Friday, May 6, 2016

இலக்கியமும், கலையும் தாழச்செல்வதல்ல! : அவ்வை டிகே சண்முகம்

முன்குறிப்பு: அவ்வை டிகே சண்முகம் எழுதிய, ‘எனது நாடக வாழ்க்கை’ எனும் புத்தகத்திலிருந்து பெற்ற தகவல்களை முன்னிறுத்தி, நான் எழுதிய இக்கட்டுரை ஏப்ரல்’16 தமிழ்ஸ்டுடியோவின் ’பேசாமொழி’ இணைய இதழில் வெளியானது. பேசாமொழிக்கு நன்றி! ஒரு புத்தகத்தைச் சார்ந்து எழுதப்பட்ட எளிய கட்டுரையாயினும், இந்த ஆறேழு வருட இணைய எழுத்துப் பயிற்சியில் மிக அதிக உழைப்பையும், நாட்கணக்கில் நேரத்தையும் எடுத்துக்கொண்ட கட்டுரை இதுவே! மனதுக்குப் பிடித்ததாயும் ஆயிற்று!
-ஆதி.

***********

இலக்கியமும், கலையும் தாழச்செல்வதல்ல! : அவ்வை டிகே சண்முகம்

ஏனென்றெல்லாம் விளக்குவது மிகக்கடினம். சிலரை நமக்கு அப்படிப் பிடித்துப்போகும். பழம்பெரும் நடிகர் டிகே பகவதி என்றால் எனக்கு அப்படியொரு பிரியம். நல்ல உயரம், கம்பீரமான தேகம், உறுதியான, தெளிவான தமிழ் உச்சரிப்பு. சின்ன வயதில் அவரைச் சில கறுப்பு வெள்ளை படங்களில் பார்த்திருக்கிறேன். பல வருடங்களுக்குப் பின்னர், சமீபத்தில் டிவியில் ’வந்தாளே மகராசி’ எனும் படத்தில் ஜெயலலிதாவின் அப்பாவாக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அவரைப் பார்த்தபோது மீண்டும் அவரைப் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் மிகுந்தது.

கூகுளை நாடினேன். நம்புங்கள், அத்தகைய லெஜண்டரி நடிகரைப்பற்றி ஒரு விக்கிப்பக்கம் கூட கிடையாது. மிக அடிப்படையான சில தகவல்கள் தவிர வேறெதுவும் இல்லை. டிகேஎஸ் சகோதரர்கள் என்போர் யாவர்? அவர்கள் எத்தனை பேர்? அவர்கள் நடித்த திரைப்படங்கள் ஏதும் இருக்கின்றனவா என்பது போன்ற தகவல்கள் எதுவுமே இணையத்தில் இல்லை. இருபதாம் நூற்றாண்டின் முதல் ஐம்பதாண்டுகளில் தமிழ் நாடக உலகில் கோலோச்சிய டிகேஎஸ் சகோதரர்களில் ஒருவர்தான் டிகே பகவதி எனவும், அவ்வை டிகே சண்முகம் இவரது சகோதரர் எனவும் முன்பொரு நாள் டிவி பார்த்துக்கொண்டிருந்தபோது, நான் கேட்டதற்கு என் தந்தை பதிலளித்தது ஞாபகம் வந்தது.


பல மேடைகளிலும் நடிகர் கமல்ஹாசன், ஆர்வத்தோடு குறிப்பிடும் ஆசான் சண்முகம் அண்ணாச்சி என்பவர்தான், இந்த அவ்வை டிகே சண்முகம் என்பதையும், அவர் ஒரு பழம்பெரும் நாடக நடிகர் என்பதையும், கேபி சுந்தராம்பாள் நடித்துப் புகழ்பெற்ற ’அவ்வையார்’ திரைப்படத்தின், நாடக வடிவத்தில் அவ்வையாக நடித்துப் புகழ்பெற்றவர் என்பதையும் நாம் கணிக்கலாம். வேறெதையாவது தெரிந்துகொள்ள விரும்பினால்? ம்ஹூம்! வாய்ப்பில்லை.

பத்திரிகை நண்பர் ஒருவரிடம் இதுபற்றிப் புலம்பிக் கொண்டிருந்தபோதுதான் அவர், அவ்வை சண்முகம், ‘எனது நாடக வாழ்க்கை’ எனும் தலைப்பில் சுயசரிதம் எழுதியிருப்பதாகவும், அதில் நீங்கள் ஆர்வம் கொண்டிருக்கும் தகவல்கள் கிடைக்கலாம் என்றும் சொல்லிவிட்டு, உதிரும் நிலையில் தன்னிடமிருந்த அந்த பழைய புத்தகத்தையும் தந்துதவினார். என்னைப்போல டிகேஎஸ் சகோதரர்களைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்பும் வாசகர்களுக்காக அந்த நூலிலிருந்து கிடைத்த சில தகவல்களை இங்கே பதிந்து வைப்பது மட்டுமே இந்தக்கட்டுரையின் பிரதான நோக்கம்.

டிகேஎஸ் எனும் எழுத்துகள் நாமனைவரும் நினைப்பதைப்போல, டிகே சண்முகத்தைக் குறிப்பதல்ல. அது டிகேஎஸ் சகோதரர்கள் எனும் நால்வரில் மூத்தவரான டிகே சங்கரனைக் குறிக்கிறது. மூத்தவர் சங்கரன், இரண்டாமவர் முத்துசாமி, மூன்றாமவர் சண்முகம், இளையவராக பகவதி. பகவதியின் ஆஜானுபாகுவான தோற்றத்தால் அவர் மூத்தவராக இருக்கக்கூடுமென நான் எண்ணியிருந்தேன். மூன்று அண்ணன்மாரின் பாசத்தில் வளர்ந்த இளையவர் அவர். இவர்கள் நால்வர் மட்டுமே அல்லர், நால்வருக்கும் இளையவர்களாக சுப்பம்மாள், காமாட்சி எனும் இரு சகோதரியரும் இவர்களுக்கு உண்டு.

வாழ்நாள் முழுவதும் தமிழகமெங்கும் நாடோடி வாழ்க்கை வாழ்ந்த டிகேஎஸ் சகோதரர்களின் வீடும், உறவுகளும் நாகர்கோயிலில் அமைந்திருந்தாலும் பூர்விகம் திருவனந்தபுரம் என்பதை அறியமுடிகிறது. தந்தையார் டிஎஸ் கண்ணுசாமிப்பிள்ளை ஒரு நாடக நடிகர்.

சினிமாவுக்கு இத்தனை ஆதரவை அள்ளித்தந்திருக்கும் தமிழ்கூறும் உலகம், சினிமாவுக்கு முந்தையதான காலகட்டத்தில் நாடகத்தையும் அவ்வாறே கொண்டாடியிருக்கும் என நாம் எண்ண வழியுண்டு. ஆனால் அதில் அத்தனை உண்மையில்லை போலிருக்கிறது. ‘ஒரு தொழிலும் இல்லாதார் நாடக நடிகரானார்’ எனுமொரு சொல்வழக்கே அந்த காலகட்டத்தில் இருந்திருக்கிறது. கூத்தாடிகள், குடிகாரர்கள் எனும் பெயரோடு சமூகத்தில் மதிப்பற்றுத்தான் வாழ்ந்திருக்கின்றனர் நாடகக்கலைஞர்கள் ஒரு காலத்தில். அத்தகைய 1910களில் சிறுவர்களான தன் நான்கு பிள்ளைகளையும் ஒரு சந்தர்ப்பத்தில், தமிழ்நாடகத் தலைமையாசான் என்றறியப்படும் தவத்திரு. சங்கரதாஸ் சுவாமிகளின் வற்புறுத்தலின் பேரில் அவரது ’மதுரை தத்துவ மீனலோசனி வித்துவ பால சபா’ எனும் நாடகக்கம்பெனியில் சேர்த்துவிடுகிறார் டிஎஸ் கண்ணுசாமி. 1918ல் அங்கே சேரும்போது டிகே சங்கரனுக்கு வயது சுமார் 12, முத்துசாமிக்கு 10, சண்முகத்துக்கு வயது 8, பகவதி இன்னும் இளையவர்!

