Tuesday, February 17, 2015

ச.தமிழ்ச்செல்வனின் ’பேசாத பேச்சு’!

எப்போது எழுத்தாளர்களைப் பற்றிய பேச்சு வந்தாலும் கிரா, நாஞ்சிலோடு மறக்காமல் ச.தமிழ்ச்செல்வனும் எனது ஆதர்சம் என நண்பர்களிடையே பீற்றிக்கொள்வதுண்டு. ஆனால், உண்மையைச் சொல்லவேண்டுமானால் அப்படிச் சொல்லிக்கொள்வதற்கு எனக்கு எந்தத் தகுதியும் கிடையாது. இன்னும் சொல்லப்போனால், நான் ஒரு பெரிய வாசிப்பாளி என்பது போல நண்பர்களிடமும், இணையத்தில் எழுதுகையிலும் காட்டிக்கொள்வதே ஒரு பச்சைப் பொய்தான்.
 எப்போதோ வாசித்த ஓரிரு கட்டுரைகளின் வாயிலாகவே தமிழ் சாரை என் மனதோடு ஒட்டிக்கொண்டுவிட்டேன். பின் தொடர்ந்து அவரது எழுத்துகளை விரட்டி விரட்டிப் படிக்கவோ, அவரது பேச்சை ஓடி ஓடிக் கேட்கவோ இல்லை. ஆனால், ஒரு பிளாகராக இருப்பதால், அவர் என் சகஹிருதயர் என்றெல்லாம் கூட கற்றுக்குட்டித்தனமாக எழுதிக்கொள்ளலாம், தவறில்லை. ஒரு எழுத்தாளரை விமர்சிக்கவும், பாராட்டவும், ஏன்.. சற்றே குறிப்பெழுதவும் கூட ஒரு தகுதி வேண்டும் என நினைப்பவன் நான். ஆனால், சிலருக்கெல்லாம் அந்த வாய்ப்பை நாம் தரத் தேவையில்லை. மூப்பு, பெருந்தன்மை, அனுபவம் எல்லாவற்றிலும் சிறியவனாக இருந்தாலும் தந்தையை/ ஒப்பாரை நாம் சகஹிருதயராக ஏற்கிறோம் அல்லவா? போலவே, என் சின்னஞ்சிறு பையனும் எனக்கு சகஹிருதயன்தானே? அவ்வாறு, ஏதோ ஒரு வகையில் தமிழ்ச்செல்வனையும் என் சகஹிருதயர் என நான் சொல்லிக்கொள்கிறேனே.! இன்னொரு வகையிலும், ஒரு சகஹிருதயரை அடையாளம் கண்டுகொள்ள ஒரே ஒரு கட்டுரை, ஒரே ஒரு சொல்லாடல் போதாதா என்ன?
சமூக நலன் என்பது என்ன? அது ஏதும் ஒரு வகையான கற்பனைப் பண்டமா? எத்தனைக் கிலோ இருக்கும்? நமக்கும் அதுக்குமெல்லாம் ஏதாவது தொடர்பிருக்கிறதா என்ன?
உன்னதமான எழுத்துகளைப் படிக்கும் போதெல்லாம் அழுகை, படபடப்பு, வேதனை, புன்னகை, நெஞ்சுகொள்ளாத பூரிப்பு, வெடிக்கும் சிரிப்பு, கேள்விகள், சுய பரிசோதனை என உணர்வுகளால் அலைக்கழிக்கப்படுவோம். அது எதுவானாலும் இறுதியில் ஒரு நிம்மதியும், வாழ்க்கையின் மீதான ஒரு நம்பிக்கையும் துளிர்க்கும். இன்னும் இந்த பூமியில், இழிவுகள் கண்டு வருந்தும், சக மனிதனுக்காக இரங்கும், தவறுகள் கண்டு திருத்த முனையும் மனிதர்கள் மிச்சமிருக்கிறார்கள் என்ற ஆசுவாசம் தரும் விளைவு அது. தளைகளில் சிக்கி, சிந்தனை முதிர்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமூகத்தில் அநீதி ஆட்சி செய்வது இயல்புதானே! அந்தப் பயத்தை, வேதனையை போக்குவது அப்படியான எழுத்துகள்தானே! அதிலும் தமிழ் சார் போன்றோர் எழுதுவதோடும், பேசுவதோடும் நின்றிடாது களப்பணியிலும் சோர்வுறாது இயங்குவது நிச்சயம் ஆறுதலை வழங்கும். இணைப்பாய், உறுத்தும் உன் பங்கென்ன இச்சமூகத்துக்கு என்ற கேள்வியும் கிடைக்கும்.
மேற்சொன்ன இந்த உணர்வைத்தான் “பேசாத பேச்செல்லாம்..” என்ற புத்தகத்தின் கட்டுரைகள் தருகின்றன. கட்டுரைகள் உயிர்மை இதழில் தொடராக வெளிவந்து, உயிர்மை வெளியீடாக புத்தக வடிவம் பெற்றவை.
கட்டுரைகளைப் பற்றி பேசுகிறேன் பேர்வழி என்று அச்சுப்பிச்சென்று எதையாவது எழுதிவைக்காமல், இத்தோடு இதை முடித்துக்கொள்ளலாம்தான். ஆனால் முடியவில்லை.
