Monday, June 6, 2016

18வது சென்னைப் புத்தகக் கண்காட்சி (2016)ஒவ்வொரு ஆண்டும் சென்னை புத்தகக்காட்சி நடைபெறும் இடத்தைப் பொறுத்தவரை ஏதாவது பஞ்சாயத்து இருந்துகொண்டேதான் இருக்கும் போலும். இந்த ஆண்டு தீவுத்திடல் என்றபோதே ஒரு மலைப்பு தோன்றியது நிஜம்தான். போரூர் எனும் வெளிநாட்டிலிருந்து விசாவெல்லாம் வாங்கிக்கொண்டு செல்லத் தயாராக வேண்டுமே என்ற மலைப்புதான், வேறென்ன? போலவே காட்சி நுழைவாயில் கடற்கரைச்சாலை மட்டுமே என்ற அறிவிப்பு எங்குமே கண்ணில் படவில்லை. நம்மைப் பற்றித் தெரியாதா, சரியாக அண்ணாசாலை தீவுத்திடல் வாயிலுக்கேச் சென்றேன்! நுழைவாயிலே இல்லையாம், இதில் ஜபர்தஸ்தாக புத்தகக்காட்சியின் தோரணவாயில் இருந்தது அண்ணாசாலை நுழைவிடத்தில்! அங்கேயும் கூட அறிவிப்பு எதுவுமே இல்லை. என்னைப்போலவே நூற்றுக்கணக்கான பைக்வாசிகள், கால்நடைக்காரர்கள், பத்தாத குறைக்கு பெண்டாட்டி பிள்ளைகளுடன் அண்ணாசாலை நுழைவு வழியாக அரைகிலோ மீட்டர் நடந்துசென்று, ’என்ன எங்கு பார்த்தாலும் காராக இருக்கிறது, புத்தகக் கண்காட்சியையே கண்ணுக்கெட்டிய தூரம் வரை காணவில்லையே’ என அதிர்ந்து திரும்பி, மீண்டும் அண்ணாசாலைக்கே வந்து போலீஸ்காரர்களிடம் ’கிணத்தைக் காணோமே’ என்கிற மாதிரி விசாரித்து பின் மீண்டும் கடற்கரைச்சாலைக்குப் பயணித்தைத் துவக்கினர்.

***

ஜனவரியின் அருமை அனைவருக்கும் தெரிந்திருக்கும். இத்தனைக்கும் சர்வ ஜாக்கிரதையாக மாலை 5 மணிக்கு மேல்தான் நுழைந்தேன் அரங்கிற்குள். மக்கள் வியர்த்து வழிந்த வண்ணமிருந்தனர். சில தெருக்களில் சுற்றியடித்து, ஓய்ந்துபோன நான் கூட ’மறந்துபோய் மதியப்பொழுதில் நுழைந்துவிட்டோமோ’ என, வியர்வையைத் துடைத்து கைக்குட்டையைப் பிழிந்துவிட்டு வாட்சைப் பார்த்தபோது மணி எட்டு.

***

1999 முதலாகத் துவங்கி ஒரு ஆண்டு கூட தவறாமல் வருகிறேன். இது எனக்கு 18வது ஆண்டு. அதுவும், சில ஆண்டுகளாக சர்வீஸ் துறையிலிருப்பதால் தவறவிட வாய்ப்பு மிக இருந்தும் எப்படியோ தப்பிவருகிறேன். துவக்க கால காயிதேமில்லத் கல்லூரி வளாகத்தின் போது ஆர்வமிகுதியில் ஒவ்வொரு அரங்காக சுற்றிவருவது, ஒவ்வொரு புத்தகமாக நோண்டிப்பார்ப்பது, விஐபிகளை விரட்டி விரட்டி வேடிக்கை பார்ப்பது (கனிமொழி மிக சுவாதீனமாக தன் தோழியருடன் உலாவிக்கொண்டிருப்பார்), சிக்கியவர்களிடம் கையெழுத்து வாங்குவது (ஜெயமோகன் புக்கில் சாருவிடம் கையெழுத்து வாங்கியதும் உண்டு) என்றெல்லாம் நடக்கும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக, வாக்கிங் செல்வதற்காகத்தான் கண்காட்சிக்கே செல்கிறேனோ எனத் தோன்றுகிறது. சுமார் 5 நீநீநீள நீளமான தெருக்களில் ஸிக்ஸாக்காக நடக்க ஆரம்பித்து எல்லைக் கோட்டைத்தொட்டால் கால்வலி பின்னுகிறது! இடையிடையே உயிர்மை, காலச்சுவடு, விகடன் போன்ற விஐபி ஸ்டால்கள் என குறிப்பிட்டு இல்லாமல், அகஸ்மாத்தாக ஏதாவது இரண்டு மூன்று கடைக்குள் புகுந்து, எதையாவது பார்த்து, இயன்றால் எதையாவது வாங்கவேண்டும், அவ்வளவுதான், நோக்கம்!