இப்படியான சிறுவர்களையே முழுதுமாகக்கொண்டு நாடகங்கள் நடந்தனவா அந்தக்காலகட்டத்தில்? இதை இப்போது முழுதுமாக நம்மால் புரிந்துகொள்ள இயலவில்லை. பெண்கள் நாடகத்தில் நடிக்க வராத காரணத்தால், ஆண்களே பெண்களாகவும் வேடமிட்டு நடிக்கும் சூழல் இருந்ததை நம்மால் உணரமுடிகிறது. அப்படியான வயது வந்த, அனுபவமிக்க நடிகர்களைக் கொண்ட குழுக்கள் பல இயங்கிவந்தபோதும், சங்கரதாஸ் சுவாமிகளின், ’தத்துவ மீனலோசனி வித்துவ பால சபா’ போன்ற சில கம்பெனிகள் முற்றிலும் சிறார்களை வைத்து நாடகங்கள் நடத்திவந்திருக்கின்றன. சிறுவர்களால் எப்படி சீரியஸ் நாடகங்களை நடிக்கமுடியும்? குழந்தைகளை முன்னிறுத்தி நடத்தப்படும் இப்போதைய டிவி ரியாலிடி காட்சிகள்தான் ஞாபகம் வருகின்றன. பெரியவர்களின் நிகழ்ச்சிகளின் மீது, ரசிகர்களின் ஆர்வம் குறைகையில் ஒரு மாற்றாக குழந்தைகளை, ஒருவகையில் அவர்களின் இயல்புக்கு மாறான, வயதுக்கு மீறிய விஷயங்களில், நம் சுயநலத்திற்காகப் பயன்படுத்திக்கொள்வதைப் போன்றதாகவே அதுவும் இருக்கலாம் என நாம் கருத இடமுண்டு. அதுவும் சிறுவர்களை மிகக்கண்டிப்புடன் பயிற்சி தந்து நடிக்கச் செய்திருக்கின்றனர். நாடக ஆசிரியர்கள் ஒழுங்காக நடிக்காத, பாடாத பிள்ளைகளை அடித்துத் துன்புறுத்தவும் செய்தனர் என்பதும் புத்தகத்தில் ஆங்காங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.

சகோதரர்களில் மூத்தவரை தந்தையின் ஸ்தானத்தில் வைத்து மதித்துப் போற்றும் பண்பு நம் கலாச்சாரத்தில் மிக முக்கியமானது. காலத்தால் அது அழிந்துவருவதை இப்போது நாம் காண்கிறோம். டிகேஎஸ் சகோதரர்களிடம் அந்தப்பண்பு மிக மேலோங்கியிருந்திருப்பதைக் காணமுடிகிறது. வாழ்விலும், தாழ்விலும் அண்ணன் சொல் மீறாத தம்பியராய் வாழ்ந்து வந்திருக்கின்றனர் மற்ற மூவரும். பிற்பகுதியில் இவர்களின் சொந்த நாடகக்கம்பெனியிலிருந்து எண்ணற்ற நடிகர்கள் உருவாகி சினிமாவுக்குள் நுழைந்த போதும், வாய்ப்புகள் வந்தபோதும் அண்ணன் சங்கரனின் சிந்தனைக்கும், ஆணைக்கும் கட்டுப்பட்டு சினிமாவில் ஆர்வம் காட்டாது நாடகத்துறையிலேயே இருந்து வந்திருக்கின்றனர். அப்போது சங்கரனின் முடிவு வேறாகியிருந்தால், முதல் தலைமுறை தமிழ் சினிமாவின் ஆதிக்க சக்தியாய் டிகேஎஸ் சகோதரர்கள் இருந்திருக்கக்கூடும்.
முதன்முறையாக 1918ல் சத்தியவான் சாவித்திரி நாடகத்தில் நாரதராக நடித்தார் டிகே சண்முகம். அப்போது அவருக்கு வயது 8. அந்த முதல் நாடகத்தில், எமனாக வேடம் புனைந்துவந்த நடிகரைப் பார்த்து பயந்து மேடையிலிருந்து உள்ளே ஓடிப்போய் சபையோரின் நகைப்புக்கு ஆளானதை புத்தகத்தின் துவக்கத்திலேயே நினைவுகூர்கிறார் சண்முகம். இதிலிருந்து எத்தகைய குழந்தைகளை நடிக்கவைத்திருக்கிறார்கள் என்பதை அறியமுடிகிறது.

தொடரும் ஆண்டுகளில், சண்முகத்தின் மீதான ஆர்வத்தில், அவரைக் கதாநாயகனாக ஆக்கவேண்டி சங்கரதாஸ் சுவாமிகள் எழுதிய நாடகம்தான் ‘அபிமன்யு சுந்தரி’. இந்த நாடகம்தான் அவரால் நூற்றுக்கணக்கான பாடல்கள், வசனங்களுடன் ஒரே நாளிரவில் எழுதிமுடிக்கப்பட்ட சாதனைக்குரிய நாடகம் என இன்றளவும் நினைவுகூரப்படுகிறது.

வித்வ பால சபையின் பொறுப்பாளராக, நாடகாசிரியராக சங்கரதாஸ் சுவாமிகள் இருந்தாலும் அதன் உரிமையாளர்கள் வேறு நபர்கள். போலவே நடத்தப்பட்ட நாடகங்களும் சங்கரதாஸ் சுவாமிகள் எழுதியவை மட்டுமே அல்ல! வேறு பல நாடகாசிரியர்களின் நாடகங்களும் உரிமைகள் பெறப்பட்டு நடிக்கப்பட்டிருக்கின்றன. போலவே, தமிழகமெங்கும் ஒரே சமயத்தில் பல நாடகக் கம்பெனிகளிலும் ஒரே நாடகங்கள் நடிக்கப்பட்டிருக்கின்றன. பவளக்கொடி, சதியனுசூயா, சுலோசனா சதி, சீமந்தனி, பிரகலாதன், கோவலன், பார்வதி கல்யாணம், வள்ளி திருமணம், அல்லி அர்ஜுனா, குலேபகாவலி போன்ற நாடகங்கள் வித்வ பால சபையால் இவ்வாறு நடிக்கப்பெற்றவைதான். இவற்றில் பலவும் பின்னாளில் சினிமாவாகவும் உருப்பெற்றிருக்கின்றன.

