! கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு கிளம்புமிடம், போகுமிடம், வண்டி எண், நாள், நட்சத்திரம் எல்லாவற்றையும் பார்த்தாயிற்று. சரியாகத்தான் இருப்பது போலிருக்கிறது. என்னடா இது அதிசயம்? பதிவு செய்வதா? வேண்டாமா? ஆனது ஆகட்டும், என மனதைத் தேற்றிக்கொண்டு முன்பதிவு செய்தேவிடுகிறான். SMS வருகிறது, மெயில் வருகிறது, எல்லாம் ஒழுங்காகத்தான் நடப்பது போல தெரிகிறது. ஆனால் ரயில் வருமா?

ரயில் நிலையம். அப்படி ஒரு ரயில் வந்தே விட்டது. ஃபேண்டஸி கதைகளில் வருவது போல இது ஏதும் ஹாக்வேர்ட் எக்ஸ்பிரஸா? நடைமேடை எண் நாலரையா? போர்டைப் பார்த்தேன் நடைமேடை எண் 3. சரிதான். ஏதோ புது ரயில், புதிதாக அலாட் செய்திருப்பார்கள், அதனால்தான் அப்படியொரு நிகழ்வு நடந்திருக்கவேண்டும் என நீங்கள் இதற்குள் முடிவு செய்திருப்பீர்கள். அவனும் அப்படித்தான் நினைத்திருந்தான். அவனுக்குப் பின்பு போட்டி போட்டுக்கொண்டு அந்த ரயிலின் டிக்கெட்டுகள் அடிபுடியென போயிருக்கவேண்டும்தானே! அந்த வண்டி முழுவதுமாக ஏசி வசதிகொண்டது. அவன் அவனது B10 எனும் பெட்டி எண்ணை சரிபார்த்துக்கொண்டு ஏறினான். ஆனால் பாருங்கள் அவனோடு போட்டி போட ஏன், துணைக்குக் கூட ஒரு ஆள் ஏறவில்லை அந்தப்பெட்டியில்! அடப்பாவிகளா! அடுத்தடுத்த ஸ்டேஷன்களில் திமுதிமுவென ஏறுவார்களாக இருக்கும் என எண்ணிக்கொண்டான். ஆனால் அப்போதுதான் இன்னொன்றும் ஞாபகம் வந்து தொலைக்கிறது. அந்த ரயில் சென்னை செல்லும் வரை நிற்கப்போவதோ இடையில் இரண்டோ மூன்றோ நிறுத்தங்கள் மட்டும்தான் என!

வண்டியும் கிளம்பி ஓடத்துவங்கியது. சில நிமிடங்களிலேயே புன்னகை பூத்த முகத்துடன் டிடிஈ வந்துவிட்டார். டிக்கெட்டைக் காண்பித்து, ஐடியையும் காண்பித்து சரிபார்த்துக் கொண்டிருக்கும் போதே அவரிடம் ஆங்கிலத்தில் இதுபற்றி விபரம் கேட்கலாம் என நினைத்திருந்தான். ஆனால் அவரோ முந்திக்கொண்டு இந்தியிலோ, வேறு ஏதோ ஒரு மொழியிலேயோ ஆச்சரியம் ததும்ப எதையோ இவனிடம் பேசினார். அதன் பின்பாக, அவர் பேசியது இவனுக்குத் புரியவில்லை என்பதை உரைக்க ஏனோ மனம் இடம் தராது, ‘ஆமா, அதானே’ என்பதாக எதையோ மையமாகச் சொல்லிச் சிரித்தான். சிரித்தார். எழுந்தார். போய்விட்டார்!

ஒரு அரைமணி நேரம் இருக்கையில் அமர்ந்து, போனை நோண்டிக்கொண்டிருக்கும்போதே ஓரிரு ரயில் பணியாளர்கள் அவனைக் கடந்துசென்றனர். ஒருவர் படுக்கை விரிப்புகளைத் தருபவர். இன்னொருவர் உணவு உபசரிப்பவர். சற்றே நிம்மதி படர்ந்தது. ஜன்னல் வெளிச்சம் விலக, இருள் மெல்ல மெல்லக் கவிழ்ந்தது. இருளின் அசாத்தியமே தனிதான். தனிமை அவனுக்கு மிகவும் பிடித்தமானதுதான். சொல்லப்போனால் ரயிலின் கசகசவெனும் கூட்டமும் அவனுக்கு சற்றும் பிடிக்காத ஒன்றுதான். ஆனால் இந்த அமானுஷ்ய தனிமை சற்றே கலக்கியது. இப்படிக்கூட நிகழுமா என்ன? நாம் இந்தியாவில்தான் இருக்கிறோமா? மீண்டும் ஒரு யோசனையில் போனை எடுத்து அவசரமாக அதே ரயிலின் முன்பதிவு நிலவரத்தைப் பார்த்தான். 477! அட, இன்னும் இரண்டு டிக்கெட்டுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இப்போது எழுந்து வேறு ஆட்கள் இந்தப் பெட்டியிலோ, அருகாமைப் பெட்டிகளிலோ இருக்கிறார்களா எனப்பார்க்கும் யோசனை தோன்ற எழுந்து முதலில் இடப்புறமாக நடந்தான்.

