Thursday, December 29, 2016

அகம் சொல்லும் முகம்

என் அன்புக்குரிய மாமா, திரு. பாப்பாக்குடி இரா.செல்வமணி அவர்கள் எழுதிய பின்வரும் இரண்டு நூல்கள் நாளை, 30.12.16 அன்று மாலை 3.30 மணியளவில் பாளையங்கோட்டை, வ.உ.சி மைதானம் அருகே அமைந்துள்ள அய்யம்பெருமாள் அரங்கில் வைத்து நடைபெற இருக்கும் சிறிய விழாவில் வெளியிடப்படவிருக்கின்றன.

 

 

எளிமையாகச் சொல்வதானால், என் வாசிப்பு துளிர்த்ததே என் மாமா தந்த வரத்தினால்தான். இன்று அவரது நூலுக்கே பிழைத்திருத்தம் செய்யும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்திருக்கிறது. வாசிப்பு, தமிழார்வம், நகைச்சுவையுணர்வு என அவரைப் பற்றிப் பேச ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. அவற்றைப் பகிர இது பொருத்தமான வேளைதான். இருப்பினும், சில வாரங்களாகத் தொடரும் பணிச்சுமை அழுத்துவதால், பிறிதொரு சமயத்தில் தொடர்கிறேன்.

விழாவில், குளித்தலை, திரு. கடவூர் மணிமாறன் அவர்களின் விடியல் பதிப்பக வெளியீடான, ‘வான்வெளியில் என் நட்சத்திரங்கள்’ எனும் கவிதை நூலை திரு. கடவூர் மணிமாறன் அவர்களும், சென்னை, திரு. வேடியப்பன் அவர்களின் ‘படி வெளியீடு’ பதிப்பான, ‘அகம் சொல்லும் முகம்’ எனும் கட்டுரைத் தொகுப்பு நூலை கலைஞர் தொலைக்காட்சி செய்தியாளர் திரு. க. கிருஷ்ணமூர்த்தி அவர்களும் வெளியிட இருக்கிறார்கள். கவிஞர் குமார. சுப்பிரமணியம் (ஆசிரியர் குழு, மீண்டும் கவிக்கொண்டல் இலக்கிய இதழ்) அவர்கள் நிகழ்வின் தலைமையேற்று சிறப்புச் செய்யவிருக்கிறார்.

மூத்த கவிஞர்கள், தமிழார்வலர்கள், பேராசிரியர்கள் பலரும் கலந்து கொள்ளவிருக்கின்றனர். திருநெல்வேலி மற்றும் அருகிருக்கும் எனது வலைப்பூ, முகநூல் நண்பர்களுக்கு இப்பதிவின் மூலமாக அழைப்பு விடுக்கிறேன். தங்கள் வரவு நிகழ்வை மேலும் சிறப்புடையதாக்கும். நிகழ்ச்சி வரவேற்புக் குழுவில் ஒருவராக நானும் காத்திருப்பேன். அனைவருக்கும் என் அன்பு.

Saturday, December 10, 2016

சுபா எனும் பெயரில் மூன்று பெண்கள்

சுபா எனும் பெயர் எனக்குக் கொஞ்சம் ஸ்பெஷலானது.

நான் இன்றும் மிக நெருக்கமான நட்பு கொண்டுள்ள எனது ஆரம்பப்பள்ளித் தோழன் ஒருவனின் அக்காவின் பெயர் சுபா.

அந்த சுபா அத்தனை அழகானவர். அந்தச் சின்ன வயதுக்கு நான் பார்த்த மிக அழகான பெண் அவர். ஏன் அந்நாளைய ‘அண்ணன்’கள் மயங்கிக்கொண்டு திரிந்தனர் என்பது பின்னாளில்தான் எனக்குப் புரிந்தது. அவர் அழகு மட்டுமல்ல, அன்றைய அந்த கிராமத்துச் சூழலுக்கு அவரது முதிர்ச்சியும் ரொம்பவே அதிகம்தான் என்றும் இப்போது புரிகிறது. அவரது நடையில், செயலில், பேச்சில் தன்னம்பிக்கை மிளிரும். நாமெல்லாம் குழந்தைகளைக் கொஞ்சும்போது, சற்றே காமாசோமா என்று கொஞ்சிவிட்டு, ஒரு சிட்டிகை உப்பை எடுப்பது போல ஆட்காட்டிவிரலையும், பெருவிரலையும் வைத்துக்கொண்டு, குழந்தையின் கன்னத்தைத் தொட்டு, விரல்களை நம் உதட்டுக்குக் கொண்டுவந்து ‘உச்’ என்போம். அவர் கொஞ்சுவதைப் பார்க்க வேண்டுமே! பின்னெப்போதும் அப்படிக் கொஞ்சும் ஒரு பெண்ணை நான் பார்த்ததேயில்லை. ‘சிக்கிசிக்கிச்க்கி.. என் தங்கக்குச்சிச்சிக்கு.. பட்டுப்புச்சிப்புச்சிக்கு’ என்று வேகமாக அர்த்தமில்லாத ஒலிகளால் கொஞ்சுவார். அவரது தலையசைப்பும், புன்னகையும், உற்சாகமும் கொஞ்சப்படும் குழந்தையையும் தொற்றிக்கொண்டு அது கெக்கேபிக்கேவென சிரித்துக்கொண்டிருக்கும். சில குழந்தைகள் வியப்பில், சிரிக்கக்கூட தோன்றாமல் சொள் ஒழுக அவரது முகத்தையே பார்த்துக்கொண்டிருக்கும். முத்தம் கொடுப்பதைப் பார்க்க வேண்டுமே.. ஐந்து விரல்களாலும், உள்ளங்கையினாலும், சமயங்களில் இரண்டு கைகளாலும் குழந்தையின் முகத்தைத் தொட்டுச் சுழற்றி.. கைகளை வாய்க்குக் கொண்டுபோய், ‘ஊஊஊச்ச்ச்ச்ச்சுப்ப்ப்பூம்ம்மூச்ச்ச்ச்சு” என்று நூறு முத்தங்களின் அடர்த்தியோடு அப்படியொரு முத்தம் தருவார்.

எனக்கு ஞாபகம் இல்லையெனினும், அருகருகே வாழ்ந்த குடும்ப நண்பர்களாதலால், நான் குழந்தையாக இருக்கும்போது, அவர் சிறுமியாக என்னையும் இப்படிக் கொஞ்சியிருப்பார் எனும் நினைப்பே எனக்குப் போதுமானதாக இருந்தது. அழகே பெரும் பிரச்சினை, இந்த அழகில் வாய்கொள்ளாமல் அவர் சிரிக்கும் சிரிப்பில் அன்றைய ‘அண்ணன்’கள் பிளாப்பியாகியிருப்பார்கள் என்பது சர்வ நிச்சயம். அவருக்குக் கணவராக வரப்போகும் மனிதரும், அவர் குழந்தைகளும் கொடுத்து வைத்தவர்கள் எனும் புரிதலும், அவரது கல்யாணத்துக்கு முன்னமே எனக்கு ஏற்படும் வயதாகிவிட்டது. எளிய வாழ்க்கையானாலும், நான் நினைத்ததைப்போலவே அழகான வாழ்க்கை அவருக்கு அமைந்தது. இன்றும் அதை மகிழ்வோடு பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்.

பின்னாளில் இன்னொரு சுபா வந்தாள் என் வாழ்வில், நண்பனின் காதலி ரூபத்தில்! பன்னிரெண்டாம் வகுப்பின் முதல்மாணவன், பின்னாளில் எஞ்சினியரிங்கில் யுனிவர்சிடி கோல்டுமெடலிஸ்ட், பெரிய வேலை என்றெல்லாம் தன் எண்ணப்படியே வளர்ந்த என் நண்பனின் அன்றைய காதலி. அவளுக்கோ திருமணத்துக்காக வருடக்கணக்கில் காத்திருக்க முடியாத அன்றைய கிராமத்துச் சூழல். காதலனோ பின்னாளில் தான் என்னவாக வேண்டும், எப்போது என்ன படிப்பு, எப்போது என்ன வேலை, எப்போது எப்படி கல்யாணம் என்பதையெல்லாம் துல்லியமாக திட்டமிட்டு வைத்துள்ள மனிதன். நிச்சயமாய் அவள் காத்திருந்தால் கைப்பிடித்திருப்பான். ஆனால், அப்போது அவனால் அவனது திட்டத்தைக் குலைத்து படித்துக்கொண்டிருக்கும்போதே கல்யாணம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வேறு வழியேயில்லை என்று சூழல் நெருக்கும்போது நிலைமை கைமீறிப்போய்விட்டது. இருவரும் இன்று இரு வேறு நபர்களாய், நல்லபடியாக கல்யாணம், குழந்தைகள் என செட்டில் ஆகிவிட்டாலும், அன்று இவர்கள் இருவருக்கும் இடையில் சிக்கிக்கொண்டு நான் பட்டபாட்டை என்னால் மறக்கவே முடியாது.

இப்போதும் கூட இன்னொரு நெருங்கிய நண்பனின் மனைவியாய், இன்னொரு சுபா வந்து சேர்ந்திருக்கிறாள். நவீன யுகத்தின் பிரதிநிதியாய் என்னைக் கலாய்த்து மகிழவே வந்திருப்பாள் போலிருக்கிறது.

கொஞ்சமாய் முற்போக்குச் சிந்தனையுடன் ’உன் மனைவி ரொம்ப அழகுடா’ என்று ஒரு புகைப்படத்தைப் பார்த்து நான் சொல்லியிருந்தேன் நண்பனிடம். (எதில் ஆர்வமாய் செயல்படுகிறது பாருங்கள் நம் முற்போக்குச் சிந்தனை) முதன்முறையாக அவனது நான் வீட்டுக்கு நான் சென்றிருந்த போது, ரொம்பவே ஆர்வத்தோடு அவனது மனைவிக்கு இப்படி அறிமுகப்படுத்தி வைத்தான், ‘இவந்தான்மா உன்னை அப்படி சைட் அடித்தவன்!’. படுபாவி சோற்றில் கைவைத்த போதா சொல்லியிருக்க வேண்டும்? பின்னாளில், குடும்ப நண்பர்களாகி ஒருத்தரையொருத்தர் உரிமையோடு கலாய்த்துக்கொள்ளும் சூழல் ஏற்பட்டுவிட்டாலும், அன்றைக்கு அந்த சுபாவுக்கு முன்னால் நெளிந்த நெளிவை மறக்க முடியாது. அதோடு இந்த சுபாவினால்தான், பெண்களிலும் கூட முதிர்ச்சியும், பெருந்தன்மையும் உள்ள ஓரிருவர் இருக்கக்கூடும் எனும் உண்மையை உணர்ந்துகொண்டேன்.

இந்த சுபாக்கள் மூவருமே என் நிஜ வாழ்வில், இணையவெளி உட்பட உலாத்திக்கொண்டிருக்கும் நபர்கள். இன்னும் கூட பல சுவாரசியங்களைச் சொல்லமுடியாத சிக்கல்கள் உள்ளன. ஆகவே பொத்தாம் பொதுவாகச் சொல்லி இத்தோடு முடித்துக்கொள்கிறேன்.


எனக்குப் பெண்குழந்தை பிறந்தால் சுபாவென பெயர் வைக்க வேண்டுமென்றும் கூட ஒரு எண்ணமிருந்தது. இப்போதென்ன, ஆண்குழந்தையாயினும் கூட அப்படித்தானே பெயர் வைத்திருக்கிறீர்கள் என்கிறீர்களா? எனக்கு சுபா எனும் பெயர் மிகப்பிடிக்கும், அதனால்தான் என் பையனுக்கும் அந்தப் பெயர் என்பதும் உண்மைதான். ஆனால், மேற்குறிப்பிடப்பட்டவர்கள் நிஜ வாழ்க்கைப் பெண்கள் என்பதால், அவர்களது நிஜமான பெயரை மறைத்து, சுபா எனும் புனைப்பெயரைச் சூடியல்லவா இந்தக் கட்டுரையை எழுதியிருக்கிறேன். J

s

Saturday, October 15, 2016

ரெமோ Vs றெக்க
கொஞ்ச நாட்களாக ஊரிலில்லாததால், நேற்றுதான் ரெமோ, றெக்க படங்களைப் பார்க்க நேர்ந்தது. அவை சொல்ல வரும் கருத்துகளையும், அவற்றால் ஏற்படும் பாதிப்புகளையும் கவனத்தில் கொள்ளாமல் படம் பார்த்தால் கூட அத்தனை போரடிக்கக்கூடிய, சவசவ என இழுவையான, அறுவையான, கடுப்பேற்றக்கூடிய படங்கள்தான் இரண்டும். ஒன்றுக்கொன்று சளைத்தவையல்ல!
ரஜினி, கமலுக்குப் பின்பான ஹீரோ வரவுகள் அனைவரிடமுமே எப்படியாவது ரஜினியாகிவிட வேண்டும் என்ற முனைப்புதான் இருக்கிறது. கமல்ஹாசன் போல ஆவது உண்மையில் எளிது. நல்லது. ஆனால், அதைவிடுத்து எல்லோருக்கும் குறி ரஜினியின் இடம்தான். அந்த மாசு இடம் தரும் போதை! ஆனால், அது அத்தனை எளிதான காரியமல்ல! அதற்கான தகுதியை, பயிற்சியை, ரசனையை வளர்த்துக்கொண்டோமா, இல்லையா என்பதையெல்லாம் யாரும் எண்ணிப்பார்ப்பதும் கிடையாது. அஜித், விஜய் இருவரின் பாதையுமே அதுதான். அதில் அவர்கள் இருவருமே ஓரளவு வெற்றியும் கண்டிருக்கிறார்கள் எனலாம். ஆனால், அந்த நெருப்பில் விழுந்து மாய்ந்துபோன விட்டில் பூச்சிகள்தான் அதிகம். சிம்பு, விஷால், ஆர்யா, ஜீவா என உதாரணங்கள் ஏராளம். விக்ரம், சூர்யா, தனுஷ் போன்றோரெல்லாம் வேறேதாவது செய்துதான் தங்கள் இடத்தைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. மாசு எல்லோருக்கும் கைகொடுப்பதில்லை. அதே வழியில் தப்பாமல் நடைபோட்டுக்கொண்டிருக்கிறது இப்போதைய சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி ஜோடி!
தமிழ்படத்துக்கு ரோப் ஃபைட்டை அறிமுகப்படுத்தியவனைக் கட்டி வைத்து உதைக்கலாம். அப்படிப் படுத்துகிறார்கள். றெக்க படத்தில், ராஜ்கிரண் போல இந்தப்பக்கம் ஒரு உஸ்ஸ், அந்தப்பக்கம் ஒரு உஸ்ஸ் என ஒரே குத்தில் ஃபைட்டர்களை பறக்க விடுகிறார் விஜய்சேதுபதி! ராஜ்கிரணாவது கையிலும், முகத்திலும் கிடுகிடுவென ஒரு கடுமையைக் காண்பித்துக்கொண்டிருப்பார். இவரோ வெயிலில் அலைந்துவிட்டு வந்து பேன் காற்றில் நிற்பது போல நிற்கிறார். ஸ்லோமோஷனில் இப்படி சண்டைக்காட்சிகளை எடுத்துவிட்டால் மாசு வந்துவிடுமென நினைக்கிறார்கள் போலும். முடியல! விஜய்க்கும், லட்சுமி மேனனுக்கும் இடையேயான காதல் காட்சிகளும், ரொமான்சும் தாங்கல! ரெண்டு டூயட்!! படுபாவி டைரக்டர் சார்.. உங்க மனசுல இரக்கமே கிடையாதா? ரொமான்சுக்கும், விஜய்சேதுபதிக்கும் பயங்கரமான வாய்க்காத்தகறாறு இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளுங்கள் அடுத்த டைரக்டர் திலகங்களே! ஏதோ ஒரு பிளாஷ்பேக்கும், கொஞ்சம் செண்டிமெண்டும் வந்ததால், பிழைத்தோம்!
ரெமோ! ஓரிரு நகைச்சுவை காட்சிகள் எனில் பரவாயில்லை. படம் முழுதும் வரவிருக்கிற லேடி கெட்டப் என்றால் கொஞ்சம் சிந்திக்க மாட்டீர்களா ஐயா? சிவாவின் லேடி கெட்டப்பும், டப்பிங்கும் சகிக்கலை. இத்தனைக்கும் சிவா ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்டும் கூட. வாய்ஸ் மாடுலேஷனை ரிப்பேர் பண்ண இன்னைக்கு டெக்னாலஜியெல்லாம் வேற இருக்குதாமே ஐயா!! றெக்கைய விட சவசவ என ஒரு கதை இதில். ஒரு பெண்ணைக் காதலிக்க வைக்கணும், அதுவும் பூரா ஏமாத்தி, பொய் சொல்லிச் சொல்லியே! எப்புடி.. நல்ல கதைல்ல.. அதுவும் கிளைமாக்சில் அந்தம்மா இவரைக் காதலிக்கத்தான் போகுது என்பது நம் எல்லோருக்கும் நன்றாகத் தெரிந்த பாரெழவுதான். நியாயப்படி, நர்சு வேடத்தில் போய் மனசை மாத்தினதுக்காக அந்த நர்சைத்தான் ஹீரோயின் காதலிச்சிருக்கணும். பதிலாக, வானத்தில் பலூன் விட்ட சாதனைக்கான ஹீரோவைக் காதலித்துத் தொலைக்கிறார். அதைத் தவிர வேற எதுவுமே ஹீரோ செய்யவில்லை. எருமைச்சாணி போல இந்தப்படத்திலும் ஒரு டைரக்டர். படம் வேறு நன்றாக ஓடுகிறதாம்.. ஓடும்! ஓடத்தான் செய்யும்.. நம்மாளுகதான் எதுக்கு ஏன்னே தெரியாம இப்படித்தான் காரியம் பண்ணுவாங்க.. அப்பதானே நாலு பேரை பைத்தியமா அடிக்கலாம்.. அந்த டைரக்டர் இம்மா நேரத்துக்கு நம்மாலதான் படம் ஓடிகிட்டிருக்குன்னு நினைச்சு.. குமோனு இன்னொரு ஸ்கிரிப்ட் எழுதிகிட்டிருப்பார்.
ஒண்ணு மட்டும் நிச்சயம். ரஜினி மாதிரி ஆகிறாரோ இல்லையோ, அஜித், விஜயை விட சிவகார்த்திகேயன் தொடப்போற உயரம் அதிகம்னு மட்டும் நல்லா தெரியுது. எனக்கே இதைச் சொல்ல பிடிக்கலைன்னாலும், அதுதான் உண்மை. அதுக்கு ஒரு மூஞ்சி வேணும். அது இருக்கு இவர்கிட்ட! தைரியமா மாசு படங்கள் பண்ணலாம். எத்தனை டம்மி படங்கள் தந்தாலும், அஜித் போல ஒரு ஓபனிங் இருந்துகொண்டே இருக்கும்னு தோணுது. ஆனா, ரெமோ மாதிரி படங்கள் பண்ணாம, உண்மையில் நல்ல படங்களும் (நல்ல படங்கள்னா லிட்டரலா அப்படியே எடுத்துக்க வேண்டாம். ஆக்‌ஷன், காமெடினு உருப்படியா பண்றதை சொல்றேன்) பண்ணி அந்த இடத்துக்குப் போனா அவருக்கும் நல்லது, நமக்கும் மகிழ்ச்சி!
சிவகார்த்திகேயன் முன்னாடி விஜய்சேதுபதி மாசு படங்கள் பண்ணியெல்லாம் நிற்கவே முடியாது. மரியாதையாக இப்போதே விழித்துக்கொண்டு உருப்படியாக, சின்சியராக படம் பண்ணவில்லையெனில், போன இடம் புல்லு முளைத்துவிடும். விஜய்சேதுபதி மட்டுமல்ல, தனுஷ், விக்ரம், சூர்யா வகையறாக்களும் ஒழுக்கமாக படம் பண்ணுவது.. அவர்களுக்கு நல்லது! :-)

Monday, September 19, 2016

நாங்கள் ஆயில் பெயிண்ட் வரைந்த கதை!