அந்நாட்களில் சிறுமேடைகளில் அரிக்கேன் விளக்குகளின் வெளிச்சத்திலும், அது கூட இல்லாத சிற்றூர்களில் தீப்பந்தங்களின் உதவியுடனும் கூட நாடகங்கள் நடந்திருக்கின்றன. தமிழகத்தின் ஒவ்வொரு சிறிய, பெரிய ஊர்களுக்கும் நாடகக்குழு பயணம் செய்து நாடகங்களை நடத்தியிருக்கின்றனர். ஒவ்வொரு ஊரிலும் பல மாதங்கள் தங்கியிருந்து நாடகம் நடத்தும் வழக்கம் அன்றைய நாட்களில் இருந்திருக்கிறது. சில ஊர்களில் நல்ல வரவேற்பும், வருமானமும் கிடைப்பதும், அதுவே சில ஊர்களில் எதிர்மறையாக அமைவதென காலங்கள் ஓடிக்கொண்டிருந்திருக்கின்றன. வாழ்நாள் முழுதும் ஒவ்வொரு நாடகக்குழுவும் இப்படி பயணித்தபடியேதான் இருந்திருக்கின்றன.

புத்தகம் முழுதும் இன்னொரு விஷயத்தையும் காணமுடிகிறது. ஒவ்வொரு கம்பெனியிலும் நடிகர்கள் ஓரிரு மாதங்கள், ஓரிரு வருடங்கள் கூட தாக்குப்பிடிக்கமுடியாமல், பணத்துக்காகவும், வேறு காரணங்களுக்காகவும் அடிக்கடி கம்பெனிகள் மாறிக்கொண்டே இருந்திருக்கிறார்கள். சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிட்டு, மீண்டும் சில மாதங்களில் திரும்பியும் வந்திருக்கிறார்கள். நடிகர்கள் பற்றாக்குறையால் கம்பெனிகள் பெரிய நிபந்தனைகளின்றி, அவர்களை மீண்டும், மீண்டும் ஏற்றுக்கொள்ளவும் செய்திருக்கின்றனர்.
துவக்க காலத்தில் டிகே சங்கரனும், டிகே முத்துசாமியும் நாடகங்களில் பல்வேறு சிறிய, பெரிய கதாபாத்திரங்களில், ஆணாகவும், பெண்ணாகவும் நடித்து வந்திருக்கின்றனர். ‘சுலோசனா சதி’ நாடகத்தில் கதாநாயகன் இந்திரஜித்தாக நடித்திருக்கிறார் சங்கரன். இவரது கம்பீரமான, அழகிய தமிழ் உச்சரிப்பால், இந்திரஜித்தால் சுலோசனா சிறையெடுக்கப்படுவதான கதை, சுலோசனாவே மனமொப்பி இந்திரஜித்துடன் செல்வதாக மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. டிகே முத்துசாமி இசையில் பெருநாட்டம் கொண்டு, இசை சார்ந்த பணிகளை செய்தவர் எனினும் நடிப்பிலும் பங்களித்திருக்கிறார். ’சத்தியவான் சாவித்திரி’ நாடகங்களில் சாவித்திரியாக பாத்திரமேற்று புகழ்பெற்றிருக்கிறார்.

காண்ட்ராக்டர்களால், அல்லது வேறு காரணங்களால் சங்கரதாஸ் சுவாமிகளுக்கும், கண்ணுசாமிப்பிள்ளைக்கும் இடையிடையே மனத்தாங்கல்களும் ஏற்பட்டிருக்கின்றன. ஓரளவு நடிப்பனுபவமும், புகழும் பெற்றிருந்த பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வேறு கம்பெனிகளுக்குத் தாவவும் அவர் முயன்றிருக்கிறார். அத்தகைய சமயங்களில் சகோதரர்களின் தாயார் சீதையம்மாளின் குறுக்கீட்டால், ‘குருபக்தி’ காரணம் காட்டப்பட்டு தடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

முன்னதாக சங்கரதாஸ் சுவாமிகள் ‘சமரச சன்மார்க்க நாடக சபை’ எனும் கம்பெனியை நடத்தி வந்திருக்கிறார். அதுசமயம் மதுரை மாரியப்ப சுவாமிகள், ராஜா எம்.ஆர் கோவிந்தசாமிப்பிள்ளை, பின்னாளில் திரைப்படங்களில் புகழ்பெற்ற எஸ்ஜி கிட்டப்பா போன்றோரும் அவரின் மாணவர்களாக பயின்றிருக்கின்றனர்.
சில ஆண்டுகள் தென்மாவட்டங்களில் சுற்றிய வித்துவ பால நாடகக்குழு 1921ல் சென்னைக்கு வருகிறது. ரயில் நிலையம், ஜனத்திரள், ட்ராம் வண்டிகள், பூரி போன்ற உணவு வகைகள் என முதல்முறையாக தாம் சென்னை வந்த நாளை வியப்புடன் நினைவுகூர்கிறார் டிகே சண்முகம். அது சமயம் சபா மேனேஜரான காமேஸ்வர ஐயருக்கும், டிகேஎஸ் சகோதரர்களின் தந்தையார், கண்ணுசாமிப்பிள்ளைக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவும், பணத்துக்காகவும் கண்ணுசாமிப்பிள்ளை, பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு, அப்போது சென்னையில் மிகப் பிரபலமான ராயல் தியேட்டரில் நாடகங்களை நடத்திக்கொண்டிருந்த தெ.பொ.கிருஷ்ணசாமிப்பாவலரின் ‘பால மனோகர சபை’யில் இணைந்துகொண்டார். நடிகர்களை ஒரு குழுவிலிருந்து இன்னொரு குழுவுக்குக் கடத்திச்செல்வதற்கென்றே செயல்படும் இடைத்தரகர்களின் ‘திருப்பணி’ இது என்று சண்முகம் நினைவுகூர்கிறார் இந்த சம்பவத்தை!

பாவலரின் ’பால மனோகர சபை’யில்தான் சதியனுசூயா, ராஜா பர்த்ருஹரி, கதரின் வெற்றி போன்ற புகழ்பெற்ற நாடகங்களில் நடித்தனர் டிகேஎஸ் சகோதரர்கள். இதில் கதரின் வெற்றி ஒரு தேசபக்தி நாடகமாகும். தெ.பொ.கிருஷ்ணசாமிப் பாவலர், பம்மல் சம்பந்தமுதலியாரின் ’சுகுணவிலாச சபை’யில் பயிற்சிபெற்ற, அவரது மாணவராவார். இந்த இடத்தில் சம்பந்த முதலியார் எழுதிய ‘மனோகரா’ நாடகம் அவரது சுகுணவிலாச சபையில் நடைபெற்ற போது மனோகரனாக சம்பந்த முதலியார் பல ஆண்டுகள் நடித்திருக்கிறார் என்பதும், சதி சுலோசனா, சபாபதி, வேதாள உலகம், ரத்னவல்லி போன்ற புகழ்பெற்ற திரைப்படங்கள் பலவும் சம்பந்த முதலியார் எழுதிய நாடகங்களின் கதைகளே என்பதும் நாம் காணக்கிடைக்கும் தகவல்கள்.
1922 அக்டோபரில், அதே மனோகரா நாடகத்தை, மனோகரனாக டிகே சண்முகத்தை நடிக்கவைத்து, சம்பந்தமுதலியாரின் தலைமையிலேயே, ‘பால மனோகர சபை’யிலும் நடத்தியிருக்கிறார் தெ.பொ.கிருஷ்ணசாமி. நாடக முடிவில், சண்முகத்தின் நடிப்பில் மகிழ்வுற்ற சம்பந்த முதலியார், ‘அடுத்த தலைமுறையின் தலைசிறந்த நடிகர்கள் உருவாகிவிட்டார்கள்’ என்று தம் மகிழ்ச்சியை மேடையிலேயே தெரிவித்துப் பாராட்டியிருக்கிறார்.