B9ஐ முழுதுமாகக் கடந்தான். யாருமில்லை. B8. நுழைந்தான். வடக்கின் மூட்டை மூட்டையான லக்கேஜ்களுடன் மூத்த குண்டுப் பெண்மணிகளும், இளம் ஒல்லிப் பெண்களும், வாயில் எதையாவது மென்றுகொண்டிருக்கும் ஆண்களும் எந்த நிமிடமும் கண்களில் பட்டுவிடுவார்கள் எனும் எண்ணம். ம்ஹூம்! முழு B8லும் ஒரு ஈக்குஞ்சு இல்லை. அருகில் எந்த மனிதனுமில்லா எனது லக்கேஜுக்கென திருடன் எப்போது வேண்டுமானாலும் தோன்றலாம், அவன் ரயில் பணியாளன் வேடம் கூட கொண்டிருக்கலாம் எனும் எண்ணம் தோன்ற மீண்டும் B10ஐ நோக்கி வேகமாக நடக்கலானான்.

அவனது லக்கேஜ் அழகாக வைத்த இடத்தில் இருந்தது. மனதைத் தேற்றிக்கொண்டு மீண்டும் வலப்புறமாக செல்ல எத்தனித்தான்.

B11, ஆறு ஆறாக எண்கள் வேகமாக கடந்தன. ம்ஹூம்! எல்லாப்பெட்டிகளையும் போலவே இதிலும் நடைபாதை விளக்குகள் மட்டுமே எரிந்துகொண்டிருந்தன. திரைகளை விலக்கிப் பார்த்தவாறே நடந்தான். அதோ அங்கே கூடுதல் வெளிச்சம், திரையும் விலகியிருந்தது. ஆவல் மிக அருகில் சென்றான்.

ஒரு பெண். ஒரே பெண். அதுவும் அழகிய இளம் பெண். நான் கடப்பது தெரிந்து, தான் படித்துக்கொண்டிருந்த புத்தகத்திலிருந்து தலை நிமிர்த்தினாள். இன்னும் அழகு. சில விநாடிகள் ஆயினும் அந்த முகத்திலிருந்த உணர்வுகளைப் புரிந்துகொள்ள இயலவில்லை. இந்தத் தனிமையின் ஆச்சரியம் அவளுக்கும் இருக்கலாம். ஆனால், பயந்தது போலவும் தெரியவில்லை. முகத்தில் விரோதமோ, அதே நேரம் சட்டென நட்பைக் கோரும் பாவமோ இல்லை. புன்னகைக்கவா, வேண்டாமா என்ற குழப்பத்தில் புன்னகைக்க நேரமில்லாது போகவே, கடந்து சென்றான். அவனுக்கு ஒரு ஓரத்தில் சின்ன நிம்மதி! அடுத்த பெட்டிக்குத் தொடர மனமின்றி மீண்டும் அவளைக் கடந்து B10க்குத் திரும்பினான்.

வசதியாக விரிப்புகளை விரிந்துக்கொண்டு படுத்தபின்பு, யோசனை எங்கெங்கோ சென்றது. பிடாரிக்கன்னிகள் கூட வந்து போயினர். வேறு பயமுறுத்தும் சிந்தனைகள். அதோடு இது மொத்தமுமே ஒரு கனவோ? எண்ணங்களை வலுவில் மறக்கடிக்க ஒரு தமிழ்ப் புத்தகத்தை எடுத்துக்கொண்டான். தமிழ் பரவசமூட்டும். ஆனால் தமிழ் எழுத்தாளர்கள்தான் தாலாட்டுவார்களே! தூங்கிப்போய்விட்டான்!

மறுநாளும் பயணம் எந்த ஒரு சிக்கலுமின்றி தொடர்ந்துகொண்டிருந்தது. பட்டப்பகல் வெளிச்சம். இது கனவல்ல, வெளியே நிஜமான இந்தியாதான். தில்லியைக்கூட தாண்டி வந்தோமே! ஆனால் தில்லியில் கூட யாரும் இந்த வண்டியில் ஏறவில்லையே!

இப்போது சூழல் பழகிப்போய்விட்டிருந்தது அவனுக்கு. நேற்றே போய்ப் பார்த்திருக்கலாம், B8யும் தாண்டி B7க்கு போனபோது பெட்டியில் இறுதிப்பாகத்தில் சிலர் தென்பட, B6 ஒரு அழகிய இந்திய ரயிலாக சரியான மக்கள் கூட்டத்தோடு இருந்தது.

சென்னையில் B10லிருந்து தனியொருவனாக அவன் இறங்கியபோது இந்தியன் ரயில்வே அவனொருவனுக்காகவே சில ஏசி ரயில்பெட்டிகளை ஒதுக்கி தனி மரியாதை செய்ததைப்போன்றதொரு உணர்வு. B11 அழகியும் ஒரு அழகிய லக்கேஜுடன் கடந்துபோனாள். எதையாவது பெரிதாக மிஸ் செய்துவிட்டானோ என்று உங்களுக்குத் தோன்றுகிறதோ என்னவோ அவனுக்குத் தோன்றவில்லை.

*

இப்படி முடிகிறது இந்த விஷயம். அடப்பாவி, கசமுசாவென்று ஏதும் ஆகவேண்டாம் எனினும் பேச்சுத் துணையாகவாவது அவளோடு பழகியிருக்கலாமேடா அவன், இப்படி ஒரு வாய்ப்பு எவனுக்கு அமையும் என்ற ஆதங்கமான கிளைக்கதைக்குள் நீங்கள் இறங்காமல் மெயின் கதைக்கு வாருங்கள்.