வாட்டர் கலர் ஓவியங்களை மீண்டும் வரைய ஆரம்பித்திருக்கும் இந்தப் பொழுதில், பல வருடங்களுக்கு முன் நடந்த சில சுவாரசியமான நிகழ்வுகள் நினைவுக்கு வருகின்றன. நான் சென்னைக்கு வந்த 1998ல், அம்பத்தூரிலிருக்கும் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். அப்போது ரஜினிகாந்த் எனும் ஒரு நண்பர் என்னோடு கொஞ்ச காலம் பணிபுரிந்தார். ஒத்த வயது, வாடாபோடா அளவுக்கு மிக நெருங்கிய நட்பு எனினும், ஒவ்வொரு காலகட்டத்திலும், அப்படி அழைக்க முடியாமல் ‘நீங்க நாங்க’ என்றே பழகுவதாகவே சில நட்புகள் அரிதாக அமைந்துவிடுகின்றன. மேற்படிப்பு/ வேறு வேலை எனும் காரணங்களால் அவர் விரைவிலேயே அந்த நிறுவனத்தை விட்டு வெளியேறிவிட்டாலும் அவர் சென்னையில் இருந்த மேலும் சில ஆண்டுகளுக்கு, எங்கள் நட்பு வாரயிறுதிகளில் தொடர்ந்தது. அதற்கு ஒரே காரணம், எங்கள் இருவருக்குமே ஓவியத்தில் இருந்த மிகுந்த ஈடுபாடுதான்! ஓவியத்தைப் பொறுத்தவரை இருவருமே இருந்தது ஒரே நிலைமையில்தான்! குடும்பச்சூழலும், பொருளாதார நிலைமையும் தகுந்த பயிற்சி வகுப்புகளுக்கு சென்று ஓவியம் கற்றுக்கொள்ள எங்களுக்கு வாய்ப்பளித்திருக்கவில்லை. இருவருமே சிறு வயதிலிருந்து சுயமாக வரைந்து பழகியவர்கள். எனக்கு பென்சில் போர்ட்ரெய்டுகள் வரைவதில் மிகவும் ஆர்வமுண்டு. குறிப்பாக பெண்கள். நிறைய பெண்களை வரைந்திருக்கிறேன். பெரும்பாலும் சரியாக வந்துவிடும், ஆனாலும் சொதப்பலாகி நிறைய குப்பைக்குப் போவதுமுண்டு. கற்கும் நிலையிலிருப்போருக்கு போர்ட்ரெய்டு அத்தனை எளிதான காரியமுமல்லதான். ரஜினிக்கோ போர்ட்ரெய்டு சுத்தமாக வரவில்லை. என் மேல் அதற்காக உரிமையோடு கோபித்துக்கொண்டதும் கூட உண்டு. ஆனால், நான் வியக்கும் வகையில் அவருடைய மற்ற ஓவியங்கள் அமைந்திருந்தன. குறிப்பாக கருப்பு, வெள்ளையில் அவர் உருவாக்கும் ஹைலைட்கள் பிரமிப்பாக இருக்கும். கோவில் சிலைகளை வரைந்தால் போட்டோ எடுத்ததைப் போலிருக்கும். ஷேடிங், பென்சில் வகைகள் போன்றவற்றை எனக்கு அறிமுகப்படுத்தியது அவர்தான். இருவருமே, தங்களது ஓவியத்திறமைகளை பகிர்ந்துகொண்டு, பயிற்சி எடுத்து வளர்த்துக் கொள்ள வேண்டுமென்றெல்லாம் நினைத்துப் பழகவில்லை. ஆயினும் எங்கள் நட்புக்குக் காரணம் ஓவியம்தான். சென்னையின் பிரபல ஓவியக் கேலரிகளுக்கு சென்று, அங்குள்ள ஓவியங்களை ஏதோ பெரிய ஓவியர்களைப் போல உற்று உற்றுப் பார்த்துக்கொண்டிருப்போம். ‘ஆதி, தூரத்திலிருந்து பார்த்தால் கடல் அலையடிக்குது.. எப்படிப் பண்ணியிருக்கான் பாருங்க அந்த ஆர்டிஸ்ட், ஆனா பக்கத்துல போய்ப் பார்த்தா சால்வெண்ட் எதுவும் யூஸ் பண்ணாம பெயிண்டை அப்படியே கொத்தனார் சாந்து அப்புறாப்பல அள்ளி அப்பி வைச்சிருக்கான். இந்த ஒரு படத்துக்கே கிலோ கணக்குல பெயிண்ட் ஆகியிருக்கும் போலியே..’ அப்படின்னு காதைக் கடிப்பார். இப்படியே பேசிக்கொண்டிருப்போம். மற்றபொழுதுகளில் ஏதாவது சினிமா, அது இதென அரட்டை அடித்துப் பொழுதுபோக்குவோம். எப்போதாவது சேர்ந்து படங்கள் வரைவதும் உண்டு. ஒரு நாள், ’பென்சில் போதும் ஆதி. நாமதான் பயங்கர திறமைசாலிகள் ஆயிட்டோமே! இனி, பெயிண்டிங்ல இறங்குவோம்’ என்றார். அதுவும், வாட்டர் கலர், அக்ரிலிக் போன்ற ஸ்டூடண்ட் சமாச்சாரமெல்லாம் வேண்டாம், இறங்கினா நேரா அது ஆயில்பெயிண்ட்தான் என இருவரும் தீர்மானித்தோம். வாட்டர்கலர் என்பது ஸ்டூடண்ட்ஸ் சமாச்சாரம் என்று அன்று நான் நினைத்துக்கொண்டிருந்ததை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது. ஆனால், ஆயில் பெயிண்டிங்குக்கு என்ன ஆயிலை பயன்படுத்துவார்கள் என்பது போன்ற அடிப்படை விஷயங்கள் கூட எங்களுக்குத் தெரியாது. ஒரு வேளை, ’தேங்காயெண்ணை, விளக்கெண்ணெய் மாதிரி ஏதும் இருக்குமோ’ என்று ஜோக்கடித்த ஞாபகம் கூட இருக்கிறது. யாரைக் கேட்பது? அப்போது, இண்டெர்நெட் அத்தனைப் பழக்கத்துக்கு வரவில்லை, அல்லது நாங்கள் அந்த அளவுக்கு வளர்ந்திருக்கவில்லை! நேரடியாக பெயிண்டிங் பொருட்கள் விற்கும் ஒரு கடைக்கே போய் நைஸாக விசாரித்துக்கொள்வது என்று முடிவு செய்துகொண்டு அண்ணாநகர் போனோம். கெத்தை விட்டுடக்கூடாது, தெரிஞ்சது போலவே நடந்துகொண்டு அவன் சொல்வதிலிருந்தே பாயிண்டைப் பிடித்து பொருட்களை வாங்கி வருவதாக திட்டம். ஆயில் கலர்கள், பிரஷ்கள், கேன்வாஸ்கள் போன்றவற்றை விலை அதிகமானதாகப் பார்த்து இரண்டு செட்டுகள் வாங்கிக்கொண்டோம். விலை அதிகமென்றால் நல்லதாகத்தானே இருக்கும் எனும் லாஜிக்! இனி மீடியம் வாங்க வேண்டும்! மிக்ஸ் பண்ற ஆயில் கொடுங்க என்று கேட்டபோது, எவ்வளவு வேண்டும் என்றார் கடைக்காரர். எவ்வளவு கேட்பது என்று கூட தெரியவில்லை. என் முகத்தைப் பார்த்துக்கொண்டே, ‘ஒரு ரெண்டு லிட்டர் கொடுங்க’ என்று சொல்ல வாயைத் திறந்த ரஜினியை அமுக்கினேன். ரொம்ப சமாளிப்பதாய் நினைத்துக்கொண்டு ’இந்த பெயிண்டுக்கு எவ்ளோ தேவையோ அதைக் கொடுங்க’ என்று நான் சொல்லும்போதே ரீல் அந்துவிட்டது. கடைக்காரர் சிரித்துக்கொண்டே, ‘அது பெயிண்டர்ஸைப் பொறுத்து ஆகும் சார்’ என்று சொல்லிவிட்டு, ஒரு 50 ml பாட்டில் லின்சீட் ஆயிலை எடுத்துக்கொடுத்தார். லின்சீட் ஆயில் எனும் பெயரை டக்கென படித்து மனப்பாடம் செய்துவிட்டு, எவ்வளவு ஆச்சுனு கேட்கும்போதே.. கடைக்காரர்.. ஆயில் பெயிண்ட் பண்ண சால்வெண்டும் ரொம்ப முக்கியம்ங்க, வெளியில மறக்காம தின்னர் வாங்கிக்குங்க என்றார். மானம் போனாலும், பரவாயில்லை என அந்தச் செய்தியையும் வாங்கிக் காதுகளில் போட்டுக்கொண்டு வெளியே வந்து பெருமூச்சு விட்டுக்கொண்டோம். பின்னர், எங்கள் எஞ்சினியரிங் மூளையைப் பயன்படுத்தி, எந்தப் பெயிண்டையும் அப்படியே ராவாக அடிக்கமுடியாது. மிக்ஸிங் வேண்டும். மிருதுவாக்கவும், பரவும் தன்மைக்கும் ஒரு மீடியம் வேண்டும்.. தண்ணீர் இதோடு மிக்ஸ் ஆகாது. அதனால்தான் லின்சீட் ஆயில்! அப்படின்னா, சால்வெண்ட் எதுக்கு? பேலட், பிரஷ் போன்றவற்றை உடனடியாக கழுவுவதற்கு என்று புரிந்தது. அதோடு கலர், ஆயிலோடு கொஞ்சம் தின்னரையும் கலந்துகொள்ள வேண்டும், இல்லாவிட்டால் பெயிண்ட் உலர நேரமாகலாம் என்றும் கூட யோசித்தோம்.! எல்லாம் தயார், இனி வரைய வேண்டும்! ஆல் தி பெஸ்ட் சொல்லிக்கொண்டு, அவரவர் வீட்டுக்குப் போயாயிற்று. என்ன சூழலோ என்னால் உடனே களத்திலிறங்க முடியவில்லை. அன்றிரவே அரக்கப்பரக்க ஓடிவந்தார் ரஜினி! ‘ஆதி சம்திங் ராங். பெயிண்ட் காயவே இல்லை’ ‘எப்ப வரைஞ்சீங்க?’ ‘சாய்ங்காலம் வரைஞ்சது..’ அதிர்ச்சியாக இருந்தது. வாட்டர் கலர் அதிகபட்சம் ஒரு லேயர் 10 நிமிடத்தில் காய்ந்துவிடும். ஆயில் என்றால் ஒன்றிரண்டு மணி நேரத்திலாவது காயவேண்டாமா? இது ஏதோ சிக்கல்! ‘தின்னர் விட்டிங்களா? இல்லையா?’ ‘பர்ஸ்ட் லேயர் ரொம்ப டார்க்கா இருந்ததால, தின்னர் விட்டா மட்டும்தான் கலரே ஒரு ப்ளோவுக்கு வந்தது. அதனால நல்ல தாராளமா விட்டிருந்தேன்..’ ஒரு வேளை ரொம்ப தாராளமாக விட்டிருக்கக்கூடாதோ.. தின்னர் எவாப்ரேட் ஆகும். அதனால் அதை நிறையக் கலந்தது இந்தப் பிரச்சினைக்குக் காரணமாக இருக்கமுடியாது என உறுதியாக சொன்னது எஞ்சினியரிங் அறிவு! ‘எதுக்கும் காலை வரைக்கும் பார்ப்போம்! நல்லா காத்து படறாப்பல வைங்க’! மறுநாள் காலையிலும் அது காயவில்லை. மாலை அவர் வீட்டுக்கே போய்விட்டேன். அவர்கள் வீட்டு நபர்கள் யாரிடமும் எந்த பரபரப்பையும் காண்பித்து விடாமல் கவனமாக இருவரும் நடந்துகொண்டோம். குடுகுடுவெனப் போய் பெயிண்டிங்கைப் பார்க்கும் ஆவலை அடக்கிக்கொண்டு அவர் அம்மாவிடம் நிதானமாக பேசிவிட்டு, காபியெல்லாம் வாங்கிக்குடித்துக் கொண்டிருந்தேன். மனதுக்குள் ஒரே பரபரப்பு! பிறகு, அவர் அறைக்குப் போய் பெயிண்டிங்கைப் பார்த்தேன். இந்தப் பிரச்சினையில், படத்தைச் சரியாக வரைந்திருக்கிறாரா என்று கூட பார்க்கவில்லை. தொட்டுப்பார்த்தால், பெயிண்ட் விரல்களில் வந்தது, தொட்ட இடத்தில், கேன்வாஸ் வெள்ளையாகத் வெளிப்பட்டது. தொட்டுத்தொட்டுப் பார்த்து அதுவே ஒரு டிசைனாக மாறியிருந்தது. இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம். இரண்டாம் நாள், மூன்றாம் நாள், ஐந்தாம் நாள், பத்தாம் நாள்.. ஊஹூம்! பதினொராவது நாள். மாலையில் ஒரு டீக்கடையில் பேசிக்கொண்டிருந்தோம். அந்த பெயிண்டிங்கை கிட்டத்தட்ட மறந்தே போயிருந்தோம். திடுமென ஞாபகம் வந்து, கேட்டேன். ’ஆமா,அந்த பெயிண்டிங் என்னாச்சு ரஜினி?’ ‘அட விடுங்க.. இன்னும் பிசுபிசுத்துட்டு கிடக்கு அது!’ இப்போது இந்த இண்டெர்நெட் யுகத்தில், புரிகிறது எல்லாம்! ஆயில் பெயிண்டிங்கில் சரியான ஆயில், சால்வெண்ட் கலவை காயவே ஒன்றிரண்டு நாட்களாகும். கொஞ்சம் கலவை சரியில்லாவிட்டால், அல்லது படைப்புத் தேவைக்காக சால்வெண்ட், ஆயில் பங்கு வேறுபட்டால், ஓவியங்கள் காய ஓரிரு வாரங்கள் ஆகலாம். முழுமையான உலரும் காலம் உண்மையில் மாதங்களில் இருக்கும்! வெட் ஆன் வெட் முறையிலேயே பெரும்பாலும் ஆயில் பெயிண்டுகள் வரையப்படுகின்றன. அன்று நாங்கள் செய்தது எதுவுமே தவறில்லை. பொறுமையாக இருந்திருக்க வேண்டும் என்று தெரியாததைத் தவிர! ரஜினி இன்று என்னோடு தொடர்பிலில்லை, ஆனால், இப்போது இதை நிச்சயம் தெரிந்து கொண்டிருப்பது மட்டுமல்லாமல், வண்ணங்களோடு விளையாடிக் கொண்டுமிருப்பார் என்பது மட்டும் எனக்குத் தெரியும்! *
சமீபத்தில் வரைந்த ஒரு வாட்டர்கலர் ஓவியம். *

Sunday, July 24, 2016

கபாலி -விமர்சனம்


ரஜினியை எனக்குப் பிடிக்காது எனினும், கபாலி ஒரு வெற்றிகரமான, தரமான படமாக இருக்கவேண்டுமென ரொம்பவே ஆசைப்பட்டேன்.

ரஜினியை ஏன் பிடிக்காது? ரஜினியின் திரை பிம்பத்தை யாருக்குத்தான் பிடிக்காது, நானும் விதிவிலக்கல்ல. எனக்கும் திரை ரஜினியை ரொம்பவே பிடிக்கும். ரஜினியின் ஸ்க்ரீன் பிரசன்ஸ், இந்தியத் திரையுலகில் வேறு யாருக்கும் வாய்க்காதது. சில அசாத்தியமான கதாபாத்திரங்களுக்கு உயிரூட்ட இப்படி ஒரு நடிகன், தேடினாலும் கிடைக்கமாட்டான்தான்.. ஆனால்?

காலம் எப்போது வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் உச்சத்தில் கொண்டு போய் வைத்து அழகு பார்க்கும். அப்படி உச்சத்திற்குப் போனவர்கள் எப்படி செயல்பட்டார்கள் என்பதை வைத்துத்தான் வரலாற்றில் அவர்கள் பெயர் எழுதிவைக்கப்படுகிறது. அரசியலுக்கு வந்தோ, கைக்காசைப் போட்டோ ஊர், உலகத்துக்கு உருப்படியாய் ஏதும் செய்ய வேண்டுமென எதிர்பார்க்கும் வகையல்ல நான். ஆயினும், தான் இயங்கும் சூழலில் எத்தனை அறத்தோடு ரஜினி நடந்துகொண்டார்? திரைநுட்பங்களுக்கான கல்வி, பயிற்சியின்மை, தயாரிப்புக் குறைபாடுகள், கூட்டியக்கம், திரைமறைவு மாஃபியாக்கள், சிறிய படங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள், விநியோகஸ்த வழிமுறைகள், தியேட்டர் குறைபாடுகள், கட்டணம் என தமிழ்த் திரைச்சூழலிலிருக்கும் எண்ணற்ற பிரச்சினைகளுள், ஏதேனும் ஒன்றைச் சரி செய்ய, ஒரு துரும்பையாவது கிள்ளிப்போட்டிருக்கிறாரா என்பதுதான் என் கேள்வி!

ஒரு பதினைந்தாயிரம் சம்பளம் வாங்கும் ஒரு சூபர்வைசர், இரவில் தனக்குக் கீழ் வேலை செய்யும் பத்து பணியாளர்களுக்காக நல்ல குடிதண்ணீரை, தனது நிர்வாகத்திடமிருந்து சற்றேனும் எதிர்ப்பை சம்பாதித்துக்கொண்டாவது கேட்டு வாங்கித் தருகிறான். பத்தாயிரம் சம்பளம் வாங்கும் ஒரு வாட்ச்மேன், ஆட்களின் வருகையை மட்டும் கண்காணிக்கும் தன் பணியையும் மீறி, தன் கட்டுப்பாட்டுக்குள்ளிருக்கும் வளாகத்துக்குள் யாரும் குப்பை போடாமல் கண்காணித்துக் கொள்கிறார்.

தமிழ்த் திரைத்துறைக்கு ரஜினி என்ன செய்தார் என்று கேட்பதை விட, குறைந்த பட்சம் தன் படங்கள் சார்ந்தாவது அறத்தோடு நடந்துகொண்டாரா என்று கேட்பது இன்னும் பொருத்தமாக இருக்கும்! மேற்சொல்லப்பட்ட குறைபாடுகள் அனைத்துக்கும் இவர் படங்களே ஊற்றாக அமைகின்றன என்று கூட சொல்லலாம். தன் படத்தை தயாரித்தவர்களை, விநியோகிப்பவர்களை, ரசிகர்களை, கட்டணச் சிக்கல்களை கூட கட்டுப்பாட்டுக்குள் வைக்க இயலாத, அல்லது விரும்பாத ஒரு நபராகத்தான் ரஜினி இருந்து வருகிறார். பிறகெப்படி பிடிக்கும்?

எனில், கபாலி, வெற்றிகரமான ஒரு படமாக வரவேண்டும் என ஏன் மிக விரும்பினேன்? ரஞ்சித்! ‘மெட்ராஸ்’ ரஞ்சித் ஒரு அசாத்தியமான இயக்குநர். ரஞ்சித் இன்னும் பல சிறப்பான படங்களைத் தருவார் என.. இப்போது, கபாலிக்குப் பிறகும் கூட எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ரஞ்சித்தை இந்தப்படம் இன்னும் உயரத்துக்கு எடுத்துச்செல்ல வேண்டும் என விரும்பினேன், உள்ளூர அரசியல் பொதிந்துள்ள அவர் படங்களில், இன்னும் வீரியமாக வெளிப்பட அது களமமைத்துக் கொடுக்கும் என்பதால். கண்டெண்ட் மட்டுமல்லாது காட்சி மொழியும் கைவரப்பெற்ற கலைஞன் ஜெயிக்க வேண்டுமென ஆசைப்பட்டேன்.

ஆனால், அது நடக்கவில்லை.

