Thursday, January 22, 2015

நண்பர்களின் ‘தொட்டால் தொடரும்’


ஒரு நண்பர் என்றாலே பேசித்தான் ஆகணும். அதிலும் இதில் ஒன்றல்ல, இரண்டல்ல எனது மூன்று நண்பர்கள் இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள்.

கேபிள் சங்கர்
விஜய் ஆம்ஸ்ட்ராங்
கார்க்கி பவா

மூவருமே தனிப்பட்ட முறையில் எனக்கு நெருங்கிய நண்பர்களாவர். மிக நீண்ட போராட்டங்களுக்குப் பின்னர் இயக்குனராகும் தனது இலக்கை அடைந்திருக்கிறார் கேபிள் சங்கர் தொட்டால் தொடரும் படத்தின் மூலமாக. ஒளிப்பதிவாளராக விஜய் ஆம்ஸ்ட்ராங்கிற்கு இது ஐந்தாவது படம். உதவி இயக்குனராகவும், வசனகர்த்தாவாகவும் தனது பங்களிப்பைச் செய்து திரையுலகில் நுழைந்திருக்கிறான் கார்க்கி. சினிமாவில் ஒரு நண்பர் ஒரு முக்கியப் பொறுப்பில் இருந்தாலே ஓரமா நின்னு ஷூட்டிங் பார்க்கலாம். இதில் மூன்று பேர். கேட்கவும் வேண்டுமா? ஃபீல்டுக்குள் நிற்கிறோமா? வெளியே நிற்கிறோமா என்று தெரியாத அளவுக்கு கேமராவுக்கு பக்கத்தில் நின்று வேடிக்கை பார்த்தாயிற்று. ஷூட்டிங் மட்டுமல்லாது இயன்ற அளவுக்கு முற்தயாரிப்பு, பிற்தயாரிப்பு என பணிகள் என அனைத்தையும் பார்த்தேன். என்னவா? வேடிக்கைதான்!

ஒரு கட்டத்தில், “என்னபா எல்லாம் ஒழுங்கா போகுதா?” என்று தயாரிப்பாளர் ரேஞ்சுக்கு இவர்களை விசாரிக்காத குறைதான். :-))

பண்ணின இம்சைக்கெல்லாம் சேத்துவைச்சி நான் வெளியூரில் இருக்கும் சமயமாப் பார்த்து ப்ரிவியூ வைச்சு பழிவாங்கிட்டான்கள். :-(( 


ஆனால், ஒரு வகையில் அது நல்லதுதான். இந்தத் த்ரில் மிச்சமிருக்காது. அதோடு ஷூட்டிங், பிற்தயாரிப்பு, க்ளிப்பிங்ஸ்னு தலையும், வாலுமா பார்த்து பார்த்து, இப்போ படத்தை கதையோட்டத்துடன் முழுதாக திரையில் பார்க்க மிக ஆவலாக இருக்கிறது. முதல் பாதியில் கார்க்கியின் கலகல கவுண்டர் டயலாக் வசனங்களும், அழகான காதல் காட்சிகளுமாக இருக்கும் படம். தொடர்ந்து ஹீரோயின் சூழல் காரணமாக ஒரு சிக்கலில் வலியப் போய் மாட்டிக்கொண்டு தவிக்க, இரண்டாம் பாதியில் ஹீரோ அவரை மீட்கப்போராடும் ஆக்‌ஷன் காட்சிகளுமாக இருக்கும் என நம்புகிறேன். ஒரு க்ளீன் எண்டர்டெயினருக்கு நான் கேரண்டி என்கிறார் கேபிள்சங்கர். ஆம்ஸ்ட்ராங் பாண்டிச்சேரியில் சேஸிங், ஆக்‌ஷன் காட்சிகளை ஹெலிகேம் உட்பட பல ஆங்கிள்களில் மிகச்சிரமத்துடன் படமாக்கியதை நேரில் பார்த்தேன். அவை படத்தில் எவ்வாறு வந்திருக்கின்றன என்று காணும் ஆவலும் உண்டு.

நாளை (23.01.15) ’தொட்டால் தொடரும்’ ரிலீஸாகும் இவ்வேளையில் அனைவரும் தியேட்டருக்கு சென்று படத்தைப் பார்த்து மகிழ/ நண்பர்களை முயற்சியை ஆதரிக்க நினைவூட்டுகிறேன். விமர்சனம் செய்ய அனைவரும் பேனாவும் கையுமாகவோ, மொபைலும் ஃபேஸ்புக்குமாகவோ போனாலும் மகிழ்ச்சிதான். அந்த விஷயத்திலும் கேபிள் த்ரில்லிங்காக காத்துக்கொண்டுதான் இருப்பார் என நினைக்கிறேன்.

