Monday, July 20, 2015

பாகுபலி


எஸ்.எஸ்.ராஜமௌலி, ஒரு தேர்ந்த கமர்ஷியல் சினிமா நிபுணர். மேலும், கலைத்தன்மைமிக்க சினிமாவின் மீது சிறிதளவும் நம்பிக்கை கொண்டவராக அவர் தம்மை எப்போதும் காட்டிக்கொண்டதே இல்லை. நாமாக எதையாவது வரிந்து கொண்டோமேயானால் ஏமாற்றம் இயற்கைதான். ஆனால், கான்களின் கமர்ஷியல் இந்தி முகம்தான் இந்திய சினிமாவின் முகம் என உலகுக்குச் சொல்லப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில் உலகெங்கும் கொண்டு செல்லப்படும் ஒரு தென்னிந்திய சினிமா, வேறொரு பெருமைக்குரிய அடையாளத்தை நமக்குத் தந்துவிடாதா என என்னைப்போல ஒரு சாமானிய ரசிகன் எதிர்பார்ப்பதிலும் தவறு இருக்க முடியாதுதான் இல்லையா? ஆனால், அது அத்தனை எளிதானதல்ல என்பதையும் நாம் உணர்ந்தே இருக்கிறோம். இந்த விஷயத்தில் பாகுபலி நம்மை ஏமாற்றியிருக்கிறது என்பதுதான் உண்மை.


ஒரு உலகளாவிய மேக்கிங் தரத்திற்கு அருகே, பாகுபலியை தெலுங்கு சினிமா உருவாக்கியது ஆச்சரியமான ஒரு கோணம். ஆனால், பாகுபலி உள்ளடக்கத்தில் தெலுங்கு சினிமாவாகவே மட்டும் நின்று போனது பரிதாபமான இன்னொரு கோணம்.

கதையிலும், திரைக்கதையிலும் எந்தப் புதுமையும் இல்லை. ஒரு பள்ளத்தாக்கில் ஷிபு எனும் சிறுவன் வளர்ப்புப் பெற்றோரால் வளர்க்கப்படுகிறான். கொட்டும் அருவியை எதிர்த்து மேலேறுவது அவன் உள்மனம் கொண்டுள்ள ஆசை. உண்மையில் அவன் அங்கிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு ராஜ வாரிசு. வாலிப வயதில் அவன் எண்ணப்படி மேலே ஏறியும் விடுகிறான். மேலே ஒருபுறம் ஹீரோயின் உள்ளிட்ட ஒரு குழு. இன்னொரு புறம் மகிழ்மதி அரசாங்கம். அங்கே இன்னும் அவனது அன்னை சிறைவைக்கப்பட்டிருக்கிறாள். மீதி கதையை நாம் எளிதில் ஊகித்துவிடமுடியும்.

போதாத குறைக்கு படுத்தி எடுக்கும் டிபிகல் தெலுங்கு சினிமா ஹீரோயிசம் வேறு. ஹீரோவின், வில்லனின் பராக்கிரமத்தை காண்பிக்கவென்றே லாஜிக் இல்லாத காட்சிகள் படம் நெடுக வந்துபோகின்றன. ஹீரோ பனிமலையில் (பனிமலையா என ஆச்சரியம் கொள்ளாதீர்கள், தேவைப்பட்டால் இப்படி பனிமலை, பேரருவி, பாலைவனம், கானகம் எல்லாம் வரும்) ஒரு பெரும் பனிச்சரிவை ஏற்படுத்திவிட்டு, ஒரு கல்லைப் பெயர்த்து பனிச்சறுக்கி, அதிலிருந்து தப்பி தன் வீரத்தைக் காண்பிக்கிறார் என்றால், வில்லன் ஆனையளவு இருக்கும் காட்டெருதுவை கையால் அடித்தே சாகடிக்கிறார். ஷிபுவின் தந்தையும், பிரதான கேரக்டருமானன பாகுபலியின் பிளாஷ்பேக்கிலும் அவர்தம் பேராற்றலைக் காண்பிக்கவென்றே கதைக்குள் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஒரு பெரும் படையே காலகேயர்கள் எனும் பெயரில் வந்து செல்கிறது. ஒரு பெண் வீரம், கொள்கை மிக்கவளாக இருக்கலாம். ஆனால், இப்படி ஒரு ஹீரோவுக்கு, ஜோடியாக இருப்பதால் பாவம், அவளது மனத்துயர், வீரம் எல்லாம் அவர் முன் செல்லாது. ஒற்றைக்கையில் கட்டிப்பிடித்து அடக்கி கண்மை போட்டுவிட்டுவிடுவார், பொறுத்துக்கொள்ள வேண்டும். படம் பூராவும் இதைப்போன்ற காட்சிகள்தான்.