கபாலி? ரஞ்சித்துக்கு ரஜினியை வைத்துப் படம் பண்ணுமளவுக்கு அனுபவம் இல்லையோ என்பதுதான் என் ரசிக மனத்துக்குத் தோன்றும் முதல் சந்தேகம்! முதலானது ஸ்க்ரிப்ட். சிதைந்து கிடக்கும் கபாலியின் குடும்பம் மீண்டும் ஒன்றிணைவதா, மாஃபியாக் கும்பல்களுக்கிடையேயான போராட்டமா, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலையா என ஸ்க்ரிப்ட் எதை மையமாகக் கொண்டு இயங்குவது என்பதிலேயே தெளிவில்லை. எதுவுமே இயல்பாக ஒன்றிணையவே இல்லை. எல்லாவற்றிலும் போதாமை. ஒரு ஸ்டாரை வைத்து படம் செய்கையிலிருக்கும் நேரமின்மை, அழுத்தம் இவற்றை சரிவரக் கையாள இயலாமல், ‘மெட்ராஸி’லிருந்த அந்த அட்டகாசமான ஃப்ளோவை கோட்டை விட்டிருக்கிறார். அடுத்து நடிகர்கள். ரஜினியைத் தவிர்த்து ராதிகா ஆப்தே, தன்சிகா இருவரும்தான் பொருத்தமாக இருந்தனர். சிறப்பான நடிப்பும் கூட! ஆனால், இவர்களது கதாபாத்திரங்கள் கூட சிறப்புற வடிவமைக்கப்படவில்லை என்பது வேறு விஷயம். தவிர, அத்தனை நடிகர்களும் மகா சொதப்பல், நாசர் உட்பட! முக்கால்வாசி படம் வரை ரஜினிதான் ஹீரோவா, அல்லது ஜான்விஜய் ஹீரோவா என்று தெரியாதபடிக்கு படம் முழுவதும் ரஜினியை விட அதிகமாக ஜான் விஜய்தான் இருக்கிறார். அதுவும் ரஜினி வரும் காட்சிகள் அனைத்திலும் வயிற்றைத் தள்ளிக்கொண்டு, பாதித் திரையை மறைத்துக்கொண்டு, டிவி சீரியல் போல வளவளவென பேசிக்கொண்டு.. சகிக்கவில்லை. தினேஷ், கலையரசனெல்லாம் ப்ப்பா! சீன வில்லன்களைக் கேட்கவே வேண்டாம், அழகாக மைதா மாவு பொம்மை போல இருக்கிறார்கள்.

காட்சி அழகியல் எல்லாம் எங்கு போயிற்றோ தெரியவில்லை. ரஜினிக்கு.. அதுவும் கேங்ஸ்டர் பாத்திரத்தில் பில்டப் எப்படி இருக்க வேண்டும்? இரும்புக் கதவுகள் விலகுகையில், டைட் குளோஸப்பில் ரிவீல் ஆகவேண்டிய ரஜினியை, அவசரக்குடுக்கை மாதிரி அதற்கு முன்பாகவே நான்கைந்து ஷாட்கள் அதுவும், கீ சப்ஜெக்டாக இல்லாமல் காண்பித்தாகிவிட்டது. டைட்டில் போடும் போது முழ நீளத்துக்கு என்ன கேங்? யார் கேங்ஸ்டர்? யாரார் என்ன செய்கிறார்கள்? பேர் என்னங்கிறது உட்பட ஓவர்லாப்பில் ரஞ்சித் சொல்லிவிடுகிறார். அடுத்த காட்சியிலேயே, ரஜினி சிறையிலிருந்து வந்ததும், ஜான்விஜய் ரஜினிக்கு அதையே கிளிப்பிள்ளைக்கு சொல்வதைப்போல சொல்கிறார். ’எல்லாம் 43 கேங் வைச்ச சட்டம்தான். கட்டை, கட்டி எல்லாம் அவங்க கண்ட்ரோல்லதான் இருக்கு, நாமல்லாம் ஜாக்கிரதையா இருந்துக்கணும்ணா’ என்கிறார். யார்கிட்ட?  கேங்லீடர் ரஜினிகிட்டேயே! ‘துப்பாக்கில்லாம் பாத்திருக்கியாண்ணா?’ என்று மட்டும்தான் கேட்கவில்லை.

உயிரோடுதான் இருக்கிறார் என்று தெரிந்ததும், ரஜினி பரபரப்பாக ராதிகாவை தேடிப்போகிறார். ஒரு முகவரி கிடைக்கிறது. ஒரு பில்டிங் வாசல்.. ட்ராலி ஷாட். கண்ணாடியை கழற்றுகிறார். அங்கு ராதிகா இல்லை. சரி அடுத்த முகவரி. அங்கும் ஒரு பில்டிங்.. மீண்டும் ட்ராலி ஷாட். மீண்டும் ரஜினி கண்ணாடியை கழற்றுகிறார். அங்கும் ராதிகா இல்லை. சரி அடுத்த முகவரி.. அடுத்த பில்டிங்.. மீண்டும் ட்ராலி ஷாட்.. மீண்டும் கண்ணாடி.. இதுவாய்யா உங்க பில்டப்பு?

அரசியல்? பெரிய ஏமாற்றம்! சரி, வசனங்களிலாவது வைத்துத்தொலைப்போம் என முடிவெடுத்தது போல, கிளி, கூண்டு, கோட்டு, டவுசர்னு என்னன்னவோ பேசுகிறார்கள். சம்பந்தா சம்பந்தமில்லாமல் யார் யாரோ எப்போது வேண்டுமானாலும் பேசுகிறார்கள். கிளைமாக்சில் இரண்டு எதிரெதிர் கேங் லீடர்கள் சந்தித்துக்கொள்கிறார்கள். பரபரப்பான காட்சிகளோ, சண்டையோ வரவேண்டிய இடத்தில், வில்லன் கிஷோர் வருகிறார். பல முறை கொல்ல முயற்சித்தும், கொல்ல முடியாத எதிரி அவர் எதிரிலேயே வந்து நிற்கும் காட்சி. ‘குறைப் பிரசவமானாலும், சுகப் பிரசவமாத்தானேடா பொறந்துகிடந்தோம்’னு வடிவேலு ஜோக்கில் வருவது போல, சண்டை போட வேண்டிய இடத்தில், சம்பந்தமில்லாமல் ’நாந்தாண்டா உயர்ந்த சாதி’ என்று வர்க்கப் பிரச்சினைகளை பேசுகிறார் கிஷோர்! இந்த லட்சணத்தில், கடைசியில் இலக்கிய கிளைமாக்ஸ் வேற!

’கபாலி ரஜினி படமும் இல்லை, ரஞ்சித் படமும் இல்லை’ என்பதாக யாரோ பேஸ்புக்கில் எழுதியிருந்தார்கள். அதைத்தான் நானும் இவ்வளவு நேரம் சுத்தி சுத்தி எழுதியிருக்கிறேன். எது எப்படியோ, ரஜினியின் அழகான ஸ்டைலிஷ் ஷாட்களுக்காக, ஒரு தடவை பார்த்துவையுங்கள்!

Thursday, June 9, 2016

இறைவிதலைப்பும், விளம்பரங்களும் ஏதோ பெண்ணியம் பேசும் படம் என்றதொரு ஹைப்பை உருவாக்கிவைத்திருந்ததால் இயல்பாகவே, முன்னப்பின்ன இருந்தாலும் அவசியமானதொரு படம்தான் என்ற எதிர்பார்ப்பு எனக்குள் ஏற்பட்டிருந்தது. ஆனால் படம் அப்படி இல்லை.

எனக்கென்னவோ, இப்படித்தான் நடந்திருக்குமென தோன்றுகிறது. பெண்தெய்வ சிலைத்திருட்டு, வெளிநாட்டுக்குக் கடத்தல், அதனால் சில ஆண்களுக்குள் ஏற்படும் சிக்கல்கள், கிரைம், திரில்லர் என்பது போல ஒரு கதை பண்ணிவிட்டு அதற்கு ‘இறைவி’ என்ற தலைப்பை அகஸ்மாத்தாக வைத்துவிட்டிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். தலைப்பில் பிடித்தது சிக்கல்! இந்தத் தலைப்போடு, ஆண்களுக்குள் ஏற்படும் சிக்கல்களுக்கான சஸ்பென்ஸ் பின்னணிக்குச் செல்லச்செல்ல.. ‘அட, இங்க பாருடா, களி செய்ய உக்காந்தா கூழ் ரெசிபியும் சேத்து கிடைக்குது’ என்ற ஆச்சரியத்துடன் பெண்ணிய மேட்டர் சிக்குகிறது. ஆச்சுடா என்பது போல டைட்டிலுக்கு முன்பான சில காட்சிகள், படம் முடிந்தபிறகு ‘மனிதி’ பாடல், அந்தப் பெண் ஓவியர் கேரக்டர், அங்கங்கே அண்டர்லைன் முதலானவற்றைச் சேர்த்து ‘இறைவிக்கு இறைவியுமாச்சு, பெண்ணியத்துக்கு பெண்ணியமுமாச்சு, படைப்பாளிக்கு படைப்பாளியுமாச்சு’ என்று திருப்தியாக படத்தை எடுத்துமுடித்துவிட்டார்!

முதலில் இந்தப் படத்தின் ஆண்கள் யாரும் பெண்ணியத்துக்கு எதிரானவர்களே அல்ல, கடைசியாக அண்டர்லைன் செய்யப்பட்டதால் வந்த ராதாரவி கேரக்டர் தவிர. அது கூட படத்தில் எங்குமே காட்சியாக்கப்படவில்லை. மேலும் அந்த காரெக்டர் தன் தவறுக்காக வருந்தி இறுதிக்காலத்தில் கோமாவில் கிடக்கும் மனைவியை கண்ணும் கருத்துமாய்க் கவனித்து, சிம்பதியை வேறு சேர்த்துக்கொள்கிறது. பிற முக்கிய காரெக்டர்களான எஸ்.ஜே.சூர்யா, விஜய்சேதுபதி, பாபிசிம்மா, விஜய்சேதுபதியின் சித்தப்பாவாக வரும் ‘கிரேசி சீனு’ மோகன் உட்பட அத்தனை பேரும் தாம் சார்ந்த பெண்களை மதிப்பவர்களாக, நேசிப்பவர்களாவே இருக்கின்றனர். இவர்களை வைத்துக்கொண்டு எப்படி ஒரு பெண்ணியக் கதையை சொல்லமுடியும். இந்தக் காரெக்டர்கள், அவரவர் வாழ்வில் ஏற்படும் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக, அவரவர் குணப்பாங்கு சார்ந்து சில தவறுகளைச் செய்பவர்களாக இருக்கின்றனர். அதிலிருந்து உணர்ந்து மீண்டு வருவதும் கூட அவர்களின் முன்னெடுப்பாகவே இருக்கிறது. ஆக, கொஞ்ச நேரமே ஊடே வரும் இந்தப் பெண்கள் அப்படி என்னதான் செய்கிறார்கள்? அச்சுப்பிசகாத நம் சமூகப் பெண்களைப் போலவே ஆண்களின் தோளில் ஏறி சவாரி செய்ய எண்ணுகிறார்கள். இந்த ஆண்களால் அந்தச்சவாரியில் சற்றே பிசகு ஏற்படுவதால், ‘ஆச்சுடா’ என்று ஏதாச்சும் பெண்ணிய நடவடிக்கைகள், முடிவுகள் மேற்கொள்கிறார்களா என்கிறீர்களா? அப்படியெல்லாம் இல்லை, சும்மனாச்சுக்கும் சினிமா டயலாக் பேசுகிறார்கள், அவ்வளவுதான்!

பெண்ணியத்தை விட்டுவிட்டு ஒரு திரில்லராக இந்தப்படம் எப்படி இருக்கிறது என்று பார்த்தாலும், சரியில்லை என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது. இடைவேளையின் போது அதிர்ச்சி மதிப்பீட்டுக்காக கொடூரமாக ஒரு கொலையைச் செய்கிறார் சேதுபதி. அதுவும் அப்பட்டமாக காட்சிப்படுத்தப்படுகிறது. அதோடு கிளைமாக்சில் அற்பக் காரணங்களுக்காக தம்பி போல பார்த்துவந்த பாபியை அடித்தே கொல்கிறார். அந்தக் கேரக்டரின் டிசைன்தான் அப்படி என்று நினைத்தால் அதைவிட அற்பமாக அண்ணனாய் மதித்து வந்த சூர்யா கையால் சுடப்பட்டு இறக்கிறார். மேற்சொல்லப்பட்ட மனிதிகளுக்கு துன்பம் தருவதற்காகத்தான் இதெல்லாம்! சுபம்!

’இன்னைக்குல்லாம் யார் சார் சாதி பாக்குறா?’ பார்ப்பனீயம் ஒழிந்துவிட்டது என்று சொல்வது எப்பேர்ப்பட்ட உண்மையோ அப்பேர்ப்பட்ட உண்மைதான் பெண்களும் சமூகவிடுதலை பெற்றுவிட்டார்கள் என்று சொல்வதும்! தாய்க்காகவும், தாரத்துக்காகவும், தங்கைக்காகவும், தோலை செருப்பாத் தச்சுப்போட்டு உழைக்கும் ஆண்களை எனக்குத் தெரியும்யானு இந்தப் படத்தைப் பற்றிப்பேசுகையில் சம்பந்தமில்லாமல் ஆரம்பிக்கிறார்கள் சிலர். பெண் சமூகவிடுதலைக்கான தூரமும், காலமும் இன்னும் அதிகம் இருப்பதாக தோன்றுகிறது. எளிதான காரியமாக இருந்திருந்தால் ஈரோட்டுக்காரனே செய்திருப்பான், அவனால் சில விலங்குகளை உடைக்க மட்டும்தான் முடிந்தது. இன்னும் கட்டுண்டு கிடப்பதாகவே கற்பனை செய்துகொண்டிருக்கும் பெண்களுக்கான நிஜ விடுதலையை, ஈரோட்டுக்காரனில்லை, வேறு எவன் வந்தாலும் தரமுடியாது. அது அவர்களின் விசாலமான பார்வையாலும், விடுதலையினால் விளைவதென்ன எனும் புரிதலாலும் மட்டுமே கிட்டும். கலையும், கல்வியும் அந்தப் பார்வையை, புரிதலை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும், ஆனால் நம் சூழலில் அது அவ்வளவு லேசில் ஆகிற கதையல்ல!

Monday, June 6, 2016

18வது சென்னைப் புத்தகக் கண்காட்சி (2016)ஒவ்வொரு ஆண்டும் சென்னை புத்தகக்காட்சி நடைபெறும் இடத்தைப் பொறுத்தவரை ஏதாவது பஞ்சாயத்து இருந்துகொண்டேதான் இருக்கும் போலும். இந்த ஆண்டு தீவுத்திடல் என்றபோதே ஒரு மலைப்பு தோன்றியது நிஜம்தான். போரூர் எனும் வெளிநாட்டிலிருந்து விசாவெல்லாம் வாங்கிக்கொண்டு செல்லத் தயாராக வேண்டுமே என்ற மலைப்புதான், வேறென்ன? போலவே காட்சி நுழைவாயில் கடற்கரைச்சாலை மட்டுமே என்ற அறிவிப்பு எங்குமே கண்ணில் படவில்லை. நம்மைப் பற்றித் தெரியாதா, சரியாக அண்ணாசாலை தீவுத்திடல் வாயிலுக்கேச் சென்றேன்! நுழைவாயிலே இல்லையாம், இதில் ஜபர்தஸ்தாக புத்தகக்காட்சியின் தோரணவாயில் இருந்தது அண்ணாசாலை நுழைவிடத்தில்! அங்கேயும் கூட அறிவிப்பு எதுவுமே இல்லை. என்னைப்போலவே நூற்றுக்கணக்கான பைக்வாசிகள், கால்நடைக்காரர்கள், பத்தாத குறைக்கு பெண்டாட்டி பிள்ளைகளுடன் அண்ணாசாலை நுழைவு வழியாக அரைகிலோ மீட்டர் நடந்துசென்று, ’என்ன எங்கு பார்த்தாலும் காராக இருக்கிறது, புத்தகக் கண்காட்சியையே கண்ணுக்கெட்டிய தூரம் வரை காணவில்லையே’ என அதிர்ந்து திரும்பி, மீண்டும் அண்ணாசாலைக்கே வந்து போலீஸ்காரர்களிடம் ’கிணத்தைக் காணோமே’ என்கிற மாதிரி விசாரித்து பின் மீண்டும் கடற்கரைச்சாலைக்குப் பயணித்தைத் துவக்கினர்.

***

ஜனவரியின் அருமை அனைவருக்கும் தெரிந்திருக்கும். இத்தனைக்கும் சர்வ ஜாக்கிரதையாக மாலை 5 மணிக்கு மேல்தான் நுழைந்தேன் அரங்கிற்குள். மக்கள் வியர்த்து வழிந்த வண்ணமிருந்தனர். சில தெருக்களில் சுற்றியடித்து, ஓய்ந்துபோன நான் கூட ’மறந்துபோய் மதியப்பொழுதில் நுழைந்துவிட்டோமோ’ என, வியர்வையைத் துடைத்து கைக்குட்டையைப் பிழிந்துவிட்டு வாட்சைப் பார்த்தபோது மணி எட்டு.

***

1999 முதலாகத் துவங்கி ஒரு ஆண்டு கூட தவறாமல் வருகிறேன். இது எனக்கு 18வது ஆண்டு. அதுவும், சில ஆண்டுகளாக சர்வீஸ் துறையிலிருப்பதால் தவறவிட வாய்ப்பு மிக இருந்தும் எப்படியோ தப்பிவருகிறேன். துவக்க கால காயிதேமில்லத் கல்லூரி வளாகத்தின் போது ஆர்வமிகுதியில் ஒவ்வொரு அரங்காக சுற்றிவருவது, ஒவ்வொரு புத்தகமாக நோண்டிப்பார்ப்பது, விஐபிகளை விரட்டி விரட்டி வேடிக்கை பார்ப்பது (கனிமொழி மிக சுவாதீனமாக தன் தோழியருடன் உலாவிக்கொண்டிருப்பார்), சிக்கியவர்களிடம் கையெழுத்து வாங்குவது (ஜெயமோகன் புக்கில் சாருவிடம் கையெழுத்து வாங்கியதும் உண்டு) என்றெல்லாம் நடக்கும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக, வாக்கிங் செல்வதற்காகத்தான் கண்காட்சிக்கே செல்கிறேனோ எனத் தோன்றுகிறது. சுமார் 5 நீநீநீள நீளமான தெருக்களில் ஸிக்ஸாக்காக நடக்க ஆரம்பித்து எல்லைக் கோட்டைத்தொட்டால் கால்வலி பின்னுகிறது! இடையிடையே உயிர்மை, காலச்சுவடு, விகடன் போன்ற விஐபி ஸ்டால்கள் என குறிப்பிட்டு இல்லாமல், அகஸ்மாத்தாக ஏதாவது இரண்டு மூன்று கடைக்குள் புகுந்து, எதையாவது பார்த்து, இயன்றால் எதையாவது வாங்கவேண்டும், அவ்வளவுதான், நோக்கம்!

இம்முறை நாஞ்சிலின் கற்றது கைம்மண்ணளவு, காயத்ரியின் மயக்குறு மகள், தமிழ்ஸ்டுடியோ படச்சுருள் இதழ்த்தொகுப்பு, சுபாவுக்கு ஓவியம் பழக ஒரு புத்தகம் இவ்வளவுதான் என் தேர்வு. நிறைய வாங்கவேண்டும் என்ற ஆசை போகவில்லை, ஆனால், முதலில் நிறைய படிப்போம், பிறகு வாங்கிக்கொள்ளலாம் எனும் நிதானம் வந்திருக்கிறது.