இப்படி ஒரு நிகழ்வு சாத்தியமா? இது ஏதும் என் சினிமா நண்பருக்கு உதவிட ரூம் போட்டு குண்டக்க மண்டக்க யோசித்ததில் கிடைத்த காட்சியா? இல்லை வழக்கம் போல கனவு கினவு கண்டு வைத்து, பூசி மெழுகி அழகூட்டி எழுதிவைத்திருக்கிறேனா? இப்படி ஒன்று இந்தியாவில் நிகழுமா? எவனாவது சினிமாவிலோ, கதையிலோ காதலுக்காக இப்படி ஒரு காட்சியை வைத்திருந்தால், “மூணு நாலு பெட்டியில ஆளே இல்லையாம். ஹீரோவும், ஹீரோயினும் மட்டும் உக்காந்திருக்காங்களாம். கதவிடறதுக்கு ஒரு அளவு வேண்டாமாடா? ஒரு அடிப்படை லாஜிக் இல்லையா? மூணு மாசத்துக்கு முன்ன டிக்கெட் எடுக்கவே அவனவன் தலையால தண்ணி குடிச்சிகிட்டிருக்கான். போடா பொசக்கெட்டவனே..” என்று நானே திட்டியிருப்பேன்.


நம்பினால் நம்புங்கள். ஜம்மு, தில்லி, வெயிடிங் லிஸ்ட் எண்ணிக்கை போன்றவை தவிர இந்தியா, இரண்டு நாள் ரயில் பயணம், காலி ஏசி பெட்டிகள், தனிமை, அந்த உணர்வுகள், அந்தப் பெண் என அத்தனையும் எனக்கு மிக சமீபத்தில் நடந்த அப்பட்டமான நிஜம்! 

.

Monday, March 23, 2015

கனவுச்சுழல்

வழக்கமா எழுதப்போற விஷயத்துக்கு பில்டப் குடுக்குறது நம் வழக்கம்னாலும் இந்த விஷயத்துக்கு முன்னுரை எழுதலைன்னா அடிக்க வந்தாலும் வந்துருவீங்க. ஆகவே இங்கு முன்னுரை என்பதாவது என்னவெனில் பின்வருவது ஒரு கனவு.

எங்கள் தெருவான அகன்ற, நீண்ட பாரதி தெருவைக் குறுக்காக வெட்டிக்கொண்டு நான்கைந்து சிறு தெருக்கள் உள்ளன. அப்படியான ஒரு தெருவான கம்பர் தெருவின் முதல் வீடுதான் எங்களுடையது. முதல் வீடு என்பதால் மட்டுமல்ல எங்கள் வீட்டின் வாயில் பிரதான பாரதி தெருவில் இருப்பதால், வீடு பாரதி தெருவில் இருக்கிறது என்றும் கொள்ளலாம். தரைத்தளத்தில் இப்போது யாருமில்லை. முதல் தளத்தில் நாங்கள் வசிக்கிறோம். கம்பர் தெருவில் வெறும் குடியிருப்புகள் என்பதால் அங்கே எனக்கு வேலையெதுவுமில்லை எனினும், சுபா சைக்கிள் பழகுகையில் நானும் கூடவே ஓடியிருக்கிறேன் என்பதால் தெருவை நன்றாகவே அறிவேன். அது ஒரு டெட் என்ட் தெரு.

அந்திக்கருக்கலில் போலீஸ் சைரன் ஒலி கேட்டு பால்கனியிலிருந்து எட்டிப்பார்த்தால் கம்பர் தெருவின் டெட் என்ட் வீட்டருகே ஒரு போலீஸ் கார். அடாடா, என்ன பிரச்சினை என்று தெரியவில்லையே, நம் தெருவின் பெயரும் நாளை பேப்பரில் வந்துவிடும் போலிருக்கிறதே! என்ற பரபரப்பும், என்ன குற்றம் நிகழ்ந்ததோ? என்ற வருத்தமும் எழுந்தது. சரி, கீழிறங்கிச்சென்று பார்ப்போம் என்று நான் இறங்க, ரமாவும் கூடவே இறங்கினாள். சுபாவும் அவள் கையைப் பிடித்துக்கொண்டு இறங்கினான். வீட்டைப் பூட்டாமல் மூவரும் இறங்குகிறோம் என்ற பிரக்ஞை ஒரு புறம் இருக்க, வாயிலைத்தாண்டாது நின்று பார்ப்போம் என நினைத்துக் கொண்டேன்.

ஆச்சரியம்! தெருவின் உள்முனையில் குற்றமேதும் நிகழ்ந்ததாய் தெரியவில்லை. மாறாக ஒரு போலீஸ் ஸ்டேஷன்தான் புதிதாக‌ தோன்றியிருந்தது. அதன் வாயிலில்தான் அந்த போலீஸ் வண்டி நின்றுகொண்டிருந்தது. இந்தச் சின்னத்தெருவுக்குள், அதுவும் இப்படித் திடுமென ஒரு போலீஸ் ஸ்டேஷன் வரவேண்டிய அவசியமென்ன? என்ன அரசாங்கமோ என்று சலித்தபடி நான் ஆச்சரியப்பட, ரமாவோ அசுவாரசியமாக வாயிலில் இருந்த டெலிபோன் கம்பத்தினருகே தரையில் அமர்ந்துவிட்டாள். அவள் அப்படிச் செய்பவளே அல்லள். இன்னும் சற்று ஆச்சரியம் எனக்கு. அசங்கலான சூழலையும், இந்த விநோதமான நிகழ்வுகளையும் காணும்போதே நான் கணித்திருக்க வேண்டும், நான் இருப்பது கனவில் என்று.

