Thursday, April 30, 2015

வானிலிருந்து வந்தவொரு ரயில்!

முதல்ல ஒரு விஷயம் சொல்றேன், கேளுங்க. அப்புறமா அதைப் பத்தி டீடெயிலா பேசுவோம்.

*

வந்த காரியம் முடிஞ்சதும் டக்கு புக்குனு ஊர் திரும்பியாகணும்கிற அவசரம், பர்சனல் சோலி. ஜம்முவுக்கு வந்த அலுவலகக் காரியம் எப்ப முடியுமோனு டென்ஷனா காத்திருக்கான் ஒருத்தன். பாவம் என்ன அவசரமோ? என்ன சோலியோ? என்னத்த.. என்னைக்கு நமக்கு ஒண்ணு தேவைப்படும்போது கிடைச்சிருக்குது? ஆனா பாருங்க அதிசயம். குறிச்சாப்புல அவன் வந்த காரியம் முடிஞ்சிடுது. உடனே கிளம்பியாவணும். பிளேன்ல போற அளவுக்கு அலுவலகத்திலயோ, சொந்த செலவுலயோ பட்ஜெட் பத்தாது நம்மாளுக்கு. லேப்டாப்பை நோண்டி ரயில் இருக்கானு மாறி மாறி பாத்துகிட்டிருக்கான். இருக்குது எக்கச்சக்க ரயிலு. ஆனா, டிக்கெட் இருந்தாத்தானே? பூரா ரயில்லயும் 998, 1081னு ஏதேதோ நம்பர்கள்ல வெயிட்டிங் லிஸ்ட்! அதுலயும் பாதி ரிக்ரெட்னு வந்துட்டுது. பாவம் என்ன செய்ய?

சரினு ஏதாச்சும் ஏஜெண்டைப் புடிப்போம்னு போறான். மூணு மாசத்துக்கு முன்னால புக் பண்ணினாலும் கிடைக்காத டிக்கெட்டை மூணு நிமிசத்துல எடுத்துக்குடுக்குற கில்லாடிங்க இருக்கிற ஊராச்சே நம்ப ஊரு! ஆனா பாருங்க, அன்னிக்குனு பாத்து எல்லா ஏஜெண்டும் (இரண்டு பேர்தான்) கையை விரிச்சுட்டான். எவ்ளோ செலவானாலும் பரவால்லனு (இந்த எவ்ளோவுக்கு அர்த்தம் உண்மையில் எவ்ளோவோ இல்ல, டிக்கெட் கமிஷன விட ஒரு 100 ரூவா முன்னப்பின்னனு வைச்சுக்குங்களேன்) சொல்லியும் வேலை நடக்கல. கடுப்பு.

ரூமுக்கு வந்து சோகமா உக்காந்துகிட்டு என்ன பண்ணப்போறமோ, ஏஜெண்டை தட்கல்ல போடச்சொல்லிட்டு லேட்டா போயிச்சேருவோம், வேறென்ன செய்யனு உக்காந்திருக்கான். சரி, கிடைக்காதுனு தெரியும், எதுக்கும் தட்கலாவது முயற்சிப்போம், எதுக்கு ஏஜெண்டுக்கு பணம் கொடுக்கணும்னு நினைக்கிறான். இது 1 பால் இருக்குறப்ப 12 ரன் தேவைங்கிற மாதிரி சூழல். வழக்கம்போல விக்கெட் போயிடுச்சு. ஆனா, அப்போதான் அவன் கண்ணையே நம்ப முடியாத ஒரு காட்சி கணினியில் தெரியுது!

ஒரு ரயில்! இருக்கை நிலவரம்ல ஏதோ ஒரு நம்ப முடியாத நம்பர்! 480 மாதிரி ஏதோ ஒண்ணு! அதுவும் இன்னைக்கு! இது ஏதாச்சும் கனவா இருக்கும்னு முதல்ல நினைக்கிறான். நமக்கு ஏதும் தற்காலிக சித்தக்கலக்கம் ஏற்பட்டிருக்கவும் வாய்ப்பிருக்குதுனு நினைக்கிறான். கணினியை மூடிவிட்டு ஒரு டீயைக் குடித்துவிட்டு வருகிறான். மீண்டும் முயற்சிக்க விருப்பமில்லையெனினும், தன் சித்தத்தை சோதிக்க எண்ணி முயற்சிக்கிறான். ஆச்சரியம் அதே 480! கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு கிளம்புமிடம், போகுமிடம், வண்டி எண், நாள், நட்சத்திரம் எல்லாவற்றையும் பார்த்தாயிற்று. சரியாகத்தான் இருப்பது போலிருக்கிறது. என்னடா இது அதிசயம்? பதிவு செய்வதா? வேண்டாமா? ஆனது ஆகட்டும், என மனதைத் தேற்றிக்கொண்டு முன்பதிவு செய்தேவிடுகிறான். SMS வருகிறது, மெயில் வருகிறது, எல்லாம் ஒழுங்காகத்தான் நடப்பது போல தெரிகிறது. ஆனால் ரயில் வருமா?