***

கடந்த சில ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் முத்து காமிக்ஸ் அரங்கம் நிறைய வெரைட்டிகளோடு நிறைந்திருக்கிறது. காமிக்ஸ் வாசக வட்டத்தை, ஏதோ அண்டர்கிரவுண்ட் ஆசாமிகளைப் போல அணுகும் சூழல் காலங்காலமாக இருப்பதால் கமுக்கமாகவே வாசக வட்ட சந்திப்பு நிகழ்ந்தது. உதாரணத்துக்கு ஏற்ப காமிக்ஸ் வாசகர்களை சலித்தெடுத்தால் தமிழகம் முழுக்க ஒரு ஆயிரம் பேர் தேறுவார்களா சந்தேகமே! மெனக்கெட்டு ரயில்பிடித்து வந்து சக தீவிரவாதிகளோடு ’3 எலிபண்ட்ஸ்’ அண்டர்கிரவுண்டில் ஆலோசனை நடத்துமளவு தீவிர வாசகர்கள் என்று பார்த்தால் ஒரு ஐம்பது பேர் இருக்கக்கூடும். சக பயணி, லயன் காமிக்ஸ் திரு.விஜயனுக்கு நன்றி!

***

எட்டு மணிக்கு அரங்கை விட்டு வெளியேறி, அக்கடாவென ஒரு நாற்காலியில் உட்கார்ந்தேன். ஒழுக்கத்துக்கும், நம் மக்களுக்கும் தூரம் அதிகம். இரண்டு பக்கமும், தின்பண்ட அரங்குகள், மெகா உணவரங்கம் என அந்த இடத்தையே குப்பை மேடாக்கிவைத்திருந்தார்கள். அந்நேரத்துக்கும் ஏதோ மேஜிக் ஷோ பார்க்கப்போவது போல, அரக்கப்பரக்க டிக்கெட் வாங்கிக்கொண்டு, இடது கையில் இல்லாள், வலது கையில் பிள்ளை என உள்ளே நுழைந்துகொண்டிருந்தவர்களைப் பார்க்க முடிந்தது. பத்து ரூபாய் பார்க்கிங் டிக்கெட்டை ஏமாற்ற தில்லாலங்கடி வேலைகளையெல்லாம் செய்துகொண்டிருந்தார் ஒரு நபர்! வெளியே செல்பவர்களில் பத்தில் ஒருவரிடம் மட்டுமே புத்தகங்கள் வாங்கிய பை இருந்தது. புத்தகக் காட்சி ஒன்றும் பொருட்காட்சி அல்ல, புத்தக நோக்கமில்லா கணவன், மனைவி, குழந்தைகளை கூட்டிக்கொண்டு வந்து நெரிசலை ஏற்படுத்தாதீர்கள் ஐயா என்று முன்பொரு முறை எழுதிய ஞாபகம். அதை வாபஸ் வாங்கிக்கொள்கிறேன். பட்டுக்குழந்தைகளை கட்டாயம் கூட்டி வாருங்கள். இலக்கியப் புத்தகமெல்லாம் ஓரமாய்க் கிடக்கட்டும். புத்தகத் தெருக்களுள் உட்கார அனுமதித்தால் அழகாக உட்கார்ந்துகொண்டு அழகழாய் குட்டிக்குழந்தைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கலாம். கெஞ்சலாய், கொஞ்சலாய், அழுகையாய், ஆர்பாட்டமாய், அலட்சியமாய் பிள்ளைகளைக் காண்பதே அழகு!

இரண்டரை வயதில் ஒரு வாண்டு இடுப்பில் உட்கார்ந்துகொண்டு, தலையணை சைஸில் ’மனப்பூதமும், மாங்கொட்டையும்’ என்பது போன்றதொரு தலைப்பில் ஒரு இலக்கியப் புத்தகத்தை வாங்கச்சொல்லி தன் பெற்றொரை அழவைத்துக்கொண்டிருந்ததை கண்நிறைய பார்த்து ரசித்துக்கொண்டிருந்தேன்.

*

Friday, June 3, 2016

ஃபேஸ்புக் பகிர்வுகள் -1

சென்ற மாத லயன்-முத்து காமிக்ஸ் இதழ்களுள் ஒன்றான 'டாக்டர் டெக்ஸ்' இதழின் மொழிபெயர்ப்பை நான் செய்திருக்கிறேன். முதல் முறையாக ஒரு காமிக்ஸ் படைப்பில் பங்கேற்றது அளவிலா மகிழ்ச்சி. வாய்ப்பளித்த லயன் குழும எடிட்டர் திரு.விஜயனுக்கு நன்றி.*

சுபாவுக்கு 'ப்' சொல்வதில் பிரச்சினை. கருத்தோடு கவனமாக சொல்லச் சொன்னால் நன்றாக சொல்லிடுகிறான். ஆனால் இயல்பான பேச்சில் உதடு ஒட்டாது 'ப்'பை ஒலித்திடுகிறான். ஆங்கில 'ஃப்' அளவு தெளிவு கூட இல்லை. அதனால் கொஞ்ச நாளாக கடுப்பு. சொல்லித் திருத்திட முடியவில்லை. செந்தமிழும் நாப்பழக்கம்தானே.. நானே பகரம் அதிகம் வருமாறு சொற்றொடர்களை எழுதித்தந்து பழக்க முயன்று வந்தேன். நமக்குதான் பிள்ளைகளை விட முக்கியமான வேலைகள் ஆயிரம் உளவே இவ்வுலகில். அதனால்தான் குழந்தைப் பாடல்களைத் தேடிக்கொண்டிருந்தேன். பாருங்கள் ஒரே பாடலில் இங்கே எத்தனைப் பகரப் பூனைகள்! நம் முன்னோர்தான் எத்தனை அறிவுச் சொத்துகளை நமக்காக விட்டுச் சென்றிருக்கின்றனர். பல சமயங்களிலும் அதை அறியா மூடராயிருந்து விடுகிறோம்!

பெரியசாமித்தூரன் எழுதிய குழந்தைப் பாடலொன்று. (நன்றி: கவிஞர் மகுடேசுவரன் )

பூனையாரே பூனையாரே
என்ன செய்கிறீர் ?
பொந்துக்குள்ளே போன எலியைப்
பிடிக்கப் பார்க்கிறேன்.
பூனையாரே பூனையாரே
என்ன செய்கிறீர் ?
பிடியைத் தப்பிப் போன எலியைத்
தேடிப் பார்க்கிறேன்.
பூனையாரே பூனையாரே
என்ன செய்கிறீர் ?
போன எலியும் திரும்புகின்ற
நேரம் பார்க்கிறேன்.
பூனையாரே பூனையாரே
என்ன செய்கிறீர் ?
பார்த்த கண்ணும் பூத்துப் போச்சு
தூங்கப் போகிறேன்.

(பாடல் இடம்பெற்ற நூற்குறிப்பு: சாகித்ய அகாதமி வெளியீடு. 2012ல் வெளியான ‘குழந்தைப் பாடல்கள்’ என்னும் தொகுதி நூல் இது. தொகுப்பு: டாக்டர் பூவண்ணன். புகழ்பெற்ற குழந்தைப் பாடல்களை எழுதிய எல்லா ஆசிரியர்களின் பாடல்களும் இந்நூலில் உள்ளன. இருநூறு பக்கங்கள். 274 பாடல்கள். விலை ரூ. 115.)

*

’கைதி’ என்பவன் பயணக் கைதியாவானா என்பது நண்பரொருவரின் கேள்வி. இதுவொரு சிந்தனைக்குரிய கேள்வியாகும். அதை ஆய்வோம் இப்போது. எல்லாக் கைதியுமே நிச்சயமாக ஒரு பொழுதில், ‘பயணக் கைதி’யாக இருந்துதான் ஆகவேண்டும். (கைது செய்யப்பட்ட இடத்திலிருந்து காவல்நிலையம் கொண்டுசெல்வது, அங்கிருந்து நீதிமன்றம் கொண்டுசெல்வது, அங்கிருந்து சிறைச்சாலை கொண்டுசெல்வது). ஆக எல்லாக் கைதிகளையுமே நாம் பயணக் கைதி என அழைக்கலாம். அதில் லாஜிக் இருக்கிறது. ஆனால், எல்லா ’பணயக் கைதி’களுமே பயணக் கைதிகளாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. (ஒரு அறைக்குள்ளேயே பணயக்கைதியாக சிறைபட்டு மீளலாம்/அல்லது பரலோகம் பயணிக்கலாம். இங்கு, கைதியின் வேலை முடிந்துவிட்டதால் பரலோகப் பயணத்தை, நாம் கைதுப் பயணமாகக் கொள்தல் கூடாது.) இருப்பினும், ‘பணயக் கைதி’கள், ’பயணக் கைதி’யாகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது. (பஸ், ஆகாயவிமானம் கடத்தப்பட்டு கைதிகளாதல்). பொதுவாக பயணக் கைதிகளைக் குற்றவாளிகளாகவும், பணயக் கைதிகளை நிரபராதிகளாகவும் கருதலாம். ஆனால், எல்லா பயணக் கைதிகளுமே குற்றவாளிகளாகத்தான் இருக்கவேண்டுமெனும் அவசியமில்லை. (நீதிவழுவாகி நிரபராதி கைது செய்யப்படலாம்). போலவே, எல்லா பணயக் கைதிகளுமே நிரபராதிகளாக இருக்கவேண்டுமெனும் அவசியமுமில்லை. (குற்றம் புரிந்தும், சட்டத்தை ஏய்த்து வாழ்பவர் தற்செயலாக பணயக் கைதியாகிவிடலாம்). முக்கியமாக, எல்லா பணயக் கைதிகளோடும், எப்போதும் ஒன்றல்லது மேற்பட்ட பயணக் கைதிகள் இருப்பர். ஆனால், பயணக் கைதிகளோடு எப்போதுமே பணயக்கைதிகள் இருக்கவேண்டுமென்பது அவசியமில்லை. போலவே..
‪#‎வெயில்‬தாக்கம்

*

அவ்வளவு செஞ்ச போதிதர்மராலயே வழுக்கமண்டைக்கு மருந்து கண்டுபுடிக்க முடியல.. ஸோ ஸேட்!
-சன்டிவியில் 7ம் அறிவு

*

இன்று காலை கிளம்புகையில், கண்ணாடி முன்னால் நேரம் சிறிது கூடுதலாயிற்று. அதைக் கவனித்த ரமா துவங்கினார்,
‘இப்ப என்ன நீட்டி முழக்க வேண்டியிருக்குது?’
சட்டென பதில் கிடைக்கவில்லையாதலால், எதிர்தாக்குதல் நடத்த திட்டமிட்டு,
‘ஆமா, பொம்பளைங்க மட்டும்தான் நீட்டி முழக்கணுமோ?’
வழக்கமா கடுப்பாகிறவர், சிரித்துக்கொண்டே, ‘பூவுக்குதான் டிசைனா இருக்கா, கலரா இருக்கா, மணமா இருக்கா, அழகா இருக்கானு பாப்பாங்க.. காய்க்கு என்ன அலங்காரம் வேண்டிகிடக்கு?’
அதுசரி, ஒரு எலக்கியவாதி கூட பத்து வருசமா குடும்பம் நடத்திட்டு இந்த தத்துவம் கூட வரலைன்னா எப்படி? ஹிஹி!

*

தேர்தல் காலத்தை ஒட்டிய என் அரசியல் மீம்கள் சில:

*

Sunday, May 8, 2016

பிரிவில் எழுது!

தூரத்தால் பிரிந்துதான் இருக்கிறாய்..
நானும்
பிரிந்து போய்விடு என்றுதான் சொல்கிறேன்
ஆனால் பிரிவு ஒரு மேஜிக் என்பதை
உணர்ந்து
சிரிக்கிறாய் நீ!
தவிக்கிறேன் நான்!
பிரிவின் தவிப்பு யாருக்காக
என்பதில் இருக்கிறது
வாழ்வின் இன்னொரு மேஜிக்!

-இன்று மே8
வாழ்த்துகள் என் கண்மணி!


Friday, May 6, 2016

இலக்கியமும், கலையும் தாழச்செல்வதல்ல! : அவ்வை டிகே சண்முகம்

முன்குறிப்பு: அவ்வை டிகே சண்முகம் எழுதிய, ‘எனது நாடக வாழ்க்கை’ எனும் புத்தகத்திலிருந்து பெற்ற தகவல்களை முன்னிறுத்தி, நான் எழுதிய இக்கட்டுரை ஏப்ரல்’16 தமிழ்ஸ்டுடியோவின் ’பேசாமொழி’ இணைய இதழில் வெளியானது. பேசாமொழிக்கு நன்றி! ஒரு புத்தகத்தைச் சார்ந்து எழுதப்பட்ட எளிய கட்டுரையாயினும், இந்த ஆறேழு வருட இணைய எழுத்துப் பயிற்சியில் மிக அதிக உழைப்பையும், நாட்கணக்கில் நேரத்தையும் எடுத்துக்கொண்ட கட்டுரை இதுவே! மனதுக்குப் பிடித்ததாயும் ஆயிற்று!
-ஆதி.

***********

இலக்கியமும், கலையும் தாழச்செல்வதல்ல! : அவ்வை டிகே சண்முகம்

ஏனென்றெல்லாம் விளக்குவது மிகக்கடினம். சிலரை நமக்கு அப்படிப் பிடித்துப்போகும். பழம்பெரும் நடிகர் டிகே பகவதி என்றால் எனக்கு அப்படியொரு பிரியம். நல்ல உயரம், கம்பீரமான தேகம், உறுதியான, தெளிவான தமிழ் உச்சரிப்பு. சின்ன வயதில் அவரைச் சில கறுப்பு வெள்ளை படங்களில் பார்த்திருக்கிறேன். பல வருடங்களுக்குப் பின்னர், சமீபத்தில் டிவியில் ’வந்தாளே மகராசி’ எனும் படத்தில் ஜெயலலிதாவின் அப்பாவாக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அவரைப் பார்த்தபோது மீண்டும் அவரைப் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் மிகுந்தது.

கூகுளை நாடினேன். நம்புங்கள், அத்தகைய லெஜண்டரி நடிகரைப்பற்றி ஒரு விக்கிப்பக்கம் கூட கிடையாது. மிக அடிப்படையான சில தகவல்கள் தவிர வேறெதுவும் இல்லை. டிகேஎஸ் சகோதரர்கள் என்போர் யாவர்? அவர்கள் எத்தனை பேர்? அவர்கள் நடித்த திரைப்படங்கள் ஏதும் இருக்கின்றனவா என்பது போன்ற தகவல்கள் எதுவுமே இணையத்தில் இல்லை. இருபதாம் நூற்றாண்டின் முதல் ஐம்பதாண்டுகளில் தமிழ் நாடக உலகில் கோலோச்சிய டிகேஎஸ் சகோதரர்களில் ஒருவர்தான் டிகே பகவதி எனவும், அவ்வை டிகே சண்முகம் இவரது சகோதரர் எனவும் முன்பொரு நாள் டிவி பார்த்துக்கொண்டிருந்தபோது, நான் கேட்டதற்கு என் தந்தை பதிலளித்தது ஞாபகம் வந்தது.


பல மேடைகளிலும் நடிகர் கமல்ஹாசன், ஆர்வத்தோடு குறிப்பிடும் ஆசான் சண்முகம் அண்ணாச்சி என்பவர்தான், இந்த அவ்வை டிகே சண்முகம் என்பதையும், அவர் ஒரு பழம்பெரும் நாடக நடிகர் என்பதையும், கேபி சுந்தராம்பாள் நடித்துப் புகழ்பெற்ற ’அவ்வையார்’ திரைப்படத்தின், நாடக வடிவத்தில் அவ்வையாக நடித்துப் புகழ்பெற்றவர் என்பதையும் நாம் கணிக்கலாம். வேறெதையாவது தெரிந்துகொள்ள விரும்பினால்? ம்ஹூம்! வாய்ப்பில்லை.

பத்திரிகை நண்பர் ஒருவரிடம் இதுபற்றிப் புலம்பிக் கொண்டிருந்தபோதுதான் அவர், அவ்வை சண்முகம், ‘எனது நாடக வாழ்க்கை’ எனும் தலைப்பில் சுயசரிதம் எழுதியிருப்பதாகவும், அதில் நீங்கள் ஆர்வம் கொண்டிருக்கும் தகவல்கள் கிடைக்கலாம் என்றும் சொல்லிவிட்டு, உதிரும் நிலையில் தன்னிடமிருந்த அந்த பழைய புத்தகத்தையும் தந்துதவினார். என்னைப்போல டிகேஎஸ் சகோதரர்களைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்பும் வாசகர்களுக்காக அந்த நூலிலிருந்து கிடைத்த சில தகவல்களை இங்கே பதிந்து வைப்பது மட்டுமே இந்தக்கட்டுரையின் பிரதான நோக்கம்.

டிகேஎஸ் எனும் எழுத்துகள் நாமனைவரும் நினைப்பதைப்போல, டிகே சண்முகத்தைக் குறிப்பதல்ல. அது டிகேஎஸ் சகோதரர்கள் எனும் நால்வரில் மூத்தவரான டிகே சங்கரனைக் குறிக்கிறது. மூத்தவர் சங்கரன், இரண்டாமவர் முத்துசாமி, மூன்றாமவர் சண்முகம், இளையவராக பகவதி. பகவதியின் ஆஜானுபாகுவான தோற்றத்தால் அவர் மூத்தவராக இருக்கக்கூடுமென நான் எண்ணியிருந்தேன். மூன்று அண்ணன்மாரின் பாசத்தில் வளர்ந்த இளையவர் அவர். இவர்கள் நால்வர் மட்டுமே அல்லர், நால்வருக்கும் இளையவர்களாக சுப்பம்மாள், காமாட்சி எனும் இரு சகோதரியரும் இவர்களுக்கு உண்டு.

வாழ்நாள் முழுவதும் தமிழகமெங்கும் நாடோடி வாழ்க்கை வாழ்ந்த டிகேஎஸ் சகோதரர்களின் வீடும், உறவுகளும் நாகர்கோயிலில் அமைந்திருந்தாலும் பூர்விகம் திருவனந்தபுரம் என்பதை அறியமுடிகிறது. தந்தையார் டிஎஸ் கண்ணுசாமிப்பிள்ளை ஒரு நாடக நடிகர்.

சினிமாவுக்கு இத்தனை ஆதரவை அள்ளித்தந்திருக்கும் தமிழ்கூறும் உலகம், சினிமாவுக்கு முந்தையதான காலகட்டத்தில் நாடகத்தையும் அவ்வாறே கொண்டாடியிருக்கும் என நாம் எண்ண வழியுண்டு. ஆனால் அதில் அத்தனை உண்மையில்லை போலிருக்கிறது. ‘ஒரு தொழிலும் இல்லாதார் நாடக நடிகரானார்’ எனுமொரு சொல்வழக்கே அந்த காலகட்டத்தில் இருந்திருக்கிறது. கூத்தாடிகள், குடிகாரர்கள் எனும் பெயரோடு சமூகத்தில் மதிப்பற்றுத்தான் வாழ்ந்திருக்கின்றனர் நாடகக்கலைஞர்கள் ஒரு காலத்தில். அத்தகைய 1910களில் சிறுவர்களான தன் நான்கு பிள்ளைகளையும் ஒரு சந்தர்ப்பத்தில், தமிழ்நாடகத் தலைமையாசான் என்றறியப்படும் தவத்திரு. சங்கரதாஸ் சுவாமிகளின் வற்புறுத்தலின் பேரில் அவரது ’மதுரை தத்துவ மீனலோசனி வித்துவ பால சபா’ எனும் நாடகக்கம்பெனியில் சேர்த்துவிடுகிறார் டிஎஸ் கண்ணுசாமி. 1918ல் அங்கே சேரும்போது டிகே சங்கரனுக்கு வயது சுமார் 12, முத்துசாமிக்கு 10, சண்முகத்துக்கு வயது 8, பகவதி இன்னும் இளையவர்!