மேலும் ஒரு குறையாக படம் இடைவேளையை முடிவாகக் கொண்டு முடிகிறது. இப்படித் துண்டு போட்டது போல இரண்டு படங்களாக இதற்கு முன்னர் எங்கும் எடுக்கப்பட்டிருக்கிறதா எனத் தெரியவில்லை.

நடிப்புக்குப் பெரிய வேலை இல்லை எனினும் ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், அனுஷ்கா, ப்ரபாஸ், ராணா போன்றோர் திரையை நிறைக்கும் போது அவர்களின் ஆளுமையைப் புரிந்துகொள்ளமுடிகிறது. இவர்களையெல்லாம் சரிவர நம் சினிமா பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதுதான் நிஜம். இதேதான் இசை, கலை, ஒளிப்பதிவு போன்ற பிற தொழில்நுட்பக் கலைஞர்களின் நிலையாகவும் இருக்கக்கூடும். திறமைகளுக்கு இங்கே பஞ்சமில்லை, அதைப் பயன்படுத்திக்கொள்வதில்தான் நாம் சற்றுப் பின்தங்கிக்கிடக்கிறோம். போலவே இப்படத்தில் பட்ஜெட்டுக்கு ஏற்ற அளவில் சிஜி வேலைப்பாடுகளின் நல்ல தரம், சிக்கலான இடங்களைத் தவிர்த்திருக்கும் புத்திசாலித்தனம் போன்றனவற்றையும் காணமுடிகிறது. குறிப்பாக பிற்பாதியில் வரும் போர்க்களம் உண்மையில் இதுவரை இந்திய சினிமா கண்டிராததுதான். அதில் சிஜியின் பங்களிப்பை விட நிஜ கள உருவாக்கமே அதிகம் என்பதையும் உணரமுடிகிறது. அங்குதான் ராஜமௌலியின் உழைப்பு, நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகிறது. ஆயிரக்கணக்கான மனிதர்களைக் கொண்டு ஒரு நிஜ போர்க்களத்தையே உருவாக்கி போரை நடத்தியிருக்கிறார். ஒளிப்பதிவு, கலை, காஸ்ட்யூம், சிஜி என பலவும் ஒன்றிணைந்து ஒரு அட்டகாசமான காட்சியனுபவத்தைத் தருகின்றன. ஒரு ஓவியத்தைப்போன்ற, அவ்வப்போதைய ஃப்ரீஸிங் காட்சிகள் ஒரு தனி விருந்து. போஸ்டர்களில் நாம் காணும் ஷிபுவின் போர்க்கள பாய்ச்சல்கள், அலைபாயும் மேலாடையுடன் தமன்னா, நீருக்கு மேலே குழந்தையைத் தூக்கிப்பிடித்திருக்கும் கை என ஓவியத்துக்கு நிகரான ரசனைக்கு விருந்தாகும் காட்சித் துண்டுகள் இன்னும் பலவுண்டு படத்தில். 

