Sunday, July 24, 2016

கபாலி -விமர்சனம்


ரஜினியை எனக்குப் பிடிக்காது எனினும், கபாலி ஒரு வெற்றிகரமான, தரமான படமாக இருக்கவேண்டுமென ரொம்பவே ஆசைப்பட்டேன்.

ரஜினியை ஏன் பிடிக்காது? ரஜினியின் திரை பிம்பத்தை யாருக்குத்தான் பிடிக்காது, நானும் விதிவிலக்கல்ல. எனக்கும் திரை ரஜினியை ரொம்பவே பிடிக்கும். ரஜினியின் ஸ்க்ரீன் பிரசன்ஸ், இந்தியத் திரையுலகில் வேறு யாருக்கும் வாய்க்காதது. சில அசாத்தியமான கதாபாத்திரங்களுக்கு உயிரூட்ட இப்படி ஒரு நடிகன், தேடினாலும் கிடைக்கமாட்டான்தான்.. ஆனால்?

காலம் எப்போது வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் உச்சத்தில் கொண்டு போய் வைத்து அழகு பார்க்கும். அப்படி உச்சத்திற்குப் போனவர்கள் எப்படி செயல்பட்டார்கள் என்பதை வைத்துத்தான் வரலாற்றில் அவர்கள் பெயர் எழுதிவைக்கப்படுகிறது. அரசியலுக்கு வந்தோ, கைக்காசைப் போட்டோ ஊர், உலகத்துக்கு உருப்படியாய் ஏதும் செய்ய வேண்டுமென எதிர்பார்க்கும் வகையல்ல நான். ஆயினும், தான் இயங்கும் சூழலில் எத்தனை அறத்தோடு ரஜினி நடந்துகொண்டார்? திரைநுட்பங்களுக்கான கல்வி, பயிற்சியின்மை, தயாரிப்புக் குறைபாடுகள், கூட்டியக்கம், திரைமறைவு மாஃபியாக்கள், சிறிய படங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள், விநியோகஸ்த வழிமுறைகள், தியேட்டர் குறைபாடுகள், கட்டணம் என தமிழ்த் திரைச்சூழலிலிருக்கும் எண்ணற்ற பிரச்சினைகளுள், ஏதேனும் ஒன்றைச் சரி செய்ய, ஒரு துரும்பையாவது கிள்ளிப்போட்டிருக்கிறாரா என்பதுதான் என் கேள்வி!

ஒரு பதினைந்தாயிரம் சம்பளம் வாங்கும் ஒரு சூபர்வைசர், இரவில் தனக்குக் கீழ் வேலை செய்யும் பத்து பணியாளர்களுக்காக நல்ல குடிதண்ணீரை, தனது நிர்வாகத்திடமிருந்து சற்றேனும் எதிர்ப்பை சம்பாதித்துக்கொண்டாவது கேட்டு வாங்கித் தருகிறான். பத்தாயிரம் சம்பளம் வாங்கும் ஒரு வாட்ச்மேன், ஆட்களின் வருகையை மட்டும் கண்காணிக்கும் தன் பணியையும் மீறி, தன் கட்டுப்பாட்டுக்குள்ளிருக்கும் வளாகத்துக்குள் யாரும் குப்பை போடாமல் கண்காணித்துக் கொள்கிறார்.

தமிழ்த் திரைத்துறைக்கு ரஜினி என்ன செய்தார் என்று கேட்பதை விட, குறைந்த பட்சம் தன் படங்கள் சார்ந்தாவது அறத்தோடு நடந்துகொண்டாரா என்று கேட்பது இன்னும் பொருத்தமாக இருக்கும்! மேற்சொல்லப்பட்ட குறைபாடுகள் அனைத்துக்கும் இவர் படங்களே ஊற்றாக அமைகின்றன என்று கூட சொல்லலாம். தன் படத்தை தயாரித்தவர்களை, விநியோகிப்பவர்களை, ரசிகர்களை, கட்டணச் சிக்கல்களை கூட கட்டுப்பாட்டுக்குள் வைக்க இயலாத, அல்லது விரும்பாத ஒரு நபராகத்தான் ரஜினி இருந்து வருகிறார். பிறகெப்படி பிடிக்கும்?

எனில், கபாலி, வெற்றிகரமான ஒரு படமாக வரவேண்டும் என ஏன் மிக விரும்பினேன்? ரஞ்சித்! ‘மெட்ராஸ்’ ரஞ்சித் ஒரு அசாத்தியமான இயக்குநர். ரஞ்சித் இன்னும் பல சிறப்பான படங்களைத் தருவார் என.. இப்போது, கபாலிக்குப் பிறகும் கூட எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ரஞ்சித்தை இந்தப்படம் இன்னும் உயரத்துக்கு எடுத்துச்செல்ல வேண்டும் என விரும்பினேன், உள்ளூர அரசியல் பொதிந்துள்ள அவர் படங்களில், இன்னும் வீரியமாக வெளிப்பட அது களமமைத்துக் கொடுக்கும் என்பதால். கண்டெண்ட் மட்டுமல்லாது காட்சி மொழியும் கைவரப்பெற்ற கலைஞன் ஜெயிக்க வேண்டுமென ஆசைப்பட்டேன்.