மீண்டும், சங்கரதாஸ் சுவாமிகளின் குழுவுக்கே திரும்பும் சகோதரர்கள், சுவாமிகளின் காலத்திற்குப் பின்பாக தாயாரின் ஆசியுடன், 1925ல் ’மதுரை ஸ்ரீபால சண்முகானந்த சபா’ எனும் பெயரில் சொந்த நாடகக்கம்பெனி ஒன்றைத் துவங்குகிறார்கள். தனது மாமா, சித்தப்பா உதவியுடன் மூத்தவர் டிகே சங்கரன், அத்தனை நிர்வாகப் பொறுப்புகளையும் கவனிக்கிறார். கம்பெனி துவங்கியதுமே சேர்க்கப்பட்ட புதிய நடிகர்களில் ஒருவர்தான் கலைவாணர் என் எஸ். கிருஷ்ணன். பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக பால சண்முகானந்தா சபாவிலேயே இருந்த என்எஸ்கே, பிற்பாடு சினிமாவுலகுக்கு சென்ற பின்பும், சூழ்நிலை காரணமாக குழுவோடு சற்றே விரோதம் பாராட்டியபோதும், கடைசி வரை டிகே சண்முகத்தோடு அன்பையும், நட்பையும் கொண்டிருந்திருக்கிறார். என்எஸ்கே, டிகேஎஸ்ஸை விட நான்கு வயது மூத்தவர்.

சொந்தக்கம்பெனியின் துவக்கத்தில் கோவலன், மனோகரா, அல்லி அர்ஜுனா போன்ற நாடகங்கள் நடத்தப்படுகின்றன. தொடரும் காலங்களில் பிரண்டு ராமசாமி, எம்கே ராதா, கேகே பெருமாள், எஸ்வி சகஸ்ரநாமம் போன்ற பின்னாளில் மிகப்புகழ் பெற்ற நடிகர்கள் பலர் கம்பெனியில் இணைகிறார்கள். எம்.கே.ராதா, அந்நாளைய பிரபல நாடகாசிரியர் எம்.கந்தசாமிப்பிள்ளையின் மகனாவார். எம்கே ராதா, தமிழின் முதல் இரட்டை வேட கதாபாத்திரங்களில் 1949ல் வெளியான ‘அபூர்வ சகோதரர்கள்’ எனும் திரைப்படத்தில் நடித்தவர்.

தொடர்ந்து எம். கந்தசாமிப்பிள்ளையின் உதவியுடன் ரத்தினாவளி, ராஜேந்திரா, ராஜாம்பாள், சந்திரகாந்தா முதலிய நாடகங்களை அரங்கேற்றியிருக்கின்றனர்.

அந்நாளைய சிறப்பு நாடகங்களில் ஆங்கிலம் மிகச் சரளமாக பேச்சுவழக்கில் கலக்கப்பட்டிருந்தனவாம். ‘துருவன் சரித்திரம்’ எனும் நாடகத்தில் துருவனாக டிகேஎஸ் நடிக்க, தோழனாக நடித்த என்எஸ்கே பாடும் பாடலொன்று இப்படி அமைந்திருந்தது.

“டென்னிஸ் புட்பாலடித்து
ரவுண்டர்ஸ் பிளே செய்திடுவோம்
டிபன் கொஞ்சம் எடுக்க
டீ காபி பார்த்திடுவோம்”

பிற்காலத்தில் நாடகத்தமிழுக்கென்றே தமிழ்ச்சமூகம் நினைவில்கொண்ட டிகேஎஸ் குழுவின் துவக்ககால நாடகங்களில் வசனங்கள் இப்படியும் இருந்தனவென நகைப்பும், வியப்புமாக சொல்கிறார் சண்முகம்.
டிகேஎஸ்ஸின் குறிப்புகளிலிருந்து ‘மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி’, டிகேஎஸ்ஸின் ’மதுரை ஸ்ரீபாலசண்முகானந்த சபை’க்கு ஒரு சமகால போட்டியாளர் என்பதை நாம் உணர்ந்துகொள்ளமுடிகிறது. ஆயினும் பாய்ஸ் கம்பெனி குறித்த தகவல்கள் ஏதும் புத்தகத்திலில்லை. அதிலிருந்துதான் காளி.என்.ரத்தினம், எம்ஜிஆர் உள்ளிட்ட பல பிரபல திரைப்படக்கலைஞர்கள் தோன்றினார்கள் என்பதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். பாய்ஸ் கம்பெனியிலிருந்து டிகேஎஸ் குழுவுக்கு வந்தவர்தான் நடிப்பிசைப் புலவர் கேஆர் ராமசாமி.

தொடர்ச்சியாக காலவரிஷி, மேனகா போன்ற நாடகங்களை உருவாக்குகிறார்கள் டிகேஎஸ் சகோதரர்கள். பம்மலின் கதையான காலவரிஷிதான் காலவா எனும் பெயரில் 1933ல் வெளியான தமிழின் இரண்டாவது பேசும்படமாகும். மேனகா கதைதான் 1935ல் டிகேஎஸ் சகோதரர்கள் அனைவரும் நடித்த முதல் திரைப்படமாகவும் வந்தது. இந்த காலகட்டங்களிலெல்லாம் டிகே சங்கரனும், டிகே முத்துசாமியும் நடிப்பை விட்டு, குழுவின் மேலாண்மைப்பணியில் முழுதுமாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டுவிட்டனர். டிகே சண்முகம், டிகே பகவதி இருவரும் தங்களை முழுமையாக நடிப்பில் ஈடுபடுத்திக்கொண்டனர். குழுவில் என்எஸ்கே, கேஆர் ராமசாமி, எம்கே ராதா போன்ற திறன்மிக்க நடிகர்கள் இருந்தனர்.

ஒரு சிறு மனத்தாங்கலில் என்எஸ்கே, ஜெகன்னாதய்யர் என்பவர் நடத்திவந்த ‘பால மீனரஞ்சனி சங்கீத சபா’ எனும் குழுவுக்கு ஓடிப்போய் இணைந்துகொண்டு, மீண்டும் சில தினங்களிலேயே மனம்மாறித் திரும்பியிருக்கிறார். எரிச்சலடைந்த ஜெகன்னாதய்யர் என்எஸ்கே மீது திருட்டுப்பழி சுமத்தி காவல்துறை மூலமாக, கைது நடவடிக்கை வரை சென்றிருக்கிறார். நல்ல நடிகர்களை தங்கள் குழுவில் நிலைநிறுத்தி வைப்பதற்கு குழு உரிமையாளர்கள் எத்தகைய காரியங்களையெல்லாம் செய்திருக்கிறார்கள் என்பதை இதன் மூலம் அறியமுடிகிறது.

1931ல் ஓரளவு முதிர்ந்த இளைஞர்களாகியிருந்த முத்துசாமி, சண்முகம், என்எஸ்கே ஆகியோர் தீவிர அரசியல் எண்ணங்கள் நிறைந்தவர்களாகவும் இருந்திருக்கின்றனர். பகத்சிங் தூக்கிலடப்பட்ட செய்தி இவர்களிடையே தேசபக்தியை தூண்டிவிடும் நிகழ்வாக அமைந்திருந்திருக்கிறது. அன்றிலிருந்து தம் கடைசிக்காலம் வரை டிகே சண்முகம் கதராடை மட்டுமே அணிந்துவந்திருக்கிறார். பாரதியார் பாடல்களில் மிக ஈடுபாடுகொண்டு அவற்றை தமது நாடகங்களில் பரவலாக பயன்படுத்தியிருக்கிறார். தேசவிடுதலை இயக்கங்களில் பாரதியின் பாடல்களை மக்களுக்குக் கொண்டு சென்ற முன்னோடிகளில் முதன்மையானவர் டிகே சண்முகமாவார்.