எஸ்.எஸ்.ராஜமௌலி எனும் பெயர்தான், தென்னிந்திய சினிமாவில் இப்படி ஒரு படத்தை சாத்தியப்படுத்தியிருக்கிறது என்பதை நாம் மறுக்கமுடியாது. தமிழும் சளைத்ததில்லை எனினும் கூட கமர்ஷியல் மொக்கைகளில் தெலுங்கு சினிமாவை அடித்துக்கொள்ளவே முடியாது. ஆனால், பெரும்பாலான கமர்ஷியல் இயக்குநர்களைப்போல, ராஜமௌலி ரசிகர்களை முட்டாள்களாகக் கருதுவதில்லை. இந்த ஒரு விஷயத்தில்தான் அவர் வித்தியாசப்படுகிறார். அதன் பலன்தான் அவருக்குத் தரப்பட்டிருக்கும் இந்த இடமாகும். பாகுபலியை ஒரு மொக்கைப்படமாக மட்டுமே தாண்டிச் சென்றுவிட முடியாதபடிக்கு ராஜமௌலியின் அசுர உழைப்பும், நம்பிக்கையும் நம்முன்னே நிற்கின்றன.

ஆனால் பாகுபலியின் உள்ளடக்கத்தின் மூலம், தேவை, போதாமை பற்றிய கவலைகள் ராஜமௌலிக்கு இல்லை. அதில் ஒரு டிபிகல் தெலுங்கு கமர்ஷியல் இயக்குநரின் இடத்திலிருந்து ராஜமௌலி சிறிதும் வழுவினாரில்லை. இனியும் அதை அவர் செய்யக்கூடியவரில்லை என்பதும் தெளிவாகிறது. அதனால்தான் இப்படியான ஒரு ஹிஸ்டாரிகல் படத்திலும் பச்சைக்கலர் ஜிங்குச்சா என ஒரு டூயட்டும், ஐட்டம் சாங்கும் வைக்கமுடிகிறது. அதனால்தான் அவரது ஹீரோவின் கால்கள் காற்றிலேயே மிதக்கின்றன. அதனால்தான் ஹீரோயிஸம் இருக்கிறதா, அது போதும் என ஒரு தாத்தா காலத்துக் கதையை அப்படியே எந்தப் புதுமையுமில்லாது எடுத்துக்கொண்டிருக்கிறார்.

மொத்தத்தில் படம் முடிகையில், மேக்கிங்கால் ஒருவித உற்சாகமும், திரைக்கதையினால் ஒருவித சோர்வுமான கலவை உணர்வுடன்தான் அரங்கை விட்டு நாம் வெளியேறுகிறோம்.

Friday, July 3, 2015

ஓ.. கிரேட் கண்மணி!

”தா..ரா” என முதல் காட்சியில் நித்யா சொல்லும் போது விழுந்தவன்தான். சிவப்பு சேலை கட்டிக்கொண்டு நித்யா, துல்கருடன் டான்ஸாடிக்கொண்டிருக்கும் போதுதான் படம் முடியப்போகுதில்லை என்ற நினைவுக்கே வந்தேன். அழகு ஆராதிக்கப்படவேண்டிய விஷயமே இல்லைதான், ஆனால் வாழ்வென்பதே முரண்தானே? அழகால் வீழாமல் இருக்க இயலவில்லை. நித்யா மட்டுமல்ல, படமே தன் அழகால் வீழ்த்துக்கிறது நம்மை.

இங்கு மட்டுமா? உலகெங்குமேதான். ஏன் ஒரு படத்தின் எல்லாமாகவும் இருக்கும் இயக்குநரை விட இந்த நடிகை, நடிகர்களுக்கு மட்டும் இத்தனை புகழ்? இத்தனை முன்னுரிமை? என்று யோசித்தோமானால் அதில் நியாயம் ஒன்றும் இல்லாமலில்லை.

ஒரு திரைப்படத்தின் எந்த நுட்பம் அதிமுக்கியமானது என்பதை வரையறுப்பது அத்தனை எளிதல்ல, போலவே கதையை விடவும் கதாபாத்திரங்களின் வடிவமைப்பு பிரதானமானதோ என்று சில சமயங்களில் நான் எண்ணுவதுண்டு. அத்தகைய கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டுவதும், அந்தச்சூழலில் அவர்கள் வாழ்வதாகவும் ஒரு மாயையை உருவாக்கி நம்மை ஒன்றச்செய்வதுமான இமாலயப் பணி அவர்களிடம்தானே இருக்கிறது.