80களின் பிற்பகுதியில் நெல்லை மாவட்டத்தில் அறிவொளி இயக்கத்தின் வீச்சு ஏழாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த என் வரை நீண்டது. அவ்வியக்கத்தின் தூண்களில் ஒருவர் தமிழ் சார். அப்போது யார் ச.தமிழ்ச்செல்வன் என்பதையெல்லாம் நான் அறிந்திருக்கவில்லைதான். ஒருவேளை நான் அவரைப் பார்த்திருக்கக்கூடும். அவர் என் பள்ளிக்கு வந்திருக்கக்கூடும். அறிவொளி இயக்கமெனும் அந்தப் பெரியக் கடலின் ஒரு துளியாக நான் இருந்திருக்கிறேன். இதை நினைக்கும் போதே என் மனம் நெகிழ்கிறது. நான் எழுதப்படிக்கத் தெரியாத இரண்டு பெண்களுக்கான ஆசிரியனாக அப்போது இருந்தேன். அதில் ஒருவரை என்னால் கட்டுக்குள் கொண்டுவரமுடியவில்லை, அந்த வயதிற்கான பொறுப்பும், ஆளுமையும் எப்படி இருந்திருக்கும் என்பதை இப்போது சிந்திக்கிறேன். இன்னொரு பெண் எனது சித்தியாக இருந்தபடியால், அவருக்கு என்னளவில் உண்மையாக கற்பிக்க முயற்சித்தது இப்போதும் நினைவில் இருக்கிறது. அதில் நான் தோல்வியுற்றாலும் அந்த முயற்சி உண்மையானது.
மட்டுமல்லாது இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு கட்டுரையுமே என்னுள் பலவிதமான சிந்தனையை ஏற்படுத்திக்கொண்டேயிருந்தன.
எழுதுவதில் இருக்கும் சலிப்புக் காரணமாக, ‘தீம்தரிகிட’ இதழ் நின்றபோது ‘அப்பாடா’ என மகிழ்ந்ததாகக் கூறும் தமிழ் சாரின் வார்த்தைகள் தரும் சிரிப்புடன் புத்தகத்தைத் துவங்கினேன். முதல் கட்டுரையில், கல்லூரிப் பேச்சுப்போட்டியில் கடைசி நேரத் தலைப்பு, நடுவரின் விதி காரணமாக ஒரு வார்த்தைக் கூட பேச இயலாமல் திக்கித்திணறி மேடைக்குப் பின்புறம் குதித்து ஓடிப் போனதாக சொல்லியிருக்கிறார். அந்த நடுவர் பேராசிரியர் நா.வானமாமலை என்று அவர் முத்தாய்ப்பு வைக்கையில் இன்னொரு பெரும் சிரிப்பை தவிர்க்க இயலவில்லை. இத்தனைப் பெரிய பேச்சாளருக்கு, துவக்கத்தில் இப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டிருக்கும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. நான் பத்தாம் வகுப்பு படிக்கையில், ஒருநாள் காலைவணக்கக் கூட்டத்தில் ’குறளும் பொருளும்’ ஒப்புவிக்க ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டேன். அது என் ஆர்வத்தால் கூட கிடைத்திருக்கலாம். தயாரிப்பெல்லாம் சிறப்பாகத்தான் செய்துகொண்டுபோனேன். ஆனால், அப்படியொரு பின்விளைவை நானே கற்பனை கூட செய்திருக்கவில்லை. அத்தனைக் கூட்டத்தின் எதிரில், பின்டிராப் அமைதியில், பிரமாண்டமானதொரு ஹெட்மாஸ்டர் மிக அருகில் நிற்க என் வாய் உலர்ந்து மூடிக்கொண்டது. வகுப்பாசிரியர் முதலில் கிசுகிசுப்பாய் அதட்டினார், வண்டி நகரவில்லை. பின்பு ஒவ்வொருவராக அதட்டி, கெஞ்சி, கொஞ்சியும் பார்த்தனர். ஊஹூம். பிற ஆசிரியர்கள், தலைமையாசிரியர், கடைசியில் மொத்தப் பள்ளியே என்னைக் கெஞ்சிற்று. வாய் திறந்தால்தானே ஆச்சு? நானோ சகலமும் ஒடுங்கிப் போயல்லவா நின்றுகொண்டிருந்தேன். கடைசி முயற்சியாக ஒரு ஆங்கிலப்புலவரான எங்கள் ஹெட்மாஸ்டரே, அதுவும் திருமுதல் குறளான ‘அகர முதல’வைப் பிராம்ப்டிங் செய்தார். சமீபத்தில் ஒரு சினிமா படப்பிடிப்பில் ஒரு நடிகருக்கு பிராம்ப்டிங் செய்யப்பட்டபோது இந்த சம்பவம் நினைவிலாடி சிரித்துக்கொண்டேன்.
உலகைக் காணவும், உணரவும் உதவிய பஸ் ஸ்டாண்டுகளின், ரயில்வே ஸ்டேஷன்களின் இன்றைய மாற்றத்தை அவர் விவரிக்கையில் நாம் ஏன் இத்தனை சுயநலமாக மாறிவிட்டோம், நாம் ஏன் இப்படி ஓடிக்கொண்டிருக்கிறோம் என்ற கேள்விகள் எழுகின்றன. திருநெல்வேலி பஸ்ஸ்டாண்டில் கிடைத்த அவர் குறிப்பிடும், மொச்சை மசாலை நானும் உண்டிருக்கிறேன், எனும் நினைவு வந்து மனம் கனத்துப் போய்விட்டது. அவரது கட்டுரையில், ஒரு ரூபாய் வாடகையில் பஸ்ஸ்டாண்ட் கட்டிடங்களின் மொட்டைமாடிகளில் தூங்கி எழும் நபர்கள், எத்தனை எளிமையான வாழ்க்கையை எத்தனை கடினமானதாக மாற்றிவிட்டீர்கள் என்று கேட்கும் கேள்விக்கு நமது பதில் என்ன?