சுதந்திரவேட்கையை மக்களுக்குப் பரப்ப எண்ணி, மதுரகவி பாஸ்கரதாஸின் உதவியுடன், வெ.சாமிநாதசர்மாவின் ‘பாணபுரத்துவீரன்’ எனும் தேசபக்தி நாடகத்தை மேடையேற்றியிருக்கின்றனர். அந்த நாடகம் ஏற்கனவே தடைசெய்யப்பட்டிருந்ததால், அதற்கு ‘தேசபக்தி’ எனும் புதிய பெயர் சூட்டியுள்ளனர். அதுவும் பின்பு தடைசெய்யப்பட்டிருக்கிறது. முதன்முறையாக அது மேடையேற்றப்பட்ட போது, வாலீசன் எனும் கதாபாத்திரத்தில் உணர்ச்சிபொங்க நடித்த எஸ்வி சகஸ்ரநாமம் தூக்கிலிடப்படும் காட்சியில், உணர்ச்சிவேகத்தில் பாதுகாப்புக்கயிற்றினை பொருத்திக்கொள்ள மறந்து நிஜமாகவே சில விநாடிகள் தூக்குக்கயிற்றில் ஊசலாடி, பின்பு சக நடிகர்களால் காப்பாற்றப்பட்டிருக்கிறார், அவர்களுடைய ஆர்வம் எத்தகையதாக இருந்திருக்கவேண்டும் என்பதை இதன் மூலம் நாம் உணரமுடிகிறது. அதன்பின்பு வந்த காலகட்டங்களில் அந்தந்த பகுதி காங்கிரஸ் கமிட்டிகள் சுதந்திர இயக்கத்தில் ஊக்கம் குன்றாது ஈடுபட, தங்களால் இயன்ற உதவியாக சுமார் 157 தடவைகள் நாடகங்கள் நடத்தி, அதன்மூலம் வந்த வசூலை காங்கிரஸ் கமிட்டிகளுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர் டிகேஎஸ் சகோதரர்கள்.
தொடரும் காலங்களில் ஜெகன்னாதய்யர் கம்பெனியிலிருந்த எம்ஆர் ராதா, என்னெஸ்கேவின் நட்புக்காக டிகேஎஸ் குழுவுக்கு வருகிறார். டிகேஎஸ் குழுவின் நாடகங்களில் தமக்குப் பொருத்தமான வேடங்கள் இல்லையெனக் கருதிய ராதா, பதிபக்தி எனும் ஒரே நாடகத்துடன் விரைவிலேயே விலகிக்கொள்கிறார். அந்தக்குறுகிய காலத்திலேயே அவரது நட்பு போற்றுதலுக்குரியதாக இருந்திருக்கிறது.

மிகுந்த பண நெருக்கடியில், வேறு வழியின்றி கம்பெனியை சென்னையைச் சேர்ந்த கோல்டன் கோவிந்தசாமி நாயுடு என்பவரிடம் ’அதே பெயருடன் செயல்படவேண்டும்’ என்ற நிபந்தனையுடன் மூன்றாண்டுகளுக்கு உரிமையை அடகு வைக்கின்றனர். முயற்சி தோல்வியில் முடிய மனம் துவளும் சகோதரர்கள் குழுவை கலைத்துவிட்டு நாகர்கோயிலுக்குத் திரும்புகின்றனர். பிறர் அனைவரும் வேறு குழுக்களுக்கு சென்றபின்பும், டிகேஎஸ் குழு மீண்டும் துவக்கப்படும் எனும் நம்பிக்கையில் என்எஸ்கே மட்டும் நீண்டகாலம் காத்திருந்துவிட்டு கடைசியில் வேறு வழியின்றி, வேறு கம்பெனியில் இணைகிறார்! ஆனால், மீண்டும், டிகேஎஸ் குழு உயிர்பெற்ற பின்பு அவர், இவர்களுடன் இணையும் வாய்ப்பே இல்லாதுபோகிறது.

எட்டயபுர இளவல் காசி விஸ்வநாதனின் உதவியால் மீண்டும் ‘ஸ்ரீபாலசண்முகானந்த சபை’ துவக்கப்படுகிறது.
தொடரும் நாட்களில் தோழர் ப.ஜீவானந்தம், பெரியார் ஈ.வே.ரா, பட்டுக்கோட்டை அழகிரிசாமி போன்ற சுயமரியாதை இயக்க முன்னோடிகளின் நட்பும், அன்பும் சண்முகத்துக்குக் கிடைக்கிறது. அவர்களுடைய சமூக, அரசியல் கருத்துகளால் மிகவும் கவரப்படுகிறார். அவற்றையெல்லாம் நாடகங்களில் வெளிப்படுத்த முயல்கிறார். முற்போக்குக் கருத்துகள் நிறைந்த தெ.பொ.கிருஷ்ணசாமி எழுதிய பம்பாய் மெயில், தஞ்சை என்.விஸ்வநாதய்யர் எழுதிய ராஜசேகரன், எம் ஆர்.சாமிநாதன் எழுதிய ஜம்புலிங்கம் போன்ற புதிய நாடகங்களை உருவாக்குகின்றனர்.

1935ல் முதல்முறையாக திருப்பூர் ஸ்ரீசண்முகானந்தா டாக்கீஸ் எனும் நிறுவனம் இவர்களது மேனகா நாடகத்தை திரைப்படமாக்க எண்ணி, இவர்களையே நடித்துத்தரவும் அணுகுகிறது. டிகே சங்கரனும் ஒப்புக்கொள்கிறார். மற்ற மூவருக்கும் மகிழ்ச்சி. நாடக உலகுக்கென்று தம்மை அர்ப்பணித்துக்கொண்டிருந்தாலும் இளையவர்களுக்கு சினிமா ஆர்வம் இல்லாமலில்லை. தம்முருவைத் திரையில் காணும் ஆவல் கொண்டிருந்தனர். முழு படப்பிடிப்பும் மும்பையில் நிகழ்ந்த, இயக்குனர் ராஜா சண்டோ இயக்கிய, மேனகா நல்லதொரு படமாக உருவாகி, நல்ல வரவேற்பைப் பெறுகிறது. சண்முகத்துக்கும், பகவதிக்கும் தனித்தனியே திரை வாய்ப்புகள் வந்திருக்கின்றன. ஆயினும் தம்பியரை தனித்தனியே பிரித்து சென்னைக்கும், மும்பைக்கும் அனுப்ப விருப்பமில்லாத சங்கரன் வாய்ப்புகளை மறுக்கிறார். மேலும், டிகே சங்கரனுக்கு மீண்டும் திரைத்துறையில் இயங்கும் ஆர்வமில்லாது போய்விட்டது. படப்பிடிப்பில் நடந்த ஏராளமான நிகழ்வுகளும், பெண்களோடு தொட்டு நடிக்கவேண்டிய சூழலும் அதற்குக் காரணமாகியிருக்கலாம் என்பது சண்முகத்தின் கணிப்பு. இருப்பினும் மேனகா படவாய்ப்பு சற்றே பணவரவையும், சிறிது நிம்மதியையும், மாற்றத்தையும் அளித்தது எனவும் சொல்கிறார் அவர். ஆயினும், தொடர்ந்து கம்பெனியை நடத்தும் ஆர்வமிழந்த சங்கரன் மீண்டும் கம்பெனியை கலைக்கிறார்.

