Monday, September 19, 2016

நாங்கள் ஆயில் பெயிண்ட் வரைந்த கதை!

வாட்டர் கலர் ஓவியங்களை மீண்டும் வரைய ஆரம்பித்திருக்கும் இந்தப் பொழுதில், பல வருடங்களுக்கு முன் நடந்த சில சுவாரசியமான நிகழ்வுகள் நினைவுக்கு வருகின்றன. நான் சென்னைக்கு வந்த 1998ல், அம்பத்தூரிலிருக்கும் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். அப்போது ரஜினிகாந்த் எனும் ஒரு நண்பர் என்னோடு கொஞ்ச காலம் பணிபுரிந்தார். ஒத்த வயது, வாடாபோடா அளவுக்கு மிக நெருங்கிய நட்பு எனினும், ஒவ்வொரு காலகட்டத்திலும், அப்படி அழைக்க முடியாமல் ‘நீங்க நாங்க’ என்றே பழகுவதாகவே சில நட்புகள் அரிதாக அமைந்துவிடுகின்றன. மேற்படிப்பு/ வேறு வேலை எனும் காரணங்களால் அவர் விரைவிலேயே அந்த நிறுவனத்தை விட்டு வெளியேறிவிட்டாலும் அவர் சென்னையில் இருந்த மேலும் சில ஆண்டுகளுக்கு, எங்கள் நட்பு வாரயிறுதிகளில் தொடர்ந்தது. அதற்கு ஒரே காரணம், எங்கள் இருவருக்குமே ஓவியத்தில் இருந்த மிகுந்த ஈடுபாடுதான்! ஓவியத்தைப் பொறுத்தவரை இருவருமே இருந்தது ஒரே நிலைமையில்தான்! குடும்பச்சூழலும், பொருளாதார நிலைமையும் தகுந்த பயிற்சி வகுப்புகளுக்கு சென்று ஓவியம் கற்றுக்கொள்ள எங்களுக்கு வாய்ப்பளித்திருக்கவில்லை. இருவருமே சிறு வயதிலிருந்து சுயமாக வரைந்து பழகியவர்கள். எனக்கு பென்சில் போர்ட்ரெய்டுகள் வரைவதில் மிகவும் ஆர்வமுண்டு. குறிப்பாக பெண்கள். நிறைய பெண்களை வரைந்திருக்கிறேன். பெரும்பாலும் சரியாக வந்துவிடும், ஆனாலும் சொதப்பலாகி நிறைய குப்பைக்குப் போவதுமுண்டு. கற்கும் நிலையிலிருப்போருக்கு போர்ட்ரெய்டு அத்தனை எளிதான காரியமுமல்லதான். ரஜினிக்கோ போர்ட்ரெய்டு சுத்தமாக வரவில்லை. என் மேல் அதற்காக உரிமையோடு கோபித்துக்கொண்டதும் கூட உண்டு. ஆனால், நான் வியக்கும் வகையில் அவருடைய மற்ற ஓவியங்கள் அமைந்திருந்தன. குறிப்பாக கருப்பு, வெள்ளையில் அவர் உருவாக்கும் ஹைலைட்கள் பிரமிப்பாக இருக்கும். கோவில் சிலைகளை வரைந்தால் போட்டோ எடுத்ததைப் போலிருக்கும். ஷேடிங், பென்சில் வகைகள் போன்றவற்றை எனக்கு அறிமுகப்படுத்தியது அவர்தான். இருவருமே, தங்களது ஓவியத்திறமைகளை பகிர்ந்துகொண்டு, பயிற்சி எடுத்து வளர்த்துக் கொள்ள வேண்டுமென்றெல்லாம் நினைத்துப் பழகவில்லை. ஆயினும் எங்கள் நட்புக்குக் காரணம் ஓவியம்தான். சென்னையின் பிரபல ஓவியக் கேலரிகளுக்கு சென்று, அங்குள்ள ஓவியங்களை ஏதோ பெரிய ஓவியர்களைப் போல