ஒருநாள், திருச்செந்தூர் மக்கள் கூட்டத்தில் என் தம்பி, ஒரு ஐந்து நிமிடம் தொலைந்து போன உணர்வு இப்போதும் நடுக்கத்தை உள்ளுக்குள் கொண்டுவரும். தமிழ்ச்செல்வன், ஆறாவது படிக்கும் தன் தம்பி, கோணங்கியை தொலைத்துவிட்டு பத்து நாட்களாக தேடிக்கொண்டிருந்திருக்கிறார். தங்கையின் மீதும், தம்பிகளின் மீதும் பாசம் ஆறாகப் பெருகிவழிகிறது அவருக்கு. அது சுயநலம் சார்ந்தது மட்டுமேயல்ல, யாரையும் தம்பியாக, தங்கையாக, மகளாக, மகனாகப் பார்க்கும் பெருமனம் அது. இல்லாத அக்காவை யார் யாரிடமோ பார்த்திருக்கிறார். நானும் அத்தகைய அக்காக்களை இப்போது நினைத்துக்கொள்கிறேன். அவருக்கொரு அழகர்சாமியின் அக்கா இருந்ததைப்போலவே எனக்கொரு சுந்தர்வேலின் அக்கா இருந்திருக்கிறாள். கையைப் பிடித்து கடைக்குக் கூட்டிச்செல்ல அவருக்கொரு சாந்தா இருந்ததைப்போலவே எனக்கொரு நங்கையார் இருந்திருக்கிறாள். ஆனால், இன்றைய குழந்தைகளுக்கு? என் பையனுக்கான அக்கா இருக்கிறாளா? அவளை நாம் இழந்துவிட்டோமா? கேஸ்ஸ்டவ்வும், மிக்ஸியும், கிரைண்டரும் பெண்களை சற்றேனும் விடுதலை செய்தமைக்காக மகிழ்வதா? அல்லது, விறகடுப்பும், அம்மியும், திருகையும் தந்த மனநிலையை நாம் இழந்துவிட்டதற்காக வருந்துவதா? தோசைக்கான அவரது பல்லாண்டு ஏக்கம் ஒருவகையில் மூத்தவனான எனக்கும் உரியதுதானே? அவர் தன் காதலை நினைவுகூர்கையில் மனம் மிதந்தது எனக்கு. அவரது ஜெயமேரியிடம் எனது ராஜேஸ்வரி இருந்தாள். ராஜேஸ்வரி புன்னகைத்த போது அவரைப்போல நானும் பதறிப்போய் ஓடித்தான் வந்துவிட்டேன்.
அவரது டாக்டர் ராமானுஜ மோகனைப்போலவே எனக்கும் ஒரு செல்வசண்முகம் இருந்திருக்கிறார். அவருக்கென நோயாளிகளே இல்லாத துவக்கக் காலத்தில் நோயாளியாகப் போய் பின்பு நண்பனாக மாறியிருக்கிறேன். எத்தனை மாலை வேளைகளில் இசைவான விஷயங்களை நாங்கள் பேசியிருக்கிறோம், புத்தகங்களைப் பறிமாறிக்கொண்டிருக்கிறோம் என்பதெல்லாம் நினைவுக்கு வருகிறது. ஆத்திகத்தில் நிகழ்வுகளும், சுவாரசியங்களும் சற்று தூக்கல்தான் என்பதை ஒப்புக்கொள்கிறேன் சார். காணாமல் போய்விட்ட அக்ரஹாரம் ஒன்று எங்கள் ஊரிலும் இருக்கிறது. நான் வாசலோடு நிறுத்தப்பட்ட என் நண்பன் பாலகிருஷ்ணன் வீடென்றும் எனக்கு ஒன்று இருந்தது. நான் பள்ளியில் ஒட்டி விளையாடிய, உணவைப் பகிர்ந்துகொண்ட தலித் நண்பர்களையும், சிறுபான்மை நண்பர்களையும் இப்போது நினைவுகூர்கிறேன். +2வில் கணிதத்தில் வழக்கமாக 100 மதிப்பெண்கள் எடுக்கும், எந்நேரமும் கேலியும், கிண்டலுமாக சிரித்த முகமாக இருக்கும் ஒரு நண்பன் அடுத்த சில ஆண்டுகளில் மனப்பிறழ்வுக்கு ஆளாகியதும், கல்லைப் போல இறுகிப்போய்விட்டிருந்த அவன் முகமும், அவனது தாயின் கண்ணீரும் இப்போது நினைவிலாடுகிறது.
ஒவ்வொரு கட்டுரையிலும், ஒவ்வொரு வரியிலும் உண்மையும், உணர்வும் நிரம்பியிருக்கின்றன. The other side of Silence எனும் ஊர்வசி புட்டாலியாவின் புத்தகத்தைப் படிக்கமுடியாமல் கீழே விழுந்து அழுததாக அவர் குறிப்பிடுகையில், அந்தப் புத்தகத்தை நான் இன்னும் படித்திருக்காவிடினும் என் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்ததை கட்டுப்படுத்திக் கொள்ளமுடியவில்லை. மனிதம் சிதைந்து அழுகிப் போகும் சூழல், வரலாறெங்கும் இருப்பதை அறிகிறோம். ஆனால், அவை ஏன், எப்படி ஏற்படுகின்றன என்பதை உணர்ந்துகொள்ளமுடியாத தவிப்பு கண்ணீரைத் தருவிக்கிறது. எனக்கான 1947ம், மார்புகள் அறுத்தெறியப்பட்ட ஒரு பெண்ணின் 1947ம் வேறு வேறானது என்பது அழுகையைத்தான் வரவைக்கிறது. தெரிந்தும், தெரியாமலும் தலித்துகளையும், சிறுபான்மையினரையும், பெண்களையும் எந்த வகையிலாவது நாம் ஒவ்வொருவரும் அடிமைப் படுத்தவோ, காயப்படுத்தவோ செய்துகொண்டுதான் இருக்கிறோம் இன்னும் என்பது உண்மைதானே!
சரிதான், ஆக்கிரமிப்பைத் தவிர உண்மையில் வேறேதும் உருப்படியாய் ஆண்களுக்குச் செய்யத் தெரியவில்லைதான் தமிழ் சார்!