‘ஓ காதல் கண்மணி’ படத்தில் காதலர்களாக வரும் துல்கரும், நித்யாவும் அத்தனை உணர்வுப்பூர்வமான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். பாத்திரப்படைப்பும், கதையும் அதற்கு இணையாய் நின்றிருக்கிறது. முதலாக குறிப்பிடப்படவேண்டியது அதுவே! மொத்தத்தில் பலன் நம் ரசனைக்கு. ஆதியையும், தாராவையும் செதுக்கித் தந்ததில் துல்கருக்கும், நித்யாவுக்கும் மட்டுமே பாராட்டை ஒதுக்கிவிடமுடியாது. மணிரத்னம், பிசி ஸ்ரீராம், ஏஆர்ரகுமான் எனும் மூன்று கிரியேட்டர்கள் ஆனையைப் போல பின்னணியில் நின்றுகொண்டிருக்கிறார்கள். அது ஆப்வியஸ். ஆனால், ஆங்கிலப்படங்களில் மட்டுமே காணக்கிடைக்கும்படியான ஒத்துழைப்பு ஒவ்வொரு பிற துறைகளிடமிருந்தும். மேக்கப், காஸ்ட்யூம், ஆர்ட் என துல்லியம் பிரமிப்பூட்டுகிறது. லைவ் ஒலிப்பதிவு என்பது என் புரிதல். அதில் நித்யாவின் குரல் மயக்குகிறது, அமைதியான அறையில் ஒலிக்கும் கிறிஸ்டல் கிளியர் குரல் போல. பொதுவாக இது மணிரத்னம் படங்களில் இருக்காதுதான். அனன்யாவின் திருமணம் நடக்கும் ஆரம்பக்காட்சியில் அனன்யா, பார்வையாளர் வரிசையிலிருக்கும் ஆதியிடம் ஏதோ சொல்கிறார். ஊஹூம், இரண்டாம் முறை உன்னிப்பாக இருந்தும் காதில் விழவில்லை. சரிதான், அது, ஆடியன்ஸுக்கு அவசியமில்லாத ஒன்றாகத்தான் இருக்கும். அதனால்தான் நித்யாவின் குரலில் இருந்த தெளிவு எனக்கு ஆரவாரமாக இருந்தது. முதல் காட்சியில், “Taa.. Rhaah” என மென்குரலில் சொல்கையில் அவரது நாக்கு மேலண்ணத்தைத் தொடாமல், சரியான இடத்தில் விரவுவதைக் கூட உணரமுடிந்தது. அப்படியான ஒலிப்பதிவு.

மேக்கப், எந்நேரமும் பளீரென இருக்கவைக்க மெனக்கெடாமல் மை கலைந்தோ, கருவளையத்தின் ஆரம்பமோ என நினைக்கவைக்கும் படியாகவும் நித்யாவை அனுமதித்திருக்கிறது. காஸ்ட்யூம், சில தருணங்களில் அவரது உடல்வாகுக்கு பொருத்தமில்லா உடைகளைத் தந்திருக்கிறது. ஆதி இரண்டு நாட்களாக தொலைந்துபோய்விட்டு மீண்டும் வருகையில் நித்யா அணிந்திருக்கும் உடை இயல்பை பிரதிபலிக்கிறது. தப்பைக்கூட பிளான் பண்ணி சரியாக பண்ண மணிரத்னம் குழுவால் மட்டும்தான் முடிகிறது.

இயக்குநரை விடுங்கள், அவரைப் பற்றிப்பேச நமக்குப் பற்றாது. இசை? வேணாஞ்சாமீ! நான் வரலை இந்த ஆட்டத்துக்கு. டயலாக் ரைட்டரை மட்டும் பிடித்துக்கொள்வோம். மணிரத்னத்தின் வசனங்கள் எப்போதும் சற்றே இயல்பு மீறியவைதான் அல்லவா? இல்லையா? ”நா உனக்கு கண்மணியா?” என்ற முகம் நிறைந்த சிரிப்பும் பூரிப்புமாக தாரா கேட்கும் இடமும், ”அழாதே கண்மணி சொல்லு..” என தாரா கேட்கும் இடமும் இப்போது நினைவுக்கு வருகிறது. ரொம்ப ட்ரமாடிக்காக இருக்கிறதோ.? யோசித்துப்பார்த்தால் என் நிஜ வாழ்வில், சில தனித்த தருணங்களில், இதை விடவும் ட்ரமாடிக்காக நான் நடந்துகொண்டதெல்லாம் நினைவுக்கு வருகிறது. ட்ராமா வாழ்க்கையின் ஒரு பகுதி. ட்ராமா ஒரு சுவை.