உற்று உற்றுப் பார்த்துக்கொண்டிருப்போம். ‘ஆதி, தூரத்திலிருந்து பார்த்தால் கடல் அலையடிக்குது.. எப்படிப் பண்ணியிருக்கான் பாருங்க அந்த ஆர்டிஸ்ட், ஆனா பக்கத்துல போய்ப் பார்த்தா சால்வெண்ட் எதுவும் யூஸ் பண்ணாம பெயிண்டை அப்படியே கொத்தனார் சாந்து அப்புறாப்பல அள்ளி அப்பி வைச்சிருக்கான். இந்த ஒரு படத்துக்கே கிலோ கணக்குல பெயிண்ட் ஆகியிருக்கும் போலியே..’ அப்படின்னு காதைக் கடிப்பார். இப்படியே பேசிக்கொண்டிருப்போம். மற்றபொழுதுகளில் ஏதாவது சினிமா, அது இதென அரட்டை அடித்துப் பொழுதுபோக்குவோம். எப்போதாவது சேர்ந்து படங்கள் வரைவதும் உண்டு. ஒரு நாள், ’பென்சில் போதும் ஆதி. நாமதான் பயங்கர திறமைசாலிகள் ஆயிட்டோமே! இனி, பெயிண்டிங்ல இறங்குவோம்’ என்றார். அதுவும், வாட்டர் கலர், அக்ரிலிக் போன்ற ஸ்டூடண்ட் சமாச்சாரமெல்லாம் வேண்டாம், இறங்கினா நேரா அது ஆயில்பெயிண்ட்தான் என இருவரும் தீர்மானித்தோம். வாட்டர்கலர் என்பது ஸ்டூடண்ட்ஸ் சமாச்சாரம் என்று அன்று நான் நினைத்துக்கொண்டிருந்ததை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது. ஆனால், ஆயில் பெயிண்டிங்குக்கு என்ன ஆயிலை பயன்படுத்துவார்கள் என்பது போன்ற அடிப்படை விஷயங்கள் கூட எங்களுக்குத் தெரியாது. ஒரு வேளை, ’தேங்காயெண்ணை, விளக்கெண்ணெய் மாதிரி ஏதும் இருக்குமோ’ என்று ஜோக்கடித்த ஞாபகம் கூட இருக்கிறது. யாரைக் கேட்பது? அப்போது, இண்டெர்நெட் அத்தனைப் பழக்கத்துக்கு வரவில்லை, அல்லது நாங்கள் அந்த அளவுக்கு வளர்ந்திருக்கவில்லை! நேரடியாக பெயிண்டிங் பொருட்கள் விற்கும் ஒரு கடைக்கே போய் நைஸாக விசாரித்துக்கொள்வது என்று முடிவு செய்துகொண்டு அண்ணாநகர் போனோம். கெத்தை விட்டுடக்கூடாது, தெரிஞ்சது போலவே நடந்துகொண்டு அவன் சொல்வதிலிருந்தே பாயிண்டைப் பிடித்து பொருட்களை வாங்கி வருவதாக திட்டம். ஆயில் கலர்கள், பிரஷ்கள், கேன்வாஸ்கள் போன்றவற்றை விலை அதிகமானதாகப் பார்த்து இரண்டு செட்டுகள் வாங்கிக்கொண்டோம். விலை அதிகமென்றால் நல்லதாகத்தானே இருக்கும் எனும் லாஜிக்! இனி மீடியம் வாங்க வேண்டும்! மிக்ஸ் பண்ற ஆயில் கொடுங்க என்று கேட்டபோது, எவ்வளவு வேண்டும் என்றார் கடைக்காரர். எவ்வளவு கேட்பது என்று கூட தெரியவில்லை. என் முகத்தைப் பார்த்துக்கொண்டே, ‘ஒரு ரெண்டு லிட்டர் கொடுங்க’ என்று சொல்ல வாயைத் திறந்த ரஜினியை அமுக்கினேன். ரொம்ப சமாளிப்பதாய் நினைத்துக்கொண்டு ’இந்த பெயிண்டுக்கு