ஆனால், அது நடக்கவில்லை.

கபாலி? ரஞ்சித்துக்கு ரஜினியை வைத்துப் படம் பண்ணுமளவுக்கு அனுபவம் இல்லையோ என்பதுதான் என் ரசிக மனத்துக்குத் தோன்றும் முதல் சந்தேகம்! முதலானது ஸ்க்ரிப்ட். சிதைந்து கிடக்கும் கபாலியின் குடும்பம் மீண்டும் ஒன்றிணைவதா, மாஃபியாக் கும்பல்களுக்கிடையேயான போராட்டமா, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலையா என ஸ்க்ரிப்ட் எதை மையமாகக் கொண்டு இயங்குவது என்பதிலேயே தெளிவில்லை. எதுவுமே இயல்பாக ஒன்றிணையவே இல்லை. எல்லாவற்றிலும் போதாமை. ஒரு ஸ்டாரை வைத்து படம் செய்கையிலிருக்கும் நேரமின்மை, அழுத்தம் இவற்றை சரிவரக் கையாள இயலாமல், ‘மெட்ராஸி’லிருந்த அந்த அட்டகாசமான ஃப்ளோவை கோட்டை விட்டிருக்கிறார். அடுத்து நடிகர்கள். ரஜினியைத் தவிர்த்து ராதிகா ஆப்தே, தன்சிகா இருவரும்தான் பொருத்தமாக இருந்தனர். சிறப்பான நடிப்பும் கூட! ஆனால், இவர்களது கதாபாத்திரங்கள் கூட சிறப்புற வடிவமைக்கப்படவில்லை என்பது வேறு விஷயம். தவிர, அத்தனை நடிகர்களும் மகா சொதப்பல், நாசர் உட்பட! முக்கால்வாசி படம் வரை ரஜினிதான் ஹீரோவா, அல்லது ஜான்விஜய் ஹீரோவா என்று தெரியாதபடிக்கு படம் முழுவதும் ரஜினியை விட அதிகமாக ஜான் விஜய்தான் இருக்கிறார். அதுவும் ரஜினி வரும் காட்சிகள் அனைத்திலும் வயிற்றைத் தள்ளிக்கொண்டு, பாதித் திரையை மறைத்துக்கொண்டு, டிவி சீரியல் போல வளவளவென பேசிக்கொண்டு.. சகிக்கவில்லை. தினேஷ், கலையரசனெல்லாம் ப்ப்பா! சீன வில்லன்களைக் கேட்கவே வேண்டாம், அழகாக மைதா மாவு பொம்மை போல இருக்கிறார்கள்.

காட்சி அழகியல் எல்லாம் எங்கு போயிற்றோ தெரியவில்லை. ரஜினிக்கு.. அதுவும் கேங்ஸ்டர் பாத்திரத்தில் பில்டப் எப்படி இருக்க வேண்டும்? இரும்புக் கதவுகள் விலகுகையில், டைட் குளோஸப்பில் ரிவீல் ஆகவேண்டிய ரஜினியை, அவசரக்குடுக்கை மாதிரி அதற்கு முன்பாகவே நான்கைந்து ஷாட்கள் அதுவும், கீ சப்ஜெக்டாக இல்லாமல் காண்பித்தாகிவிட்டது. டைட்டில் போடும் போது முழ நீளத்துக்கு என்ன கேங்? யார் கேங்ஸ்டர்? யாரார் என்ன செய்கிறார்கள்? பேர் என்னங்கிறது உட்பட ஓவர்லாப்பில் ரஞ்சித் சொல்லிவிடுகிறார். அடுத்த காட்சியிலேயே, ரஜினி சிறையிலிருந்து வந்ததும், ஜான்விஜய் ரஜினிக்கு அதையே கிளிப்பிள்ளைக்கு சொல்வதைப்போல சொல்கிறார். ’எல்லாம் 43 கேங் வைச்ச சட்டம்தான். கட்டை, கட்டி எல்லாம் அவங்க கண்ட்ரோல்லதான் இருக்கு, நாமல்லாம் ஜாக்கிரதையா இருந்துக்கணும்ணா’ என்கிறார். யார்கிட்ட?  கேங்லீடர் ரஜினிகிட்டேயே! ‘துப்பாக்கில்லாம் பாத்திருக்கியாண்ணா?’ என்று மட்டும்தான் கேட்கவில்லை.