ரயில் நிலையம். அப்படி ஒரு ரயில் வந்தே விட்டது. ஃபேண்டஸி கதைகளில் வருவது போல இது ஏதும் ஹாக்வேர்ட் எக்ஸ்பிரஸா? நடைமேடை எண் நாலரையா? போர்டைப் பார்த்தேன் நடைமேடை எண் 3. சரிதான். ஏதோ புது ரயில், புதிதாக அலாட் செய்திருப்பார்கள், அதனால்தான் அப்படியொரு நிகழ்வு நடந்திருக்கவேண்டும் என நீங்கள் இதற்குள் முடிவு செய்திருப்பீர்கள். அவனும் அப்படித்தான் நினைத்திருந்தான். அவனுக்குப் பின்பு போட்டி போட்டுக்கொண்டு அந்த ரயிலின் டிக்கெட்டுகள் அடிபுடியென போயிருக்கவேண்டும்தானே! அந்த வண்டி முழுவதுமாக ஏசி வசதிகொண்டது. அவன் அவனது B10 எனும் பெட்டி எண்ணை சரிபார்த்துக்கொண்டு ஏறினான். ஆனால் பாருங்கள் அவனோடு போட்டி போட ஏன், துணைக்குக் கூட ஒரு ஆள் ஏறவில்லை அந்தப்பெட்டியில்! அடப்பாவிகளா! அடுத்தடுத்த ஸ்டேஷன்களில் திமுதிமுவென ஏறுவார்களாக இருக்கும் என எண்ணிக்கொண்டான். ஆனால் அப்போதுதான் இன்னொன்றும் ஞாபகம் வந்து தொலைக்கிறது. அந்த ரயில் சென்னை செல்லும் வரை நிற்கப்போவதோ இடையில் இரண்டோ மூன்றோ நிறுத்தங்கள் மட்டும்தான் என!

வண்டியும் கிளம்பி ஓடத்துவங்கியது. சில நிமிடங்களிலேயே புன்னகை பூத்த முகத்துடன் டிடிஈ வந்துவிட்டார். டிக்கெட்டைக் காண்பித்து, ஐடியையும் காண்பித்து சரிபார்த்துக் கொண்டிருக்கும் போதே அவரிடம் ஆங்கிலத்தில் இதுபற்றி விபரம் கேட்கலாம் என நினைத்திருந்தான். ஆனால் அவரோ முந்திக்கொண்டு இந்தியிலோ, வேறு ஏதோ ஒரு மொழியிலேயோ ஆச்சரியம் ததும்ப எதையோ இவனிடம் பேசினார். அதன் பின்பாக, அவர் பேசியது இவனுக்குத் புரியவில்லை என்பதை உரைக்க ஏனோ மனம் இடம் தராது, ‘ஆமா, அதானே’ என்பதாக எதையோ மையமாகச் சொல்லிச் சிரித்தான். சிரித்தார். எழுந்தார். போய்விட்டார்!