எவ்ளோ தேவையோ அதைக் கொடுங்க’ என்று நான் சொல்லும்போதே ரீல் அந்துவிட்டது. கடைக்காரர் சிரித்துக்கொண்டே, ‘அது பெயிண்டர்ஸைப் பொறுத்து ஆகும் சார்’ என்று சொல்லிவிட்டு, ஒரு 50 ml பாட்டில் லின்சீட் ஆயிலை எடுத்துக்கொடுத்தார். லின்சீட் ஆயில் எனும் பெயரை டக்கென படித்து மனப்பாடம் செய்துவிட்டு, எவ்வளவு ஆச்சுனு கேட்கும்போதே.. கடைக்காரர்.. ஆயில் பெயிண்ட் பண்ண சால்வெண்டும் ரொம்ப முக்கியம்ங்க, வெளியில மறக்காம தின்னர் வாங்கிக்குங்க என்றார். மானம் போனாலும், பரவாயில்லை என அந்தச் செய்தியையும் வாங்கிக் காதுகளில் போட்டுக்கொண்டு வெளியே வந்து பெருமூச்சு விட்டுக்கொண்டோம். பின்னர், எங்கள் எஞ்சினியரிங் மூளையைப் பயன்படுத்தி, எந்தப் பெயிண்டையும் அப்படியே ராவாக அடிக்கமுடியாது. மிக்ஸிங் வேண்டும். மிருதுவாக்கவும், பரவும் தன்மைக்கும் ஒரு மீடியம் வேண்டும்.. தண்ணீர் இதோடு மிக்ஸ் ஆகாது. அதனால்தான் லின்சீட் ஆயில்! அப்படின்னா, சால்வெண்ட் எதுக்கு? பேலட், பிரஷ் போன்றவற்றை உடனடியாக கழுவுவதற்கு என்று புரிந்தது. அதோடு கலர், ஆயிலோடு கொஞ்சம் தின்னரையும் கலந்துகொள்ள வேண்டும், இல்லாவிட்டால் பெயிண்ட் உலர நேரமாகலாம் என்றும் கூட யோசித்தோம்.! எல்லாம் தயார், இனி வரைய வேண்டும்! ஆல் தி பெஸ்ட் சொல்லிக்கொண்டு, அவரவர் வீட்டுக்குப் போயாயிற்று. என்ன சூழலோ என்னால் உடனே களத்திலிறங்க முடியவில்லை. அன்றிரவே அரக்கப்பரக்க ஓடிவந்தார் ரஜினி! ‘ஆதி சம்திங் ராங். பெயிண்ட் காயவே இல்லை’ ‘எப்ப வரைஞ்சீங்க?’ ‘சாய்ங்காலம் வரைஞ்சது..’ அதிர்ச்சியாக இருந்தது. வாட்டர் கலர் அதிகபட்சம் ஒரு லேயர் 10 நிமிடத்தில் காய்ந்துவிடும். ஆயில் என்றால் ஒன்றிரண்டு மணி நேரத்திலாவது காயவேண்டாமா? இது ஏதோ சிக்கல்! ‘தின்னர் விட்டிங்களா? இல்லையா?’ ‘பர்ஸ்ட் லேயர் ரொம்ப டார்க்கா இருந்ததால, தின்னர் விட்டா மட்டும்தான் கலரே ஒரு ப்ளோவுக்கு வந்தது. அதனால நல்ல தாராளமா விட்டிருந்தேன்..’ ஒரு வேளை ரொம்ப தாராளமாக விட்டிருக்கக்கூடாதோ.. தின்னர் எவாப்ரேட் ஆகும். அதனால் அதை நிறையக் கலந்தது இந்தப் பிரச்சினைக்குக் காரணமாக இருக்கமுடியாது என உறுதியாக சொன்னது எஞ்சினியரிங் அறிவு! ‘எதுக்கும் காலை வரைக்கும் பார்ப்போம்! நல்லா காத்து படறாப்பல வைங்க’! மறுநாள் காலையிலும் அது காயவில்லை. மாலை அவர் வீட்டுக்கே போய்விட்டேன். அவர்கள் வீட்டு நபர்கள் யாரிடமும் எந்த பரபரப்பையும் காண்பித்து