படம் பெருவெற்றியடைய நண்பர்கள் மூவருக்கும் என் அன்பான வாழ்த்துகள்!

.

Wednesday, January 21, 2015


ஊர் நண்பர்களின் உற்சாகத்தைக் கெடுக்க வேண்டாமே என்பதற்காக பொங்கலன்றிரவே அம்பாசமுத்திரம் திரையரங்கு ஒன்றில் திரைக்கு பத்தடிக்கு முன்னால் தரையில்அமர்ந்து ’ஐ’யைப் பார்த்துவிட்டாலும் நேரமின்மையாலும், இதற்கெல்லாம் விமர்சனம் ஒரு கேடா என்று தோன்றியதாலும் இதுவரை எழுதவில்லை. இருந்தாலும் மீடியமா இருக்குறதை விட்டுவிட்டாலும் பரவாயில்லை, ரொம்ப பாராட்ட வேண்டியதையும், ரொம்ப திட்ட வேண்டியதையும் தவிர்க்காம எழுதிடணும்ங்கிற நம் கொள்கையின் படி இதை இப்போ எழுதலாகிறேன். 

நம் ரசனை, சமூக ரசனை என்ற பேச்சு வருகையிலெல்லாம் இன்னொரு சிக்கலும் எழும். சமயத்தில் ’இஃதொரு உருப்புடாத சமூகம், இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாகப் போகட்டும்’ என்று நாம் புலம்புவதுண்டு. பிற்பாடு, ’சமூகம் எவ்வழி அவ்வழி நாமும், மக்கள் தீர்ப்பே இறுதியானது’ என்றும் சைடு வாங்குவதுண்டு. போலவே ரசனை விஷயத்திலும் இது ஒரு கேடுகெட்ட ரசனையுள்ள சமூகம் என்று திட்ட எத்தனிக்கையில், ரசனை தனி மனிதன் பாற்பட்டது, உன் ரசனை மட்டும் எவ்விதத்தில் உசத்தியாம்? என்றொரு கேள்வியும் இன்னொருவர் கேட்காமலே நமக்குள் எழத்தான் செய்கிறது.

இருக்கைகள் நிரம்பி, இண்டு இடுக்கெல்லாம் தரையும் நிரம்பி உட்கார இடமில்லாமல் தியேட்டர் நிரம்பி வழிவதைப் பார்க்கையில் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.

ஆனால் அந்தக் கூட்டத்தில் சரிபாதி கூட்டம், ஒரு திருநங்கையை கேலி செய்கையில், அவமானப் படுத்துகையில், அவரது உணர்வுகளை துச்சமாக மதிக்கையில் ஒரு நகைச்சுவைக் காட்சியைப் பார்ப்பதைப்போல சிரித்து உற்சாகமாகிறது. உடற்சிதைவு செய்யப்பட்ட நபர்களைப் பார்க்கையில் குதூகலிக்கிறது. 


அன்பே சிவம் படத்தில் வரும் ஒரு காட்சி, சந்தானபாரதி ஒரு திரைங்கில் ‘அனகோண்டா’ படம் பார்த்துக்கொண்டிருப்பார். அதில் பாம்பு ஒன்று மனிதர்களை விழுங்குகையில் உற்சாகமாக சிரித்து மகிழ்வார். ஒரு பாம்பு, மனிதனை விழுங்குவது சிரிப்பதற்குரிய விஷயம்தானா? அங்கு நமக்கு பயமோ, பரிதாபமோ, த்ரில்லோ ஏற்படவேண்டாமா? அப்படியான சந்தானபாரதியாகத்தான் இந்த சமூகத்தின் சரிபாதிக்கூட்டம் இருக்கிறது. ஆனால், ஒரு நல்ல படைப்பாளி என்ன செய்யவேண்டும்? இந்த உணர்வுகளைச் செப்பனிட முயற்சி செய்ய வேண்டாமா? எது துயரம், எது மகிழ்ச்சி என்பதற்கான வேறுபாடுகளை உணரும் வகை செய்ய வேண்டாமா? ஆனால் இங்கு நடப்பது என்ன? 