பேசாத பேச்செல்லாம்…
ச. தமிழ்ச்செல்வன்
உயிர்மை பதிப்பகம்
ரூ. 80
- See more at: http://solvanam.com/?p=38217#sthash.lRlO7e7b.dpuf

Saturday, February 14, 2015

காமச்சிறுபுனல்


அலையெழுப்பாது
அசங்காது
மெல்ல
நீரில் அமிழ்வதைப்போல
வேட்கை என்னை விழுங்குகிறது
நீர் தொடாத துளியிடமில்லை
அரக்கப்பறக்க துவட்டிவிடவோ
இதமாய் ஒற்றியெடுக்கவோ
நீதான் இல்லை
இப்போது என்னருகே!

*

ஒவ்வொரு தாழையும் 
தனித்துவமானது
போலவே
உன்னோடான ஒவ்வொரு நிகழ்வும் 
தனித்துவமானது
ஒப்பீட்டிலும் சரி
வாசனையிலும் சரி
நீயும் தாழையும் ஒன்றுதான்!

*

ஓரம் மடித்து
வரிகள் அமைத்து
அழகுற
கவிதைகள் எழுதுவதில்லை நீ
துளிவெண்மைக்கும் இடமின்றி
நெருக்கியடித்து
கிறுக்கித் தள்ளிவிடுகிறாய்
உவகையில்
தொடுதலென்பதன்
புது இலக்கணம் நீ!

*

தடக் தடக்கென
இதயம் துடிக்க
தாடைகள் நடுங்கி
வார்த்தைகள் சிதைய
நடுங்கும் கைகளோடு
உன்னை அழைத்தேன்
புதுப்புனல் போல
பிரவாகமாக
வந்தாய் நீ!

*

பின்கழுத்து
காதுமடல்
இதழ்கள்
என ஒரு ஓவியனைப்போல
நுணுக்கம் காட்டுகிறாய் ஒரு சமயம்
நிறங்களைக் கைகளால் 
அள்ளி அப்பிவிடும்
குழந்தையைப்போலவும்
இருக்கிறாய்
இன்னொரு சமயம்
கூடலில் 
உன் வழிகள் யாவுமே அற்புதம்!

*

பெருங்கடலின் 
சிறுதுளிதான் உன் படகு
ஆனால்
என்னை மீட்க வந்த தூது நீ!
உன் கொற்றத்தின் கீழ்
கடலும்
காற்துளியாகும்
நானும்
உன்னைச் சேர்வேன்!

*

Tuesday, February 10, 2015

ரமாவும், என் ஆபீஸ் பிராஜக்டும்!


மனுஷன பொங்கல் லீவில், இன்னும் ஒரு நாள் நிம்மதியா இருக்கவிடாம அரக்கப்பரக்க சென்னைக்கு வர வைச்சு, அன்னிக்கே இங்க (ஏதோ ஒரு ஊர்னு வைச்சுக்குங்களேன். சர்வீஸ் பொறியாளனுக்கு எல்லா ஊரும் ஒன்றுதானே!) அடிச்சிப் பத்திவிட்டுட்டாங்க. ஊர்ல இருக்கிறவன்லாம், ஒழுங்கா ஆபீஸ் டூர் போறான், வர்றான். ஏன் நமக்கு மட்டும் இப்படி கயித்துமேல நடக்கிறமேரியே பிராஜக்ட்ஸ் அமையுதுனுதான் தெரியல. அதுகூட பரவால்ல, வந்தமா, டீம் வேலை செஞ்சுதா, அதை மேற்பார்வை பாத்தமானு வரமுடியுதா?