விடாமல் கவனமாக இருவரும் நடந்துகொண்டோம். குடுகுடுவெனப் போய் பெயிண்டிங்கைப் பார்க்கும் ஆவலை அடக்கிக்கொண்டு அவர் அம்மாவிடம் நிதானமாக பேசிவிட்டு, காபியெல்லாம் வாங்கிக்குடித்துக் கொண்டிருந்தேன். மனதுக்குள் ஒரே பரபரப்பு! பிறகு, அவர் அறைக்குப் போய் பெயிண்டிங்கைப் பார்த்தேன். இந்தப் பிரச்சினையில், படத்தைச் சரியாக வரைந்திருக்கிறாரா என்று கூட பார்க்கவில்லை. தொட்டுப்பார்த்தால், பெயிண்ட் விரல்களில் வந்தது, தொட்ட இடத்தில், கேன்வாஸ் வெள்ளையாகத் வெளிப்பட்டது. தொட்டுத்தொட்டுப் பார்த்து அதுவே ஒரு டிசைனாக மாறியிருந்தது. இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம். இரண்டாம் நாள், மூன்றாம் நாள், ஐந்தாம் நாள், பத்தாம் நாள்.. ஊஹூம்! பதினொராவது நாள். மாலையில் ஒரு டீக்கடையில் பேசிக்கொண்டிருந்தோம். அந்த பெயிண்டிங்கை கிட்டத்தட்ட மறந்தே போயிருந்தோம். திடுமென ஞாபகம் வந்து, கேட்டேன். ’ஆமா,அந்த பெயிண்டிங் என்னாச்சு ரஜினி?’ ‘அட விடுங்க.. இன்னும் பிசுபிசுத்துட்டு கிடக்கு அது!’ இப்போது இந்த இண்டெர்நெட் யுகத்தில், புரிகிறது எல்லாம்! ஆயில் பெயிண்டிங்கில் சரியான ஆயில், சால்வெண்ட் கலவை காயவே ஒன்றிரண்டு நாட்களாகும். கொஞ்சம் கலவை சரியில்லாவிட்டால், அல்லது படைப்புத் தேவைக்காக சால்வெண்ட், ஆயில் பங்கு வேறுபட்டால், ஓவியங்கள் காய ஓரிரு வாரங்கள் ஆகலாம். முழுமையான உலரும் காலம் உண்மையில் மாதங்களில் இருக்கும்! வெட் ஆன் வெட் முறையிலேயே பெரும்பாலும் ஆயில் பெயிண்டுகள் வரையப்படுகின்றன. அன்று நாங்கள் செய்தது எதுவுமே தவறில்லை. பொறுமையாக இருந்திருக்க வேண்டும் என்று தெரியாததைத் தவிர! ரஜினி இன்று என்னோடு தொடர்பிலில்லை, ஆனால், இப்போது இதை நிச்சயம் தெரிந்து கொண்டிருப்பது மட்டுமல்லாமல், வண்ணங்களோடு விளையாடிக் கொண்டுமிருப்பார் என்பது மட்டும் எனக்குத் தெரியும்! *
சமீபத்தில் வரைந்த ஒரு வாட்டர்கலர் ஓவியம். *

2 comments:

peace said...

படம் நன்றாக இருக்கிறது. பதிவு பழைய நினைவுகளை கொண்டு வந்தது. 1792 ஆம் ஆண்டு வரையப்பட்ட பாபநாசம் அருவியின் படம் இங்கே.
http://www.donaldheald.com/pages/books/29858/thomas-daniell-william-daniell/waterfall-at-puppanassum-in-the-tinnevelly-district

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு அனுபவம். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.