ஒரு அரைமணி நேரம் இருக்கையில் அமர்ந்து, போனை நோண்டிக்கொண்டிருக்கும்போதே ஓரிரு ரயில் பணியாளர்கள் அவனைக் கடந்துசென்றனர். ஒருவர் படுக்கை விரிப்புகளைத் தருபவர். இன்னொருவர் உணவு உபசரிப்பவர். சற்றே நிம்மதி படர்ந்தது. ஜன்னல் வெளிச்சம் விலக, இருள் மெல்ல மெல்லக் கவிழ்ந்தது. இருளின் அசாத்தியமே தனிதான். தனிமை அவனுக்கு மிகவும் பிடித்தமானதுதான். சொல்லப்போனால் ரயிலின் கசகசவெனும் கூட்டமும் அவனுக்கு சற்றும் பிடிக்காத ஒன்றுதான். ஆனால் இந்த அமானுஷ்ய தனிமை சற்றே கலக்கியது. இப்படிக்கூட நிகழுமா என்ன? நாம் இந்தியாவில்தான் இருக்கிறோமா? மீண்டும் ஒரு யோசனையில் போனை எடுத்து அவசரமாக அதே ரயிலின் முன்பதிவு நிலவரத்தைப் பார்த்தான். 477! அட, இன்னும் இரண்டு டிக்கெட்டுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இப்போது எழுந்து வேறு ஆட்கள் இந்தப் பெட்டியிலோ, அருகாமைப் பெட்டிகளிலோ இருக்கிறார்களா எனப்பார்க்கும் யோசனை தோன்ற எழுந்து முதலில் இடப்புறமாக நடந்தான்.

B9ஐ முழுதுமாகக் கடந்தான். யாருமில்லை. B8. நுழைந்தான். வடக்கின் மூட்டை மூட்டையான லக்கேஜ்களுடன் மூத்த குண்டுப் பெண்மணிகளும், இளம் ஒல்லிப் பெண்களும், வாயில் எதையாவது மென்றுகொண்டிருக்கும் ஆண்களும் எந்த நிமிடமும் கண்களில் பட்டுவிடுவார்கள் எனும் எண்ணம். ம்ஹூம்! முழு B8லும் ஒரு ஈக்குஞ்சு இல்லை. அருகில் எந்த மனிதனுமில்லா எனது லக்கேஜுக்கென திருடன் எப்போது வேண்டுமானாலும் தோன்றலாம், அவன் ரயில் பணியாளன் வேடம் கூட கொண்டிருக்கலாம் எனும் எண்ணம் தோன்ற மீண்டும் B10ஐ நோக்கி வேகமாக நடக்கலானான்.

அவனது லக்கேஜ் அழகாக வைத்த இடத்தில் இருந்தது. மனதைத் தேற்றிக்கொண்டு மீண்டும் வலப்புறமாக செல்ல எத்தனித்தான்.

B11, ஆறு ஆறாக எண்கள் வேகமாக கடந்தன. ம்ஹூம்! எல்லாப்பெட்டிகளையும் போலவே இதிலும் நடைபாதை விளக்குகள் மட்டுமே எரிந்துகொண்டிருந்தன. திரைகளை விலக்கிப் பார்த்தவாறே நடந்தான். அதோ அங்கே கூடுதல் வெளிச்சம், திரையும் விலகியிருந்தது. ஆவல் மிக அருகில் சென்றான்.

ஒரு பெண். ஒரே பெண். அதுவும் அழகிய இளம் பெண். நான் கடப்பது தெரிந்து, தான் படித்துக்கொண்டிருந்த புத்தகத்திலிருந்து தலை நிமிர்த்தினாள். இன்னும் அழகு. சில விநாடிகள் ஆயினும் அந்த முகத்திலிருந்த உணர்வுகளைப் புரிந்துகொள்ள இயலவில்லை. இந்தத் தனிமையின் ஆச்சரியம் அவளுக்கும் இருக்கலாம். ஆனால், பயந்தது போலவும் தெரியவில்லை. முகத்தில் விரோதமோ, அதே நேரம் சட்டென நட்பைக் கோரும் பாவமோ இல்லை. புன்னகைக்கவா, வேண்டாமா என்ற குழப்பத்தில் புன்னகைக்க நேரமில்லாது போகவே, கடந்து சென்றான். அவனுக்கு ஒரு ஓரத்தில் சின்ன நிம்மதி! அடுத்த பெட்டிக்குத் தொடர மனமின்றி மீண்டும் அவளைக் கடந்து B10க்குத் திரும்பினான்.

வசதியாக விரிப்புகளை விரிந்துக்கொண்டு படுத்தபின்பு, யோசனை எங்கெங்கோ சென்றது. பிடாரிக்கன்னிகள் கூட வந்து போயினர். வேறு பயமுறுத்தும் சிந்தனைகள். அதோடு இது மொத்தமுமே ஒரு கனவோ? எண்ணங்களை வலுவில் மறக்கடிக்க ஒரு தமிழ்ப் புத்தகத்தை எடுத்துக்கொண்டான். தமிழ் பரவசமூட்டும். ஆனால் தமிழ் எழுத்தாளர்கள்தான் தாலாட்டுவார்களே! தூங்கிப்போய்விட்டான்!