இப்படியான சிறுவர்களையே முழுதுமாகக்கொண்டு நாடகங்கள் நடந்தனவா அந்தக்காலகட்டத்தில்? இதை இப்போது முழுதுமாக நம்மால் புரிந்துகொள்ள இயலவில்லை. பெண்கள் நாடகத்தில் நடிக்க வராத காரணத்தால், ஆண்களே பெண்களாகவும் வேடமிட்டு நடிக்கும் சூழல் இருந்ததை நம்மால் உணரமுடிகிறது. அப்படியான வயது வந்த, அனுபவமிக்க நடிகர்களைக் கொண்ட குழுக்கள் பல இயங்கிவந்தபோதும், சங்கரதாஸ் சுவாமிகளின், ’தத்துவ மீனலோசனி வித்துவ பால சபா’ போன்ற சில கம்பெனிகள் முற்றிலும் சிறார்களை வைத்து நாடகங்கள் நடத்திவந்திருக்கின்றன. சிறுவர்களால் எப்படி சீரியஸ் நாடகங்களை நடிக்கமுடியும்? குழந்தைகளை முன்னிறுத்தி நடத்தப்படும் இப்போதைய டிவி ரியாலிடி காட்சிகள்தான் ஞாபகம் வருகின்றன. பெரியவர்களின் நிகழ்ச்சிகளின் மீது, ரசிகர்களின் ஆர்வம் குறைகையில் ஒரு மாற்றாக குழந்தைகளை, ஒருவகையில் அவர்களின் இயல்புக்கு மாறான, வயதுக்கு மீறிய விஷயங்களில், நம் சுயநலத்திற்காகப் பயன்படுத்திக்கொள்வதைப் போன்றதாகவே அதுவும் இருக்கலாம் என நாம் கருத இடமுண்டு. அதுவும் சிறுவர்களை மிகக்கண்டிப்புடன் பயிற்சி தந்து நடிக்கச் செய்திருக்கின்றனர். நாடக ஆசிரியர்கள் ஒழுங்காக நடிக்காத, பாடாத பிள்ளைகளை அடித்துத் துன்புறுத்தவும் செய்தனர் என்பதும் புத்தகத்தில் ஆங்காங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.

சகோதரர்களில் மூத்தவரை தந்தையின் ஸ்தானத்தில் வைத்து மதித்துப் போற்றும் பண்பு நம் கலாச்சாரத்தில் மிக முக்கியமானது. காலத்தால் அது அழிந்துவருவதை இப்போது நாம் காண்கிறோம். டிகேஎஸ் சகோதரர்களிடம் அந்தப்பண்பு மிக மேலோங்கியிருந்திருப்பதைக் காணமுடிகிறது. வாழ்விலும், தாழ்விலும் அண்ணன் சொல் மீறாத தம்பியராய் வாழ்ந்து வந்திருக்கின்றனர் மற்ற மூவரும். பிற்பகுதியில் இவர்களின் சொந்த நாடகக்கம்பெனியிலிருந்து எண்ணற்ற நடிகர்கள் உருவாகி சினிமாவுக்குள் நுழைந்த போதும், வாய்ப்புகள் வந்தபோதும் அண்ணன் சங்கரனின் சிந்தனைக்கும், ஆணைக்கும் கட்டுப்பட்டு சினிமாவில் ஆர்வம் காட்டாது நாடகத்துறையிலேயே இருந்து வந்திருக்கின்றனர். அப்போது சங்கரனின் முடிவு வேறாகியிருந்தால், முதல் தலைமுறை தமிழ் சினிமாவின் ஆதிக்க சக்தியாய் டிகேஎஸ் சகோதரர்கள் இருந்திருக்கக்கூடும்.
முதன்முறையாக 1918ல் சத்தியவான் சாவித்திரி நாடகத்தில் நாரதராக நடித்தார் டிகே சண்முகம். அப்போது அவருக்கு வயது 8. அந்த முதல் நாடகத்தில், எமனாக வேடம் புனைந்துவந்த நடிகரைப் பார்த்து பயந்து மேடையிலிருந்து உள்ளே ஓடிப்போய் சபையோரின் நகைப்புக்கு ஆளானதை புத்தகத்தின் துவக்கத்திலேயே நினைவுகூர்கிறார் சண்முகம். இதிலிருந்து எத்தகைய குழந்தைகளை நடிக்கவைத்திருக்கிறார்கள் என்பதை அறியமுடிகிறது.

தொடரும் ஆண்டுகளில், சண்முகத்தின் மீதான ஆர்வத்தில், அவரைக் கதாநாயகனாக ஆக்கவேண்டி சங்கரதாஸ் சுவாமிகள் எழுதிய நாடகம்தான் ‘அபிமன்யு சுந்தரி’. இந்த நாடகம்தான் அவரால் நூற்றுக்கணக்கான பாடல்கள், வசனங்களுடன் ஒரே நாளிரவில் எழுதிமுடிக்கப்பட்ட சாதனைக்குரிய நாடகம் என இன்றளவும் நினைவுகூரப்படுகிறது.

வித்வ பால சபையின் பொறுப்பாளராக, நாடகாசிரியராக சங்கரதாஸ் சுவாமிகள் இருந்தாலும் அதன் உரிமையாளர்கள் வேறு நபர்கள். போலவே நடத்தப்பட்ட நாடகங்களும் சங்கரதாஸ் சுவாமிகள் எழுதியவை மட்டுமே அல்ல! வேறு பல நாடகாசிரியர்களின் நாடகங்களும் உரிமைகள் பெறப்பட்டு நடிக்கப்பட்டிருக்கின்றன. போலவே, தமிழகமெங்கும் ஒரே சமயத்தில் பல நாடகக் கம்பெனிகளிலும் ஒரே நாடகங்கள் நடிக்கப்பட்டிருக்கின்றன. பவளக்கொடி, சதியனுசூயா, சுலோசனா சதி, சீமந்தனி, பிரகலாதன், கோவலன், பார்வதி கல்யாணம், வள்ளி திருமணம், அல்லி அர்ஜுனா, குலேபகாவலி போன்ற நாடகங்கள் வித்வ பால சபையால் இவ்வாறு நடிக்கப்பெற்றவைதான். இவற்றில் பலவும் பின்னாளில் சினிமாவாகவும் உருப்பெற்றிருக்கின்றன.

அந்நாட்களில் சிறுமேடைகளில் அரிக்கேன் விளக்குகளின் வெளிச்சத்திலும், அது கூட இல்லாத சிற்றூர்களில் தீப்பந்தங்களின் உதவியுடனும் கூட நாடகங்கள் நடந்திருக்கின்றன. தமிழகத்தின் ஒவ்வொரு சிறிய, பெரிய ஊர்களுக்கும் நாடகக்குழு பயணம் செய்து நாடகங்களை நடத்தியிருக்கின்றனர். ஒவ்வொரு ஊரிலும் பல மாதங்கள் தங்கியிருந்து நாடகம் நடத்தும் வழக்கம் அன்றைய நாட்களில் இருந்திருக்கிறது. சில ஊர்களில் நல்ல வரவேற்பும், வருமானமும் கிடைப்பதும், அதுவே சில ஊர்களில் எதிர்மறையாக அமைவதென காலங்கள் ஓடிக்கொண்டிருந்திருக்கின்றன. வாழ்நாள் முழுதும் ஒவ்வொரு நாடகக்குழுவும் இப்படி பயணித்தபடியேதான் இருந்திருக்கின்றன.

புத்தகம் முழுதும் இன்னொரு விஷயத்தையும் காணமுடிகிறது. ஒவ்வொரு கம்பெனியிலும் நடிகர்கள் ஓரிரு மாதங்கள், ஓரிரு வருடங்கள் கூட தாக்குப்பிடிக்கமுடியாமல், பணத்துக்காகவும், வேறு காரணங்களுக்காகவும் அடிக்கடி கம்பெனிகள் மாறிக்கொண்டே இருந்திருக்கிறார்கள். சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிட்டு, மீண்டும் சில மாதங்களில் திரும்பியும் வந்திருக்கிறார்கள். நடிகர்கள் பற்றாக்குறையால் கம்பெனிகள் பெரிய நிபந்தனைகளின்றி, அவர்களை மீண்டும், மீண்டும் ஏற்றுக்கொள்ளவும் செய்திருக்கின்றனர்.
துவக்க காலத்தில் டிகே சங்கரனும், டிகே முத்துசாமியும் நாடகங்களில் பல்வேறு சிறிய, பெரிய கதாபாத்திரங்களில், ஆணாகவும், பெண்ணாகவும் நடித்து வந்திருக்கின்றனர். ‘சுலோசனா சதி’ நாடகத்தில் கதாநாயகன் இந்திரஜித்தாக நடித்திருக்கிறார் சங்கரன். இவரது கம்பீரமான, அழகிய தமிழ் உச்சரிப்பால், இந்திரஜித்தால் சுலோசனா சிறையெடுக்கப்படுவதான கதை, சுலோசனாவே மனமொப்பி இந்திரஜித்துடன் செல்வதாக மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. டிகே முத்துசாமி இசையில் பெருநாட்டம் கொண்டு, இசை சார்ந்த பணிகளை செய்தவர் எனினும் நடிப்பிலும் பங்களித்திருக்கிறார். ’சத்தியவான் சாவித்திரி’ நாடகங்களில் சாவித்திரியாக பாத்திரமேற்று புகழ்பெற்றிருக்கிறார்.

காண்ட்ராக்டர்களால், அல்லது வேறு காரணங்களால் சங்கரதாஸ் சுவாமிகளுக்கும், கண்ணுசாமிப்பிள்ளைக்கும் இடையிடையே மனத்தாங்கல்களும் ஏற்பட்டிருக்கின்றன. ஓரளவு நடிப்பனுபவமும், புகழும் பெற்றிருந்த பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வேறு கம்பெனிகளுக்குத் தாவவும் அவர் முயன்றிருக்கிறார். அத்தகைய சமயங்களில் சகோதரர்களின் தாயார் சீதையம்மாளின் குறுக்கீட்டால், ‘குருபக்தி’ காரணம் காட்டப்பட்டு தடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

முன்னதாக சங்கரதாஸ் சுவாமிகள் ‘சமரச சன்மார்க்க நாடக சபை’ எனும் கம்பெனியை நடத்தி வந்திருக்கிறார். அதுசமயம் மதுரை மாரியப்ப சுவாமிகள், ராஜா எம்.ஆர் கோவிந்தசாமிப்பிள்ளை, பின்னாளில் திரைப்படங்களில் புகழ்பெற்ற எஸ்ஜி கிட்டப்பா போன்றோரும் அவரின் மாணவர்களாக பயின்றிருக்கின்றனர்.
சில ஆண்டுகள் தென்மாவட்டங்களில் சுற்றிய வித்துவ பால நாடகக்குழு 1921ல் சென்னைக்கு வருகிறது. ரயில் நிலையம், ஜனத்திரள், ட்ராம் வண்டிகள், பூரி போன்ற உணவு வகைகள் என முதல்முறையாக தாம் சென்னை வந்த நாளை வியப்புடன் நினைவுகூர்கிறார் டிகே சண்முகம். அது சமயம் சபா மேனேஜரான காமேஸ்வர ஐயருக்கும், டிகேஎஸ் சகோதரர்களின் தந்தையார், கண்ணுசாமிப்பிள்ளைக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவும், பணத்துக்காகவும் கண்ணுசாமிப்பிள்ளை, பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு, அப்போது சென்னையில் மிகப் பிரபலமான ராயல் தியேட்டரில் நாடகங்களை நடத்திக்கொண்டிருந்த தெ.பொ.கிருஷ்ணசாமிப்பாவலரின் ‘பால மனோகர சபை’யில் இணைந்துகொண்டார். நடிகர்களை ஒரு குழுவிலிருந்து இன்னொரு குழுவுக்குக் கடத்திச்செல்வதற்கென்றே செயல்படும் இடைத்தரகர்களின் ‘திருப்பணி’ இது என்று சண்முகம் நினைவுகூர்கிறார் இந்த சம்பவத்தை!

பாவலரின் ’பால மனோகர சபை’யில்தான் சதியனுசூயா, ராஜா பர்த்ருஹரி, கதரின் வெற்றி போன்ற புகழ்பெற்ற நாடகங்களில் நடித்தனர் டிகேஎஸ் சகோதரர்கள். இதில் கதரின் வெற்றி ஒரு தேசபக்தி நாடகமாகும். தெ.பொ.கிருஷ்ணசாமிப் பாவலர், பம்மல் சம்பந்தமுதலியாரின் ’சுகுணவிலாச சபை’யில் பயிற்சிபெற்ற, அவரது மாணவராவார். இந்த இடத்தில் சம்பந்த முதலியார் எழுதிய ‘மனோகரா’ நாடகம் அவரது சுகுணவிலாச சபையில் நடைபெற்ற போது மனோகரனாக சம்பந்த முதலியார் பல ஆண்டுகள் நடித்திருக்கிறார் என்பதும், சதி சுலோசனா, சபாபதி, வேதாள உலகம், ரத்னவல்லி போன்ற புகழ்பெற்ற திரைப்படங்கள் பலவும் சம்பந்த முதலியார் எழுதிய நாடகங்களின் கதைகளே என்பதும் நாம் காணக்கிடைக்கும் தகவல்கள்.
1922 அக்டோபரில், அதே மனோகரா நாடகத்தை, மனோகரனாக டிகே சண்முகத்தை நடிக்கவைத்து, சம்பந்தமுதலியாரின் தலைமையிலேயே, ‘பால மனோகர சபை’யிலும் நடத்தியிருக்கிறார் தெ.பொ.கிருஷ்ணசாமி. நாடக முடிவில், சண்முகத்தின் நடிப்பில் மகிழ்வுற்ற சம்பந்த முதலியார், ‘அடுத்த தலைமுறையின் தலைசிறந்த நடிகர்கள் உருவாகிவிட்டார்கள்’ என்று தம் மகிழ்ச்சியை மேடையிலேயே தெரிவித்துப் பாராட்டியிருக்கிறார்.

மீண்டும், சங்கரதாஸ் சுவாமிகளின் குழுவுக்கே திரும்பும் சகோதரர்கள், சுவாமிகளின் காலத்திற்குப் பின்பாக தாயாரின் ஆசியுடன், 1925ல் ’மதுரை ஸ்ரீபால சண்முகானந்த சபா’ எனும் பெயரில் சொந்த நாடகக்கம்பெனி ஒன்றைத் துவங்குகிறார்கள். தனது மாமா, சித்தப்பா உதவியுடன் மூத்தவர் டிகே சங்கரன், அத்தனை நிர்வாகப் பொறுப்புகளையும் கவனிக்கிறார். கம்பெனி துவங்கியதுமே சேர்க்கப்பட்ட புதிய நடிகர்களில் ஒருவர்தான் கலைவாணர் என் எஸ். கிருஷ்ணன். பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக பால சண்முகானந்தா சபாவிலேயே இருந்த என்எஸ்கே, பிற்பாடு சினிமாவுலகுக்கு சென்ற பின்பும், சூழ்நிலை காரணமாக குழுவோடு சற்றே விரோதம் பாராட்டியபோதும், கடைசி வரை டிகே சண்முகத்தோடு அன்பையும், நட்பையும் கொண்டிருந்திருக்கிறார். என்எஸ்கே, டிகேஎஸ்ஸை விட நான்கு வயது மூத்தவர்.

சொந்தக்கம்பெனியின் துவக்கத்தில் கோவலன், மனோகரா, அல்லி அர்ஜுனா போன்ற நாடகங்கள் நடத்தப்படுகின்றன. தொடரும் காலங்களில் பிரண்டு ராமசாமி, எம்கே ராதா, கேகே பெருமாள், எஸ்வி சகஸ்ரநாமம் போன்ற பின்னாளில் மிகப்புகழ் பெற்ற நடிகர்கள் பலர் கம்பெனியில் இணைகிறார்கள். எம்.கே.ராதா, அந்நாளைய பிரபல நாடகாசிரியர் எம்.கந்தசாமிப்பிள்ளையின் மகனாவார். எம்கே ராதா, தமிழின் முதல் இரட்டை வேட கதாபாத்திரங்களில் 1949ல் வெளியான ‘அபூர்வ சகோதரர்கள்’ எனும் திரைப்படத்தில் நடித்தவர்.

தொடர்ந்து எம். கந்தசாமிப்பிள்ளையின் உதவியுடன் ரத்தினாவளி, ராஜேந்திரா, ராஜாம்பாள், சந்திரகாந்தா முதலிய நாடகங்களை அரங்கேற்றியிருக்கின்றனர்.

அந்நாளைய சிறப்பு நாடகங்களில் ஆங்கிலம் மிகச் சரளமாக பேச்சுவழக்கில் கலக்கப்பட்டிருந்தனவாம். ‘துருவன் சரித்திரம்’ எனும் நாடகத்தில் துருவனாக டிகேஎஸ் நடிக்க, தோழனாக நடித்த என்எஸ்கே பாடும் பாடலொன்று இப்படி அமைந்திருந்தது.

“டென்னிஸ் புட்பாலடித்து
ரவுண்டர்ஸ் பிளே செய்திடுவோம்
டிபன் கொஞ்சம் எடுக்க
டீ காபி பார்த்திடுவோம்”

பிற்காலத்தில் நாடகத்தமிழுக்கென்றே தமிழ்ச்சமூகம் நினைவில்கொண்ட டிகேஎஸ் குழுவின் துவக்ககால நாடகங்களில் வசனங்கள் இப்படியும் இருந்தனவென நகைப்பும், வியப்புமாக சொல்கிறார் சண்முகம்.
டிகேஎஸ்ஸின் குறிப்புகளிலிருந்து ‘மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி’, டிகேஎஸ்ஸின் ’மதுரை ஸ்ரீபாலசண்முகானந்த சபை’க்கு ஒரு சமகால போட்டியாளர் என்பதை நாம் உணர்ந்துகொள்ளமுடிகிறது. ஆயினும் பாய்ஸ் கம்பெனி குறித்த தகவல்கள் ஏதும் புத்தகத்திலில்லை. அதிலிருந்துதான் காளி.என்.ரத்தினம், எம்ஜிஆர் உள்ளிட்ட பல பிரபல திரைப்படக்கலைஞர்கள் தோன்றினார்கள் என்பதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். பாய்ஸ் கம்பெனியிலிருந்து டிகேஎஸ் குழுவுக்கு வந்தவர்தான் நடிப்பிசைப் புலவர் கேஆர் ராமசாமி.

தொடர்ச்சியாக காலவரிஷி, மேனகா போன்ற நாடகங்களை உருவாக்குகிறார்கள் டிகேஎஸ் சகோதரர்கள். பம்மலின் கதையான காலவரிஷிதான் காலவா எனும் பெயரில் 1933ல் வெளியான தமிழின் இரண்டாவது பேசும்படமாகும். மேனகா கதைதான் 1935ல் டிகேஎஸ் சகோதரர்கள் அனைவரும் நடித்த முதல் திரைப்படமாகவும் வந்தது. இந்த காலகட்டங்களிலெல்லாம் டிகே சங்கரனும், டிகே முத்துசாமியும் நடிப்பை விட்டு, குழுவின் மேலாண்மைப்பணியில் முழுதுமாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டுவிட்டனர். டிகே சண்முகம், டிகே பகவதி இருவரும் தங்களை முழுமையாக நடிப்பில் ஈடுபடுத்திக்கொண்டனர். குழுவில் என்எஸ்கே, கேஆர் ராமசாமி, எம்கே ராதா போன்ற திறன்மிக்க நடிகர்கள் இருந்தனர்.

ஒரு சிறு மனத்தாங்கலில் என்எஸ்கே, ஜெகன்னாதய்யர் என்பவர் நடத்திவந்த ‘பால மீனரஞ்சனி சங்கீத சபா’ எனும் குழுவுக்கு ஓடிப்போய் இணைந்துகொண்டு, மீண்டும் சில தினங்களிலேயே மனம்மாறித் திரும்பியிருக்கிறார். எரிச்சலடைந்த ஜெகன்னாதய்யர் என்எஸ்கே மீது திருட்டுப்பழி சுமத்தி காவல்துறை மூலமாக, கைது நடவடிக்கை வரை சென்றிருக்கிறார். நல்ல நடிகர்களை தங்கள் குழுவில் நிலைநிறுத்தி வைப்பதற்கு குழு உரிமையாளர்கள் எத்தகைய காரியங்களையெல்லாம் செய்திருக்கிறார்கள் என்பதை இதன் மூலம் அறியமுடிகிறது.