தொடர்ந்து 'வா மேலே செல்வோம்' என ரமாவிடம் சொல்லிவிட்டு படியேறினேன் சுபாவுடன். சரியாக அப்போது ஏரியா முழுதும் கரன்ட் கட்டாகியது. ரமா எழுந்து பின்தொடர மீண்டும் அவளிடம் சொன்னேன், 'ரொம்ப புழுக்கமாக இருக்கிறது, நாங்கள் இரண்டாம் தளத்தில் உள்ள அறைக்குச் செல்கிறோம் படுக்க. அங்கே சற்று காற்றோட்டமாக இருக்கும். நீ வீட்டை பூட்டிவிட்டு மேலே வா'. ஊஹூம். எங்கள் வீட்டில் இரண்டாம் தளமே கிடையாது. வெறும் மொட்டைமாடிதான். இப்போதும் நான் சுதாரிக்கவில்லை.

நாங்கள் இருவரும் இரண்டாம் தளத்துக்குச் சென்று அங்கிருந்த அறைக்குள் நுழைந்தோம். கிராமத்து வீடுகள் போல நான்கைந்து அறைகள் ஒன்றன் பின் ஒன்றாக நீண்டு இருந்ததைப் பார்த்ததும்தான் ஏதோ வித்தியாசமாக உணர்ந்தேன். இந்த அறையே கோளாறாக இருக்கிறது, ஏதோ சிக்கல். சரியாக ரமாவும் மேலே வந்து முதலறையில் உள்ள கட்டிலில் படுத்தபடி 'கீழே வீட்டைப் பூட்டமுடியவில்லை, கதவு இறுக்கமாக இருக்கிறது. நீங்களே பூட்டிவிட்டு வாருங்கள்' என்று அலட்சியமாகச் சொன்னாள். இதுபோன்ற விஷயங்களில் அவள் அலட்சியமாக இருப்பவளே அல்லள். பிடிபட்டுவிட்டது.

ஐய்யய்யோ, நான் கனவில் இருக்கிறேன். அதுவும் இது சாதாரண கனவு அல்ல, அமானுஷ்யமானது. முதுகுத்தண்டு சில்லிட்டது.

இதுவரை அமானுஷ்யமாக ஏதும் நடக்கவில்லை, எனினும் எனக்குத் தெரியும் நான்தானே இதன் இயக்குனர். சுபாவை, ரமாவுடன் பத்திரமாக கூடவே படுக்கச்சொன்னேன். இப்போது, முதல் வேலையாக‌ நான் உடனே கீழே சென்று வீட்டைப் பூட்டிவிட்டு மேலே வந்துவிடவேண்டும். நான் கீழே சென்றால் இவர்கள் மேலே தனியாக இருப்பார்கள். விரைந்து வந்து விடலாம், வீடு பூட்டப்பட வேண்டும். ஆபத்து! கதவைத் திறந்து இரண்டாம் தளத்திலிருந்து முதல் தளத்துக்கான படிக்கட்டின் அருகே சென்றேன். இப்போது ஒரு பெரிய தயக்கம் சூழ்ந்தது. அப்போதுதான் அந்த விநோதமான 'கிய்ய்ய்ய்.. கிய்ய்ய்ய்..' ஒலி மெதுவாக முனகலாகக் கேட்டது. தாமதமாகிவிட்டது. படிக்கட்டில் அவை காத்திருக்கின்றன.

தாக்குவதற்கு ஏதாவது வேண்டும். எத்தனைக் கனவுகளில் பார்த்துவிட்டோம், இனியும் இவற்றுக்குப் பயப்படக்கூடாது. பார்த்துவிடுவோம் ஒரு கை. அருகில் கிடந்த ஒரு மரத்தடியை எடுத்துக்கொண்டேன். இறங்கினேன். அவ்வளவுதான்! நெளி நெளியாய், புகை புகையாய் அவை என் மீது வந்து அப்பின. ஆஆஆ!

இது வலியா? தகரத்தில் நகத்தால் கீறுவது போல தாங்கமுடியாத ஒவ்வாமை. ச்சே! இப்போதுதான் உறைக்கிறது. நாம் இந்தக் கனவிலிருந்து விழித்துகொள்வதுதான் ஒரே வழி. இவ்வளவு நேரம் இது தோன்றவில்லையே! கைகால்களை உதறியபடி கத்திக்கொண்டு விழிக்க முயன்றேன். முடியவில்லை. எத்தனை முறை சட்டென விழித்துக்கொண்டு, கனவிலிருந்து விடுபட்டு அதை நினைத்து சிரித்துவிட்டு மீண்டும் நிம்மதியாக உறங்கிப்போயிருக்கிறேன். அதைப் போலத்தான் இதுவும். எப்படியாவது எழுந்துவிடு. வித்தியாசமாக இருமிக்கொண்டால் விழிப்பு வந்துவிடும். இல்லையே, எப்படி அது? அதுபோல இப்போது இரும முடியவில்லையே. கழுத்தில் இவை பின்னிக்கொண்டு கிடக்கின்றனவே.. வேறு என்ன செய்யலாம்? ரமாவையே எழுப்பச்சொல்லிவிட்டால் என்ன? நல்ல யோசனை. கடித்துக்கொண்டிருந்த அவற்றைப் பிய்த்தெறிந்தபடி மேலே ஏறி அறைக்குள் நுழைந்தேன்.