மறுநாளும் பயணம் எந்த ஒரு சிக்கலுமின்றி தொடர்ந்துகொண்டிருந்தது. பட்டப்பகல் வெளிச்சம். இது கனவல்ல, வெளியே நிஜமான இந்தியாதான். தில்லியைக்கூட தாண்டி வந்தோமே! ஆனால் தில்லியில் கூட யாரும் இந்த வண்டியில் ஏறவில்லையே!

இப்போது சூழல் பழகிப்போய்விட்டிருந்தது அவனுக்கு. நேற்றே போய்ப் பார்த்திருக்கலாம், B8யும் தாண்டி B7க்கு போனபோது பெட்டியில் இறுதிப்பாகத்தில் சிலர் தென்பட, B6 ஒரு அழகிய இந்திய ரயிலாக சரியான மக்கள் கூட்டத்தோடு இருந்தது.

சென்னையில் B10லிருந்து தனியொருவனாக அவன் இறங்கியபோது இந்தியன் ரயில்வே அவனொருவனுக்காகவே சில ஏசி ரயில்பெட்டிகளை ஒதுக்கி தனி மரியாதை செய்ததைப்போன்றதொரு உணர்வு. B11 அழகியும் ஒரு அழகிய லக்கேஜுடன் கடந்துபோனாள். எதையாவது பெரிதாக மிஸ் செய்துவிட்டானோ என்று உங்களுக்குத் தோன்றுகிறதோ என்னவோ அவனுக்குத் தோன்றவில்லை.

*

இப்படி முடிகிறது இந்த விஷயம். அடப்பாவி, கசமுசாவென்று ஏதும் ஆகவேண்டாம் எனினும் பேச்சுத் துணையாகவாவது அவளோடு பழகியிருக்கலாமேடா அவன், இப்படி ஒரு வாய்ப்பு எவனுக்கு அமையும் என்ற ஆதங்கமான கிளைக்கதைக்குள் நீங்கள் இறங்காமல் மெயின் கதைக்கு வாருங்கள்.

இப்படி ஒரு நிகழ்வு சாத்தியமா? இது ஏதும் என் சினிமா நண்பருக்கு உதவிட ரூம் போட்டு குண்டக்க மண்டக்க யோசித்ததில் கிடைத்த காட்சியா? இல்லை வழக்கம் போல கனவு கினவு கண்டு வைத்து, பூசி மெழுகி அழகூட்டி எழுதிவைத்திருக்கிறேனா? இப்படி ஒன்று இந்தியாவில் நிகழுமா? எவனாவது சினிமாவிலோ, கதையிலோ காதலுக்காக இப்படி ஒரு காட்சியை வைத்திருந்தால், “மூணு நாலு பெட்டியில ஆளே இல்லையாம். ஹீரோவும், ஹீரோயினும் மட்டும் உக்காந்திருக்காங்களாம். கதவிடறதுக்கு ஒரு அளவு வேண்டாமாடா? ஒரு அடிப்படை லாஜிக் இல்லையா? மூணு மாசத்துக்கு முன்ன டிக்கெட் எடுக்கவே அவனவன் தலையால தண்ணி குடிச்சிகிட்டிருக்கான். போடா பொசக்கெட்டவனே..” என்று நானே திட்டியிருப்பேன்.


நம்பினால் நம்புங்கள். ஜம்மு, தில்லி, வெயிடிங் லிஸ்ட் எண்ணிக்கை போன்றவை தவிர இந்தியா, இரண்டு நாள் ரயில் பயணம், காலி ஏசி பெட்டிகள், தனிமை, அந்த உணர்வுகள், அந்தப் பெண் என அத்தனையும் எனக்கு மிக சமீபத்தில் நடந்த அப்பட்டமான நிஜம்! 

.

1 comment:

Erode VIJAY said...

இப்படியெல்லாம்கூடவா நடக்கும்?!!! அதுவும் இந்தியாவுல!! இது ரொம்பவே ஆச்சர்யமான, அரிதான நிகழ்வுதான்!!!!!!!!!!!!!!!!!!!!!!!

லேசா ஒரு சந்தேகம்! ஆர் யூ ஆல்ரைட்? ;)