சமூகத்தின் தளைகளிலிருந்து இன்னும் விடுபடாத திருநங்கையரை இப்போதுதான் மெல்ல மெல்ல திரும்பிக் கவனிக்க ஆரம்பித்திருக்கிறோம். அதை ஊக்குவிக்காவிட்டாலும் பரவாயில்லை, ஒரு இருபதாண்டுகள் பின்னோக்கி இழுத்துக்கொண்டாவது போகாமலிருக்கலாமில்லையா?

ஓஜாஸ் ரஜனி திரைத்துறையில் இயங்கி வரும் இந்தியாவின் பிரபலமான ஒரு ஸ்டைலிஸ்ட்! அவர் ஒரு திருநங்கை. அவரது நிஜ காரெக்டரை அப்படியே தழுவி ஒரு காரெக்டர் வடிவமைக்கப்பட்டிருக்கிறது படத்தில். அதில் அவரே நடிக்கவைக்கப்படுகிறார். நம் மனதில் என்னவெல்லாம் ஆசை தோன்றும்? படத்திலும் அதே மதிப்புடன், ஆளுமையுடன் அவர் காண்பிக்கப்படலாம். தகுந்த காரணங்களுடன் ஹீரோ மீது அவருக்கு காதல் வரலாம். அந்தக் காதல் மிகச்சரியான முறையில் வலியுடன் நிராகரிக்கப்படுகையில் அவர் ஒரு நெகடிவ் காரெக்டராக வடிவெடுக்கலாம். இருவருக்குமான போராட்டம் ஆவேசமாக தொடரலாம். இதெல்லாம்தானே? ஆனால், அதெப்படி நாம் எதிர்பார்ப்பதை செய்வது? நிஜ வாழ்வில் போராடி வெற்றிபெற்ற ஓஜாஸாகவே இருந்தாலும், அவரைத் தழுவியே உருவாக்கப்பட்ட காரெக்டராக இருந்தாலும் அவரைச் சுற்றி கும்மியடித்து, “ஊரோரம் புளியமரம்” என பாடத்தான் வைப்போம். ஏனென்றால் சரிபாதிக்கூட்டத்தின் ரசனை சார்ந்த விஷயமாயிற்றே இது. எந்தக் காரணமும் இல்லாமல், விக்ரமை, அவர் உடலழகைப் பார்த்ததுமே ஓஜாஸுக்கு ஒரு மூன்றாம்தரப் பிறவியைப்போல உடல் சார்ந்த காதல் பிறக்கும். சுயமரியாதை என்ற ஒன்றெல்லாம் திருநங்கையர்க்கு எதற்கு? அவரைப் பார்க்கும் போதெல்லாம் முகச்சுழிப்போடு, அருவருப்பாக ஒதுக்குவார் விக்ரம், இந்தச் சரிபாதிக் கூட்டத்துக்கு பிடிக்கும் விதமாக. அவரது காதலையும் நிராகரிப்பார். தன்னை அவமதித்த போதும், கேலி செய்தபோதெல்லாம் வராத கோபம், காதல் மறுக்கப்பட்டபோது மட்டும் ஓஜாஸுக்கு வரும். அதுவும் எப்படி? கொலையை விடவும் குரூரமான ஒரு தண்டனையை விக்ரமுக்கு வழங்கும் அளவுக்கு! என்ன மாதிரியான கேரக்டர் டிஸைன் இது? ஒரு பொறுப்புள்ள, மூத்த, முக்கியமான இயக்குனர் செய்யும் காரியமா இது?

படத்தில் இன்னும் சில வில்லன்களும் இருக்கிறார்கள். அவர்கள் விக்ரமுக்கு ஒரு கிருமியால் உடற்சிதைவு நோயை ஏற்படுத்துகிறார்கள். எந்தப் பெரிய தவறுமே செய்யாத நிலையிலும் விக்ரம் குரூரமாக பாதிக்கப்படுகிறார். போகட்டும்! உடல் நலிவடைந்த நிலையில் எப்படி இவர் வில்லன்கள் குழுவை பழிவாங்கப்போகிறார் என்ற ஒரு பெரிய சுவாரசியம் மிச்சமிருக்கிறதே என்றாவது நாம் நிமிர்ந்து உட்கார்ந்தால், அவர்கள் செய்ததையே இவரும் செய்கிறார். ஒவ்வொருவரையும், ஒவ்வொரு வகையில் குரூரமாக்கி மகிழ்கிறார். எப்படி? ‘ஒரு கார் விபத்தில் ஒருவர் மரணம்’ என்ற செய்தியை, ‘ஒரு கார் விபத்தில் ஒருவர் மண்டை உடைந்து, குடல் பிதுங்கி, மூளை சிதறி, உடல் நசுங்கி செத்தார்’ என்று நம் பத்திரிகைகள் எழுதுமே அதைப்போல! 