சுபாவை டிஸ்டர்ப் செய்துவிடாமல் கட்டிலில் படுத்திருந்த ரமாவை உலுப்பினேன், நல்ல வேளை எழுந்துவிட்டாள். 'தங்கம், என்னை உலுப்பிவிடு. நான் விழிக்க வேண்டும். இது ஒரு பயங்கரமான பேய்க்கனவு' என்றேன். புரியாமல், விழிக்காமல் சட்டென புரிந்துகொண்டாள். என் தோள்களைப் பிடித்து உலுக்கிவிட்டபடி, ஆனால் உடனேயே சொன்னாள், 'என்னங்க, நீங்க தூங்கிகிட்டிருந்தா என்னை எப்படி எழுப்பமுடியும்? நானும் உங்க கனவுலதான் இருக்கேன். இது பிரயோஜனமில்லை, நிஜமான என்னை நீங்க எழுப்பணும்'. என் ரமாவா இவ்வளவு அறிவோடு பேசுவது? அந்த வேதனையிலும் சின்ன மகிழ்ச்சி எனக்கு. தொடர்ந்து, 'நீ சொல்வது சரிதான். ஏதாவது செய், என்னால முடியல.. எப்படியாவது என்னை எழுப்பு' என்று அங்கேயே கீழே விழுந்தேன். 'ஊம், எனக்குப் பயமா இருக்கு, நீங்க படுத்தா நான் போகமாட்டேன். வாங்க ரெண்டு பேரும் போய் ரமாவை எழுப்புவோம்' என்றாள். சரியென்று சமாளித்துக் கொண்டு எழுந்தேன். சிரமப் பட்டுக்கொண்டு அடுத்த அறைக்குள் நுழைந்தோம். சரிதான், அதோ அந்தக் கட்டிலில்தான் நிஜமான ரமா படுத்திருக்கிறாள். ஆனால்.. இவர்கள் யார்? எங்கிருந்து வந்தனர் பூட்டிய வீட்டுக்குள்?

கட்டிலுக்கும், எங்களுக்கும் இடையே இரண்டு மூன்று குழந்தைகள் சும்மா தேமேயென ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருந்தனர். பக்கத்து வீட்டுக் குழந்தைகளா? நிஜ உலகில் சுபாவுடன் விளையாட வந்தவர்களா? இல்லையில்லை, இன்னும் கனவு முடியவில்லை. இவர்கள் கனவுக்குள் இருக்கும் பேய்க்குழந்தைகள். என்ன வேண்டுமானாலும் செய்துவிடக்கூடியவை. ஓமன் படம் நினைவிருக்கிறதல்லவா? அய்யய்யோ, நிஜ சுபாவையும், ரமாவையும் இவை ஏதும் செய்துவிடக்கூடாதே! மிகக்கவனமாக அவற்றை விலக்கிவிட்டு ரமாவை நெருங்கினேன். தொட்டதுமே விழித்துக்கொண்டாள். மிக அழகாக சிரித்தாள். என்னுடன் வந்த ரமாவைக் காணவில்லை. 'என்னை எழுப்பி விடு ரமா...' என்றேன் மீண்டும்! ச்சை! இது குழப்பம். கனவுக்குள்ளேயேதான் சிக்கிக்கொண்டிருக்கிறோம். இவளும் நிஜமல்ல! இது சாத்தியமல்லாத வழி!

இருமிக்கொண்டு விழித்துக்கொள்! கத்தினேன்! தலையைப் பிய்த்துக்கொண்டேன்! உஸ்ஸ்ஸ்! ஒரு வழியாய் விழித்துக்கொண்டேன்!


கரன்ட் இல்லை, வியர்வையில் கிடந்தேன். அப்பாடி, இது நிஜமாகவே எங்கள் வீடுதான், எங்கள் படுக்கையறைதான். பார், ஷெல்பில் புத்தகங்கள்! நிஜமாகவே விழித்துக்கொண்டுவிட்டேன். நிம்மதியாக இருந்தது. வழக்கம் போல முதலில் சிரிப்பு வந்தது. பக்கத்தில் ரமா. அடுத்து சுபா. தொட்டதும் விழித்துக்கொண்டாள். தூங்காமலிருக்கிறாளா?

'என்ன தூங்கலியா?' என்றேன்.

'கரன்ட் போச்சில்ல, எழுந்து தண்ணி குடிச்சிட்டு, ஜன்னல் திறந்து வைச்சிட்டு இப்பதான் படுத்தேன். நீங்க முழிச்சிட்டீங்க!'.

சின்ன சந்தேகத்தோடு கேட்டேன், 'நான் ஏதும் சத்தம் போட்டேனா இப்ப?'.

'இல்லையே, என்ன?'.

இப்போது சின்ன எரிச்சல், 'எப்பிடியும் முக்கிட்டு முனகிட்டு இருந்திருப்பேன். லேசா தோளைத் தொட்டிருக்கலாம்ல..'

'என்ன விளையாடுறீங்களா? இன்னைக்குதான் குறட்டைக் கூட விடாம அமைதியா, அழகா தூங்கிட்டிருந்தீங்க! எழுப்பணுமாம்ல.. மூஞ்சைப் பாரு!'

.

Tuesday, February 17, 2015

ச.தமிழ்ச்செல்வனின் ’பேசாத பேச்சு’!