1931ல் ஓரளவு முதிர்ந்த இளைஞர்களாகியிருந்த முத்துசாமி, சண்முகம், என்எஸ்கே ஆகியோர் தீவிர அரசியல் எண்ணங்கள் நிறைந்தவர்களாகவும் இருந்திருக்கின்றனர். பகத்சிங் தூக்கிலடப்பட்ட செய்தி இவர்களிடையே தேசபக்தியை தூண்டிவிடும் நிகழ்வாக அமைந்திருந்திருக்கிறது. அன்றிலிருந்து தம் கடைசிக்காலம் வரை டிகே சண்முகம் கதராடை மட்டுமே அணிந்துவந்திருக்கிறார். பாரதியார் பாடல்களில் மிக ஈடுபாடுகொண்டு அவற்றை தமது நாடகங்களில் பரவலாக பயன்படுத்தியிருக்கிறார். தேசவிடுதலை இயக்கங்களில் பாரதியின் பாடல்களை மக்களுக்குக் கொண்டு சென்ற முன்னோடிகளில் முதன்மையானவர் டிகே சண்முகமாவார்.

சுதந்திரவேட்கையை மக்களுக்குப் பரப்ப எண்ணி, மதுரகவி பாஸ்கரதாஸின் உதவியுடன், வெ.சாமிநாதசர்மாவின் ‘பாணபுரத்துவீரன்’ எனும் தேசபக்தி நாடகத்தை மேடையேற்றியிருக்கின்றனர். அந்த நாடகம் ஏற்கனவே தடைசெய்யப்பட்டிருந்ததால், அதற்கு ‘தேசபக்தி’ எனும் புதிய பெயர் சூட்டியுள்ளனர். அதுவும் பின்பு தடைசெய்யப்பட்டிருக்கிறது. முதன்முறையாக அது மேடையேற்றப்பட்ட போது, வாலீசன் எனும் கதாபாத்திரத்தில் உணர்ச்சிபொங்க நடித்த எஸ்வி சகஸ்ரநாமம் தூக்கிலிடப்படும் காட்சியில், உணர்ச்சிவேகத்தில் பாதுகாப்புக்கயிற்றினை பொருத்திக்கொள்ள மறந்து நிஜமாகவே சில விநாடிகள் தூக்குக்கயிற்றில் ஊசலாடி, பின்பு சக நடிகர்களால் காப்பாற்றப்பட்டிருக்கிறார், அவர்களுடைய ஆர்வம் எத்தகையதாக இருந்திருக்கவேண்டும் என்பதை இதன் மூலம் நாம் உணரமுடிகிறது. அதன்பின்பு வந்த காலகட்டங்களில் அந்தந்த பகுதி காங்கிரஸ் கமிட்டிகள் சுதந்திர இயக்கத்தில் ஊக்கம் குன்றாது ஈடுபட, தங்களால் இயன்ற உதவியாக சுமார் 157 தடவைகள் நாடகங்கள் நடத்தி, அதன்மூலம் வந்த வசூலை காங்கிரஸ் கமிட்டிகளுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர் டிகேஎஸ் சகோதரர்கள்.
தொடரும் காலங்களில் ஜெகன்னாதய்யர் கம்பெனியிலிருந்த எம்ஆர் ராதா, என்னெஸ்கேவின் நட்புக்காக டிகேஎஸ் குழுவுக்கு வருகிறார். டிகேஎஸ் குழுவின் நாடகங்களில் தமக்குப் பொருத்தமான வேடங்கள் இல்லையெனக் கருதிய ராதா, பதிபக்தி எனும் ஒரே நாடகத்துடன் விரைவிலேயே விலகிக்கொள்கிறார். அந்தக்குறுகிய காலத்திலேயே அவரது நட்பு போற்றுதலுக்குரியதாக இருந்திருக்கிறது.

மிகுந்த பண நெருக்கடியில், வேறு வழியின்றி கம்பெனியை சென்னையைச் சேர்ந்த கோல்டன் கோவிந்தசாமி நாயுடு என்பவரிடம் ’அதே பெயருடன் செயல்படவேண்டும்’ என்ற நிபந்தனையுடன் மூன்றாண்டுகளுக்கு உரிமையை அடகு வைக்கின்றனர். முயற்சி தோல்வியில் முடிய மனம் துவளும் சகோதரர்கள் குழுவை கலைத்துவிட்டு நாகர்கோயிலுக்குத் திரும்புகின்றனர். பிறர் அனைவரும் வேறு குழுக்களுக்கு சென்றபின்பும், டிகேஎஸ் குழு மீண்டும் துவக்கப்படும் எனும் நம்பிக்கையில் என்எஸ்கே மட்டும் நீண்டகாலம் காத்திருந்துவிட்டு கடைசியில் வேறு வழியின்றி, வேறு கம்பெனியில் இணைகிறார்! ஆனால், மீண்டும், டிகேஎஸ் குழு உயிர்பெற்ற பின்பு அவர், இவர்களுடன் இணையும் வாய்ப்பே இல்லாதுபோகிறது.

எட்டயபுர இளவல் காசி விஸ்வநாதனின் உதவியால் மீண்டும் ‘ஸ்ரீபாலசண்முகானந்த சபை’ துவக்கப்படுகிறது.
தொடரும் நாட்களில் தோழர் ப.ஜீவானந்தம், பெரியார் ஈ.வே.ரா, பட்டுக்கோட்டை அழகிரிசாமி போன்ற சுயமரியாதை இயக்க முன்னோடிகளின் நட்பும், அன்பும் சண்முகத்துக்குக் கிடைக்கிறது. அவர்களுடைய சமூக, அரசியல் கருத்துகளால் மிகவும் கவரப்படுகிறார். அவற்றையெல்லாம் நாடகங்களில் வெளிப்படுத்த முயல்கிறார். முற்போக்குக் கருத்துகள் நிறைந்த தெ.பொ.கிருஷ்ணசாமி எழுதிய பம்பாய் மெயில், தஞ்சை என்.விஸ்வநாதய்யர் எழுதிய ராஜசேகரன், எம் ஆர்.சாமிநாதன் எழுதிய ஜம்புலிங்கம் போன்ற புதிய நாடகங்களை உருவாக்குகின்றனர்.

1935ல் முதல்முறையாக திருப்பூர் ஸ்ரீசண்முகானந்தா டாக்கீஸ் எனும் நிறுவனம் இவர்களது மேனகா நாடகத்தை திரைப்படமாக்க எண்ணி, இவர்களையே நடித்துத்தரவும் அணுகுகிறது. டிகே சங்கரனும் ஒப்புக்கொள்கிறார். மற்ற மூவருக்கும் மகிழ்ச்சி. நாடக உலகுக்கென்று தம்மை அர்ப்பணித்துக்கொண்டிருந்தாலும் இளையவர்களுக்கு சினிமா ஆர்வம் இல்லாமலில்லை. தம்முருவைத் திரையில் காணும் ஆவல் கொண்டிருந்தனர். முழு படப்பிடிப்பும் மும்பையில் நிகழ்ந்த, இயக்குனர் ராஜா சண்டோ இயக்கிய, மேனகா நல்லதொரு படமாக உருவாகி, நல்ல வரவேற்பைப் பெறுகிறது. சண்முகத்துக்கும், பகவதிக்கும் தனித்தனியே திரை வாய்ப்புகள் வந்திருக்கின்றன. ஆயினும் தம்பியரை தனித்தனியே பிரித்து சென்னைக்கும், மும்பைக்கும் அனுப்ப விருப்பமில்லாத சங்கரன் வாய்ப்புகளை மறுக்கிறார். மேலும், டிகே சங்கரனுக்கு மீண்டும் திரைத்துறையில் இயங்கும் ஆர்வமில்லாது போய்விட்டது. படப்பிடிப்பில் நடந்த ஏராளமான நிகழ்வுகளும், பெண்களோடு தொட்டு நடிக்கவேண்டிய சூழலும் அதற்குக் காரணமாகியிருக்கலாம் என்பது சண்முகத்தின் கணிப்பு. இருப்பினும் மேனகா படவாய்ப்பு சற்றே பணவரவையும், சிறிது நிம்மதியையும், மாற்றத்தையும் அளித்தது எனவும் சொல்கிறார் அவர். ஆயினும், தொடர்ந்து கம்பெனியை நடத்தும் ஆர்வமிழந்த சங்கரன் மீண்டும் கம்பெனியை கலைக்கிறார்.

இந்த சமயத்தில்தான் சுதந்திரத்துக்கு முந்தைய சென்னைக்கான முதல் மாகாணத்தேர்தலில், சில முக்கியஸ்தர்களின் வேண்டுகோளுக்கிணங்கி, சங்கரனின் அனுமதியுடன் காங்கிரஸுக்காக, கேபி சுந்தராம்பாளுடன் ஊர் ஊராக பிரச்சார மேற்கொள்கிறார் சண்முகம்.
பெரியாரின் வேண்டுகோளுக்கிணங்கியும், சோர்வுற்ற தம்பியரைக் கண்டும் மனம்மாறும் சங்கரன், 1936 மேயில், ஈரோட்டில் வைத்து மீண்டும் கம்பெனியை ஒரு புதிய உற்சாகத்தோடு துவக்குகிறார். இந்த மறுபிரவேசத்துக்கு பெரியாரின் அச்சகத்திலேயே இலவசமாக விளம்பரச் சுவரொட்டிகள் அச்சடிக்கப்பட்டிருக்கின்றன.

அச்சமயம் ஜூபிடர் பிக்சர்ஸ், சந்திரகாந்தா நாடகத்தை திரைப்படமாக்க விரும்பி, அதன் இயக்குனராக மீண்டும் ராஜா சாண்டோவையே அமர்த்தியிருக்கின்றனர். சாண்டோ, கதாநாயகனாக சண்முகத்தை விரும்பி அழைத்தும், தம்பியை தனியே அனுப்ப விரும்பாத சங்கரனால் அந்த வாய்ப்பு பியு சின்னப்பாவுக்கு சென்றிருக்கிறது. பியு சின்னப்பாவின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அந்தப்படம் அமைந்ததை நாமறிவோம்.
மீண்டும் ஒரு வாய்ப்பாக மேனகா படத்தின் தாயாரிப்பு பங்குதாரர்கள், டிகேஎஸ் சகோதரர்களை வைத்து ‘பாலாமணி-பக்காத்திருடன்’ எனும் படத்தை எடுக்க அணுக, சங்கரன் அரைமனதுடன் சம்மதிக்கிறார். இம்முறை பி.வி ராவ் எனும் இயக்குனரால் படமும், அதன் உருவாக்கத்தில் நிகழ்ந்த அனுபவமும் மிக மோசமானதாக அமைந்து, படமும் தோல்வியடைகிறது. டிகே சங்கரனும் சினிமா என்றாலே வெறுக்கும் மனநிலைக்குச் செல்கிறார்.

மீண்டும் உற்சாகமாக சமூக விழிப்புணர்வு நாடகங்களை நடத்த விழைகின்றனர் டிகேஎஸ் சகோதரர்கள். இவர்கள் நடத்திய தேசபக்தி, ஜம்புலிங்கம், கதரின் வெற்றி போன்ற நாடகங்கள் தடை செய்யப்படுகின்றன. இந்த காலகட்டமே டிகேஎஸ் சகோதரர்களின் நாடக வாழ்க்கையில் மிக முக்கியமானதாகும். இரண்டு மிக முக்கியமான நாடகங்களைப் பற்றி அறிந்துகொள்வது டிகேஎஸ் குழுவின், முழு வீச்சை அறிந்துகொள்ள உதவும்.
அதில் முதலானது குமாஸ்தாவின் பெண்.

நிருபாதேவி எனும் வங்காள எழுத்தாளர் எழுதிய ஒரு கதையைத் தழுவி எழுதப்பட்டது, ‘அன்ன பூர்ணிகா மந்திர்’ எனும் ஒரு இந்தி நாவல். அதன் மலையாள மொழிபெயர்ப்பான ‘அன்னபூர்ணா மந்திரம்’ நாவலை வாசித்த டிகே முத்துசாமி, அதனை அடிப்படையாகக் கொண்டு தம்பி சண்முகத்தின் உதவியுடன், ’குமாஸ்தாவின் பெண்’ எனும் நாடகத்தை எழுதுகிறார். எனினும் நூல் பிடித்துப் பின்னோக்கிச்சென்று நிருபாதேவியிடம் அனுமதியைப் பெறவும் தவறவில்லை. 1937ல் அரங்கேறிய இந்நாடகம் பெரும் வரவேற்பையும், நல்விமர்சனங்களையும் பெற்று இன்றளவும் டிகேஎஸ் சகோதரர்களின் புகழைப் பரப்புவதாகவும் அமைந்தது. பின்னாளில் பேரறிஞர் அண்ணா எழுதிய, ‘குமாஸ்தாவின் பெண்’ எனும் நாவலும் இந்த குமாஸ்தாவின் பெண்ணைத் தழுவி எழுதப்பட்டதுதான். அண்ணாவின் நூல் வெளியான போது அதற்கு முன்னுரை எழுதி சிறப்புச்செய்திருக்கிறார் டிகே சண்முகம். டிகேஎஸ் சகோதரர்களின் ‘குமாஸ்தாவின் பெண்’, அவர்களாலேயே, மிகுந்த சிரமங்களுக்கிடையே 1941ல் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டு அதன் சீர்திருத்தக் கருத்துக்களுக்காக மிகப்பரவலான நல்விமர்சனங்களையும் பெற்றிருக்கிறது. இந்தப்படமே மீண்டும் 1974ல், ‘குமாஸ்தாவின் மகள்’ எனும் பெயரின் சிவகுமார், கமல்ஹாசன் நடிப்பில் ஏபி நாகராஜனின் இயக்கத்தில் வெளியானது. கமல்ஹாசன் அந்தப்படத்தில் பெண்பித்துப் பிடித்த ஒரு பண்ணையாராக நடித்திருக்கிறார். அந்தப்படத்தின் இறுதிக்காட்சியில், பேராசைகொண்ட ஒரு தம்பதியாக டிகே பகவதியும், மனோரமாவும் கௌரவ வேடங்களில் தோன்றுகின்றனர்.

இக்காலகட்டங்களில் கல்கி, பேரறிஞர் அண்ணா முதலானோர் இவர்களின் சீர்திருத்த நாடகங்களைப் பாராட்டி பத்திரிகைகளில் விரிவான விமர்சனங்களைத் தொடர்ந்து எழுதி ஊக்குவிக்கின்றனர். ஆனால் குமாஸ்தாவின் பெண், வித்யாசாகரர் போன்ற சீர்திருத்த நாடகங்கள் நற்பெயரைப் பெற்றுத்தந்தாலும் வருமானத்தில் ஜொலிக்கவில்லை. வருமானத்திற்கு ஸ்ரீகிருஷ்ணலீலா, சிவலீலா, கந்தலீலா போன்ற புராண நாடகங்களே கைகொடுத்தன. பெரும் உள்ளலங்காரம், புதிய உடையமைப்பு, நவீன காட்சியமைப்புகள், மாய உத்திகள் என மிகப்பிரமாண்டமாக இவை அரங்கேற்றப்பட்டு நல்ல வருமானத்தையும், அசாதாரணமான வரவேற்பையும் பெற்றுள்ளன. நாடகத்தைக் கண்ட விஐபிகள் அனைவருமே வியப்பில் ஆழ்ந்திருக்கின்றனர். தமிழறிஞர்கள் மகிழ்ச்சிக்கடலில் திளைக்கும் வண்ணம் இந்நாடகங்களில் பெரும் தமிழ் முழக்கமே நடந்திருக்கிறது. இச்சமயத்தில்தான் டிகே சண்முகம், தமிழறிஞர்களால் முத்தமிழ்க்கலா வித்வரத்தினம் என்று அன்புடன் அழைக்கப்படுகிறார்.

டிகேஎஸ் சகோதரர்கள், பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர்கள் ஆயினும் கடவுள் மறுப்பை ஏற்காதவர்கள். ஆகவே, புராண நாடகங்களை நடத்த அவர்கள் தயங்கவில்லை. ஆனால், இதுபோன்ற காரணங்களாலேயே பெரியாரின் எதிர்ப்பையும் பின்னாளில் சம்பாதித்துக்கொண்டனர். சிவலீலா அரங்கேறும் இந்தக் காலகட்டத்தில்தான் 10 வயது சிறுவனாக குழுவில் இணைகிறார் ஏபி நாகராஜன். பின்னாளில் மிகப்புகழ்பெற்ற தமிழ் திரைப்பட இயக்குனராக, குறிப்பாக பல புராண வெற்றிப்படங்களை உருவாக்கியவராக உயர்ந்தவர் இவர். குறிப்பிடத்தகுந்த படமான, ‘திருவிளையாடல்’ திரைப்படத்தின் கதை முற்றிலும் ‘சிவலீலா’வைத் தழுவியதே ஆகும். சிவனாக சிவாஜிகணேசன் செய்த வேடத்தை நாடகத்தில் டிகே சண்முகம் செய்தார். போலவே கந்தலீலா, ’கந்தன் கருணை’யானது.

டிகேஎஸ் குழுவின் பெயரை வரலாற்றில் எழுதிவைத்த இரண்டாவது நாடகம் அவ்வையார்.

தமிழாசிரியர் பி.எத்திராஜுலு நாயுடுவின் உதவியோடு, அவ்வையார் நாடகக்கதையினை உருவாக்குகிறார் சண்முகம். கல்வி, அரசு, நீதி, உழவு, இல்லறம் போன்ற விஷயங்களில் நகைச்சுவையோடு, நீதியை எடுத்தியம்பும் கதைத்தொகுப்பாக, தமிழமுதமாக அவ்வையார் நாடகம் உருவாகியிருந்தது.
குழுவிலிருந்த ஒரே பெண்ணான திரௌபதியும், ஏபி நாகராஜனும் மிக இளையவர்கள். கே.ஆர் ராமசாமி சிறுவயதில் பல பெண்வேடங்களை ஏற்றுச் சிறப்புடன் செய்திருப்பவராயினும், நளினம் போய்விட்டதென மறுத்திருக்கிறார். தமிழ்ச்சிறப்புக்கூட்டி அவ்வையை மேடையேற்றி அழகு பார்க்க ஆசைப்பட்ட சண்முகம் அதில் தான் நடிக்கவேண்டும் என்று முதலில் எந்த திட்டமும் கொண்டிருக்கவில்லை. அனைத்துக் காட்சிகளிலும் வரவிருக்கும் முக்கிய கதாபாத்திரத்தை சிறப்புடன் செய்யும், தகுதி வாய்ந்த நடிகர் வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்திருக்கிறார். அல்லது நாடகமே கைவிடப்பட்டாலும் சரி எனும் நிலை. இந்நிலையில் பெண்கள் வேடத்தில் மிகப்பாராட்டைப் பெற்றிருந்த, தமிழார்வம் மிக்க சின்னண்ணா டிகே.முத்துசாமியையே அவ்வையாக்க முடிவு செய்து அவரை சம்மதிக்கச்செய்யும் ஆவல் மிகுந்து, அவ்வை கதாபாத்திரம் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், தமிழ்ப்பாடல்கள், வசனங்களின் முக்கியத்துவம் எத்தகையது என்றும், தாமும், எத்திராஜுலு நாயுடுவும் எத்தகைய கனவோடு இந்தப் பாத்திரத்தை உருவாக்கியிருக்கிறோம் என்றும் நீண்ட சொற்பொழிவொன்றை ஆற்றியிருக்கிறார். பொறுமையாக அதைக்கேட்ட சின்ன அண்ணன் முத்துசாமி, ”இத்தனை உயிர்ப்போடு அதை உருவாக்கிய உன்னை விட வேறு யார் இந்த வேடத்தை செய்யமுடியும் சண்முகம்?” என்று கேட்டிருக்கிறார்.

அதிலிருந்த உண்மை அனைவரையும் அந்த முடிவை ஏற்கச்செய்திருக்கிறது, சண்முகம் உட்பட.
அவ்வையின் வெற்றி, தமிழ் நாடக உலக சரித்திரத்தில் எழுதப்பட்டது. டிகே சண்முகம், அவ்வை டிகே சண்முகமானார்.