இப்படித்தான் ரெண்டு மாசத்துக்கு முன்னாடி கல்கத்தா பக்கம், ஹால்டியாவுல ஒரு பிராஜக்ட். வழக்கமாவே பத்து நாள் வேலையை பதினைஞ்சு நாள் பாப்போம் நாங்க. அதுவும் கஸ்டமர் கொஞ்சம் அசட்டையா இருந்தா இருவது நாள், முப்பது நாள் வரைகூட போவோம். நாங்க போனதோ முக்கி முக்கிப் பாத்தா கூட குறைஞ்சது இருவது நாள் ஆகக்கூடிய அளவுக்கு பெரிய வேலை. அந்த கஸ்டமருக்கு என்ன அவசரமோ, தெரியலை. அப்படி ஒரு வெறியாட்டம் ஆடிவிட்டார்கள். அப்படி ஒரு போக்கை என் வாழ்க்கையில எந்த கஸ்டமர்கிட்டயும் பார்த்ததில்லை. ஐ மீன், எங்கள ஒரு வார்த்தை திட்டவெல்லாம் கூட இல்லை. ஆனா, அஞ்சே நாளில் அந்த வேலையை எங்க கையாலயே செஞ்சு முடிக்கவைச்சாங்க. அப்படியானால், அது எப்படி நடந்துமுடிஞ்சிருக்கும்னு நீங்க கொஞ்சம் நினைச்சுப்பாருங்க..

ஒவ்வொரு மணி நேரமும் மின்னல் வேக நகர்வு. எங்கள் குழு எண்ணிக்கை ஆறு பேர். ஆனால், எங்களின் தேவைக்காக 6 சீனியர் மேனேஜர்ஸ் உட்பட, 20 பேர் கொண்ட கஸ்டமர் குழு எந்நேரமும் எங்கள் கூடவே இருந்தது. பொதுவாக நமக்கு ஏதும் அத்தியாவசிய தேவை இருந்தால் கூட, ஒரே ஒரு சீனியர் மேனேஜரையோ, அல்லது அவரது அல்லக்கையையோ நாம் காண முன்னமே சொல்லிவிட்டு ஒரு நாள் காத்திருக்கவேண்டும். அதுவும் நடந்தால்தான் உண்டு. ஒரு கேட் பாஸ் ஏற்பாடு செய்வதற்குக்கூட 3 நாள் காத்திருந்த அனுபவமெல்லாம் எனக்கு உண்டு. ஏதோ, நம் வேலைக்காக வந்தது போலவும், அவர்கள் செய்யவேண்டிய நியாயமான உதவிகளைக் கேட்பதைக் கூட அவர்களைத் தொல்லை செய்வதைப்போலவும் கடுத்த முகத்தோடு நடந்துகொள்வார்கள். இங்கேயோ நிலைமை தலைகீழ்! எங்கள் ஆள், பாத்ரூம் போனால் கூட வாட்சைப் பார்த்துக்கொண்டு நின்றார்கள். பாவம், பயபுள்ளைகளுக்கு அவ்வளவு அவசரம் போல என நினைத்துக்கொண்டு வேறு வழியில்லாமல் தூங்காமல் கொள்ளாமல் நின்று கொண்டிருந்தேன். டீம் இரண்டாக பிரிந்து தலா, 12 மணி நேர ஷிப்ட் என 24 மணி நேர வேலை நடந்துகொண்டிருந்தது. நானோ 24 மணி நேர மேற்பார்வை.

மூன்றாவது நாள் இரவு ஒன்பது மணிவாக்கில், ஒரு கப்ளிங் ஒன்று உடைந்துபோயிற்று. அடாடா, எப்படியும் அதை ரெடி செய்ய காலை ஆகிவிடுமே, பரவாயில்லை கஸ்டமர்கிட்ட திட்டு வாங்கினாலும் அப்படியாவது இன்று ஒரு நாள் இரவு ரெஸ்ட் கிடைக்குமே என்று கஸ்டமரிடம் சொல்லிவிட்டுக் கிளம்ப முயற்சித்தேன். சரி, டயர்டா இருப்பீங்க, வாங்க கேண்டீன் போய் டீ குடிச்சிட்டுப் போங்கனு கூட்டிக்கொண்டு போனார் ஒருவர். 30 நிமிடம் கூட இருக்காது. திரும்பி வந்த போது ஒரு கப்ளிங் ரெடியாக இருந்தது. எதையாவது மேஜிக் செய்தார்களா என்று எனக்கு ஒரே ஆச்சரியம். அத்தனை வேகம். திரும்பவும் வேலையைத் துவக்கினோம். ஒரு மணி நேரத்தில் இன்னொரு கப்ளிங்கும் வந்து சேர்ந்தது. ஸ்டெப்னியாமாம்! கிட்டத்தட்ட 3 முழு நாட்கள் பொட்டுத்தூக்கமின்றி சைட்டில் இருக்கவேண்டியதாயிற்று. இப்படியெல்லாம் தூக்கமில்லாமல் வேலை பார்த்து ஒரு தசாப்தம் ஆகிறது.