இன்னும், கணபதி அங்கிள், பவானி ஆண்டி, மூளையில்லாத வாசு, தாராவின் அம்மா, அவரது அஃபையரான (படத்தின் ஒரு காட்சியில் கூட வராத) கமிஷனர் என அத்தனை நிறைவான பாத்திரப்படைப்புகள். தாராவின் அம்மா, அலுவலக மீட்டிங்கில் இருக்கையில் தாரா போன் செய்கிறாள். தர்மசங்கடமான சூழலில் தயங்கும் குரலுடன் “ஸெனித், கேன் வி மீட் ஆப்டர் டூ மினிட்ஸ்?” என அனைவரையும் வெளியே அனுப்புகிறார். ஏன், வழக்கமான தொழிலதிபர் அம்மா மாதிரி அருகில் இரண்டு பிஏக்கள் கையில் பைலுடன் வர, பட்டுச்சேலையில் ஹாலிலிருந்து வாயிலுக்கு வரும் போது பேசலாமே.? மாஸ்டர் ஸ்ட்ரோக்ஸ்!

கதை? படம் இந்த நூற்றாண்டிலும், கல்யாணத்தின் அவசியத்தை நிறுவும் பழமைக்கு ஆதரவாக நிற்கிறதா என்ற கருத்துக்குள் போக வேண்டியதில்லை என நான் நினைக்கிறேன். இதை ஒரு தனிப்பட்ட காதலர்களின் கதை என்றும் அணுகலாம்! ஒரு படைப்பாளி, அதுவும் தேர்ந்த படைப்பாளி தன் கதையினூடாக சமூகத்தை பாதிக்கத்தான் செய்கிறான். ஆகவே இதை அவ்வளவு எளிதாக தாண்டிச்சென்றுவிட முடியாதுதான், கூடாதுதான். ஆனால், இந்தக் கருத்தில் நேர், எதிர் வாதங்களை வைப்பது அத்தனை சுலபமல்ல. எல்லாவற்றிலும் அபத்தங்கள் நிறைந்திருக்கும். இப்போதைக்கு, கல்யாணத்துக்கான சரியான மாற்று இன்னும் கண்டறியப்படவில்லை என்று கொண்டு அதுவரை, அதை ஏற்றுக்கொண்டுதான் தொலைய வேண்டியிருக்கிறது என்று தீர்ப்பு சொல்லிக்கொள்வோம். ஒத்து வாழ்தல், கல்யாணத்துக்கு சரியான மாற்றா என்பதை காலம் முடிவு செய்யும். செய்யட்டும்!

என்னைப் பொறுத்தவரை இந்தக்கதை ஒரு அழகான காதல் கதை அல்லது கவிதை. ஒவ்வொரு காட்சியும், காட்சித்துண்டும் காதல் கவிதைக்கான நியாயம் செய்வனவாக பார்த்துப் பார்த்துச் செய்யப்பட்டிருக்கின்றன ஒரு ஓவியனின் நுணுக்கத்தோடு. கலையில் தேர்ந்தவனின் கரத்திலிருந்து மட்டுமே வெளிப்பட வாய்ப்புள்ள மாஸ்டர் ஸ்ட்ரோக்ஸ்! எளிய கதை, எளிய காட்சிகள்தான். ஆனால் அவற்றை இத்தனை உணர்வுப்பூர்வமாக காட்சிப்படுத்திடுவது அத்தனை எளிதல்லதான். தனது ரசனை, நீண்ட அனுபவம் வாயிலாக அதை சாத்தியப்படுத்தி, தனது அடுத்த படிக்கு முன்னேறியிருக்கிறார் மணிரத்னம்.


எவர்க்ரீன் அலைபாயுதேவை பின்னுக்குத் தள்ளி நம்மை நோக்கிச் சிரிக்கிறாள் இந்த அழகுக் கண்மணி!

*