தொடரும் காலங்களில் எஸ்எஸ் ராஜேந்திரன், எஸ்வி சுப்பையா, ஆர்எம் வீரப்பன் போன்றோர் குழுவில் இடம்பெறுகிறார்கள். வீரசிவாஜி, கவிகாளமேகம், பில்ஹணன் (பாரதிதாசனின் பில்ஹணீயத்தைத் தழுவியது), அந்தமான் கைதி, முள்ளில்ரோஜா போன்ற புகழ்பெற்ற நாடகங்கள் உருவாக்கப்படுகின்றன.
ஒருமுறை கல்கியை சந்தித்து அவரின் ‘சுபத்திரையின் சகோதரன்’ சிறுகதையை நாடகமாக்கித்தரும்படி சண்முகம் வேண்டியபோது, கல்கி சொன்ன பதில், “என்ன மிஸ்டர் சண்முகம்? கிருஷ்ணமூர்த்தி என்ன சகலகலா வல்லவன் என நினைத்தீர்களா? வேண்டுமானால் அனுமதி தருகிறேன். வேறு நல்ல நாடகாசிரியரை வைத்து நாடகமாக்கிக்கொள்ளுங்கள்” என்றிருக்கிறார். மேதைகளிடமிருந்த சுயமதிப்பு, எளிமை, இயல்பான பேச்சுக்கு உதாரணமாக இதைக்குறிப்பிடுகிறார் சண்முகம்.

போலவே அறிஞர் அண்ணாவுடன் 1946ல் ஒரு சந்திப்பு. “நான் தங்கள் நாடகத்தில் நடிக்கவேண்டுமென மிக ஆவல்கொண்டிருந்தேன். ஆனால் காலச்சூழலில் தற்போது தாங்கள் கேஆர் ராமசாமிக்கு எழுதித்தரவிருப்பதாக கேள்வியுற்றேன். இருப்பினும் என்ன கேஆராருக்குத் தந்தால் என்ன, எங்களுக்குத்தந்தால் என்ன? இரண்டும் ஒன்றுதானே! நாடகம் சிறப்புடன் நடைபெற ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்” என்கிறார் சண்முகம். பதிலாக அண்ணா, “ஆண்டவனை பிரார்த்திப்பதைவிட கேஆர்ஆருக்கு நாடகத்தை கவனத்துடன் நடத்தும்படி ஒரு கடிதம் எழுதினால் பயனுண்டு” என்று சொல்கிறார். கேஆர் ராமசாமி, முதலில் டிகேஎஸ் குழுவிலும், பின்னர் கலைவாணரின் ’என்னெஸ்கே நாடக சபை’யிலும் இருந்து, அதன் பின்னர் ’கிருஷ்ணன் நாடக சபை’ எனும் சொந்தக்கம்பெனி துவங்கியவர்.

மற்ற நாடகக்குழுக்கள் நடத்திய பல நாடகங்களையும் பார்த்து மனமார பாராட்டும் வழக்கம் கொண்டிருந்தார் சண்முகம். அதிலொன்றுதான் கேஆர்ஆரின் குழு நடத்திய மனோகரா நாடகம். டிகேஎஸ் குழுவில் மனோகரா நாடகத்தில், மனோகரன் பாத்திரத்தை ஏற்க மறுத்த கேஆரார் அவர் சொந்தக்கம்பெனியில் நடத்திய மனோகராவில், மனோகரனாக நடித்திருக்கிறார். அந்நாடகத்தில் மனோகரனின் தாயார் பத்மாவதியாக நடித்தவர்தான், பின்னாளில் மனோகரனாக திரையில் வாழ்ந்துகாட்டிய விசி கணேசன் எனும் சிவாஜிகணேசன். அப்போது பத்மாவதியாக சிவாஜியின் நடிப்பைக் கண்ணுற்று வியந்து பாராட்டியிருக்கிறார் சண்முகம்.
1941ல் சேலத்தைச் சேர்ந்த மீனாட்சியை பெரியோர் நிச்சயத்தபடி மணந்துகொண்டார் டிகே சண்முகம். புரோகித மறுப்புத் திருமணம் செய்யவேண்டுமென மிக விரும்பிய சண்முகம், மூத்த சகோதரரின் மனம்கோணாது நடக்கவேண்டுமே எனும் எண்ணத்தில் அதை விட்டுக்கொடுத்திருக்கிறார். 1943ல் காசநோயால் மீனாட்சி இறந்துவிட, மீண்டும் திருமண எண்ணமில்லாதிருந்த சண்முகம், 1948 ஜூனில் குழுவிலிருந்த நடிகை சீதாலட்சுமியை காதலித்து மணம்புரிகிறார்.

ஏறக்குறைய இத்தகவலோடு, ‘எனது நாடக வாழ்க்கை’ எனும் இந்தப்புத்தகம், ஒரு பர்சனல் டைரி பாதியில் முடிவதைப்போல முடிகிறது.

மகாகவியின் பாடலை மக்களிடம் கொண்டு சேர்த்த ஒரு உன்னதக் கலைஞனே, பாரதியின் பாடலைப் பயன்படுத்தமுடியாதபடி அதன் காப்புரிமையை கையில் வைத்திருந்த ஏவிஎம்மால் தடுக்கப்பட்டிருக்கிறார். அதற்கெதிராத சண்முகத்தின் போராட்டம் என்னவாயிற்று எனத் தெரியவில்லை.

1950க்குப் பிறகான அவரது செயல்பாடுகள், நாடகம் மற்றும் சினிமா பங்களிப்புப் பற்றிய தகவலில்லை. சுமார் 16 படங்களில் அவர் நடித்திருப்பதாக ஒரு தகவல் உண்டு. ஆனால், அந்தப்பட்டியல் நம்மிடையே இல்லை. நாம் இன்றும் தெளிவான அச்சில் சண்முகத்தைக் காணமுடிகிற ஒரு படமாக, ஜெமினிகணேசன் கதாநாயகனாக நடித்த, மிகப்புகழ் பெற்ற ’வஞ்சிக்கோட்டை வாலிபன்’ அமைந்திருக்கிறது. அதில் இக்கட்டான ஒரு சூழலில், தான் பெற்ற பிள்ளையை விடவும், ராஜவாரிசுகளைக் காக்கும், வீரமும், விசுவாசமுமிக்க சேனாபதி, ‘சொக்கலிங்க நாவலர்’ எனும் தீரமிக்க கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். டிகே சண்முகத்தைவிடவும் அதிகமான படங்களில் டிகே பகவதி நடித்திருக்கக்கூடும்.

மேலும் டிஎன் சிவதாணு, எம்ஆர் சுவாமிநாதன், புளிமூட்டை ராமசாமி, எஸ்.என் ராமையா, பிஎஸ்.வேலுநாயர், ஏஎன் ராஜன், டிஎம் மருதப்பா, நன்னிலம் நடராஜன் போன்ற எத்தனையோ நடிகர்களைப் பற்றிய குறிப்புகள் புத்தகமெங்கும் காணப்படுகின்றன. ஆனால் அவர்களின் புகைப்படங்கள் கூட இன்று நம் பார்வைக்கு இல்லை.

டிகே சண்முகம் மிக விரும்பிய இந்நூலின் இரண்டாம் பாகத்தை எழுதிமுடிக்க காலம் அவரை விட்டுவைக்கவில்லை. 1972ல் இந்தப் புத்தகம் வெளியிடப்பட்ட அடுத்த ஆண்டில், 1912ல் பிறந்த சண்முகம் தமது 60வது வயதில் மறைகிறார்.

என்எஸ்கே, நாரண.துரைக்கண்ணன் ஆகியோரின் முயற்சியால் நாகர்கோயிலில் 1948ல் நடத்தப்பட்ட மூன்றாவது தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டில் பேசிய அவ்வை டிகே சண்முகத்தின் பின்வரும் கருத்து, ஒரு படைப்பாளியின் சமூகப் பொறுப்பினை வரையறுக்கிறது. மிகையான கதாநாயக பாத்திரங்களையும், வெற்று அலங்காரங்களையும், பொருளற்ற பாடல்களையும், அபத்தமான சண்டைக்காட்சிகளையும் ‘மக்கள் விரும்புகிறார்களே..’ எனும் போர்வையில் ஒளிந்துகொண்டு உருவாக்கித்திரியும் இன்றைய ஒவ்வொரு படைப்பாளியின் மனதையும் இவ்வரிகள் சென்றடைய வேண்டுமென்பது நம் ஆசை!
”பகல் முழுதும் உழைத்துக்களைத்து வரும் பாட்டாளிக்கு, வேடிக்கையும், நகைச்சுவையுமாய் பொழுதுபோக்குவதே இன்றைய முதன்மைத் தேவையாய் இருக்கலாம். சமூகநீதியும், நல்லரசியல் பிரச்சாரமும் அவர்தமக்குத் தேவையற்றதாய்த் தோன்றலாம். ஆனால், மக்களின் ரசனைக்கேற்ப கலைகள் இருப்பின் சமூக வளர்ச்சியில் வேகமிருக்காது. மக்களின் உடனடித் தேவையான சிலமணி நேர மகிழ்ச்சியை விட, அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர, அவர்கள் நல்வாழ்வு வாழ என்ன தேவை என்பதைச் சிந்தித்து, அவர்தம் ரசனையை தொடர்ந்து சீர்படுத்தி, உயர்த்தும் வேலையைச் செய்வதே நல்ல கலைஞர்களின் கடமை. இதையெல்லாம் பத்திரிகைகள் கண்காணிக்க வேண்டும். மக்களுக்குப் பிடித்த மொழி, மக்களுக்குப் புரிகிற மொழி என தரம் தாழ்ந்து, சென்றுகொண்டே இருப்போமாயின் நாளடைவில் மொழி எனும் ஒன்றே இல்லாது போகும். கலையால் மக்கள் உயரவேண்டும், மக்களால் கலை வளரவேண்டும். இரண்டும் ஒன்றையொன்று உயர்த்தும் தரத்தினதாய் அமைய வேண்டும். அதற்கு பத்திரிகைகளும், விமர்சகர்களும் நற்கலைஞர்களை தூக்கிப்பிடித்து உதவவேண்டும். இலக்கியமும், கலையும் ஒருபோதும் தாழ்ந்து செல்லலாகாது!”
சத்தியமான வரிகள் அல்லவா இவை?
*

Tuesday, April 19, 2016

கமல்ஹாசன் கிளாஸிக்ஸ் டாப்-10 x 2

ரொம்ப நாளா இந்த டாப் 10 போடணும்னு ஒரு திட்டம். இன்னிக்குதான் நேரம் கிடைச்சது. நான் பார்த்த, எனக்குப் பிடித்த, கமல்ஹாசன் நடித்த, நேரடித் தமிழ்ப்படங்களிலிருந்து ஒரு கிளாஸிக்ஸ் டாப் 10 லிஸ்ட் போட்டுப்பார்த்தேன். அது இப்படி வருகிறது.


10. 16 வயதினிலே
9. குணா
8. அபூர்வ ராகங்கள்
7. மூன்றாம் பிறை
6. விருமாண்டி
5. அன்பே சிவம்
4. தேவர் மகன்
3. நாயகன்
2. மகாநதி
1. ஹேராம்
இன்னொரு லிஸ்ட்டும் இருக்கு. கமல்ஹாசன் மட்டுமே இதைச் செய்யமுடியும் அப்படிங்கிற மாதிரி, அவர் பிச்சி உதறுன டாப் 10. அது இப்படி வருகிறது.

10. ஆளவந்தான்
9. பஞ்சதந்திரம்
8. குருதிப்புனல்
7. மும்பை எக்ஸ்பிரஸ்
6. சிகப்பு ரோஜாக்கள்
5. அவ்வை சண்முகி
4. அபூர்வ சகோதரர்கள்
3. விஸ்வரூபம்
2. தசாவதாரம்
1. மைக்கேல் மதன காமராஜன்
சில படங்கள் ரெண்டு லிஸ்டிலும் வரும் போலிருக்குது. சரி.. யாரெல்லாம் லிஸ்டோட ஒத்துப்போறீங்க? கையைத் தூக்குங்க! :‍-)

Tuesday, April 5, 2016

’படச்சுருள்’ கட்டுரை

’அழகு குட்டி செல்லம்’ படத்தைப் பற்றிய விமர்சனமாக எனது முந்தைய பதிவும் அமைந்திருந்தாலும், பின்வரும் இந்தக்கட்டுரை, அப்படம் குறித்தவொரு விரிவான பார்வையாகும். மார்ச் மாத ‘படச்சுருள்’ இதழில் இது வெளியாகியுள்ளது. (நன்றி: படச்சுருள்)

********


அழகுக்குட்டிச் செல்லம்: குழந்தைகள் கொண்டுவரும் நம்பிக்கை

 
“பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும்இப்பூமிக்குப் புதியதொரு நம்பிக்கையைக் கொண்டுவருகிறது

-பிறப்பால் ஒவ்வொரு குழந்தையையுமேஇறைபாலனோடு ஒப்பிட்டுப்பெருமை சேர்க்கும் இயக்குநரின் இந்தப் பார்வையே, படத்தின் மேன்மையானஉள்ளடக்கத்தை அழகுறச் சொல்லிவிடுகிறது.

இன்றைய சமூக அமைப்பில், வேகமான சூழலில் மனிதர்களிடையே இடைவெளி அதிகரித்துக்கொண்டேபோகிறது. யாருக்கும், யாருடனும் நின்று பேச நேரமில்லை. ரத்த உறவுகளுடன் தொலைபேசியில் உரையாடுவது கூட அரிதாகிவிட்டது. மனைவியுடன் செலவழிக்க வேண்டிய நேரத்தைக்கூட முன்பே திட்டமிடவேண்டியதாக இருக்கிறது. ஆயின், எல்லாவற்றையும்விட அதிக கவனம் செலுத்தப்படவேண்டிய குட்டி மனிதர்களைக் நாம் கவனிக்கிறோமா என்பதுதான் கேள்வி. நம் எதிர்வீட்டில் யார் இருக்கிறார்கள் என்பதில் கூட நம் கவனமில்லை, ஆயின், நம் குழந்தைகளின் இயல்பை, ஆளுமையை வடிவமைக்கும் அவர்களது பள்ளிச்சூழல், நட்பு எப்படி இருக்கிறது என்பதை ஆராய நமக்கு நேரமில்லை. குழந்தைகள் வாழும் வீடு எப்படியானதாக அமையவேண்டும்? அவர்கள் எதைப் பார்க்கிறார்கள், எதைக் கேட்கிறார்கள், எதைப் பேசுகிறார்கள்?

குழந்தைகளின் உள்ளம் பேரழகானது. தொடர் ஓட்டத்தில் சற்று நேரமே நம் வசமிருக்கும் ‘பெடானை’ப் போன்றது இந்த சமூகம். நாம் கைப்பற்றுகையிலிருந்த அதே பொறுப்போடு, எவ்வித மாசுமின்றி அதை நாம் நம் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். ஆனால், இதைத்தான் நீங்களும், நானும் எத்தனை தூரத்திற்குப் பாழ்படுத்தி வைத்திருக்கிறோம்?

அறியாமை, அவசரம், ஆணவம், அரவணைப்பின்மை, அரசியல்! பாழ்படுத்தும் எத்தனையோக் கூறுகளில் இவையும் கொஞ்சம்!

ஓர் ஆண் மகவு தம் வாழ்க்கையை முழுமைப்படுத்திவிடும் எனும் ஒரு நம்பிக்கை. அறியாமையில் விளைந்த நம்பிக்கை! அது எப்படியான ஒரு இழப்பிற்கு எளிய மனிதனான ஓர் ஆட்டோ ஓட்டுநரைக் கொண்டுசெல்கிறது.?

பாலின ஈர்ப்பைக் காதலெனக் கொள்ளும் அவசரம் ஓரிளம் பெண்ணுக்கு. அதனால் மெல்லுணர்வுகள் வாடிப்போகும் எத்தனைச் சிக்கலான சூழலுக்கு அவள் தள்ளப்படுகிறாள்?

தன்முனைப்பின் ஆணவத்தில், விட்டுக்கொடுப்பது என்பதற்கு மாற்றாய் அன்பை விட்டுக்கொடுத்துவிட்டு ஒரு சிறுவனை பரிதவிக்கவிடும் ஒரு பெற்றோர். துயரோடு வழியும் அவனது கண்ணீருக்கு என்ன பதில்?

தாய்மை சுரக்கத்துவங்கிவிட்ட உள்ளத்தை அரவணைக்கும் சுற்றம் இல்லையெனில், ஆயிரம் குழந்தைகள் சூழ வளையவரும் சூழலிலும், குழந்தையின்மையால் தவிக்கும் ஆசிரியையின் கனவுகள் எத்தனை வலி நிரம்பியதாய் இருக்கும்?

தன் பச்சிளம் குழந்தையை அரசியலின் விளைவான போருக்குப் பலி தந்துவிட்ட, ஓர் ஆறாத தாயுள்ளத்துக்கு, எப்படியான ஆறுதலை நாம் தரமுடியும்? அவளது ஓலம் எப்படியிருக்கும்?

இத்தனைத் துயரையும் துடைக்குமா ஒரு சின்னக் குழந்தையின் வரவு.?

இப்படியொரு அழுத்தமான, சுவாரசியமான கதைப்பின்னல், இந்த ஒவ்வொரு கிளைக்கதையையும் கோர்க்கும் ஐந்து சிறுவர்கள், அத்தனைக்கும் ஆதாரமாய் ஒரு சின்னக் குழந்தை! படம், பார்க்கப் பார்க்கவே நம்முள் ஒரு உணர்வுக் கொந்தளிப்பும், உற்சாக ஊற்றும் பெருக்கெடுக்கிறது. சிறுவர்களையும், குழந்தைகளையும் மையமாகக்கொண்டு சுழலும் கதை அதன் மூலமாக பெரியவர்களிடம் நிறையக் கேள்விகளை முன்வைக்கிறது. இரண்டரை மணி நேரத்தில் இத்தனைக் கதைகளையும் அதன் ஜீவன் தொலையாது சொல்லிவிட, மிகத்துணிவும், நம்பிக்கையும், திறனும் வேண்டும். இந்தப்படத்தின் இயக்குநருக்கும், அவர்தம் குழுவுக்கும் அவை இருந்திருக்கின்றன.

பார்வையாளனுக்கு எந்தச் சிரமமுமின்றி மிகச்சுருக்கமாக, மிக வேகமாக கதைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆக, அந்தக் கதைகள் சார்ந்து சொல்லாமல் விடுபட்டவற்றை கற்பனை செய்துகொள்ளும் சுதந்திரத்தைத் தந்து, நமது பங்களிப்பையும் கோருகிறது படம். காட்சியியல் தரும் அதே அனுபவத்தோடு, வாசிப்பு தரும் சுதந்திரத்தையும் இந்தப் படம் தருகிறது என்றால் அது மிகையில்லை.

எளிய மனிதனான ஓர் ஆட்டோ ஓட்டுநர், தன் மனைவியை நான்காவது பிரசவத்துக்காக மருத்துவமனைக்கு அழைத்து வருகிறான், முந்தைய மூன்று பெண் குழந்தைகளும் வீட்டில் இருக்கின்றனர். அவனது ஆசை, ஓர் ஆண் குழந்தை. இந்தச் சமூகமும், அவனது குடும்பமும் அப்படியான ஒரு ஆசையை அவன் மனதில் விதைத்திருக்கின்றன. அவனது தந்தையார், சகோதரர்கள் உட்பட ஆண்வாரிசு இல்லாதவர்களே இல்லை. அதைத் தன் நியாயமான ஆசையாகக் கருதுகிறான். ஒவ்வொரு பெண்குழந்தை பிறக்கும் போதும் தன் ஏமாற்றத்தை விழுங்கிக்கொண்டே வந்தவனுக்கு, நான்காவதாகவும் பெண் குழந்தை பிறந்த சேதி சொல்லப்படுகிறது. மிகுந்த துயரமும், ஏமாற்றமும், குழப்பமும் கவிய மருத்துவமனையை விட்டு வெளியேறுகிறான் அவன். தனித்து விடப்பட்ட மனைவி என்ன செய்கிறாள்? அதுநாள் வரை, அவளது மனநிலையை, உடல்நிலையை கருத்தில் கொண்டவனில்லை அவன். இந்தக் கதையில், அவன் தன் நான்காவது குழந்தையை இழக்கும் சூழல் மிகவும் துயரம் தருவதாய் அமைகிறது. ஆயினும் எந்த புறத்தூண்டுதலுமின்றி, அவன் தன் பிரச்சினையை, மனமாற்றத்தை தன்னிலிருந்தே கண்டுகொள்கிறான். தன் மனைவியின் மனநிலையை, தன் பெண் குழந்தைகளின் மீதான அன்பை, தன் அறியாமையை என ஒவ்வொன்றையும் சிந்திக்கிறான். ஒரு எளிய மனிதனுக்கும் கூட அது சாத்தியமான ஒன்றுதான்.