இந்த நிலையில் படத்தில் வேறு என்ன சிறப்புகள் இருக்கின்றன என்றெல்லாம் எனக்குப் பார்க்கத்தோன்றவில்லை. ’பெரிய ஆள் சொல்லியாயிற்று, சக்ஸஸ்புல் டைரக்டர், சக்ஸஸ் மட்டும்தான் ஒரே தகுதி. இனி கண், காது, மூளை அனைத்தையும் மூடிக்கொண்டு வேலையை மட்டும்தான் பார்க்கவேண்டும், அதுதான் ஒரு சிறந்த நடிகனின் கடமை’ எனும் விக்ரமின் கொள்கையைப் பாராட்டுவோம், அட்லீஸ்ட் இயக்குனர் சொல்படி கேட்கும் நல்லபழக்கமாவது மிச்சமாகிறதே! இதைப்போலவே தொடர்ந்து ரசனையை வளர்க்கும், ஓடக்கூடிய படங்களாகவே எடுத்து வெற்றிகரமாக திகழுங்கள் ஐயா! நல்லது!

*

Wednesday, January 14, 2015

விஜய் ஆம்ஸ்ட்ராங்கின் ‘ஒளி எனும் மொழி’


இந்த வலைப்பூவில் கடந்த சில ஆண்டுகளாக இயங்கிவருவதன் பின்விளைவுகளில் ஒன்றுதான் அவ்வப்போது கிடைக்கும் சினிமா/ எழுத்து சார்ந்து இயங்கும் நண்பர்களின் நட்பு. இது உண்மையில் மகிழ்வுக்குரிய செய்திதானா அல்லது, சம்பந்தப்பட்ட எனக்கும், அந்த நபருக்குமான சோதனையான செய்தியா என்பதை உணரும் பக்குவம் இன்னும் வாய்க்காததால்தான் இப்படி பொதுவாகப் பின்விளைவுகள் என்று குறிப்பிட்டிருக்கிறேன். எனக்கு மட்டுமல்லாது இது இன்னும் பலருக்கும் நிகழக்கூடிய நிகழ்வுதான்.

எழுத்துக்களில் முதிர்ச்சியும், நற்சிந்தனையுமாய் இருக்கும் எழுத்தாளர்களைக் கண்டு வியந்திருப்போம் நாம். அதிற்பலவும் நம் சிந்தனையையேச் சமைக்கும்/ மாற்றும் சக்தி வாய்ந்தவையாகவும் இருந்திருக்கும். அத்தகைய எழுத்துக்களுக்குச் சொந்தமானவர்கள் நிச்சயம் பெருந்தன்மையும், அன்பும் நிறைந்தவர்களாக இருப்பார்கள் என்றும் கூட நாம் எண்ணலாம். ஆனால் முதலில் சொன்ன குணநலன்களுக்கும், இரண்டாவது சொல்லப்பட்ட குணநலன்களுக்கும் பெரும்பாலும் சம்பந்தம் இருப்பதில்லை. அது சரி, ஒரு எழுத்தாளனிடம் அன்பை எதிர்பார்ப்பது ஒரு வாசகனின் முதிர்ச்சிக்குறைவுதான் இல்லையா? ஆனால் இன்னொரு சிக்கலும் இருக்கத்தான் செய்கிறது. முதிர்ச்சி, வளர்ச்சி என்பது ஒரு தொடர் ஓட்டம் போன்றதாகும். ஒரு எழுத்தாளன் நம்மில் உண்டுசெய்த ஒரு சிந்தனை, நம் அனுபவங்கள் மற்றும் நமது சிந்தனையோட்டத்தில் அதன் அடுத்த பரிமாணத்தைத் தொட்டிருக்கும். அதை அந்த எழுத்தாளனுடனேயே வாதிக்கும் வாய்ப்பு கிடைத்தால் அது அதிர்ஷ்டமா? துரதிர்ஷ்டமா என்பது அந்தந்த எழுத்தாளனின் முதிர்ச்சியையும், எதையும் தாங்கும் நமது இதயத்தையும் பொறுத்தது.