அது சரி, இப்ப இந்த பிராஜக்ட் என்னாச்சுன்னுதானே கேட்கிறீங்க? இப்படி அடிச்சுக்கோ, பிடிச்சுக்கோனு வரச்சொல்றாங்களே.. ரொம்ப அவசரமாட்டு இருக்குது. ஏதாவது பெரிய யுனிட் ஓடாமல் பல இழப்புகள் போலும். ஹால்டியா மாதிரி இந்த முறையும் தூக்கமில்லாமல் அடிக்கப்போகிறார்கள் என பயந்துகொண்டே வந்தேன். 

ஊம்! கெஸ் பண்ணிவிட்டீர்கள்தானே.. சரிதான்!

கேட் பாஸ் தரவே 2 நாட்கள் ஆகிவிட்டன. அது கூட பரவாயில்லை. 9 மணிக்குதான் உள்ளே வரணுமாம். 5 மணிக்கு வெளியே போய்விடணுமாம். எங்கள் டெக்னீஷியன்களுக்கோ 5 மணிக்கு மேலேதான் வேலையில் சூடுபிடிக்கவே செய்யும். உள்ளே வந்தாலாவது வேலை பார்க்கலாம் என்று நினைக்கிறீர்களா? அதுதான் இல்லை. இவ்வொரு நான்கு மணி நேரத்துக்கும் ஒருமுறை வேலைக்கான அனுமதிச்சீட்டைப் புதுப்பிக்கவேண்டுமாம். பாதுகாப்புக் காரணங்கள். அதாவது ஒரு நாளில் இரண்டுமுறை அதற்கான அலுவலரைத் தேடியலைய வேண்டும். இதற்கிடையே வாயில், அலுவலகம், வேலை நடக்கும் இடம், கேண்டீன் இவற்றுக்கிடையே கிலோமீட்டர்களில் உள்ள தூரத்தை நடந்தே கடக்கவேண்டும். (பொதுவாக எண்ணை சுத்திகரிப்பு ஆலைகள், இரும்பு உருக்காலைகள் இத்தனை விஸ்தாரமாகத்தான் இருக்கும்). இவற்றுக்கிடையே வேலை செய்ய ஏதாவது நேரம் இருக்கும் என்கிறீர்கள்.? அதுவும் சில வேலைகள் தொடர்ச்சியாக செய்யப்படாவிட்டால், அதற்கான ஆயத்தப்பணிகளை மீண்டும் மீண்டும் செய்யவேண்டியதிருக்கும். விளைவு, எங்கள் இயல்பான வேகத்தில் செய்தால் கூட சுத்தமாக 10 நாட்களுக்குள் முடிந்திருக்கவேண்டிய வேலை, இன்னும் போய்க்கொண்டேயிருக்கிறது 20 நாட்களைக் கடந்து.. வேலைதான் இன்னும் 50 சதவீதம் கூட முடிந்தபாடில்லை. 

அவனுங்களுக்குத் தேவைன்னா உளுக்கெடுத்து உப்பு வைச்சு வேலை வாங்கிர்றானுங்க, இல்லைன்னா கருவாடா காயவிட்டுர்றானுங்க.. முடியல!

அதிகபட்சம் இரண்டு வாரங்கள் என்று வீட்டில் ரமாவிடம் அனுமதி வாங்கியிருந்தேன்.

’எனக்கு மட்டும் ஏன்யா இப்படியெல்லாம் பிராஜக்ட் மாட்டுது, பொண்டாட்டி திட்டுறா. முடியல..’ என்று நண்பரிடம் பொலம்பிக்கொண்டிருந்தேன். 

அவர், ‘பொண்டாட்டி மட்டும்தானே திட்டுறா. கூடவே ஏன் இன்னும் வேலை முடியலைனு உங்க ஆபீஸும், இத்தன நாளா உள்ள என்ன பண்ணிகிட்டிருக்கே, எப்பய்யா வேலைய முடிப்பேனு கஸ்டமரும் சேர்ந்து திட்டறதுக்கு இது மட்டும்னா பரவால்லைதானே, சந்தோசப் பட்டுக்குங்க..’ என்றார்.

அப்போதுதான் உறைத்தது மண்டைக்கு, அந்த இரண்டும் கூட இன்னும் ஓரிரு நாட்களில் துவங்கப்போகிறது என.!

*

Monday, February 9, 2015

அஸ்ஸாம் டேஸ்!


“சார், இங்கிட்டு அசாம் பொண்ணுங்கெ சூப்பர் இருப்பாங்கெ. ம்ம்ம்.. யார் கூடவேணா போவாங்கெ..” என்று அந்த ஆந்திர ட்ரைவர் என்னிடம் சொல்லிக்கொண்டிருந்த போது என்னருகே இன்னும் இரு அசாமிஸ் நின்றுகொண்டிருந்தனர். ஒரு விநாடி ஆடிப்போய்விட்டேன். நல்ல வேளையாக அவர்களுக்குத் தமிழ் தெரிந்திருக்கவில்லை. அந்த டிரைவர் என்னிடம் சொல்ல வந்த விஷயம் உண்மையில் அஸ்ஸாம் குறித்த ஒரு சிறப்பான தகவல்தான். ஆனால், அவரது தமிழ்தான் இங்கே நம்மை நடுங்க வைத்துவிட்டது. 