இம்முறை நாஞ்சிலின் கற்றது கைம்மண்ணளவு, காயத்ரியின் மயக்குறு மகள், தமிழ்ஸ்டுடியோ படச்சுருள் இதழ்த்தொகுப்பு, சுபாவுக்கு ஓவியம் பழக ஒரு புத்தகம் இவ்வளவுதான் என் தேர்வு. நிறைய வாங்கவேண்டும் என்ற ஆசை போகவில்லை, ஆனால், முதலில் நிறைய படிப்போம், பிறகு வாங்கிக்கொள்ளலாம் எனும் நிதானம் வந்திருக்கிறது.

***

கடந்த சில ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் முத்து காமிக்ஸ் அரங்கம் நிறைய வெரைட்டிகளோடு நிறைந்திருக்கிறது. காமிக்ஸ் வாசக வட்டத்தை, ஏதோ அண்டர்கிரவுண்ட் ஆசாமிகளைப் போல அணுகும் சூழல் காலங்காலமாக இருப்பதால் கமுக்கமாகவே வாசக வட்ட சந்திப்பு நிகழ்ந்தது. உதாரணத்துக்கு ஏற்ப காமிக்ஸ் வாசகர்களை சலித்தெடுத்தால் தமிழகம் முழுக்க ஒரு ஆயிரம் பேர் தேறுவார்களா சந்தேகமே! மெனக்கெட்டு ரயில்பிடித்து வந்து சக தீவிரவாதிகளோடு ’3 எலிபண்ட்ஸ்’ அண்டர்கிரவுண்டில் ஆலோசனை நடத்துமளவு தீவிர வாசகர்கள் என்று பார்த்தால் ஒரு ஐம்பது பேர் இருக்கக்கூடும். சக பயணி, லயன் காமிக்ஸ் திரு.விஜயனுக்கு நன்றி!

***

எட்டு மணிக்கு அரங்கை விட்டு வெளியேறி, அக்கடாவென ஒரு நாற்காலியில் உட்கார்ந்தேன். ஒழுக்கத்துக்கும், நம் மக்களுக்கும் தூரம் அதிகம். இரண்டு பக்கமும், தின்பண்ட அரங்குகள், மெகா உணவரங்கம் என அந்த இடத்தையே குப்பை மேடாக்கிவைத்திருந்தார்கள். அந்நேரத்துக்கும் ஏதோ மேஜிக் ஷோ பார்க்கப்போவது போல, அரக்கப்பரக்க டிக்கெட் வாங்கிக்கொண்டு, இடது கையில் இல்லாள், வலது கையில் பிள்ளை என உள்ளே நுழைந்துகொண்டிருந்தவர்களைப் பார்க்க முடிந்தது. பத்து ரூபாய் பார்க்கிங் டிக்கெட்டை ஏமாற்ற தில்லாலங்கடி வேலைகளையெல்லாம் செய்துகொண்டிருந்தார் ஒரு நபர்! வெளியே செல்பவர்களில் பத்தில் ஒருவரிடம் மட்டுமே புத்தகங்கள் வாங்கிய பை இருந்தது. புத்தகக் காட்சி ஒன்றும் பொருட்காட்சி அல்ல, புத்தக நோக்கமில்லா கணவன், மனைவி, குழந்தைகளை கூட்டிக்கொண்டு வந்து நெரிசலை ஏற்படுத்தாதீர்கள் ஐயா என்று முன்பொரு முறை எழுதிய ஞாபகம். அதை வாபஸ் வாங்கிக்கொள்கிறேன். பட்டுக்குழந்தைகளை கட்டாயம் கூட்டி வாருங்கள். இலக்கியப் புத்தகமெல்லாம் ஓரமாய்க் கிடக்கட்டும். புத்தகத் தெருக்களுள் உட்கார அனுமதித்தால் அழகாக உட்கார்ந்துகொண்டு அழகழாய் குட்டிக்குழந்தைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கலாம். கெஞ்சலாய், கொஞ்சலாய், அழுகையாய், ஆர்பாட்டமாய், அலட்சியமாய் பிள்ளைகளைக் காண்பதே அழகு!

இரண்டரை வயதில் ஒரு வாண்டு இடுப்பில் உட்கார்ந்துகொண்டு, தலையணை சைஸில் ’மனப்பூதமும், மாங்கொட்டையும்’ என்பது போன்றதொரு தலைப்பில் ஒரு இலக்கியப் புத்தகத்தை வாங்கச்சொல்லி தன் பெற்றொரை அழவைத்துக்கொண்டிருந்ததை கண்நிறைய பார்த்து ரசித்துக்கொண்டிருந்தேன்.

*

3 comments:

mayavi. siva said...

அட..அட..என்னவொரு ரசனையான பார்வை.!அதுவும் அந்த குழந்தை விஷயத்தில் உங்கள் வாபஸ் செம
.! 17 வருடங்களாக புத்தகவீதியில் வாக்கிங் செல்லும் கடமைதவறாமை அட்டகாசம் .!!

என்னை போன்றதீவிரவாதிகளுடன்(?)அண்டர்கிரவுண்டில் திருவிஜயன் நடத்திய ரகசிய ஆலோசனையை நல்லாவே நோட் பண்ணி இருக்கிங்க..ஹா..ஹா..!

இதுமாதிரி எழுதின எழுத்தை எனக்கு 'இங்கே கிளிக்குங்க ஆதி ஸார்..!

Erode VIJAY said...

Super post!!

tex kit said...

wow aadhee