எப்போது எழுத்தாளர்களைப் பற்றிய பேச்சு வந்தாலும் கிரா, நாஞ்சிலோடு மறக்காமல் ச.தமிழ்ச்செல்வனும் எனது ஆதர்சம் என நண்பர்களிடையே பீற்றிக்கொள்வதுண்டு. ஆனால், உண்மையைச் சொல்லவேண்டுமானால் அப்படிச் சொல்லிக்கொள்வதற்கு எனக்கு எந்தத் தகுதியும் கிடையாது. இன்னும் சொல்லப்போனால், நான் ஒரு பெரிய வாசிப்பாளி என்பது போல நண்பர்களிடமும், இணையத்தில் எழுதுகையிலும் காட்டிக்கொள்வதே ஒரு பச்சைப் பொய்தான்.
 எப்போதோ வாசித்த ஓரிரு கட்டுரைகளின் வாயிலாகவே தமிழ் சாரை என் மனதோடு ஒட்டிக்கொண்டுவிட்டேன். பின் தொடர்ந்து அவரது எழுத்துகளை விரட்டி விரட்டிப் படிக்கவோ, அவரது பேச்சை ஓடி ஓடிக் கேட்கவோ இல்லை. ஆனால், ஒரு பிளாகராக இருப்பதால், அவர் என் சகஹிருதயர் என்றெல்லாம் கூட கற்றுக்குட்டித்தனமாக எழுதிக்கொள்ளலாம், தவறில்லை. ஒரு எழுத்தாளரை விமர்சிக்கவும், பாராட்டவும், ஏன்.. சற்றே குறிப்பெழுதவும் கூட ஒரு தகுதி வேண்டும் என நினைப்பவன் நான். ஆனால், சிலருக்கெல்லாம் அந்த வாய்ப்பை நாம் தரத் தேவையில்லை. மூப்பு, பெருந்தன்மை, அனுபவம் எல்லாவற்றிலும் சிறியவனாக இருந்தாலும் தந்தையை/ ஒப்பாரை நாம் சகஹிருதயராக ஏற்கிறோம் அல்லவா? போலவே, என் சின்னஞ்சிறு பையனும் எனக்கு சகஹிருதயன்தானே? அவ்வாறு, ஏதோ ஒரு வகையில் தமிழ்ச்செல்வனையும் என் சகஹிருதயர் என நான் சொல்லிக்கொள்கிறேனே.! இன்னொரு வகையிலும், ஒரு சகஹிருதயரை அடையாளம் கண்டுகொள்ள ஒரே ஒரு கட்டுரை, ஒரே ஒரு சொல்லாடல் போதாதா என்ன?
சமூக நலன் என்பது என்ன? அது ஏதும் ஒரு வகையான கற்பனைப் பண்டமா? எத்தனைக் கிலோ இருக்கும்? நமக்கும் அதுக்குமெல்லாம் ஏதாவது தொடர்பிருக்கிறதா என்ன?
உன்னதமான எழுத்துகளைப் படிக்கும் போதெல்லாம் அழுகை, படபடப்பு, வேதனை, புன்னகை, நெஞ்சுகொள்ளாத பூரிப்பு, வெடிக்கும் சிரிப்பு, கேள்விகள், சுய பரிசோதனை என உணர்வுகளால் அலைக்கழிக்கப்படுவோம். அது எதுவானாலும் இறுதியில் ஒரு நிம்மதியும், வாழ்க்கையின் மீதான ஒரு நம்பிக்கையும் துளிர்க்கும். இன்னும் இந்த பூமியில், இழிவுகள் கண்டு வருந்தும், சக மனிதனுக்காக இரங்கும், தவறுகள் கண்டு திருத்த முனையும் மனிதர்கள் மிச்சமிருக்கிறார்கள் என்ற ஆசுவாசம் தரும் விளைவு அது. தளைகளில் சிக்கி, சிந்தனை முதிர்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமூகத்தில் அநீதி ஆட்சி செய்வது இயல்புதானே! அந்தப் பயத்தை, வேதனையை போக்குவது அப்படியான எழுத்துகள்தானே! அதிலும் தமிழ் சார் போன்றோர் எழுதுவதோடும், பேசுவதோடும் நின்றிடாது களப்பணியிலும் சோர்வுறாது இயங்குவது நிச்சயம் ஆறுதலை வழங்கும். இணைப்பாய், உறுத்தும் உன் பங்கென்ன இச்சமூகத்துக்கு என்ற கேள்வியும் கிடைக்கும்.
மேற்சொன்ன இந்த உணர்வைத்தான் “பேசாத பேச்செல்லாம்..” என்ற புத்தகத்தின் கட்டுரைகள் தருகின்றன. கட்டுரைகள் உயிர்மை இதழில் தொடராக வெளிவந்து, உயிர்மை வெளியீடாக புத்தக வடிவம் பெற்றவை.
கட்டுரைகளைப் பற்றி பேசுகிறேன் பேர்வழி என்று அச்சுப்பிச்சென்று எதையாவது எழுதிவைக்காமல், இத்தோடு இதை முடித்துக்கொள்ளலாம்தான். ஆனால் முடியவில்லை.
80களின் பிற்பகுதியில் நெல்லை மாவட்டத்தில் அறிவொளி இயக்கத்தின் வீச்சு ஏழாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த என் வரை நீண்டது. அவ்வியக்கத்தின் தூண்களில் ஒருவர் தமிழ் சார். அப்போது யார் ச.தமிழ்ச்செல்வன் என்பதையெல்லாம் நான் அறிந்திருக்கவில்லைதான். ஒருவேளை நான் அவரைப் பார்த்திருக்கக்கூடும். அவர் என் பள்ளிக்கு வந்திருக்கக்கூடும். அறிவொளி இயக்கமெனும் அந்தப் பெரியக் கடலின் ஒரு துளியாக நான் இருந்திருக்கிறேன். இதை நினைக்கும் போதே என் மனம் நெகிழ்கிறது. நான் எழுதப்படிக்கத் தெரியாத இரண்டு பெண்களுக்கான ஆசிரியனாக அப்போது இருந்தேன். அதில் ஒருவரை என்னால் கட்டுக்குள் கொண்டுவரமுடியவில்லை, அந்த வயதிற்கான பொறுப்பும், ஆளுமையும் எப்படி இருந்திருக்கும் என்பதை இப்போது சிந்திக்கிறேன். இன்னொரு பெண் எனது சித்தியாக இருந்தபடியால், அவருக்கு என்னளவில் உண்மையாக கற்பிக்க முயற்சித்தது இப்போதும் நினைவில் இருக்கிறது. அதில் நான் தோல்வியுற்றாலும் அந்த முயற்சி உண்மையானது.