சரி அதை விடுங்க, உங்க அனுபவம் எப்படினு கேட்கிறீங்களா? அதானே! ம்ஹூம்! மூச்!! நோ கமெண்ட்ஸ்!

இப்படியெல்லாம் சொல்ல அவசியப்பட்டிராத ஓரிருவரில் ஒருவர்தான் விஜய் ஆம்ஸ்ட்ராங். உண்மையில் அவருடைய ஒளிப்பதிவைப் பார்த்து மயங்கி, கிடைத்தால் இவர் நட்புதான் வேண்டும் என்று விரும்பியெல்லாம் நட்புக் கொள்ளவில்லை நான். அவருக்கு என் எழுத்தில் எதுவோ பிடித்திருக்க, எனக்கு அவர் எழுத்தில் எதுவோ பிடித்திருக்க இருவரும் ஒரு நாள் சந்தித்தித்துக்கொண்டோம். முதல் சந்திப்பே அப்படியொன்றும் சொல்லிக்கொள்கிற மாதிரி எல்லாம் இல்லை. அது தொடர்ந்திருக்கவெல்லாம் வாய்ப்பு மிகக்குறைவாகத்தான் இருந்தது. ஆயினும் தொடர்ந்தது. அதன் பின்புதான் ’நீர் நிலைக்குத்தான்..’ என்பது போல ஒருவரையொருவர் உணர்ந்துகொண்டோம். இருவருக்குமான இடமும், நட்பும், தேவையும் எங்கள் இருவரிடமும் இருந்தது.

அலைபாயும் மனிதர்களின் அவஸ்தைகள், அடிப்படை நேர்மை கொண்ட மனிதர்களின் அவஸ்தைகள், கற்றலில் ஒரு நிறைவில்லா மனிதர்களின் அவஸ்தைகள் என எங்கள் ஒவ்வொரு சந்திப்பிலும் பேசுவதற்கான பாடுபொருட்கள் நிறைய இருந்தன, இன்னும் இருக்கின்றன.
வெற்றி என்பதை இரண்டாம் பட்சமாக எண்ணுகின்ற, ஆனால், ஒரு அங்கீகாரத்துக்காக போராடும் கலைஞனாக விஜய் ஆம்ஸ்ட்ராங்கை எனக்கு நன்றாகவே தெரியும். சுய முன்னிறுத்தல் குறித்த விவாதம் அடிக்கடி எங்களுக்குள் வரும். சுய முன்னிறுத்தலும், சுய மரியாதையும் எதிரெதிரான சங்கதிகள். இன்றைய போட்டி நிறைந்த உலகில் சுய முன்னிறுத்தலின் அவசியத்தை இருவரும் விவாதித்துக்கொண்டாலும், இறுதியில் கடையோரத்தில் புன்னகையுடன் விவாதத்தை முடித்துக்கொள்வோம். அங்கே எங்கள் சுய மரியாதைதான் ஜெயித்திருக்கும். ஆயினும் பல்வேறு வகைகளிலும் புத்தகமாக்கும் அவசியமும், தகுதியும் கொண்ட ஒரு கட்டுரைத் தொகுப்பை புத்தகமாக்கும் முயற்சியைக் கூட சுய முன்னிறுத்தலாகக் கருதினால் என்னதான் செய்வது? அதைச்செய்ய ஒரு ஆதிமூலகிருஷ்ணனும், தமிழ் ஸ்டுடியோ அருணும்தான் வரவேண்டியிருக்கிறது.