வேலை, வேலை என எந்நேரமும் தம்மை பிசியாக வைத்துக்கொள்ளும் தம்பதியருக்கு, தங்களின் ஒரே இளம்பெண்ணுடன் அமர்ந்து ஒரு நேர உணவை எடுத்துக்கொள்ளக்கூட நேரமில்லை. அவர்கள் சேர்க்கும் செல்வமெல்லாம் யாருக்கு? ஏற்றப்படாத விளக்கினால் இருளை எப்படி அகற்றமுடியும்? சூழல் கூடிவரும் பொழுதொன்றில் தன் தோழனுடன் கூடுகிறாள் நிலா. அங்கே அந்த உறவை ஏற்கும் வயதோ, மனமோ இல்லாத அந்த இளைஞன் மட்டுமே தவறு செய்தவனாவானா? என்ன அதிர்ந்து என்ன பயன்? கண்ணீர்தான் மிச்சம் அந்தப் பெற்றோருக்கும், அவளுக்கும். வயிற்றிலே அசையும் குழந்தையைக் கைத்தொட்டு உணர, தன் தாயை அவள் அழைக்கும் காட்சி நெகிழ்வானது. கணவனோடு களிக்கவேண்டிய இதைப்போன்ற, எத்தனை உணர்வுப்பூர்வமான தருணங்களை அவள் இழக்கிறாள்? ஒரு தவறு, எத்தனை வேதனையான நிகழ்வுகளுக்குத் தொடக்கமாக அமைந்துவிடுகிறது? அந்த வயதிலும் தாய்மையைத் துணிவுடன் ஏற்க முன்வரும் நிலா, தன் தவறுகளிலிருந்தே, தன்னை மிக உறுதியான பெண்ணாக கட்டமைத்துக்கொள்கிறாள், அன்புக்காகத் தன் குழந்தையையே தத்து கொடுக்கும் அளவுக்கு!

தன்முனைப்பு எத்தனை தூரத்துக்கு ஒரு தம்பதியைக் கொண்டுசெலுத்தும்? அறிவையும், அன்பையும் தொலைத்துவிடச் செய்யுமா? எதுவும் புரியாத இளம்பிள்ளைகளுக்கு நேரும் துயரம் ஒருவகையெனில், புரிந்தும், புரியாமலும் தவிக்கும் வளரிளம் சிறார்களின் துயரம் இன்னும் சிக்கலானது. பெற்றோரிடையே நித்தமும் ஒரு சண்டையென இருக்கும் வீடு, பிள்ளைகளுக்கு எதைத் தரும்? வெயிலுக்கும், மழைக்குமான ஒரு நிழலை மட்டுமேவா? விட்டுக்கொடுத்தலின்றி உறவுகளென எதுவுமே இருக்கமுடியாது, அந்த விட்டுக்கொடுத்தல் பதிலை எதிர்பார்க்காத, அன்பின்பாற்பட்டு நிகழவேண்டும். ஒரு தம்பதிக்குள் இவை இல்லாவிட்டாலும் கூட தம் தேவைக்காக, தாம் உயிராய்க் கருதும் பிள்ளையின் நலனுக்காகவேனும் விட்டுக்கொடுத்தல் நிகழவேண்டும். அல்லாது, மணமுறிவுதான் விடியல் என்று முடிவுசெய்துவிட்டால், அது அவர்தம் பிள்ளையின் இருளில்தான் துவங்கும். அப்படியான பெற்றோருக்கிடையே நாட்களைக் கடத்திவருகிறான் ஜெயன் எனும் சிறுவன். அவனுக்கான தீர்வு என்ன?

மருத்துவம் கைவிட்ட சூழலில், தாய்மை சுரக்கும் மனதோடு பிள்ளையின்றித் தவிக்கிறாள் ஆசிரியை அருணா. அவளைச் சுற்றித் தினமும் ஏராளமான பிள்ளைகள். ஒருமுறை பிள்ளைகளுக்கு நாடகத்தைப் பயில்விக்கையில், கர்ப்பிணியான மரியாளின் தளர்நடை எப்படி இருக்கும் என்பதை அவள் செய்து காண்பிக்க நேர்கிறது. செய்துவிட்டு ஒதுங்கி அமர்ந்திருக்கும் அருணாவின் கண்ணீருக்கு அர்த்தமென்ன? வாழ்க்கை இப்படியான முரண்பாடுகளைத்தான் எங்கெங்கும் செய்துவைக்கும். பிள்ளைகள் இல்லாதவளை அரவணைக்கும் நல்லுள்ளம் கொண்டவர்கள் அல்ல நாம்! இயல்பான நிகழ்வுகளுக்கும் கூட துயரின் சாயத்தைப் பூசி வைத்திருக்கும் சமூகம் இது. மனித மனம் மிக எளிமையானது, ஒப்பீடுகளிலேயே தன் வாழ்வை எடைபோடும். அதுவும் அன்புக்கான துயர் எனில் அது அதீதம்தான்! தத்தெடுக்கும் வழிமுறையைப் பகிரும் கணவனின் முடிவை ஏற்காது மனதோடு போராடும் அவளும் கரைந்துபோகிறாள், ஒரு குழந்தையைக் கையிலேந்துகையில்!

புலம்பெயர்ந்து வாழும் கனடாவிலிருந்து, இங்கே தன் தமக்கையைக் காண தம் மனைவியுடன், சிரிப்பும் கேலியுமாய் வந்து சேர்கிறான் ஒரு தம்பி. அந்தத் தம்பதியின் கேலிப்பேச்சுக்கும், சிரிப்புக்கும் உள்ளேதான் எத்தனைப் பெரும் வரலாற்றுத்துயரம்? உற்சாகம் எனும் பெயரில் கடைகடையாகச் சென்று உணவருந்தியும், பொருட்களை வாங்கியும் திரிகிறார்கள் அவர்கள். ஒருமுறை அவன், தன் அக்கா மகன் திலீபனிடம் சொல்கிறான், “இவள் எம்பஸியில் இந்தியாவுக்கெண்டு விஸா கேக்கயில்ல, பாண்டிபஸார் எண்டுதான் விஸா கேட்டவள்” அந்தக் காட்சியில் மனம்விட்டுச் சிரித்தேன் நான். பெருந்துயருக்கு ஊடே பயணிக்கும் ஒரு சிரிப்புக்கு வேறு பரிமாணங்கள் உண்டு. என் ரத்த உறவொன்றை இழந்த நிலையில், கண்ணீர் வற்றி, ஈமச்சடங்குக்காக நான் காத்திருந்த இடைப்பட்ட நேரத்தில் என் நண்பன் ஒருவன் சொன்ன நகைச்சுவைக்காக நான் சத்தமாகச் சிரித்த நிகழ்வு, இப்போது என் நினைவுகளில் வந்துபோகிறது. உடைகள் வாங்க ஒரு துணிக்கடைக்குச் செல்லும் திலீபனின் அத்தையின் கண்களில்படும் இளஞ்சிவப்பு ஆடை ஒன்று ஏற்படுத்தும் தாக்கம் நம்மை உறையச்செய்கிறது. அவளது அந்த ஓலம் இப்போதும் என்னை விட்டகலவில்லை, எப்போதும் அது அகலாது!  

விழியில்லாதோருக்கு ஒலிகளால் நிரம்பியது உலகம். இதை நம்மால் எளிதாகச் சொல்லிவிட முடியலாம், ஆனால், அதை உணரமுடிவது அத்தனை எளிதானதா? குப்பைத் தொட்டியில் கண்டெடுக்கப்பட்டு ஒரு நல்மனிதனால் வளர்க்கப்பட்ட சிறுவன் முருகு. துள்ளலும், குதூகலமுமாய்த் திரியும் முருகுவின் உள்ளத்தைப் படம்பிடிக்க நம்மால் முடியுமா? முருகுவை எடுத்து வளர்த்த அந்த ஆதரவற்றோர் இல்லத்தின் காப்பாளர் ஒரு தடவை சொல்லுகிறார். “பச்சைக்குழந்தையா ரோட்டோரத்துல அழுதுகிட்டு கிடந்தான், நான் கொடுத்த கொஞ்சப் பாலுக்கே, என் முகத்தைப் பார்த்து அப்படி ஒரு சிரிப்பு சிரிச்சான்”. அப்போது முருகுவின் அந்தப் புன்னகையைக் காணும் ஆவல் தோன்றுகிறது நமக்குள்.

ஜெயன், முருகு, திலீபனுடன் பிரியா, ஜெனிபர் எனும் இரு பெண் பிள்ளைகளுமாக ஒரு குழு உருவாகிறது, ஒரு நோக்கத்துக்காக!

தங்கள் பள்ளியின் விழா ஒன்றில் ‘ஏசு பிறப்பு’ நாடகத்தை நடத்த மிகுந்த பிரயத்தனத்துக்குப் பின், ஃபாதரிடமிருந்து அனுமதி பெறுகிறது இந்தச் சிறார் குழு. கண்டிப்பு நிறைந்த ஃபாதர், இவர்களுக்குப் போட்டியாக நிற்கும் மாணவர்கள், விழாவுக்கு வரும் விருந்தினர் ஒருவரால் முக்கியத்துவம் கூடிவிடும் நாடகம் என அவர்களுக்கான நெருக்கடிக்குக் குறைவில்லை. அவர்களின் பிரதான தேவை ’குழந்தை ஏசு’வாக மேடையில் தோன்ற ஒரு குழந்தை. ஐவரில் ஒருவரான பிரியாவின் வீட்டிலிருக்கும் அவளது அக்காவின் குழந்தையைப் பயன்படுத்திக்கொள்ளத் திட்டமிட்டு, அனுமதியும் வாங்கிவைத்திருக்கிறார்கள். கடைசி நேரத்தில் அங்கே நிகழ்கிறது ஒரு மாற்றம். இந்தச் சிறுகதைகளுக்கூடே வரும் ஒரு குறுங்கதை. அத்தனைப் போராட்டமான உறவுச்சிக்கல்களை ஒரு தொடுதலில் தீர்த்துவைக்கும் இன்னொரு குழந்தையின் கதை அது. தன் தாயின் துயர்.துடைக்க, தன்னைத் தவிக்கவிட்ட தந்தையின் கைகளிலேயே, அந்தக்குழந்தை, சுகமாகத் தஞ்சமாகிவிடுகிறது. எனில், நம் சிறுவர்களின் நிலை?

ஆட்டோ ஓட்டுநரின் மனைவி, குப்பைமேட்டில் கைவிடும் அவளது நான்காவது பெண்குழந்தையைக் கைப்பற்றுகிறது சிறுவர்கள் குழு. குழந்தையை நினைத்துப் பதறுகிறோம் நாம். ஆயினும், ஒரு நல்ல போலீஸ்காரரின் உதவியோடு, அந்தக்குழந்தை அரசுக் கட்டுப்பாட்டுக்குள் சென்று ‘ஆதரவற்றோர் இல்லத்தை’ அடைகிறது. ஆனால், அது முருகுவின் இல்லமாயிற்றே! வேறு வழியே இல்லாமல், குழந்தையைக் கடத்திவிட திட்டமிடுகிறது குழு. மீண்டும், அவர்களின் சாகசப்பயணம் தொடர்கிறது. பள்ளிக்குள் வந்தபின்பும், நாடகம் தொடங்கியபின்னும் கூட அது தொடர்கிறது. கடத்திவரப்பட்ட குழந்தை என அறியாமல் அவர்களோடு நிற்கிறாள் ஆசிரியை அருணா.

பார்வையாளர் வரிசையில் ஃபாதரோடு, பள்ளியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கவிருக்கும் சிறப்பு விருந்தினர், தனித்தனியே அமர்ந்திருக்கும் ஜெயனின் பெற்றோர். திலீபனின் மாமாவும், அத்தையும். மற்றொரு புறம் காணாமல் போன குழந்தைகளைத் தேடி ‘ஆதரவற்றோர் இல்லத்தின்’ நிர்வாகி! இந்த நாடகமும், இறுதிக்காட்சிகளும் காட்சிப்படுத்தப்பட்ட விதம் குறிப்பிடப்படவேண்டியது! காட்சிகளை நடித்துக்கொண்டே சிறுவர்கள், குழந்தையைத் தேடும் பணிகளையும் பதற்றத்தோடு செய்வது அழகியல்! மரியாளின் பிரசவத்துக்காக அவளோடு இடம் தேடியலையும் ஜோசப், ஒவ்வொரு வீடாக இடம்கேட்டு வருகிறார். மாட்டுத்தொழுவத்தில் இடம் கிடைப்பதற்கு முன்பாக, ஒரு வீட்டுக்காரராக நடிக்கும் திலீபன் ‘எங்கள் வீட்டில் இடமில்லை ஐயா’ என்று சொல்லிவிட்டு ’குழந்தை என்னாச்சு டீச்சர்’ என்று கேட்டபடியே மேடைக்குட்புறமாக ஓடுகிறான். அந்தச் சிறார்களின் இயல்பு அழகு!

இடையே ஆட்டோ ஓட்டுநரும், அவரது மனைவியும் தன் வாழ்க்கையை முடித்துக்கொள்ளப் போகும் நிலாவுக்கு உதவுகிறார்கள். அவர்களுக்கிடையே மலரும் உன்னதமான ஒரு உறவும், நிலா கொள்ளும் உத்வேகமும் அங்கே ஒரு நிகழ்வாகிறது. தொலைத்துவிட்ட தன் பெண்குழந்தை, குழந்தை ஏசுவாகி அத்தனை பேருக்குள்ளும் ஒரு நெகிழ்வை ஏற்படுத்திவிட்டு, தாய்மைக்கு ஏங்கும் ஒரு ஆசிரியையின் கைகளில் தஞ்சமாகப்போவதை அறியாமல், அந்த ஆட்டோ ஓட்டுநர் தான் விரும்பியபடியே ஓர் ஆண் குழந்தையை மகனாக ஏற்கிறான். அன்புக்காக மனமுவந்து அதைச் செய்கிறாள் நிலா.

நாடக மாந்தர்களின் பார்வையில் உறவுகளை ஏற்பது, விட்டுக்கொடுத்தல், கல்வியும், ஏழமையும் கொண்டிருக்கும் உறவு, துயருக்கான விடுதலை என போகிற போக்கில் பல அரிய செய்திகள் எளிமையாகக் கடத்தப்படுகின்றன. அத்தனைச் சிறுகதைகளுக்குமான எளிய, அழகிய முடிவாக அந்த நாடகம் அமைகிறது. ஜெயனின் உயர்த்தப்பட்ட கைகளில் உயிரோட்டமாய் சிரிக்கும் குழந்தை இந்தக் கதையின் மாந்தர்களுக்கு மட்டுமல்ல, நமக்குள்ளும் ஒரு நம்பிக்கையை விதைத்துச் செல்கிறது.

படமெங்கும், முக்கியப் பெண்களின் கதாபாத்திரங்கள், படமாக்கப்பட்டிருக்கும் விதத்தைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். திருமணத்துக்கு முன்பே தாயாகும் நிலா, குழந்தையைப் போரில் இழந்த இலங்கையைச் சேர்ந்த இளம்தாய், நான்காவதாகவும் பெண்பிள்ளையைப் பெற்றுப் பரிதவிக்கும் ஆட்டோ ஓட்டுநரின் மனைவி, கணவனோடு ஏற்பட்ட சிக்கலில் தாய்வீட்டிலேயே தங்கிவிட்ட பிரியாவின் அக்கா, குழந்தைப் பேறின்றித் தவிக்கும் அருணா டீச்சர், விவாகரத்துக்கிடையே மகனைத் தன்னுடன் வைத்துக்கொள்ளப் போராடும் ஜெயனின் அம்மா என ஒவ்வொரு கதாபாத்திரமும் மிகக்கவனத்துடனும், மிக அழகுடனும், தனித்துவமாகவும் படமாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றுக்குமான காட்சி நேரம் மிகக்குறைவானது. அதற்குள்ளும் அவற்றை வெற்றிகரமாக நிறுவிவிடும் ஆளுமையுடன் செயல்பட்டிருக்கிறார் இயக்குநர். குறிப்பாக பிரியாவின் அக்கா கதாபாத்திரம். மற்றவற்றைவிடவும் குறைவாக, மிகச்சில நிமிடங்களே வரும் கதாபாத்திரம் இது. உண்மையில் பிரசவத்துக்குத் தாய்வீடு வந்தவள் என்றுதான் நாம் எண்ணிக்கொள்ளும் சூழல். பின்பொரு காட்சியில் கூட அவளது கணவன், ‘என் பெற்றோருக்குப் பிடிக்காதவர்கள் எனக்கும் பிடிக்காது’ என்பதாகத்தான் குறிப்பிடுகிறான். அவளுக்கும், அவளது கணவனுக்குமிடையே என்ன பிரச்சினை, அவளுக்கும் அவளது மாமியார், மாமனாருக்குமிடையே என்ன பிரச்சினை என்பது கூட நமக்குத் தெரியப்படுத்தப்படவில்லை. சொல்லப்பட்டது பிரச்சினை என்பது மட்டுமே! அதுவே போதுமானது இங்கே! அவளது கண்களில் சோகம் மட்டுமல்ல, ஏதோ தவறு செய்துவிட்ட குற்றவுணர்வும் கூட இருந்ததாகத் தோன்றியது எனக்கு. அப்படியான மெல்லியவுணர்வுகளைக் கூட கவனத்துடன் செதுக்கியிருக்கிறார் இயக்குநர்.

இயக்குநர் சார்லஸோடு இணைந்து, பின்னணியில் ஈடுபாட்டுடன் பணியாற்றியிருக்கும் முக்கியத் தொழில்நுட்பவியலாளர்களைப் பற்றிக் குறிப்பிடாவிட்டால் இந்தக் கட்டுரை நிறைவடையாது. பட்டுக்குழந்தைகளின் அழகை அள்ளிவந்திருக்கும் காட்சித்தொகுப்புகள், சிறார் குழுவின் ஓட்டம், உற்சாகம், பரபரப்பை மாற்றுக்குறையாமல் செய்திட்ட பதிவுகள், படத்தின் பிரதான கதாபாத்திரங்களான பெண்களின் உணர்வுகளைக் கச்சிதமாக கடத்தித்தந்தது என முன்னிற்கிறார் ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங். ‘என் அழகுக்குட்டிச்செல்லம்’, ‘தாயிற்சிறந்த தயாபரனே’ எனும் பாடல்களாலும், பின்னணி இசையாலும் நம்மைப் படத்தோடு பிணைத்தவர் இசையமைப்பாளர் வேத் சங்கர் சுகவனம். இத்தனைச் சிரமமான ஒரு பின்னல் திரைக்கதையில் அடுத்து என்ன என்பதையோ, எதை விடுப்பது, எதைச்சேர்ப்பது என்பதையோ தீர்மானிப்பது அத்தனை எளிதான விஷயமல்ல, அதை பிசிறின்றிச் சாத்தியப்படுத்திய எடிட்டர் பிரவின் பாஸ்கர். இன்னும் அத்தனை பேருக்கும் நம் வாழ்த்துகளும், நன்றியும்!