மட்டுமல்லாது இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு கட்டுரையுமே என்னுள் பலவிதமான சிந்தனையை ஏற்படுத்திக்கொண்டேயிருந்தன.
எழுதுவதில் இருக்கும் சலிப்புக் காரணமாக, ‘தீம்தரிகிட’ இதழ் நின்றபோது ‘அப்பாடா’ என மகிழ்ந்ததாகக் கூறும் தமிழ் சாரின் வார்த்தைகள் தரும் சிரிப்புடன் புத்தகத்தைத் துவங்கினேன். முதல் கட்டுரையில், கல்லூரிப் பேச்சுப்போட்டியில் கடைசி நேரத் தலைப்பு, நடுவரின் விதி காரணமாக ஒரு வார்த்தைக் கூட பேச இயலாமல் திக்கித்திணறி மேடைக்குப் பின்புறம் குதித்து ஓடிப் போனதாக சொல்லியிருக்கிறார். அந்த நடுவர் பேராசிரியர் நா.வானமாமலை என்று அவர் முத்தாய்ப்பு வைக்கையில் இன்னொரு பெரும் சிரிப்பை தவிர்க்க இயலவில்லை. இத்தனைப் பெரிய பேச்சாளருக்கு, துவக்கத்தில் இப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டிருக்கும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. நான் பத்தாம் வகுப்பு படிக்கையில், ஒருநாள் காலைவணக்கக் கூட்டத்தில் ’குறளும் பொருளும்’ ஒப்புவிக்க ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டேன். அது என் ஆர்வத்தால் கூட கிடைத்திருக்கலாம். தயாரிப்பெல்லாம் சிறப்பாகத்தான் செய்துகொண்டுபோனேன். ஆனால், அப்படியொரு பின்விளைவை நானே கற்பனை கூட செய்திருக்கவில்லை. அத்தனைக் கூட்டத்தின் எதிரில், பின்டிராப் அமைதியில், பிரமாண்டமானதொரு ஹெட்மாஸ்டர் மிக அருகில் நிற்க என் வாய் உலர்ந்து மூடிக்கொண்டது. வகுப்பாசிரியர் முதலில் கிசுகிசுப்பாய் அதட்டினார், வண்டி நகரவில்லை. பின்பு ஒவ்வொருவராக அதட்டி, கெஞ்சி, கொஞ்சியும் பார்த்தனர். ஊஹூம். பிற ஆசிரியர்கள், தலைமையாசிரியர், கடைசியில் மொத்தப் பள்ளியே என்னைக் கெஞ்சிற்று. வாய் திறந்தால்தானே ஆச்சு? நானோ சகலமும் ஒடுங்கிப் போயல்லவா நின்றுகொண்டிருந்தேன். கடைசி முயற்சியாக ஒரு ஆங்கிலப்புலவரான எங்கள் ஹெட்மாஸ்டரே, அதுவும் திருமுதல் குறளான ‘அகர முதல’வைப் பிராம்ப்டிங் செய்தார். சமீபத்தில் ஒரு சினிமா படப்பிடிப்பில் ஒரு நடிகருக்கு பிராம்ப்டிங் செய்யப்பட்டபோது இந்த சம்பவம் நினைவிலாடி சிரித்துக்கொண்டேன்.
உலகைக் காணவும், உணரவும் உதவிய பஸ் ஸ்டாண்டுகளின், ரயில்வே ஸ்டேஷன்களின் இன்றைய மாற்றத்தை அவர் விவரிக்கையில் நாம் ஏன் இத்தனை சுயநலமாக மாறிவிட்டோம், நாம் ஏன் இப்படி ஓடிக்கொண்டிருக்கிறோம் என்ற கேள்விகள் எழுகின்றன. திருநெல்வேலி பஸ்ஸ்டாண்டில் கிடைத்த அவர் குறிப்பிடும், மொச்சை மசாலை நானும் உண்டிருக்கிறேன், எனும் நினைவு வந்து மனம் கனத்துப் போய்விட்டது. அவரது கட்டுரையில், ஒரு ரூபாய் வாடகையில் பஸ்ஸ்டாண்ட் கட்டிடங்களின் மொட்டைமாடிகளில் தூங்கி எழும் நபர்கள், எத்தனை எளிமையான வாழ்க்கையை எத்தனை கடினமானதாக மாற்றிவிட்டீர்கள் என்று கேட்கும் கேள்விக்கு நமது பதில் என்ன?