கடந்த சில ஆண்டுகளில் சினிமா மற்றும் ஒளிப்பதிவு சார்ந்து விஜய் ஆம்ஸ்ட்ராங் அவரது வலைப்பூவில் (http://blog.vijayarmstrong.com/2015/01/blog-post.html) எழுதிய கட்டுரைகள் ஒரு கோர்வையாக தேர்ந்தெடுக்கப்பட்டு, தேவைப்படும் பகுதிகள் புதிதாக எழுதி இணைக்கப்பட்டு ஒரு முழுமையான புத்தகமாக உருப்பெற்றுள்ளன. அவரது திரைமொழி முழுமை பெற்றிருக்கிறதா என்பது எனக்குத் தெரியாது. அதில் இன்னும் பல கலைஞர்களின் ஒத்துழைப்பு அவசியப்படுகிறது. ஆனால் அவருக்கென ஒரு எழுத்து வசப்பட்டிருக்கிறது என்பதை துவக்கத்திலிருந்தே கவனித்துவரும் வாசகனாக நானறிவேன். என்னைப் போலல்லாது நல்ல தமிழில் எழுத விருப்பம் கொண்டவர். வாசிப்பதிலும், தொடர்ந்து கற்பதிலும் ஆர்வம் கொண்டவர். இந்தப் புத்தகம் முழுக்க சினிமா சார்ந்த தொழில்நுட்பங்கள் குறித்த விரிவான அறிமுகம் எனினும் அவரது பிற சினிமா கட்டுரைகளுக்கும் நான் ரசிகனாவேன். சினிமா மட்டுமல்லாது அனைத்திலும் ஒரு பொறுப்புள்ள அணுகுமுறை கொண்டவர். எங்களை இணைக்கும் கயிறுகளில் பிரதானமானது நகைச்சுவை உணர்வு. அவரது சூழல் சார்ந்து நிகழும் நிகழ்வுகள், மனிதர்களைப் பற்றி அவர் பகிர்ந்துகொள்ளும் செய்திகளில் மிகுந்த நகைச்சுவையும், அடிச்சரடாக தொழில்சார்ந்த ஒரு அக்கறையும் இருக்கும்.

தமிழ் ஸ்டுடியோ, நல்ல சினிமாவுக்காக தன்முனைப்போடு இயங்கிவரும் ஒரு இயக்கமாகும். அப்படி ஒரு இயக்கத்தின் ‘பேசாமொழி’ பதிப்பகத்திலிருந்து வருவதிலிருந்தும், காட்சிமொழி வசப்பெற்ற கலைஞரான மிஷ்கின் அணிந்துரை தந்திருப்பதிலிருந்துமே ‘ஒளி எனும் மொழி’யின் முக்கியத்துவத்தையும், தரத்தையும் நாம் அறியமுடியும்.
’ஒளி எனும் மொழி’, முதலில் ஒரு தொழில்நுட்பமாக ஒளிப்பதிவை அணுகுமாறுதான் வடிவமைக்கப்பட்டது. அதன் பின்பு முன்னதாக ஒளிப்பதிவுக்கருவிகள், இன்றைய டிஜிடல் சினிமா, அதற்கும் முன்னதாக சினிமா எனும் ஒரு பிராஜக்டின் பல்வேறு நிலைகள், செயல்பாடுகள் இவற்றைப் பற்றியெல்லாம் ஒரு விரிவான அறிமுகம் தேவைப்படுவதை உணர்ந்தோம். அதன் பின்னர் புத்தகம் இப்போதைய இந்த வடிவத்தைப் பெற்றது. ஆக, ஒளிப்பதிவுத் தொழில்நுட்பம் இப்புத்தகத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டது எனினும் அது இன்னும் விரிவாக எழுதப்படவேண்டிய ஒன்றாக உணர்ந்தோம். குறிப்பாக 5C’s எனும் பகுதி ஒரு சிற்றறிமுகமாக மட்டுமே உள்ளது. இந்தப் புத்தகத்திற்கான வரவேற்பே இதன் தொடர்ச்சிகளுக்கு வழிவகுக்கும்.

இந்தப் புத்தகத்தைப் பொறுத்தவரை, முதல் வாசகன் எனும் பொறுப்பையும், மீச்சிறு பங்களிப்புகளையும் செய்திருக்கிறேன். ஆக, இக்கட்டுரை புத்தகம் குறித்த ஒரு அறிமுகம்தானே தவிர விமர்சனமல்ல. அது உங்களிடமிருந்து வரவேண்டியது. அதற்காக மிக ஆவலுடன் காத்திருப்பேன். இந்த சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கீழ்க்காணும் அரங்குகளில் ’ஒளி எனும் மொழி’ கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. தவிர, எப்போதும் டிஸ்கவரி புக் பேலஸில் கிடைக்கும்.

460: பரிசல் புத்தக நிலையம்
588: டிஸ்கவரி புக் பேலஸ்
577: பனுவல் விற்பனை நிலையும்
583: வம்சி புக்ஸ்
519 A: பூவுலகின் நண்பர்கள்
*
ஒளி எனும் மொழி
விஜய் ஆம்ஸ்ட்ராங்
288 பக்கங்கள்
250 ரூபாய்
பேசாமொழி பதிப்பகம்

.