இந்த சமயத்தில்தான் சுதந்திரத்துக்கு முந்தைய சென்னைக்கான முதல் மாகாணத்தேர்தலில், சில முக்கியஸ்தர்களின் வேண்டுகோளுக்கிணங்கி, சங்கரனின் அனுமதியுடன் காங்கிரஸுக்காக, கேபி சுந்தராம்பாளுடன் ஊர் ஊராக பிரச்சார மேற்கொள்கிறார் சண்முகம்.
பெரியாரின் வேண்டுகோளுக்கிணங்கியும், சோர்வுற்ற தம்பியரைக் கண்டும் மனம்மாறும் சங்கரன், 1936 மேயில், ஈரோட்டில் வைத்து மீண்டும் கம்பெனியை ஒரு புதிய உற்சாகத்தோடு துவக்குகிறார். இந்த மறுபிரவேசத்துக்கு பெரியாரின் அச்சகத்திலேயே இலவசமாக விளம்பரச் சுவரொட்டிகள் அச்சடிக்கப்பட்டிருக்கின்றன.

அச்சமயம் ஜூபிடர் பிக்சர்ஸ், சந்திரகாந்தா நாடகத்தை திரைப்படமாக்க விரும்பி, அதன் இயக்குனராக மீண்டும் ராஜா சாண்டோவையே அமர்த்தியிருக்கின்றனர். சாண்டோ, கதாநாயகனாக சண்முகத்தை விரும்பி அழைத்தும், தம்பியை தனியே அனுப்ப விரும்பாத சங்கரனால் அந்த வாய்ப்பு பியு சின்னப்பாவுக்கு சென்றிருக்கிறது. பியு சின்னப்பாவின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அந்தப்படம் அமைந்ததை நாமறிவோம்.
மீண்டும் ஒரு வாய்ப்பாக மேனகா படத்தின் தாயாரிப்பு பங்குதாரர்கள், டிகேஎஸ் சகோதரர்களை வைத்து ‘பாலாமணி-பக்காத்திருடன்’ எனும் படத்தை எடுக்க அணுக, சங்கரன் அரைமனதுடன் சம்மதிக்கிறார். இம்முறை பி.வி ராவ் எனும் இயக்குனரால் படமும், அதன் உருவாக்கத்தில் நிகழ்ந்த அனுபவமும் மிக மோசமானதாக அமைந்து, படமும் தோல்வியடைகிறது. டிகே சங்கரனும் சினிமா என்றாலே வெறுக்கும் மனநிலைக்குச் செல்கிறார்.

மீண்டும் உற்சாகமாக சமூக விழிப்புணர்வு நாடகங்களை நடத்த விழைகின்றனர் டிகேஎஸ் சகோதரர்கள். இவர்கள் நடத்திய தேசபக்தி, ஜம்புலிங்கம், கதரின் வெற்றி போன்ற நாடகங்கள் தடை செய்யப்படுகின்றன. இந்த காலகட்டமே டிகேஎஸ் சகோதரர்களின் நாடக வாழ்க்கையில் மிக முக்கியமானதாகும். இரண்டு மிக முக்கியமான நாடகங்களைப் பற்றி அறிந்துகொள்வது டிகேஎஸ் குழுவின், முழு வீச்சை அறிந்துகொள்ள உதவும்.
அதில் முதலானது குமாஸ்தாவின் பெண்.

நிருபாதேவி எனும் வங்காள எழுத்தாளர் எழுதிய ஒரு கதையைத் தழுவி எழுதப்பட்டது, ‘அன்ன பூர்ணிகா மந்திர்’ எனும் ஒரு இந்தி நாவல். அதன் மலையாள மொழிபெயர்ப்பான ‘அன்னபூர்ணா மந்திரம்’ நாவலை வாசித்த டிகே முத்துசாமி, அதனை அடிப்படையாகக் கொண்டு தம்பி சண்முகத்தின் உதவியுடன், ’குமாஸ்தாவின் பெண்’ எனும் நாடகத்தை எழுதுகிறார். எனினும் நூல் பிடித்துப் பின்னோக்கிச்சென்று நிருபாதேவியிடம் அனுமதியைப் பெறவும் தவறவில்லை. 1937ல் அரங்கேறிய இந்நாடகம் பெரும் வரவேற்பையும், நல்விமர்சனங்களையும் பெற்று இன்றளவும் டிகேஎஸ் சகோதரர்களின் புகழைப் பரப்புவதாகவும் அமைந்தது. பின்னாளில் பேரறிஞர் அண்ணா எழுதிய, ‘குமாஸ்தாவின் பெண்’ எனும் நாவலும் இந்த குமாஸ்தாவின் பெண்ணைத் தழுவி எழுதப்பட்டதுதான். அண்ணாவின் நூல் வெளியான போது அதற்கு முன்னுரை எழுதி சிறப்புச்செய்திருக்கிறார் டிகே சண்முகம். டிகேஎஸ் சகோதரர்களின் ‘குமாஸ்தாவின் பெண்’, அவர்களாலேயே, மிகுந்த சிரமங்களுக்கிடையே 1941ல் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டு அதன் சீர்திருத்தக் கருத்துக்களுக்காக மிகப்பரவலான நல்விமர்சனங்களையும் பெற்றிருக்கிறது. இந்தப்படமே மீண்டும் 1974ல், ‘குமாஸ்தாவின் மகள்’ எனும் பெயரின் சிவகுமார், கமல்ஹாசன் நடிப்பில் ஏபி நாகராஜனின் இயக்கத்தில் வெளியானது. கமல்ஹாசன் அந்தப்படத்தில் பெண்பித்துப் பிடித்த ஒரு பண்ணையாராக நடித்திருக்கிறார். அந்தப்படத்தின் இறுதிக்காட்சியில், பேராசைகொண்ட ஒரு தம்பதியாக டிகே பகவதியும், மனோரமாவும் கௌரவ வேடங்களில் தோன்றுகின்றனர்.

இக்காலகட்டங்களில் கல்கி, பேரறிஞர் அண்ணா முதலானோர் இவர்களின் சீர்திருத்த நாடகங்களைப் பாராட்டி பத்திரிகைகளில் விரிவான விமர்சனங்களைத் தொடர்ந்து எழுதி ஊக்குவிக்கின்றனர். ஆனால் குமாஸ்தாவின் பெண், வித்யாசாகரர் போன்ற சீர்திருத்த நாடகங்கள் நற்பெயரைப் பெற்றுத்தந்தாலும் வருமானத்தில் ஜொலிக்கவில்லை. வருமானத்திற்கு ஸ்ரீகிருஷ்ணலீலா, சிவலீலா, கந்தலீலா போன்ற புராண நாடகங்களே கைகொடுத்தன. பெரும் உள்ளலங்காரம், புதிய உடையமைப்பு, நவீன காட்சியமைப்புகள், மாய உத்திகள் என மிகப்பிரமாண்டமாக இவை அரங்கேற்றப்பட்டு நல்ல வருமானத்தையும், அசாதாரணமான வரவேற்பையும் பெற்றுள்ளன. நாடகத்தைக் கண்ட விஐபிகள் அனைவருமே வியப்பில் ஆழ்ந்திருக்கின்றனர். தமிழறிஞர்கள் மகிழ்ச்சிக்கடலில் திளைக்கும் வண்ணம் இந்நாடகங்களில் பெரும் தமிழ் முழக்கமே நடந்திருக்கிறது. இச்சமயத்தில்தான் டிகே சண்முகம், தமிழறிஞர்களால் முத்தமிழ்க்கலா வித்வரத்தினம் என்று அன்புடன் அழைக்கப்படுகிறார்.