உயிரோடுதான் இருக்கிறார் என்று தெரிந்ததும், ரஜினி பரபரப்பாக ராதிகாவை தேடிப்போகிறார். ஒரு முகவரி கிடைக்கிறது. ஒரு பில்டிங் வாசல்.. ட்ராலி ஷாட். கண்ணாடியை கழற்றுகிறார். அங்கு ராதிகா இல்லை. சரி அடுத்த முகவரி. அங்கும் ஒரு பில்டிங்.. மீண்டும் ட்ராலி ஷாட். மீண்டும் ரஜினி கண்ணாடியை கழற்றுகிறார். அங்கும் ராதிகா இல்லை. சரி அடுத்த முகவரி.. அடுத்த பில்டிங்.. மீண்டும் ட்ராலி ஷாட்.. மீண்டும் கண்ணாடி.. இதுவாய்யா உங்க பில்டப்பு?

அரசியல்? பெரிய ஏமாற்றம்! சரி, வசனங்களிலாவது வைத்துத்தொலைப்போம் என முடிவெடுத்தது போல, கிளி, கூண்டு, கோட்டு, டவுசர்னு என்னன்னவோ பேசுகிறார்கள். சம்பந்தா சம்பந்தமில்லாமல் யார் யாரோ எப்போது வேண்டுமானாலும் பேசுகிறார்கள். கிளைமாக்சில் இரண்டு எதிரெதிர் கேங் லீடர்கள் சந்தித்துக்கொள்கிறார்கள். பரபரப்பான காட்சிகளோ, சண்டையோ வரவேண்டிய இடத்தில், வில்லன் கிஷோர் வருகிறார். பல முறை கொல்ல முயற்சித்தும், கொல்ல முடியாத எதிரி அவர் எதிரிலேயே வந்து நிற்கும் காட்சி. ‘குறைப் பிரசவமானாலும், சுகப் பிரசவமாத்தானேடா பொறந்துகிடந்தோம்’னு வடிவேலு ஜோக்கில் வருவது போல, சண்டை போட வேண்டிய இடத்தில், சம்பந்தமில்லாமல் ’நாந்தாண்டா உயர்ந்த சாதி’ என்று வர்க்கப் பிரச்சினைகளை பேசுகிறார் கிஷோர்! இந்த லட்சணத்தில், கடைசியில் இலக்கிய கிளைமாக்ஸ் வேற!

’கபாலி ரஜினி படமும் இல்லை, ரஞ்சித் படமும் இல்லை’ என்பதாக யாரோ பேஸ்புக்கில் எழுதியிருந்தார்கள். அதைத்தான் நானும் இவ்வளவு நேரம் சுத்தி சுத்தி எழுதியிருக்கிறேன். எது எப்படியோ, ரஜினியின் அழகான ஸ்டைலிஷ் ஷாட்களுக்காக, ஒரு தடவை பார்த்துவையுங்கள்!

4 comments:

மேவி .. said...

கபாலி விமர்சனம் என்று படிக்க வந்தால் ரஜினி விமர்சந்த்தோடு ஆரம்பிக்கிற்தே ....

குட்டிபிசாசு said...

ரஜினி மீது விமர்சனம் சொல்வது சரியல்ல. அது அவர் இஷ்டம் என நான் நினைக்கிறேன். படம் பற்றிய கருத்துக்களை நான் முழுவதும் ஏற்றுக்கொள்கிறேன். ரஞ்சித் தன் கருத்துக்களை சொல்லட்டும், தேவையான இடத்தில் சொல்லட்டும். பல இடங்களில் துருத்திக்கொண்டு தெரிகின்றன வசனங்கள். கோட் பற்றி படம் முழுக்க வருகிறது. தாங்க முடியல.

M.Kamala kannan - gurugulam.com said...

வணக்கம்.என் மகளுக்கு தாமிரா என பெயர் வைக்க விரும்புகிறேன். அது தமிழ் சொல்லா? பொருள் வேண்டுகிறேன். Pls send gurugulam.com@gmail.com

super deal said...

அனைவருக்கும் வணக்கம்

புதியதாக உதயமாயிருக்கும் (superdealcoupon.com)நமது தளம் .இந்த தளத்தின் சிறப்பு இந்தியாவில் முதன்மையான ஆன்லைன் ஷாப்பிங் தளம் மற்றும் மொபைல் ரீசார்ஜ் ஆகிய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆபர் பற்றிய தகவல்களை உங்களிடம் பகிர்ந்து உங்கள் பணத்தை யும் உங்கள் நேரத்தையும் சேமிப்பதே எங்கள் கொள்கை .

நன்றி

நமது தளத்தை பார்க்க Superdealcoupon