அஸ்ஸாம் வரலாற்றுக் காலம் முதலாக, மிக சமீப காலம் வரையில், அரசியல் கூறுகள் காரணமாய் இடம்பெயர்ந்து வந்த பல்வேறு இன, மத மக்களாலும், இனக்கலப்பில் தோன்றிய மக்களாலும் ஆனது. மிகச் சமீபத்தில் 1971ல் வங்காளதேசம் பிறந்த போது கூட மிகப்பெரிய எண்ணிக்கையில் அங்கிருந்து மக்கள் அஸ்ஸாமுக்கு இடம்பெயர்ந்திருக்கிறார்கள். அவர்களது முகங்களே இதை நமக்குத் தெரிவிக்கும். இந்தியர்கள், ஜப்பானியர்கள், அமெரிக்கர்கள், ஆப்பிரிகர்கள் என தனித்துவமான முகவமைப்புகள் இருப்பது போல நமது நாட்டிலும் ஒவ்வொரு பகுதிக்குமென தனித்துவமான முகவமைப்புகள் உண்டு. ஆனால், அஸ்ஸாமில் இந்தியம், சைனம், பர்மியம் போன்ற பல வகையான முகவமைப்புகளைக் காணமுடிகிறது. அனைவரும் பிறப்பால், காலத்தால் அசாமியர்களே! இப்படியொரு பின்னணி இருப்பதால் அசாமியர்கள் தங்கள் பிள்ளைகளின் இனம், மதம் தாண்டிய காதல் திருமணத்திற்கு பெரிய மறுப்பேதும் சொல்வதில்லை. ஆகவே, அசாமிய பெண்கள் யாரையும் காதலிக்கவும், கைப்பிடிக்கவும் முடிகிறது. இதைத்தான் அந்த டிரைவர், “யார் கூட வேணா போவாங்கெ” என்று சொல்லியிருக்கிறார். 

ஆனால், அவர் சொன்ன முதல் வாக்கியம் சரிதான். “அசாம் பொண்ணுங்கெ சூப்பர் இருக்காங்கெ!”

*

கிளைமேட்தான் படுத்துகிறது. வந்த முதல் நான்கு நாட்கள் மூடுபனியில் ஊரே மூழ்கியிருந்தது. காலை மாலையில் தண்ணீர் உறையாத குறைதான். ஸ்வெட்டரும், அதற்கு மேலொரு ஜெர்கினும் அணிந்தாலும் உள்ளங்கை மறத்துப்போனது. ஆனால் அடுத்தொரு நாளில் காலை 7 மணிக்கே சூரியன் சுறுசுறுப்பாக எழுந்து விட, அடாடா பனிக்காலம் சட்டென இப்படி ஒரே நாளில் முடிந்துவிடுமா என்ற ஆச்சரியத்தோடு ஸ்வெட்டர் துணையில்லாமலே பணியிடத்துக்கு சென்றுவிட்டேன். ஆனால் மதியத்துக்கு மேல் ஆரம்பித்ததே ஒரு குளிர். 7 மணிக்கு அறைக்குத் திரும்பும் வரை பற்களால் தந்தியடித்துக்கொண்டிருந்தேன். அதன் பின், இந்த வம்பே வேண்டாமென ஜெர்கினைத் தூக்கிக்கொண்டு அலைகிறேன்.

*
டாஸ்மாக்.. ஸாரிபா பழக்கதோஷம், ஒயின் ஷாப்புகள்தான் ஆனாலும் அநியாயம்.. பொசுக்கு பொசுக்கென மூடிவிடுகிறார்கள். இன்றைக்கு ஏதோ தேர்தலாம். என்ன தேர்தலென்று தெரியவில்லை. ஒரு போஸ்டர், ஒரு குழாய் கட்டிய ஆட்டோ, ஒரு மீட்டிங் கண்ணில் படவில்லை. ஒரு வார்டு கவுன்சிலர் தேர்தலாக இருந்தாலும் இவ்வளவு அமைதியாகவா நடக்கும்.? இதற்கெல்லாம் போய் பொசுக்கென 3 நாட்களுக்கு முன்னமேயே மூடிவிட்டார்கள். இதுவாவது பரவாயில்லை. 1ம் தேதி என்றாலும், மாதத்தின் கடைசி நாள் என்றாலும் மூடிவிடுவார்களாம். இதெல்லாம் ஒரு காரணமாய்யா உங்களுக்கு? சரக்குகள் விலை எல்லாம் பாண்டிச்சேரியை விட ரொம்ப சல்லிசு. மாலை நேரத்திலும் கடைகளில் கூட்டமே இல்லை. உருப்புடற ஊரா இருக்கும் போல!

எனக்காக இல்லை, உங்களுக்கு இதெல்லாம் சொல்லணுமே என்பதற்காக விசாரித்தேன்! ஹிஹி!