டிகேஎஸ் சகோதரர்கள், பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர்கள் ஆயினும் கடவுள் மறுப்பை ஏற்காதவர்கள். ஆகவே, புராண நாடகங்களை நடத்த அவர்கள் தயங்கவில்லை. ஆனால், இதுபோன்ற காரணங்களாலேயே பெரியாரின் எதிர்ப்பையும் பின்னாளில் சம்பாதித்துக்கொண்டனர். சிவலீலா அரங்கேறும் இந்தக் காலகட்டத்தில்தான் 10 வயது சிறுவனாக குழுவில் இணைகிறார் ஏபி நாகராஜன். பின்னாளில் மிகப்புகழ்பெற்ற தமிழ் திரைப்பட இயக்குனராக, குறிப்பாக பல புராண வெற்றிப்படங்களை உருவாக்கியவராக உயர்ந்தவர் இவர். குறிப்பிடத்தகுந்த படமான, ‘திருவிளையாடல்’ திரைப்படத்தின் கதை முற்றிலும் ‘சிவலீலா’வைத் தழுவியதே ஆகும். சிவனாக சிவாஜிகணேசன் செய்த வேடத்தை நாடகத்தில் டிகே சண்முகம் செய்தார். போலவே கந்தலீலா, ’கந்தன் கருணை’யானது.

டிகேஎஸ் குழுவின் பெயரை வரலாற்றில் எழுதிவைத்த இரண்டாவது நாடகம் அவ்வையார்.

தமிழாசிரியர் பி.எத்திராஜுலு நாயுடுவின் உதவியோடு, அவ்வையார் நாடகக்கதையினை உருவாக்குகிறார் சண்முகம். கல்வி, அரசு, நீதி, உழவு, இல்லறம் போன்ற விஷயங்களில் நகைச்சுவையோடு, நீதியை எடுத்தியம்பும் கதைத்தொகுப்பாக, தமிழமுதமாக அவ்வையார் நாடகம் உருவாகியிருந்தது.
குழுவிலிருந்த ஒரே பெண்ணான திரௌபதியும், ஏபி நாகராஜனும் மிக இளையவர்கள். கே.ஆர் ராமசாமி சிறுவயதில் பல பெண்வேடங்களை ஏற்றுச் சிறப்புடன் செய்திருப்பவராயினும், நளினம் போய்விட்டதென மறுத்திருக்கிறார். தமிழ்ச்சிறப்புக்கூட்டி அவ்வையை மேடையேற்றி அழகு பார்க்க ஆசைப்பட்ட சண்முகம் அதில் தான் நடிக்கவேண்டும் என்று முதலில் எந்த திட்டமும் கொண்டிருக்கவில்லை. அனைத்துக் காட்சிகளிலும் வரவிருக்கும் முக்கிய கதாபாத்திரத்தை சிறப்புடன் செய்யும், தகுதி வாய்ந்த நடிகர் வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்திருக்கிறார். அல்லது நாடகமே கைவிடப்பட்டாலும் சரி எனும் நிலை. இந்நிலையில் பெண்கள் வேடத்தில் மிகப்பாராட்டைப் பெற்றிருந்த, தமிழார்வம் மிக்க சின்னண்ணா டிகே.முத்துசாமியையே அவ்வையாக்க முடிவு செய்து அவரை சம்மதிக்கச்செய்யும் ஆவல் மிகுந்து, அவ்வை கதாபாத்திரம் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், தமிழ்ப்பாடல்கள், வசனங்களின் முக்கியத்துவம் எத்தகையது என்றும், தாமும், எத்திராஜுலு நாயுடுவும் எத்தகைய கனவோடு இந்தப் பாத்திரத்தை உருவாக்கியிருக்கிறோம் என்றும் நீண்ட சொற்பொழிவொன்றை ஆற்றியிருக்கிறார். பொறுமையாக அதைக்கேட்ட சின்ன அண்ணன் முத்துசாமி, ”இத்தனை உயிர்ப்போடு அதை உருவாக்கிய உன்னை விட வேறு யார் இந்த வேடத்தை செய்யமுடியும் சண்முகம்?” என்று கேட்டிருக்கிறார்.

அதிலிருந்த உண்மை அனைவரையும் அந்த முடிவை ஏற்கச்செய்திருக்கிறது, சண்முகம் உட்பட.
அவ்வையின் வெற்றி, தமிழ் நாடக உலக சரித்திரத்தில் எழுதப்பட்டது. டிகே சண்முகம், அவ்வை டிகே சண்முகமானார்.

தொடரும் காலங்களில் எஸ்எஸ் ராஜேந்திரன், எஸ்வி சுப்பையா, ஆர்எம் வீரப்பன் போன்றோர் குழுவில் இடம்பெறுகிறார்கள். வீரசிவாஜி, கவிகாளமேகம், பில்ஹணன் (பாரதிதாசனின் பில்ஹணீயத்தைத் தழுவியது), அந்தமான் கைதி, முள்ளில்ரோஜா போன்ற புகழ்பெற்ற நாடகங்கள் உருவாக்கப்படுகின்றன.
ஒருமுறை கல்கியை சந்தித்து அவரின் ‘சுபத்திரையின் சகோதரன்’ சிறுகதையை நாடகமாக்கித்தரும்படி சண்முகம் வேண்டியபோது, கல்கி சொன்ன பதில், “என்ன மிஸ்டர் சண்முகம்? கிருஷ்ணமூர்த்தி என்ன சகலகலா வல்லவன் என நினைத்தீர்களா? வேண்டுமானால் அனுமதி தருகிறேன். வேறு நல்ல நாடகாசிரியரை வைத்து நாடகமாக்கிக்கொள்ளுங்கள்” என்றிருக்கிறார். மேதைகளிடமிருந்த சுயமதிப்பு, எளிமை, இயல்பான பேச்சுக்கு உதாரணமாக இதைக்குறிப்பிடுகிறார் சண்முகம்.

போலவே அறிஞர் அண்ணாவுடன் 1946ல் ஒரு சந்திப்பு. “நான் தங்கள் நாடகத்தில் நடிக்கவேண்டுமென மிக ஆவல்கொண்டிருந்தேன். ஆனால் காலச்சூழலில் தற்போது தாங்கள் கேஆர் ராமசாமிக்கு எழுதித்தரவிருப்பதாக கேள்வியுற்றேன். இருப்பினும் என்ன கேஆராருக்குத் தந்தால் என்ன, எங்களுக்குத்தந்தால் என்ன? இரண்டும் ஒன்றுதானே! நாடகம் சிறப்புடன் நடைபெற ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்” என்கிறார் சண்முகம். பதிலாக அண்ணா, “ஆண்டவனை பிரார்த்திப்பதைவிட கேஆர்ஆருக்கு நாடகத்தை கவனத்துடன் நடத்தும்படி ஒரு கடிதம் எழுதினால் பயனுண்டு” என்று சொல்கிறார். கேஆர் ராமசாமி, முதலில் டிகேஎஸ் குழுவிலும், பின்னர் கலைவாணரின் ’என்னெஸ்கே நாடக சபை’யிலும் இருந்து, அதன் பின்னர் ’கிருஷ்ணன் நாடக சபை’ எனும் சொந்தக்கம்பெனி துவங்கியவர்.