ஒருநாள், திருச்செந்தூர் மக்கள் கூட்டத்தில் என் தம்பி, ஒரு ஐந்து நிமிடம் தொலைந்து போன உணர்வு இப்போதும் நடுக்கத்தை உள்ளுக்குள் கொண்டுவரும். தமிழ்ச்செல்வன், ஆறாவது படிக்கும் தன் தம்பி, கோணங்கியை தொலைத்துவிட்டு பத்து நாட்களாக தேடிக்கொண்டிருந்திருக்கிறார். தங்கையின் மீதும், தம்பிகளின் மீதும் பாசம் ஆறாகப் பெருகிவழிகிறது அவருக்கு. அது சுயநலம் சார்ந்தது மட்டுமேயல்ல, யாரையும் தம்பியாக, தங்கையாக, மகளாக, மகனாகப் பார்க்கும் பெருமனம் அது. இல்லாத அக்காவை யார் யாரிடமோ பார்த்திருக்கிறார். நானும் அத்தகைய அக்காக்களை இப்போது நினைத்துக்கொள்கிறேன். அவருக்கொரு அழகர்சாமியின் அக்கா இருந்ததைப்போலவே எனக்கொரு சுந்தர்வேலின் அக்கா இருந்திருக்கிறாள். கையைப் பிடித்து கடைக்குக் கூட்டிச்செல்ல அவருக்கொரு சாந்தா இருந்ததைப்போலவே எனக்கொரு நங்கையார் இருந்திருக்கிறாள். ஆனால், இன்றைய குழந்தைகளுக்கு? என் பையனுக்கான அக்கா இருக்கிறாளா? அவளை நாம் இழந்துவிட்டோமா? கேஸ்ஸ்டவ்வும், மிக்ஸியும், கிரைண்டரும் பெண்களை சற்றேனும் விடுதலை செய்தமைக்காக மகிழ்வதா? அல்லது, விறகடுப்பும், அம்மியும், திருகையும் தந்த மனநிலையை நாம் இழந்துவிட்டதற்காக வருந்துவதா? தோசைக்கான அவரது பல்லாண்டு ஏக்கம் ஒருவகையில் மூத்தவனான எனக்கும் உரியதுதானே? அவர் தன் காதலை நினைவுகூர்கையில் மனம் மிதந்தது எனக்கு. அவரது ஜெயமேரியிடம் எனது ராஜேஸ்வரி இருந்தாள். ராஜேஸ்வரி புன்னகைத்த போது அவரைப்போல நானும் பதறிப்போய் ஓடித்தான் வந்துவிட்டேன்.
அவரது டாக்டர் ராமானுஜ மோகனைப்போலவே எனக்கும் ஒரு செல்வசண்முகம் இருந்திருக்கிறார். அவருக்கென நோயாளிகளே இல்லாத துவக்கக் காலத்தில் நோயாளியாகப் போய் பின்பு நண்பனாக மாறியிருக்கிறேன். எத்தனை மாலை வேளைகளில் இசைவான விஷயங்களை நாங்கள் பேசியிருக்கிறோம், புத்தகங்களைப் பறிமாறிக்கொண்டிருக்கிறோம் என்பதெல்லாம் நினைவுக்கு வருகிறது. ஆத்திகத்தில் நிகழ்வுகளும், சுவாரசியங்களும் சற்று தூக்கல்தான் என்பதை ஒப்புக்கொள்கிறேன் சார். காணாமல் போய்விட்ட அக்ரஹாரம் ஒன்று எங்கள் ஊரிலும் இருக்கிறது. நான் வாசலோடு நிறுத்தப்பட்ட என் நண்பன் பாலகிருஷ்ணன் வீடென்றும் எனக்கு ஒன்று இருந்தது. நான் பள்ளியில் ஒட்டி விளையாடிய, உணவைப் பகிர்ந்துகொண்ட தலித் நண்பர்களையும், சிறுபான்மை நண்பர்களையும் இப்போது நினைவுகூர்கிறேன். +2வில் கணிதத்தில் வழக்கமாக 100 மதிப்பெண்கள் எடுக்கும், எந்நேரமும் கேலியும், கிண்டலுமாக சிரித்த முகமாக இருக்கும் ஒரு நண்பன் அடுத்த சில ஆண்டுகளில் மனப்பிறழ்வுக்கு ஆளாகியதும், கல்லைப் போல இறுகிப்போய்விட்டிருந்த அவன் முகமும், அவனது தாயின் கண்ணீரும் இப்போது நினைவிலாடுகிறது.
ஒவ்வொரு கட்டுரையிலும், ஒவ்வொரு வரியிலும் உண்மையும், உணர்வும் நிரம்பியிருக்கின்றன. The other side of Silence எனும் ஊர்வசி புட்டாலியாவின் புத்தகத்தைப் படிக்கமுடியாமல் கீழே விழுந்து அழுததாக அவர் குறிப்பிடுகையில், அந்தப் புத்தகத்தை நான் இன்னும் படித்திருக்காவிடினும் என் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்ததை கட்டுப்படுத்திக் கொள்ளமுடியவில்லை. மனிதம் சிதைந்து அழுகிப் போகும் சூழல், வரலாறெங்கும் இருப்பதை அறிகிறோம். ஆனால், அவை ஏன், எப்படி ஏற்படுகின்றன என்பதை உணர்ந்துகொள்ளமுடியாத தவிப்பு கண்ணீரைத் தருவிக்கிறது. எனக்கான 1947ம், மார்புகள் அறுத்தெறியப்பட்ட ஒரு பெண்ணின் 1947ம் வேறு வேறானது என்பது அழுகையைத்தான் வரவைக்கிறது. தெரிந்தும், தெரியாமலும் தலித்துகளையும், சிறுபான்மையினரையும், பெண்களையும் எந்த வகையிலாவது நாம் ஒவ்வொருவரும் அடிமைப் படுத்தவோ, காயப்படுத்தவோ செய்துகொண்டுதான் இருக்கிறோம் இன்னும் என்பது உண்மைதானே!
சரிதான், ஆக்கிரமிப்பைத் தவிர உண்மையில் வேறேதும் உருப்படியாய் ஆண்களுக்குச் செய்யத் தெரியவில்லைதான் தமிழ் சார்!

பேசாத பேச்செல்லாம்…
ச. தமிழ்ச்செல்வன்
உயிர்மை பதிப்பகம்
ரூ. 80
- See more at: http://solvanam.com/?p=38217#sthash.lRlO7e7b.dpuf