Wednesday, January 21, 2015


ஊர் நண்பர்களின் உற்சாகத்தைக் கெடுக்க வேண்டாமே என்பதற்காக பொங்கலன்றிரவே அம்பாசமுத்திரம் திரையரங்கு ஒன்றில் திரைக்கு பத்தடிக்கு முன்னால் தரையில்அமர்ந்து ’ஐ’யைப் பார்த்துவிட்டாலும் நேரமின்மையாலும், இதற்கெல்லாம் விமர்சனம் ஒரு கேடா என்று தோன்றியதாலும் இதுவரை எழுதவில்லை. இருந்தாலும் மீடியமா இருக்குறதை விட்டுவிட்டாலும் பரவாயில்லை, ரொம்ப பாராட்ட வேண்டியதையும், ரொம்ப திட்ட வேண்டியதையும் தவிர்க்காம எழுதிடணும்ங்கிற நம் கொள்கையின் படி இதை இப்போ எழுதலாகிறேன். 

நம் ரசனை, சமூக ரசனை என்ற பேச்சு வருகையிலெல்லாம் இன்னொரு சிக்கலும் எழும். சமயத்தில் ’இஃதொரு உருப்புடாத சமூகம், இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாகப் போகட்டும்’ என்று நாம் புலம்புவதுண்டு. பிற்பாடு, ’சமூகம் எவ்வழி அவ்வழி நாமும், மக்கள் தீர்ப்பே இறுதியானது’ என்றும் சைடு வாங்குவதுண்டு. போலவே ரசனை விஷயத்திலும் இது ஒரு கேடுகெட்ட ரசனையுள்ள சமூகம் என்று திட்ட எத்தனிக்கையில், ரசனை தனி மனிதன் பாற்பட்டது, உன் ரசனை மட்டும் எவ்விதத்தில் உசத்தியாம்? என்றொரு கேள்வியும் இன்னொருவர் கேட்காமலே நமக்குள் எழத்தான் செய்கிறது.

இருக்கைகள் நிரம்பி, இண்டு இடுக்கெல்லாம் தரையும் நிரம்பி உட்கார இடமில்லாமல் தியேட்டர் நிரம்பி வழிவதைப் பார்க்கையில் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.

ஆனால் அந்தக் கூட்டத்தில் சரிபாதி கூட்டம், ஒரு திருநங்கையை கேலி செய்கையில், அவமானப் படுத்துகையில், அவரது உணர்வுகளை துச்சமாக மதிக்கையில் ஒரு நகைச்சுவைக் காட்சியைப் பார்ப்பதைப்போல சிரித்து உற்சாகமாகிறது. உடற்சிதைவு செய்யப்பட்ட நபர்களைப் பார்க்கையில் குதூகலிக்கிறது. 


அன்பே சிவம் படத்தில் வரும் ஒரு காட்சி, சந்தானபாரதி ஒரு திரைங்கில் ‘அனகோண்டா’ படம் பார்த்துக்கொண்டிருப்பார். அதில் பாம்பு ஒன்று மனிதர்களை விழுங்குகையில் உற்சாகமாக சிரித்து மகிழ்வார். ஒரு பாம்பு, மனிதனை விழுங்குவது சிரிப்பதற்குரிய விஷயம்தானா? அங்கு நமக்கு பயமோ, பரிதாபமோ, த்ரில்லோ ஏற்படவேண்டாமா? அப்படியான சந்தானபாரதியாகத்தான் இந்த சமூகத்தின் சரிபாதிக்கூட்டம் இருக்கிறது. ஆனால், ஒரு நல்ல படைப்பாளி என்ன செய்யவேண்டும்? இந்த உணர்வுகளைச் செப்பனிட முயற்சி செய்ய வேண்டாமா? எது துயரம், எது மகிழ்ச்சி என்பதற்கான வேறுபாடுகளை உணரும் வகை செய்ய வேண்டாமா? ஆனால் இங்கு நடப்பது என்ன? 

சமூகத்தின் தளைகளிலிருந்து இன்னும் விடுபடாத திருநங்கையரை இப்போதுதான் மெல்ல மெல்ல திரும்பிக் கவனிக்க ஆரம்பித்திருக்கிறோம். அதை ஊக்குவிக்காவிட்டாலும் பரவாயில்லை, ஒரு இருபதாண்டுகள் பின்னோக்கி இழுத்துக்கொண்டாவது போகாமலிருக்கலாமில்லையா?

ஓஜாஸ் ரஜனி திரைத்துறையில் இயங்கி வரும் இந்தியாவின் பிரபலமான ஒரு ஸ்டைலிஸ்ட்! அவர் ஒரு திருநங்கை. அவரது நிஜ காரெக்டரை அப்படியே தழுவி ஒரு காரெக்டர் வடிவமைக்கப்பட்டிருக்கிறது படத்தில். அதில் அவரே நடிக்கவைக்கப்படுகிறார். நம் மனதில் என்னவெல்லாம் ஆசை தோன்றும்? படத்திலும் அதே மதிப்புடன், ஆளுமையுடன் அவர் காண்பிக்கப்படலாம். தகுந்த காரணங்களுடன் ஹீரோ மீது அவருக்கு காதல் வரலாம். அந்தக் காதல் மிகச்சரியான முறையில் வலியுடன் நிராகரிக்கப்படுகையில் அவர் ஒரு நெகடிவ் காரெக்டராக வடிவெடுக்கலாம். இருவருக்குமான போராட்டம் ஆவேசமாக தொடரலாம். இதெல்லாம்தானே? ஆனால், அதெப்படி நாம் எதிர்பார்ப்பதை செய்வது? நிஜ வாழ்வில் போராடி வெற்றிபெற்ற ஓஜாஸாகவே இருந்தாலும், அவரைத் தழுவியே உருவாக்கப்பட்ட காரெக்டராக இருந்தாலும் அவரைச் சுற்றி கும்மியடித்து, “ஊரோரம் புளியமரம்” என பாடத்தான் வைப்போம். ஏனென்றால் சரிபாதிக்கூட்டத்தின் ரசனை சார்ந்த விஷயமாயிற்றே இது. எந்தக் காரணமும் இல்லாமல், விக்ரமை, அவர் உடலழகைப் பார்த்ததுமே ஓஜாஸுக்கு ஒரு மூன்றாம்தரப் பிறவியைப்போல உடல் சார்ந்த காதல் பிறக்கும். சுயமரியாதை என்ற ஒன்றெல்லாம் திருநங்கையர்க்கு எதற்கு? அவரைப் பார்க்கும் போதெல்லாம் முகச்சுழிப்போடு, அருவருப்பாக ஒதுக்குவார் விக்ரம், இந்தச் சரிபாதிக் கூட்டத்துக்கு பிடிக்கும் விதமாக. அவரது காதலையும் நிராகரிப்பார். தன்னை அவமதித்த போதும், கேலி செய்தபோதெல்லாம் வராத கோபம், காதல் மறுக்கப்பட்டபோது மட்டும் ஓஜாஸுக்கு வரும். அதுவும் எப்படி? கொலையை விடவும் குரூரமான ஒரு தண்டனையை விக்ரமுக்கு வழங்கும் அளவுக்கு! என்ன மாதிரியான கேரக்டர் டிஸைன் இது? ஒரு பொறுப்புள்ள, மூத்த, முக்கியமான இயக்குனர் செய்யும் காரியமா இது?

படத்தில் இன்னும் சில வில்லன்களும் இருக்கிறார்கள். அவர்கள் விக்ரமுக்கு ஒரு கிருமியால் உடற்சிதைவு நோயை ஏற்படுத்துகிறார்கள். எந்தப் பெரிய தவறுமே செய்யாத நிலையிலும் விக்ரம் குரூரமாக பாதிக்கப்படுகிறார். போகட்டும்! உடல் நலிவடைந்த நிலையில் எப்படி இவர் வில்லன்கள் குழுவை பழிவாங்கப்போகிறார் என்ற ஒரு பெரிய சுவாரசியம் மிச்சமிருக்கிறதே என்றாவது நாம் நிமிர்ந்து உட்கார்ந்தால், அவர்கள் செய்ததையே இவரும் செய்கிறார். ஒவ்வொருவரையும், ஒவ்வொரு வகையில் குரூரமாக்கி மகிழ்கிறார். எப்படி? ‘ஒரு கார் விபத்தில் ஒருவர் மரணம்’ என்ற செய்தியை, ‘ஒரு கார் விபத்தில் ஒருவர் மண்டை உடைந்து, குடல் பிதுங்கி, மூளை சிதறி, உடல் நசுங்கி செத்தார்’ என்று நம் பத்திரிகைகள் எழுதுமே அதைப்போல! 

இந்த நிலையில் படத்தில் வேறு என்ன சிறப்புகள் இருக்கின்றன என்றெல்லாம் எனக்குப் பார்க்கத்தோன்றவில்லை. ’பெரிய ஆள் சொல்லியாயிற்று, சக்ஸஸ்புல் டைரக்டர், சக்ஸஸ் மட்டும்தான் ஒரே தகுதி. இனி கண், காது, மூளை அனைத்தையும் மூடிக்கொண்டு வேலையை மட்டும்தான் பார்க்கவேண்டும், அதுதான் ஒரு சிறந்த நடிகனின் கடமை’ எனும் விக்ரமின் கொள்கையைப் பாராட்டுவோம், அட்லீஸ்ட் இயக்குனர் சொல்படி கேட்கும் நல்லபழக்கமாவது மிச்சமாகிறதே! இதைப்போலவே தொடர்ந்து ரசனையை வளர்க்கும், ஓடக்கூடிய படங்களாகவே எடுத்து வெற்றிகரமாக திகழுங்கள் ஐயா! நல்லது!

*

1 comment:

சிங்கம் said...

அருமையான விமர்சனம். ரசிகர்கள் தங்கள் ரசனையை வளர்த்து கொள்ள முன்வந்தாலும் இந்த மெகா இயக்குனர்கள் அதை அனுமதிக்க மாட்டார்கள் போலிருக்கிறது. ரொம்ப Cheap comedy. சங்கரிடமிருந்து இதைப்போல சரக்கை நான் கண்டிப்பாக எதிர்ப்பார்க்கவில்லை.. வருத்தத்திற்குரிய விஷயம்.