*


வடகிழக்கு மாநிலங்களுக்குள் நான் நுழைவது இதுதான் முதல் தடவை. ஏன் ராஜஸ்தான், சண்டிகர்னு வட இந்தியாவுக்குப் போகணும்.. பக்கத்துல இருக்கிற ஆந்திராவில் கூட எக்குத்தப்பாக ஏதாவது ஊரில் மாட்டிக்கொண்டால் நல்ல சாப்பாட்டுக்கு சிங்கியடிக்க வேண்டும். நாலு நாளில் நாக்குச் செத்துப்போய்விடும். ஆக, இங்கு வரும் போதே சாப்பாட்டை நினைத்து உள்ளூர நடுக்கம் ஏற்பட்டிருந்தது. ஆனால், என்ன ஒரு ஆச்சரியம்! காலையில் பூரி, சப்பாத்தி, மதியம் சாதம், பருப்பு, மீன் குழம்பு, இரவு ரொட்டி என சுமுகமான சாப்பாடாக கிடைக்கிறது. நான் சொன்ன ஐட்டங்களின் பெயர்கள் மட்டும்தான் நம்மூரில் கிடைப்பவற்றுடன் ஒத்துப்போகின்றனவே தவிர சுவையில் அல்ல. ஆனால், இது கிடைப்பதே பிற இடங்களை ஒப்பிடுகையில் அரிது என்பதால் மகிழ்ச்சிதான்!

ஹோட்டல் மட்டுமின்றி சிறு டீக்கடைகள் வரை எங்கெங்கு காணினும் இனிப்பு வகைகள்தான். மூன்று நேரமும் இனிப்பு மட்டும்தான் உண்டு உயிர்வாழ வேண்டுமென்றாலும் ஒரு அசாமி சரியென்று சொல்லிவிட்டு அடுத்த வேலையைப் பார்ப்பான் போலும். அதிலும், ரசகுல்லாவுக்கும், குலோப்ஜாமூனுக்கும் இடைப்பட்ட ஒரு சுவை, டெக்‌ஷரில் இருக்கும் இனிப்பு ஒன்று மட்டும்தான். அதுவே பல நிறங்களிலும், பல வடிவங்களிலும், பல வித டாப்பிங்ஸ்களோடும் கடைமுழுதும் அடுக்கிவைக்கப்பட்டுள்ளன. எந்நேரமும் யாராவது இனிப்புகளை தின்றபடியே இருக்கிறார்கள்.

ஒரே ஒரு உருண்டையைக்கூட என்னால் முழுதும் தின்னமுடியவில்லை, திகட்டிவிட்டது!

*
பாஞ்ச் ருபிஸ்க்கு பஷா! அப்புறம் என்ன தஸ் ருபிஸ்க்கு தஷா! முடிந்தது கதை! ஏற்கனவே சுட்டுப்போட்டாலும் இந்தி வராது. இதில் இந்த அழகு வேறு! இதில் ஒரு சுவாரசியம் என்னெவெனில், அருகிலிருக்கும் பூட்டான் தேசத்து ஐந்து ரூபாய் மட்டும் நம் கரன்சிக்கு இணையாக இங்கு எல்லா இடத்திலும் புழங்கிக்கொண்டிருக்கிறது. உண்மையில் பூட்டான் கரன்சி, நமதை விட குறைவான மதிப்புக் கொண்டிருந்தாலும், நமது ஐந்து ரூபாய் கரன்சிக்கு தட்டுப்பாடு காரணமோ என்னவோ மிக சகஜமாக எல்லாக் கடைகளிலும் புழக்கத்திலிருக்கிறது. ஆனால் ஐந்தைவிட அதிக மதிப்பிலான பூட்டான் கரன்சி கிடைப்பதில்லை.

*

வட இந்தியாவைப் போலவே, அரசு பஸ்களை கண்ணால் காண்பது கூட அரிதாகத்தான் இருக்கிறது. உள்ளூர் போக்குவரத்துக்கு ஷேர் ஆட்டோதான், நம்மூர் போலவே!

இன்று காலை ’வாட்டர், வாட்டர்’ என்று ஒரு ஷேர் ஆட்டோக்காரர் கூவிக்கொண்டிருந்தார். நீண்ட ஆராய்ச்சிக்குப் பின் அதுதான், ‘கவுஹாத்தி’ என கண்டறிந்தேன். அதைக் கேட்டபோது பழைய தென்காசி நாட்கள் நினைவுக்கு வந்தன. தென்காசி ஷேர் வேன்காரர்கள் (அப்போதெல்லாம் வேன்தானே!) சாம்பார்வடை, சாம்பார்வடை என கத்திக்கொண்டிருப்பார்கள். சாம்பவர்வடகரை எனும் ஊர்தான் அவர்கள் வாயில் சாம்பார்வடையாக மாறிவிட்டிருந்தது. இன்னொரு ஊரொன்றும் அருகிலிருந்தது. பம்புலி! பம்புலி மற்றும் பம்புளி என்பதாக அவர்கள் சொன்னாலும் நானும் கூட அந்த ஊரின் பெயர் பம்புளி என்பதாகவே நீண்ட நாட்கள் நினைத்துக்கொண்டிருந்தேன். அதன் சரியான பெயர் என்ன தெரியுமா?

“பைம்பொழில்!”

*