மற்ற நாடகக்குழுக்கள் நடத்திய பல நாடகங்களையும் பார்த்து மனமார பாராட்டும் வழக்கம் கொண்டிருந்தார் சண்முகம். அதிலொன்றுதான் கேஆர்ஆரின் குழு நடத்திய மனோகரா நாடகம். டிகேஎஸ் குழுவில் மனோகரா நாடகத்தில், மனோகரன் பாத்திரத்தை ஏற்க மறுத்த கேஆரார் அவர் சொந்தக்கம்பெனியில் நடத்திய மனோகராவில், மனோகரனாக நடித்திருக்கிறார். அந்நாடகத்தில் மனோகரனின் தாயார் பத்மாவதியாக நடித்தவர்தான், பின்னாளில் மனோகரனாக திரையில் வாழ்ந்துகாட்டிய விசி கணேசன் எனும் சிவாஜிகணேசன். அப்போது பத்மாவதியாக சிவாஜியின் நடிப்பைக் கண்ணுற்று வியந்து பாராட்டியிருக்கிறார் சண்முகம்.
1941ல் சேலத்தைச் சேர்ந்த மீனாட்சியை பெரியோர் நிச்சயத்தபடி மணந்துகொண்டார் டிகே சண்முகம். புரோகித மறுப்புத் திருமணம் செய்யவேண்டுமென மிக விரும்பிய சண்முகம், மூத்த சகோதரரின் மனம்கோணாது நடக்கவேண்டுமே எனும் எண்ணத்தில் அதை விட்டுக்கொடுத்திருக்கிறார். 1943ல் காசநோயால் மீனாட்சி இறந்துவிட, மீண்டும் திருமண எண்ணமில்லாதிருந்த சண்முகம், 1948 ஜூனில் குழுவிலிருந்த நடிகை சீதாலட்சுமியை காதலித்து மணம்புரிகிறார்.

ஏறக்குறைய இத்தகவலோடு, ‘எனது நாடக வாழ்க்கை’ எனும் இந்தப்புத்தகம், ஒரு பர்சனல் டைரி பாதியில் முடிவதைப்போல முடிகிறது.

மகாகவியின் பாடலை மக்களிடம் கொண்டு சேர்த்த ஒரு உன்னதக் கலைஞனே, பாரதியின் பாடலைப் பயன்படுத்தமுடியாதபடி அதன் காப்புரிமையை கையில் வைத்திருந்த ஏவிஎம்மால் தடுக்கப்பட்டிருக்கிறார். அதற்கெதிராத சண்முகத்தின் போராட்டம் என்னவாயிற்று எனத் தெரியவில்லை.

1950க்குப் பிறகான அவரது செயல்பாடுகள், நாடகம் மற்றும் சினிமா பங்களிப்புப் பற்றிய தகவலில்லை. சுமார் 16 படங்களில் அவர் நடித்திருப்பதாக ஒரு தகவல் உண்டு. ஆனால், அந்தப்பட்டியல் நம்மிடையே இல்லை. நாம் இன்றும் தெளிவான அச்சில் சண்முகத்தைக் காணமுடிகிற ஒரு படமாக, ஜெமினிகணேசன் கதாநாயகனாக நடித்த, மிகப்புகழ் பெற்ற ’வஞ்சிக்கோட்டை வாலிபன்’ அமைந்திருக்கிறது. அதில் இக்கட்டான ஒரு சூழலில், தான் பெற்ற பிள்ளையை விடவும், ராஜவாரிசுகளைக் காக்கும், வீரமும், விசுவாசமுமிக்க சேனாபதி, ‘சொக்கலிங்க நாவலர்’ எனும் தீரமிக்க கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். டிகே சண்முகத்தைவிடவும் அதிகமான படங்களில் டிகே பகவதி நடித்திருக்கக்கூடும்.

மேலும் டிஎன் சிவதாணு, எம்ஆர் சுவாமிநாதன், புளிமூட்டை ராமசாமி, எஸ்.என் ராமையா, பிஎஸ்.வேலுநாயர், ஏஎன் ராஜன், டிஎம் மருதப்பா, நன்னிலம் நடராஜன் போன்ற எத்தனையோ நடிகர்களைப் பற்றிய குறிப்புகள் புத்தகமெங்கும் காணப்படுகின்றன. ஆனால் அவர்களின் புகைப்படங்கள் கூட இன்று நம் பார்வைக்கு இல்லை.

டிகே சண்முகம் மிக விரும்பிய இந்நூலின் இரண்டாம் பாகத்தை எழுதிமுடிக்க காலம் அவரை விட்டுவைக்கவில்லை. 1972ல் இந்தப் புத்தகம் வெளியிடப்பட்ட அடுத்த ஆண்டில், 1912ல் பிறந்த சண்முகம் தமது 60வது வயதில் மறைகிறார்.

என்எஸ்கே, நாரண.துரைக்கண்ணன் ஆகியோரின் முயற்சியால் நாகர்கோயிலில் 1948ல் நடத்தப்பட்ட மூன்றாவது தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டில் பேசிய அவ்வை டிகே சண்முகத்தின் பின்வரும் கருத்து, ஒரு படைப்பாளியின் சமூகப் பொறுப்பினை வரையறுக்கிறது. மிகையான கதாநாயக பாத்திரங்களையும், வெற்று அலங்காரங்களையும், பொருளற்ற பாடல்களையும், அபத்தமான சண்டைக்காட்சிகளையும் ‘மக்கள் விரும்புகிறார்களே..’ எனும் போர்வையில் ஒளிந்துகொண்டு உருவாக்கித்திரியும் இன்றைய ஒவ்வொரு படைப்பாளியின் மனதையும் இவ்வரிகள் சென்றடைய வேண்டுமென்பது நம் ஆசை!
”பகல் முழுதும் உழைத்துக்களைத்து வரும் பாட்டாளிக்கு, வேடிக்கையும், நகைச்சுவையுமாய் பொழுதுபோக்குவதே இன்றைய முதன்மைத் தேவையாய் இருக்கலாம். சமூகநீதியும், நல்லரசியல் பிரச்சாரமும் அவர்தமக்குத் தேவையற்றதாய்த் தோன்றலாம். ஆனால், மக்களின் ரசனைக்கேற்ப கலைகள் இருப்பின் சமூக வளர்ச்சியில் வேகமிருக்காது. மக்களின் உடனடித் தேவையான சிலமணி நேர மகிழ்ச்சியை விட, அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர, அவர்கள் நல்வாழ்வு வாழ என்ன தேவை என்பதைச் சிந்தித்து, அவர்தம் ரசனையை தொடர்ந்து சீர்படுத்தி, உயர்த்தும் வேலையைச் செய்வதே நல்ல கலைஞர்களின் கடமை. இதையெல்லாம் பத்திரிகைகள் கண்காணிக்க வேண்டும். மக்களுக்குப் பிடித்த மொழி, மக்களுக்குப் புரிகிற மொழி என தரம் தாழ்ந்து, சென்றுகொண்டே இருப்போமாயின் நாளடைவில் மொழி எனும் ஒன்றே இல்லாது போகும். கலையால் மக்கள் உயரவேண்டும், மக்களால் கலை வளரவேண்டும். இரண்டும் ஒன்றையொன்று உயர்த்தும் தரத்தினதாய் அமைய வேண்டும். அதற்கு பத்திரிகைகளும், விமர்சகர்களும் நற்கலைஞர்களை தூக்கிப்பிடித்து உதவவேண்டும். இலக்கியமும், கலையும் ஒருபோதும் தாழ்ந்து செல்லலாகாது!”
சத்தியமான வரிகள் அல்லவா இவை?
*

No comments: